அறிவியலை நாடி அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…

அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…

2021 Sep 11

இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 40 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலான மரணங்கள் தற்கொலை காரணமாகவே நிகழ்கின்றன. அதிலும் உலகளாவிய ரீதியில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் எனும் பட்டியலில் நான்காவது இடமாக இலங்கையே காணப்படுகின்றதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதன்படி இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 28.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இவற்றில் பெரிதும் மன உளைச்சல் மற்றும் போதை வஸ்து பாவனையினாலேயே பலர் இறக்கின்றனர்.

வாழ்க்கையின் ஒரு சிறு அலை, ஒரு சிறு சவால், ஒரு சிறு ஏமாற்றம்  இன்றைய இளம் தலைமுறையினரை ஏன் உயிரை மாய்க்கச் செய்கின்றது? உளவியல் ரீதியாக ‘Resilience’ என இவை குறிப்பிடப்படுகின்றது. நவீன உலகில் நாகரீக போர்வையின் கீழ் வாழும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகவும் துணையாகவும் பார்க்கிறோம். இந் நிலையில் இன்பம் துன்பம் சந்தேகம் தோல்வி வெற்றி என அனைத்து உணர்வுகளையும் அனைத்து நிகழ்வுகளையும் பகிரும் திண்ணையாக தொழில்நுட்பமே காணப்படும் போது மனிதத்துவத்தின் மகத்துவம் மனிதர்களிடையே அருகிப்போய் விட்டது. சுமித்ரயோ அமைப்பின் ஆய்வின்படி இலங்கையில் வடமேல் மாகாணத்திலேயே அதிகமான தற்கொலைகள் இடம்பெறுகின்றன.

அத்துடன், தற்கொலை மூன்று வகை என “எமில்ட் துர்கைம்” குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது இனத்தின் மீதான ஆழமான பற்று காரணமாக செய்து கொள்ளும் தற்கொலை, ஒரு மனிதன் தான் சார்ந்த சமூகத்தை விட்டு தனிமைப்படுத்தப் படுவதால் ஏற்படும் மனவெழுச்சி காரணமாக தற்கொலைக்குத் தூண்டப்படல், எதிர்கால வாழ்க்கை நிச்சயமற்ற நிலையில் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களுக்கு ஏற்று வாழத் தெரியாமல் தற்கொலை செய்தல் என குறிப்பிட்டுள்ளார். தற்கொலை என்பது ஒரு நோயாகவே அணுகப்படுகின்றது.

ஆண்டுதோறும், அக்டோபர் 10-ஆம் திகதி, உலக மனநல ஆரோக்ய நாள் கடைபிடித்து வரும் நிலையில், இன்னும் மன உளவியலின் உச்சகட்ட தாக்கமான தற்கொலைகள் தொடர்பில் இன்னும் சமூக அளவிலோ தனிப்பட்ட மக்கள் மனதிலோ போதியளவு தெளிவு குறைவாக காணப்படுகின்றமை கவலைக்குரியது. மனவியல் தொடர்பிலான பிரச்சினை என்று அணுகும்போது பல்வேறான சிக்கல் மிகுந்த அமைப்பாகவே மனிதனது உளவியல் அமைகின்றது. பண்டைய காலங்களில் படையெடுப்புக்களின் போது நாட்டின் மக்களை காப்பதற்காக வீரர்கள் தாமாக முன்வந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். தன்னைச் சார்ந்தவர்களது நலனுக்காக தம் உயிரை அர்பணிக்குமளவு மன உறுதி கொண்டவர்கள் காலம் கடந்து போய் தன் சுயம் சார்ந்த உறுதித்தன்மை இழந்த மரணத்தேடல்கள் நெருடலுக்காகும் அம்சமாக காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் அணுகும் போது பரீட்சையில் சித்தி பெறாத ஒரு சில மாணவர்கள் அடுத்தகட்ட நகர்தலுக்கான திராணியிழந்து மரணத்தை தேடுகின்றனர். ஆயினும் அதே பரீட்சையில் சித்தியடையாத அதே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இருக்கும்  ஏனைய பல மாணவர்கள் இவ் விபரீத முடிவினை நாடாமல் தமது வாழ்வியலுக்கான வளம் மிக்க பாதைகளை தேடிச் செல்கின்றனர். ஏன் இந்த முற்று முழுதான வேறுபாடென்பதை நாம் ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயம். தற்கொலை என்பது உணர்ச்சி வசப்பட்ட நிலை. மன அழுத்தத்தின் இறுதிக்கட்டமாக, ஒரு நபர் கடுமையான மனநல கோளாறால், அதாவது ஸ்கிசோஃப்ரினியா, அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் போது தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்படுகின்றனர். ஒரு மனிதன் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குப் போகிறான் என்றால் அவன் எவ்வளவு மனவேதனை மற்றும் மன உளைச்சல் அடைந்திருப்பான் என்று அணுக வேண்டியது அவசியம்.

இவ்வாறு மனதின் சுமைகளால் அல்லல்பட்டு அவதியுறுகையில் அச்சு மையை இறக்கி வைப்பதற்கான வெளிகள் பலருக்கு கிடைப்பதே இல்லை. உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நிச்சயமாக இல்லை, ஒவ்வொரு 40 நொடிகளிற்கும்  ஒரு தற்கொலை மரணம் பதிவு செய்யப்படுகின்றது. தற்கொலை மரணங்கள் இவ்வாறு இருக்க தற்கொலைக்கான முயற்சிகள் இதிலும் 25 மடங்கு அதிகமாகவே இருக்கின்றது. எம்முடைய பார்வையில் தற்கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கின்றமை போல தோற்றமளிக்கின்ற, போதிலும் ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உள்ளன.

இலங்கையில் இடம்பெறும் தற்கொலைகள் என்று நோக்குகின்ற போது அண்மையில் குறிப்பாக மட்டக்களப்பின் அழகுக்கு பெயர் போன கல்லடிப் பாலம், இப்போது தற்கொலை மரணங்கள் அடிக்கடி நிகழும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த 63 தற்கொலைகளில், 14 தற்கொலைகள் கல்லடிப் பாலத்தில் இடம்பெற்றதாக மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரி.சரவணபவன் தெரிவிக்கின்றார்.

மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை முடிவுகளிற்கு தூண்டப்படுகின்றார்கள் எனும் சமுதாய எண்ணக்கரு எதிர்மறையானதே. மாறாக மனதளவில் திண்ணமுடையவர்களும் இம்முடிவை நாடுகின்றனர். இவ்வாறான தற்கொலை மரணங்களுக்கான காரணங்களை சற்று விரிவாக நோக்கினால், சிறுவயதில் ஏற்படுகின்ற இன்னல்கள் மனதளவில் உறுதியற்ற நிலையையும் விருத்தியையும் ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வகையில் வறுமை, பாடசாலை இடை விலகல் அல்லது விலக்கப்படல், பெற்றோருக்கு இடையே பிரச்னைகள், அதன் காரணமாக பெற்றோரது உறவு முறிதல், நண்பர்களோடு கருத்து முரண்பாடு, பிரச்னைகள், நட்பு முறிவு, இளவயது காதல் தோல்வி. போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் போன்றன இளமையிலேயே மரணத்தை நோக்கி பயணிப்பதற்காக தூண்டப்படுகின்றது.

இவை தவிர குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டால் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அவரது குறித்த குடும்பத்தை சேர்ந்த பலரையும் தற்கொலைக்கு தூண்டுகின்றமை ஆபத்தானது. இவை மட்டும் அல்லாமல் பல்வேறு பட்ட உளவியல் தாக்கங்கள் பெருமளவு தற்கொலை மரணங்களுக்கான பின்னணியாக இருக்கின்ற அதேவேளை இச் சமூக பொருளாதார பின்னணிகள் பலரை தற்கொலைக்கு தூண்டுவதாக அமைகின்றது. தற்கொலை எண்ணம் 100இல் 17 பேருக்கு தோன்றக்கூடியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேலும் பெண்களை விட ஆண்கள் தான் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நோக்கினால், பிறரால் ஒதுக்கி வைக்கப்படும், கேலி கிண்டல் மற்றும் நையாண்டிக்குட்படுதல்,  ஏதாவதொரு காரணத்தின் பொருட்டு பிறரது விமர்சனங்களிற்கு உள்ளாதல், உறவினர்கள் மற்றும் குடும்பத்தவர்களது புறக்கணிப்பு போன்ற பல காரணங்களால் தம்மை தாமே தாழ்வாக எண்ணிக் கொள்ளுதலும் தனிமை விரும்பிகளாக மாறுதலும் விரக்திக்குள் தள்ளுகின்றது. இதன் காரணமாக மனதளவில் மேலும் மேலும் ஏற்படும் அழுத்தங்கள் ஒரு கட்டத்தில் தாங்க இயலாத நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்த பயம் மற்றும் இயலாமையினால் தன்னை மரணித்துக்கொள்ள முயல்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை, கணவன் மனைவி பிரிவு, சந்தேகம், குடும்பப் பிணக்குகள், பாலியல் ரீதியிலான தாக்கம், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின்மை போன்றனவற்றாலும் இப்படியான முடிவினை நாடுகின்றனர்.

இவ்வாறிருக்க தற்கொலைக்கு முயல்வோரை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது எனும் ஐயம் தொடர்பான தெளிவு பலருக்கு இருப்பதில்லை. ஒரு சராசரி மனிதனின் எண்ண அலைகளுக்கும் தற்கொலை எண்ணம் உடைய ஒருவரின் சிந்தனைக்குமிடையில் அதிகளவான வேறுபாடுகள் உள்ளன.  ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாக குறித்த நபர் பதற்றமாக இருப்பது, எதிலுமே ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பதுடன் அவர்களுக்கு நெருக்கமான பிடித்த அம்சங்களில் நாட்டமின்றி இருத்தல், விடைபெறுவது போன்ற தொனியிலும் விரக்தியான முறையிலும் கருத்துக்களை வெளிப்படுத்தல், எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளற்றுப்போய் இருத்தல், இப்படியான நிலையில் இருப்பவர்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

இந் நிலையில் இவர்களிற்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு ஆறுதல், தம்மை தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு துணை, துயரை பகிர்ந்து கொள்ள புரிதலுடனான தோழமை அவ்வளவே. எவ்வாறான சூழ்நிலையில் தற்கொலைகளை நாடுபவர்கள் கூட ஒரு நிமிடம் தாமதித்தால் அவ் எண்ணப்பாங்கை அகற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் தற்கொலைகளை குறைப்பதற்கான மிக உயர்ந்த தீர்வாக நெருக்கமான உறவுகளுடனான நேரப்பகிர்வே அமையும். உறவுகளுக்காக நேரம் ஒதுக்குதல் என்பது ஒரு உயிரை வாழவைக்கும் செயற்பாடு என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர்தல் அவசியம். நம்பிக்கையான கருத்துக்களை பகிர்தல், நேர்மறையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தல், பாதிக்கப்பட்டவரை தனிமையில் விடாமல் இருத்தல் போன்றவற்றை கைக்கொள்ளல் சிறந்தது.

தற்கொலை எண்ணத்தை அகற்றுவதற்கு பிரதானமாக குறித்த எண்ணத்திற்கான காரணங்களை அறிந்து அகற்றல் அவசியம். இளைஞர்களை தற்கொலை செய்து கொள்வதிலிருந்து தடுக்கும் விதமாக பல தொண்டுநிறுவனங்களும் அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை, ஆறுதல் கூறி அவர்கள்தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றன. இலங்கையில் தற்கொலைகளை தடுக்கும் நோக்குடன் சுமித்ரயோ என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் அமைப்பின் பணிகள் என்று நோக்குகின்ற போது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுபவர்கள் இந்த அமைப்பின் உதவியை நாடும் பட்சத்தில் அவர்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் என்பன வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களிலும் சுமித்திரயோவின் தற்கொலை தடுப்பு சேவைகள் வழங்கப்படுவதால் 0112 674 436 இவ்விலக்கத்தின் மூலம் நெருக்கடி நிலையில் தொடர்பு கொள்ள இயலும்.

இவை மட்டும் அல்லாமல் சாந்திகம், வல்லமை, தேவைநாடும் மகளிர் அமைப்பு, National institute of Mental health, Global and Cultural Mental Health Unit (GCMHU), Centre for Mental Health, Suicide First Aid Guideline Srilanka, போன்ற அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை நேரிலோ அல்லது தொலைபேசி ஊடாகவோ நாடுவதன் மூலம் உளவள ஆலோசனைகளை பெறமுடியும் என்பதோடு1333 என்ற இலக்கத்தின் ஊடாக CCC Foundation Srilanka என்ற உளவள சேவை நிலையத்தையும் தொடர்பு கொண்டு வழிகாட்டல்களை பெற இயலும். அத்துடன் 1926 என்ற இலக்கத்திற்கு அழைப்பதின் மூலம் (NIMH) National Mental Health Helpline மூலம் தற்கொலை தடுப்பு தொடர்பான உடனடி உதவியை பெற இயலும்.

உலகில் விலைமதிப்பற்றதாகக் கருதப்படும் முக்கியமானவற்றுள் ஒன்று மனித உயிர். ஆக ஒவ்வொரு தனிமனிதனும் எவ்வாறான சூழ்நிலையையும் தாண்டி பயணிக்க இயலுமளவிற்கு தன்னைத்தானே வலுப்படுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது. அத்துடன் ‘நடக்காது’, ‘கிடைக்காது’, ‘முடியாது’ ‘இயலாது’, ‘நான் இதற்கு தகுதியற்றவன்’ என்பது போன்ற எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நேர்மறையான எண்ணமுள்ள மனிதர்களுடனிருப்பதோடு நம்பிக்கையானவர்களிடம் வாழ்வியல் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலும் ஆரோக்கியமானது. அத்துடன் மன அழுத்தங்களை குறைக்கும் வகையிலான இசை, இயற்கை முதலானவற்றை ரசித்தலோடு பல புதிய பழக்கங்களை பொருத்திக் கொள்ளுதலும் நன்று. வாழ்க்கையில் ஏற்படும் கவலைகள் துன்பங்களையும் கடந்து வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக அமைக்க இளைஞர்கள் முன்வருதல் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php