நாடி Review கண்ணிமை

கண்ணிமை

2021 Sep 14


விபரீதம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அது இங்கு தான், இப்படி தான், இவருக்கு தான் நடக்கும் என்று கணிக்க முடியாடு. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு அதற்கு கிடையாது. நம் வாழ்க்கையின் மீதும் நம் உறவுகளின் மீதும் நாம் தான் கவனத்தோடு இருக்கவேண்டும், கண்ணிமைப்போல் காக்கவேண்டும் என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

சங்கீதா தரம் எட்டில் கல்வி கற்கும் சிறுமி. ஒரு காலை வேலை பாடாசாலைக்கு கிளம்ப தயாராகிறாள். ஆசையாக அவளது பொம்மையை எடுத்து வைக்கிறாள். அப்பா அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருக்க, அம்மாவும் அவரது வீட்டு வேலையில் மும்முரமாக இருக்கிறார். சங்கீதா அவளது பொம்மையை காட்டி அது எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள். அவளையும், அவள் பொம்மையையும் கவனிக்கும் நிலையில் அவளது பெற்றோர்கள் இல்லை.

சங்கீதா பாடசாலைக்கு செல்லும் வழியில் அவளது பொம்மையை ஒரு இடத்தில் தவறவிட்டு விடுகிறாள். அதை திரும்பி எடுக்க அவளால் முடியவில்லை. முயன்று முயன்று தோற்றுவிடுகிறாள். அருகில் இருக்கும் குடிசையை பார்க்கிறாள் அங்கு சென்று உதவி கேட்க எத்தனிக்கிறாள். இதற்கு பிறகு அவளுக்கு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.

திரைக்கதை ஒருவித “சஸ்பென்ஸ்” உடன் நகர்கிறது. என்ன நடந்திருக்கும் என்ற பததைப்பு படம் நெடுகிலும் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பேசும் படங்கள் சில சமயங்களில் முகம் சுழிக்க வைத்துவிடுகின்றன. ஆனால் இந்த குறும்படம் அதை மிகவும் நாசுக்கான விதத்தில் கையாண்டிருக்கிறது.

இது போன்ற சம்பவங்களை மையப்படுத்திய கதைகளில் அதன் முடிவு பெரும்பாலும் துன்பியல் உணர்வோடு முடிவடைந்துவிடும். ஆனால் அதை தாண்டிய வாழ்க்கை இருக்கிறது, அதை நாம் கடந்துவரவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் இறுதிகாட்சிகள் அருமை.

படத்தின் கதை, திரைக்கதை, மற்றும் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என எல்லாவற்றிலும் மேலதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக டப்பிங் சரியான முறையில் பதிவு செய்தல் வேண்டும். வருங்கால படங்களில் அதை கற்றுக்கொண்டு சினிமா தரத்தை மேம்படுத்திக்கொள்ள உழைப்பது படக்குழுவின் அவசியம்.

கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கும் அனைவரும் அவர்களது பங்கை முடிந்தவரை நன்றாக செய்திருக்கிறார்கள். மைய கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் சிறுமி அதை மேலும் சிறப்பாக செய்திருக்கிறார். திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள விதமும் படத்திற்கு வலு சேர்க்கிறது. மேலும் சிறப்பான படங்களை செய்ய இயக்குனர் மகிழ்ச்சிகரன் மற்றும் படக்குழுக்கு வாழ்த்துக்கள்.

நாடி Verdict – 60/100

Video Link  – https://www.youtube.com/watch?v=eaYFv02FZSI

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here