உணவை  நாடி Intermittent fasting

Intermittent fasting

2021 Sep 24

முன்னைய காலத்தைப் போல் அல்லாது தற்போதைய மக்கள் சுகாதாரம் மிக்க வாழ்க்கை முறை ஒன்றை நடாத்திச் செல்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். Organic Foods முதல் Sugar Less Tea வரை, மறுமுனையில் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள Jogging Track, Fitness center என்று தங்கள் உடலை, ஆரோக்கியமாக வைப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்பதை நாள்தோறும் காணக்கூடியதாய் உள்ளது. இக் கலாச்சாரம் மேலத்தேய நாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினாலும் இலங்கையில் தற்போது தான் இதன் முக்கியத்துவம் மக்கள் மத்தியில் உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எமது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாம் உட்கொள்ளும் உணவு இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமே. இதை ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, தெரிந்து கொண்ட முறைக்கேற்ப தத்தமது வாழ்க்கை முறையில் அதனைப் பரீட்சித்து வெற்றியும் கண்டுள்ளனர். அவ்வாறே சமீபத்தில் புரியாத புதிராக ஒளிர்வெடுத்து மேற்கத்திய நாடுகளில் அதிகம் பிரபல்யமிக்கதாக கருதப்படும் Intermittent Fasting தொடர்பான ஓர் பார்வை.

முதலாவதாக Intermittent என்றால் இடைப்பட்ட அல்லது விட்டு விட்டு நிகழ்கின்ற செயலைக் குறிக்கும். அவ்வாறே Intermittent Fasting என்ற பதத்தைக் கருதும்போது விட்டு விட்டு அல்லது குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் நோன்பு / உணவருந்தாது இருப்பதே இதன் விளக்கமாகும். இதைப் பல நபர்கள் பல விதிகளுக்கு அமைய தங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வருகின்ற அதேவேளை இது தான் சிறந்தமுறை என்று எவரினாலும் வரைவிளக்கணப்படுத்த முடியாததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான மக்கள் இதனை 16:8 என்ற அடிப்படையில் கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது 24 மணி நேர கால இடைவெளியில், 16 மணித்தியாலங்கள் உணவருந்தாது நோன்பு இருக்கும் அதேவேளை 8 மணித்தியால இடைவெளியில் தங்களது உணவு தேவைகளை அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். அதே தருணத்தில் 18:6 மற்றும் 20:4 அடிப்படையிலும் மேலும் சிலர் 36:12 என்றும் தங்களது உடல் நிறை, கொழுப்புச் சதவீதம், வாழ்க்கை முறை போன்றவற்றிற்கு அமைய நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் 1.5 வருடங்களில் 50 இராத்தல், அதாவது சுமார் 23Kg இடையினை குறைத்த அமெரிக்காவின் பிரபல்யமான பத்திரிகையாளரான Megyn Keli கூறுகையில் ‘ஆரம்பக் காலங்களில் பசி உணர்வு ஏற்படுவது மிகவும் சாதாரணம். முதல் இரண்டு வாரங்கள் மிகவும் கடினமானதாக அமையும். எனினும் நீங்கள் இதனைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு விருப்பப்படும் நபராக இருப்பின் 3 வாரங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்திப்பாருங்கள். நிச்சயமாக உங்களால் அதன் மாற்றத்தை உணர முடியும்’ என்று ஊக்குவிக்குமுகமாக பல கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

பலர் பொதுவாகக் கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் உணவு அருந்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் நாங்கள் விரும்பும் உணவு வகைகளை உண்ண முடியுமா என்பது தான். நிச்சயமாக முடியும் என்பதே இதில் வெற்றி பெற்ற பலரின் கருத்தாக அமைந்துள்ளது. எனினும் அதற்காக அளவுக்கு மீறி எந்த உணவும் உட்கொள்ளுதல் ஆகாது. இருப்பினும் நிச்சயமாக உங்களுக்குப் பிடித்த ருசித்த உணவுகளை உண்ணுவுதற்கு அவகாசம் வழங்கப்படும். அதே தருணத்தில் நாம் தெரிவு செய்யும் உணவு வகைகளை உணவுக் கூம்பகத்திற்கு அமைய முன்னுரிமை வழங்கி தேர்வு செய்து உட்கொள்ளும் பட்சத்தில் அதிக பிரதிபலனை உங்களால் காணக்கூடியதாய் இருக்கும். மேலும் இக் காலப்பகுதிகளில் நீர் மற்றும் நீர் சார்ந்த பாணங்கள் அருந்துவதில் எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்பட மாட்டாது. இருப்பினும் கலோரிகள் குறைவாக உள்ள Black Coffee, Black Tea மற்றும் சில வகையான Juiceகளை மாத்திரமே உங்களால் அருந்த முடியும். மேலும் சீனி சேர்க்காதவாறு உட்கொள்ளவேண்டும் என்பது Intermittent Fasting இல் மிகக் கடினமான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

ஆசிய நாட்டைச் சேர்ந்த மக்கள் கார்போஹைட்ரேட் அடங்கிய சோறு, ரொட்டி மற்றும் பாண் வகைகளையே அதிகமாக உட்கொள்கின்றனர். நாம் உட்கொள்ளும் கார்போஹைட்றேட்கள் (Carbohydrates) குளுகோஸ்களால் (Glucose) மாற்றம் அடைந்து உடலிற்குத் தேவையான சக்தியினை வழங்குகின்றது. மேலதிகமாக உட்கொள்ளப்படும் கார்போஹைட்றேட்கள் (Carbohydrates) கிளைகோஜன் (Glycogen) வடிவத்திலும் மேலும் சில கொழுப்பாகவும் எமது உடலில் சேமிக்கப்படுகின்றன. இதனாலேயே அதிக பருமன் கொண்ட உடல் பாவத்தினை எம்மால் உணர முடிகிறது. இவ் வகையான உடல் நிலை கொண்டர்வகள் இவ் Intermittent Fasting இனை கடைப்பிடிக்கும் பட்சத்தில் உடலிற்குத் தேவையான சக்தியினை எமது உடலில் மேலதிகமாக சேமிக்கப்பட்டு இருக்கும் கிளைகொஜன் (Glycogen) மற்றும் கொழுப்புகள் எதிர் எதிர்வினையினால் மீண்டும் குளுகோஸ் (Glucose) ஆக மாற்றம் அடைந்து சக்தியினை வழங்குகின்றது. இவ் இரசாயன செயற்பாடுகள் நடைபெறுவதற்கு ஆகக் குறைந்தது 8 – 12 மணித்தியாலங்கள் தேவைப்படுவதனால் Intermittent Fasting உடல் பருமனை நேர்த்தியாக வைத்திருப்பதற்குச் சிறந்த முறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது இருதய நோய்கள், உயர் குருதி அழுத்தம், சக்கர வியாதி போன்ற நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதைச் சிலர் வாரத்தில் 7 நாட்களிலும் மேலும் சிலர் ஒன்று விட்ட நாட்களிலும் நடைமுறைப்படுத்திவருகின்றனர். கடினமாக இருக்கும் பட்சத்தில் வாரத்தில் இரு தடவையாவது இப் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும். எனினும் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தத்தமது உடல்நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதால் வைத்தியர் அல்லது உணவியல் நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்ற பின்பு ஆரம்பிப்பது பாதுகாப்பு மிக்க வழிமுறையாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here