நாடி Review TRANCE 2018 (உரு) – நாடி Review

TRANCE 2018 (உரு) – நாடி Review

2021 Oct 28

யுத்தத்தில் காணாமல் போன தனது மகன் திரும்பி வருவான் என காத்திருக்கிறாள் தாய். அந்த ஏக்கத்தால் நாளுக்கு நாள் அவளது உடலும் மனமும் மோசமாகிக்கொண்டே வருகிறது. அவளது இந்த நிலையினை நினைத்து வருந்தும் மகளும், கணவனும் அவளை எப்படியாவது நல்ல நிலமைக்கு கொண்டு வர துடிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் மகனிடம் இருந்து செய்தி வருகிறது. அது என்ன செய்தி? காணாமல் போன மகன் திருப்பி கிடைத்தானா? அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது என்பதை சொல்லும் உணர்ச்சிபூர்வமான குறும்படம் தான் உரு.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவிக்கொண்டே இருக்கிறது. எதாவது அவதூறு நடந்துவிடுமோ என்ற எண்ணம் படம் நெடுகிலும் காணப்பட்டுக்கொண்டே வருகிறது. அது மெல்ல மெல்ல அதிகரித்து படத்தின் இறுதியில் மொத்தமாக நம்மை மையம் கொள்கிறது.

திரைக்கதை மெல்ல ஆரம்பித்து பிறகு மெல்ல மெல்ல தீவிரத்தன்மையை அடைகிறது. காட்சியின் உண்மைத்தன்மை கதை மாந்தர்களின் யாதார்த்தம் என்பன முதல் காட்சியில் இருந்தே நம்மை கதையோடு பிணைத்துவிடுகிறது. காணாமல் போன மகனான ஆதிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற எண்ணமும் பயமும் அவனது தாயை போலவே நம்மையும் பற்றிக்கொள்கிறது. இருபது நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த  குறும்படம் ஒரு வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது என்பது தான் உண்மை.

படத்தின் நடுவில் ஒரு காட்சி. உறவுகளை தொலைத்த மக்கள் ஒரு மரத்தடியில் ஒன்று கூடி அங்கு சாமியாடும் மனிதரிடம் ஒவ்வொருவராக சென்று தொலைந்த  அந்த உறவுகளை பற்றி தெரிந்து கொள்ள படும் பாடு காட்டப்படும். சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த இடம் யுத்த காலத்தில் உறவுகளை தொலைத்த ஒவ்வொருவரின் மனநிலையையும் நம் முன்னால் கொண்டு வருகிறது.

படத்தின் மிகப்பெரிய வழு அதன் கதாப்பாத்திரங்கள் தான். ஒவ்வொருவரும் நாம் பார்த்து கடந்து வந்த நம்முடைய மக்களாக இருக்கின்றனர். அவர்களது முகமே இந்த கதையின் தீவிரத்தன்மையை நமக்குள் பதிய வைக்கிறது. எடுத்துக்கொண்டுள்ள கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர். இவ்வளவு அனுபவமிக்க, யதார்த்தமான நடிப்பை அவர்களிடம் இருந்து பெற்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

படத்திற்கு வலுசேர்த்த இன்னுமொரு விடயாமக அதன் தொழிநுட்பத்தை குறிப்பிடலாம். பின்னணி இசை, டப்பிங், கலர், சத்த கோர்ப்புகள் (sound effect), ஒளிப்பதிவு என அனைத்து துறையுமே பார்த்து பார்த்து கச்சிதமாக செய்யப்பட்டு இருக்கிறது. அதில் குறிப்பாக  இசையும் ஒளிப்பதிவும் தனிச்சிறப்பு.

ஒளிப்பதிவும் இரவிலும் பகலிலும் ஒளி கையாளப்பட்டுள்ளவிதம் படத்தை மேலும் யதார்த்தமாக்கியுள்ளது. இசை தேவையான இடங்களில் மிரட்டியுள்ளது எனலாம், அத்தோடு நமது மண்சார்ந்த வாத்தியங்களை கொண்டு பின்னணி இசையை அமைத்திருப்பது சிறப்பு.

யுத்தம் எண்ணிலடங்கா உணர்ச்சிகளையும்,  கதைகளையும் நம்மிடம் விட்டுச்சென்றுள்ளது. அவற்றை நாம் தான் படமாக்க வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும். இந்த குறும்படம் அதை சிறப்பாக செய்துள்ளது. இயக்குனரிடம் இருந்து வெகு விரைவில் ஒரு முழுநேர திரைப்படத்தை எதிர்ப்பார்க்கிறோம்.  ஞானதாஸ் காசினாதர் மற்றும் அவரது படக்குழுக்கு வாழ்த்துக்கள்.

நாடி Verdict – 90/100

Video Link – https://youtu.be/M-1iB1R5ly4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php