2022 Apr 27
இந்து சமுத்திரத்தின் முத்து என பிரபலமடைந்திருந்த நம் நாடானது இன்று போராட்டங்களின் களமாக மாறி நிற்கிறது. தினமும் எங்காவது ஓர் இடத்தில் போராட்டம் இடம் பெற்ற செய்தி காதினை வந்து சேர்கிறது. இவ்வாறான பதற்றமான சூழ்நிலையினை பற்றி தேடி அறிய நினைக்கும் நபர்களுக்கு விளக்கம் கொடுக்கும் பாடலாக Sam Dill Ruckshan இன் ‘அம்மா எனக்கொரு டவுட்’ என்ற பாடல் அமைந்துள்ளது. இப்பாடலிற்கான எழுத்து மற்றும் இசை என இரண்டுமே Sam Dill Ruckshan தான். ஆமாம் நீங்கள் நினைப்பது சரி! இது ஒரு தனி மனித படைப்பு.
ஆரம்பத்தில் விமர்சனம் செய்வதற்காக எனக்கு இப்பாடலின் லின்க் அனுப்பப்பட்ட போது முன்பு கேட்ட ‘கலையாத கனவே’ என்ற பாடல் போல் தான் இதுவும் இருக்கும் என நினைத்து லின்க்கினை க்ளிக் செய்தேன் ஆனால் இந்த பாடல் என் எதிர்ப்பார்ப்பினை முற்றாக தகர்த்தெறிவது போல் இருந்தது. வாழ்க்கையிலும் சரி வேலையிலும் சரி நாம் எதிர்ப்பார்ப்பது எங்கு நடக்கிறது! நாம் தான் நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி சொந்த கதை வேண்டாம் பாட்லின் கதைக்கு செல்வோம்.
இந்த பாடல் 2நிமிடங்கள் மற்றும் 10 செக்கன் நீளமானது. சில பாடல்களை கேட்கும் போது “என்ன அதுக்குள்ள முடிஞ்சா?” என்ற எண்ணம் பிறக்குமல்லவா அது போல் தான் எனக்கும் தோன்றியது. இதன் நோக்கம் தற்போதைய சூழலை விளக்குவதாகும். அதற்காக எழுதப்பட்ட வரிகள் சிந்தனையை தூண்டுவதாகவும் மொடர்ன் இளைஞர்களை ஈர்க்க கூடியதாகவும் அமைந்துள்ளது. இதன் இசை அதன் வரிகளுக்கு பொருத்தமானதாகவும் இடைக்கு இடையில் வருகின்ற சத்தங்கள் பாடலை மேலும் மெருகூட்டுவதாகவும் உள்ளது. சில பாடல்கள் நன்றாக இருந்தால் வீடியோ சொதப்பலாக இருக்கும் ஆனால் இவரது சிம்பிளான வீடியோ எடிட்டிங் பாடலுக்கு புது பொலிவினை பெற்றுக் கொடுத்துள்ளது. எல்லாமே நேர்த்தியாக உள்ள இந்த ‘அம்மா எனக்கொரு டவுட்’ பாடலில் எனக்கு ஒரு டவுட் உள்ளது. இந்த பாடலின் இடையில் “நோ பேட் வர்ட்ஸ்” என கூறியிருப்பார். அந்த பேட் வர்ட் என்ன? என்பது தான் என்னுடைய டவுட்.