2022 May 30
சிலர் பேசுவதை கேட்டால் சிரிப்புவரும். சிலரின் செயல்களை பார்த்தால் சிரிப்பு வரும். சிலரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். ஆனால் பேசாமலேயே தன்னுடைய அசைவுகளால் உலகையே சிரிக்கவைத்தவர் இவர். ஊமைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த காலத்தில் ஓசையெழுப்பாமலேயே மக்களை சிரிக்கவைத்து ஊமைப்படங்களுக்கு உயிர்கொடுத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் இவர். தன் உடல் அசைவுகளையும், முகப் பாவனைகளையும் கொண்டு மட்டும் அரங்கையே சிரிக்கவைக்கும் திறமைகொண்ட மாபெரும் கலைஞரும் இவர் தான். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தொகுப்பாளர், திரை, இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என இவர் கால்பதிக்காத துறைகளேயில்லை. கறுப்பு நிற கோர்ட்டு சூட், தலைக்கு மேல் எழும்பி நிற்கும் தொப்பி, கையிலொரு தடி, மூக்கையும் வாயையும் பிரிக்கும் அரை இன்ச் மீசை இவையெல்லாம் தான் ‘டக்கென்று’ இவரை அடையாளம் காணவைக்கிறது. ஆம், ‘உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை’ என்ற தத்துவவரிகளைத் தந்த மாபெரும் கலைஞர் தான் உலகப்புகழ் சார்லி சாப்ளின்.
உலகமே கொண்டாடிய சார்லி சாப்ளினின் உலகம் சோகங்களால் சுழன்றது. பார்ப்பவரை சிரிக்க வைக்கும் அவரின் வாழ்க்கை சிரிப்பை புதைக்கும் துயரங்களால் துரத்தப்பட்டது. வலிகளும், வறுமையுமே இந்த கலைஞரின் ஆரம்ப பயணத்தின் அடிப்படையாய் இருந்தன. இருந்தாலும் முயற்சி, திறமை, புத்திசாலித்தனம், கடின உழைப்பு மூலம் திரையுலகில் உயரத்தை தொட்ட திரைமேதையானார்.
இளமையும் வறுமையும்
1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி. லண்டன் வால்வோர்த் எனும் இடத்தில் ஓர் வறுமைக்குடிலில் சார்லஸ் சாப்ளின் மற்றும் ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் ஒரு மாமேதை குழந்தையாக. அந்த குழந்தைக்கு சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் எனும் இளமைப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அந்த குழந்தை தான் பின்நாளில் சார்லஸ் சாப்ளின் எனும் உலகப்புகழ் பெற்ற கலைஞராக மாறியது.
வறுமை வாழ்வில் கொடுமை. அதிலும் கொடுமை என்ன தெரியுமா? குழந்தைப் பருவத்தில் வறுமைதான். சார்லியின் பெற்றோர் பாடகர்கள். இருவரும் குறைந்த வருமானத்தை பெற்றாலும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடாத்தி வந்தனர். சார்லிக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவருடைய பெயர் சிட்னி. சிட்னி சாப்ளினின் தாயாருக்கும் அவரை கைவிட்டுச்சென்ற முதற்கணவருக்கு பிறந்தவர். எதிர்பார்ப்புகள் நிறைந்த முதல் திருமணம் ஹன்னாவிற்கு ஏமாற்றத்தையே தந்தது. பிறகு சார்லஸை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த காலத்திலேயே சார்லி சாப்ளின் பிறந்தார். சில நாட்கள் உருண்டோடவே சார்லஸ் மதுபழக்கத்திற்கு அடிமையானார். தன் மனைவியையும், பிள்ளைகளையும் மறந்து மதுவிற்கு மயங்கிவிட்டார். இதனால் வீடுவரவேண்டிய காசெல்லாம் வீதியோடு கரைந்துவிட்டது. இரு குழந்தைகள் வாழும் அந்த வீட்டில் வறுமையும் சேர்ந்து குடிபுக ஆரம்பித்தது. அமெரிக்காவிற்கு சென்றால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்று சார்ல்ஸ் அமெரிக்காவிற்கு பறந்தார். வெளிநாடு சென்ற கணவர் பணம் அனுப்புவார் என்ற நம்பிக்கையில் பார்த்துக்கொண்டிருந்த ஹன்னா வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். தம் இரு பிள்ளைகளுக்கும் பசியாற்ற மீண்டும் அரங்குகளில் பாடுவதற்கு முடிவுசெய்தார்.
சார்லியின் முதல் மேடை அனுபவம்
ஹன்னா இரவில் தியட்டர்களுக்கு சென்று பாடும்போது சார்லியையும் அழைத்துச்செல்வார். அங்கிருந்தவர்கள் சார்லி சிறுவன் என்பதால் பாடச் சொல்லி ஆடச் சொல்லி கேட்பார்கள். சார்லியும் தயக்கத்தோடும் கூச்சத்தோடும் ஆடி பாடுவான். அவனுடைய வேடிக்கையான அசைவுகளைப் பார்த்து அனைவரும் மகிழ்வர். இதனை அந்த தியேட்டர் முதலாளியும் சிரித்துக்கொண்டே பார்ப்பார். 1894 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சம்பவம் தான் சார்லியை அரங்கம் அறியச் செய்தது. வழமைப்போலவே அன்றும் மேடையில் பாடிக்கொண்டிருந்த ஹன்னா திடிரென்று தொண்டை வரண்டதால் குரலில் தளம்பல் ஏற்பட்டு பாடமுடியாமல் போனது. பார்வையாளர்களின் ‘ஊ.. ஊ..’ என்ற ஏளன கோஷம் கண்ணீர் கமழ ஹன்னாவை மேடைவிட்டிறங்கச் செய்தது. செய்வதறியாது திகைத்து நின்ற தியட்டர் முதலாளியின் பார்வை ஓரமாய் நின்று தன் அம்மாவால் பாடமுடியாமல் போன நிலைகண்டு ஒன்றும் அறியாதிருந்த அப்பாவி சார்லியின் பக்கம் திரும்பியது.
அவனை உடனே மேடையேற்றி ‘சார்லி பாடு’ என்றார். மேடையின் கீழே பெரிய கூட்டம். மேடைமேலே தனியாலாய் நின்றுகொண்டிருக்கும் 5 வயது சிறுவன். கசிக்கிப் போட்ட பரட்டைத்தலை, பெரிதாய் தொங்கும் கந்தல் உடை, செருப்பில்லாத கால்கள் மேடைத் தரையை உரசிக்கொண்டிருக்கும் போது கோமாளித்தனமான குழந்தை சிரிப்போடு நெளிந்துகொண்டிருந்தான் சார்லின். அவனைப் பார்த்து அரங்கே சிரிக்கத்தொடங்கிவிட்டது அரங்கம்.
சிரித்துக்கொண்டே அம்மா சொல்லிக்கொடுத்த பாடலை பாடத் தொடங்கினான் சார்லி. அருமையாக பாடிக்கொண்டிருக்கும் போதே தன்னை அறியாமலேயே தன்னுடைய வேடிக்கையான அசைவுகளமைத்து நடனமாடத்தொடங்கிவிட்டான். சார்லின் ஆடல், பாடலைக் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு நோட்டுகளை வீசி எறிந்தனர் மேடைக்கு. பாட்டு பாடி இவ்வளவு காசா? ‘நான் இந்த காசுகளை எடுத்துவிட்டு பாடுகிறேன்’ என்று வறுமைக்கு பிடித்த அவன் குழந்தை தனமான பேச்சோடு பாடலை நிறுத்திவிட்டு பணத்தை பொறுக்கினான். தன்னுடைய சட்டையில், காற்சட்டையிலிருக்கும் பாக்கெட்டுகளில் நோட்டுகளை குவித்துவிட்டு மீண்டும் உற்சாகமாய் பாடி முடித்தான்.
மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ஹன்னா சார்லினுக்கு முத்தமிட்டு அரவணைத்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இதுதான் சார்லி ஏறிய முதல் மேடை. அதுவும் அவருடைய ஐந்தாவது வயதில்.
அநாதையில்லத்தில் அடைக்கலம்
சில காலம் கழியவே வறுமை அகோரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது. ஹன்னாவால் பாடமுடியாததால் தையல் இயந்திரம் ஒன்றை வாடகைக்குப் பெற்று தைத்து வாழ்க்கையை ஓட்டிவந்தார். நாளடைவில் உடல் சுகயீனமாகியதால் அவரால் தொடர்ந்து தைக்கமுடியவில்லை. இதனால் தையல் இயந்திரத்திற்கும், வீட்டிற்கும் வாடகை தரமுடியவில்லை. பிள்ளைகள் பசியாற்ற முடியவில்லை. வாடகை தராததால் ஹன்னாவும், இரு பிள்ளைகளும் வீதியில் விடப்பட்டனர். ஒரு சாக்கடை ஓரத்தில் இருந்த குடிசையில் இருந்தனர்; மூவரும். பின் பிள்ளைகளை ‘லேம்பத் எனும் அநாதை பள்ளியில் சேர்த்து பின் அவர்களை பிரிய மனமில்லாததால் மீண்டும் அவருடனே அவர்களை அழைத்து வந்தார்.
அந்த சமயம் தான் சார்ல்ஸ் மறுமணம் புரிந்து லண்டன் வந்து திரையரங்குகளில் பாடுவதை அறிந்துகொண்டார் ஹன்னா. இதைக் கேட்டு மனமுடைந்துபோன ஹன்னா தன் பிள்ளைகளை கவனித்தக்கொள்ள சார்லஸ் ஊதியம் தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் மாதமாதம் ஹன்னாவிற்கு பணம் அனுப்பப்பட்டது. இருந்தாலும் பிள்ளைகளை கவனித்துக்கொண்டு வாடகையும் செலுத்த அதுபோதவில்லை. பின்னர் மீண்டும் ‘ஹான்வெல்’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். கணவரும், தம் பிள்ளைகளும் அருகிலில்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஹன்னா மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில காலம் கழித்து சிட்னி, சார்லி இருவருக்கும் தந்தை இருப்பதையறிந்து ஆதரவற்றோர் பள்ளி உரிமையாளர் சார்ல்ஸ் ஐ வரவழைத்து பிள்ளைகளை அழைத்துச்செல்லும்படி கூறினார். சாரல்ஸ் இன் இரண்டாம் மனைவியின் கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்ட பிள்ளைகள் இருவரும் தாய் மனநல மருத்துவமனையிலிருந்து வந்த செய்தியறிந்து தாயிடமே சென்றுவிட்டனர்.
சிறுவயதில் தொழில்
தாய்க்கு உதவியாக இருக்க பிள்ளைகள் வேலை தேட ஆரம்பித்துவிட்டனர். சிட்னி முதலில் 15 மணித்தியாலம் ரொட்டி கடையில் வேலை செய்துவந்தான். ஆனாலும் சிறுவன் சிட்னியால் கடினமாக வேலை செய்ய முடியாமல் போனதால் தபால் தந்தி அலுவலகத்தில் வேலை செய்தான். சார்லி பத்திரிகை விற்றதோடு ஓய்வு நேரத்தில் செறுப்புக்கு போலிஷ் போட்டான். பத்திரிகை வேலை நிறுத்தப்படவே ஒரு மருந்து கடையில் போத்தல்களை கழுவும் வேலை செய்தான். இப்படி கிடைக்கும் வேலையை செய்து அன்றாடம் மூவரும் பசியாறினர். பின்னர் சிட்னிக்கு கப்பலொன்றில் வேலைகிடைத்து அவன் சென்றுவிட்டான். வாடகை பிரச்சனையால் அம்மாவும் இளையமகனும் ஊறுகாய் கம்பெனிக்கும் மாடு வெட்டும் தொட்டியிற்கும் அருகிலிருந்த ஒரு சிறு அறைக்குள் வாழ்ந்தனர்.
பிள்ளையின் நிலையை கண்டு அவனுக்கு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்று நினைத்த சார்ல்ஸ் 1897 சார்லிக்கு எட்டு வயதாக இருக்கும் போது தன் நண்பர் ஜாக்சனின் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்து விட்டார். சார்லியைப் போன்றே 8 சிறுவர்கள் அங்கிருந்தார்கள். அவர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம். அவர்களின் வேலை பாட்டு, நாடகம், சர்க்கஸ், கோமாளி என்று பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும். அதில் சார்லி ‘தேவதைகளின் ராணி’, ‘சின்ரெல்லா’ போன்ற நாடகங்களில் நடித்து நடித்து புகழ் பெற்றான். ஓரளவு வருவாயும் வந்தது. சில மாதங்கள் கழிந்து ஜாக்சன் தன் கம்பெனியை மூடி விட, சார்லி மறுபடியும் வேலை தேட ஆரம்பித்தான்.
அறியாத வயதில் நரகவாழ்க்கை
இதற்கிடையில் மதுவுக்கு தீவிர அடிமையான தந்தை சார்ல்ஸ் சாப்ளினுக்கு 12 வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அடக்கம் செய்வற்கு கூட பணமில்லாததால் அநாதைப் பிணமாக மண்ணுக்குள் புதைந்துபோனார் சார்ல்ஸ். கணவனின் நிரந்தர பிரிவு, சிட்னி அருகிலில்லை, சார்லி பசி போக்க முடியவில்லை, வீட்டின் வறுமையென யோசனைகளால் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டார் ஹன்னா. இதனால் தாயை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தவிட்டு குடிசைக்கு திரும்பினான் சார்லி. உண்ண உணவில்லை, உடுத்த ஒழுங்கான உடையில்லை, நிம்மதியான உறக்கமில்லை, என்ன செய்வதென்றே தெரியாத சிறுவன் சார்லி மிகவும் கொடூரமான நரக வாழ்க்கையை அனுபவித்தான். பழைய துணிகளை விற்று பணம் பெற்று உணவு வாங்கலாம் என்று கந்தல் துணிகளை மூட்டைகட்டி விற்கச்சென்றான். யாராவது கந்தல் ஆடைகளை வாங்குவார்களா? பாவம். அது அப்போது அந்தச் சிறுவனுக்கு தெரியாது. ஏமாற்றமே இருந்தது. பட்டினி மட்டுமே அவனைத் தொடர்ந்தது. அதன்போதே கப்பல் வேலைக்கு சென்ற சிட்னி தன் குடிசைக்கு வந்து தம்பியின் நிலைக்கண்டு கட்டியனைத்து கண்ணீர் மல்கினான். தான் வேலைசெய்து கிடைத்த பணத்தைக்கொண்டு தம்பிக்கு உணவும்,உடையும் வாங்கிக்கொடுக்க சார்லி அதை புன்முறுவலோடு அணிந்துகொண்டான். இருவரும் நிறைய ரொட்டி, பிஸ்கட் வாங்கிக்கொண்டு தன் தாயை பார்க்கசென்றனர். பிள்ளைகளை கண்ட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரால் அணைத்துக்கொண்டார் ஹன்னா. இவர்களின் நிலைகண்டு இருவரும் தாயோடு அந்த வைத்தியசாலையிலேயே சிலநாட்கள் இருக்கவும் அவர்களுக்கு இலவச உணவு வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
சார்லியின் முயற்சியும்,திறமையும்
பின்னர் ஹன்னா பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருந்ததால் நன்றாக குணமடைந்துவிட்டார். சிட்னி மீண்டும் வேலைக்குச் செல்லும் நேரம் வந்தது. சார்லியும்,தாயாரும் மீண்டும் குடிசைக்கு திரும்பினர். வீட்டில் சும்மாவே இருப்பது சார்லிக்கு பிடிக்கவில்லை. தன் அம்மாவை கவனித்துக்கொள்ளவேண்டும் என்று வீதிக்கு இறங்கினான். பல நிர்வாகிகள் முன் ஆடி.பாடி. நகைச்சுவையாக பேசிக்கொண்டே சிறுவன் சார்லி ‘எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று கெஞ்சியவாறு தன் குடிசை விலாசத்தையும் கொடுத்துவிட்டு வந்தான். நிறைய இடங்களில் தொடர்ந்தது இந்த ஆட்டம்.பாட்டம். சார்லியின் திறமைக் கண்டு மனம் நெகிழ்ந்தவர் தான் ஒரு நாடக நிர்வாகி ஹேமில்டன். இவன் வருங்காலத்தின் மிகப்பெரும் கலைஞர் என்பதை தனக்குள்ளே எண்ணிக்கொண்டு அவனுடைய வீட்டு விலாசத்தையும் பெற்றுக்கொண்டு சில நாணயங்களை கொடுத்து அனுப்பினார் ஹேமில்டன். ‘நம்பிக்கையோடு போ’ என்ற ஹேமில்டனின் அழுத்தமான குரலில் சார்லினுக்கு நம்பிக்கை பிறந்தது. சார்லியின் நம்பிக்கை வீண்போகவில்லை மிக விரைவிலேயே சார்லியின் குடிசையின் ஓலைக்கதவின் ஓட்டையான அடியில் ஒரு அதிர்ஷடம் எட்டிப் பார்த்தது. ஆம் அதுதான் ஹேமில்டன் சிறுவன் சார்லிக்கு அனுப்பிய தந்தி. சரியாக 1903ம் ஆண்டு மீண்டும் ஹேமில்டனை சந்தித்தான் கையில் தந்தியோடு சார்லி.
நாடக பயணம்
பின் அவனுக்கு ‘Jim, A Romance Of Cockayne’ என்ற நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து பின் சார்லிக்கு வாரத்திற்கு இரண்டு பவுன் சம்பளமும் கொடுக்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து சார்லிக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. உலகப்புகழ் பெற்ற துப்பறிவு நாடகமான Sherlock இல் செய்தித்தாள் விற்கும் சிறுவன் வேடம் கிடைத்தது.
கப்பல் வேலையை முடித்துவந்த சிட்னிக்கும் தம்பியோடு Sherlock நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இருவரும் உற்சாகமாக நடிக்கத்தொடங்கினர். 1903 ஜூலை 27 ஆம் திகதி லண்டன் பெவிலியன் திரையரங்கில் இந்த நாடகம் வெற்றிகரமாக ஓடியது. இதில் அருமையாக நடித்த சார்லியை பத்திரிகைகள் பாரட்டின. இதன் பிறகு சார்லிக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். Casey”s Court Circus நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும் Fred Karno’s Fun Factory Slapstick நகைச்சுவை நிறுவனத்திலும் கோமாளி வேடித்தில் நடித்தான். பின் சார்லினுடைய வயதுடன் சேர்ந்து நாட்களும் நகர்ந்தன.
அமெரிக்காவில் சார்லி
1912 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி 23 ஆவது வயதில் அமெரிக்காவில் சார்லியின் கால்கள் தரையிறங்கியது.இதன் பின் சார்லியின் திரைப்பட பயணம் ஆரம்பமானது. தன் நடிப்பு திறமைக்கு வழிகாட்டியாக அமைந்த Keystone Film Company இல் நுழைந்தார். 1914 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் படம் Making a Living வெளியானது. பின் அதே ஆண்டு அவருடைய இரண்டாவது திரைப்படம் Auto Races at Venice வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் தான் கறுப்பு கோர்ட்,தொப்பி,கைதடி, வித்தியாசமான நடை என நகைச்சுவையான பாத்திரமாக தன்னை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த்து அமெரிக்க திரையுலகமே சிரிக்கத்தொடங்கிவிட்டது. கழைக்கூத்தாடியை போல உடைகளை அணிந்துக் கொண்டு குடிகாரன் போல நடக்கும் இந்த கோமாளி நடிகனை நம்பி ஆயிரக்கணக்கான டொலர்களை அள்ளி வீசுகிறீர்களா? என்று ஒரு கூட்டம் ஏளனமாய் பேசியது. இதை சற்றும் காதில் வாங்காத சார்லி அம்மா கற்றுக் கொடுத்த முக தோற்ற பாவனைகள், கைச் சைகைகள், நடன அசைவுகள் போன்ற உணர்ச்சிகரமான செய்கைகளை திரைப்படங்களில் வெளிப்படுத்தி கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றார். ஒரே வருடத்தில் 36 படங்களில் சார்லின் நடித்தார். அனைத்துமே ‘ஹிட்’ அடித்தன. நடிப்பதோடு நின்றுவிடாது கதை,திரைக்கதை, இயக்கம், இசையென அனைத்துறைகளிலும் தேர்ச்சிபெற்ற அவர் 1919 ஆம் ஆண்டு மேரிபிக்போர்ட் டக்ளஸ் பேர்பேங்ஸ் என்ற இருவருடன் சேர்ந்து ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். 1921 இல் The முனை , 1925 இல் The Gold Rush போன்ற படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைக்கவும் செய்தார்.
தாயின் பிரிவு
சார்லியை சந்திக்க வரும் திரைப்படத்துறையாளர்கள் கையில் பெட்டியோடு பேரம்பேச வருகைதந்தனர். கொத்து கொத்தாக பணம் தானாகவே சார்லியை தேடி வர ஆரம்பித்தது. முன்னர் ஒரு வேளை உணவுக்கு கூட பணமில்லாமல் இருந்த சார்லியின் வாழ்க்கையில் இப்போது பணமழை பொழிய ஆரம்பித்தது. மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு வேளை, மூன்று நாட்களுக்கு சேர்த்து ஒரு நாள் என்று பழைய சோற்றையும்,பழைய ரொட்டியையும் சாப்பிட்டு வந்த சார்லியின் உணவுமேசையை இன்று வகை வகையான ஆடம்பர உணவுகள் அலங்கரித்தும் உண்பதற்கு நேரமில்லாமல் கடும் பிஸியாகிவிட்டார். அமெரிக்காவில் மாளிகைபோன்றதொரு அழகான வீட்டைகட்டி தன் தாயை வரவழைத்தார். 1928 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஹன்னா சார்லியை பார்த்தவண்ணமே இறந்துவிட்டார். ‘அம்மா ! நீங்கள் எனக்கு ஆட, பாட, சைகை மொழிகளை கற்றுத்தரவில்லை என்றால் இந்த சார்லி இன்று எங்கோ ஒரு மூலையில் ஏதோ செய்துகொண்டு வாழ்ந்திருப்பேன்’ என்று கதறினார் தாய் பாசத்தில் கட்டுண்ட சார்லின். சார்லின் உயரத்தை தொட்டபின்பு தன் அம்மாவிற்கும் உயரத்தை கொடுத்தார். குடிசை வீட்டில் செறுப்புத் தொழிலாளிக்கு மகளாப் பிறந்த ஹன்னா தன் மகன் சார்லினால் ஆடம்பர மாளிகையில் தன் உயிரை விட்டார்.
மீண்டும் திரையுலகம்
தாயின் பிரிவால் மனமுடைந்த சார்லின் சில காலத்திற்குள் தன்னை தேற்றிக்கொண்டு மீண்டும் திரையுலகில் முகம்காட்ட ஆரம்பித்தார். 1927 ஆம் ஆண்டு ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கினாலும் சார்லி பேசும் படங்களை எடுக்கவில்லை. 1931 இல் அவர் இயக்கிய City Lights ஊமைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. பின்னர் 1936 ஆம் ஆண்டு Modern Times எனும் ஒலிப்படத்தை எடுத்தாலும் அதில் பேசாமலேயே நடித்தார். மகத்தான இந்த வெற்றிகளைத் தொடர்ந்து சார்லினின் புகழ் மெல்ல மெல்ல பல சமுத்திரங்களைக் கடந்து பேசப்பட்டது. பல கோடி மக்களின் புன்னகையை கண்ணீராக்கிய ஹிட்லரைப் போலவே தன்னை சித்தரித்துக்கொண்ட சார்லின் பல கோடி மக்களின் கண்ணீரை புன்னகையாய் மாற்றினார். 1940 ஆம் ஆண்டு வெளியாகிய அவரின் முதல் பேசும் படமான The Great Dictator திரைப்படம் சர்வாதிகாரியான ஹிட்லரைப் பற்றியும் அவரது பாசிச கொள்கையையும் விமர்சித்து உருவாக்கப்பட்டது. இதை பார்த்த ஹிட்லரும் சார்லினின் நடிப்பை ரசித்தார்.
கசந்த திருமணவாழ்க்கை
இருபத்தியெட்டு வயதில் சார்லி பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை முறிவடைந்து போகவே முப்பத்தி ஐந்து வயதில் லீடா க்ரேவை காதலித்து மணந்தார். இரு மகன்களும் பிறந்தனர் பின்னர் மீண்டும் விவாகரத்து ஏற்பட்டது. நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் மீண்டும் விவாகரத்து. பின் தன்னுடைய 54 வயதில் ஓநீலை திருமணம் செய்துகொண்டார். பின் எட்டு குழந்தைகள் பிறந்தன.
இராஜமரியாதை
கசப்பான அனுபவங்களையும், கொடுமையான வாழ்க்கையையும் கடந்து வந்த சார்லிக்கு உலகம் புகழாரம் சூட்டியது. அவருக்கு கிடைத்த கௌரவங்கள் பல. அமெரிக்க கொள்கைகளுக்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக எந்த Hollywood walk of frame என்ற நட்சத்திரப்பட்டியலில் இருந்து சார்லின் நீக்கப்பட்டாரோ அதே Hollywood walk of frame என்ற நட்சத்திரப்பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்று 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கவின் அகாடமி விருதில் வாழ்நாள் சாதனையாளர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. சார்லியின் திறமையைக் கண்டு வியந்த பிரிட்டிஷ் அரசு, இரண்டாம் எலிசபத் மகாராணி கைகளால் சார்லிக்கு ‘சர்’ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு சார்லியின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வெளியிட்டது. சார்லியின் மிகப்பெரிய ரசிகையான விண்வெளி வீராங்கனை லியூட்மிலா கரச்கினா ஒரு எரிகல்லுக்கு ‘3623 சாப்ளின்’ எனும் பெயரை சூட்டியுள்ளார். 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை ‘சாப்ளின்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.இருமுறை ஓஸ்கார் விருதுகளை சார்லி வென்றெடுத்துள்ளார். சார்லியின் ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் National Film Registry இல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மறைந்தார் மேதை
1977 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி சார்லியை பார்த்து மனம் விட்டு சிரித்த ஒட்டுமொத்த உலகமுமே மனம் நொந்து அழுதது. பரிசுத்தர் இயேசு கிறிஸ்து பிறந்த அன்றைய தினத்தில் தான் சார்லி சாப்ளினின் உயிர் இறைவனின் பாதங்களையடைந்தது. 88 ஆவது வயதில் வேவே என்ற இடத்தில் இன்னுயிரை துறந்த சார்லி சாப்ளினின் நினைவாக அங்கே சிலையொன்று அமைக்கப்பட்டது.
‘உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது’ என்று சார்லி சாப்ளின் உதிர்த்த வார்த்தைகள் அவரது வாழ்க்கையின் வலிகளை உணர்த்துகின்றது. ‘மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்று கூறிய சார்லி சாப்ளின் வலிகளை மனதிற்குள் புதைத்து அனைவரையும் சிரிக்கவைத்த மாபெரும் கலைஞராகவே வாழ்ந்து மறைந்தவர். பல கோடி மனங்களை வென்று அழியாத பெயராய் இன்றும் இம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கடந்த இந்த கலைஞரை நாமும் போற்றுவோம்..!