அறிவியலை நாடி சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!

சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!

2022 Aug 24

கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே!

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று குறுகிய கண்ணோட்டத்துடனே நோக்கப்படுகின்றது என்பது மிகவும் வேதனைக்குரியது. உலகமயமாக்கல் நிலவும் இக்கால கட்டத்தில் தாய் மொழியில் கல்வி என்பது; குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி  கொடுக்குமோ என்ற கேள்வியே பெற்றோர்களிடத்தில் எழுகிறது.

இன்று உலகம் முழுவதும் தாய் மொழி மூலமாகவே கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது. தாய் மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோளாக அமைகிறது. எந்த மொழியைக்கற்றாலும் எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய் மொழியில்தான என்பதை எவராலும் மறுக்க முடியாது. இருப்பினும் சிறுபான்மையினர் பேசும் மொழியால் வளர்ச்சி அடையாத மொழிகளில் தாய் மொழிக்கல்வியானது  மிகப்பெரிய சவாலானது.

 

தாய் மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாக கல்வி கற்கின்றனர். மனிதனது படைப்பாற்றலை தாய்மொழிக் கல்வியே அதிகப்படுத்துகின்றது. அதே போல் தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் சமூகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியும். கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் கற்றுத்தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு இலகுவாக போதிக்கலாம். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை, பேச்சாற்றல், ஆக்கத்திறன் என்பன அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலைத்தேய அறிஞர்கள் கூட தாய் மொழிக்கல்வியை வலியுறுத்துகின்றனர். ‘தான் பெற்ற கல்வி சமூகத்துக்கு பயன்பட வேண்டுமெனில், அவன் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும்’ என்று விபுலானந்தர் கூறியுள்ளதை சுட்டிக்காட்லாம். காந்தியடிகளும் தேசப்பற்று ஊற்றெடுக்க தாய்மொழியே அடித்தளம் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒருவர் தான் கூறவிரும்பும் கருத்தை தெளிவாகவும்; முழுமையாகவும்; ஆழமாகவும் தெரிவிக்க முடியும். வருடம் தோறும் பெப்ரவரி 21அனைத்துலக தாய்மொழி தினமாக 2000ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழிN;ய அடிப்படை அன்னை மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி. தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்கு பயன்படுத்துவது தாய்மொழியே.

கல்வியின் அத்திவாரம் தாய் மொழியே என்றாலும் மற்றொரு தேசிய மொழி, இரண்டாம் மொழி போன்ற மொழிகளைக் கூடவே கற்பதாலும் பல அனுகூலங்கள் உண்டு என்பதில் மறுப்பதற்கிடமில்லை. தொடர்பாடலை விசாலமாக்குவதுடன் பிற்காலத்தில் உயர்கல்வி கற்பதற்கும் தொழில் வாய்ப்புக்கள் பெறுவதற்கும் அது உதவும்.

‘தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை’ என்பது போல ‘தாய்மொழியிற் சிறந்த வேறு மொழியில்லை. என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறில்லை எனினும் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழியே அடிப்படையானது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தாய் மொழி மூலம் கல்வி பயிலும் குழந்தை தனது இயல்பூக்கங்களிற்கு ஏற்ப பூரண திறன்களை வெளிக்காட்ட முடியும் என்பது கல்வி உளவியல் அறிஞர்களின் கருத்தாகும். இதனால் தான் தாய்மொழி மூலம் கல்வி புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இன்று உலக அரங்கில் வளர்ச்சி பெற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ரஸ்யா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் தத் தம் சுயமொழி மூலமே கல்வி புகட்டுகின்றன.

தாய்மொழி மூலம் கல்வி பயின்ற நிபுணர்களையும் விஞ்ஞானிகளையும் பெருமளவில் கொண்டுள்ளன. தாய்மொழி மூலம் கல்வி பயின்றமையினாலேஇவர்கள்புதியபுதிய கண்டுபிடிப்புக்களை கண்டறிந்துள்ளனர். தாய்மொழி மூலம் கல்வி பயில்வதே சிந்தனை வளர்ச்சிக்கு துணை புரியும் என்பதை இது நன்கு புலப்படுத்துகின்றது. வளர்முக நாடுகள் பல இன்று பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் அவை வளர்ந்த நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டமையே தாய்மொழி மூலம் எதுவும் சாதித்து விட முடியாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றோரிலும் பார்க்க தாய்மொழி மூலம் பயின்றோரே இன்று உலகின் சிறந்த விஞ்ஞானிகளாகவும் பொருளியலாளராகவும் மருத்துவ நிபுணர்களாகவும் விளங்குகின்றனர்.

1907ல் பொதுவுடைமை புரட்சி மூலம் ஆட்சி அமைத்த சோவியத் யூனியனும் 1950ல் பொதுவுடைமை புரட்சி மூலம் ஆட்சி அமைத்த மக்கள் சீனாவும் 2ம் உலகப்போரின் பின் உருப்பெற்ற ஜப்பானின் பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கின்றது என்றால் முக்கிய காரணம் தத்தம் தாய்மொழி மூலம் கல்வி புகட்டியமை ஆகும். தாய்மொழி மூலம் ஒவ்வொருவனும் பற்றுக்கொள்ள வேண்டும். அப்பற்று இல்லாதவன் தாயை பழித்தவன் ஆகின்றான். ‘பெற்ற தாயை காட்டிலும் தாய்மொழி உயர்ந்தது ஆகும்.’ தமது தாய்மொழியைவிட்டு அந்நிய மொழியில் கல்வி பயில முற்படுவது அழகாகாது இதனாலேயே பாரதியாரும் ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும். என்றார். தாய்மொழியில் கற்பது தாய்ப்பால் பருகுவதைப் போன்றது.

 

பிறமொழியில் கற்பது புட்டிப்பால் பருகுவதைப் போன்றது. தாய்ப்பாலே குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு உகந்தது. அது போன்று தாய்மொழியில் கற்பதே குழந்தையின் இயல்பான சிந்தனை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே தாய்மொழி மூலம் கற்பதே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும்;. மேலை நாட்டினர் அறிவியல் துறையில் முன்னணி வகிக்க காரணம் அவர்களுக்கு தேவையான அனைத்து நூல்களும் அவர்களின் தாய்மொழியில் உள்ளமை ஆகும். தாய்மொழி வாயிலாக கல்வி பெறுதலும் எல்லா துறைகளிலும் தாய்மொழியை பயன்படுத்துவதும் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். தாய்மொழி மூலம் பெறப்படும் கல்வியே உள்ளத்தில் அடிபதிந்து அழியாப் பயன் நல்கும். அதுவே அறிவு சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படையாகும். நமது சமுதாயம் எழுச்சி பெறவேண்டுமாயின் நாடு பொருளாதார வளத்துடன் உயர்ந்திட வேண்டுமாயின் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழியிலேயே சிந்திக்க முடியும் சிந்திக்கும் மொழியிலேயே சிறப்பாக கல்வி கற்கவும் முடியும். அறிந்ததில் இருந்தே அறியாததை கற்றுக் கொள்ள முடியும். உலகெங்கும் தாய்மொழியில் கற்றவர்களே படைப்பாற்றல் மிக்கவர்களாக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மொழியையும் நாட்டையும்  மக்களையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்

உலகின் தலைசிறந்த குழந்தை உளவியலாளர்களும் கல்வியியலாளர்களும் இதனை உறுதிப்படுத்தி வருகின்றனர். குழந்தையின் தொடக்க கல்வி தாய் மொழியில் தான் அமைய வேண்டும் என்ற கருத்தை இதுவரை எவரும் மறுக்கவில்லை. உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் தொடர்கல்வி மட்டுமன்றி உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி என அனைத்தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் அங்குதான் நிகழ்கின்றன. இந்த அறிவியல் உண்மைக்கு இஸ்ரோ அறிவியலாளர்களும் சான்றாக திகழ்கின்றனர். விண்ணில் செயற்கை கோள்களை ஏவுவதில் வல்லரசு நாடுகளும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் அவர்கள் சாதனை புரிந்து வருவது யாவரும் அறிந்ததே. இச்சாதனைக்கு அடிப்படை காரணம் இஸ்ரோ அறிவியலாளர்களில் பெரும்பாலானோர் தொடக்க கல்வியை அவரவர் தாய்மொழியில் கற்றதே .ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை பல்வேறு கொள்கை மற்றும் செயற்றிட்டங்கள் ஊடாக முன்னிறுத்தி வருகின்றது.

அண்மைக்காலமாக தாய்மொழியில் கல்வியை பல்வேறு ஆபிரிக்க ஆசிய நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன. ஒருவரின் தாய்மொழியில் தேர்ச்சி பெறுவது அந்த மாணனின் அறிவுணர்வு வளர்ச்சிக்கும் பொதுவான கல்வி பெறுபேறுகளுக்கும் முக்கியமானது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன எனவே அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வி அடிப்படையாகும்.சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்படுத்துகின்றது.அனுபவங்களுக்கு அர்த்தம் கொடுப்பதும் தாய் மொழியே ஒரு மொழியின் இயல்பைப்பற்றி கற்பதற்குக் கூட தாய் மொழிதான் தெரிந்திருக்க வேண்டும். மொழியை எவ்வாறுபயன்படுத்துவது என்பதையும் தாய்மொழியே புகட்டுகின்றது. எனவே  கல்வியின் அத்திவாரம் தாய் மொழியே. தாய் மொழிக்கல்வியின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து மதிப்பளிக்க வேண்டும்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php