2022 Nov 4
எல்லாம் கடந்து விட்டேன்
என்று சொல்லிக் கொள்வதே
என்னோடு நான் செய்கின்ற
சமரசம்தானா என்ற நினைப்பு
என் நேரத்தை கொள்ளை
அடிக்கின்றது!
கடந்து விட்டேன் என்றால்
ஏன் எங்கேயாவது ஒரு
குழுப் புகைப்படம் கண்டால்
நான் அதில் உன் முகம்
தேடி அலைகிறேன்?
நகரத்து வீதிகளில்
உன் ஊருக்குச் செல்லும்
பேரூந்துகளைக் கண்டால்
நான் ஏன் ஒரு நிமிடம்
தளர்ந்து போகிறேன்?
பார்க்கவே போவதில்லை
என்றாலும் உனக்கு பிடிக்குமே
என்று நான் ஏன் தாடியை
கத்தரிக்காமலே இருக்கிறேன்?
நீயும் நானும்
கை கோர்த்து நடந்த
வீதிகளுக்குச் சென்று
வெறுமையாக உள்ள
என் விரல் இடுக்குகளை
பார்த்து நான் ஏன்
மனம் நோகிறேன்?
உனக்கும் எனக்குமான
நண்பர்களிடம் நான் ஏன்
உன்னைப் பற்றி நலம்
விசாரிக்கிறேன்?
உனக்குப் பக்கத்திலேயேதான்
இருக்கிறேன் என்பதை உணர்த்த
நான் ஏன் இத்தனை பிரயத்தனம்
செய்கிறேன்?
அஹ்ஸன் அப்தர்