மனிதர்களை நாடி Happy Birthday ஆண்டவரே!

Happy Birthday ஆண்டவரே!

2022 Nov 6

 ஆண்டவரே!உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு! இந்த பாட்ட எல்லாருமே கேட்டுருப்பீங்க. தசாவதாரத்துல வைரமுத்து படத்துக்காக பாட்டு எழுதினாரோ இல்லையோ நம்ம ஆண்டவருக்காகவே ஒரு பாட்டு எழுதியிருக்காருனா அது இந்த பாட்டு தான்.உலக நாயகனே! அப்படினு சொல்லும்போது ரசிகர்களுக்கெல்லாம் புல்லரிச்சு போகும். அவருடைய கலைக்கு மதிப்பு தரும் ரசிகர்கள் தான் ரொம்பவே அதிகம்.ஏனா அவர் ஒரு பன்முககலைஞன். நடிகர், இயக்குனர்,நடன ஆசிரியர்,பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர்,கதை-திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி அப்படினு சொல்லிகிட்டே போகலாம்.

எம்ஜிஆர், சிவாஜி இவங்களுக்கு அப்பறமா அசைக்கமுடியாத கலைஞரா இருக்குறாருனு சொன்னா ஆண்டவரோட ஆட்டம் அப்படி. இதனால தான் திரையுலகமே இவர கொண்டாடுது. ஆறு வயதில ஆரம்பிச்சு தமிழ் சினிமாவுல 60 ஆண்டுகள பூர்த்தி செய்த இவருக்கு பாராட்டு விழாவும் நடத்தினாங்க. இன்னைக்கு தமிழ் சினிமாவே ஆண்டவர்னு கொண்டாடுற அவர்தான் உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன். அவருக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள்.!

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

தமிழ்நாட்டில ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்குற பரமக்குடியில 1954 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி பிறந்தாரு ஆண்டவர்.அவருக்கு அப்பா அம்மா இட்ட பெயர் பார்த்தசாரதி. அவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என்கிற இரண்டு அண்ணாக்களும் நளினி ரகு என்கிற அக்காவும் இருக்காங்க. ஆண்டவரோட அப்பா டி.சீனிவாசன் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். இதனால தன்னோட பிள்ளைகளும் அதே போல படிச்சு முன்னுக்கு வரவேணும் அப்படினு கண்டிப்பா இருந்தாரு. இதனால அண்ணன் இரண்டுபேருமே தந்தை வழிய பின்பற்றி சட்டமும் பயின்றாங்க. நம்ம வீட்டுல கடைகுட்டி சிங்கம் நம்ம ஆண்டவர் தான். அவருக்கு படிப்ப விட மற்ற மற்ற கலைகளில தான் ஆர்வம் ரொம்ப அதிகம்.

படிக்குற காலத்துல நாடக அரங்கேற்றங்களில பங்கேற்பது ஆண்டவருக்கு மிகவும் பிடிக்கும். அதனால 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே அவரு படிச்சாரு. கலையின் மீது இருந்த அலாதியான ஆர்வத்தினால’டி.கே.எஸ்’ என்ற நாடகக்குழுவில சேர்ந்தாரு. அதுக்கு அப்பறமா ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்கிற பாடல் மூலமா தமிழ் சினிமாவோட குழந்தை நட்சத்திரமா அறிமுகமானாரு ஆண்டவர்.

ஆறிலிருந்து அறுபது வரை

1960ல் ஆறு வயதில ஜெமினிகணேஷன் நடிச்ச ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில முதன்முதல்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சு சினிமாக்குள்ள நுழைஞ்சாரு ஆண்டவர். ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ அப்படிங்குற பாடல்ல அறிமுகமான போதே அவருக்கு பெரிய நடிகர்களோட ஆசிர்வாதமும் அவர்கள் கூட நடிக்கும் வாய்ப்பும் கிடைச்சிச்சு. அதுமட்டுமில்லாம இந்த படத்துக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்கிற ‘இந்திய தேசிய விருதுதையும்’ பெற்றாரு. அதோட இந்த படத்துக்காக ஜனாதிபதி கிட்டயிருந்து தங்கப் பதக்கத்தையும் பெற்றாரு.

இதுக்கு அப்றம் சில படங்களையும் நடிச்சாரு. குழந்தையாக வந்த நம்ம ஆண்டவர் இளைஞனாக ஆனதும் 1970 ‘மாணவன்’ படத்துல ‘விசில் அடிச்சான் குஞ்சுகளா’ பாட்டுக்கு நடனமாடினாரு. அதுக்கு அப்பறமா 1973 இல் கே.பாலச்சந்தர் அவருடைய ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில தியாகு அப்படிங்குற துணை கதாபாத்திரத்தில நடிச்சாரு. பல துணைக் கதாபாத்திரங்கள்ல நடிச்சாலும் ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற படங்களில் வில்லன் கேரக்டராகவும் நம்ம ஆண்டவர் பண்ணியிருக்காரு.1974 இல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படம் தான் அவரு துணைக் கதாபாத்திரமா நடிச்ச கடைசித் திரைப்படமாகும்.

ஆண்டவர் முதன் முதலா கதாநாயகனாக அறிமுகமானது 1974 இல் வெளிவந்த ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமா தான். இந்தப் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றாரு. அதுக்கு அப்பறமா தமிழ் சினிமாவுல அவர கதாநாயகனா அறிமுகப்படுத்தியவரு இயக்குனர் கே.பாலச்சந்தர் தான். அவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலமா தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனா உருவெடுத்தாரு.

சூப்பர் ஸ்டாரையும், ஆண்டவரையும் கதாநாயகர்களா அறிமுகப்படுத்திய பெருமை கே.பாலச்சந்தருக்கு தான் போய் சேரும். இந்த இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சு ஹிட்டான படங்கள் நிறையவே இருக்கு. 16 வயதினிலே, மூன்று முடிச்சு, அவர்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது போன்ற படங்கள்ல நடிச்சதோடு இது எல்லாமே தமிழ் சினிமாவுல நல்ல வரவேற்பையும் பெற்றிச்சு.

அதுக்கு அப்பறமா நம்ம ஆண்டவர் ஏகப்பட்ட படங்கள நடிச்சாரு. சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நீயா, கல்யாண ராமன், நினைத்தாலே இனிக்கும், ராஜப்பார்வை, மூன்றாம் பிறை போன்ற படங்கள்ல நடிச்சு அதுக்கு விருதும் வாங்கினாரு. குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், அவ்வை ஷண்முகி திரைப்படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடிச்ச திரைப்படங்களாகும். நகைச்சுவையான கதாநாயகனாவும் நடிச்ச தெனாலி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்தத விட நல்லாவே ஹிட் ஆனது.

வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், விஸ்வரூபம் திரைப்படமெல்லாம் உலகளவில விஸ்வரூப வெற்றியையும் பெற்றிச்சு. தமிழ் சினிமாவுல மட்டுமில்லாம அவர் ஹிந்தித் திரைப்படங்களையும் நடிச்சு மாஸ் காட்டியிருக்காரு. ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக், கிரஃப்தார் போன்ற ஹிந்தி படங்கள குறிப்பிட்டு சொல்லலாம். ஒரு கலைஞனுக்கு ஒரு மொழியில்லை என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு நம்ம ஆண்டவர் தான். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி, கன்னடா,பெங்காலினு ஏகப்பட்ட மொழிகள கிட்டதட்ட 230 படங்களுக்கு மேல நம்ம ஆண்டவர் நடிச்சி இருக்காரு.

அண்ணாத்த ஆடுறார் ஒத்திகோ.

படிப்ப நிறுத்தின அப்பறமா ‘சிவாலயா’ என்ற நடனக்குழுவைத் தன் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினாரு. அதன் பின்னர் திரைப்படத்துறையில நடன அமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து கலைப் பணியாற்றினாரு.சின்ன வயதிலேயே நம்ம ஆண்டவர் நடனமாடத் தொடங்கிட்டாரு. எம்.எஸ்.நடராஜன் மாஸ்டர் கிட்ட குச்சுப்புடி, தங்கப்பன் மாஸ்டர் கிட்ட பரதம், கதகளி அப்படினு முக்கிய நடனக்கலைகளை எல்லாம் படிச்சு திரையுலகத்துல நடனக் கலைஞராகவே ஆரம்ப காலத்துல வலம் வந்தாரு நம்ம ஆண்டவர். ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில எம்.ஜி.ஆருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில சிவாஜிக்கும் ‘அன்புத்தங்கை’ படத்தில ஜெயலலிதாவுக்கும் நடன ஆசிரியராக பணியாற்றியிருக்காரு.

அத்தோட பத்துக்கும் மேற்பட்ட படங்களில டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் நம்ம ஆண்டவர். அவருடைய திரைப்படத்தின் சில பாடல்களில பரதமும் ஆடியிருக்காரு. அதிலையும் சலங்கை ஒளி படத்துல நாத விநோதங்கள்,விஸ்வரூபம் திரைப்படத்துல ‘உனைக் காணாமல்’ பாட்டு போன்ற பல பாடல்களுக்கு அவரு ஆடிய பரதம் ரசிகர்கள் பலர மெய்சிலிர்க்க வைச்சதுனு சொல்லலாம். கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான் நம்ம ஆண்டவர் நடிப்பு,நடனத்திற்கு மட்டுமில்ல பாட்டு பாடுறதுலையும் பாட்டு எழுதுறதுலையும் குரு தான்.

சிகப்பு ரோஜாக்கள், நாயகன், தேவர் மகன், குணா, மைக்கல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, அன்பே சிவம், புதுப்பேட்டை, மன்மதன் அம்பு, விருமாண்டி, விக்ரம் என 70 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்காரு. அதிலையும் குறிப்பா சொல்லனும்னா மன்மதன் அம்பு திரைப்படத்துல வரும் ‘நீல வானம்’ பாடலை நம்ம ஆண்டவர் பெக்வெர்ட்ல பாடியிருக்காரு. அதாவது அந்த பாட்டுல வீடீயோ க்ளிப்ல வரும் சீன்ஸ போலவே அந்த பாட்டோட வரிகளையும் நம்ம ஆண்டவர் ரிவர்ஸ்ல பாடியிருக்காரு.

நான் தான் சகலாகலாவல்லவன்

ஆண்டவர் நடிச்சு ஹிட் ஆகின ஒரு முக்கியமான திரைப்படம் தசாவதாரம். அந்தப் படத்துல நம்ம ஆண்டவர் பத்து கேரக்டரா நடிச்சு இருப்பாரு. நடிப்புல அவர அடிச்சுக்க ஆளே இல்லைனு சொல்லலாம். நடிப்பு மட்டுமில்லாம ஏனைய கலைகளையும் அவருக்கு ஆர்வம் அதிகம். இதனால தான் அவர பன்முககலைஞனு எல்லாருமே அடையாளப்படுத்துறாங்க. இயக்கம், தயாரிப்பு,திரைக்கதை, வசனம்னு பல துறைகளையும் தொட்டுவிட்டாரு நம்ம ஆண்டவர். ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறாரு. அவரோட திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ என்கிற நிறுவனத்தின் மூலமா 20 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள தயாரிச்சும் இருக்காரு.

அதுல அவரோட 100 திரைப்படமான ராஜபார்வை தொடங்கி விக்ரம், தேவர்மகன், குருதிப்புனல், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற பல படங்கள அவரு தயாரிச்சிருக்காரு. ஒரு திரைக்கதை ஆசிரியரா அவரோட முக்கிய திரைப்படங்களான மகாநதி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்காரு. சினிமாத் துறையில எவ்வளவு ஆர்வமோ அதேயளவு ஆர்வத்தை இலக்கியத் துறையிலையும் காட்டி வாராரு நம்ம ஆண்டவர். 1980 ஆம் ஆண்டுல ‘மய்யம்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்தாரு.

‘தேடி தீர்ப்போம் வா’ என்கிற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுருக்காரு. அதுல அரசியல், சினிமா, காஷ்மீர் பிரச்சனை, போதை விழிப்புணர்வு இப்படி பல விடயங்கள சுட்டிக் காட்டியிருக்காரு. இதயம் பேசுகிறது வார இதழில ‘தாயம்’ என்ற தொடர்கதையையும் ஆனந்த விகடன் இதழில ‘என்னுள் மையம் கொண்ட புயல்’என்கிற தொடரையும் எழுதியிருக்கிறாரு. புத்தகங்கள் எழுதுறதுல மட்டுமல்லாம கவிதை எழுதுவது, மற்றவர்கள் எழுதிய புத்தகங்கள வாசிப்பது அத பலரோட பகிர்ந்து கொள்வதுனு ஒரு இலக்கியவாதியாகவும் நம்ம ஆண்டவர் திகழ்றாரு.

ஒரு நடிகன் என்பதை தாண்டி ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தன்னோட பணிய சிறப்பா செய்து வராரு ஆண்டவர். விஜய் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுர பிக் போஸ் நிகழ்ச்சிய 2017 ஆம் ஆண்டுல இருந்து இப்போ வரைக்கும் கடந்து ஆறு சீசன்களாக தொகுத்து வராரு. அதிலையும் குறிப்பா சொல்லனும்னா சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில நம்ம ஆண்டவர் வாரத பார்க்குறதுக்காகவும், அவரு பேசுறதை கேட்குறதுக்காகவுமே நிறையபேர் அந்த டைம்ல பிக்போஸ் பார்க்குறாங்களாம்.

நாயகன் மீண்டும் வரார்.

தன்னோட திரைப்படங்களின் மூலமா மறைமுகமா அரசியல் பேசின நம்ம ஆண்டவர் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. இராமேஸ்வரத்தில இருக்குற முன்னாள் குடியரசுத் தலைவர் அறிவியல் மாமேதை அப்துல் கலாம் அவரோட வீட்டுக்குப் போய் அங்கு அவரோட சகோதரர சந்திச்சு அவரோட ஆசிர்வாதத்தோட தன்னோட அரசியல் பயணத்தை ஆரம்பிச்சி இருக்காரு.மக்களுக்கு நல்லது செய்ய ஒரு மக்கள் தொண்டனா தன்னோட கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ அப்படிங்குற பெயர் வச்சி ஆரம்பிச்சி இருக்காரு. நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல்களில தோல்விய தழுவினாலுமே லட்சக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் மற்றும் மக்களோட ஆதரவு பெருமளவுல நம்ம ஆண்டவருக்கு கிடைச்சதுனு சொல்லலாம்.

உங்கள் நான்

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தியவரு தான் நம்ம ஆண்டவர். அதோட நிறுத்திடாம அதன் மூலமா நிறைய நல்ல விடயங்கள் நடக்கவும் அவரு ஆதரவா இருந்து இருக்காரு. இந்த நற்பணி மன்றத்தில இருக்கவங்க பத்தாயிரத்துக்கும் அதிகமான ஜோடிக் கண்களை தானம் செய்திருக்காங்க. அதுவும் நம்ம ஆண்டவர் 2002 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் திகதி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தன்னோட உடல் உறுப்புகளை தானம் செய்யப் போவதாக பதிவு செய்துருக்காரு. அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுறது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்ற பொருட்களை வழங்குவதுனு பல நற்பணிகளில ஈடுபட்டுவராரு.

எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக ‘ஹ்ருதயராகம் 2010’ என்ற அமைப்புக்கு தூதுவராக இருந்து இருக்காரு. 2010 ஆம் ஆண்டு சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டி கொடுத்து இருக்காரு. ஆதரவற்றவர்களுக்காக இல்லத்தையும் அமைச்சு கொடுத்து இருக்காரு. 2017 ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில தமிழ் இருக்கை அமைக்கனும்னு அதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து இருக்காரு. இப்படி பல சமூக உதவிகள நம்ம ஆண்டவர் பண்ணியிருக்காரு. அவரு அடிக்கடி சொல்ற ‘உங்கள் நான்’ என்ற வார்த்தைக்கு ஏற்றமாதிரியே மக்கள் குறைகளை தீர்க்கும் சேவகனாகவும் நம்ம ஆண்டவர் வாழ்ந்து வராரு.

நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன்

சிறந்த நடிப்பிற்காக களத்தூர் கண்ணம்மா, மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் இப்படி சில படங்களுக்கு இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றிருக்காரு. இந்தியா அரசு மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது, செவாலியே விருதுகள நம்ம ஆண்டவருக்கு வழங்கி கௌரவிப்பு செய்தாங்க. 2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிச்சாங்க. இப்படி பல உயரிய விருதுகளை வென்றெடுத்த ஒரே நடிகர் நம்ம ஆண்டவர் தான்.

யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா?

-மிஸ்டர் போயட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php