2022 Nov 8
தம்பி ஊரு எங்க மலையகமா?
தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற
கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன்.
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரே காரணம் நீங்கள் நகரம்.
நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும்
எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்
மத்தப்படி நாங்களும் உங்களை போலதான்
எங்களது தோட்டக்காடுகளை இரசித்தே செல்லும்
மேகக்கூட்டங்களை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்
அது சொல்லிச் செல்லும் எங்க மண்ணின் அழகை.
குதித்தோடும், அருவிகள்,பச்சைக்காடுகள்
பசுமையான மலைகள்.
உயர நீர்வீழ்ச்சிகள்
என அடுக்கி கொண்டே போகும்.
எங்களை சுவாசித்து செல்லும் இளங்காற்றை
நிற்க சொல்லி கேட்டு பாருங்கள்.
திருவிழாக்களில் எங்களது ஆட்டப்பாட்டங்களையும்
துக்க வீடுகளில் எங்களது ஒற்றுமையையும்
அந்த காற்று பாடிச் செல்லும்.
காலை ஆறுமணிக்கு அம்மாவிடம் காலை
உணவோடு அன்பையும் வாங்கி கொண்டு
அந்த தேயிலை செடிகளுக்குள்
முயல்குட்டிகளை போவ ஓடிச்சென்று
படித்த கல்வி மாலையானால் நேரம்
போவதுகூட தெரியாமல் விளையாட்டு
சாமி இருட்டிற கூடாது இன்னும் கொஞ்சம்
நேரம் விளையாடனும்னு சூரியனை கெஞ்சிய நாட்கள்.
பண்டிகை காலங்களில் புத்தாடை உடுத்தி
தின்பண்டங்கள் கொடுத்தே வாங்கி பட்டாசுகள்
கொழுத்தி அந்த சந்தோசங்களை வார்த்தைகளில்
சொல்லிவிட முடியவில்லை.
உங்களில் எத்தனை பேர்
இவற்றை எல்லாம் அனுபவத்து இருக்கிறீர்கள்..
சரியான தலைமைத்துவம் வந்தால்
எங்களுக்கான வசதிவாய்ப்புகள் சரியாக கிடைக்கும்.
உங்களுக்கு சமமாக எங்களது சகோதர
சகோதரிகளும் இன்று பல்கலைக்கழகங்கள்
பயின்று வருகின்றனர்.
மலையகத்தானும் மனிதன் தான்.
அவனையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
விடியல் ஒன்றிற்காய் காத்துக்கிடக்கும்
எறும்புக் கூட்டங்களாய்.
எல்லாம் ஒரு நாள் சரியாகும்
என்ற நம்பிக்கையில் இன்று
விதைகளாய் நாளை விருட்சங்களாய்!
-மோகன் ஜெயரட்ணம்