2022 Nov 9
அன்றுகளில்
நீயும் நானும் ஒன்றாக
உட்கார்ந்து உணவருந்திய
அதே இடத்தில்
அதே மேசையில்
இன்று எனக்குப் பதிலாக
வேறு யாரோ ஒருவர்
உனக்கு எதிரில்
உட்கார்ந்து கதை
பேசுகின்றார்கள்
மலை உச்சியில் முளைத்த
அணி வேரைப் போல
அதே போன்ற கதிரையில்
காலம் முழுக்க லயித்திருக்கவே
நான் எண்ணியிருந்தேன்.
என்றாலும் என்னை துரத்த
நீ எடுத்த பிரயத்தனங்களை
எல்லாம் பார்த்த வேதனையில்
என் கதிரையின் கால்களை
நானே உடைத்துக் கொண்டேன்
எனது இடம் என்று
நான் நினைத்துக் கொண்டிருந்த
அந்தக் கதிரையை துண்டாடியுள்ள
வருங்கால ஏமாளி யார் என்று
தெரியவில்லை என்றாலும்
என்னைப் போலவே எல்லோரும்
ஏமாளியாகத்தான் இருப்பார்கள்
என்று நினைப்பது எத்தனை
முட்டாள்தனம் என்று எண்ணி
சிரிக்கிறேன்.
இத்தனை வருடங்களில்
நீயும் நானும் வாங்கிச் சென்ற
உணவுப் பொட்டலங்களின்
விலை மட்டுமே மாறியிருக்கிறது
நீ என்னை மாற்றியதைப் போல
வேறு எதையுமே மாற்றவில்லை
என்னை மாற்றுவது உனக்கு
எத்தனை இலகுவாக இருந்தது
என்று யோசித்து யோசித்தே
ஆண்டுகளை கடத்தி விட்டேன்
எனக்குப் பிடித்த ஊருகாய்
எனக்குப் பிடித்த மிளகாய் என
எல்லா கதைகளையுமே
அந்தக் கதிரை அறியும்
இந்நேரம் நான் இல்லாத
உன்னை பார்த்த அது
யார் இவர்கள் என்று
குழம்பிப் போயிருக்கும்
அது அப்படியே இருக்கட்டும்
கதிரைக்கு தெரியுமா
ஊருகாய் வாசணை.
-அஹ்ஸன் அப்தர்