2023 Jan 11
மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள், அன்றாட வாழ்க்கைக்கான பாடங்களாகத்தான் இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அர்த்தபூர்வமாக பேசும் படங்கள் அடுத்தடுத்து மலையாளத்தில் வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது, கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே!’ விபின் தாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தர்ஷனா ராஜேந்திரன், பேசில் ஜோசப், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிறு வயதிலிருந்தே தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை வெளிக்கொணர தடைவிதிக்கப்பட்ட நாயகி தர்சனா, பெண் எதற்க்காக படிக்க வேண்டும் ? என்கிற மனோநிலையில் உள்ள குடும்பத்தினரின் எதிர்ப்பையும் தாண்டி டிகிரி முடிக்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் நுழைகிறார் . அங்கு பெண்ணியம் பேசித்திரியும் கல்லூரிப் பேராசிரியர் மீது காதல் ஏற்படுகிறது.
சிறுவயதில் இருந்தே வீட்டில் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்த நாயகிக்கு இவர் பேச்சு பிடித்துப் போகவேதான் காதலில் விழுகிறார். ஆனால் காதலிக்கத்தொடங்கியதும் தான், அவர் எப்படி பட்ட சைகோ என்பது தெரிகிறது. வெளியில் மட்டும் பெண்ணியம் பேசிக்கொண்டு தனது காதலியை அனைத்து விடயங்களிலும் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருக்க நினைக்கிறார் அந்த பேராசிரியர். ஒருகட்டத்தில் நாயகியின் மூக்கு உடையும் அளவிற்கு அடித்தும் விடுகின்றார். இது நாயகியின் வீட்டுக்கு தெரியவர உடனே வேறொருவருடன் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மகளின் ஆசைகளை பற்றி துளியும் கவலை இல்லாத பெற்றோர், வாழ்க்கை முழுவதும் கூடவே வரும் துணையை மகளுக்கு பிடித்திருக்கிறதா என்று கேலாமல் அவசரஅவசரமாக திருமணம் செய்துவைத்துவிடுகின்றார்கள்.
திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு சென்றபிறகு மாப்பிள்ளை எவ்வளவு கோவக்காரர் என்றும் எப்படியான கட்டுப்பெட்டி என்றும் புரிந்துகொள்ளும் தர்சனா, தனது கணவரிடம் தினமும் அடி வாங்குகிறார். (தினமும் இடியாப்பம் மட்டுமே உண்ணும் கணவருக்கு வேறு உணவை ஆசையாக சமைத்து வைத்ததற்காக கூட அடி விழுகிறது. ஏனென்றால் அவர் இடியாப்பம் மட்டும்தான் திண்ணுவாராம் !!! ) மனைவி கணவனை எதிர்த்து பேசக்கூடாது, கணவனுக்கு பிடித்ததை மட்டும் தான் சமைக்க வேண்டும், அவரைக்கேட்காமல் எதையும் செய்யக்கூடாது போன்ற So Called விஷயங்களை நாயகியும் சந்திக்கிறார். பிறகு சிந்திக்கிறார். ஒருகட்டத்தில் கணவனை அடி வெளுத்துவிடுகிறார். இதனால் அதிர்ந்த நாயகனுக்கு பிறகு தான் தெரிகிறது, யூடியூப் பார்த்து நாயகி கராத்தே கற்றுக்கொண்டது.
“வீட்டிலேயே மாட்டிக்கொண்டோம் எங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை “ என்று புலம்பும் பெண்களுக்கு, ஒரு smart phone போதும் உங்களை நீங்கள் தற்காத்துக்கொள்ள என்றும், வெறும் சமையலையும், அழகுக் குறிப்பினையும் மட்டும்தான் ஒரு பெண் யூடூபில் பார்க்கவேண்டுமா என்ன? என்பதை அடித்துச் சொல்லிவிடுகிறார் இயக்குனர் போலும் . தனது மனைவியை தனக்கு அடிமையாக்க அடக்கி வைக்க ஒரு வழிமுறையை தேடும் கணவன், மனைவியை கர்ப்பமாக்கிவிட்டால் போதும் என்று முடிவு செய்வதில் பல ஆண்களின் மனவோட்டத்தை அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.
கணவன் மனைவியை அடிப்பது என்பது மிகச் சாதாரணமான ஒரு விஷயமாக இச்சமூகத்தால் பார்க்கப்படுகிறது என்பதும் , அவள் திருப்பியடிக்க ஆரம்பித்தால் இந்த சமூகத்தின் மனநிலை மற்றும் கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பதும் மிகத் தத்துரூபமாக சொல்லப்பட்டிருக்கின்றது கதையில்.
நகைச்சுவை ஒரு சூத்திரம். அந்தச் சூத்திரத்தின் வழி பெண்களின் அகச்சிக்கலை இயல்பாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். பெண்ணின் குணம் வீரம் என்பதை மறந்து போகக்கூடிய அளவிற்கு பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள் என்று மனச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம். “அடிச்சுப்பாரு” என்று ஒரு பெண் துணிந்து சொல்லும் தைரியமும் சொல்ல முடியாத நெருக்கடிகளில் ஒரு பெண் தனியாக வாழ இயலும் என்று சொல்லும் துணிவும் ஆணைவிடப் பொருளாதாரத்தில் பெண்ணால் உயர்ந்து நிற்க இயலும் என்ற திடமும் படத்தைத் தாங்கி நிற்கின்றன.
கணவன் அடிப்பதை தந்தையிடம் சொல்லும் போது, அதனை காது கொடுத்து கூட கேட்க அவர் தயாராக இல்லை. இதெல்லாம் சகஜம் அட்ஜஸ் செய்துகொள் என்ற அட்வைஸ் தான் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. இப்படி பல மன உளைச்சல்களுக்கு நடுவே சிக்கித்தவிக்கும் நாயகி, ஒரு முடிவெடுக்கிறார். பெற்றோரும் வேண்டாம், கணவனும் வேண்டாம் சொந்த காலில் நிற்பேன் என்று வீட்டை விட்டு செல்கிறார். பாதியில் நிறுத்திய டிகிரியை தொடர்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு பிசினஸ் செய்யவும் தொடங்குகிறார்.
கிளைமேக்ஸ் காட்சியில் இரு நீதிமன்ற காட்சி வரும். அதில் பெண்களுக்கு தேவையான மூன்று விஷயங்கள் என்ன என்று நீதிபதி நாயகியின் கணவரிடம் கேட்க, அவர் பக்தி, ஒழுக்கம், வீட்டு வேலை செய்வது என சொல்லும் பதிலை கேட்டு, அதிர்ந்துபோன நீதிபதி அதே கேள்வியினை நாயகியிடம் கேற்க, அவள் அதற்கு சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் என்கிறார். எக்காலத்துக்கும் பொருளாதாரமே பெண்ணுக்கு முக்கிய பலம் என்பதே படத்தின் அடிநாதம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.