2023 Mar 14
மகிழ்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஓர் விடையம். வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள் அவர்களை சுற்றி யாரும் இருப்பதில்லை. இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடுகள் இருப்பதில்லை என்கின்ற போதிலும் பொதுப்பார்வையில் பெண்கள் நகைச்சுவை திறன் குறைந்தவர்கள் என்கிற தவறான கண்ணோட்டம் இன்றுவரையில் நிலவிவருகின்றது என்பது கண்கூடு.
பெண்களிடம் “humor sence” குறைவு என்பது உண்மைதானா? இல்லவேயில்லை சின்னச் சின்ன சந்தோசமான விடயங்கள் மற்றும் நகைச்சுவையான விடயங்களுக்கெல்லாம் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டபோது பொதுவாக சிரிப்பதில் பெண்களுக்கென்று ஒரு தனி சிறப்புண்டு. கலகலவென்று சிரிப்பது பெண்களின் இயல்பு. அதிலும் கண்களில் நீர் வர சிரிப்பதும்கூட உண்டு.ஆனால் இதுபோன்று ஆண்கள் சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்கள். இதற்குக் காரணம் பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் (brain cortex function) எனும் பகுதிக்கு முந்தைய அடுக்கு முக்கிய பங்காற்றுவதுதானாம் என்கிற விடயத்தினை கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வொன்று விளக்கியுள்ளது.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது, தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைவதாகவும், பெண்களது சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும், பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது இந்த ஆய்வு.பொதுவாக பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற தவறான கன்ணோட்டம் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்? உண்மையில் பெண்களுக்கு நன்றாக நகைச்சுவை வரும். பெண்களைப் போல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் யாருமில்லை என்பதற்கு கிராமப்புறங்களின் பக்கம் சென்று பார்க்க வேண்டும். அங்கிருக்கும் கிழவிகளிடம் பேச்சு கொடுத்துவிட்டு மீண்டு வந்துவிட முடியுமா என்ன?
அந்த அளவுக்குத் தங்கள் நகைச்சுவையால் கிழித்துத் தொங்கவிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருக்கும். பெரும்பாலான பெண்களுக்குத் துயரமான வாழ்க்கைதான். ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு தான். வாய் விட்டு அதிகம் சிரிக்கக்கூடாது, சத்தமாகப் பேசக்கூடாது என எல்லாக் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் அதையும் மீறி அவர்கள் சிரிப்பார்கள், சிரிக்க வைப்பார்கள். ஏனெனில் அவர்கள் துயரமான வாழ்க்கையிலிருந்து மீள்வதற்கான ஒரே வடிகால் இந்த நகைச்சுவை உணர்வு தான். அது இருப்பதனால் தான் அவர்கள் வாழ்கைப்பாடு சீரான தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றுகூட கூறலாம்.
நமக்கெல்லாம் ஒன்றுதோன்றும், சினிமாக்களிலெல்லாம் ஆண் நகைச்சுவை நடிகர்கள்தானே கொடிகட்டிப் பறக்கிறார்கள்? பெண் நகைச்சுவை நடிகைகள் அந்த அளவிற்கு உச்சம் தொடவில்லை என்பதோடு பெண் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவுதானே என பொதுப்படையான ஓர் கருத்துண்டு. ஆனால், நமது சினிமா வரலாற்றினை எடுத்துப்பார்த்தோமானால் தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே நகைச்சுவை கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் நகைச்சுவை நடிகர்கள் என ஆரம்பகால தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் என்.எஸ் கிருஷ்ணனும் காளி N ரத்தினமும் நினைவுக்கு வருவார்கள். ஆனால், அந்த இரண்டு நகைச்சுவையாளர்களின் பக்கத்தில் இரண்டு நகைச்சுவை நடிகைகள் இருந்திருக்கிறார்கள். காளி.என்.ரத்தினத்துடன் சி.டி ராஜகாந்தமும், N.S..கிருஷ்ணனுடன் டி.எ.மதுரமும் இருந்திருக்கிறார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன் என்று சொல்லும்போதே டி.ஏ மதுரத்தை ஒதுக்கவே முடியாது. அவர்கள் இருவரது நகைச்சுவை என்பது சமூக அக்கறை சார்ந்த நகைச்சுவையாகவே பல படங்களிலும் இருந்தது. அடுத்து தங்கவேலு நாகேஷ் நகைச்சுவை காலப்பகுதியில் என்றால் மனோரமா என்கிற நடிப்பு சக்கரவர்தினியும் , டி.பி முத்துலட்சுமி, எஸ்.என். லட்சுமி, அங்கமுத்து, பி.ஆர்.மங்களம், ரமா பிரபா, எம்.சரோஜா, சச்சு, மாதவி (ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்த நடிகை) என நகைச்சுவையில் கலக்கியெடுத்த நடிகைகளின் பட்டியல் ஏராளம் . அடுத்துவந்த கவுண்டமணி செந்தில் கூட்டணியில் நகைச்சுவை சரவெடியில் கலக்கியவர்கள் என்றால் கோவை சரளா, பிந்துகோஷ் போன்றவர்களை மறக்கவியலாது. தற்போதைய தமிழ் சினிமாவில் ஆர்த்தி,மதுமிதா, வித்யூலேகா, காலம்சென்ற சோபனா, தேவதர்ஷினி, அறந்தாங்கி நிஷா, ப்ரியங்கா என சொல்லிக்கொண்டே போகலாம்.
கிராமங்களில் கிழவிகள் செய்யக்கூடிய நகைச்சுவைக்கு வடிவம் கொடுத்தது போன்றதுதான் ’மண்வாசனை’ படத்தில் காந்திமதி ஏற்ற ஒச்சாயி கிழவி வேடம். வாயைத் திறந்தாலே ஏதாவது பழமொழியைச் சொல்லிக் கொண்டு அசல் கிராமத்துப் பென்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். கிராமங்களில் வயதான பெண்களிடம் இருக்கக் கூடிய இளக்காரமாக நையாண்டி செய்யும் நகைச்சுவைப் பேச்சின் பிரதி பிம்பம் தான் காந்திமதியின் நடிப்பு எனலாம். காந்தி மதியைப்போன்ற கிராமத்து நகைச்சுவை நார்ச்சத்திரங்கள்தான் தேனீ குஞ்சராம்பா , மற்றும் பறவை முனியம்மா போன்ற மிகத் திறமையான நடிகைகள்.
இந்த தொடரில் நான் பட்டியலிட்ட நடிகைகள் தவிர வேறு சில நடிகைகளும்கூட என்னுடைய கவனத்திலிருந்து விடுபட்டிருக்கக்கூடும். எது எப்படியாயினும் , திரைத்துறை என்பது ஆண் சார்ந்த துறை என்பதால் இங்கு நகைச்சுவை நாயகர்களுடன் நடிக்கக் கூடிய நடிகைகள் எல்லோரும் சக நகைச்சுவை நடிகைகள்தான். அதையும் தாண்டி நகைச்சுவை நடிகைகளாகக் கொடி கட்டிப் பறந்தவர்களே இங்கே ஜெயித்தவர்கள்.
-ப்ரியா ராமநாதன்