அறிவியலை நாடி மன அழுத்தத்திலிருந்து தப்பி ஓடுவது எப்படி?

மன அழுத்தத்திலிருந்து தப்பி ஓடுவது எப்படி?

2021 Nov 23

இன்றைய இளைஞர்கள் பலரும் தமது இரவு நேரங்களில் தூக்கத்தினை தொலைத்து அலைமோதிக் கொண்டு இருக்கின்றனர். அன்று போல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை நிலை இல்லாமையே அதற்கான காரணமாகும். முன்பு ஓர் வயது வரை பெற்றோரின் அரவணைப்பு பதினெட்டை தாண்டுவதற்கு முன் திருமணம் அதன் பின் பாதிநேர உழைப்பு மீதி நேர குதூகல கொண்டாட்டங்கள் மற்றும் வாரிசுகளை பெற்றெடுப்பது என்ற சாதாரண எளிய அமைப்பிலான வாழ்வாக இருந்தது. அவ்வாறு வாழ்ந்த வயதில் மூத்தோருக்கு என்ன தெரியும்? இன்று நாம் தூக்கம் தொலைத்து தவிப்பதற்கு தொலைபேசிகள் மட்டுமே காரணம் என எண்ணி வஞ்சித்து கொண்டுள்ளனர்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள் ஆராய்வோம்.

பாடசாலை தாண்டுவதற்கு முன்பிருந்தே மனதினை அழுத்தக் கூடிய காரணங்கள் வந்து சேர்கின்றன. பள்ளி வயதில் என்ன சுமையோ? எங்களுடைய பள்ளி பைகளே பெரும் சுமை தான். மூட்டை தூக்கி உழைக்கும் கூலியாட்கள் கூட அவ்வளவு நேரம் ஓர் பையினை தூக்குவார்களா என்பது சந்தேகமே. புத்தகத்தை திறக்கும் போதே பெற்றோர் தொடக்கம் வகுப்பாசிரியர் வரை பிடித்தவற்றை படி என கூறுவதை விடுத்து முதலிடம் பிடித்திட படி என கூறுவதே அதிகம். பல நாட்களாய் ஓர் சந்தேகம் “எல்லோருமே முதலிடம் வந்தால் பின் யார் இரண்டு மூன்று ஆகிய இடங்களை நிரப்புவார்களோ?”. சரி ஒரு வழியாக படித்து உடல் வருத்தி நல்ல புள்ளிகளை பெற்றாலும் பெற்றோரின் பார்வை போவதென்னவோ 100 புள்ளிகளில் காணாமல் போன பத்து புள்ளிகளுக்கும் பக்கத்தில் 91 எடுத்த பிள்ளையின் பேப்பர்க்கும் தான். இனி அடுத்த தவணை அந்த மீதியை பிடிக்க பைத்தியமாக ஓட வேண்டிய அழுத்தம் ஆரம்பமாகி விடும். எப்படியோ இந்த தடைகள் தாண்டி பள்ளி படிப்பை முடித்தால் வீட்டிற்கு வரும் போதெல்லாம் ரிசல்ட்ஸ் பற்றி கேட்பதற்காகவே வந்து டீ பிஸ்கட் சாப்பிடும் கூட்டம் ஒரு புறம். ஒரு வழியாக இந்த கேள்விகளை தாண்டி வேலைக்கு சென்றால் “என்ன சம்பளம்? ஓ அவ்ளவு தானா பக்கத்து வீட்டு மாலான்ட மகள் மாசம் 60,000 சம்பளமாம்” இந்த கேள்வியும் பதிலும் துரத்தும். சரி என 60,000 சம்பாதிக்கும் அளவிற்கு வளர்ந்தாலும் 100,000 சம்பாதிக்கும் ஒருவரின் புகழினை தேடி எடுத்துக் கொண்டு வந்து வாசலில் நிற்பார்கள். இவற்றை தாண்டி ஓரிரு வருடம் வேலை பருவம் ஓடிக் கொண்டிருக்க “அப்றம் எப்ப கல்யாணம்?” என்ற கேள்வி “அட இருங்கயா இப்ப தான் நான் எனக்கு பேன்ட் வாங்ற அளவுக்கே காசு சேர்த்திருக்கேன்” என நாம் நம் ஆசைகள் தவிர்த்து கல்யாணத்திற்கு பணம் சேர்த்தல் என ஓடுவதற்கான அழுத்தம் துரத்தும். கல்யாணம் முடிந்தால் குழந்தை அப்றமும் நிம்மதி இருக்குமா என்ன? அடுத்து அந்த பிள்ளையின் வாழ்வை பற்றிய கேள்விகள். அப்பாடா எழுதும் போதே மூச்சு வாங்குகிறது. இதனாலேயே இந்த கேள்விகள் ஒரு புறம் நம் தனிப்பட்ட நட்பின் துரோகம், வீணா போன காதல் தோல்வி, ஏமாற்றம், எதிர்ப்பார்ப்புகள் போன்றவற்றாலும் என முழுதாக மனமுடைந்து ஒரே விடயத்தை சிந்தித்து சிந்தித்து தூக்கம் பசி இரண்டையும் தொலைக்கிறோம். நம் நிலை கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு சுவர்கள் நெருங்கி வந்து அழுத்தக்கூடிய மாயப் பெட்டிக்குள் அடைந்தது போன்றதாக மாறி விடுகிறது.

மன அழுத்தத்தை எதிர் கொள்வது எப்படி?

முதலில் நம்மை கண்டறிதல்: நம் திறமைகள், நமக்கு ஆர்வமுள்ள துறைகள் என்பவற்றை பட்டியல் படுத்தி நமக்கான இலக்கினை வகுத்து அவற்றினை நோக்கி செல்வதற்கான சிறு சிறு படிகளை திட்டமிட்டு வைத்து, அதனை நோக்கிச் செல்லல் வேண்டும். குடும்ப சுமைக்காக எங்கு சென்று வேலைப் பார்க்க நேரிட்டாலும் நமது இலக்கின் பாதையை இறுக்கமாக பிடித்து முன் செல்ல வேண்டும்.

நமக்கு நம் மீது நம்பிக்கை வேண்டும் : எவரது வர்ணனைகளும் ஒப்பீடும் நம் மனதினை திசை மாற்றி அதை நோக்கி ஓடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தலையாட்டி பொம்மை: நம் வீட்டிற்குள் அமர்ந்து நம் வாழ்வினை டிசைன் செய்ய முற்படும் சொந்தங்களிடம் விவாதித்து புரிய வைப்பதால் பயனில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்களது கேள்விகளுக்கும் ஐடியாக்களுக்கும் தலையாட்டி வழியனுப்பி வைத்து விட்டு வாசற் கதவினை சாத்தும் போதே அவர்களது கேள்விகளையும் வாசலோடு வைத்து சாத்தி விட்டு நம் பாதையை நோக்கி நடை போட வேண்டும்.

அதிக நேர ஒரே சிந்தனை: சிறு வயதில் எப்போதாவது ஒரு விடயத்தை எண்ணி வாரக் கணக்கில் பயந்து இப்போது அதை எண்ணி சிரித்ததுண்டா? இப்போது நடப்பவையும் அவ்வாறே! நாளை நீங்கள் சிந்தித்து சிரிப்பதற்கான நாடகங்கள். ஒரு 400 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எடுங்கள் அதை இரு கைகளாலும் மார்போடு அணைத்த படி நில்லுங்கள். முதல் ஒரு நிமிடத்திற்கு பெரிதாக தாக்கம் இருக்காது அடுத்த ஒரு மணித்தியாலத்திற்கு கைகளில் புத்தகத்தின் சுமை விளங்கும். அடுத்த இரண்டாவது மணித்தியாலத்தில் கைகள் வலித்து விறைக்கும்.z அவ்வாறே உங்களுடைய கவலைகளும் பிரச்சனைகளும் நீங்கள் அவற்றை எவ்வளவு நேரம் இறுக்க பிடித்து சிந்தித்து கொண்டுள்ளீர்களோ அவ்வளவிற்கு வலியும் வேதனையும் அழுத்தமும் அதிகரிக்கும். அதனால் ஒரே விடயத்தை பற்றி அதிக நேரம் சிந்திக்காதீர்கள்.

பிரச்சனைகளுக்கான முடிவுகள்: அனைத்து பூட்டிற்கும் சாவி உண்டு. இப்போது சாவி தொலைந்தால்… என்ற விநோதமான கேள்வியினை எழுப்புவீர்கள் என எனக்கு நன்கு தெரியும். அதற்கும் வழி உண்டு மாற்று சாவி. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அந்த சாவியினை தேட வேண்டியது தானே தவிர பூட்டின் அருகேயே அமர்ந்து இருந்து பூட்டியிருக்கே என அழுவது அல்ல. அதனால் பயனும் இல்லை. பிரச்சனைக்கான முடிவினை தேடுபவர்களாக மாறுங்கள். அதனை இறுக்க அணைத்து நேரத்தினை வீணடிக்கும் கோழைகளாக இருக்க வேண்டாம். சில சமயங்களில் நேரம் தேவைப்படலாம் அப்போது தனியாக இருந்து சிந்தியுங்கள் அதுவும் பிரச்சனை தீர்ப்பது பற்றிய சிந்தனையாக இருக்க வேண்டும்.

இந்நொடியை வாழுங்கள் : இதற்கான அர்த்தம் ஏனோ தானோ என வாழ்வதல்ல. அவ்வாறு வாழ்ந்தால் கடைசியில் தெருவில் தான் நிற்க வேண்டும். இதற்கான அர்த்தம் இந்நொடியில் எதிர் கொள்ளும் சவால்களை வென்று எதிர்காலத்தில் அவை நேராத படி வழி வகுத்து புன்னகையுடன் முழுமையான வாழ்வை வாழ வேண்டும்.

மனதினை மாற்றுங்கள் : மேற்கூறப்பட்ட அனைத்திலும் முக்கியமானது இதுவே. நம்மில் சிலருக்கு சிறு விடயமும் பெரிதென தோன்றும் பெரிய விடயமும் சிறிதென தோன்றும் இதற்கு காரணம் அவ்வப்போது நம் மனதுள் ஓடிக் கொண்டிருக்கும் அலைகளே. இன்னல் ஒன்று நேரும் போது கடன் தந்தவர்கள் போல் கண்ணீர் அல்லது கோபம் பின்னாலேயே துரத்தி வரும். அவை முதல் சிறு நொடிகளுக்கு மட்டுமே நன்மையானவை அருகில் வந்து கழுத்தை நெறிக்க விட்டு விட்டால் அவ்வளவு தான் மனம் மரணத்தினை தேட தொடங்கும் ஆதலால் முதல் சிறு நொடிகள் கடந்திடும் முன் உங்கள் சிந்தை மாறுவது தெரியும் போதே உங்களுடைய கண்ணை துடைத்து எட் செட்டினை (Headset) எடுத்து நல்ல குத்து பாட்டினை வெளி உலகின் சத்தம் கேட்காதவாறு ஒன் செய்து கண்ணை மூடிக் கொண்டு ஆடுங்கள். ஆடி ஓய்ந்த பின் தண்ணீர் குடித்து முகம் கழுவி விட்டு உங்கள் பிரச்சனையின் தலைப்பை எழுதி அதை கசக்கி தூக்கி எறியுங்கள். அதன் பின் அதற்கான தீர்வினை ஓர் உற்சாகமூட்டும் திரைப்படத்தின் கதாநாயகரை போல், துப்பறிவாளர் போல் கண்டறியுங்கள்.

இங்கு எம்மை சுற்றி இருப்பவர்களாலோ சூழலாலோ நாம் துயருக்கோ மன அழுத்தத்திற்கு ஆளாகுவதில்லை. அவற்றை நாம் எவ்வளவு தூரம் அனுமதிக்கிறோம் மற்றும் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதிலேயே உள்ளது. அதனால் மன அழுத்தத்தின் பிறப்பிடம் நாமே என்பதை உணருங்கள். உங்களை சூழலோ பிறரின் சொல்லோ செயலோ துன்புறுத்தாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

“இன்பமும் துன்பமும் பிறர் தர வாரா!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here