Blog Page 14

எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.

காலத்தால் அழிக்கமுடியாத The Queen “எனது முழு வாழ்க்கையும்
அது நீண்டகாலமாக இருந்தாலும் சரி குறுகிய காலமாக இருந்தாலும் சரி உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு முன் அறிவிக்கிறேன்”. என்ற வார்த்தைகளோடு வாழ்ந்து காட்டிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இன்னுயிர்  விடைபெற்றுச் சென்றது. உதிர்த்த வார்த்தைகளுக்கு உதாரணமாய் கிட்டதட்ட 70 வருடங்கள் பிரித்தானியாவின் அரியணையை அலங்கரித்த பெருமையை சூடிக்கொண்ட அவரின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகையே உள்ளங்கையில் வைத்து  ஆட்சி செய்த
பிரித்தானியாவையே தன் சுண்டுவிரல் அசைவில் வைத்து ஆட்சி செய்தவர் தான் இரண்டாம் எலிசபெத் மகாராணியார். பிரித்தானியாவை நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது மகாராணி என்ற பெருமை இவரையேச் சாரும்.
எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.

1926 ஏப்ரல் 21 ஆம் திகதி இங்கிலாந்தின் லண்டனில் மன்னர் ஆறாம் ஜோர்ஜ் இற்கும் அவரது மனைவி எலிசபெத் போவ்ஸ்-லியோனுக்கும் மகளாகப் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. எலிசபெத் மகாராணி தனது 13 வயதிலேயே இளவரசர் பிலிப்பை சந்தித்தார். எலிசபெத் மகாராணியின் உறவினரான பிலிப் கிறீஸ் நாட்டின் இளவரசர். 7 வருடங்களாக கிறீஸ் இளவரசர் பிலிப்பை காதலித்த எலிசபெத் மகாராணி தன்னுடைய 21 வயதில் அவரை திருமணம் செய்துகொண்டார். காதல் திருமணம் கைகூடி இருவரும் இல்லற வாழ்க்கையில் திளைத்திருந்தனர். அவர்கள் மன்னர் சார்லஸ் இளவரசி ஏன் இளவரசர் என்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகிய நான்கு குழுந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
1950 களின் முற்பகுதியில் எலிசபெத்தின் தந்தை மன்னர் ஆறாம் ஜோர்ஜ்ஜின் உடல்நிலை தீவிரமடைந்தது. சரியாக மகாராணிக்கு 25 வயதாகும் போது அவருடைய தந்தை அதாவது 1952 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜோர்ஜ் மறைந்தார். மன்னர் ஆறாம் ஜோர்ஜ் இற்கு ஆண்வாரிசுகள் இல்லையென்பதால் அவர் பெற்ற இரு பெண்குழந்தைகளில் மூத்தவர் எலிசபெத் மகாராணியாக அரியணையேறினார். 1953 ஜூன் 2 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத் மகாராணிக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதுவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் இராஜ விழாவாகும்.
மகாராணி எலிசபெத் அரியணையேறவே பல சுதந்திரநாடுகள் எழுச்சியுற்றன.  இத்தருணத்தில் மகாராணியார் வகித்த பங்கு இன்றியமையாததொன்று. அவரது ஆட்சியின் போது அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தேசத்தலைவர்களின் வருகையில் பங்கேற்பார். அவருடைய முதல் வருடத்தில் தன் கணவர் பிலிப்புடன் சேர்ந்து ஏழு மாத இடைவிடாத சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். சரியாக பதின்மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கிருப்பவர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார்.
பின்னர் மகாராணியார் எலிசபெத்தின் தலைமையில் 1958 ஆம் ஆண்டு ‘Empire Day’ஆனது ‘Commonwealth Day’ என மறுபெயரிடப்பட்டது. இது பிரித்தானியாவிற்கான புதிய பாதையையும் அதன் உலகளாவிய வரம்பையும் மறுவரையறை செய்தது.

1956 ஆம் ஆண்டில் சூயஸ் நெருக்கடி வெளிப்பட்டதன் பின்னர் பிரதம மந்திரி ஈடன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இனி அடுத்த பிரதம மந்திரியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது பற்றிய இறுதி முடிவெடுக்கும் உரிமை மகாராணி எலிசபெத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சரவை மற்றும் கட்சியின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஹரோல்ட் மேக்மில்லன் பரிந்துரைக்கப்பட்டார். அதனால் தான் அன்று முதல் இன்று வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரை நியமிக்கும் உரிமை எலிசபெத் மகாராணிக்கு இருந்து வந்தது.

1977 ஆம் ஆண்டு மகாராணி எலிசபெத் தனது வெள்ளி விழாவை கொண்டாடினார். இதற்கிடையில் 1980 களில் இளைய அரச வம்ச குடும்பம் உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது குறிப்பாக இளவரசர் சார்லஸ் லேடி டயானா ஸ்பென்சரை திருமணம் செய்துகொண்டதோடு சாரா பெர்குசனுடனான இளவரசர் ஆண்ட்ரூவின் திருமணமும் நடந்தது. 1992 விண்ட்சர் கோட்டை எரிந்த சம்பவம் தனது மகன் ஆண்ட்ரூ மற்றும் மகள் ஏன் இன் திருமண வாழ்க்கைகள் விவாகரத்தில் முடிந்த சம்பவங்களால் மகாராணி மனமுடைந்துபோனார்.

மேலும் 1997 ஆகஸ்ட் அரச குடும்பம் அனுபவித்த மிக மோசமான சம்பவமாக பாப்பராசிகளால் பாரிஸில் நிகழ்ந்த இளவரசி டயானாவின் மரணமானது நெருக்கடி நிறைந்த முடியாட்சிக்கு முனைப்புள்ளியாக இருந்தது1999 இல் அவுஸ்திரேலியர்கள்
அரச தலைவராக மகாராணியை அமர்த்துவதற்கான வாக்கெடுப்பில் தலைவராக இரண்டாம் எலிசபெத் மகாராணி பங்கேற்றபோது டயானாவின் இறப்பு பற்றிய பொதுமக்கள் அனுபவிக்கும் துயரத்தின் தீவிர வெளிப்பாட்டையும் குடியரசுவாதம் பற்றிய ஆழமான கருத்துக்களையும் வழிநடத்த முடிந்தது.
2002 ஆம் ஆண்டில் லண்டனின் தெருக்களில் கோடிக்கணக்கான மக்களின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எலிசபெத் மகாராணியின் பொன்விழா நடைபெற்றது. இது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் புகழையும் முடியாட்சியின் வெற்றியையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. 2012 ஆம் ஆண்டு அவர் தனது வைர விழாவை கொண்டாடினார். மகாராணி எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தில்
இங்கிலாந்து பல பரிணாமங்களைக் கண்டது. இவருடைய ஆட்சிகாலத்திலேயே இலங்கை  பாகிஸ்தான் போன்ற நாடுகள் முடியாட்சியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டன.
மகாராணியின் செல்வாக்கு ஆரம்பகாலத்தின் ஐரோப்பிய புரட்சி பிரித்தானியர்
ஆட்சி பற்றி எல்லாம் நாம் படித்து அறிந்திருப்போம். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த பிரித்தானியாவில் இன்னமும் இராஜவம்ச ஆட்சி தான் தழைத்தோங்கி ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்தின் பிரதமருக்கு இருக்கும் அதிகாரம் ஆதிக்கம்  கௌரவம் இவற்றையெல்லாம் விட அந்நாட்டின் மகாராணிக்கு இருக்கும் என்றே கூறவேண்டும்.

சுமார் 15 நாடுகள் மகாராணியின் ஆளுமையின் கீழ் உள்ளன. அந்த நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அரசை அமைக்கவோ ஆட்சியில் இருக்கும் அரசைக் களைக்கவோ அதிகாரம் இருப்பது மகாராணிக்கு மட்டும் தான். அது மட்டுமன்றி அந்த நாடுகளில் வேண்டிய நிலப்பரப்பை தனதாக்கிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு தான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய அதிகாரங்களை அவர் ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை. 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
தகுந்த இடத்தில் தகுந்தவாறு அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வார்.
இதற்காக ஒரு சம்பவத்தை முன்வைக்கலாம். ஒரு முறை சவுதி மன்னர் இங்கிலாந்து வந்தபோது அவரை தனது காரில் ஏற்றி தானே அதை ஓட்டிக் கொண்டு ஸ்கொட்லாந்து அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார். இதற்கு காரணம் ஒன்று உள்ளது. சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதை இடித்துரைக்கவே மகாராணி இவ்வாறு காரோட்டியாக செயற்பட்டார் என்று கூறப்படுகிறது.

ராஜா ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய் அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையை மகாராணியே நடைமுறைப்படுத்தினார். அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தார். வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வாழ்ந்து மக்களின் மனதை வென்றார். எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் எலிசபெத் மகாராணியின் அணுகுமுறை ஜனநாயக நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.

மகாராணி தன்னுடைய ஆட்சிகாலத்தில் 14 பிரதமர்களோடு பயணித்திருக்கிறார். அப்போதைய ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடர்ந்து அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை மகாராணி எலிசபெத் தியமித்துள்ளார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15வது பிரதமர் என்ற சிறப்பு லிஸ் டிரஸ் இற்கு உரித்தானது.

நாம் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு பயணம் செய்யவேண்டுமென்றால் கடவுச்சீட்டு விசா தேவைப்படும். வல்லரசு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட அவருக்கும் இதே விதிமுறைதான். ஆனால் யார் ஒருவருக்கு இது எதுவுமில்லாமல் தேசம் விட்டு தேசம் கண்டம் விட்டு கண்டம் நினைத்த நேரம்  நினைத்தவாறு போகக்கூடிய அதிகாரம் இருக்கிறதோ அவர்தான் இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத். அதுமட்டுமன்றி இங்கிலாந்தில் அவர் கார் ஓட்ட ஓட்டுநர் உரிமம் பத்திரம் கூட தேவையில்லை. அதுமட்டுமல்ல அவருடைய வண்டிகளுக்கு இலக்கப்பலகை (Number Plate)கூட இல்லை.

ஒரு நாட்டின் இராணுவப்படை பலத்தை விட மகாராணி எலிசபெத்திற்கு இருக்கும் படை பலம் அதியுயர்வானது என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அவருடைய கட்டளைகளுக்காகவும் முப்படைகளும் காத்திருக்கும் அளவிற்கு இராஜ கௌரவ செல்வாக்கு இந்த உலகத்தில் இங்கிலாந்து மகாராணிக்கு மட்டும்தான் இருக்கின்றது என்பது ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது. தன்னுடைய இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எந்த நாட்டின் மீதும் இவர் படையெடுத்ததில்லை.
எலிசபெத் மகாராணியின் தனித்தன்மையை அடையாளப்படுத்துவது அவருடைய உடை நாகரீகம் தான்.அவருடைய உடை வடிவமைப்பை காண்பதற்கே பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்களாம்.
மகாராணியின் இறுதித்தருணம்.

தன்னுடைய இளமை காலத்திலிருந்தே தந்தையின் இழப்பு மாமாவின் தற்கொலை உலகப்போர்கள் போன்ற சம்பவங்களால் மகாராணி எலிசபெத் மனமுடைந்தாலும் அவரால் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழமுடியவில்லை. இது அவரை பல இடங்களில் அசௌகரியப்படுத்தியுள்ளது. ஒரு சராசரி மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஆடம்பரமான இராஜ வாழ்க்கையைத்தான் பிறந்ததிலிருந்து உயிர் பிறிந்த கவனம் வரை அவர் அனுபவித்திருக்கிறார். எலிசபெத் மகாராணியின் காதல் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வருடம் 2021 ஏப்ரல் 09 ஆம் திகதி இறந்த துயரில் வாடிப்போன மகாராணியும் இந்த வருடம் இறந்துபோனது பிரித்தானியாவிற்கு மீளா சோகத்தை கொடுத்திருக்கிறது.

உடல் நலக் குறைப்பாட்டால் கடந்த சில நாட்கள் மருத்துவ சிகிச்சையிலிருந்த மகாராணியார்  ஸ்கொட்லாந்தில் பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இச் செய்தி இங்கிலாந்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகையுமே ஸ்தம்பிக்கச்செய்துள்ளது. மகாராணி இறந்து
பன்னிரண்டு நாட்களும் பிரித்தானியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 12 நாட்களும் பிரித்தானியாவின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மகாராணியிறந்து மூன்றாவது நாளின் பின்னர் இரவு பகல் பாராது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
11 வது நாள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் இராஜ மரியாதையோடு அவரின் இறுதி சடங்குகள் இடம்பெறும். அன்று நண்பகல் நாடுமுழுவதும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் வின்சன்ட் அரண்மணைக்கு இராஜ பாதுகாப்போடும் இராஜ மரியாதையோடும் அவரின் பூதவுடல் கொண்டுசெல்லப்படும். பின் சென் ஜோன்ஸ் தேவாலயத்தில் அர்ப்பணிப்பு ஆராதனை முன்னெடுக்கப்பட்டு வின்சன்ட் அரண்மனையில் மன்னர் ஆறாம் ஜோர்ஜின் நினைவரங்கில் (King George VI Memorial Chapel) நல்லடக்கம் செய்யப்படும்.

7 தசாப்தங்களாக பிரித்தானியாவின் அரச வம்ச ஆட்சியை நிலைநிறுத்தி தன்னுடைய 96 வயதில் இந்த உலகில் விடைபெற்றுச் சென்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தை இத் தருணத்தில் நாமும் நினைவுகூறுவோமாக.!

21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.

உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான “two  states” திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி வரும்  ஒரு பஞ்சாபித் தாயார் தன் மகனிடம்  ஓர் தமிழ்ப் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள நினைப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இப்போதைக்கு காதல் உணர்ச்சி பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க வைக்காது. ஆனால் இதுவோர் நீண்ட கால பிரச்சினைக்கு வழிகோலும்.
இனத்தால்,மதத்தால், கலாசார பண்பாட்டால் மாறுபட்ட உங்களுக்குள் கருத்து முரண்பாடு ஏற்படுவதென்பது தவிர்க்கவியலாதவொன்றாகிப் போய்விடக்கூடும் எனக்கூற  இதற்கு மகன்  “அம்மா நீ என் தந்தையான ஒரு பஞ்சாபிக்காரரைத்தானே திருமணம் செய்துகொண்டாய்? அப்படியிருக்கையில்  நீ  மேற்சொன்ன  இனத்தால் மதத்தால் பண்பாட்டுக்கு கலாசாரத்தால் ஒன்றுபட்ட உங்களுக்குள் ஏன் தினமும் சண்டையும் முரண்பாடுகளும்  நிறைந்த அன்னியோன்யம் அற்ற வாழ்க்கை?

ஆம்! இன்றைய சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவருமே யோசிக்கவேண்டிய கேள்வியிது! ஏனெனில் ஓர் இன/மத கலப்புத் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை எழும்போதெல்லாம்  நாம் முதலில் தூக்கி நிறுத்துவது இந்த தாயார் சொன்ன விடயங்களைத்தான்.  ஓர் இந்துப்பெண் ஓர் இந்து ஆணைத் திருமணம் செய்துகொள்ளும்போதோ  ஓர் கத்தோலிக்க  ஆண் கத்தோலிக்க பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போதோ  ஓர் இஸ்லாமிய ஆணும் இஸ்லாமிய பெண்ணும்  ஓர் பெளத்த ஆணும் பெளத்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போதோ.
அவரவர் குடும்பங்களால்  சமூகங்களால் கொடுக்கப்படும் “surety” ஓர் ஹிந்துப்பெண்ணும் ஓர் இஸ்லாமிய இளைஞனையும்  ஓர் பெளத்த இளைஞனும் கிருஸ்தவ பெண்ணும் என்று மாறிவரும் திருமணங்களில் கொடுக்கப்படுவதில்லை அல்லவா? ஏன்? எங்கிருந்து முன்னைய நம்பிக்கையும் பாதுகாப்புணர்வும்  எங்கிருந்து பின்னைய நம்பிக்கையீனமும்  அச்சமும்  பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்படுகிறது? அல்லது உருவாகிறது? ஏனெனில் திருமணதிற்குப்பின் தம்பதியரிடையே முரண்பாடுகள் எழுவதென்பது சகஜமான ஒன்று அதற்கு இன மத பண்பாட்டுக் கலாசாரம் மட்டும்தான் காரணம் என்றில்லையே ?

அரசியல் பிரச்சினைகளாலும் அதனால்  ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்களாலும் மக்கள் புலம்பெயர்ந்து வாழ முற்படுகையில் புதிய சூழ்நிலை ஆடை மாற்றம், மொழி மாற்றம் போன்ற புற மாற்றங்களுடன்  புதிய பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கிக்கொள்ளும் உள மாற்றமும் ஏட்படுகிறபோது  அந்தப் பின்னணியில் நிகழும் இன மத கலப்புத் திருமணங்கள் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் ஓர் வெள்ளைக்காரரையோ  வெள்ளைக்காரியையோ தம் குடும்ப உறுப்பினர் ஒருவர்  மணம்செய்துக்கொள்கையில் அதைக் “காலமாற்றம் ” என ஏற்றுக்கொள்ள முடிந்த எங்களால்-

-இதுவும் ஒருவகையான “middle class mind” இவ்வகையான கலப்புகளை ஒரு பெருமைக்குறிய விடயமாகவே நமது உள்மனம் ஏற்றுக்கொள்கிறது என்பது நாம் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத உண்மை.) உள்நாட்டில் இடம்பெறும் இன மத கலப்புத் திருமணங்களை அவ்வளவு சீக்கிரத்தில் ஜீரணித்துக்கொள்ள இயலுவதில்லை அதிலும் கிருஸ்தவ அல்லது சிங்கள கலப்புகளைக்கூட ஒருமாதிரியாக ஏற்றுக்கொள்ளாத துணிகிறவர்கள்  இஸ்லாமியக் கலப்பு என்பதனை  சாத்தியமற்ற ஒன்றாகவே இன்றுவரை கருதுகின்றனர்.
இந்த முரணுக்கு  காரணம் என்ன? காலங் காலமாக சக மதத்தவர்களது மனதில் கட்டியெழுப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கும் மேற்கத்தைய அரசுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளால் இப்போது ஏற்பட்டிருக்கும் காழ்ப்புணர்வு  போன்றன இதற்குக் காரணமாக அமைகின்றன.  மேலும் மிக இறுக்கமான மதம் என்பதால் மற்றவர்கள் இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதோ அல்லது வளைந்து கொடுப்பதோ இல்லை என்பதும் மற்றுமோர்  காரணம்.

காதலிக்கும்போது “நான் எனது தனித்தன்மையையும்  பண்பாட்டையும்  இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருப்பதில்லை. ஆனால் திருமணதிற்குப்பின் இந்த எண்ணம் விஸ்வரூபமெடுக்கும். ஏனெனில் அதற்க்குப்பின்தானே மிகப்பெரிய அதிர்ச்சிகளை ஆச்சரியங்களையும் சந்திக்கப்போகிறோம்! ஒரே இனத்தைச் சார்ந்த  இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும்போதே பிள்ளைகளை எந்த சமயத்தில் வளர்ப்பது என்ற பிரச்சினை எழுகிறது. அப்படியாயின் இரு இனங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும்போது மொழி, மதம், பண்பாடு என்று பல்வேறு விடயங்கள் பற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.
யாருடைய பண்பாட்டின்  எந்தெந்த  அம்சங்களை நாளாந்த நடைமுறையில் ஏற்றுக்கொள்வது  பிள்ளைகளை எந்த பண்பாட்டில் வளர்ப்பது  குழந்தைகள் வீட்டில் தாயின் மொழியை பேசுவதா தந்தையின் பண்பாட்டை பின்பற்றுவதா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஏதோவொருவகையில்   தம்பதியினர் இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவரின்   பண்பாட்டினை   இன்னொருவரின் பகுதியாக ஏற்றுக்கொள்ளாவிடின் இல்லறம் “டமால்  டூமீல்த்தான்” இல்லையா?

சிலர் தமது சமயத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் வேறுசிலர் நாளாந்த வாழ்வின் அம்சங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் சிலர் மொழியை விடமாட்டார்கள். எனவே இப்படியான கலப்புது திருமணங்கள் வெற்றிகரமாக அமைவதகு நிறையவே பொறுமையும் பரஸ்பர விட்டுக்கொடுத்தலும் வேண்டியிருக்கிறது . இப்படி  மாறித்  திருமணம் செய்துகொள்பவர்களின் எதிர்காலம் ஒன்றின் ஆதிக்கம் இன்றி இரண்டு பண்பாடுகளுக்கும்  இடைப்பட்ட ஒரு நிலையைக் கொண்டதாக இருப்பது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படக்கூடுமா?
உலகமயமாக்கல் கலப்புத் திருமணம், காதல், என்று வரும்போது பழைய சம்பிரதாயபூர்வமான  திருமணங்களின்   புனிதத் தன்மை கேள்விக்குறியாகிறது. இங்கு திருமணங்கள் நீடிப்பது ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவது தனிநபர் விருப்பமேயன்றி குடும்ப கெளரவம் இனசனத்தின் தலையீடு சம்பந்தமானதல்ல  அப்படி அவை சம்பந்தப்படுமாயின் அது சமூகத்தின்  தனிப்பட்டவர்களின்  கலாசார இடைமாறுதல் (transition ) காரணமானது.

Danielle Teutsch என்பவர் எழுதிய “exotic look of the future” என்கிற கட்டுரையில் 21ம்    நூற்றாண்டின் அழகைத் தேடும் முடிவற்ற தேடுதலில் எவ்வளவுக்கெவ்வளவு  இனக்  கலப்பு ஏற்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு தோற்றம் அழகு பெரும் என்ற கருத்துப்போக்கு பிரபல்யம் பெற்றுவருகிறது என்கிறார். கலப்பினால் அழகு வரும் என்பதே தற்போதைய நியதி. இனக்கலப்பினால்   பிறந்தவர்களையே  வர்த்தக   துறையும் fashion துறையும் நாடுகிறது. ஒரு நிறுவனம்

தாம் விளம்பரப்படுத்தும் பொருள் முழு உலகுடனும் தொடர்புடையதாக இருக்கவேண்டுமாயின் இவ்வாறு இனக்கலப்பினால் பிறந்த பெண்களையும் ஆண்களையும் தம் விளம்பரங்களுக்கு மொடல்களாக பயன்படுத்த விரும்புகின்றனராம். சாதியை, மதங்களை ஒழிக்க வேண்டும் என யாரும் கலப்புத் திருமணங்களை செய்துகொள்வதில்லை.  இருவர் ஒருவருக்கொருவர் விரும்பினால் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆயினும் மதமாற்றம் என்பது ஒரு சமூகத்தின்  எதிர்க் குரலாக  அமைவதால்  காலப்போக்கில் சில புதிய பிரச்சினைகளுக்கு அது வழிகோலும்  மதம் மாறிய திருமணங்கள்.
குறைந்தது மூன்று தலைமுறைகளின் சந்தோஷங்களையாவது காவு கேட்கும் என்று ஒருகாலம்வரையில் கூறப்பட்டுவந்தது இன்றும் பல இடங்களில் கூறப்படுகிறது. ஆனால் பல்லின சமூகத்தில் வாழப்போகும் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு இனம் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனி சமூகங்களாகப் பார்க்கும் மரபு  ரீதியான பார்வை இனி காலத்திற்க்கு ஒவ்வாததாக மாறக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இணையத்தில் நான் வாசித்த ஓர் விடயம்தனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்  அதாவது உலகில் மனித இனம் தோன்றியபோது முதன்முதலாக இருந்தவர்கள் நான்கு இனங்கள் மட்டுமே. இன்று இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 72 மரபின  கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனவாம். நான்காக இருந்த இனங்கள் எழுபத்தியிரண்டுக்கும் மேற்பட்ட துணை இனங்களாக பெருகியது எப்படி? இனக்கலப்பினால்   மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவே இரண்டு இனங்களின் மரபணுக்கள் கலக்கும்போது முற்றிலும் புதிய மரபணு உண்டாகி அது பரிணாம வளர்ச்சியில்  அறிவாற்றலில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது.

புதிய  புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இவ்வாறு வளர்ந்த மனித இனம் தேங்கி நிற்பதற்கு “அகமண முறை“ காரணமாக இருக்கிறதாம். அகமண முறை இல்லாத மேற்கத்தைய நாடுகளின் அறிவாற்றல்  அறிவியல் வளர்ச்சியுடன்  அகமண முறைக்குள் முடங்கி நிற்கும் கீழைத்தேய நாடுகளின்  அறிவாற்றல்  அறிவியல் வளர்ச்சியை  ஒப்பிடுகையில் அகமண முறை எந்த அளவுக்கு நம்முடைய நாடுகளின் வளர்ச்சிக்கு தடையாக  இருக்கிறது என்பது கண்கூடு.மரபியல்பின்படி இரண்டு வேற்றுமையுள்ள மரபணுக்கள் இணையும்போது வீரியத்தன்மை(Hybrid) பெறுகிறது என்பது மெண்டலியன் (Mendalian) கோட்பாடு

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினதும்  முதன்மையானதும் உயரியதுமான பிறப்புக்கடமை  தங்களது வாழ்க்கைக் காலத்தினுள் வளமான வழித்தோன்றல் ஒன்றையேனும் உருவாக்குதல் என்பதே. விலங்குகளில் சொந்த பந்தம் என்கிற சூட்சுமங்கள் கடந்து உயிர் உற்பத்தி இயல்பாகவே இடம்பெறுகிறது. ஆனால்   மனித உற்பத்தி மட்டும் அற்ப ஆசைகளால்  வளமற்ற முழுங்கிய சந்ததிகளையும் உருவாக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது. இப்போக்கானது நாளடைவில்

இயற்க்கையான நோய்களைக்கூட எதிர்க்க முடியாததும்  புத்திக் கூர்மையற்ற பரம்பரையையுமே பிரசவிக்கும். நீண்டகால நோக்கில்  நலிவடைந்த சமூகத்தை உருவாக்கி மனிதனின் இருப்பையே கேள்விக்குறியதாக்கி விடுகிறதாம். இணைகின்ற இரு மனங்களும் உள்ளத்தால் ஒத்தமைவதோடு  பரம்பரை அலகு பல்வகைமையும் கொண்டமைந்தால்  வளமான வழித்தோன்றல்களுக்கும்  இல்லையெனில் வளமற்ற எச்சங்களுக்குமே வழிகோலும்.

இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?

கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை  விலைக்கு வாங்கியதுமில்லை.  அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள்  மொகலாயர்கள்  பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ  குடும்பத்துக்கு சொந்தமானது எவ்வாறு? கோஹினூர் என்றால் பெர்சிய மொழியில் மலையின்  ஒளி  என பொருள்.  இந்த ஒளியில் சர்வநாசமான ராஜாக்களின்  வரலாறும்  அந்தவைரம் பயணித்த கதையும் மிகவும் பயங்கரமானவை.
13ஆம் நூற்றாண்டில் ஆந்திராவின் கொல்லூர்  பகுதியில்   அழியும் தருவாயில் இருந்த கிருஷ்ணா நதியிலிருந்து   கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த வைரத்தின் ஆரம்பகால பெயர் கோல்கொண்டா (Golconda) என்பதே. அப்போது ஆந்திராவை சாகித்யர்கள்  காகத்தியர்கள் ஆண்டுவந்தனர். கோஹினூரை கண்டெடுத்த  சாமானியர் யாரேனும் சன்மானத்திற்காக மன்னனிடம்

கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 186கரட் எடை கொண்ட கோஹினூர் பற்றி மக்களிடையே வதந்திகள் பரவத்தொடங்கின. இந்த வைரத்தை சொந்தமாக்கிக்கொண்டவர்கள் உலகத்தையே சொந்தமாக்கிக்கொள்ளலாம். ஆனால் அதன் அனைத்து துரதிஸ்டத்தையும்  சேர்த்தே  அனுபவிக்கவேண்டிவரும்  என்கிற புரளியினால் சபிக்கப்பட்ட வைரமாக பார்க்கப்பட்டது கோஹினூர்.
இதனால் அதிர்ந்த காகத்திய மன்னன் அந்த வைரத்தை அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கினான். அப்போதுதான்  கில்ஜிக்களில் மிக வலிமை  பொருந்திய மன்னனாக கருதப்பட்ட அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பு நிகழ்ந்தது. அலாவுதீனுக்காக அவனது படைத்தளபதி மாலிக்கபூரால் கொள்ளையடிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்ட  சில மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு அலாவுதீன் இறந்துவிட  அடுத்த இருநூறுவருடங்களும் டெல்லியை ஆண்ட சுல்தான்களின் கைமாறி 15ஆம் நூற்றாண்டில் மொகலாய பேரரசர்

பாபரிடம்    வந்துசேர்ந்தது.   பாபரைத் தொடர்ந்து பல முகலாய பேரரசர்களின் கைகள் மாறி இப்ராகிம்  லோடியிடமிருந்து போர் ஒன்றின்பின்  சாளுக்கிய மன்னன் விக்ரமஜித்திடம் வைரம் தஞ்சமடைந்தது. பின் பாரசீக மன்னன் நாதிஷா இவர்தான் கோல்கொண்டா எனும் அந்த வைரத்தின் பெயரை கோஹினூர் என மாற்றியவர் மூலம் விக்ரமஜித் கொல்லப்பட்டு வைரம் ஈராக் கொண்டுசெல்லப்படும் வழியில்  நாதிஷாவின் படையில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களால் நாதிஷா படுகொலை செய்யப்பட   கோஹினூர் வைரம் ஆப்கான் தளபதி முகம்மது ஷாவினால் ஆப்கானிஸ்தான் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கேயும் அந்த வைரத்தின் இருப்பு நீடிக்கவில்லை.  முகம் முழுவதும் விஷக்கட்டிகள் தோன்றி அகோரமான முகமாக தன்னுடைய முகம் மாறியதைக்கண்டு ஓர் இரும்புக்கவசம் மூலம் வாழ்நாள் முழுவதும் தன் முகத்தை மறைத்துக்கொண்டு வாழும் நிலைக்கு முகம்மதுஷா தள்ளப்பட்டார். பின் 1813ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வைரம் கொண்டுவரப்பட்டாலும்  ரஞ்சித் சிங்கின் அகாலமரணத்தையடுத்து ஏற்பட்ட வாரிசு அரசியல் போட்டியில் அவரது மூன்று மகன்களும் ஒருவர்பின் ஒருவராக கொல்லப்பட்டனர்.

இந்த குழப்ப நிலையை பயன்படுத்திக்கொண்டபிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் பஞ்சாபை தம் ஆளுகையின்கீழ் கொண்டுவந்ததுடன்  இனி கோஹீனூர் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கே சொந்தமானது என அதை விக்ட்டோரியா ராணியிடம் கொண்டுசேர்த்தனர். (வைரத்தை கொண்டுசெல்லும் கடல்வழிப்பயணத்தில் ஏராளமான பிரிட்டிஷ் படையினர் வாந்தி,மயக்கம், மலேரியா போன்ற பல நோய்களுக்கு ஆளாகி இறந்துபோனதாகவும் சொல்லப்படுகின்றது).
அதன்பின் பிரிட்டிஷ்  மகாராணியின் மகுடத்தில் பதிக்கப்பட்ட அந்த வைரம் வழிவழியாக பின்வந்த பல ராணிகளின் தலையை அலங்கரித்து  2002 ஆம் ஆண்டுக்குப்பின் அரச குடும்பத்திற்கு சொந்தமான அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியாவால் மீண்டும் கோஹினூரை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இங்கிலாந்து அரசின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்டுவிட்ட வைரத்தை பெயர்த்தெடுத்துக் கொடுக்கச் சொல்வது நடக்காத காரியம்.  இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்  வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் கோஹினூரை சொந்தம் கொண்டிக்கொண்டிருப்பதோடு  அதுதொடர்பாக தொடுக்கப்பட்ட பல வழக்குகளும் இன்னும் நிலுவையில்தான் இருந்துகொண்டிருக்கின்றன.

சஜிதவின் எதிர்பாரா இழப்பு!

சஜிதவின் எதிர்பாரா இழப்பு!

அன்று செப்டெம்பர் 05 ஆம் திகதி. பிற்பகல் 1.30 மணியிருக்கும். கன மழை வெள்ளத்தில் வீதிகளும் மூழ்கியிருந்தன. மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு அங்குமிங்குமாக இருந்தார்கள். வாகனங்களின் ஓட்டங்களும் அடங்கவில்லை இதன்போது, வெள்ளை ஆடை அணிந்து கருப்பு குடை பிடித்து வீதியில் சென்றவன் வாகனத்தைக் கண்டு வீதியை விட்டு விலகினான். அவனை பொறுத்தவரை வாகனத்திற்கு இடம்கொடுக்கவே வீதியை விட்டு விலகினான்.. ஆனால் அவன் விலகவில்லை. விழுந்தான் நீரில் மூழ்கிய வடிகாணிற்குள்.

ஆம். இந்த சம்பவம் குருநாகல் நகரிலுள்ள கந்த உடவத்த என்ற வீதியிலே இடம்பெற்றது. பாடசாலை விட்டு வீடு திரும்பிய சஜித குணரத்ன என்ற பாடசாலை மாணவனுக்கே இந்த சம்பவம் நிகழ்ந்தது.வழமைப்போன்று பாடசாலை முடித்துவிட்டு வீடு திரும்பும் மாணவர்களால் குருணாகல் நகரம் கடும் மழையிலும் நிரம்பியிருந்தது. இதில் ஒருவனாகவே சஜித குணரத்னவும் இருந்தான்.

வீதியில் சென்ற வாகனத்துக்கு இடம்கொடுப்பதற்காக வீதியோரத்திற்கு சென்ற சிறுவன் வடிகாணிற்குள் விழுந்ததாக சம்வத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.இதன்போது அதிகளவிலானவர்கள் மாணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக அதீத முயற்சி மேற்கொண்டனர். முயற்சியின் பலனாக
வடிகாலணிற்குள் தவறி விழுந்து கழிவு நீரில் அடித்துச் செல்லப்பட்ட சஜிதவை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்களால் உயிரை காப்பாற்ற முடியாமற்போனது.

மீட்கப்பட்ட மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும்.. உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டது.மூன்று பிள்ளைகளில் கடைக்குட்டியான சஜித இறந்து விட்டான். இவ்வுலகிற்கு விடைகொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான். சஜிதவின் தாயின் கதறல். இன்னும் செவியை வாட்டி வதைக்கின்றது.

அய்யோ நேற்று காலை என் மகன் இப்படியா சென்றீர்கள். என் தங்க மகனே.. அய்யோ.. என் மகனே.. சென்று வருகிறேன் என்று சொன்னீரே மகனே.. என் வெள்ளக் குருவியே.. அய்யோ என் குருவியை தொடுவதற்கு விடுங்கள். என் சொத்தே. ஏன் அம்மாவை தவிக்கவிட்டு சென்றீர் மகனே.. அய்யோ.. என் சொத்தே.. அம்மாவிடம் பேசு மகனே. “அம்மாவை பைத்தியகாரியாக்கி சென்றுவிட்டுரே மகனே.” என சவப்பெட்டியில் நீங்கா நித்திரையில் இருக்கும் மகனை கண்டு தாய் இவ்வாறு கதறி அழுகிறார்.

”நேற்று காலை என் மகனும் மகளும் ஒன்றாகத்தான் பாடசாலைக்குச் சென்றார்கள். வரும் பொழுது மகன் தனியாக வந்திருக்கின்றார்.. அதனால் தான் இப்படி நடந்திருக்கின்றது. சேர்ந்த வந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே. என் மகன் வேன் ஒன்று வந்ததை கண்டு பயந்து ஒதுங்கியுள்ளார்.ஓரமாக சென்றதனால். அந்த குழியில் விழுந்திருக்கின்றார். இதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்விடத்தில் குழியொன்று இருப்பது வேன் சாரதிக்கும் தெரிந்திருக்காது. என் தப்பியிருப்பார்.

மகன் விழுந்த இடத்திலேயெ இருந்தார். அந்த இடத்தில் கீழ் இரும்பு கம்பிகள் உள்ளன. இரும்பு கம்பிகளில்பட்டே என் மகன் உயிரிழந்திருக்கின்றார். இல்லாவிட்டால் என் மகன் தப்பியிருப்பார்.என் மகன் எப்போதும் அந்த வீதி வழியாகவே வருவார். நேற்று மகனை அழைத்துவர என் அம்மா போவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. அதனாலேயே இந்த நிலையேற்பட்டுள்ளது. வெள்ளம் ஓடியதனால் அம்மா சற்று ஓரமாக நின்றிருக்கின்றார். அதனால் தான் தாமதமாகியுள்ளது. இதனாலே மகன் தனியாக வந்துள்ளார். சிறிய வேன் ஒன்றுக்கே என் மகன் ஒதுங்கியுள்ளார். என மகனை இழந்த தந்தை கண்ணீருடனும் வேதனையுடனும் தெரிவித்தார்.

“பேரனை அழைத்துவர நான் சென்றேன்.. வெள்ளம் ஏற்பட்டிருந்ததால் என்னால் முன்னோக்கி நகர முடியாமலிருந்தது. பிறகு நான் செல்லும்போது நான்கைந்து பேர் அவ்விடத்தில் இருந்தார்கள். நான் அப்போது என் பேரனாக இருக்கும் என்று கத்தினேன். அப்போதே எமது மகனின் புத்தக பை அவ்விடத்தில் இருந்தமை தெரியவந்தது” என கண்ணீர் மல்க சஜிதவின் பாட்டி கூறினார்.குருணாகல் மலியதேவ கல்லூரியின் தரம் ஒன்பதில் கல்வி கற்ற சஜித குணரத்னவின் அநியாய மரணத்திற்கு பொறுப்புக்கூறப்போவது யார்?

வீதியை புணரமைக்க தவறியவர்களா? அல்லது தன் மக்களை பாதுகாப்பதாக வெறுமனே வாய் வழியால் மட்டும் கூவும் உரியத் தரப்பினர்களா? இவ்வுலகில் 14 வருடகாலமாக வாழ்ந்த சஜிதவின் மரணத்திற்கு மழையா காரணம்? அல்லது அந்த இடத்தில் உள்ள வடிகாணா காரணம்? இல்லை ஆபத்தான இடத்தை புணரமைக்க தவறிய அதிகாரிகளும், எச்சரிக்கை பலகையை வைக்க தவறியவர்களே காரணம்.

காலநிலை மாற்றங்கள் நிகழும் போது இது போன்ற பல சம்வங்கள் இலங்கையில் இடம்பெற்றுகொண்டுதான் இருக்கின்றன.இதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகிய துயர சம்பவமொன்றை அறிந்திருப்பீர்கள்.

நாவலப்பிட்டி – கெட்டபுலா கீழ் பிரிவு – அக்கரவத்தை தோட்டப் பகுதியில் பெண் தொழிலார்கள் உட்பட மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்.36, 46 மற்றும் 47 வயதுடைய மூவரே இவ்வாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஒருவரைக்கூட உயிருடன் மீட்கமடியாமல் போனது.

இவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதற்கான காரணம் பாதுகாப்பற்ற ஒரு சிறிய பாலம். இந்த பாலத்தை கயிற்றின் உதவியோடு கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் நிகழந்துள்ளது.உடலும் உயிரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இந்த மூவரும், தேயிலை பறிக்கச் சென்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்பது குறிப்படத்தக்கது.

இவர்களின் உயிர் காவுகொள்ளப்பட்டதற்கு காரணமானதும் பாதுகாப்பற்ற, புணரமைக்கப்படாத ஒரு பாலம்.மேலுமொரு சம்பவம். 5 வயதான பேத்தியும் . 60 வயதான பாட்டியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டடனர்.. இந்த சம்பவமும் 2022 ஆன இந்த வருடமே பதிவாகியது.

சிறுமியை பாடசாலையில் இருந்து மீள வீட்டுக்கு அழைத்து சென்ற போதே, அடித்துச் சென்ற வெள்ள நீர் இவர்களையும் அழைத்துச்சென்றது. இலங்கையின் அரசியல்
நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் நாட்டு மக்களை வதைப்பது போதாதென்றோ காலநிலையும் விட்டு வைத்த பாடில்லை.

இன்னும் எத்தனை காலத்திற்கு இதுபோன்ற அனர்த்தங்களுக்கு எம் உறவுகளின் உயிர்கள் பறிபோகப்போகின்றது.வீதியையும் பாலத்தையும் வாடிகாண்களை கூட புணரமைக்க முடியாத நிலையிலா எமது நாடு உள்ளது. அப்படியாயின் உரிய தரப்பினர்களே.. எதற்காக வாக்குறிதியளிக்கின்றீர்கள். உங்கள் பதவிக்காகவா? நீங்கள் செல்வ செழிப்புடன் சந்தோசமாக வாழ்வதற்கு அப்பாவி மக்களை எதற்காக ஏமாற்றுகின்றீர்கள்?

வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்ற சஜித பாடசாலையிலிருந்து அலங்கோலமாக உயிரற்ற உடலாக வீடு திரும்பாவன் என்று யார் நினைத்தது?கணவனையும் தொழிலுக்கும் பிள்ளைகளை பாடசாலைக்கும் அனுப்புவதற்கு விடியற் காலையில் எழுந்து விறுப்பாக வேலை செய்து உணவை சமைத்துக்கொடுத்து பிள்ளையை சந்தோசமாக பாடசாலைக்கு அனுப்பிவைத்த அந்த தாய் பாதி நாளிலே தன் மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவான் என்று நினைத்திப்பாரா?

பிஞ்சு குழந்தையாக அழு குரலுடன் கையில் தவந்த பிள்ளை 14 வருடத்திலே தன்னை விட்டு விலகிடுவான் என தந்தைதான் எண்ணியிருப்பாரா?சிறுசிறு சண்டையுடனும் சந்தோஷசத்துடனும் கடைகுட்டியாக பிறந்து வளர்த்த தமது தம்பி நிரந்தரமாக தங்களை விட்டு பிரிந்து விடுவான் என்பதை சஜிதவின் சகோதரர்கள்தான் யோசித்திருப்பார்களா? வெள்ளை ஆடை அணிந்து கம்பீரமாக தனியாக வெளியேறியவன் அதே நிற ஆடையில் அமைதியாக 4 பேருக்கும் அதிகமானவர்களுடன் வீட்டுக்கு திரும்புவான் என யார் நினைத்தது?

இந்நிலையில் வீடு திரும்பிய சஜித வடிகாணில் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நீரில் மூழ்கியமையினாலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.சஜித்தவின் உயிரை பாதுகாக்க ஒன்றறை மணித்தியாலங்கள் போராடி வடிகாணிலிருந்து வௌியே எடுத்து குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த போதும் சஜித்தவின் உயிர் அவரை விட்டு பிரிந்தது.

அன்றைய நாள் சஜித நித்திரையிலிருந்து எழுந்தான் பாடசாலைக்குச் செல்ல தயாராகினான். பெற்றோர்களிடம் இருந்து விடைபெற்றான். பாடசாலைக்குச் சென்றான். பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொண்டான். கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டான். நண்பர்களுடன் உரையைாடினான். விளையாடினான். பகல் 1.30 பாடசாலையை விட்டு வெளியேற ஆரம்பித்தான். ஆசிரியர்கள் நண்பர்களிடமிருந்து விடைபெற்றான். வெளியேறினான். வீதிக்கிறங்கினான். கடும் மழை. வீடு செல்ல நினைத்தான். மீண்டும் மீளா நித்திரைக்குச் சென்று விட்டான்.

விளம்பரங்களில் பெண்கள்!

முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படுகின்றன என்பதென்னவோ மறுக்கவியலாத உண்மைதான். விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான உத்திகளைக் கையாள்வது இதற்கு முக்கிய காரணம்.

வித்தியாசமான கரு படப்பிடிப்பு உறவுகளை மையப்படுத்தி மனதைத்தொடும் விளம்பரங்கள் குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள் என திணுசுதிணுசாய் புதுசுபுதுசாய் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன.இன்றைய முன்னணி கதாநாயகன் நாயகிகளில் பலர் விளம்பரங்களில் முகம் காட்டிய பின்புதான் திரையுலகில் கொடிநாட்டுகின்றனர்.

இதற்கு  சிறந்த உதாரணம் பல ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்த ஐஸ்வர்யா ராயின் பெப்சி விளம்பரமே. (இதற்குப் பின்னாளில்தான் அவர் உலக அழகியாகி ஒரு நடிகையுமானார் என்பது நாம்  அறிந்தவொன்றே) மேலும் நடிகர் ஆர்யாவின் “emerald shirt” விளம்பரமும் குறிப்பிடத்தக்கது!

அது ஒரு ரகம் என்றால் விளம்பரங்களைப் பிரபலப்படுத்த பிரபலமான நபர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் கதாநாயகன் நாயகிகளைத் தேடிப் பிடித்து நடிக்க வைப்பது இன்னொரு ரகம். இந்தப் பிரபலங்களின் தாக்கத்தால் நிறுவனத்தின் பொருள்களை நினைவில் வைக்கும் காலம்போய் பிரபலத்தைக் கொண்டு நிறுவனத்தை நினைவு கொள்ளும் காலம் வந்தாயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய வர்த்தகத்துறையின் முதுகெலும்பாக இருப்பது எது என்ற கேள்வி எழுமாயின்  பதில் ‘விளம்பரங்கள்’ என்றுதான் வரக்கூடும். அந்த அளவுக்கு விளம்பரங்களின் தந்திரங்களை வைத்தே பொருட்களின் விற்பனை நிர்ணயிக்கப்படுகிறது. ஊடகங்கள் வாயிலாக மக்களை எளிதில் சென்றடையும் நிலையில் இன்றைய விளம்பரங்கள் இருப்பதாலும்  கடுமையான வர்த்தகப்போட்டி நிகழ்வதாலும் இன்றைய விளம்பரங்கள் புதுப்புது வசீகர சிந்தனகைகளைக் கொண்டதாக புதுமைகளை நோக்கிய அதன் பயணத்தை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது எனலாம்

“விளம்பரம் செய்யாமல் பணத்தை சேமிப்பவன் கடிகாரத்தை நிறுத்திவிட்டு நேரத்தை சேமிக்கும் மூடனுக்கு ஒப்பாவான் ” எனும் ஆங்கில முதுமொழிக்கேற்ப இன்றைய வர்த்தக உலகம் விளம்பரங்களின் விரல்களைப் பிடித்துக்கொண்டே  ஒவ்வொரு நொடியையும் கடக்கவேண்டியிருக்கின்றது.   சற்று ஓய்வெடுத்தாலும்கூட  அந்த இடத்தினை அபகரிக்க ஏராளமான போட்டிப்பொருட்கள் சந்தையில் உலவிக்கொண்டிருப்பதால்  உலகின் முதன்மையான அத்தியாவசியமான பொருட்களுக்குகூட விடாது விளம்பரம் செய்யவேண்டியிருக்கிறது எனலாம்.

இவ்வகையில் இப்படியான புதுப்புது வசீகர சிந்தனையில் வெளிவரும் புதுமையான விளம்பரங்களின் வேகத்தில் நுகர்வோருக்கு எது உண்மையான விளம்பரம் , எது தவறான முடிவுகளுக்கு தம்மை இட்டுச் செல்கிறது எனக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாகியுள்ளது.

ஒரு விளம்பரம் எந்த நோக்கதிற்க்காக செய்யப்படுகிறது ?”

ஒரு பொருளின் விற்பனைக்காகவும் அதை சந்தையில் பிரபலப்படுதுவதற்க்காகவும்  புதுப்புது தயாரிப்புகளை அறிமுகப் படுதுவதற்க்காகவும் ஒவ்வொரு விளம்பரமும் உருவாக்கப்படுகிறது எனப்பொதுவாகக் கொள்ளலாம். அந்தவகையில் இன்றைய நவீன உலகில் விளம்பரம் எனப்படுபவை காலத்தின் அவசியம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள்,  ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள் வாகனங்கள் என்பவை தாண்டி மருத்துவப் பொருட்கள்வரை அத்தனையும் விற்கப்படவேண்டுமாயின் அவையனைத்தும் முதலில் பெண்களைக் கவரவேண்டும் என்ற உளவியல் ஒன்றிருக்கிறது போலும். இந்த உளவியல் அன்று தொட்டு இன்றுவரை எந்த அளவில் எப்படிக்கையாளப்பட்டுவருகிறது என்பது பற்றியே இந்தக் கட்டுரை.

 விளம்பரங்கள் இன்று வரம்பு மீறுவது  கவலை அளிப்பதாக உள்ளது. அதில் சில விளம்பரங்களில் பெண்கள் மோசமாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.வாசனைத் திரவியங்கள் ஆண் பெண்களின் உள்ளாடைகள் கார் பெயின்ட் என அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறை ஆடைகளில் காண்பிப்பது ஏன்? அதற்கு அவசியம் என்ன வந்தது?

என்பதுதான் லட்சோப லட்ச மக்களின் கேள்வி! குறிப்பிட்ட வாசனை திரவியத்தையோ அல்லது விளம்பரங்களில் காண்பிக்கப்படும் பொருளையோ, ஒரு ஆண் உபயோகிப்பதன் மூலம் அனைத்து இளம் பெண்களும் அவரது பின்னால் வருவதைப் போன்றும் அல்லது ஒரு ஆண் பெண்களை மயக்குவதற்காகவே குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள்களை உபயோகிப்பது போலவும் காண்பிக்கப்படுகிறது. ஒரு ஆணை அவர் பயன்படுத்தும் வாசனை திரவியத்துக்காகவே பெண்கள் அவரை விரும்புவார்களா? அல்லது அவர் பின்னே செல்வார்களா? இங்கு பெண்களின் மதிப்பு எந்த அளவுக்கு தரம் தாழ்த்தப்படுகிறது?

“ஒவ்வொரு பெண்ணுக்கென்றும் ஒரு தனித்தன்மை  ஒரு யதார்த்தமான ஆளுமை இருக்கிறது. ஆனால் விளம்பரங்கள்  இந்த ஆளுமையை மாற்றியமைத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும் தன்மை வாய்ந்தவை என்கிறார் விளம்பரங்களில் பெண்களின் நிலை பற்றிய ஆராய்ச்சியாளரான “jean kilbourne  ” என்ற பெண். அது எப்படி என்பதற்கு  சில உதாரணங்கள்  ஒரு mint-o fresh விளம்பரம் சிரிப்பே அறியாத ஒரு வயதான சிடுமூஞ்சிக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையே வெறுத்துபோய் இருப்பாள் ஓர் இளம்பெண்.

mint-o fresh ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு அந்தப்பக்கமாய் வரும் இளைஞனைப் பார்த்ததும் அவனோடு ஓடிப்போய் விடுவாள். அட! ஒரு mint-o freshகாக ஒருவனுடன் ஓடிப்போகும் அளவிலா இருக்கிறாள் இன்றைய பெண்? அடுத்து ஒரு ஷேவிங் க்ரீம் விளம்பரம். ஒரு அழகான இளம்பெண் ஒரு இளைஞனுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறாள் அவனது தாடை சரியாக சவரம் செய்யப்படாது சொர சொரப்பாக இருப்பதைக் கவனித்து முகம் வாடுகிறாள் உடனே அந்த தருணத்தில் சுத்தமாக ஷேவிங் செய்யப்பட்டு பளிச் என்று அந்த அறைக்குள் நுழையும் ஆடவனைக் கண்டு சொரசொரப்பான தாடை இளைஞனை தள்ளிவிட்டுவிட்டு இவனுடன் ஒட்டிக்கொள்கிறாள். அட ஒரு ஷேவிங் க்ரீமுக்காகவா இப்படி?

கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு முன் உள்ள இளைஞன் தனக்கு மைதானத்தை மறைக்கிறான் என்பதனால் அவன்மேல்  perfume அடித்துவிட அவனை பெண்கள் பட்டாளம் மொய்த்து தனியே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். பின் இவன் மைதானத்தை நன்கு வேடிக்கை பார்க்கிறான்.  இதைவிட பெண்களை கொச்சைப்படுத்த முடியுமா?

 முகத்தில் பரு தோன்றிய காரணத்துக்காக வீட்டுக்குள்ளேயே கட்டிலுக்கு கீழ் முடங்கிக்கிடக்கிறாள் ஒரு டீன் ஏஜ் பெண். அவள் வெளியே சென்று  பருவந்த முகத்துடன் பிறரை சந்திக்கத் தயங்குகிறாளாம்! உடனே அவளுக்கு உதவுகிறது ஒரு க்ரீம் விளம்பரம்! முகத்தில் பரு வருவது ஓர் இயற்கை மாற்றம்  அந்த டீன் ஏஜ் வயதில் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவேண்டிய அந்த நிகழ்வுடன்   எப்படி ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது இந்த விளம்பரதாரர்களால்.

அது மட்டுமா? அனைத்தும் க்ரீம் விளம்பரம்களுமே கருப்பாய் இருப்பது பாவம் என்பதுபோலவும்  அது ஒரு குறைபாடு என்பதுபோலவும்  கருப்பாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை அற்றுப்போவார்கள் என்பதாகவுமே காட்ட முனைவது ஏன்? நீ கருப்பாக இருக்கிறாய் அதனால் தன்னம்பிக்கை இல்லாது இருக்கிறாய்  மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாக நாட்டுக்கும் இந்த நாட்டு ஆண்களுக்கும் அவசியம் என்பதுபோல தினமும் நாம் கண்ணுறும் விளம்பரங்கள் எத்தனை எத்தனை?

ஓர் இளம்பெண் அவள் கருப்பாக இருக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு வயதான அழகற்ற ஓர் நபருடன் அவள் திருமணம் அவளது விருப்பத்துக்கு மாறாக நிச்சயிக்கப்படுகிறது. அவளது முக வாட்டம் கண்ட அவளது பாட்டி ஆயூர்வேத மூலிகையடங்கியதாக காட்டப்படும் பெயாரன் லவுளியை அப்பெண்ணின் கைகளில் திணிக்க அதைப் பூசும் அவ்விளம்பெண் சில வாரங்களிலேயே சிவப்பழகு பெற்று  வேறு ஒரு அழகான இளைஞனின் காதல் பார்வையில் சிக்கி அவனையே திருமணம் செய்துகொள்வதாய் காட்டும்   ஒரு விளம்பரம் நம் இளைஞர்கள் மத்தியில் விதைக்க விரும்புவது எதை?

ஒரு நைட்டி விளம்பரம் இதில் நடிகையும் குடும்பத்தலைவியுமான தேவயாணி சொல்லுவார் “ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது  (பொம்மீஸ் நைட்டி) நைட்டி தான் அட பாவமே  எதை எதையோடு தொடர்புபடுத்துவது என்ற விவஸ்தை இல்லையா ?

குடும்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் இதனால் இந்த மசாலாப் பொடியை உபயோகிக்கிறேன்  என்னுடைய கக்கூசு எனக்கு முக்கியம் அதனால் இந்த லிக்யூட்டைப் பயன்படுத்துகிறேன்  குடும்பத்தின் ஆரோக்கியம் என் கையில் அதனால் இந்த சோப்பைப் பயன்படுத்துகிறேன். என் குடும்பத்தினர் பளிச் என்று உடுத்தினால்தான் எனக்குப் பெருமை அதனால் இந்த சலவைத்தூள் போட்டுத் துவைக்கிறேன் என்னுடைய கணவரது இதயத்தை பாதுகாப்பது எனது கடமை அதனால் இந்த நல்லெண்ணையை ஊற்றி சமைக்கிறேன் என சமையல் எண்ணெய்  முதல் கக்கூசு கழுவும் பெனாயில் வரை தலைக்குத் தேய்க்கும் தேங்காய் என்னைமுதல்  கார் பெற்றோல்வரை பெண்தான் விளம்பர மாடல்!

ஒரு வாகன விளம்பரமெனில் அந்த வாகனத்தின் தரத்தை நிரூபிக்க  குட்டிக் கவுனோடு அந்த வாகனத்தில் சாய்ந்துகொண்டு ஒரு பெண் மோகப் பார்வை பார்க்கவேண்டும்! சோப்பு விளம்பரமெனில் பெண் குளிக்க வேண்டும்! அட ஓர் பெண்ணுக்கு எந்த வகையிலுமே பயன்பட முடியாத பொருளுக்குகூட அவளது உச்சகட்ட அழகு தேவைப்படுகிறது இல்லையா?   ஒரு பெண்ணின் உருவம் இருந்தால்தான் குறித்தவொரு பொருள் விற்பனையாகும் என்ற நிலை எப்படி உருவானது?

இப்படி நுகர்வோரின் விருப்பு வெறுப்புக்கான வியாபாரப் பொருளாக  போகப் பொருளாக பெண் காட்டப்படுவதன் உளவியல் என்ன? சமூகத்தின் பெரும்பாலான பெண்களைத்தான் இந்த விளம்பரங்கள் பிரதிபலிக்கின்றனவா என்றால் ஒருபோதும் இல்லை.   பெண்களின் யதார்த்த வடிவத்தில்  எங்களது  அன்றாட வாழ்வியலில் ஒரு சிறு  சதவீததையேனும் பிரதிபலிப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஒரு பெண் என்றால் அவள் அழகாக, சிவப்பாக, உயரமாக, ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற கருத்தினையே எல்லா விளம்பர்களும் வலியுறுத்துகின்றன இல்லையா?

அன்றாடம் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை சற்றுக் கவனித்தால் புரியும் இந்த எல்லா விளம்பரங்களிலுமே மேற்குறித்த அழகு என்ற கற்பிதத்தினுள்  உள்ள பெண்களே மொடல்களாக இருப்பர். வாகனங்கள்  நகைகள் போன்ற மிகப்பெரிய விளம்பர்களை சற்றுவிடுத்து சலவைப் பவுடர்  ஹார்லிக்ஸ்  மசாலாப் பொடி விளம்பரங்களையே எடுத்துக்கொண்டாலும்கூட  இதில் காட்டப்படும் பெண்களும்கூட என்னதான் புடவை  சல்வார்  அணிந்து குடும்பப்பாங்காக காட்டப்பட்டாலும்  அவர்களும் யதார்த்தம் தாண்டியே இருப்பார்கள்.

இவ்விளம்பரங்களில் வரும் பெண்கள் பாத்ரூமை சுத்தம் செய்துகொண்டிருந்தாலும் சரி சமைத்துக் கொண்டிருந்தாலும் சரி  துணி துவைத்தாலும் சரி முழுமையாக மேக்கப் அணிந்து கசங்காத உடையுடன் பளிச் என்ற தோற்றத்துடன் இருப்பதென்பது  மறுபடியும் விளம்பரங்கள் அழகையும் கவர்ச்சியையும்  உயரமாக ஒல்லியாக அப்பழுக்கற்ற வெள்ளைத்  தோலுடன்தான்  தொடர்புபடுத்துகிறது இல்லையா?

இவ்வாறான எந்தவொரு விளம்பரங்களிலுமே கருத்த தடித்த  குட்டையான ஓர் பெண் பயன்படுதப்படுவதேயில்லை. ஆக விளம்பரதாரர்கள் தங்களது பொருட்களின் தரத்தைவிட ஒரு பெண்ணின் அழகை கவர்ச்சியை நம்பித்தான் தம் பொருட்களை மார்கெட் செய்கிறார்களா என்ன?  இப்படி அனுதினமும் தொலைக்காட்சியில் தோன்றும் அழகான மாடல்களைப் பார்க்கும் பெண்களுக்கு  தமது இயல்பான தோற்றத்தின்மீதும்  கவர்சியின்மீதும் அதிருப்தி ஏற்படுவது என்பது தவிர்க்கமுடியாதவொன்றாகிப் போககூடுமே?

குறித்தவோர் சோப்பினை பயன்படுத்தாது வேறு ஒரு சோப்பை  உபயோகித்துவிட்டால்  தனது மகளின் சருமம் கெட்டுப்போய் அவளுக்கு திருமணமே நடக்காது என்று பயப்படும் ஒரு தாய் fairness கிரீம் உபயோகித்து தன்னம்பிக்கை வந்தவுடன்  தான் இஷ்டப்பட்ட உத்தியோகத்தில் இணைகிறாள் ஓர் பெண்  தன் கனவினை நிறைவேற்றிக்கொள்ள குறித்த சத்துப்பானத்தை அருந்தி “சிக்” என்ற உடல்வாகுபெற்றபின்  இலட்சியத்தை அடைகிறாள்.

இன்னொருபெண் இப்படி எதற்கெடுத்தாலும் அழகு ..அழகு .. அழகு மட்டும்தானா பெண்? இதுதவிர ஓர் பெண்ணிடமிருந்து எதிர்பார்க்க வேறு எதுவுமே இல்லையா? ஒரு பெண் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்ற மீடியா ஏற்படுத்திய ஓர் பிம்பதினுள் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பொருத்திக்கொள்ள முயல்கிறாள். விளைவு? இல்லாத அழகை செயற்கையாக வரவழைக்க முயன்று பணத்தைக் கரைப்பதுடன் உடல் உபாதையை வாங்கிக்கொண்டு தன்னம்பிக்கை இழக்கிறாள்.

 அம்மாவுடன் மிகப்பெரிய அங்காடிகளுக்குள்ளும்  சுப்பர் மார்கெட்டுகளுக்குள்ளும்   நுழையும் குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் விளம்பர்க்ளைப் பற்றியும் சொல்லியேயாகவேண்டும். ஏனெனில் பெரியவர்களாலேயே இவற்றின் நன்மை தீமையினை சரியான முறையில் பிரித்தறிய இயலாதநிலையில்  குழந்தைகளின் நிலை? உணவு உண்ணாவிட்டாலும் பரவாயில்லை  தம் விளம்பரத்தில் காட்டப்படும் சத்துப் (?!) பானதினை அருந்தக்கொடுத்தால் போதும் அது குழந்தைக்கான சகல சக்தியையும் வழங்கிவிடும் என்று கூறும் விளம்பரம்  அதை கொடுக்காவிட்டால் அவள் ஒரு நல்ல தாய் அல்ல என்ற தொனியில் தம் விளம்பரக் காட்சியை காட்சிப்படுதியிருபதை  நீங்களே  அவதானித்திருக்கக்கூடுமே?

ஒருகால கட்டம்வரையில் விளம்பரங்கள் மூலம் மக்களிடையே செய்தியை கொண்டுசேர்ப்பதில் நல்ல கருத்துக்களையே முன்வைத்தார்களாம். அதன்மூலம் ஒரு நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களைப்பற்றிய விபரங்களை மக்களைக் கவர பல்வேறு யுத்திகளைக் கைக்கொண்டு விளம்பரமாக தயார்செய்து வெளியிட்டார்கள்.  ஆனால்  இன்றோ விளம்பரங்களின் பிரம்மாண்டமும்  கவர்ச்சியும் பலவேளைகளில் பொருட்களின் தரத்துக்கு அதிகமான பணத்தை கொடுக்கவேண்டிய சூழலை நுகர்வோருக்கு ஏற்ப்படுதுகிறதா?

நடிகர்களோ நடிகைகளோ  விளையாட்டு வீரர்களோ தங்கள் புகழைப் பயன்படுத்தி எந்தப் பொருள் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறதோ  அந்தப் பொருளுக்கு விளம்பரம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால்  இந்தப் பிரபலங்களின் சுயநலமான பிசினஸ் மைன்ட் புரியாத நுகர்வோர்  அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தவறான தேர்வுகளை கைக்கொள்வதுடன் அதிக விலை என்ற ஒன்றுக்குள்ளும் வீழ்ந்துபோகின்ற்றனர். அதனால்தானோ என்னவோ தண்ணீரைக்கூட இன்று “பிராண்ட்” அடிப்படையில் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம் !

விளம்பரங்கள் அவசியமானவைதான் ஆனால் அதைவிட ஒவ்வொரு தனிமநிதரினதும் தன்னம்பிக்கையும் சுய கௌரவமும்  அவர்களது ஆரோக்கியமும் முக்கியமானது.  மிகைப்படுத்தலே பெரும்பாலும் இன்றைய விளம்பரங்களின் நிலை. இவ்வாறான விளம்பரங்களுக்கான சரியான மேற்பார்வை இல்லாததும்  தெளிவான வரையறைகள் இல்லாததும் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய விளம்பரங்கள் புற்றீசல்போல் உருவாக துணை நிற்கின்றன. இன்றைய டெலி ஷாப்பிங் மார்கெட்டிங் கூட இதற்க்கான நல்ல உதாரணமாக இருக்ககூடும். கோடிக்கணக்கான பணம் புரளும் துறை என்பதால், வர்த்தகர்களும், விளம்பரதுரை ஊழியர்களும் வரிசை கட்டி நிற்கின்றனர்.

இதில் என்றால் அதுதான் உண்மை!விளம்பரங்கள் தொடர்ந்தும்  பயன்பாட்டாளர்களை வாங்க வைக்கவும் இருப்பது நல்லதல்ல புதியதே நல்லது எனும் ஆசையை மனதில் தூண்டிவிடும் வகையிலும் அமைந்துவிடுவது யோசிக்கவேண்டிய விடயமல்லவா? மேலும் ஒரே தரத்தில் உருவாகும் இரண்டு பொருட்களைக்கூட விளம்பரக் கவர்ச்சி என்ற ஓர் விடயம் நுகர்வோரை வெவ்வேறு திசைக்கு இழுத்துச் செல்லும் அபாயமும் நிகழக்கூடும். அதுமட்டுமா? போதும் என்ற மனப்பான்மைக்குமே இந்த விளம்பரங்கள் வேட்டு வைப்பதுடன் மகிழ்ச்சி என்பது பொருட்களில் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தினை அவை ஏற்படுதிவிடுவதும் உண்டு.

எனவே விளம்பரங்களின் நோக்கம் எதுவானாலும்  அது சமூக கட்டமைப்புக்கு பங்கம் விளைவிப்பதாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நேர்மை, கண்ணியம், சமூக பொறுப்பு, கலாசாரம், விழிப்புணர்வு போன்றவை விளம்பரங்களில் உள்ளடக்கப்படும் நாளில்தான் சமுதாயம் அர்த்தப்படக்கூடும். விளம்பரங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி நம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகவேண்டும். விளம்பரங்களின் வீரியம் நம்முடைய யதார்த்த வாழ்வியலை பாதிக்காத வகையில் சரியான முறையில் உள்வாங்கிக் கொள்ளப்படவேண்டும் நுகர்வோராகிய நாம்.

பாணுக்குப்பின்னால் இத்தனை புரட்சிகளா?

மீண்டும் 300/= ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாணின் விலை! கொஞ்சம் சலசலத்த மக்கள் இரண்டு நாட்களில் தானாகவே வேறு விலையேற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த பாண் விலையேற்றம் என்பது  உலக அளவில் எத்தனை போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது தெரியுமா?

பாண் தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தில் பல வரலாறுகளை திருத்தி எழுதியிருக்கிறது. பல வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு தீர்க்கமான சாட்சியாக  இருந்திருக்கின்றது. பாண் எப்போதுமே உழைக்கும் மக்களின் உணவாகவும் அவர்களின் அடையாளமாகவும் உலக வரலாற்றில் இருந்திருக்கின்றது. வடிவங்களில் வேறுபட்டிருந்தாலும் உலகம் முழுவதிலும் இந்த பாண் “பிரட்” எனும் பொதுப்பெயரால்  எத்தனை  புரட்சிகளுக்கு   வித்திட்டிருக்கின்றது என்பது தெரியுமா?
1789இல் பிரான்சின் பிரெஞ் நகரத்தில் இதே ப்ரெட்டுக்காக  பெண்கள் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்தனர். பிரென்ச் புரட்சியின் ஒரு முக்கியமான அடையாளமாக அந்த போராட்டம் கருதப்படுகின்றது. ப்ரெட்டின் விலையை  எக்கச்சக்கமாக ஏற்றியதனைக் கண்டித்து பிரென்ச் அரசரை எதிர்த்து  பெண்கள் ஊர்வலம் ஒன்றினை ஆரம்பித்தனர்.

வரலாற்றில் இந்த சம்பவமானது ” women’s march on Versailles” ” என வர்ணிக்கப்படுகின்றது. ஒரு சந்தையில் வைத்து மிகச்சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் கொஞ்சம்கொஞ்சமாக ஆண்கள் மற்றும் ஊர்வலத்தை அடக்க வந்த பிரென்ச் அரசருடைய படைகள் என பாராபட்சமின்றி இணைய ஆரம்பித்ததும் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது.
கைகளில் சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தியை வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்த பெண்களால் போகிற வழியில் அரசருடைய ஆயுத கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டு அந்த ஆயுதங்களை வைத்தே பிரென்ச் மன்னரது அரண்மனை முற்றுகையிடப்பட்டது. மிக தீவிரமாக மாறிய அந்த போராட்டத்தின் இறுதியில் 11ம் லூயி மன்னருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு அரச குடும்பத்தினரது கையிலிருந்த அதிகாரம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

1863இல் அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது  அமேரிக்கா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதனால் ப்ரெட்டின் விளையும் தாறுமாறாக உயர்ந்ததைக்   கண்டித்து   1863 ஏப்ரல் 02ஆம் திகதி நூற்றுக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். அந்த போராட்டம் வன்முறையாக மாறி கடைசியில் ராணுவத்தால் நிலைமை சரிசெய்யப்பட்டது.
இவ்வளவு ஏன் 1977இல் இதே ப்ரட்டுக்காக மிகப்பெரிய போராட்டத்தினை சந்தித்தது எகிப்து. உலக வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்த எகிப்து அரசிடம் “நீங்கள் ப்ரட்டுக்காக கொடுக்கும் மானியத்தினை நிறுத்திவிட்டு எங்களுக்கு கடனை திருப்பித் தாருங்கள் ” என உலக வங்கி கூற  அதனை எகிப்து அரசும் அமுல்படுத்தியது. இதனை எதிர்த்து எகிப்து முழுவதிலும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. இறுதியில் எழுபது பேர் மரணித்து சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பின்னர் உலக வங்கியும் எகிப்து அரசும் மீண்டும் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டனர்.

முப்பது வருடங்களாக சூடானை சர்வாதிகாரமாக ஆட்சிசெய்துவந்த  “Omar al Bashir” என்பவர் இதே பாணின் விலையேற்றத்தினாலேயே மிகப்பெரிய போராட்டத்தின் பின்னர் 2019இல் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார் சூடான் மக்களால்.

உலகப்போரில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக பாண் இருந்திருக்கின்றது. யுத்த வீரர்களுக்கே ப்ரட்  சென்றுசேர வேண்டும் என்பதாலும்  யுத்த செலவீனங்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவும் தம்முடைய நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் “குறைவாக பிரெட்டினை உண்ணுங்கள் அப்போதுதான் நம்மால் ஜெயிக்க முடியும்” என பிரச்சாரம் செய்தனராம்.

இவ்வளவு ஏன் நம் நாட்டில் 1994ஆம் ஆண்டு தன் தாயார் ஸ்ரீமா பண்டாரநாயக்கவினால் ஏற்பட்ட பாண் போராட்டத்திற்கு பிரதியுபகாரமாக,  தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் இரண்டு ரூபாய்க்கு பாணை மக்களுக்கு தருவதாக கூறியே ஆட்சியை பிடித்தார் சந்திரிக்கா பண்டாரநாயக்கா.
இன்றும் உலகத்தில் கிட்டத்தட்ட 60% மக்களின் பிரதான உணவாக  இருப்பது இந்த ப்ரட். உலகத்தின் வரலாற்றுப் பக்கங்களை எடுத்துப்பார்த்தோமானால் பல போராட்டங்களுக்கு இந்த ப்ரட் எனப்படும் பாண்தான் முக்கிய காரணமாகவும்  இருந்திருக்கின்றது.

 

 

 

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும் சூழல்களுக்கு ஒத்து வாழக் கூடியவர்களாக திகழ்கிறோம். அதே சமயத்தில் சட்ட திட்டங்களை கடைபிடிக்க தவறுபவர்களாகவும் இருக்கிறோம். அதற்கான காரணங்கள் நியாயம் தீர்க்க கூடியவையாக இல்லாவிடினும் அவை நல்ல கதைகளை உருவாக்கியுள்ளன. அவ்வாறு இலங்கையர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் கைது செய்யப்பட்டமைக்கான சில காரணங்களை பார்ப்போம்.

கைக்குலுக்கியமைக்காக இலங்கையர் கைது செய்யப்பட்டார்!

பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டமைக்காக மத்திய கிழக்கு நாடொன்றில் புலம்பெயர்ந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தனது பக்கத்து வீட்டின் வாகன ஓட்டுநர் தன்னை தகாத முறையில் தொட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த நபர் தான் நட்பு ரீதியாக வாழ்த்து கூறுவதற்காக கைகளை குலுக்கியதாக தன் தரப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை அந்த இலங்கையர் கூறுவது உண்மையாக இருந்தால் இது கைது செய்யப்படுவதற்கான காரணமாக தோன்றவில்லை. எது எவ்வாறிருப்பினும் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அந்த இடத்தில் உள்ளவர்கள் போல் நடந்து கொள்ளுங்கள்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமைக்காக இளைஞர் கைது!

செய்யப்பட்டார்.2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியின் இணையத்தளத்த-
தை ஹெக் செய்து தனது பல்கலைகழக நுழைவுத் தேர்விற்கான திகதியை மாற்றக்கூடாது என கோரிய மாணவன் கைது செய்யப்பட்டார். இலங்கை இளைஞர்களை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் பல்கலைகழக தேர்வு திகதிகள் ஏப்ரல் மாத சிங்கள புத்தாண்டு காலத்திற்கு மாற்றப்படுமானால் உடனடி ஜனாதிபதி தேர்தலை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியின் இணையத்தளத்தில் அந்த இளைஞர் பதிவேற்றினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் கைது!

2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த எட்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். உண்மையில் அவர்கள் முகாமில் இருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின் அவர்கள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர் பின்னர் அவர்களின் உடல்நிலை மோசமாக இருந்தமையால் விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1982 இல் இலங்கையர் ஒருவர் ஹைஜேக்கில் ஈடுபட்டார்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது விசாவை தொலைத்துவிட்டு, இத்தாலிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புதிய விசாவை மறுத்துள்ளார். புதிய விசா கிடைக்க ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதை அறிந்ததும் தான் அவ்வளவு காலம் தனது மனைவி மற்றும் மகனை விட்டு விலகி இருக்க நேரும் என எண்ணி மனம் நொந்து போனார். ஒரு இத்தாலிய விமானத்தை கடத்திச் சென்று பின்னர் இத்தாலிய அரசாங்கத்திற்கு தனது கோரிக்கைகளை நேரடியாகத் தெரிவித்து விமானியை பாங்காக்கிற்கு திசைதிருப்ப வைப்பதே அவரது செயற்திட்டமாக இருந்தது. அவருடைய கோரிக்கைகள் அவ்வளவு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. அவரது மனைவி மற்றும் மகனுடன் மீண்டும் இணைய வேண்டும் மற்றும் முந்நூறாயிரம் டாலர்கள் அவ்வளவு தான். ஆமாம்! வெறும் முந்நூறாயிரம் டொலர்கள்! அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
மலக்குடலில் 1 கிலோ தங்கத்துடன் இலங்கையர் கைது!

கடத்தல் மிகவும் மோசமானது. ஆனால் நமது இலங்கையர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 2017 செப்டம்பரில் 2 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் நகைகளை மலக்குடலில் மறைத்து கடத்த முயன்றதாக இலங்கை அதிகாரிகள் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவர் இந்தியாவிற்க்கு கடத்த முயற்சித்துள்ளார். மேலும் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்ததை வைத்து தான் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

போலி மருத்துவ சான்றிதழ்களுடன் இலங்கையர் கைது!

இந்த வழக்கு 2018 இல் சைப்ரஸில் நடந்தது வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு உதவுவதற்காக மூன்றாம் தரப்பினருக்கு போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கியதற்காக இரண்டு சைப்ரஸ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று நான் முன்பு கூறியது நினைவிருக்கிறது அல்லவா? எப்படியோ இந்த வழக்குடன் தொடர்புடையவர் என நாற்பத்தாறு வயதுடைய இலங்கையர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

தனது குழந்தைக்கு பீர் குடிக்க கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.!

இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கையை சேர்ந்த ஒருவர் தனது ஒரு வயது மகனுடன் பீர் போத்தலை பகிர்ந்து கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதை வீடியோவாக பதிவு செய்தமைக்காக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சிறு குழந்தை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்ட அதே நேரத்தில் அவரது 40 வயதான தந்தை மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் குழந்தைக்கு கொடுமை செய்த குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் எவ்வளவு தீவிரமானதோ அதே அளவு கைது செய்வதற்கு தகுதியான பைத்தியக்காரத்தனமானதும் தான்.
குடிபோதையிலிருந்த ஓட்டுநர் கைது!

முதலில் பார்க்கும் போது இது ஒன்றும் வழமைக்கு மாறான விடயம் அல்லாதது போல் தோன்றலாம். உண்மையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது கவனம் செலுத்தி தீர்க்கப்பட வேண்டிய ஓர் விடயம் தான். இங்கு அந்த இலங்கையர் ஓட்டியது கான்க்ரீட் மிக்ஸரை என கண்டறியாத வரை. கிங் ஃபஹத் பின் அப்துல்லஜிஸ் மோட்டார்வேயில் கவனக்குறைவாக ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநரை பற்றி பலர் உள்துறை அமைச்சின் செயற்பாட்டு அலுவலகத்திற்கு முறையிட்ட பின்னே தான் இந்த இலங்யைர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறு தான் ஆனால் கான்க்ரிட் மிக்ஸரை ஓட்டுவது வேறு கதை.

இலங்கையர்கள் கைதாகிய க்ரேஸியான காரணங்கள் பற்றி பார்த்தோம். அடுத்த முறை நீங்களும் செய்திகளை பார்க்கும் போது வேறு புதிய க்ரேஸியான காரணங்களுக்காக கைதாகுகின்ற வழக்குகளை பற்றி அவதானியுங்கள்.

 

பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?

விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில்  ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில்  இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள்  என்ற குற்றச்சாட்டு! இந்தக் கேள்வி நீண்ட நெடு நாட்களாகவே பலரது மத்தியிலும் இருந்துவருகிறது.

தொலைகாட்சி அலைவரிசைகள்  ஒவ்வொன்றும் வணிக ரீதியில் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் வெவ்வேறு நேரங்களில் விதவிதமான சீரியல்களை ஒளிபரப்பி பெரும்பாலான பெண்களது சிந்தனைச் சிறகுகளை கட்டிப்போடுவதுடன் அவர்களது உழைப்பினையும் நாசமருத்து வருகிறது என்றால் அது மிகையில்லை.  அட எடுத்த எடுப்பில் இப்படி பெண்கள்மீது குற்றம்சாட்டிவிட முடியுமா?  சீரியல் பார்ப்பதொன்றும் பாரதூரமான குற்றம் அல்லவே?

நாள்முழுதும் வெளிவேலைகளில்  மூழ்கிவிட்டு வீட்டுக்கு வரும் ஆண்களோ பெண்களோ அல்லது வேறுவகையான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டுள்ள ஆண்களோ பெண்களோ சீரியல் பார்க்கும் பெண்களை கொஞ்சம் மட்டமான கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் யதார்த்தம். ஆனால் இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று யாராவது ஆழ்ந்து யோசித்துப் பார்த்திருக்கிறோமா ?

படித்த பெண் வேண்டும் என்று தேடிக்திருமணம் செய்துகொள்பவர்கள்கூட  திருமணதிற்குப்பின் குடும்பப் பொறுப்பு என்ற ஒன்றை முன்னிறுத்தி பெண்களை அவள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவளை அவளது தொழிலில் இருந்து பெரும்பாலானோர் நிறுத்திவிடுகிறார்கள். இலங்கையைக் காட்டிலும் சீரியல் மோகம் பிடித்தாடும் இந்தியாவில் இந்த நடைமுறை அதிகம்.
எத்தனயோ BE களும், MBA களும் மைக்ரோ அவனில் சாம்பார் வைத்துக்கொண்டும் கம்யூட்டரில் கோலம்போட்டுக்கொண்டும் இருக்கிற இந்தியா போன்ற நாடுகளில்  லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஆண்களைக்காட்டிலும் திறமையான பல பெண்கள் சன் டிவி,விஜய் டிவி, zee தமிழ் , போன்றவற்றில் புதைந்துபோய் கிடக்கிறார்கள். சரி  இவர்கள் ஏன் இப்படி விழுந்தடித்துக்கொண்டு சீரியல் பார்க்கிறார்கள்? இங்கேதான் மறைந்துகிடைக்கிறது ஓர் உண்மை.
பெரும்பாலான பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஓர் பிடிப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்க்காகவே சீரியல் பார்க்கத் தொடங்கிவிடுகின்றார்களாம்! இது அன்றைய நாளை எதிர்நோக்கிக் காத்திருக்க ஒரு காரணத்தை அவர்களுக்கு உண்டாக்கிக்கொடுக்கிறதாம்! என்ன  நம்ப மறுக்கிறதா மனம் ? நம்பித்தான் ஆகவேண்டும் 9.30கு சீரியல் ஆரம்பித்துவிடும் என்று திட்டம்போட்டு வீட்டு வேலைகளை அவசர அவசரமாய் முடிப்பது, சமையலை தயார் செய்வது என்று இது ஒருவகையான மனநிறைவினை அவர்களுக்குக் கொடுக்ககூடியதாய் இருக்கிறதாம் .

மதியம் செய்தியறிக்கையின்போது சமையலறைக்குள் பாய்ந்து சென்று சாப்பிடுவது அலுவலகத்தில் “lunch break ” இல் சாப்பிடும் ஒரு உணர்வையும் அவர்களுள் ஏற்படுத்துகிறதாம்! நான் ஒன்றும் வெட்டியாக இல்லை எனக்கும் முக்கியமான வேலை இருக்கிறது என்ற மனோபாவம் இவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகிறது என்கின்றனர் சில மனோவியாய்வாளர்கள்.
வீட்டு வேலைகளை மட்டுமே தலையாயக் கடமையாகக் கொண்ட பெண்கள் தங்களுடைய மிகப்பெரிய ஆறுதலாக இந்த தொலைக்காட்சித் தொடர்களை நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். தங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு வடிகாலாக பல பெண்களுக்கு இந்த சீரியல்கள் துணை புரிகின்றன.        சீரியலில் தோற்றுப்போகும் கதாப்பாதிரங்களை தன்னுடைய மாமியாராகவோ  நாத்தனாராகவோ, பக்கத்துவீட்டுப் பெண்ணாகவோ நினைத்துக்கொண்டு  ஜெயிக்கும் கதாபாத்திரங்களை தன்னுடைய பிரதிபலிப்பு என்று இவர்கள் நினைத்துக்கொள்கிறார்களாம்.

பெரும்பாலும் அரசியல்  பொருளாதாரம் அல்லது வேறு ஏதேனும் தலைப்புகள் பற்றியெல்லாம் பேசப் பிடிக்காத பெண்கள் தங்களுக்குள் சந்தித்துப் பேசும்போது இந்த “சீரியல்” என்பது பொதுத் தலைப்பாகிவிடுகிறதாம். ஏன்?அலுவலகப் பெண்கள்கூட தங்களுக்குக் கிடைக்கும் இடைவேளையில் சீரியல் பற்றிப் பேச தவறுவதில்லை. அதுமட்டுமன்றி இந்த தலைமுறைப்பெண்கள் பலரும் youtubeபோன்ற இணையதளங்களில் உதவியில் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடிவதைப்போன்று  முந்தைய தலைமுறைக்கு  வாய்ப்புக்கள் கிடைத்திரவில்லை. எனவே இவர்கள் தங்களுக்கான ஆடை அணிகலன்கள் முதல் ஒப்பனைவரையில் சீரியல் பெண்களின் பாதிப்பினை தம்மில்  உள்வாங்கிக்கொண்டனர் என்பதும் மறுக்கவியலாதது.

சிறு வயதிலிருந்தே நாமெல்லாம் யாரோ ஒருவர் கதை சொல்ல அதைக் கேட்டு வளர்ந்தவர்கள் அல்லது தொடர்கதைகளை படித்து வளர்ந்தவர்கள். அடுத்து என்ன ? என்ற ஆர்வம் தெரிந்துகொள்ளும் சுவாரஸ்யம்  ஆண்களைக் காட்டிலும் அதிகமாக பெண்களுக்கே உண்டு. பிறர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் இயல்பாகவே பெண்கள் ஆற்படுகின்றனர். இதனால்தான் சீரியல்களில் வரும் கதாப்பாதிரங்களை யதார்த்தநிலை கடந்து நிஜமாகவே ஒருகட்டத்தில் நம்ப ஆரம்பித்துவிடுகின்றனர்.

இதனால்தான் அவர்கள் அழும்போது தாங்களும் சேர்ந்து அழுகிறார்கள். அவர்கள் இன்னல்களைச் சந்திக்கையில் தாங்களும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் . இதில் சிலர் அதில் வரும் சம்பவங்களை தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களை பொருத்திப் பார்த்து துன்பப்படுவதும் உண்டு. காலையில் தொடங்கும் அழுது வடியும் சீரியல்களை அழுது வடிந்துகொண்டே சமையல் முதலான வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்து  இரவு உறங்கச் செல்லும்போதுகூட பதினோரு மணிக்கு ஒளிபரப்பாகும் இறுதி சீரியலில் நடக்கும் கஷ்டங்களையெல்லாம் பார்த்துவிட்டு அழுதுகொண்டே உறங்கச் செல்லும் பெண்களைக்கூட நாங்கள் சந்தித்திருக்ககூடும்.

வெங்காயம் நறுக்கினாலும்  கண்நீர்வரத  விழிகளில்  நம்முடைய சீரியல்கள் கண்ணீர் ஆற்றையே பெருகச் செய்துவிடும். கண்ணீர், சோகம், அனுதாபம், என  பெண்களை சுலபமாக உணர்சிவசப்படவைக்கும் கதைகளையே ஒவ்வொரு சினிமாவில் வரும் ஆண்களைவிட அதீத வில்லத்தனத்துடன் பெண்களின் கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன என்பதை நாமறிவோம்.

ஆள் கடத்தல், அடியாள் வைத்து கொலை செய்தல், அடித்தல், அடுத்த பெண்களின் கர்ப்பத்தைக் கலைத்தல், குடும்பங்களை சதி செய்து பிரித்தல், மற்ற பெண்ணின் கணவனை அடைய முயற்சி செய்தல், என்று இந்த சீரியல் வில்லிகள் செய்யும் குற்றங்களின் பாவப்பட்டியல் நீண்டுகொண்டே போகக்கூடியது. சூர்ப்பனகை, தாடகை, பூலான்தேவி, கூனி என்றெல்லாம் பெயரிடப்படவேண்டிய சீரியல்களுக்கெல்லாம் செல்லமா, அருந்ததி, சரஸ்வதி என்று  பெயர்களையெல்லாம் வைப்பதுதான் கொடுமை!

ஒரு பெண்ணை எந்த அளவு தெய்வம் , தேவதை ஸ்தானதிற்கு உயர்த்துகிறார்களோ அதேயளவு அதள பாதாளதிற்கு அதன் எதிர்மறை கதாப்பதிரத்தை ராட்சசியாக  பேயாக உருவாக்குகிறார்கள் இந்த சீரியல் இயக்குனர்கள். பெண்கள் என்றாலே எப்போதும் சோகமாக பிரச்சினைகளை சுமந்து திரிபவர்களாக அழுது வடிபவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது இந்த சீரியல்களில் எழுதப்படாத விதி போலும்! இதில் உள்ள யதார்த்தமற்ற இன்னொருவிடயம்தான் ஆடை அலங்காரங்களும் ஒப்பனைகளும்.

தூங்கி எழும்போதுகூட பூவும் போட்டும் கலையாத பொலிவான முகம் அதை தொடர்ந்து பார்ப்பவர்களுக்குப் பழகிப்போய்விடுமோ என்னவோ! எதேச்சையாய் நான் எப்போதாவது சீரியல்களை கடக்கவேண்டி ஏற்ப்படுகையில் மனதுக்குள் நினைத்துக்கொள்வதுண்டு  “ஐயோ.. இதை எந்த ஆணாவது பார்த்தால் பெண்கள் எல்லோருமே இப்படித்தான் சகுனி வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள் என்று எத்தனை ஆண்களின் மனதில் இந்த சீரியல்களின் கதாபாத்திரங்கள் எதிர்மறையான  எண்ணம்தனை  உருவாகக்கூடும் என்று நினைத்து நொந்ததுண்டு.

(தற்போது ஆண்களும் சேர்ந்து பாரதி கண்ணம்மா போன்ற அறுவைகளை பார்ப்பது வேறு கதை). சமூகத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்ற சீரியல் இயக்குனர்களின் சப்பைக்கட்டு ஏற்றுக்கொள்ளகூடியதாய் இருக்கிறதா? இன்னொரு பெண்ணின் கணவனை அடைவதற்க்காக சதி செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட பெண்களின் வெறித்தனம், அவனை என் காலில் விழுந்து கதற வைக்கிறேன் பார் என்றும்  “அவ எப்படி வாழ்ந்துடறான்னு பார்க்கிறேன்” என்றும் சொடக்குப்போட்டு பேசும் கதாபாத்திரங்களும்  வெறுமனே ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான பாத்திரங்களாகப் பார்க்கப்படுவதில்லை.

மாறாக  அந்த ஆளுமைகள் நிதர்சனமான ஒவ்வொரு உண்மையான வாழ்வியல் உறவுப் பாத்திரங்களிடையே பிரதிபலிக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் கசப்பான உண்மை. தொடர்ந்தும் இதுபோன்ற விடயங்களை பார்த்துக்கொண்டு வரும்போது நிச்சயம் அது பெண்களில் ஒருவிதமான உளவியல் தாக்கத்தினை ஏற்ப்படுத்துவது உறுதி. அநேகமான நெடுந் தொடர்கள் குடும்பப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டே எடுக்கப்படுகிறது.

ஆண்டுக்கணக்கில் தொடரும் இந்த தொடர்களின் மகத்தான வெற்றிக்கு காரணமும் இதுவே. வீடுகளில் நடக்கும் பிரச்சினைகள்  நல்லது கெட்டது அதில் வரும் சச்சரவுகள் போன்றவை பற்றியே சீரியல்கள் அதிக நெடுந் தொடர்கள் எடுக்கப்டுவதால் அவற்றை பெண்கள் விரும்பிப்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.  ஆரம்பத்தில் ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யமாய்  சுமாராய் குடும்பப் பாங்காய் ஆரம்பிக்கும் இந்தத் தொடர்கள் காலப்போக்கில் தீவிர வாதிகளையும் மந்திர வாதிகளையும்  உருப்பினர்களாய்க் கொண்ட யதார்த்தமற்ற வகையில் திசை திருப்பப்படுவதுடன்  தொடரின் நீடிப்புக்காக சம்பந்தமே இல்லாத வேறுபல கிளைக் கதைகளையும் கதாபாதிரங்களையும் இடைச் செருகிவிடுவதுண்டு.

தன்னுடைய குழந்தைகளுக்கோ  கணவனுக்கோ சீரியல் முடிந்ததும்தான் சாப்பாடு என்று சொல்லும் பெண்களைக் கண்டிருக்கிறேன். இதைவிடக் கொடுமை என்னவென்றால் நிலாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம்போய்  சீரியல்களைக் காட்டி  அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயரைச் சொல்லி உணவூட்டும் தாய்மார்களை கண்ணுறுவதுதான்! விபரம் புரியாமலேயே அம்மாவோடு அமர்ந்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கும் குழந்தைகள் வாய் பேசத் துவங்கும்போதே சீரியல்களில் வரும் டைட்டில் சாங்ஸைக் கேட்டதும்  அந்தத் தொடரின் பெயரை சொல்ல ஆரம்பித்துவிடும்.
போதாக்குறைக்கு அந்தப் பாடலை பாடியும் காட்டும். இதைப் பார்க்கும் அன்னைக்கோ ஆனந்தம், என் பிள்ளை எவ்வளவு புத்திசாலி என்று. அதன் பின்விளைவு புரியாமலேயே பெருமிதப்பட்டுக் கொள்வதுதான் வேதனை. இந்தக் குழந்தைகள் தம்முடைய ஐந்தாவது வயதினை எட்டிப் பிடிபதற்க்குள் ஆயிரம் கொலைகள்,பாலியல் வல்லுறவுகள், ஆள் கடத்தல், குண்டு வெடிப்புகள், சாதிச் சண்டை, மதச் சண்டை, கள்ள உறவுகள், மாமியார் மருமகள் பிரச்சினைகள் இவை தாண்டிய வேறுவிதமான வன்முறைக் காட்சிகள் என்று உலகின் சகல தீமைகளையும் கண்டுகொள்கின்றனர்.

தங்களுடைய குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு சீரியல் பார்க்கும் எந்தப் பெண்ணும் அறிவதில்லை. சீரியல்களின் எதிர்மறைக் காட்சிகள்  குழந்தையின் உள்ளத்தில் மெது மெதுவாய் எவ்வளவு பெரிய மாறுதல்களை அதன் ஆள் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை. கொஞ்சம் யோசியுங்கள் மணிக்கணக்காக
உட்கார்ந்து சீரியல் பார்க்கும்போது நம்முடைய மூளை சிந்திக்கும் திறனை இழந்து மழுங்கடிக்கப்பட்டுவிடும், எதிர்மறையான எண்ணங்களும், யதார்தமன்ற கற்பனைகளும்தான் நமக்கு மிஞ்சகூடும்.

இதைவிட ஏதாவது புத்தகங்களை வாசிப்பது நம்முடைய  மனோநிலையினை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு வாசிக்க வாசிக்க நம்முடைய கற்பனைகள் எல்லை கடந்து விரியும் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள  புது விடயங்களை தன்னம்பிக்கையோடு முயற்சிக்க என்று நல்ல நூல்கள் நமக்கு பெரிதும் ஆதரவாக இருக்ககூடும்.

மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்து உடல் எடையினை அதிகரித்துகொள்வதுடன் தேவையற்ற மன உளைச்சல், மாரடைப்பு ,மறதி, நீரிழிவு , இதயநோய் , குறைப் பிரசவம், பார்வைக்கோளாறு போன்ற நோய்களையும் நாம் சிறுகச் சிறுக வாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா? நேரம் என்பது போனால் திரும்பாதது.
அந்த நேரத்தை வீண் வழியில் போக்கிகொள்ளாமல் அதனை பயனுள்ளதாக்கிகொள்ள ஆரோக்கியமான  ஆயிரம் வழிமுறைகள் உண்டு.  எனவே யோசியுங்கள்! எங்களுடைய சிந்தனைச் சிறகுகளை குறுகியதோர்  வட்டத்துக்குள் வைத்துக்கொள்ளாமல்  அவற்றை சிறகடித்துப் பறக்கவிடுவோமாக!

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!

இந்த உலகின்  அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும்  சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை  அதன் ஆச்சரியங்களை   கொஞ்சம் அதிகமாகவே உணர முடியும். அவற்றை நேரில் பார்த்தால் கண்களுக்குத் தெரிவது கற்பனையா? இல்லை நிஜமா? என்ற சந்தேகம் கூட ஏற்படும். அப்படி இயற்கையாகவே உருவான  இடங்கள் நம் பிரபஞ்சத்தில் ஏராளமாக இருக்கின்றன.

அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கள். புவியின் மேலோட்டில் உள்ள நிலத்தடிநீர்  குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாகச் சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது.  இந்த உலகம் முழுவதிலும்   கிட்டத்தட்ட 1000 வெந்நீரூற்றுக்கள் காணப்படுவதாகவும் அவற்றுள் சுமார்  50% அமெரிக்காவிலுள்ள “வயோமிங்கு” என்னும் இடத்தில் உள்ள எல்லோசுட்டோன் தேசியப் புரவகம் (யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா) என்ற இடத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதிலும் அகில உலகரீதியில்  பிரதானமான  வெந்நீர் ஊற்றுக்கள் கிட்டத்தட்ட  பதினைந்து  உள்ளன.  பமுக்கலே வெந்நீர் ஊற்று (துருக்கி),  கீர்கங்கா வெந்நீர் ஊற்று (இமாச்சல பிரதேசம்),  ப்ளூ லகூன் (ஐஸ்லாந்), செனா ஹாட் ஸ்பிரிங்ஸ் (அமெரிக்காவின் அலாஸ்கா),கிராண்ட் பிரிஸ்மாட்டிக் ஸ்பிரிங் (அமேரிக்கா), டிசப்ஷன் ஐஸ்லேண்ட் (அண்டார்டிக்கா), ஹுவாங்லாங் (சீனா), பஞ்சார் ஹாட் ஸ்பிரிங்ஸ் (பாலி), டெர்மே டி சாட்டர்னியா (இத்தாலி) ,யுனார்டோக் (கிரீன்லாந்து ) , குரோகாவா ஆன்சென் (ஜப்பான்), டிராவர்டைன் ஹாட் ஸ்பிரிங்ஸ் (கலிபோர்னியா) , ஷாம்பெயின் பூல் (நியூசிலாந்து), டன்டன் வெப்ப நீரூற்று (கொலராடோ), டெர்மாஸ் ஜியோமெட்ரிகாஸ் (சிலி )எனும் பாரிய வெந்நீர் ஊற்றுக்களே அவை!
நம்முடைய இலங்கையைப் பொறுத்தமட்டில் யாழ் குடாநாட்டைச் சேர்ந்த கீரிமலை மதவாச்சி ரத்திகிரிய, வேலிகந்த கல்வௌ, மகசியம்பலாகம மற்றும் மரங்கள
மஹவ-மகா ஓயா, கிவுலேகம-திருக்கோவில், மஹபலஸ்ஸ-ஹம்பலாந்தோட்டை,  திருகோணமலை-கன்னியா  போன்ற வெந்நீரூற்றுக்கள் குறிப்பிடப்பட்டபோதிலும்  இவற்றுள் இன்றளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக திகழ்வதென்னவோ கன்னியா வெந்நீர் கிணறுகளே.

திருகோணமலை  மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்றான கன்னியா  குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 – 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகளாக  அமையப்பெற்றுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் ஊறிவரும் நீரானது இலங்கையின் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஒன்றாக காணப்பட்டபோதிலும் சுற்றுலாப்பயணிகள் நீராடும் அளவிற்கு போதுமான அளவு நீரிணைக்கொண்டதாக இல்லை.
பொதுவாக  வெந்நீரூற்றானது ஒரு தற்காலிகமான புவியியல் தொழிற்பாடு என்கிற அடிப்படையில்  ஒரு வெந்நீரூற்றின் வாழ்வுக் காலம் சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. கன்னியாவிலும் முன்பு இருந்ததைவிட நீறூற்றுக்களின் வெப்பநிலையானது பெரிதும் குறைந்துபோய்விட்டதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர். 1798ல் “ரொபட் பர்சிவல்” எனும் வைத்தியர் இலங்கை பற்றி எழுதிய நூலில் கன்னியாவிலுள்ள 7 வெந்நீரூற்றுக்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

அவ்வூற்றுக்களின் வெப்பநிலை 98பாகை பரனைட் முதல் 106 பாகை பரனைட்டு வரை (36.6 பாகை செல்சியஸ் – 41.38 பாகை செல்சியஸ்  இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இந்த  வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலை 42 பாகை செல்சியசு முதல் 55 பாகை செல்சியசு வரை வேறுபடுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும் 1816 – 1820 காலப்பகுதியில் தாம் கண்ட இலங்கையைப் பற்றி “ஜோன்டேவி”என்பவர் எழுதிய நூலில் கன்னியாவிலுள்ள சில வெந்நீர்க்கிணறுகளில் மீன்கள் வாழ்ந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கிணற்றுக்குக் கிணறு நீரின் வெப்பநிலை வேறுபட்டுக் காணப்படுவதால் அவை ஒரே ஊற்றிலிருந்து தோன்றியவை அல்ல எனவும் தன்னுடைய அனுமானத்தினை தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.ஏராளமான வரலாற்று ரீதியான சமய நம்பிக்கைகளுடனும்  மதகோற்பாடுகளுடனும் தொடர்புபட்ட கன்னியா இன்று சில அரசியல் ரீதியிலான பொறிக்குள் சிக்குண்டிருப்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது .

 இலங்கையில் உள்ள  வெந்நீரூற்றுக்களில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன. எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவே வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதாக பொதுவாக கருதப்பட்டாலும்  கிழக்கில் அவ்வாறான எரிமலைகள் வெடித்தமைக்கான வரலாற்றுச்  சான்றுகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால் இந்த  வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதற்கு எரிமலைத் தொழிற்பாடு காரணமாக இருந்திருக்காது என இலங்கையின் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் கிழக்கில் வெந்நீரூற்றுக்கள் காணப்படும் பகுதிகளுக்கு அண்மையில் டொலரைற் (Dolerrite) எனும் தீப்பாறைவகை காணப்படுவதும்  எரிமலை வெடிப்புகளின்  விளைவாகவே இவ்வகைத் தீப்பாறைகள் உருவாகின்றன. என்பதையும் கருத்திற்கொண்டுபார்த்தால் மிக முந்திய காலத்தில் இப்பிரதேசங்களில் எரிமலைத் தொழிற்பாடுகள் நிகழ்ந்துள்ளனவா எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இந்த டொலரைற்றுப் பாறைகள் சுமார் 135 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

மேலும்  பாறைகளிலுள்ள கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களின் கதிர்வீச்சு  காரணமாக சூழவுள்ள நீர் சூடேறக்கூடும் என்கிற அடிப்படையில் மகாஓய அம்பலாந்தோட்டை  போன்ற பிரதேசங்களில் யுரேனியம் தாதுப் பொருட்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள போதிலும் வெந்நீரூற்றுக்களைச் சூழவுள்ள கதிர் வீசலுக்குரிய அறிகுறிகள் எதுவும் இதுவரை புலப்படவில்லை. எனவே இலங்கையில் வெந்நீரூற்றுக்கள் தோன்றுவதற்கு கதிர்த் தொழிற்பாடுடைய மூலகங்கள் காரணமா என்கிற ஐயமும் இன்றுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அடுத்ததாக புவியோட்டினுள் இருக்கும் நீர் பல்வேறு அசைவுகளுக்கு உற்படும்போது இவ்வசைவுகள் காரணமாக நீரின் மீது ஏற்படும் அமுக்கம் மிக அதிகமாவதுடன் புவியின் உட்பகுதியில் காணப்படும் உயர்ந்த வெப்பநிலையும் சேர்ந்து வெந்நீரூற்றுக்கள் தோன்றக் காரணமாக அமையலாம் எனவும்  புவியின் உட்பகுதியை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு 200 மீற்றருக்கும் வெப்பநிலை 9 பாகை செல்சியசினால் அதிகரிக்கின்றது எனவும்  இதன்படி பார்த்தால் புவியில் 25 கிலோமீற்றர் ஆழத்தில் வெப்பநிலை 1150 பாகை செல்ஸியஸ்  அளவு இருக்கக்கூடும்.
இத்தகைய உயர் வெப்பநிலை காரணமாகப் புவியின் ஆழத்திலிருந்து வரும் நீரூற்றுக்களின் வெப்பநிலையும் உயர்ந்ததாகக் காணப்படலாம். இலங்கையிலுள்ள வெந்நீரூற்றுக்கள் இவ்வாறே தோன்றியிருக்கலாம் என சில ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இன்றுவரையில் எந்தவொரு ஆராய்ச்சி முடிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே வருத்தத்திற்குரியது. புராணக்கதைகளிலும்  ஏராளமான கட்டுக்கதைகளிலும் ஊரித் திளைத்திருக்கும் நாமும் நம் அரசியல் தலைமைகளும்  அறிவியல்ரீதியிலான ஆதாரங்களை தேடி உறுதிப்படுத்துவதைவிட  புனைவுகளை உண்மையாக்குவதிலேயே குறியாக இருக்கின்றோமோ என்னவோ!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே  இவ்வாறான நீரூற்றுக்களை மனிதன் நீராடவும் உடல் மற்றும் உள்ளத்திற்க்கான புத்துணர்ச்சியளிக்கும் இடமாகவும் பயன்படுத்த  ஆரம்பித்திருக்கிறான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.  சூடான நீரில் திண்மப் பொருட்கள் இலகுவில் கரையக் கூடியனவாக இருப்பதனால் வெந்நீரூற்றுக்களில் அதிகளவில் கனிமங்கள் காணப்படும் (முக்கியமாக சிலிக்கன்).
இதனால் இந்த வெந்நீரூற்றுக்களில் உள்ள நீரில் பல மருத்துவ பயன்பாடுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பது மட்டுமல்லாமல் இயலாத்தன்மை உள்ளவர்களுக்கான உடலியக்க மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கும் நிலையங்களுக்கான இடங்களாகவும் அமைந்துள்ளன. மின்சார உற்பத்தி, சுடுநீர்த் தேவை, சுற்றுலாத்துறை போன்ற வணிகநோக்கிலான தேவைகளுக்கு இந்த வெந்நீரூற்றுக்கள் பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும் உழைப்பு!

20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக  ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான்.   ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை.

வல்லரசு பட்டியலின் முதலிடத்தில் இருக்கும்  அமெரிக்காகூடிய விரைவில் அந்த நிலையை இழக்கும் என பல ஆண்டுகளுக்கு முன்னமே பொருளாதார வல்லுநர்கள் கணித்தமை கொரோனாவிற்கு பின் நிதர்சனமாகியுள்ளது என்பதுதான் உண்மை. இன்றைய உலக பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக வல்லரசு நாடுகளின் நிலை அந்தோ பரிதாபம்.

வரலாற்றில் அலெக்ஸ்சாண்டரின் கிரேக்கம், சீசரின் ரோம், நாடுகாண் பயணங்களையே ஊக்குவித்த ஸ்பெயின் தனது காலனித்துவதால் பலநாடுகளையும் ஆட்டிவைத்த பிரிட்டன் போன்ற பெரும் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்ததைப்போன்றே இன்றைய சமகால வரலாற்றில் அமெரிக்காவின் சாம்ராஜ்யமும் சரிந்துவருகின்றது. சில வருடங்களாகவே அமெரிக்கா ஆட்டம் கண்டுவர அமைதியாக ஒருநாடு முன்னேறி வந்து அமெரிக்காவின் இடத்தை எட்டிப்பிடித்துள்ளது .

அந்த நாடுதான் சீனா !

1872ஆம் ஆண்டு பிரிட்டனை பின்தள்ளி பொருளாதார வல்லரசாகிய அமெரிக்காவை தற்போது பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனா. கடந்த பத்து ஆண்டுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டுவரும் சீனா ஏற்கனவே நீண்டகாலமாக உலகளவில்  இரண்டாம் இடத்திலும் ஆசிய கண்டத்தில் முதலிடத்திலும் இருந்த ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து ஆசிய ஜாம்பவானாக இருந்து தற்போது உலக வல்லரசாக தன்னை உயர்திக்கொண்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி மிக பிரமாண்டமானது. ஜப்பானை விட மிகப்பெரிய வர்த்தக நகராக இன்று உருவாகி உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக  உயர்ந்துள்ளது . ஏராளமான கார்களை வாங்கும் மக்கள் நிறைந்த நாடாக மாறியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர் சீனா. அதன் உலகளாவிய பொருளாதாரம் மற்றும்  ராணுவ செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சீனாவின் வளர்ச்சி என்பது ஆண்டொன்றுக்கு 10 வீதத்தால் அதிகரித்து வருகின்றது  என்கின்றனர் வல்லுநர்கள்.
  இவை எல்லாவற்றையும் விட கடன் ! 

இலங்கை சீனாவிடம் கடன் வாங்கியதைப்பற்றி பேசும் நாம் அமெரிக்காவே கடனில்தான் வாழ்ந்து வருகின்றது என்பதை மறந்துவிடுகின்றோம். ஆம் அமெரிக்காவும்  கடன் வாங்குகின்றது. அதுவும் சீனாவிடம்தான் அதிகம் கடன் வாங்கியிருக்கிறது. சீன பொருளாதாரத்தை அமெரிக்கா வீழ்த்த நினைத்தால் அது அமெரிக்காவிற்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கின்றது.

அந்த அளவிற்கு அமெரிக்க சீன பொருளாதாரம் பின்னிப்பிணைந்திருக்கிறது எனலாம். ஆண்டுதோறும் இவ்விரு தரப்பிற்குமிடையே   அறுபதாயிரம் கோடி டாலர்களுக்கு நடக்கும் வர்த்தகம் அதை உறுதிசெய்யும். மேலும் அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்கள் சீனாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்கள் அமெரிக்காவின் வேளாண் பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக சீனா இருப்பது சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கிய நாடாக அமெரிக்கா இருப்பது போன்றவற்றை அமேரிக்கா சீனாவிடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதற்கு காரணம் என குறிப்பிடலாம்.

மேலும் சீனாவில் அமெரிக்கா செய்துவரும் முதலீட்டைவிட அமெரிக்காவில் சீனா செய்துவரும் முதலீடு கடந்த ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ளனவாம். சீனா என்கிற வல்லரசின் வளர்ச்சிக்கு அமெரிக்க வல்லரசு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றது என்பதுதான்  நிதர்சனம். அமெரிக்காவுடன் போட்டிபோட்டுக் கொண்டு ஒவ்வொரு வருடமும் தனது பாதுகாப்புபடைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்குவதுடன் ஆயுதங்களின் தரத்தை உயர்த்துவது, புதுப்புது ராணுவ தளவாடங்களை அறிமுகம் செய்வது என அடுத்தடுத்து தன்னை வளர்த்துக்கொண்டே செல்கிறது சீனா.

சீனாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி அந்நாட்டை மற்றைய துறைகளிலும்  வளர்த்தெடுத்து வருகின்றது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு மையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013ஆம் ஆண்டே ஆய்வு விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு ஏவியது. இதில் பயணித்த சீன விஞ்ஞானிகள் விண்வெளியில் தமது ஆய்வுகளை பதினைந்து நாட்கள் நடாத்திவிட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை பொறுத்தது போலும்,  சீன ரயில்களின் வேகம் மணிக்கு 300_400 km 500km கூட பயணித்து அன்றாடம் வேலைக்கு சென்றுவரும்  மக்கள்கூட சீனாவில்  இருக்கின்றனர். ஏனெனில் அவர்களது பயணநேரம் 500kmக வெறும் இரண்டு மணிநேரமே . இதில் முக்கியமான விடயம் இந்த அதிவேக ரயில்கள் எல்லாமுமே சீனர்கள் வடிவமைத்து தயாரித்தவை ! சொந்த தொழில்நுற்பம் .

எந்த  நாடுகளிலிருந்தும் பேரம்பேசி வாங்கியவவை அல்ல . இதற்கெல்லாம் முக்கியமான அடித்தளம் ஆராச்சிகளை ஊக்குவிப்பது ஆராய்ச்சி படிப்புகளுக்கென்று கடந்த சில ஆண்டுகளில் சீனா செலவழித்த தொகை அளப்பரியது . இப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர் சீனர்கள். அதனால் தான் இன்று அனைத்து  தொழில்களிலும், ஆராய்ச்சிகளிலும், தயாரிப்புகளிலும்   சீனர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்.

குண்டூசி முதல் ஏவுகணைவரை அத்தனையும் சீனர்களின் சொந்த தயாரிப்பு. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அத்தனை எலக்ட்ரானிக் பொருட்களும் சீன தயாரிப்பு. நாமெல்லாம் குடிசை தொழிலாக மிளகாய்  பக்கெற்றுக்களை  போடுவோம் இல்லை பீடி சுற்றுவோம். ஆனால் சீனாவில் குடிசை தொழிலாய் ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்களை செய்வது செல்போன்களை செய்வது என இருக்கிறார்கள்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் தைத்த ஆடைகள் உணவுப்பொருட்கள், வீட்டு  உபயோகப்பொருட்கள், மடிக்கணினிகள் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள்,  பட்டாசுகள்  முதற்கொண்டு அழகுசாதன பொருட்கள்  வரை அத்தனையும் “made in china “ !  உலக நாடுகள் பலவற்றிலும் சீன தயாரிப்புகளை விற்பதற்கென்றே பெரிய பெரிய அங்காடிகளை திறந்துள்ளார் சீனர்கள்  . (நம்முடைய நாட்டின் one galle face சீன அங்காடி  இதற்கு ஒரு உதாரணம்.

விண்வெளி ஆராய்ச்சியா ? ராக்கெட் தயாரிப்பா ? செயற்கை கோள்களா ? ஏவுகணைகளா ? எதுவாக இருந்தாலும் சீனர்கள் அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள். உலக வர்த்தகத்திற்கு ஆங்கிலம் மிகவும் முக்கியமென்பதை உணர்ந்த சீனர்கள் இன்று அதிவேகமாக ஆங்கிலத்தையும் படிக்கின்றார்கள் . கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் அதிகமாக விற்ற புத்தகங்களின்  பட்டியலின் முதலிடத்தில் இருப்பது ஆங்கில டிக்ஷனரி.

மக்களுக்கு சொந்தமாக வீடுகள் , குடிநீர் மின்சாரம் உற்பட அடிப்படை வசதிகள் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் நிறைந்த ஊர்கள் , தரமான சாலைகள் , போக்குவரத்து வசதிகள் , மருத்துவ வசதிகள் , எல்லோர்க்கும் பொதுவான அடிப்படை இலவசகல்வி யாவர்க்கும் பொதுவான சட்டமும் நியாயமான தண்டனைகளும் அனைத்து  விதிகளையும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவது.

விதி மீறல்களுக்கு சரியான தண்டனை , பொது இடத்தில சுத்தம் , திருட்டு வன்முறை போன்றவை நிகழாத   வண்ணம் அடிப்படை பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்  ஊழல் லஞ்சம் போன்றவை இடம்பெறாத வண்ணம் அவதானித்தல் போன்ற சகலமும் பெரும்பாலும் உறுதிசெய்யப்பட்ட ஓர் நாடாக இருக்கும் சீனா இன்று மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது . இது எப்படி சாத்தியமானது ?

ஜப்பான் போன்றதொரு குட்டி  நாட்டிடம் வீழ்ந்துகிடந்த  மூட பழக்கவழக்கங்கள் நிறைந்த  பழமைவாதம் மிகுந்திருந்த சீனாவில் இதெல்லாம் எப்படி சாத்தியமானது ? இந்த கேள்விக்கான விடை மாசேதுங் ! சீனா இந்தியாவைப் போலவே ஒரு பழமையான பிரிவுகள் நிறைந்த பண்ணை அடிமைமுறை நீடித்த ஒரு நாடு. மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயகம் ஏற்பட்டாலும் மக்கள் வாழ்க்கையில் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில்தான் கம்யூனிச தத்துவத்தை வளர்த்தெடுத்து சீனாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மாவோ . சீனாவின் தலைவரான மாவோ சீனாவின் தலையெழுத்தையே  மாற்றினார் . புரட்சியின் தொடர்ச்சியாக கலாசார புரட்சியை மேற்கொண்டு மூட பழக்க வழக்கங்களையும் ஏற்ற தாழ்வுகளையும் களைந்து நாட்டையே புரட்டிப்போட்டார். 50 வருடங்களுக்கு முன்பே வல்லரசு சீனாவிற்கு அடித்தளமிட்டார் .

மாவோவின் இழப்புக்கு பின்னரான சீன தலைவர்கள் கம்யூனிச தத்துவத்தில்  இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கினாலும் சீனாவின் வளர்ச்சி தடைப்படவேயில்லை . சீனாவின் தற்போதைய அதிபரான ஜி ஜிம்பிங்  (Xi Jinping) கம்யூனிச தத்துவதிலிருந்து பெருமளவு விலகி ஒரு வல்லரசுக்கான பண்போடு சீனாவை நிர்வகித்து வருகின்றார் .

எது எப்படியாகிலும் சீனாவின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்தும் அதேவேளை அச்சமூட்டவும் செய்கிறது. ஆபிரிக்காவில் அந்நாடு ஏராளமான முதலீடுகளை செய்து வருகின்றது.பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டிக்கொண்டே பழைய பட்டுப்பாதை திட்டத்தை தூசு தட்டி பெரிய வர்த்தக நடவடிக்கைகளுக்காக திட்டம் வகுக்கிறது . தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்துகிறது.அதுவும் செயற்கை தீவுகளை அமைத்துக்கொண்டு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தன் கடற்படை தளங்களை அமைத்து வருகின்றது. அறுபது வருடங்களுக்கு முன் ஓர் ஏழை தேசமாக இருந்தது.  இன்று உலக நாடுகளையெல்லாம் பிரம்மிக்க பவைத்துள்ள சீனாவின் இந்த செயல்களுக்கெல்லாம் பின்னால்  இருக்கப்போகும் “மாஸ்டர் பிளான்” என்னவாக இருக்கும்?

index.php