2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி Healthier Society (ஆரோக்கியமான சமுதாயம்) தாயாரிப்பில் T.Thuvarakan youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘தொடு வானம்’. இந்தப் பாடல், T.Thuvarakan இனால் இசையமைக்கப்பட்டு Afra Lateeif, Sivathasan Sineka மற்றும் Joseph Benadict Anthony Jerisonஇனால் பாடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Mixing மற்றும் Mastering ஆனது Dilan Perera (Next Generation Music Studio) அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Sunthararajan Dinusha Gayathri இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Cinematography மற்றும் Editing Luxman Kabilesh (Cinevilla photography) அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இப் பாடலின் காணொளியானது, “அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அநியாயங்களும், அழுக்குகளோடும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் தீய சமுதாயத்தை தீயிலிட்டு எரித்து, ஆரோக்கியமான சமுதாயம் ஆணிவேராய் நிலைத்திட அணிதிரண்டு ஆர்பரிப்போம்”
என்ற புரட்சி சிந்தனைமிக்க கவிவரிகளோடு ஆரம்பமாகிறது.
இக்கவிவரிகளை தொடர்ந்து இசை எழ “பொருளால் நிறைந்த பூமி தன்னை, பொத்த காடாக மாற்றுகிறார்!” என பாடலின் வரிகள் பிறக்கிறது. இப் பாடலின் இசையும் வரிகளும் ஆரம்பத்தில் சற்று பிண்ணிப்பிணையாதிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தினாலும் நொடிகள் மெல்ல நகர நகர இசையும் வரிகளும் பிரிக்க முடியாதபடி பிண்ணிப்பிணைந்து கொண்டதை உணர முடிகிறது. பாடல்களுக்கு அழியா புகழும் அசைக்க முடியா கனமும் தருவது அதில் கலந்திருக்கும் உணர்வுகளின் மெய் தன்மை தான். இப்பாடலை பாடியவர்கள் இப்பாடலின் வரிகளோடு வாழ்ந்து விட்டார்கள் என்று கூறுமளவிற்கு உணர்வுபூர்வமான ஒரு படைப்பாக இப்பாடல் மாறி நிற்கிறது.
பாடலுக்கான காணொளி மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள விதமானது கண்களை விட செவிகள் பாடலில் அதிக ஈடுபாட்டினை கொண்டிருக்க அடித்தளமாக அமைகிறது. கடற்கரையில் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள் பாடலின் வரிகளின் வலி மற்றும் கொந்தளிப்புக்கு, ஓயாது கரை மோதி கடல் சென்று மீண்டும் கரை மோதும் அலைகளை எடுத்துக்காட்டாக காண்பிப்பது போன்ற விம்பத்தை ஏற்படுத்துகிறது.
எத்தனை தடைகள் நேர்ந்தாலும் தம் படைப்புகள் மூலமாக பல மனங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டும் உணர்வுபூர்வமான படைப்புகளில் ஒன்றாக இப்பாடலும் இடம்பிடித்துள்ளது என்றால் மிகையாகாது. தற்போது சோர்ந்து இருக்கும் உள்ளங்களை எழுப்பி கரம் கொடுத்து அழைத்து செல்வது போன்ற கருப்பொருளோடு பாடப்பட்டுள்ள இப்பாடலில் “நண்பா நீ விழித்திடு! நம் இருளை அழித்திடு! தொடுவானம் உனக்கடா…! தோல்விகள் எதற்கடா…?” என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. இப்பாடலில் உங்கள் மனதை கவர்ந்த வரிகளை எங்களோடு கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் பதின்மங்களில் என் நெருங்கிய சில உறவுகளினால் எனக்காக சொல்லப்பட்டு நான் கடந்து வந்த உருவ கேலிக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள். பதினேழு பதினெட்டு வயதுகளில் இந்த வார்த்தைகளை கேட்கும்போது மனதுக்குள் ஒருவித அவமானமாக உணர்ந்தபோதிலும் நெருங்கிய உறவுகளை எதிர்த்து பேசமுடியாத மனத்தடங்கல்களினால் மிக இலகுவாக அவற்றை கடக்கப் பழகிவிட்டிருந்தேன். ஆனால் அதே உறவுக்காரர்கள் இருபத்தெட்டு வயதில் என்னை நோக்கி மிக இயல்பாக இதே வார்த்தைகளை பிரயோகித்தபோது நான் மௌனித்திருக்கவில்லை…
அவர்களது முகத்தில் அறைந்தாற்போல் சுரீரென்று பதில் சொல்லியதால் பின்னர் இன்றுவரையில் என்னைக் காணும் உறவுகள் யாரும் மரியாதை குறைவாக இப்படியான வார்த்தைகளை பயன்படுத்துவதனை முற்றிலும் தவிர்த்துக்கொண்டனர் ஆக உருவ கேலி என்பது நமக்குள் சகித்துக்கொண்டு கடந்துபோகக்கூடியவொன்று அல்ல. அது எதிர்த்துப்பேசி தவிர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஓன்று என்கிற விழிப்புணர்விற்காகவே இந்த கட்டுரை.
ஒருவரின் உருவத்தைக் குறிப்பிட்டு கேலி செய்யும் பழக்கம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஒன்றைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். நம் எதிரிகளால், பிடிக்காதவர்களால் செய்யப்படுவதைவிட, நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவுகளுக்குள்தான் இந்த உருவக் கேலி அதிகம் உலா வரும். அதுமட்டுமன்றி கோபமான நேரத்தைவிட, உற்சாகமான நேரத்துக்குள்தான் இது அதிகம் பரவும். உரிமை நட்பு, ஜாலி என்கிற பெயரில் நம்மை அறியாமலேயே `எல்லை மீறி’ இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்திவிடுவோம்.
மனித மனம் மிக மிக நுட்பமானது. மிக மிகப் புதிரானது. எந்தச் சூழ்நிலையில், எந்த நொடியில் ஒரு வார்த்தையை இயல்பாக எடுத்துக்கொள்ளும், மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கணிக்கவே முடியாது. அது புரியாமலே மிகவும் நேசிப்பவர்களை நம்மை அறியாமலே புண்படுத்திக்கொண்டிருப்போம். ஒருநாள் அது வெடிக்கும்போது, உறவு அல்லது நட்புக்குள் மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிடும்.
குழந்தைகளிடம் கூட இவ்வாறான உருவ கேலிகள் மூலம் அவர்களது மனதை நோகடிக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். இவ்வாறான குழந்தைகளின் மீதான உருவ கேலிகளானது அவர்களது தன்னம்பிக்கையைக் குலைத்து அவர்களின் வாழ்வியலையே மாற்றிவிடக்கூடியவை என்பதை யாரும் உணர்வதில்லை. கிண்டலடிப்பதன் வழியே தனக்குத் தடையாக இருக்கும் விஷயத்திலிருந்து வெளியே வர முயலும் குழந்தைகளை மீண்டும் அதற்குள் தள்ளிவிடும் செயலே இது. மாணவர்களுக்கிடையே கூட பட்டப்பெயர் வைத்து அழைப்பதும் உருவக் கேலிகளை அதிகம் பயன்படுத்துவதும் இந்தப் பருவத்தில் அதிக உற்சாகம் தரும். அதைச் சாதாரணமாக கடந்துசெல்லும் மனப்பக்குவமும் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் இருக்காது அல்லவா? சில சமயம், பெரிய சண்டையில்கூட இவை முடிவுறலாம்..!
எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும், மிக உரிமைக்குரிய உறவாக இருந்தாலும், ஒரு கேலி வார்த்தையைச் சொல்லும் முன்பு சில நொடிகள் யோசிப்பது நல்லது. அந்த இடத்தின் சூழலையும் சுற்றியிருப்பவர்களையும் அவதானிப்பதுடன், செல்லமான கேலியாக இருந்தாலும் அதை ஒரு வரம்புக்கு மேலே பயன்படுத்துவது என்பது நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஓன்று.
நட்புக்குள் மட்டுமல்ல, சகோதரங்களுக்குள்ளும் உருவ கேலி, குணநலன் கேலி செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பது நல்லது. வீட்டுக்குள் அப்படி ஒருவரை இன்னொருவர் சொல்லும்போது, விளையாட்டு தானே என்று விடாமல் ஆரம்பத்திலேயே சொல்லி கட்டுப்படுத்துவதென்பது ஓர் ஆரோக்கியமான உறவுக்கு மட்டுமல்ல சிறந்த சமூகத்தினை உருவாக்கவும் உதவும்.
எல்லா காலகட்டங்களிலும் உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாக இடம்பெறுவதும் அவை மிக இலகுவாக கடந்துவரப்படுவதும் ஒருவித நெருடலையே ஏற்படுத்துகின்றதெனலாம். திரைப்படங்கள், பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றிலும் எவ்வித குற்றவுணர்வுகளுமின்றி இவ்வாறான உருவ கேலிகள் காலங்காலமாக இடம்பெற்றுவருகிறதெனலாம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கவுண்டமணி முதல் தற்போதுள்ள நடிகர்கள் வரை பெரும்பாலானவர்கள் உருவ கேலி செய்துள்ளனர்.
ஆனால் 80களின் காலகட்டத்தையும், தற்போதுள்ள காலகட்டத்தையும் ஒப்பிட முடியாது அல்லவா? நாம் நிறைய விடயங்களில் முற்போக்கை நோக்கி நகர்ந்திருக்கிறோம். அவ்வாறு இருக்கும்போது அறமற்ற உருவ கேலிகளை நகைச்சுவை என்ற பெயரில் கலைப் படைப்புகளாக வருவதை எப்படி அனுமதிக்க முடியும். “இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சிரிச்சிட்டு போய்டலாம்” என தோன்றும். ஆனால் உளவியல் ரீதியாக அணுகினால் உண்மையை, அதாவது உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள மறுக்கும், ‘உடலமைப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், இது மட்டும் தான் அழகு’ என்ற பிசகான எண்ணம் இருப்பது புரியும். பெரும்பாலும் மனிதர்களுக்கு படித்தோ, கேட்டோ வரும் எண்ணப் பதிவுகளை விட கண்ணால் பார்க்கும் விஷயங்கள் தான் எளிதாக மனதில் பதியும்.
தற்போதைய சூழலில் நிறைய விஷயங்களில் சினிமாக்களை முன்னோடியாக வைத்துதான் மக்கள் பல செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் திரைத்துறை ஒரு நூலகமாக செயல்படுகிறது என்பது தான் உண்மை. உடல் சார்ந்த ஒரு நகைச்சுவை காட்சியை எழுதி, அதைத் திரையில் கொண்டு வந்து சிரிக்க வைக்க முயலும் போது குறிப்பிட்ட பணியில் இருக்கும் துறை சார்ந்தவர்களுக்கு அது ஒரு வணிகப் பொருள்.
ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, இது போன்ற காட்சிகள் பார்ப்பவர்கள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட உடலமைப்பு உடையவர்களை கிண்டல் செய்து மற்றவர்களின் மனதை கஷ்ட படுத்துகிறார்கள். இதுவும் ஒரு வகையில் சமூக சீர்கேடு தான் இல்லையா? ஒரு சில திரைப்படங்களில் குறிப்பாக பழைய திரைப்படங்களில், நகைச்சுவையை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். நகைச்சுவை நடிகர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள்.
சார்லி சாப்ளின் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆனால் இப்போது சில வருடங்களாகவே இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. நகைச்சுவை நடிகர்கள் மற்றவர்களை கேலி செய்து தன்னை நிரூபித்துக் கொள்வது போல் காட்சி அமைக்கிறார்கள். இது நிச்சயம் மாற வேண்டிய சிந்தனை.
ஒருவரின் உடல் அமைப்பை அவமானப்படுத்துதல் அவர்களுடைய சுயமரியாதையை இழக்க செய்கிறது. இரு பாலினத்திற்கும் மனச்சோர்வு, மன அழுத்தம், பிரச்சனைகள் இருந்தாலும், பெண்களின் மீது இதன் தாக்கம் அதிகம் . உதாரணமாக உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாவது.
ஒருவரை மகிழ வைக்க, நகைச்சுவையாகப் பேசிக்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் ஏன் அடுத்தவரை கேலி செய்வதன் மூலம் ஒருவிதமான குரூர இன்பத்தை அடைய நினைக்கவேண்டும் நாம்?!
நம்மில் அநேகர் வலது கை பழக்கமுடையவராகத்தான் இருப்போம் .ஆனால் சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி’ என்று குறிப்பிடுவார்கள். இது ‘இடது பக்கம் இருப்பது’ என பொருள்படும் ’சினிஸ்டரா’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவானது. நமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் ’மெடுல்லா ஆப்லங்கட்டா’ என மூன்று பகுதிகளை கொண்டுள்ளதுடன் இதில் பெருமூளையில் வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் உண்டு. இந்த இரண்டு பாகங்கள்தான் நம் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலது பக்க மூளை இடது புற உடலையும் இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்தும். நம்மில் பலருக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கையை அதிகம் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளை செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுவதாக இது பற்றிய ஆய்வுகள் கூறுகின்றன . இது மிகவும் இயல்பானது.
பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் நலம் சார்ந்து அவர்களின் வசதிக்கு ஏற்ப எந்த பொருளும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. வலது கை பயனாளிகளின் மனநிலைக்கு ஏற்பவே அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் அனைத்துமே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். எழுதுதல் வாகனம் ஓட்டுதல், கணினி பாவனை முதல் அன்றாடம் வீட்டுத் தாழ்ப்பாள் திறப்பது வரை அவர்களின் இயல்புக்கு மாறான செயலாகத்தான் இருக்கின்றன.
இந்த சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த ‘சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம்’ 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களின் செயல்திறன் குறைந்துபோவதாக கூறப்படுகின்றது .
இடது கைப் பழக்கம் உள்ளவர்களால், பலதரப்பட்ட பணிகளை (Multi tasking) ஒரே நேரத்தில் செய்ய முடியுமாதலால் கட்டாயப்படுத்தி அவர்களின் பழக்கத்தை மாற்றத்தேவையில்லை எனப்படுகின்றது . இடது கை பழக்கம் உடைய மக்கள் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளனர் என வரலாறு கூறுகிறது.அறிவார்ந்த விடயங்களில் இதுவரை வரலாற்றை புரட்டிபோட்ட பல நபர்களும் இடது கையர்களே என்பதும் கவனிக்கத்தக்கது.
அரிஸ்டாட்டில், லியோனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டின், நியூட்டன் ,நெப்போலியன், பில் கேட்ஸ், மேரி கியூரி ,மைக்கிலாஞ்சலோ ,ஒபாமா, அன்னை தெரசா, சச்சின் டெண்டுல்கர் ,மார்க் ஸுக்கர்பேர்க், சார்லி சாப்ளின், வால்ட் டிஸ்னி, ரொனால்டு ரீகன், மகாத்மா காந்தி, பெஞ்சமின் பிராங்க்ளின்என இடது கை பழக்கமுடையோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லக்கூடியது.
தோள் கொடுத்ததும் நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும் உழைத்து காத்ததும் போதும் போதுமிவையெல்லாம் காது கொடுங்கள் செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள் கண் துடைத்து விடுங்கள்!
காலங்காலமாய் கலாசாரங்காக்க பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும் அவள் சீவி! சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்! அடிமையோ அகதியோ அல்லள் அக்கினிக் கங்கு!
அவள் வானத்தை அவள் கண்களின் நிர்வாணப் பார்வைக்கு விட்டு விடுங்கள் வண்ணமடிப்பதென்றால் அவள் சிறகால் அவளே தீட்டிக் கொள்ளட்டும் கட்டி வைக்காதீர் – அவர் சிறகுகளை உம் உறவுகளால்!
அவர்களில் சுதந்திரம் உங்கள் கைகளில் தானே அகப்பட்டுத் தவிக்கிறது அது அந்தக்குறுவியின் சுதந்திரம் உங்களின் கூடுகளுக்கு சொந்தமில்லையது மெல்லமாய் திறந்து விடுங்கள் பறந்து சென்றந்த வண்ணாத்தி வானவில்லில் அமரட்டும்!
தீட்டென ஒதுக்கவோ தீண்டாமையுள் நடத்தவோ அவள் உங்களின் அடி சுரண்டி அக்கறைக்கேங்கும் அனாதையில்லை தன் சுயத்தை தானாய் அடைகாத்து ஈனும் பெரும்புறா!
அனுமதி வழங்க அவர் உங்கள் ஆட்சியுள் அடங்கியவரும் இல்லை நீங்கள் பேரரச பெருந்தகையும் இல்லை அனுமதிப்பது என்பது ஆண்மையில்லை ஆதிக்கம் செலுத்தாமையே ஆண்மை!
உங்களுக்கு முன் அவள் ஓடி அடைந்தால் அசூயை கொண்டு நாணத் தேவையில்லை அவள் உங்களைக் காட்டிலும் உழைத்திருக்கிறாள் நீங்களும் பயிற்சி செய்யுங்கள் தோல்வியை ஏற்று ஓடிய அவள் பாதங்களை முத்தமிடுங்கள்!
கதைசொல்லுமவர் கலை மதியுங்கள் முட்களை அகற்றி பாதை அமையுங்கள் நீங்கள் ஒதுங்கியிருந்தாலும் அவள் பாதையமைத்துக் கொள்வாள் புது முட்களை பூவென்ற பெயரில் தூவ வேண்டாம்
மூடர் தம் கூட்டம் சேர்ந்து புனிதப்பொருளாகவோ தெய்வப் பிறப்பாகவோ பெண்ணை நீர் பார்க்கத் தேவையில்லை மனிதியாய் அரவணைத்துக் கொள்ளுங்கள்!
பெண்ணெனப்பட்டவள் கருத்தியல் அல்ல சமூகத்தின் சம கரு! சமூக பிராணிகளே அவள் அவளுக்காக வாழட்டும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்!
‘வீடு பெண்ணுக்கு நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல்‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சராசரி பெண்கள் பலர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
இதையும் தாண்டி அரசியலில் ஈடுபட்டு தேர்தல் களம் கண்டு அமைச்சர்களாகவும் நாட்டைக் கட்டிக்காக்கும் தலைவர்களாகவும் ஜனாதிபதிகளாக பிரதமர்களாக என பல்வேறு முக்கிய பொறுப்புக்களை, பதவிகளை பெண்கள் வகித்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலக அளவில் உள்ள பெண்களின் மொத்த விகிதாசாரத்தில் எத்தனைபேர் இப்படி அரசியலினுள் கோலோச்சியிருக்கின்றனர்? அல்லது அப்படியே அரசியல் பிரவேசம் செய்யும் பெண்களில் எத்தனை பேருக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படுகின்றன?
கீழைத்தேயங்களைப் பொறுத்தவரையில் முக்கிய கட்சிப் பதவிகள் பெண்களுக்கு கொடுக்கப் படுவதும் அரிது. பெண் வாக்காளர்களை கவர பெண் தலைவர்கள் தேவைப்பட்டாலும் பெண்கள் பெரிய அளவில் தனிப்பட்ட புகழ் அடைவது மிகவும் அரிது.இலங்கையிலும்கூட மிகச் சிறந்த பெண் அரசியல் தலைவர்களை கடந்து வந்திருக்கிறோம், என்றாலுமே ஏன் நிலைமை இன்னும் பெரிய அளவில் மாறாமல் இருக்கிறது?
1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றுவரையில் 6.5ஐ இதுவரைத் தாண்டியதில்லை!
உளவியல் ரீதியாக பார்க்கும் போது, சமூகம் சார்ந்த பொதுவான அணுகுமுறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேற்றுமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது விளங்குகிறது. சில ஆராய்ச்சியின்படி பெண்கள், ஆண்களை விட ‘தனித்துவமான அடையாளம்’ என்ற வகையில் பின்தங்கி உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாம்.
ஆண்கள் இளம்பிராயம் முதலே தனக்கான சுயகௌரவம், தன்னை முன்னிலைப் படுத்துதல், போட்டி மனப்பான்மையுடன் விளங்குதல், தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றில் ஈடுபாட்டுடன் வளர்க்கப்படுவதாகவும் பெண்களை பொறுத்தவரை உறவுகளை முதன்மையாகக் கருதி மாறுபட்ட முரணான (conflicting) பொறுப்புகளை திறம்பட கையாள்வதே முக்கியம் என்பதாக என்பதாக வளர்க்கப்படுவதாகவும் அந்த ஆராச்சிகள் குறிப்பிடுகின்றனவாம்.
ஆண்களைப் போல பெண்களால், அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை ஒருசேர நன்றாக வைத்துக்கொள்ள முடியாது என்கிற கருத்தும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே. ஏனெனில், ஒரு ஆண் முழுநேர அரசியலில் ஈடுபடுகையில் பெண்ணானவள் குடும்பத்தை நிர்வகித்துக்கொள்ளுவாள் எந்த குற்றச்சாட்டிகளுமின்றி. ஆனால் இதே ஒரு பெண் அரசியலில் ஈடுபடுவாளாயின் அவளுக்கு அவளது குடும்பம் எந்த அளவிற்கு அனுசரணையாக இருக்கும் என்பதனை கூறமுடியாது.இதனாலேயே அரசியலில் இருந்தால் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள முடியாது என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர்.
அரசியல் வாரிசுகளாக இல்லாமல் அடிப்படை உறுப்பினராக இருந்து முன்னேறும் பெண்களுக்கு கள அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை, பொருளாதாரம் என எண்ணற்ற தடைகள் உள்ளன.அதுமட்டுமன்றி ஒழுக்க விதிகளின் அடிப்படையில் பெண்கள் மீது விழும் குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் பெண்களை அரசியல் பேசுவது மற்றும் அரசியலில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது என்றும் கூறவேண்டும்.
இது ஒருபக்கம் என்றால் எல்லா துறைகளிலும் இருப்பது போல அரசியலிலும் பாலியல் தொந்தரவுகள் அதிகம். சினிமா என்கிற துறையைவிடவும் அரசியலில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் அதிகம் என்கிற குற்றச்சாட்டுகளைப் பெருமளவில் அவதானிக்கமுடியும். இப்படிப்பட்ட பாலியல் தொந்தரவுகளால் சத்தம் இல்லாமல் அரசியலைவிட்டே விலகிய பல பெண்கள்இருக்கிறார்கள். இந்த பாலியல் தொந்தரவுகளை எதிர்த்து வெற்றிபெறும் பெண்கள்தான் தொடர்ந்து அரசியலில் நீடிக்கிறர்கள்.
இதுதான் யதார்த்தம்.மேலும் ஆண்கள் அதிகமாக புழங்கக்கூடிய இடங்களில் முக்கியமானது அரசியல். ஊழல், கொள்ளை போன்ற மோசமான குற்றங்கள் அதிகம் நடக்கக்கூடிய இடமாகவும் அரசியல் களம் இருக்கிறது. அதனாலேயே பெண்கள் அரசியலில் வர விரும்பினால் அது பணம் மற்றும் புகழுக்காக என பார்க்கப்படுகிறது. மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய நினைப்பவர்கள் இப்போது இருக்கிறார்களா என்கிற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கின்ற நிலையில் அப்படி ஓன்றிரண்டு பேர் இருந்தாலும் அவர்களையும் நம்பமுடியாத சூழல் உள்ளது என்பதனால் அரசியலில் பெண்களின் வகிபாகம் இந்த இடத்திலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகின்றது என்பதே உண்மை.
இப்படிப்பட்ட ஈடுபாடு மற்றும் தார்மீக ரீதியான அணுகுமுறையில் உள்ள மாற்றங்கள் தான் வீடு முதல் அரசியல் வரை ஆண்-பெண் இடையிலான வேற்றுமைக்கும் பாகுபாட்டிற்கும் அடித்தளம் இடுவதாக கருதப்படுகின்றது. இங்கே நான் இன்னுமோர் விடயமதனையும் குறிப்பிட விரும்புகின்றேன் பெண்களாகிய நாமும் நம்முடைய நிலைமைக்கு இன்னுமே அடுத்தவரை காரணம்காட்டிக்கொண்டிராது நாமும் நமது நிலைமையை மாற்றிக்கொள்ள முயலவேண்டும் அனைத்து விடயங்களிலும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றியும், ஆடை அலங்காரங்கள் பற்றியும் அன்றாட வீட்டு வேலைகள் பற்றியுமே சிலாகித்து திரியும் நாம், நம் வீடுகளில் அரசியல் பேச வேண்டும். பணியிடங்களில், நண்பர்களோடு உரையாடுகையில் நாட்டின் சூழலை, அரசியலை கலந்து ஆலோசிக்க பெண்களாகிய நாம் முன்வரவேண்டும் . இவ்வாறு பேசும்போது அரசியல் நிலைமை பற்றிய சுயமான, தீர்க்கமான ஒரு தெளிவு நமக்கு கிட்டக்கூடும்.
பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க பெண் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியம். வாரிசுகள் அல்லாத கணவரோ அப்பாவோ நிழலாக செயல்படாத தனி பெண் ஆளுமைகள் உருவாகுதல் என்பது மிக மிக அவசியம். அவர்களால் மட்டும்தான் பெண்களுக்காக சிந்திக்க முடியும். அப்படி உருவாக வேண்டுமானால் பெண்கள் முதலில் சகஜமாக அரசியல் பேச வேண்டும்.
சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய் மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும் அளவிற்கு கடுப்பேற்றுகின்றது என்பதே யதார்த்தம். பெண்கள் தங்களின் உரிமைக்கான போராட்டத்தை உருவாக்கிய நாள், மொத்த உலக நாடுகளும் திரும்பி பார்த்த மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட நாள், முதலாளிகளின் அடக்குமுறையை, தொழிலாளி வர்க்கம் உடைத்தெறிந்த நாள்தான் இந்த உலக மகளிர்தினம்.
150 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலவரையற்ற நிலையில் பெண்களுக்கு ஓய்வே இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை இருந்ததையும் இதனால் 20 வயதான மேரி என்ற இளம் பெண் தொழிலாளி இறந்து போன சம்பவத்தின் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிவகுத்தது. உண்மையில் மார்ச்-8 என்பது வெறும் உலக மகளிர் தினமல்ல அதனை சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்றே நாம் போற்ற வேண்டும்.
காரணம் 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நுற்றுக்கணக்கான பஞ்சாலை தையல் ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் உழைத்து வந்தனர். 12 முதல் 14 மணிநேரம் வரை உழைத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். ஒரு நிமிடம் தாமதித்தால்கூட பெண்கள் வேலையை இழக்கும் சூழலினால் குழந்தைகளுக்கு பாலூட்டும் உரிமைகள்கூட அன்று இருக்கவில்லை. இத்தகைய முதலாளியத்தின் சுரண்டலுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெண்கள் வேலையை புறக்கணித்து வீதிக்கு வந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை, எட்டுமணி நேர வேலை, சம ஊதியம், பால் கொடுக்கும் உரிமை, குழந்தைகள் காப்பகம், வேலைக்கேற்ற ஓய்வு ஆகிய கோரிக்கைகள் ஐரோப்பிய, அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் வெடித்தெழுந்தன.
அதேசமயம், முதல் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் யுத்தத்திற்கு எதிராக அணிதிரண்டனர். “யுத்தம் வேண்டாம், ரொட்டியும், அமைதியும் வேண்டும்“ என வீதிதோறும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.இறுதியில் 1912ல் நியூயார்க் நகர வீதிகளில் 20,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றபோது , அமெரிக்க அரசின் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி காயமுற்று பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் உச்சத்தை எட்டியபோதும் தொழிலாளர்கள் பின்வாங்காமல் தங்களது கோரிக்கையை முன்னெடுத்ததன் விளைவால் , பிரட்டிஷ் கவுன்சில் கோரிக்கையை ஏற்று எட்டுமணி நேரத்தை வேலை நேரமாக சட்டமாக்கியது.
இப்போராட்டத்தை வழிநடத்திய ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சின் தலைமைத் தோழர் கிளாரா ஜெட்கின் மார்ச்-8 என்பதை உழைக்கும் பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதை கோரினார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா எனும் கம்யூனிஸ்ட் பெண் கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . உண்மையில் இதுவோர் கொண்டாட்ட நாள் அல்ல பலரின் தியாகங்களை, நமது உரிமைகளில் வெற்றிபெற்றதை நினைவூட்டும் நாள் நாம் நமது உரிமைக்காக போராடுவதை உணர்த்தும் நாள்
பணியிடம், பொது வெளி, குடும்பம் என்ற மூன்று தளங்களிலும் உழைப்புச் சுரண்டலுக்கும் , சமத்துவமின்மைக்கும் எதிராகப் போராட உழைக்கும் இந்த பெண்களுக்கேயுரிய நாளில் ஒவ்வொரு பெண்ணுமே உறுதியோடு ஒவ்வொரு ஆண்டும் சிறு முன்னேற்றத்தையாவது அடைய வேட்கை கொள்ள வேண்டும் என்பதே உண்மையான மகளிர் தினத்திற்கான அர்த்தம் ஆகும் .
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி ஐங்கரன் கதிர்காமநாதன் தாயாரிப்பில் “Ceylon Pictures” யூடியூப் தளத்தில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளியான குறும்படம் தான் ‘சாம் சூசைட் பண்ண போறான்’.
இந்த படத்திற்கு ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்து, பிரணவன் இசை அமைத்து, ரெ. துவாரகன் பாடல் வரிகள் எழுதி பு. பிரணவன் மற்றும் தீபிகா துவாரகன் ஆகியோரால் பாடப்பட்டது. நிவேதிகன், அஞ்சலி ஹர்ஷனி முக்கிய வேடத்தில் நடிக்க, பல துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.
யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த குறும்படம் ஆறு நாட்களில் 38,000 க்கு மேற்பட்ட பார்வையாளர்களை எட்டியதோடு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்படி 20 நிமிடம் போனதென்றே தெரியவில்லை அந்த அளவிற்கு அருமையான ஓர் படைப்பு. “இது ஓர் உலகத்தரம் வாய்ந்த உள்ளூர் உற்பத்தி என்றே கூறலாம்” இது போன்ற பல்வேறு பட்ட சிறந்த கருத்துக்களைப் பார்வையாளர்கள் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு எளிமையான கருத்து. அதை எடுத்து காதலும், நகைச்சுவையும், விறுவிறுப்பும் கலந்து மண்ணின் தன்மை மாறாமல் காட்சிப்படுத்தி இருப்பது படத்தின் ப்ளஸ் ஆகும். பட இயக்குனரும் இசையமைப்பாளரும் வேற லெவல் வேலைப்பாடு செய்துள்ளனர்.
எம் ஜீ ஆர் பாட்டோடு ஆரம்பித்த விதம், கதை, நடிப்பு, இசை, களம், கெமரா வேலைப்பாடு, பாடல் வரிகள், Bgm இப்படி எல்லாமே பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். அதுக்கு மேலாக நடித்து இருந்த எல்லாருடைய அர்ப்பணிப்பும் சிறப்பா அமைந்துள்ளது. சொல்ல வந்த விடயத்தை அருமையாக கதையில் சித்தரித்துள்ளார்கள், தேவை இல்லாமல் மிகையாக எதையும் காட்சிப் படுத்தப்படவில்லை.
யாரு சாமி அந்த கண்ணாடி கதாப்பாத்திரம்? கதைத் திருப்பத்தின் நாயகன் என்றே சொல்லலாம் இவரை. ஒழுங்கா காது கேட்காத இவரால் இவரது நண்பனின் காதல் கடைசியில் ஒன்று சேர்ந்து விட்டது. நடிகர்களின் நடிப்பு யதார்த்தமாக உள்ளது. குழுப்பணி பெரிதும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு மகத்தானது.
ட்ரோன் காட்சிகள் ஒளிப்பதிவுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. அருமையான நகைச்சுவைப்படம் என்பதையும்மீறி மக்களின் வாழ்வியலையும் கூட அழகாக சித்தரிப்பது மனதில் நின்று நிலைக்கிறது. அந்த ஊரின் மண்மணத்தை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். 20 நிமிடமும் காட்சிக்கு காட்சி யாழ்ப்பாணத்தின் அழகும் தமிழும் அழகாக வந்திருக்கிறது. படத்தில் மிக சாதரணமாக யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் பேசி நடித்திருப்பது ரசிக்கும் படியாக இருக்கிறது.
“உனைக் காணா உயிர் நோகுதே
உனைக் காண மனம் ஏங்குதே
உயிர் விட்டு போகும் போது மனம் செத்து தானே போச்சு
என விட்டு நீயும் போனால் உசிர் சுக்குநூறா ஆச்சு
எனை ஏன் தனியே தீயில் வைத்தாய்
இதயம் கொய்தே துயரம் தந்தாய்” என்ற பாடல் வரிகளும், பாடல் பாடியவர்களின் குரலும், மெய்சிலிர்க்க வைத்த இசையும் நிச்சயம் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
ஒரு சில பேச்சு வழக்கு கெட்ட வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம் மற்றும் நடிகையின் பேச்சுத் தமிழில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
இலங்கையில் இந்த அளவுக்கு அருமையான படைப்பை படமாக எடுத்ததே பெரிய விஷயம் இது தான் நடக்கப் போகுது என்று தெரிந்தாலும். அதை ஒரு பரபரப்பாக எடுத்து இருக்கிறார். 20 நிமிடமான இந்த படத்தை பெரிய திரையில் 2 மணி நேர படமாக மெருகேற்றி வர வாழ்த்துக்கள்! இந்திய சினிமா சாயல் இன்றி எங்களுடைய தனித்துவ திரைப்படமா இப்படம் வர வேண்டும்.
மனநிறைவான இந்தப் படைப்பில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. அடுத்து அடுத்து சிறந்த படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
நீங்களும் இந்தப் குறும்படத்தை முழுதாக பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவத்தினை கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் அதே நேரம் படம் பிடித்திருந்தால் மற்றவர்களிடம் பகிருங்கள்.
‘மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்’
‘வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000 ரூபா வெறும் ஒரு கண் துடைப்புத்;தான். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எம்மை வெகுவாக பாதித்துள்ளது. அந்தத் தொகையை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் பெறியியல் கற்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கும் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த யதுர்ஷன் என்ற மாணவன் தெரிவித்தார்.
அதேபோன்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இரண்டாம் வருடத்தில் கல்வியைத் தொடர்ந்து வரும், புத்தளம் பிரதேசத்தினைச் சேர்ந்த நிஷ்பா என்ற மாணவி ‘எங்களுக்கு கிடைக்கும் பணம் போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது மிக மிக குறைவான தொகை. அதனை அதிகரிக்குமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் தற்போது வரையில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக இல்லை’ என்றார்.
1981 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மஹாபொலஊக்கத்தொகையைப் பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைமைகளும் கோரிக்கைகளும் மேற்கண்டவாறு தொடர்கதையாகவே இருக்கின்றது.
மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம், வருமானம் குறைந்த குடும்பப் பின்னணியை உடைய மாணவர்கள் தமது உயர் கல்வியை பல்கலைக்கழத்தில் தொடரும் காலத்தில் அவர்களுக்காக வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான நிதியைக் கையாளும் நிறுவனமாகின்றது.
இந்த, மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக மௌனம் காத்துவருகின்றது. இந்நிலைக்கு குறித்த நிதியத்திற்கான நிதியளிப்புக்கள் போதைமையாக உள்ளதா என்பது தொடர்பில் கட்டுரையாளரால் ஆராயப்பட்டது.
அதன்போது, மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளமையே காரணமாக இருப்பதாக அந்நிதியத்தில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரமுள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவருடைய கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவாது (ஊழுPநு) மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தியத்தில் நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளது என்பதை தனது ஆய்வில் கண்றிந்துள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி.சரித்த ஹேரத் ‘இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கமைய என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டபோது கணக்கீட்டில் பல்வேறு குழறுபடிகள் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
அத்துடன், ‘குறித்த கணக்கெடுப்புக் கருத்துரைக்கான அடிப்படையை வழங்குவதன் நிமித்தம் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுக்கான சாட்சியங்கள் போதுமானவை மற்றும் பொருத்தமானவைகளென நான் நம்புகின்றேன். ஆகவே கணக்கில் காட்டப்பட வேண்டிய நிதிக்கு குறித்த தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதேநேரம், மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் காணப்படுகின்ற நிதி மோடிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக கட்டுரையாளரால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்களின் போதும் கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாக வைத்து குறித்த நிதி மோசடி விடயம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில், மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் முழு உரிமையுடைய துணைக் கம்பனிகளான நெஷனல் வெல்த் கோப்பரேஷன் மற்றும் நெட்வெல்த் சிகியுரிட்டீஸ் ஆகிய கம்பனிகளுடன் ஒன்றிணைந்த நிதிக் கூற்றுக்கள் 2013 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரை தயாரிக்கப்பட்டு கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அதற்கான காரணத்தினை மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கவில்லை.
அத்துடன், 2005 ஆம் ஆண்டில் 12 மில்லியன் (12,460,179ரூபா) ரூபாவு பெறுமதியென கணக்கு வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான மாலபே இல் அமைந்துள்ள 25 ஏக்கர் காணியை மீளாய்வாண்டிலும் நிகழ்காலப் பெறுமதிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை அதற்கான காரணத்தினை கோரியபோது, நம்பிக்கை நிதியம் ‘பதிலளிக்க முடியாது’ என்று கூறிவிட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி நிதியத்தின்; பிரகாரம் 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் இலாபத்தில் நம்பிக்கை நிதியத்திற்குரிய இலாபப் பங்கு ஏறத்தள ஒரு பில்லியனை விட (1,305,156,751.50ரூபா) அதிகமாக இருந்தாலும் நிதிக் கூற்றுக்களில் அது 1,262,598,395 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையினால் சுமார் 42 மில்லியன் ரூபா (42,558,356ரூபா) குறைவாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தினால் அறிவிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் 2020 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவை இலாபப் பங்கு 262,149,615 ரூபாவாக இருந்தபோதும் நிதிக் கூற்றுக்களில் அத்தொகை 109,302,245 ரூபா எனக்குறிப்பிடப்பட்டு 152,847,370 ரூபா மறைக்கப்பட்டுள்ளது.
மீளாய்வாண்டுடன் தொடர்பாக நிலையான வைப்புக்களுக்கான வட்டி வருமானம் 296,318,766 ரூபாவாக இருந்போதிலும் நிதியத்தினால் நிதிக்கூற்றுக்களில் 287,876,625 ரூபாவாகக் குறிப்பிடப்பட்டு 8,442,141 ரூபா குறைவாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மஹபொல நம்பிக்கை நிதியத்திற்கு 985,500,070 ரூபா பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள நெஷனல் வெல்த் கோப்பரேஷன் கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனியான மத்திய வங்கியின் முதனிலை கொள்வனவாளராக நடவடிக்கை மேற்கொண்ட நெட்வெல்த் சிகியுரீட்டீஸ் கம்பனி தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமை காரணமாக அதனைக் கலைத்து விட வேண்டுமென 2020 நவம்பரில் அமைச்சரவை நிருபத்தின் ஊடாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி ஊழியர்களின் சேவையை முடிவுறுத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கம்பனி சம்பந்தமாக நீதிமன்றங்களில் காணப்படும் வழக்குகள் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஊழல் மற்றும் மோசடிகள் சம்பந்தமாக காணப்படும் முறைப்பாடுகள் முடிவுறுத்தப்படும் வரை கம்பனியை கலைப்பதனைத் தற்காலிகமாக நிறுத்துமாறு 2021 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற பொது முயற்சிகள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அங்கு நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் கலைத்தல் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டது. அதற்கமைய கலைத்து விடுபவரை நியமிக்கும் அலுவல்கள் நிறுத்தப்பட்டது.
எனினும், நெஷனல் வெல்த் கோப்பரேஷன் கம்பனி மற்றும் நெட்வெல்த் சிகியுரீட்டீஸ் கம்பனி தொடர்பான தற்போதைய பெறுமதியைக் கணக்கிடுவதற்காக கணக்காய்வொன்று தனியார் நிறுவனமொன்றினூடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதற்காக கட்டணமாக 3,769,451 ரூபாவும், சட்ட அலுவல்களுக்கான கட்டணமாக 1,744,249 ரூபாவும் மற்றும் கலைத்துவிடல் கட்டணமாக 60,000 ரூபாவும் அந்தக் கம்பனியினால் செலுத்த வேண்டியிருந்தாலும் அத் தொகைகள், மீளாய்வாண்டில் நம்பிக்கை நிதியத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிதியத்தினால் அத் தொகையை கிடைக்கப்பெற வேண்டிய தொகையாக கணக்கு வைத்திருந்தாலும் அந்தக் கம்பனிக்கணக்குகளில் செலுத்த வேண்டிய செலவொன்றாக கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.
மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம் குறித்து கவனம் செலுத்தியுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறித்த நிதியத்தில் உள்ள கணக்கீட்டு குறைபாடுகள் பற்றி கலந்துரையாடி, கடந்த 2020 ஆண்டின் கணக்கீட்டு அறிக்கைகள் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கைகளின் படி மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியத்திற்கு முனைப்பழியுள்ள அபிப்ராயம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மஹபொல உயர்கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதியம் அதுதொடர்பில் தற்போது வரையில் வெளிப்படைத்தன்மையுடனான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. கட்டுரையாளரால் அதுபற்றி விபரங்கள் கோரப்பட்டபோதும், அவற்றை வெளியிடமுடியாதென்றும் தவறுகள் இடம்பெறவில்லை என்றுமே கூறப்பட்டுள்ளது.
சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தான் மரணதண்டனையை நிறைவேற்றும் வகையில் கையொப்பமிடப்போவதில்லை என சட்டமா அதிபரினூடாக அறிவித்துள்ளமையானது இலங்கையில் மரணதண்டனை பற்றிய கண்ணோட்டம் என்ன என்பது பற்றி சற்று ஆராயத்தூண்டியது.
யானையால் மிதித்துக் கொல்லப்படும் மரணதண்டனை
புராதன காலம்தொட்டே இலங்கையில் வெவ்வேறு வகையிலான மரணதண்டனை முறைமைகள் இருந்தபோதிலும் புத்தரது போதனைகளினால் ஈர்க்கப்பட்ட பல இலங்கை அரசர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் மரணதண்டனையினை நிராகரித்துள்ளனர். அந்தவகையில், கி.பி முதலாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட “அமந்த காமினி அபய”, மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட “வொஹாரிக திஸ்ஸ”, நான்காம் நூற்றாண்டின் இலங்கை மன்னன் “ஸ்ரீ சங்கபோதி” மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டில்
இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். (ஆயினும் களனி திஸ்ஸ, தாதுசேன, காசியப்பன் போன்றோர் இந்த தண்டனைமுறையை இறுக்கமாக கைகொண்டவர்கள்).
1681ஆம் ஆண்டு குற்றவாளியொருவர் யானையால் மிதித்துக் கொல்லப்படும் காட்சியை இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வரலாற்றுப் பயணியான “ராபர்ட் நொக்ஸ்” என்பவர் பதிவு செய்துள்ளார்.
ஆளுநர் பிரெடரிக் நோர்த்
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285வது பிரிவின்படி, மரண தண்டனையும் உள்ளடக்கியதாக இருந்தபோதிலும், கொடூரமான முறைகளில் மரணதண்டனை விதிக்கப்படுவது தடை செய்யப்பட்டு, அப்போதைய இலங்கை ஆளுநரான பிரெடரிக் நோர்த்தினால் தூக்கிலிடும் முறை அமுல்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களிலும், கோட்டைகளிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 1871ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையிலும், அதனைத் தொடர்ந்து கண்டி போகம்பறை சிறையிலும் தூக்குமேடைகள் அமைக்கப்பட்டன.
SWRD பண்டாரநாயக்க
சுதந்திரத்திற்குப்பின்னும் இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் தூக்குத்தண்டனை முறைமை அமுலில் இருந்தபோதிலும் 1956இல் பிரதமராக ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கவினால் மரணதண்டனை இல்லாமலாக்கப்பட்டது. எனினும் அவரது படுகொலையினைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு மீண்டும் மரணதண்டனை அமுல்படுத்தப்பட்டது. எனினும் இத்தகைய தண்டனைகளுக்கெதிராக உலகம் பூராவும் வலுப்பெற்றிருந்த எதிர்ப்புக்கள் காரணமாக 1976ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி மரணதண்டனை தொடர்பான சட்டக்கோவையில் ஏற்படுத்திய திருத்தங்களின் பிரகாரம், வழக்கினை விசாரிக்கும் நீதிபதி , சட்டமா அதிபர் , நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன் ஜனாதிபதியின் ஒப்புதலும் அவசியமாக்கப்பட்டது.
இறுதியாக 23.06.1976 அன்று J.M சந்திரதாச (வெலிக்கடை சிறை) என்பவருக்கே மரணதண்டனை நிறைவேற்றபட்டது என்பதுடன், 1978ஆம் ஆண்டிற்குப் பின் ஆட்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதிகள் எவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான தீர்ப்புக்களை செயற்படுத்தும்வகையில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். எனினும், மரணதண்டனைக்கெதிரான பலத்த எதிர்ப்புக்கள் இருந்துவருகின்றபோதிலும் சட்டக்கோவையில் மரணதண்டனை இன்னுமே நீக்கப்படவில்லை என்பதால், இலங்கை சிறைகளில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட மரணதண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இலங்கையின் தூக்கிலிடும் வரலாற்றில் “மறு சிறா” என்றழைக்கப்படும் டி .ஜெ சிறிபால என்பவரது மரணம் இன்றுவரையில் சர்ச்சைக்குள்ளானதொன்று.
‘மறு சிறா’ என்ற – டி .ஜெ சிறிபால கைது
ஏனெனில் மிகவும் இளவயதினரான இந்த குற்றவாளி மூன்றுமுறை சிறையிலிருந்து தப்பித்தமையினால், மீண்டும் தப்பித்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் சிறைக்காவலர்களால் அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திலுள்ள நிலையில் கண்டி போகம்பர சிறைச்சாலையில் வைத்து தூக்கில் இடப்பட்டமையானது மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது அப்போது. இன்றும் அவரது மனைவி தன்னுடைய கணவர் ஏற்கனவே கொல்லப்பட்டே தூக்கிலிடப்பட்டதாக குற்றம் சுமத்தும் வீடியோக்களை கண்ணீர் விடும் புகைப்படங்களை இணையத்தில் காணக்கூடியதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இலங்கையில் தூக்குத்தண்டனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், குற்றவாளியை தூக்கிலிடும் நபரை அதாவது மரணதண்டனை கைதியின் தலையை கறுப்புத்துணியினால் மூடி தூக்குக்கயிற்றில் நுழைத்து குறிப்பிட்ட தண்டனையை நிறைவேற்றுபவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் அலுகோசு. உண்மையில் அலுகோசு என்பது, சுமார் 15ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குள் நுழைந்த போர்த்துக்கீசரின் போர்த்துக்கீச மொழிச் சொல்லேயாகும். போர்த்துக்கீசிய மொழியின் Algoz (மரணசாசனத்தின் சரத்துக்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றவர்) என்ற சொல் காலப்போக்கில் Alugosu என மருவி அந்தச்சொல்லே சிங்களத்திலும் தமிழிலும் அலுகோசு என்றானது.
மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருந்தாலும், உலக மக்கள் தொகையில் 60%க்கும் அதிகமானோர் மரண தண்டனை தக்கவைத்துள்ள நாடுகளில் வாழ்கின்றனர்.
அதாவது சீனா இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் இலங்கை.மற்றைய நாடுகளைப்போலல்லாது மரண தண்டனையின் எண்ணிக்கையை ரகசியமாக வைத்திருக்கும் ஓர் நாடு சீனா என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மரண தண்டனை வழங்குவது நடப்பில் இருந்தாலும், பத்து வருடங்களாக யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படாமல் இருந்தால் அவை “மரண தண்டனை ஒழிப்பு நடைமுறையில் இருக்கும் நாடுகள்” என்று அழைக்கப்படும் எனவும் பொதுவாக கருதப்படுகின்றது.
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி Prabath G மற்றும் Mirun Pradhap இனால் Prabath G youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘மலையகன்’. இந்தப் பாடல், Mirun Pradhap இனால் இசையமைக்கப்பட்டு Prabath G மற்றும் Mirun Pradhap இனால் பாடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Mixing மற்றும் Mastering உம் Mirun Pradhap அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Prabath G இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான Illustration மற்றும் Animation ஆனது Thamara Nadun Sumanasekara இனால் உருவாக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக தொடர்ந்து வரும் மலையக மக்களின் அவலங்களை மூன்று நிமிட பாடலில் தெளிவாக விளக்கியுள்ளனர். இப் பாடலுக்கான காணொளியானது “இலங்கை வாழ் மலையக மக்களின் 200 வருட அர்ப்பணிப்புக்கு இப்பாடல் சமர்ப்பணம்.” என்ற வரிகளுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து திரையில் தோன்றுகின்ற சோர்ந்த கண்களுடன் காணொளி நகர
என்ற வரிகளுடன் பாடல் மலர்கிறது. பாடலின் ஆரம்ப வரிகளே மலையக மக்களின் நிலையை எவரும் பொருட்படுத்தாது கடந்து செல்கின்ற நிலைக்கு சாட்சியாகிறது. இன்றும் அந்நிலை தொடர்ந்து நிலைப்பமையே இப்பாடலுக்கான அடித்தளமாக மாறி நிற்கிறது.
பாடலின் ஒவ்வொரு சொல்லும் மலையகனின் வாழ்வின் அவலத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஓரிரண்டு வருடங்கள் அல்லவே 200 வருட கால அவலம் இது. ஆட்சிகளும் ஆட்சியாளர்களும் நாகரீகமும் மாறிய போதும் மலையகனின் வாழ்க்கை மாறாது உறைந்திருப்பதனை
“யா என்னய்யா உங்க குண்டு குழி பள்ளம் மேடு போட்ட ஓட்டுல நெறஞ்சிச்சா..??
பார் சின்னையா தொர வீட்டு வாசல் மொத்தமாவும் வேர்வையின் புற்கள் மொளச்சிச்சாம்
நீ பாடுபட்டு வேல செய்யும் காணி பூமி ஒங்கப்பே பேருக்கு இருந்திச்சா..??
ஆம் மக்களே நம்புங்கள் ஓ நானும் நல்லது செய்வேன் உங்க நீல சாயம் வெளுத்துச்சாம்..!!” என்ற வரிகள் மூலமாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. இவ்வரிகள் மாற்றம் காணா வாழ்வை மட்டுமன்றி, உடைந்து நொறுங்கி கிடக்கும் மலையக மக்களின் நம்பிக்கையையும் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் கேட்பவரை திருப்திபடுத்தக் கூடிய அளவில் சீராக அமைந்துள்ளன. பாடலானது rap பாணியில் அமைந்திருப்பதால் வரிகளை இணங்காணல் சற்று சவாலாக இருந்தாலும், காணொளியின் description இல் பாடல் வரிகள் முதலில் இருந்து முடிவு வரை முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளமை இலகுவாக இருந்தது. Lyric video ஆக உருவாக்கப்பட்ட போதும் description இல் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டமை, பார்வையாளர்களுக்கு இக்குழுவினர் கொடுத்துள்ள முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகிறது. குறைகள் இன்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில்,
“இங்கபாரு எங்க மொழி எங்க உரிம,
என்னா மச்சா எங்க slang பழம்பெரும,
வேல செய்ய கெளம்புறோம் காலம்பரம,
நாம குனிஞ்சி மேல தூக்குறோம் நாட்டின் முதுகெலும்ப..!!” என்ற வரிகள் என் மனதை வெகுவாக கவர்ந்திழுத்தன. மலையகன் பாடலில் உங்கள் மனதை கவர்ந்த வரிகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி 11A TALES Production, Dhwaja stambha productions மற்றும் Mhokshas films தாயாரிப்பில் Julius Gnanagar youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘தொலையுறே நானே’. இந்தப் பாடல், Lucian Julius இனால் இசையமைக்கப்பட்டு Lucian Julius மற்றும் Ramya Thayaparan இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Lucian Julius இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Chris Leuman இன் DIRECTION இனால் படமாக்கப்பட்டு, Vidursha Vaishali இன் கச்சிதமான நடிப்பினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இப்பாடலுக்கான காணொளியானது ஒரு பாடகன் கிட்டாருடன் நிற்கும் பின் புற shot உடன் ஆரம்பமாகிறது. அதன் பின் “வெள்ளை பூவே என்னை தாக்கினாய் மெல்ல..” என்ற வரிகளுடன் பாடல் மலர்கிறது. பாடலின் காணொளி முழுவதும் காதலர்கள் தனித் தனியாகவும் ஒன்றாகவும் என இரு நிலைகளும் கலந்த காட்சிகளோடு முழுமைப்ப்படுத்தப்பட்டுள்ளது. பாடல் வரிகளை விட அதற்காக உருவாக்கப்பட்ட இசை அதிகம் ரசிக்கும்படியாக இருந்தது. பாடல் ஆரம்பமானதும் முடிந்ததும் தெரியாத அளவுக்கு ஏதோ youtube ad வந்து சென்றது போல் தோன்றியது காரணம் பாடலில் காட்டப்பட்டிருந்த காட்சிகள்.
நடந்து செல்வதிலும் அமர்ந்திருந்து கை காட்டி கதைப்பதிலும், பரிசு அளிப்பதிலும் மற்றும் தனித் தனியே நிற்பதிலும் என காணொளி சட்டென முடிந்து விட்டது. எப்படி சேர்ந்தார்கள், எங்கு காதல் மலர்ந்தது, எப்படி முறிந்தது, இறுதியில் என்ன தான் முடிவு என எந்த கேள்விக்கும் பதில்லில்லாமல் போனமையால், இக் காணொளி உணர்வுகளை சிறிதும் தொடவில்லை. காணொளியின்றி பாடலை மட்டும் கேட்ட போது கூட மனம் சற்று இசைக்குள் சென்று வந்தமையை உணர முடிந்தது.
பாடலின் இசையில் குறை காணும்படியாக ஏதும் தோன்றவில்லை ஆனால் பாடலின் வரிகளை இன்னும் சற்று அழகான வார்த்தைகளை கோர்த்து எழுதியிருக்கலாம். பாடலுக்கான காணொளியில் ஒரு story line உருவாக்கியிருந்தால், பார்வையாளர்களுக்கு பாடலின் உணர்வுகளை எளிதாக கொண்டு சேர்த்திருக்க முடியும் என்பது என் கருத்து. கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் நடிப்பிலும் இன்னும் சற்று அதிகமான effort இருந்திருக்கலாம். எது எவ்வாறிருப்பினும் இப்பாடலை படைத்து வெளியிட கலைஞர்கள் செய்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.
“தொலையுறே நானே…”என்ற காதல் பிரிவின் வலி கூற உருவாக்கப்பட்ட இப்பாடலின் “எந்தன் கண் முன் உதிரும் பூவாய் மாறி,
இதயத்துள் முள் சூடினாய்!” என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டன. இப்பாடலில் உங்கள் மனம் கவர்ந்த வரிகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
முன்பெல்லாம் பலர் தபால் தலைகளை சேகரிப்பார்கள் சிலர் பிடித்த நடிகர்நடிகையரின் புகைப்படங்களை சேகரிப்பார்கள் சிலர் பழமையான மற்றும் அரிதான சின்னங்களையும் சிலர் இலைகளையும் சிலர் பூக்களையும் சிலர் வெளிநாட்டு நாணயங்களையும் சேகரிப்பார்கள். அட இவ்வளவு ஏன்? நானறிய சிலர் ஐஸ்கிரீம் குச்சி, toffee தாள் போன்றவற்றை சேகரித்து வைத்தவர்களும் உண்டு.
சிறுவயதில் தொடங்கும் இந்த பழக்கத்தை சிலர் வாழ்நாள் முழுவதிலும் தொடர்கிறார்கள். இதற்காக பெரும் உழைப்பையும் பணத்தையும் முக்கியமாக நேரத்தையும் செலவிடுகிறார்கள் என்றால் அது மிகையில்லை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதிலென்ன இருக்கிறது? என்று தோன்றும். ஆனால் சேகரிப்பவர்களுக்கு அதுவொரு அலாதியான மகிழ்ச்சியை தருகிறது. தாங்கள் சேகரித்துவைத்துள்ள விடயங்களை பிறருடன் பகிர்வதும் காண்பிப்பதும் அதிலுள்ள குறைகளை நிறைவடையச் செய்வதும் ஓர் விளையாட்டை போலாகிவிடுகின்றது பலருக்கு.
உதாரணத்திற்கு ஒருவர் பழைய பத்திரிகைகளை சேகரிக்கின்றார் என வைத்துக்கொள்வோம் அவரிடம் சென்று 1960களில் தமிழில் “சங்கு” என்றோரு பத்திரிகை வந்தது தெரியுமா? என்று கேட்டால் போதும் , ஒரே நேரத்தில் அவர் கண்களில் மகிழ்ச்சியும் வருத்தமும் தோன்றும் ” அட நாம் சேகரிக்க ஒரு புது பத்திரிகை” என மகிழ்வார். அதேசமயம் அடடா இந்த பத்திரிகை நம்முடைய சேகரிப்பில் இல்லையே என்று வருந்துவார். உண்மையில் விதவிதமாக பொருட்களை சேகரிப்பதென்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒருவருடைய அடையாளமாக, அவரது செயற்பாடுகளை , மகிழ்வை, திருப்தியை தீர்மானிக்கும் காரணியாக அவருக்கு பாராட்டை பெற்றுத்தரும் ஒன்றாக மாறக்கூடும்.
ஆனால் அவர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்து தங்களுடைய சேகரிப்புகளை தொடங்குவதில்லை. விளையாட்டாக ஆரம்பிக்கிறார்கள் பின் அது படிப்படியாக தானே வளர்கிறது.
இப்படித்தான் அயோவாவில் பென் சில்பெர்மன் (ben silverman) என்ற சிறுவன் பூச்சிகளையும் தபால்தலைகளையும் சேகரிக்கத்தொடங்கினான். தான் சேகரித்ததையெல்லாம் ஒரு கனமான அட்டையில் குத்திவைத்தான்.
பென்னின் பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள். அவனும் ஓர் மருத்துவராக வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படித்துக்கொண்டிருந்தான். ஆனால் ஏனோ அவனது ஆர்வம் மருத்துவத்துறையில் செல்லவில்லை. தொழில்நுற்பம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். அதற்காக கூகிலில் வேலைக்கு சேர்ந்தான். அடடே கூகுளா? என்று நினைத்துவிடவேண்டாம் . கூகிளில் பென் எந்த புரட்சியையும் செய்துவிடவில்லை.
அங்கே அவர் பார்த்தவேலை வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது. ஆமாம் கால்சென்டர் வேலைதான் என்றாலும் தினமும் பலவிதமான வாடிக்கையாளர்களுடன் பேசுகிற அனுபவம் அவருக்கு பிடித்திருந்தது. இந்த அனுபவம்தான் பின்னாளில் அவர் சொந்தத்தொழில் தொடங்கியபோது பெரிதும் உதவியது.
சொந்த தொழிலா? கூகிளில் வேலை பார்க்கும்போது எதற்கு இதெல்லாம் ? கை நிறைய சம்பளம் என்கிற விஷயம் தரும் பாதுகாப்புணர்வினை பல சமூகங்கள் முக்கியமாக கருதுகின்றன. ஆனால் வேறு சிலரோ அதிலிருந்து வெளியே வந்து நாம் அடுத்தவருக்கு சம்பளம் தருகிறவர்களாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தினை ஊக்குவிக்கின்றனர் . கூகிள் இதில் இரண்டாவது வகை இங்கே வேலை செய்துவிட்டு வெளியே வந்த பலர் சொந்த தொழில் தொடங்கி முன்னேறியிருக்கிறார்கள்.
இங்கே வெற்றி தோல்விகூட இரண்டாம்பட்சம்தான் முயன்று பார்க்கவேண்டும் என்கிற துணிச்சல் வேண்டும். எதை முயன்றுபார்ப்பது என்ற தெளிவு வேண்டும் அதன்பிறகு ஒரு கைபார்த்துவிடவேண்டியதுதான்.
பென்னுக்கு கூகுளை மிகவும் பிடித்திருந்தது தன்னை சுற்றி எப்போதுமே புத்திசாலிகள் ஆர்வத்துடன் எதையேனும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வியப்போடு பார்த்தார்.
தன்னாலும் அவ்வாறு செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்து . ஆனால் கூகிளில் அவர் பார்த்த வேலை சாதாரணமானது. அங்கே அவரால் பெரிதாக எதையும் செய்துவிடமுடியாது . ஆகவே அவர் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தார்.
அடுத்து என்ன செய்வது?
அதுதான் தெரியவில்லை. கொஞ்சகாலம் பொறுமையாக ஏதெல்லாமோ செய்துபார்த்தார். “பால் ஸ்கியாரா” என்ற நண்பருடன் இணைந்து சில இணையதளங்கள், மொபைல் அப்பிளிகேஷன்கள் போன்றவற்றை உருவாக்கினார் ஒன்றும் சரிப்படவில்லை. எனினும் இணையத்தை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அங்கே இல்லாத ஒரு விஷத்தை தான் உருவாக்கினால் அது வெற்றியடையும் என நம்பினார். அப்போது அவருக்கு அவரது இளவயது சேகரிப்பு பழக்கம் நினைவுக்கு வந்தது . “இப்படியொன்று இணையத்தில் இல்லையே” ஏன் நான் அப்படியொன்றினை உருவாக்கக்கூடாது என யோசித்தார்.
இதற்கெல்லாமா ஓர் இணையதளம் ! என்றுதானே யோசிக்கின்றீர்கள்? ஆரம்பத்தில் பலரும் அப்படிதான் யோசித்தார்கள். குறிப்பாக முதலீட்டாளர்கள், இதெல்லாம் சரிப்படாது என ஒதுங்கிக்கொண்டார்கள்.
ஆனால் பென் நம்பிக்கையை இழக்கவில்லை . பால் ஸ்கியாரா (paul sciarra) , இவான் ஷார்ப் (Evan Sharp) ஆகியோருடன் இணைந்து “Pinterest” என்ற பெயரில் ( 2010 January / sansfransisco _ california)அந்த இணையத்தளத்தினை உருவாக்கினார் . மூவரும் அதனை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறங்கினர். முன்பு கூகிளில் வேலைபார்த்தபோது பலவிதமான வாடிக்கையாளர்களுடன் பேசிய அனுபவத்தை பெற்றிருந்த பென், வாடிக்கையாளர்களை நேரடியாக அணுகுவது தங்கள் தளத்தின் பயன்பாட்டை பற்றி சொல்வது அவர்களுடைய நம்பிக்கையை பெறுவது அதன்மூலம் இணையத்தளத்தினை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொண்டார்.
இதற்காக சுமார் ஐயாயிரம் பேரிடம் நேரடியாக பேசினார் பென் . தன்னுடைய மொபைல் எண்ணை அவர்களிடம் கொடுத்து அழைக்கச் சொன்னார் . அவர்கள் இத்தளத்தினை எப்படி பயன்படுத்துகிறார்கள், இன்னும் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் . என்று அறிந்துகொண்டார் . அதன்மூலம் தாங்கள் சரியான பாதையில் தான் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை
உறுதிசெய்துகொண்டார்.
Pinterest தளம் அடிப்படையில் மிக எளிமையானது. உங்களுக்கு பிடித்த படங்களை சேகரிக்கலாம், அவற்றை தனித்தனி தலைப்புகளில் தொகுத்துவைக்கலாம் . அவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம் பிறருடைய சேகரிப்புகளை பின்பற்றலாம் அதாவது அவர்கள் புதிய படங்களை சேகரிக்கும்போது அவற்றை உடனுக்குடன் பார்க்கலாம். அவ்வளவுதான்!
மறுபடியும்” இதற்கு ஓர் இணையத்தளமா? என்று தோன்றுகிறதுதானே? பென் தொடர்புகொண்ட பலரும் இப்படித்தான் நினைத்தார்கள். அநேகர் அவரது மின்னஞ்சலில் உள்ள இணைப்பை “க்ளிக்” செய்யக்கூட இல்லை. அனால் அப்படி க்ளிக் செய்து pinterest தளத்திற்குள் வந்தவர்களுக்கு அந்த தளத்தினை மிகவும் பிடித்திருந்தது. பென் எப்படி சிந்தித்து அந்த இணையத்தளத்தினை உருவாக்கியிருந்தாரோ அதேபோல் அவர்கள் அதனை பயன்படுத்தினார்கள்.
காரணம் நம் எல்லோருக்குள்ளும் “சேகரிக்கிற” ஆசை இருக்கிறது. நிஜமாக பொருட்களை சேகரித்து ஒட்டி வைப்பதற்கு பதிலாக, இணையத்தில் படங்களை தொகுக்கிறோம், அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி சேகரித்தல் பிறரிடம் காண்பித்து பெருமைப்படுதல் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய விருப்பங்கள் எல்லோர்க்கும் உண்டு. Pinterest இதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது.
ஓர் எளிய வடிவமைப்பில் சேகரிப்புகளை அழகாக காண்பித்து பயனாளர்களை கவர்ந்தார்கள். அவர்களும் அங்கே லட்சக்கணக்கான படங்களை தொகுக்கதொடங்கினார்கள். இன்று pinterest உலகின் மிகப்பெரிய பட சேகரிப்பாக திகழ்கிறது . வீடு கட்டுபவர்கள் “எப்படி ஜன்னல் வைக்கலாம்” என யோசித்தாலும் சரி திருமணம் செய்துகொள்பவர்கள் “அழைப்பிதழை எப்படி வடிவமைக்கலாம்” என்று யோசித்தாலும் சரி … Pinterestடில் வந்து தேடினால் ஆயிரக்கணக்கான படங்களை பார்க்கலாம் இவை அனைத்தும் உலகெங்கிளும் உள்ள pinterest உறுப்பினர்கள் சேகரித்தவை.
இப்படி சேகரிப்பவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைக்கிறார்கள் . பாராட்டி மகிழ்வதுடன் அவற்றை விலை கொடுத்து வாங்கியும் செல்கின்றனர் . கணினியில் மட்டுமன்றி செல்போன்வழியேயும் சேகரிக்கிற வசதிகள் வந்ததால் இன்னும் அதிகம்பேர் பின்டெரெஸ்ட்டை ஆர்வத்துடன் பயன்படுத்த தொடங்கினார்கள் . பல்வேறு தலைப்புகளில் விதம்விதமான படங்கள் சேகரிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் , பெரிய நிறுவனங்கள்வரை எல்லோரும் பின்டெரெஸ்ட்டில் நுழைந்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த ரசிகர்களை பார்த்துதான் முதலீட்டாளர்கள் விழித்துக்கொண்டார்கள் . ஆரம்பத்தில் இதெல்லாம் சரிப்படாது ” என ஒதுக்கப்பட்ட பின்டெரெஸ்ட்டின் சந்தை மதிப்பு படிப்படியாக அதிகரித்தது . அதற்கேற்ப பின்டெரெஸ்ட் பயனாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.
சுருக்கமாக சொன்னால் மனிதனின் பழைய சேகரிப்பு பழக்கம் டிஜிட்டல் வடிவில் பின்டெரெஸ்ட்க்கு பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது எனலாம்.