Blog Page 32

சுயமரியாதை மாதம் 2021 : Pride with a Purpose

ஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் தமது சமூக இருப்பினை உறுதி செய்து தமக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுபட்ட போராட்டங்களை ஆயுதப் போராட்டமாகவோ அல்லது அகிம்சை முறையிலான போராட்டமாகவோ அச்சமூகம் முன்னெடுக்கின்றது. இவ்வாறான போராட்டங்கள் ஆதி காலம் தொடக்கம், கால காலமாக உலக நாடுகள் பலவற்றில் இடம்பெற்று வந்ததை நாம் அறிவோம். அவ்வாறான சமூக மக்களின் போராட்டங்கள் பல கடினமான இடர்களை கடந்து தமக்கான சமூக இருப்பினை உறுதி செய்து, இன்று எமக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்குமான வரலாறாக, உந்து சக்தியாக விளங்குகின்றன.

கிரேக்க காலத்தில் அடிமைகள் மீதான அடக்குமுறைகள், மேற்கத்தேய நாடுகளின் கீழைத்தேய நாடுகள் மீதான அடக்குமுறைகள், அமெரிக்காவில் நிலவிய அடிமைமுறைச்சமூகம் மீதான அடக்குமுறைகள், தென்ஆபிரிக்காவில் நிலவிய நிறம் மீதான அடக்குமுறைகள்போன்றவற்றிற்கு எதிராக, காலம் காலமாக இடம்பெற்ற போராட்டங்களின் விளைவாகவே பல சமூகங்கள், பல கீழைத்தேய நாடுகள்சுதந்திரக்காற்றினை இன்றளவும் சுவாசிக்க கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான போராட்டங்களே இன்று உலகில் எப்பாகத்திலும்இடம்பெற்றுக்கொண்டிருக்கும் உரிமைக்கான போராட்டங்களுக்கு ஜீவநாதமாகவும் உந்துசக்தியாகவும் உள்ளன.

அந்தவகையில் பல ஆண்டு காலமாக உலகின் பல்வேறு பாகங்களிலும் பரந்து வாழும் பால்புதுமையினர், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், தமது சமூக இருப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் போராடி வருகின்றனர். பல தசாப்தங்களாக தொடர்ந்து போராடி வரும் பால்புதுமையினர், சமூகத்தில் தமக்கான சமூக அங்கீகாரத்தினையே வேண்டி நிற்கின்றனர். பல்வேறு தொடர்போராட்டங்களின் பெறுபேறாக இன்று மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் பால்புதுமையினர்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பினை தக்க  வைப்பதற்கான சட்டங்கள் பாராளுமன்றங்களில் இயற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கெதிராக அநீதி இழைக்கப்படும்பொழுது நீதிமன்றங்களை நாடி, தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ளும் சட்ட ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. 

இவ்வாறு பால்புதுமையினருக்கு ஆதரவான எண்ணவோட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் அவர்களுக்கு சார்பாக மாறி வரும்சந்தர்ப்பத்தில், அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக கீழைத்தேய நாடுகளில் பால் புதுமையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் இருப்பு இப்பொழுதும் கேள்விக்குள்ளாக்கப்படுவது வருத்தமளிப்பதாகவே உள்ளது. இலங்கை போன்ற நாட்டில் அதிலும்குறிப்பாக தமிழர்கள் வாழும் வட கிழக்கில் பால் புதுமையினர் தமக்கான உரிமைக்காகவும், தமக்கான அடையாள அங்கீகரிப்பிற்காகவும்தொடர் போராட்டங்களை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனை கடந்தகாலங்களிலும் பார்க்கையில் அண்மைக்காலமாக கூடியளவு அவதானிக்க கூடியதாக உள்ளது. பால்புதுமையினருக்கு ஆதரவாக எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இலங்கையில் காணப்படாத நிலையில் அதற்கு ஆதரவாக செயற்படுவது என்பது மிகவும் சவாலான விடயமாகவே நோக்கப்படுகின்றது.

பால்புதுமையினர் என்று குறிப்பிடப்படுபவர்கள் யார் என்ற வினாவினை சாதாரணமாக ஒரு கல்விச்சமூகம் சார் குழுவிலோ, மாணவ சமூகம் சார் குழுவிலோ அல்லது சாதாரண பாமர மக்கள் குழுவிலோ எழுப்புவோமாயின் பெரும்பாலானவர்களுக்கு அது தொடர்பில் ஓர் புரிதலோ, விளக்கமோ காணப்படாத நிலையினை நாம் காணலாம். இது இவ்வாறிருக்க வட கிழக்கில் பால்புதுமையினருக்கான அடையாளத்தினை மற்றும் உரிமைகளை வென்றெடுத்தல் என்பது எட்டாக்கனியாகவே காணப்படுகின்றது. 

அந்தவகையில் பால்புதுமையினர் என்போர் யார் என்று நோக்குவோமாயின், அது பால் (sex), பாலினம் (gender) மற்றும் பாலீர்ப்பு (sexuality) அடிப்படையில் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்படுகின்ற ஓர் சிறுபான்மை சமூகம். எமது தமிழ்பேசும் சமூகத்தில் ஆண் (male), பெண் (female) எனும் பால்களும், மாறாப்பாலினத்தவர்கள் (cisgender) உம் எதிர்பாலீர்ப்புள்ளோர் (heterosexual people) உம்சாதாரணமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இடையிலிங்கம் உடையோர் (intersex people) போன்ற வேறுபட்ட பாலுடையோரும், திருநர் (transgender), பால் திரவநிலையுடையோர் (gender fluid people) போன்ற வேறுபட்ட பாலினம் கொண்டோரும், தன்பாலீர்ப்புள்ளோர் (homosexual people), பாலீர்ப்பு அற்றோர் (asexual people) போன்ற வேறுபட்ட பாலீர்ப்புக் கொண்டோரும் பால்புதுமை சமூகத்தில் உள்ளடக்கப்படுகின்றார்கள். இதனைச் சுருக்கமாக LGBTQIA+ சமூகம் எனக் குறிப்பிட முடியும்.

இவ்வாறாறு தம்மை பால்புதுமையினராக அடையாளப்படுத்த முன்வரும் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுகின்றனர். தமிழர்களை பூர்விகமாக கொண்ட வட கிழக்கில் பல்வேறு இறுக்கமான சமூக கட்டுப்பாடுகள், வழக்காறுகள், சாதிய ஒடுக்குமுறைகள் இன்றளவும் காணப்படுகின்றது. இவ் வட கிழக்கை பூர்வீகமாக கொண்ட பால்புதுமையினர் தம்மை பால்புதுமையினராக அடையாளப்படுத்தும் சந்தர்ப்பங்களில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பால்புதுமையினர் பாடசாலையில் கல்வி கற்கும் வயதினிலேயே தான் தம்மை பால்புதுமையினராக உணர்ந்து தம்மை அடையாளப்படுத்த முனைகின்றனர். பால்புதுமையினர் தொடர்பான எதுவித புரிதல் இல்லாத பாடசாலை வகுப்பாசிரியரால், சக மாணவர்களால், பகுதித் தலைவர்களால் கேலிக்குட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறான பல சந்தர்ப்பங்களை நாம் அனைவரும் எமது பாடசாலைக் காலத்தில் சக மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்ததை கடந்தே வந்திருப்போம். இவ்வாறு பாதிப்பினை எதிர்கொள்ளும் பால்புதுமையினர் அதனை எதிர்கொள்ள முடியாமல் தமது கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துகின்றனர். இவ்வாறு வீட்டிலும் இது தொடர்பான அடையாளப்படுத்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் போது பெற்றோரினாலும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதன் அதியுச்சபட்சமாக அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

இவற்றிற்கான மூல காரணமாக தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தமக்குள்ள சமூக அந்தஸ்தினை பாதித்துவிடுமோ என்ற அச்சமே பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அவ்வாறு வீட்டைவிட்டு வெளியேறும் பால்புதுமையினர் உதவிகளற்று சரியான வழிகாட்டுதலற்று தமது அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பல துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். ஆயினும் சில பால்புதுமையினர் இவற்றினை தாண்டி சமூகத்தில் தமக்கான ஒர் அடையாளத்தினை உருவாக்கி வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். அவ்வாறானவர்களின் வெற்றிக்குரிய காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு அவர்களின்குடும்ப உறுப்பினர்களின் அல்லது நண்பர்களின் புரிந்துணர்வுடன் கூடிய ஆதரவு இருப்பதனை நாம் கவனிக்கலாம். ஆனால்  இது அனைத்து பால்புதுமையினருக்கும் கிடைப்பதில்லை.

இவ்வாறு பாடசாலைக்கல்வியை இடை நடுவில் கை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பால்புதுமையினர் தமக்கான இருப்பை தக்க வைப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தமக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள்போன்றவற்றை பெற்றக்கொள்வதில் பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அதி உச்சபட்சமாக பாலியல் தொந்தரவுகளுக்கும்முகம் கொடுக்கின்றனர். இவ்வாறு புதிதாக ஆதரவற்று வெளியேறும் நபர்களுக்கு ஏற்கனவே இவ்வாறு வெளியேறி தமக்கான இருப்பினை ஓரளவேனும் தக்க வைத்திருக்கும் பால்புதுமையினர் ஆதரவுக்கரம் நீட்டி உதவி செய்கின்றனர். இவ்வாறான உதவிகள்கிடைப்பினும் நிரந்தர தொழில் வாய்ப்புகள், கல்வி செயற்பாடுகளை தொடர்தல், போன்றவை எட்டாக்கனியாவே காணப்படுகின்றது.

இவ்வாறான இன்னல்களை பால்புதுமையினர் எதிர்நோக்குவதற்கு சமூகத்தில் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வு இன்மையே பிரதான காரணமாக காணப்படுகின்றது. தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பு தெரிவினை தத்தமது சமூகத்தில் வெளிப்படுத்தி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதாரண ஒரு வாழ்க்கையினை வாழுதல் என்பதே அனைத்து பால்புதுமையினரதும் அடிப்படை விருப்பமாகவும்தேவையாகவும் உள்ளது.

தம்மை அடையாளப்படுத்துதல் என்பது அனைவரும் எண்ணும் வகையில் மிகவும் சாதாரணமான விடையமல்ல. அவ்வாறு தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பு தெரிவினை தமது குடும்பத்திலோ, பாடசாலையிலோ, நண்பர்களிடமோ வெளிப்படுத்துதல் என்பது மனதளவில் மிகவும் கடினமானதொன்றாகவே காணப்படுகின்றது. தமது பால்நிலையினை வெளிப்படுத்தும் பொழுது அதற்கு எவ்வகையான துலங்கல்கள் சமூகத்தில் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் காரணமாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு பால்புதுமையினர் பலரும் தயங்குகின்றனர். இதற்கான மாற்றம் அடிப்படை குடும்ப கட்டமைப்பிலிருந்தே உருவாக வேண்டும். தன்னுடைய மகன் அல்லது தன்னுடைய சகோதரர், சகோதரி, நண்பன், நண்பி, ஒரு பால்புதுமையினர் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அவ்வாறான மாற்றம் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும்பட்சத்தில் தான் நாம் சமூக மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும்.

இன்றளவும் தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பினை அடையாளப்படுத்தும்போது, அது ஒருவகையான மனப்பிறழ்வு நோய் எனவும் அதற்குரிய வைத்தியம் மேற்கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும் என வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும், திருமணம் முடித்து வைத்தால் சரியாகிவிடும் என திருமண முயற்சிகள் மேற்கொள்வதும் சர்வசாதரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு வைத்திய ஆலோசனையினை வழங்கும் வைத்திய உத்தியோகத்தர்கள் கூட இதனை விளங்கிக்கொள்ளது, தவறான வழிப்படுத்தல்களை அவர்களின் பெற்றோரிடம் வழங்குவதென்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

மேலும் ஒரு திருநங்கை (trans woman) அல்லது திருநம்பி (trans man) தமக்குரிய மருத்துவ ஆலோசனைகளை வெளிப்படையாக பெறுதல் என்பது மிகவும் சாவாலானதாகவே காணப்படுகின்றது. இதற்குரிய மாற்றம் சமூக விழிப்புணர்வின்றி ஒருபொழுதும் ஏற்படாது. நாம் இவ்வாறான பல சந்தர்ப்பங்களை கடந்து வந்திருப்போம். ஆயினும் எமது பிள்ளைகள் அல்லது எமது சகோதரர்கள் தம்மை பால்புதுமையினராக அடையாளப்படுத்தும் பொழுதுதான் எம்மால் அது தொடர்பான அனுபவங்களை நேரடியாக காணக்கூடியதாக இருக்கும். இன்னும் எத்தனை ஆயிரம் பால்புதுமையினர் தமது அடையாளங்களை மறைத்து சாதாரணமாக எமது சமுதாயத்தில் அடிப்படை அங்கீகாரமின்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நீங்கள் அறிவீர்களா? அடிப்படை பால்நிலை மற்றும் பாலீர்ப்பு வெளிப்படுத்தல் இன்றி வாழ்தல் என்பது எவ்வளவு துன்பகரமான நிகழ்வு என்பதனை நீங்கள் அறிவீர்களா? எனவே எம் சகமனிதர்களுக்கான எம்மைப் போன்ற சம உரிமைகள் உண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் வழங்கவேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும்.

மேலும் பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பான கூடியளவு விழிப்புணர்வினை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்விழிப்புணர்வு மிக்க சமுதாய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். ஆரம்பத்தில் பாடசாலைக்காலங்களிலே பால்புதுமையினரென இனங்காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டலாம். அவர்களுக்கான தன்னம்பிக்கையினை ஊட்டலாம். அவர்கள்பாடசாலைக் கல்வி நிறைவுறும் வரை ஆதரவு தரும் பட்சத்தில் அவர்கள் தமக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை தாமே தேடிக்கொள்ள கூடியவர்களாக உருப்பெற்று சமுதாயத்தில் தம்கென்ற அடையாளத்துடன் வாழக்கூடியவர்களாகின்றனர்.

அதே போன்று தொழில்தருனர்கள் பால்நிலை மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களினூடு தொழில் நிராகரிப்புகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பால்புதுமையிருக்கு போதியளவு திறமைகள், தகுதிகள் இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கமுன்வர வேண்டும். அவர்களை தொழில் நிறுவனங்களில் சமமாக நடாத்த முன்வர வேண்டும்.

மேலும் உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களை மறைத்து சொல்லமுடியாத வேதனைகளுடன் உங்களுடன் பழகிக்கொண்டு இருப்பார்கள் என்று தெரியுமா? தற்பொழுது உலகெங்கும் தலைவிரித்தாடும் கொறோனா நோயின் தாக்கத்தால் எம்மில் பலர் தனிமைப்படுத்தலை அனுபவித்திருப்போம், உணர்ந்திருப்போம். தனிமைப்படுத்தல் என்பது எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு மன அழுத்தத்தை தரக்கூடியது என்பதை நாம் அண்மைக்காலமாக கண்கூடே கண்டிருப்போம். தனிமைப்படுத்தல் ஏற்படுத்திய மன அழுத்தத்தின் விளைவாக எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை பத்திரிகை வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும், சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம். சாதாரணமாக பதின்நான்கு நாட்கள் தனிமைப்படுத்தலை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இருக்கும் நாம், இச்சமூகத்தில் பிறந்ததிலிருந்து தனிமைப்படுத்தலில் இருக்கும் பால்புதுமையினர் எவ்வளவு மன அழுத்ததிற்கு உள்ளாகியிருப்பார்கள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டுள்ளார் என்பதனை சற்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் யாவரினது எதிர்பார்ப்பும் தமது அடிப்படை பால்நிலை வெளிப்படுத்தல்களை தம்சார் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

எனவே வட கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம் பால்புதுமையினருக்கான சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களும் எம்முடன் இணைந்து தமது வாழ்வியலை வாழ வழிசமைக்க வேண்டும். உலகின் எப்பாகத்திலும் பரந்து விரிந்து வாழும் அனைத்து பால்புதுமையினருக்கும். தமது உரிமையினை வென்றெடுக்க, தமது அபிலாஷைகளை உலகிற்கு தெரிவிக்க, தமது இருப்பை உறுதிப்படுத்த, தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள இந்த சுயமரியாதை மாதமானது கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் பால்புதுமையினரால் சுயமரியாதை மாதம் என கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழும் பால்புதுமையினர் தாம்வென்றெடுத்த உரிமைகளின் வெற்றியினை கொண்டாடவும் இனிவரும் காலங்களில் தமக்கு தேவையான உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு களமாகவும் சுயமரியாதை மாதத்தினை நோக்குகின்றனர். பல்வேறுபட்ட நாடுகளில் இவ் சுயமரியாதை மாதத்தில் பல்வேறுபட்ட பேரணிகளை நாடாத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளே அவர்களின் சமூக இருப்பை தக்கவைக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

மேற்கத்தைய மற்றும் கீழைத்தேய நாடுகளில் நடைபெறும் சுயமரியாதை மாத செயற்பாடுகள் இலங்கையில் அதுவும் வட கிழக்கில்மிகவும் குறைவானதாக காணப்படுவது இன்னமும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையே பறைசாற்றி நிற்கின்றது. இவ்வாறான நிலையிலும் பால்புதுமையினரின் அடிப்படை உரிமைகளுக்காக இயங்கும் எமது அமைப்பு தம்மால் இயன்ற நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் செய்துவருகின்றது. வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கில் பால்புதுமையினர் வாழ்கின்றனர். என்பது இக்கட்டுரையை வாசிக்கும் உங்கள் பலருக்கு ஆச்சரியமளிக்கலாம். அவர்களில் பலர் தற்பொழுது இலங்கையில் கொவிட் நோயினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், ஊதியமற்று இருக்கின்றனர். இதனால் பலர் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உழன்று கொண்டிருகின்றனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார். இவர்களை சற்றேனும் அவ் நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்கு நாம் பிற தோழமை அமைப்புகளுடன் இணைந்து உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலுமிருந்து நிதி உதவிகளை பெற்று உதவிய வண்ணமுள்ளோம்.

எனவேதான் பால்புதுமையினருக்கான சுயமரியாதை மாதத்தில் நாடெங்கிலும் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களிடமும் பகிரங்க அழைப்பினை விடுகின்றோம். பால்புதுமையினர் என்றால் யார் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். புரியாவிடின் புரிந்தவரிடம் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குரிய அடிப்படை மரியாதையினை வழங்குங்கள், அவர்களின் சமூக இருப்பினை உறுதிசெய்யுங்கள். 

 தோழமையுடன்,

செயற்பாட்டாளர் (யாழ்ப்பாண சங்கம்: தமிழ்பேசும் LGBTQIA+ சமூகம்)

………………………………………………………………………

இம் முறை சுயமரியாதை மாதத்தின் போது ‘Pride with a Purpose’ எனும் கருப்பொருளில், நாம் ஒன்றிணைந்து இலங்கையில் வாழும்LGBTQIA+ மக்களுக்கு உடனடி இடர்கால உதவிகளாக உலர் உணவுப் பொருட்கள், வாடகைக் கட்டணங்கள், உளநல சமூக உதவிகள், சட்ட உதவிகள், ஓமோன்கள் மற்றும் HIV/ AIDS சம்பந்தமான மருத்துவ உதவிகள் போன்றவற்றை வழங்க முன்வந்துள்ளோம். நீங்களும் எம்முடன் இணைந்து பங்களிக்க முடியும்.

நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராயின் கீழுள்ள இணைய இணைப்பின் மூலம் நிதிப் பங்களப்பினை வழங்க முடியும்,

https://www.gofundme.com/f/covid19-relief-for-lgbtiq-folks-in-sri-lanka

நீங்கள் இலங்கையில் வசிப்பவராயின் கீழுள்ள வங்கிக் கணக்கின் மூலம் நிதிப் பங்களிப்பினை வழங்க முடியும்,

சமூக நலன்புரி மற்றும அபிவிருத்தி நிதி,
இலங்கை வங்கி, ரீஜென்ட் தெருக் கிளை,
கணக்கு இல: 85843143
(COVID-19 இடர்கால உதவி’ எனும் குறிப்புடன்).

இலங்கையின் சமுத்திரப் பெண் – ஆஷா டி வோஸ்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்வியல் எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள், நாட்டங்கள், எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள் என தனிப்பட்ட அம்சங்கள் வழக்கமாக காணப்படும். ஒவ்வொரு குழந்தைகளினதும் பள்ளிப் பருவத்தின் பயணத்தை கொண்டோ, பரீட்சை பெறுபேற்றை அடிப்படையாக கொண்டோ அவர்களுடைய எதிர்காலத்தை மதிப்பிடுதல் என்பது சாத்தியமற்றது. வெறுமனே நூற்கல்வியைக் கொண்டு இலக்குகளை முடிவு செய்தல் முறையன்றே.  இதிலும் பெண்களாக இருப்பின் அவர்களது பயணம் பெரிதும் குடும்பத்தவர்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுதந்திரமாக இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது பல்வேறுபட்ட சவால்கள், சிக்கல்கள், தடைகள், விமர்சனங்கள், குடும்ப மற்றும் சமூக நம்பிக்கைகள் பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாக காணப்படும்.

இத்தகைய சூழலில் 1979 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்து, இலங்கையின் சமுத்திரப்பெண் என உலகம் முழுவதும் அறியப்பட்டவரே ஆஷா டி வோஸ். உயிரியலாளர், ஆராய்ச்சியாளர், நீச்சலாளர், புகைப்படக்காரர், பாதுகாவலர் மற்றும் இயற்கை தொடர்பான செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்துபவர் என பல முகங்களை கொண்டவர் என சுருக்கமாக கூற இயலும். இவருடைய பயணம் என்பது அத்தனை எளிதானதல்ல. பல்வேறுபட்ட சவால்களையும் தாண்டி TED fellow, women of discovery award, BBC 100 women, 2020 sea hero of the year, போன்ற பல உயர் விருதுகளை பெற்றுள்ளார்.

இவை மட்டுமல்லாது, பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார். ஒக்ஸ்ஃபோர்ட் லிங்லாங் பல்கலைக்கழகத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு செய்யப்பட்டதன் முகமாக 20 சாதனைப் பெண்களில் ஒருவராக இவருடைய உருவப்படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 15 ஆம் நூற்றாண்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சாதனை மாணவர்களில் முதல் இலங்கையர் இவரே ஆவார்.

ஆக இவருடைய பயணம் என்று நோக்கும்போது பெரும்பாலான பக்கங்கள் கடல், சமுத்திரம், திமிங்கிலங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றை தங்கியே இருக்கும். சிறுவயதிலிருந்தே அடிக்கடி அருங்காட்சியகம் செல்வதும் அங்கிருக்கும் திமிங்கிலங்களின் எலும்புக்கூடுகள், கடல்சார் பதாதைகள் போன்றவற்றை ஆர்வத்துடன் அதிக நேரம் பார்ப்பது வழக்கம். பாடசாலைச் சூழலிலும். வீட்டுச் சூழலிலும் பட்டாம்பூச்சிகளையும் ஏனைய உயிரினங்கள் மற்றும் இயற்கை அம்சங்களையும் அவதானிப்பதில் ஏற்பட்ட தாக்கமே, இன்று சமுத்திரத்தின் உயர்ந்து நிற்கும் ஆஷா டி வோஸ்.

ஆறாவது வயதில் அவரது பெற்றோர் அவருக்கு அளிக்கும் உலக புவியியல் சஞ்சிகைகளை பார்த்து ஒருநாள் யாருமே செல்லாத இடங்களுக்கெல்லாம் நான் பயணம் செய்வேன். யாரும் பார்த்திராத உலக அம்சங்களை நான் பார்ப்பேன் என அடிக்கடி கூறிக் கொள்வதும், சஞ்சிகைகளில் வரும் நபர்களாக தன்னை கற்பனை செய்து கொள்வதும் உண்டு. இவரது ஆரம்பக் கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியிலும் இடையில் மற்றும் உயர்நிலை கல்வியை கொழும்பு சர்வதேச கல்லூரியிலும் முடித்ததன் பின்னராக, உயர்கல்வி தொடர்பான முயற்சியில் கடல்சார் கற்கைகளிற்கு இலங்கையில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே, தனது இலட்சியமும் அது குறித்த தேவைகள் பற்றியும் பெற்றோருக்கு விளக்கினார். மகளுடைய நாட்டத்திற்கு தேவையான ஆதரவு கிடைக்கவே சுற்றுச்சூழல் உயிரியல் மற்றும் கடல் தொடர்பிலான இளங்கலை கற்கை நெறிகளினை ஸ்கொட்லாந்தின் சென்.அன்ரோவஸ் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார். பின்னராக தன்னார்வ தொண்டராக பணியாற்ற விருப்புக் கொண்டபோது அவரது கற்கைநெறிகளிற்கு பொருத்தமானதாக, இலங்கையில் தளங்கள் எதுவும் கிடைக்காததால் நியுசிலாந்து செல்ல தீர்மானித்தார். ஆயினும் அதற்கான பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்கொட்லாந்தில் உருளைக்கிழங்கு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி சில காலங்களிலேயே நியூசிலாந்தில் தனது தன்னார்வ தொண்டு பணிகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உயிரியல் முதுகலை பட்டத்தினை தொடர்ந்தார். இதற்காக பெரும் பிரயத்தனங்களை அவர் முன்னெடுக்க நேர்ந்தது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்காக அச்சிடுதல் உட்பட பல தொழில்சார் வேலைகளில் ஈடுபட்டு வந்ததோடு ஹெட்லைட் உதவியுடன்  ஒரு கூடாரத்திலேயே வசித்து வந்த அவர், இறுதியாக தனது விண்ணப்பப்படிவத்தை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடிந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்களின் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட போதிலும் ஆஷாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிகுந்த வருத்தத்திலும் அவருடைய ஆர்வம் மற்றும் முயற்சியின் மூலமாக குறித்த பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்தார்.

பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமே இவரால் செலவழிக்க முடிந்தது. இருப்பினும் அவரது மதிப்புமிக்க அர்ப்பணிப்பு மற்றும் குழு பணிகள், பெருமைமிக்க அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது. அத்துடன் இவர் மேற்கு ஆஸ்திரேலிய பல்லைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பூர்த்தி செய்தார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் கடல் வாழ் பாலூட்டிகள் தொடர்பில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர்  இவரே ஆவார்.  

அத்துடன் 2018-ஆம் ஆண்டில் மதிப்புமிக்க விங்ஸ்வேர்ல்ட் விருந்தினர்களுடன் (wings world guest),  இங்கிலாந்து அலுமினிய விருதுகளுக்காக தெரிவான 61 நபர்களில், இறுதித்தெரிவாக பரிந்துரைக்கப்பட்ட 20 நபர்களில் ஒருவராக அங்கீகாரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்  உலகளாவிய விருதானது குறிப்பிட்ட துறையில் சாதனையாளர்களுக்கும் துறை சார்ந்த மாற்றங்களை உருவாக்குபவர்களுக்கும் மட்டுமே பரிந்துரைக்க படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகின் பல நாடுகளில் பல்வேறுபட்ட கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பணிகளையும் மேற்கொண்டதன் காரணமாக உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார். 2008 ஆம் ஆண்டில் இயற்கை உரையாடலுக்கான சர்வதேச ஒன்றியத்தின் ( international unit for conservation of nation) கடல் மற்றும் கடலோர பகுதி சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அலுவலராக நீலத் திமிங்கிலங்கள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்தார். வட இந்தியப் பெருங்கடலில் திமிங்கலங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட  நீண்ட ஆய்வு மற்றும் செயற்திட்டம் இதுவே ஆகும். அது மட்டுமல்லாமல் முதன்மைத்திட்டம் (Flagship project of Oceanswell) எனும் நிகழ்ச்சித்திட்டத்தினையும் வட இந்திய பெருங்கடல் பகுதியில் மேற்கொண்டார். இந் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து மேலும் நோக்கினால் கடல்வாழ் உயிரினங்கள் குறிப்பாக நீலத் திமிங்கிலங்கள் போன்றவற்றின் நிலைபெயர்வு மற்றும் இடம்பெயர்தல் தொடர்பாகவே அமைகின்றன.

எதிர்பார்த்ததற்கு அதிகமாக வரவேற்பு மற்றும் உலக நாடுகளின் கவனத்தையும் நிகழ்ச்சித்திட்டங்கள் பெற்றதைத் தொடர்ந்து, channel 7 அவுஸ்ரேலியா (2010), BBC (2016), WIRED UK (2014), The New Scientist (2014), TED(2015), Grist (2015), GOOD (2016), National Geographic and Nature (2017) வாயிலாக உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் நபராக அறிமுகமானார்.

இச் செயற்திட்டம் தொடர்பில் மேலும் விரிவாக நோக்கினால், வட இந்தியப் பெருங்கடலில் கடல்வாழ் பாலூட்டிகள் செறிந்து காணப்படுகின்றன. ஆனால் காலத்திற்கு காலம் அவற்றின் தொகை பெருமளவு வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இவருடைய செயற்றிட்டத்தின் பின் பரவலாக முன்வைக்கப்பட்டது.  எண்ணெய் தயாரிப்புக்களிற்காக பெருமளவு திமிங்கலங்கள் கொன்று குவிக்கப்பட்டன. அது தவிர சட்ட விரோதமாகவும் திமிங்கலங்கள் அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவை தவிர எண்ணெய் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை கடலில் கொட்டுதல், சடுதியாக வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்த கப்பல் போக்குவரத்து,  கடல் பாலூட்டிகளின் செறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக கடற்பரப்பில் மனிதர்களுடைய செயற்பாடுகளும் அதிகமாக இருத்தல், இதனால் பசுபிக் கடலோர பகுதிகள் கடல் வாழ் உயிரினங்களிற்கு  மிகவும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றமை, கடல் மாசடைதல், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுதல், காலநிலை மாற்றங்கள் கடலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் அதிக ஒலிகள், எலும்பு மற்றும் இரைக்காக திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுதல் போன்ற பல காரணிகளால் கடல்வாழ் பாலூட்டிகள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக நீலத் திமிங்கிலங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கவும்  அவற்றின் இடம்பெயர்தலிற்கும் இவையே காரணமாக அமைகிறது என இவரால் முன்வைக்கப்பட்டது.

இவை தவிர நீலத் திமிங்கலங்களுக்கும், மனிதன் மற்றும் சூழலுக்கும் பாரிய தொடர்பு உண்டு என்பதை முன்வைத்தார். அதோடு திமிங்கிலங்களை கூட எங்களால் பாதுகாக்க இயலாவிட்டால் எதை நாம் பாதுகாக்கப் போகிறோம் என்ற கேள்விகளையும் நம் முன்வைக்கின்றார். இவ்வாறாக ஆஷா டி வோஸ் கடல் சார்ந்த கற்கை நெறிகள் மட்டும் அன்றி அவை தொடர்பான பணிகளையும் இன்றுவரையும் தொடர்ந்து வருவதோடு, கடல் வாழ் உயிரினங்கள் அழிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முதன் முதலாக இலங்கையில் கடல் வாழ் உயிரினங்களின் ஆய்வு மற்றும் கற்றல் தொடர்பான இலாப நோக்கற்ற நிறுவனம் ஆஷா டி வோஸினாலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இவருடைய முயற்சிகளுக்கான தளங்கள் இலங்கையில் கிடைக்காத போதும் முயற்சிகளை தளரவிடாமல் பிறநாட்டு கற்கை நெறிகளை மேற்கொண்டு, கற்றலை பயன்படுத்தும் முகமாகவே பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது மட்டுமன்றி இலங்கையர்களது கடல்சார் கற்கை நெறிகளுக்கான வழிகாட்டியாகவும் திகழ்கின்றார்.

இதைத்தவிர நீச்சல் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஆஷா டி வோஸ் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நீச்சலாளர்களில் ஒருவராக இவர் பரிந்துரை செய்யப்படுகின்றார். அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பலதரப்பட்ட வகையில் புகழ் பெற்றவர்கள் வரிசைப்படுத்தல் பட்டியலில் இவருடைய பெயரும் இடம்பெற்று வருவதானது அவருக்கு மட்டுமன்றி, இலங்கைக்கு பெருமை அளிக்கும் விடயமாகும்.

மேலும் ஸ்கூபா டைவிங் (scuba diving) என்ற சஞ்சிகைக்கு அவர் வழங்கிய உரையில், ஒவ்வொரு கடற்கரைக்கும் அக் கடற்கரைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு சிறந்த மனிதர்களும் நிச்சயம் தேவை. உள்ளூர் சூழலை புரிந்து கொள்வதோடு உள்ளூர் சூழல் புலத்தின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் ஒவ்வொருவரையும் அவர் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும் இனி வரும் மாணவர்களுக்கு சமுத்திரம், கடலோரம் பற்றிய அற்புதமான விடயங்களை கற்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் இதனால் அவர்கள் கற்றலுக்கான தளங்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக துறைசார் அபிவிருத்திகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு ஸ்கூபா டைவிங்(scuba diving) சஞ்சிகையால் அறிவிக்கப்பட்ட The Sea Hero விருதுக்காக 30 நபர்களில் ஒருவராக இவர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விருது கடல்சார் சூழலியலை பாதுகாப்பதும் கடல்வாழ் உயிரின அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் என்ற அடிப்படையிலும் வழங்கப்பட்டது. அத்துடன் இதில் இவர் பெற்ற $5000 தொகையினை கடல்சார் பயிற்சி முகாம்களிற்காக செலவிடுவதாக அவர் தீர்மானித்துள்ளார்.

இவை மட்டுமன்றி இலங்கை தொலைக்காட்சி நிறுவனமான அத தெரன (Ada Derana) இவருக்கு வளர்ந்து வரும் உலகளாவிய விஞ்ஞானி எனும் விருதினை வழங்கி கௌரவித்தது மட்டுமல்லாமல், 2019ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றம் சிறந்த மாற்றங்களை உருவாக்கும் பெண்கள் 12 பேரில் ஒருவராக இவரை அறிவித்தது. ஆசியாவின் சிறந்த நிலைத்திருக்கும் பெண்களில் ஒருவராகவும், BBC 100 பெண்களின் பட்டியலில் 2018ஆம் ஆண்டு உலகின் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவை தவிர தற்காலத்தில் மிகவும் உற்சாகம் தரும் பெண்களில் ஒருவராக காணப்படும் ஆஷா டி வோஸ், கடல் சார்ந்த மனித செயற்பாட்டு கொள்கை மாற்றங்களிற்காக  பணி புரிவதோடு, தனித்துவமிக்க நீலத் திமிங்கிலங்களை பாதுகாப்பது மட்டுமன்றி எதிர்கால பெருங்கடல் வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் பாடுபடுகின்றார். இவ்வாறாக கடல்சார் கற்கைக்காக முயலும் போது ஏன்? எதற்காக? இவை அவசியமற்றது, இலங்கைக்கு பொருத்தமற்றது, என ஏராளமான வினாக்களும் விமர்சனங்களும் எழுந்த போது இலங்கை ஒரு அழகான சிறிய தீவு. இலங்கைக்கு கடல்சார் கல்வி நிச்சயமாக அவசியம் என்ற உறுதியுடன் அதனை நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்ணாக, கடலில் தன் கனவுகளை விதைத்து சமுத்திரப் பெண்ணாக உயர்ந்து நிற்கும் ஆஷா டி வோஸ் சாதிக்க முயலும் எத்தனையோ பெண்களிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

அத்துடன் இவர் உரையாற்றிய பல மேடைகள் மற்றும் நேர்காணல்களில் தன்னுடைய பெற்றோர் தனது கல்வி தொடர்பில் அளித்த பெருமளவு ஆதரவு மற்றும் ஊக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது அவரது எதிர்கால கற்றல் துறை குறித்து பிறிதொரு சிந்தனை இருந்த போதிலும் அவருடைய முயற்சிகள் மற்றும் ஆர்வத்திற்கு மதிப்பளித்ததோடு, அவர் சுதந்திரமாக கற்கவும் நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும் பக்க பலமாக இருந்துள்ளனரென குறிப்பிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கைப் பயணம் பலருக்கு முன்மாதிரியாக இருப்பது மட்டுமன்றி பெற்றோர்களும், பிள்ளைகளது சுயத்திற்கான வெளியை வழங்குதல் நன்று எனும் கருத்தையும் விதைத்திருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கம் மற்றும் கல்வித் திணைக்களங்கள் கடல்சார் கற்கைகள், கடல் பாலூட்டிகள் தொடர்பான கற்றல் கற்பித்தல் கலைத்திட்டங்களை உயர்கல்வி நிறுவன நடவடிக்கைகளிற்குள் உள்ளடக்குதல், மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதோடு இத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் இலங்கையிலிருந்து உருவாக வாய்ப்பாக அமையும்.

இலங்கையில் பெண்களுக்கான உதவிச் சேவைகள்

நம் நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய அவதானம் உங்களுக்கு இருக்கிறதா?!

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. பாலின அடிப்படையில் பெண்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயலையும் வன்முறையாக வரையறுக்கிறது. இது, அச் செயலின் விளைவாக ஏற்படக்கூடிய உடல், பாலியல் உடலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் அல்லது தனி அல்லது பொது வாழ்க்கையில் வற்புறுத்துவது அல்லது சுதந்திரத்தைப் எதேச்சதிகாரமாய்ப் பறிப்பது போன்றவற்றை வரையறுக்கிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது இன்று உலகில் பரவலாக நடந்து வரும் பேரவலங்களில் ஒன்றாகும். பேரிழப்பு தருகின்ற மனித உரிமை மீறல்கள் இன்றைய உலகில் சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறுகிறது. பல கலாசாரங்களில், பெண்கள் மீதான வன்முறை என்பது ஒரு சமூக நெறியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பெண்களை பொறுத்தவரையில் பலவிதமான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக எடுத்துக்கொண்டால் , வீட்டினுள்ளே துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு , கட்டாய அல்லது குழந்தைத் திருமணம் போன்றன. இதற்கான காரணம் என்னவெனில் ஆழமாக வேரூன்றிய வறுமை , குறைந்த கல்வி மற்றும் சமூக விழுமியங்கள் போன்றவையாகும். தவிர பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்கின்ற பழி , குற்றச்சாட்டுகள் மற்றும் அவமானங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க நாம் ஒன்றிணைவோம். இது தொடர்பான உதவி தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய சில சேவைகளின் பட்டியலை இப்பதிவில் காணலாம்.

பொதுவான அமைப்புகள்

சிறுவர் மேம்பாடு மற்றும் மகளிர் விவகார அமைச்சு

பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகள் , பெண்களின் உரிமையை பறித்தல், அவர்களைத் துன்புறுத்தல் மற்றும் அனைத்து வகையான சூழ்நிலைகள் தொடர்பான புகார்களை பெறுவதற்கும், உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்குமான நோக்கங்களுடன் இது நிறுவப்பட்டுள்ளது.

திறக்கும் நேரம் – வார நாட்கள் காலை 8.30 முதல் மாலை 5 மணிவரை.
24 மணிநேரத்துக்குள் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முகவரி : 5வது மாடி, செத்சிறிபாய ஸ்டேஜ் ll, பத்தரமுல்ல, இலங்கை .
தொலைபேசி இலக்கம் : 1938

குழந்தை மற்றும் பெண்களுக்கு உதவும் இலங்கை பொலிஸ் பணியகம்

எந்தவொரு வன்முறை அல்லது துஷ்பிரயோகத்திலிருந்தும் பாதுகாப்பு தேவைப்படுகின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.

திறக்கும் நேரம் : காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை.
முகவரி : 180/19, கிரேண்ட்பாஸ் வீதி, கொழும்பு-14.
தொலைபேசி இலக்கம் : 011 2826444/011 276 8076

Women In Need Sri Lanka

கடந்த 30 வருடங்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிக்க உறுதிகொண்டு செயல்படும் இலங்கையின் முன்னணி அமைப்புகளில் ஒன்று.

திறந்த நேரம்: 24 மணி நேர ஹாட்லைன்
முகவரி: 25, டிக்கல் சாலை, கொழும்பு-08.
தொலைபேசி எண்: 011 471 858

குடும்பத் திட்டமிடல் சங்கம்

வீடுகளில் நடக்கும் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடும்பத் திட்டமிடல் சங்கம் ஆலோசனை வழங்குகிறது.

திறக்கும் நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 37, 27 புல்லர்ஸ் எல்.என், கொழும்பு-04.
தொலைபேசி எண்: 011 255 5455

குடும்ப சுகாதார பணியகம்

குடும்ப சுகாதார பணியகம் (FHB) இலங்கையில் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான (MCH) மையமாகும், மேலும் தேசிய குடும்ப சுகாதார திட்டத்தில் MCH மற்றும் குடும்ப திட்டமிடல் சேவைகளின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கு பொறுப்பானதாகும்.

திறக்கும் நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 231 டி சரம் பி.எல், கொழும்பு-01.
தொலைபேசி எண்: 011 268 1309/ 011 269 6677

மா-செவன- சர்வோதய

பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் தூண்டுதலால் பாதிக்கப்பட்ட இளம் தாய்மார்களுக்கு, மா – செவன – சர்வோதய சிறந்த உதவிகளை வழங்கும் ஒரு இடமாகும். இது குடியிருப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: எண் 98 , ராவ தாவத்தை , மொறட்டுவ, இலங்கை.
தொலைபேசி எண்: 011 265 5577

பெண்கள் மேம்பாட்டு மையம்

மகளிர் மேம்பாட்டு மையம் (WDC) என்பது நன்கு அறியப்பட்ட தேசிய அளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனமாகும், இது பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு சேவை செய்கிறது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 61 , மலகம்போல வீதி, கண்டி.
தொலைபேசி எண்: 081 222 8158

லங்கா இளைஞர் அமைப்புகளின் வலையமைப்பு (LYON)

இலங்கை முழுவதும் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, ரத்னபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல போன்ற நகரங்களில் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிற, ஒரு இளைஞர் அமைப்பு.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 755/2, பன்னிபிட்டிய வீதி , பத்தரமுல்ல.
தொலைபேசி எண்: 011 288 7667

விகல்பணி தேசிய மகளிர் அமைப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படும், கொழும்பு, மொனராகலை, அனுராதபுர, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்ட ஒரு அமைப்பு.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 842/3, தஹம் மாவத்தை, மலம்பே.
தொலைபேசி எண்: 011 274 4160

நோர்வே அகதிகள் சபை

சட்ட உதவி மற்றும் பரிந்துரைகளை வழங்கும் இடம். கொழும்பு, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் திருகோணமலையில் செயல்பட்டு வருகிறது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 19/5, ஹார்டன் பிளேஸ், கொழும்பு-07.
தொலைபேசி எண்: 011 267 9210/077 373 3537

மேற்கு மாகாணம்

சால்வேஷன் ஆர்மி இலங்கை

சால்வேஷன் ஆர்மி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, குறுகிய கால தங்குமிட வசதியை வழங்குகிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 53 சர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை.
தொலைபேசி எண்: 011 232 4660

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயல் மன்றம் (MWRAF)

MWRAF பெண்களுக்கு எதிரான வன்முறை, மதத்தினுடைய அரசியல் பயன்பாடு, இனப்பெருக்க ஆரோக்கியம், ஆரம்ப / கட்டாய திருமணம் குறித்து விரிவான ஆய்வுகளை நடத்துகிறது, மேலும் அவை ஆலோசனை, சட்ட உதவி மற்றும் பரிந்துரைகளை வழங்குகின்றன.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 175 ஏ, நாவலை வீதி, நுகேகொட.
தொலைபேசி எண்: 011 440 5902/077 757 9984/077 306 3516

சமூக அக்கறை சங்கம்

கம்யூனிட்டி கன்சர்ன் சொசைட்டி, பெண்கள் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக நிற்கிறது மற்றும் ஹெவன என்று அழைக்கப்படும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களுக்கு ஒரு தங்குமிடம் நடத்துகிறது.

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.
முகவரி: 15/4 அப்போன்சு வீதி, மொரட்டுவ, இலங்கை.
தொலைபேசி எண்: 011 272 1812

வரவேற்பு மாளிகை – The Welcome House

குறுகிய கால தங்குமிடம், ஆலோசனை சேவைகள், பொலிஸ் உதவி, மருத்துவ மற்றும் சட்ட உதவிகளுக்கான இணைப்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், தங்கள் நிறுவனத்தின் மூலம் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு சேவைகளையும் வழங்குகிறது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 133, ஆனந்த ராஜகருண மாவத்தை, பொரல்ல.
தொலைபேசி எண்: 011 269 1871

சுமித்ரயோ

இலங்கையில் சுமித்ரயோ 1974 ஆம் ஆண்டில் மறைந்த, திருமதி ஜோன் டி மெல் என்பவரால் நிறுவப்பட்ட, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இது பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இலங்கையில் மனநல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி : 60 பி, ஹார்டன் பிளேஸ், கொழும்பு-07.
தொலைபேசி எண்: 011 269 2909

வடக்கு மாகாணம்

கேர் இன்டர்நேஷனல்

1950 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ளது. அவர்கள் தற்போது மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பிராந்தியங்களில் பணிபுரிகின்றனர். பாதுகாப்பான பரிந்துரைப்பு புள்ளியாக செயல்படுகிறார்கள் மற்றும் உதவி தேவைப்படும் பெண்களுக்கு தகுந்த ஆதரவை வழங்குகிறார்கள்.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 221, பார் வீதி , மட்டக்களப்பு.
தொலைபேசி எண்: 065 222 6128/077 344 4128

சூரிய மகளிர் மேம்பாட்டு சங்கம்

கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக பணியாற்றும் பெண் ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகளின் கூட்டுத்தாபனம். பாகுபாடற்ற, வன்முறை மற்றும் மரியாதைகளிலிருந்து விடுபட்டு, பெண்களை சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தும் ஒரு அமைதியான சமூகத்தை உருவாக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 27 ஏ, லேடி மானிங் டிரைவ், மட்டக்களப்பு.
தொலைபேசி எண்: 065 222 4483/077 672 6745

தெற்கு மாகாணம்

மகளிர் மையம்

அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சட்ட உதவி, ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்குகின்றனர்.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: கம்பாஹா 52/61, பெரிஸ் வத்தை , ஏகல, ஜா எல.
தொலைபேசி எண்: 011 223 1152

சமூக மேம்பாட்டு அமைப்பு (சி.டி.எஃப்)

பரிந்துரைகளை மற்றும் உதவிகளை வழங்குகிறது. இது ரத்னபுரி, கேகாலை, பதுளை, காலி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 8 ஏ / பி 3, வர்கத்தோட்டா வீதி , ரத்னபுரி.
தொலைபேசி எண்: 077 352 6006

கிழக்கு மாகாணம்

பாதிக்கப்பட்ட பெண்கள் மன்றம் (அவ்ப்) (அம்பாறை)

பாலின சமத்துவத்தின் கொள்கைகளில் பொதிந்துள்ள நிலையான அதிகாரமளித்தல் திட்டங்களுடன் பெண்கள் சமுதாயத்தை உருவாக்க உதவும் ஒரு அமைப்பு.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: ஆர்.கே.எம் சாலை, அக்கரைப்பற்று.
தொலைபேசி எண்: 067 227 8237/063 742 9005

மக்கள் நலச் சங்கம் – மட்டக்களப்பு

பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பல விஷயங்களில் உதவுகிறது, வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் அப்பகுதியின் குடியிருப்பாளர்களின் மனநலம் என அனைத்தையும் வழங்குகிறது.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: பாரதி லேன், மெயின் ஸ்ட்ரீட், கிரண், மட்டக்களப்பு.
தொலைபேசி எண்: 065 365 1153

மத்திய மாகாணம்

நடவடிக்கையில் பெண்கள் – Women in Action

வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வழங்கும், கண்டியை தளமாகக் கொண்ட அமைப்பு.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 61/2, டவுலகல சாலை, பேராதனிய.
தொலைபேசி எண்: 081 238 4053/071 814 3783

சுனில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு

துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு மறுவாழ்வு தொடர்புடைய சேவைகளுக்கு உதவி மற்றும் பரிந்துரைகளை வழங்குகின்றனர்.

திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
முகவரி: 23 , கமுனுபுர, சின்ஹபுர , வெலிகண்ட பொலன்னறுவை.
தொலைபேசி எண்: 0779523782

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களுக்கு உளவியல் மற்றும் சட்ட ரீதியான உதவிகளை வழங்கும் பல அமைப்புகள் உள்ளன. நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு எங்கும் செல்ல முடியாது என்றும் எப்போதும் நினைக்க வேண்டாம். இது எங்கள் தீவு, நமது சமூகத்தின் எந்தப் பகுதியும் நமது வாழ்வினை முன்னெடுத்துச் செல்ல உகந்தவையே..

கடும்போக்குடைய கண்டிப்பான பெற்றோரை கையாள்வது எப்படி?

நீங்கள்  பொது இடங்களில்  உங்கள் பெற்றோருடன்  நடக்கும் போது, உங்கள் முன்னிலையில் நீங்கள் காதல் கொண்ட நபர் தோன்றும் போது, அவரை  கண்டு திகைத்து இவர் என்னுடைய நண்பர் அல்லது என் நண்பரின் உறவினர் என்றவாறு பொய்யாக அறிமுகம் செய்த அனுபவம் உள்ளதா? 

இல்லையெனில், ஏதேனும் ஒரு நடுநிசி நேர களியாட், கொண்டாட்ட நிகழ்விற்காக வேண்டி  நண்பரது வீட்டில் இரவு பொழுதை கழிப்பதாக பொய் கூறிய அனுபவம் உள்ளதா? நிச்சயமாக எனக்கு இத்தகைய அனுபவம் நிறையவே உள்ளது. நான் எனது பெற்றோரை ஏமாற்றுவதற்காக இவ்வாறான காரியங்களை செய்யவில்லை. 2000 ஆண்டுகளின் ஆரம்ப காலங்களின் பிறந்த நாம் இவ்வாறான விடயங்களை எம் பெற்றோருடன் இலகுவாக பறிமாறிக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது, ஒரு மனிதன், தான் செய்த பிழைகளில் இருந்தே ஒழுங்கான அனுபவத்தை பயில்கின்றான். ஆம், அவ்வாறே இளமை காலத்தில் அனுபவிக்க வேண்டிய விடங்களை அனுபவித்து விட வேண்டும். இந்த குறிப்பிட்ட வயதில் வாழ்வின் இரசனையை புரியாமல், பிறகு எந்த வயதில் வாழ்க்கையை அனுபவிப்பது? ஆம் பெற்றோர்கள் எம் மீது அளவு கடந்த நம்பிக்கையையும் அக்கறையையும் கொண்டுள்ளார்கள்தான். ஆகையால் எமக்காக ஏராளமான வரையறைகளை விதிக்கிறார்கள். எனினும் இங்கு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான இடைவெளியின் காரணமாகவே பெற்றோர்கள் கடும்போக்குவாதிகளாக உருமாறுகின்றனர்.

உங்களது அயல்வீட்டிலிருக்கும் ஒரு 24 வயது அக்காவாக, ஒரு சகோதரியாக  என்னை எண்ணிக் கொள்ளுங்கள். நான் இத்தகைய கடுமையான போக்குடைய பெற்றோரை எவ்வாறு சமாளிப்பதென சில குறிப்புக்களை உங்களுடன் பகிர போகிறேன்.

தீவிரமான  நெருக்கமான கலந்துரையாடலின் போது 

குறிப்பிட்ட இந்த கலந்துரையாடலிற்கு முன்னதாகவே அந்த கலந்துரையாடலில் எத்தகைய கேள்விகள் எழும் என்று எண்ணிக் கொண்டு அதற்காக நாம் எவ்வாறு தயாராக போகின்றோம் என்ற மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் இருக்கையினை மனதிற் கொண்டு உங்களது கலந்துரையாடலும் கேள்விக்கான விடைகளும் அமையவேண்டும்.

நீங்கள் தனியாக சுற்றுலா ஒன்று செல்ல அனுமதி கேட்கும் போது, பெற்றோர்கள் வழமையாக பாடும் பாடல் பல்லவியாக யாருடன் செல்கிறாள்? யார் யார் உன்னுடன் வருகிறார்கள்? யார் வாகனத்தை செலுத்துகிறார்? போன்ற கேள்விகளை அவர்கள் கட்டாயம் கேட்பார்கள். ஆகவே இத்தகைய கேள்விகளுக்கு  துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாக்கள் போல பதில் கூற நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதேவேளையில் நீங்கள் கூறும் அதே பதில்களை உங்கள் நண்பர்களும் தேவை ஏற்படின் ஒப்பிக்க தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

அவர்களுடன் அமர்ந்து கதையுங்கள்

ஒரு முடிவினை எடுத்த பின் அதனை பெற்றோருக்கு தெரிவிக்கும் தருணத்தின் போது அன்றைய நாளில் அவர்களது மனநிலை எவ்வாறு உள்ளதென அவதானியுங்கள். பின்னர் அவர்களிடம் சென்று அமர்ந்து நீங்கள் எடுத்த முடிவினை தைரியமாக கூறுங்கள். உங்களது முடிவினை தெரிவிக்கும் போது “நான் இவ்வாறு உணர்கிறேன்”, “நான் நினைக்கிறேன்” போன்ற வார்த்தைகளை தவிர்த்து, தீர்க்கமாகவும் உறுதியாகவும் கதையுங்கள். 

உதாரணமாக சுற்றுலா ஒன்றுக்கு அனுமதி கோரும் போது, ‘இந்த ஹோட்டல் உகந்ததா?’ என்று வினவினால், ஆம் நிச்சயமாக.. நாம் நிறைய இடங்களில் விசாரித்தே இந்த ஹோட்டலினை பதிவு செய்தோம். குறிப்பாக உங்களது நட்பு வட்டாரத்தில் பெற்றோரின் நன்மதிப்பை வென்ற நண்பர் ஒருவர் நிச்சயமாக இருப்பார். அத்தகைய நண்பரை  முன்னிலைப் படுத்தி, இந்த சுற்றுலாவிற்கான சகல முன் ஏற்பாடுகளை அவர்தான் செய்தார் என்று கூறுவதன் மூலமாக, பெற்றோரின் நம்பிக்கைக்கு வலுவூட்டலாம். அது மட்டுமல்ல பெண்கள் அனைவருக்கும் பிரத்தியேக பெரிய அறை பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் நிச்சயமாக உறங்க செல்லும் முன்னர் ஜன்னல்கள் மூடி உள்ளதா என்பதை சரி பார்த்து விட்டே நிச்சயமாக செல்வோம் என்று அவர்கள் கேள்விகளை தொடுக்க  முன்னரே நாம் விளக்கத்துடன் பதில் கூறுவதால்,  தேவையற்ற முரண்பாடுகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியும்.

மரியாதையுடன் அவர்களுடன் சொல்லாடுதல்

ஒரு கட்டத்தில் உங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டால், நீங்கள் ஒரு போதும் பின் வாங்கக் கூடாது. மாறாக நான் அந்த அனுமதி கோரிய விடயத்திற்கு தகுதியுடையவள் என்றும், ஏன் எனக்கான அனுமதி மறுக்கப்பட்டது அதற்கான காரணத்தை கூறும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டறிய வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஒரு இரவு போசண விருந்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளீர்கள். பின்னர் நீங்கள் சற்று தாமதித்து விட்டிற்கு வர அனுமதி கோருகின்றீர்கள். எனினும் பெற்றோர்கள் மறுக்கின்றனர். இத்தகைய நேரங்களில், பெற்றோர்களிடம் ‘ஆம் எனக்கு தெரியும்’, தாமதித்து வீடு வருவது பாதுகாப்பானதல்ல.. எனினும் நான் வழமையாக அப்படி வருவதில்லையே! என்றாவது ஒரு நாள் தான் இவ்வாறு வருகின்றேன்.. நிச்சயமாக நான் பாதுகாப்பாக என் நண்பருடன் வருவேன் என்று கூறி, உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து விளக்கி அனுமதி பெற வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்டாலும், அதை முழுமையாக வழங்கப்பட்ட அனுமதி என எடுத்துக் கொள்ளக் கூடாது

இதுவே மிக முக்கியமான கட்டமாகும். ஏன் எனில், அன்றைய தினம் நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு வந்து சேர்வேன் என உறுதியளித்தீர்கள். எனினும் சில வேளைகளில் மது அருந்தி விட்டு வீடு வந்து சேர வேண்டிய குறிப்பிட்ட நேரத்தை கடந்து வீட்டீர்களாயின், அன்றைய தினம் நீங்கள் வீடு திரும்ப எத்தணிக்காதீர்கள். ஏன் எனின் இத்தகைய செயல்கள் அவர்களது நம்பிக்கையை தகர்க்க கூடியவையாகும்.

ஆகவே இத்தகைய சில குறிப்புக்கள் கடும்போக்கு குணங்களை சமாளிக்க கூடிய வகையில் அமையும் என நம்புகின்றேன். இனிமேல் நாம் அனைவரும் சுதந்திர பறவைகளாக இவ்வுலகில் வலம் வருவோம்.

சுற்றுச் சூழலுக்கு சாதகமான வாழ்க்கை முறைக்கு மாறுவோம்

பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்த வண்ணமே செல்கின்றது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் முற்று முழுதாக அழிவடைந்துள்ளன. எமது சமுத்திரங்கள் நாளுக்கு நாள் குப்பை தொட்டிகளாக மாறி வருகின்றன. பூமியின் வளங்கள் புதுப்பிக்க முடியாதளவிற்கு உபயோகிக்கப்படுகின்றன. 2030 ஆண்டளவில் காலநிலை மாற்றங்கள் மீளாத் தன்மையை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கவில்லை எனின், புகை கொண்ட வான மேகத்தை கொழும்பு மற்றும் ஏனைய நகர் பிரதேசங்களில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதுவே இயற்கையினால் எமக்கு விடுக்கப்பட கூடிய கடைசி எச்சரிக்கையாக கருதிக் கொள்ள வேண்டும். சூழல் மாசை முடியுமான அளவு குறைத்து கொண்டு நிலையான வாழ்க்கை முறை ஒன்றை நடைமுறைப்படுத்தி கொள்வதே சூழலுக்கு எம்மால் செய்யக்கூடிய இறுதி மரியாதையாக விளங்குவதோடு, புவி வெப்பமடைதல் தடுக்கும்  யுக்தியாக கருதப்படுகின்றது. 

இதற்கான சிறந்த 5 திட்டங்கள் இதோ;

  1. ஆய்வு செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்

சுற்றுச்சூழலுக்கு தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். சுற்றுச்சூழலுக்கு சாதகமான பொருட்களை நுகர்வு செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? புவி வெப்பம் அடைதல் என்றால் என்ன? பருவ நிலை மாற்றம் எமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது? இது போன்ற வினாக்களுக்கு போதுமான அளவு விளக்கம் ஒரு குறுகிய Web Search மூலம் அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக கார்பன் அடிச்சுவடு கணிப்பான் (Carbon  Footprint Calculator) மூலமாக ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கை, சூழலுக்கு வெளியிடும் கார்பனின் அளவை கணித்துக் கொள்ள முடியும். ஆகவே சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

  1. தாவரங்களை மாத்திரம் கொண்ட உணவுப் பழக்கத்திற்கு மாற்றம் பெறல் 

குறைந்தளவான இறைச்சி மற்றும் பால் பாவனை பேணுதல் பாரிய உந்துகோலாக இதற்கு இருக்கும் என்பது சற்று ஆச்சரியமூட்டக்கூடிய விடயமாகும். இறைச்சி உற்பத்தி, பக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுவதனால் நோய்கள் உண்டாகுவதற்கு காரணமாக அமைகிறது. Greenpeace USA இன் தரவுகளின் படி, பஸ், கார் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்பின் அதேயளவு பாதிப்பை, கால்நடை வளர்ப்பினால் பச்சைவீட்டு விளைவிற்கு தாக்கம் ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. ஒரேயடியாக சைவ உணவிற்கு மாற்றம் பெறுதல் கடினமான விடயமாகும். ஆகவே எமது தினசரி உணவு பழக்கவழக்கத்தில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தி முற்றுமுழுதாக இறைச்சி மற்றும் பால் உணவுகளை தவிர்த்து கொள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும். 

  1. மோட்டார் வாகன பயன்பாட்டைக் குறைத்தல்

கொழும்பு மற்றும் ஏனைய புறநகர் பிரதேசங்களின் காற்று மாசடைவதற்கு பிரதானமான காரணி போக்குவரத்து ஆகும். அது மட்டுமில்லாது அதிகளவான இதர கார்பன் வாயுக்களை வெளியிடும் பொருளாக வலுவெடுத்துள்ளது. வாகன பாவனையை நிறுத்திக்கொள்வது இலகுவான விடயம் கிடையாது. எனினும் சுபீட்சமான எதிர்காலம் ஒன்றை நோக்கி பயணிப்பதற்கு இதுவோர் பாரிய உந்துகோலாக அமையும். ஆகவே முடியுமான அளவு பொது போக்குவரத்து வாகனத்தில் செல்வதை பழக்கமாக்குவதோடு, குறுகிய தூரமாயின் கால் நடை அல்லது துவிச்சக்கர வண்டி கொண்ட வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுதல் சிறப்பாகும். 

  1. பாவனை சேமிப்பு

தேவையில்லாத மின் விளக்குகளை அணைத்தல், உலர்வு சாதனங்களில் துணிகளை இடாமல் காற்று மற்றும் சூரிய ஒளி மிகுந்த இடங்களில் காயவைத்தல் போன்ற சிறு சிறு விஷயங்களில் மின் பாவனையை குறைத்துக்கொள்வதுடன், மின் கட்டணங்களையும் சேமித்துக் கொள்ளலாம். பழைய குமிழ் பல்புகளுக்கு பதிலாக CFL, LED பல்புகளுக்கு மாற்றம் பெறுவதன் மூலம் 20% – 80% வீத மின் சேமிப்பினை பெற்றுக்கொள்கிறோம்.

  1. எளிமையான வாழ்வு முறை (Minimalism)

‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாழ்வதனை Minimalism என கூறுவார்கள். சேமித்து வாழ்வதனை இது எடுத்துரைக்கிறது. மாறாக இல்லாதோருக்கு வழங்குதல், சுழற்சி முறையை ஊக்குவித்தல் மற்றும் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத காரணிகளை மாத்திரம் கொண்ட வாழ்க்கையை வாழ்வதனை இது வரைவிலக்கணப் படுத்துகிறது. 

சூழலுக்கு உகந்த பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படும் எனின் அதனை பெற்றுக் கொள்வதற்கான இடங்கள் இதோ, 

  1. மீள் உபயோகிக்க கூடிய பாத்திரங்கள் 

உலோகப் பாத்திரங்கள், கண்ணாடி கோப்பைகள், மூங்கில் உற்பத்திகள் வரை அனைத்தையும் ஒரே அழுத்தில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அடுத்த முறை குளிர் பானங்கள் வாங்கும் பொழுது, இவ்வாறு மீள் சுழற்சிக்கு உதவும் இதர வகைகளை தேர்வு செய்தல் வரவேற்கத்தக்கது. Stainless steel பாத்திரங்கள் நீண்ட காலம் பாவிக்க முடியும் என்பதோடு ஒக்சியேற்ற செயற்பாடுளுக்கு பயன்படும். மூங்கிலை வைத்து செய்யும் பொருட்கள் 100% சேதன செயற்கை என்பதால் மக்கும் இயல்பை கொண்டுள்ளதோடு, அதிக பாரம் அற்ற பொருள்களாக விளங்குகின்றது. 

  • Bhumi Sri Lanka
    Online: www.bhumionline.org
    Email: info@bhumi-srilanka.org
    Tel: 0769681347
  • Simply Eco Sri Lanka
    Online: facebook.com/simplyecosrilanka
    Email: simplyecosrilanka@gmail.com
  • Good Market
    Online: www.goodmarket.global
    Email: hello@goodmarket.global
    Tel: 077 020 8642
  1. சூழலுக்கு ஏதுவான மாதவிடாய் தொடர்பான பொருட்கள்

மாதவிடாய் பொருட்கள் அத்தியாவசிய விடயம் என்பது யாவரும் அறிந்ததே, எனினும் அதில் காணப்படும் நச்சுப் பதார்த்தங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொலித்தீன் இதழ்கள் சூழலுக்கு பாரியதோர் அச்சுறுத்தலை விளைவிக்கின்றன. இவ் நச்சுப்பதார்த்தங்கள் எமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு சூழலையும் மாசு படுத்துகின்றன. ஆகவே இதற்கு பதிலாக சூழலுக்கு உகந்த பொருட்களை கொள்வனவு செய்தல் அத்தியவசியமாகும். துணியை கொண்ட மாதவிடாய் அட்டைகள் பிளாஸ்டிக் சானிட்டரி நாப்கின்களுக்கு சிறந்த ஓர் மாற்றீடு ஆகும். இவை மீள் உபயோகிக்ககூடியதாக இருப்பதுடன் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு செய்யப்பட்டவையாகும். 

  • Good Market
    Online: www.goodmarket.global
    Email: hello@goodmarket.global
    Tel: 077 020 8642
  • www.momijinatural.com/
    Tel: 011 574 1020
    Email: info@momijinatural.com
  • Eco Kade – Rodirgo Lane, Dehiwala, 10350
    Tel: 0768621306
    Email: info@ecokade.com
  1. மீள் உபயோகப்படும் Shopping Bags

மீள் உபயோகப்படும் Shopping Bags இன் பயன்பாடு இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக புழக்கத்தில் உள்ளது என்பது வரவேற்கத்தக்க ஓர் விடயமாகும். இது பயன்பாட்டிற்கு இலகுவாக இருப்பதோடு பணத்தையும் சேமித்து வருகின்றது. எமது Super Market களில் இருக்கும் பொலித்தீன் பைகள் மறுசுழற்சி அற்றவையாகவும், அதன் உற்பத்திக்கு அதிகளவான இயற்கை வாயு மற்றும் கச்சா எண்ணெய் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  • Cally Reusable Bags
    Online: cally.lk
    Tel: 077 713 8182
    Email: info@cally.lk
  1. பாம் எண்ணெய் அற்ற, சூழலுக்கு உகந்த சவர்க்கார வகைகள்

எமக்கு பாதகமற்ற பொருட்களின் பாவனையில் இருந்து எம்மை மாற்றிக்கொள்வதோடு, பிளாஸ்டிக் மற்றும் நச்சு சார்ந்த பாவனைகளில் இருந்து விடுபடுதல் அவசியமாகும். Triclosan மற்றும் Formaldehyde ஆகிய இரு அசேதன நுண்ணுயிர் கொல்லிகள் எமது சருமங்களை பாதிப்படைய செய்வதுடன் சூழலுக்கு நண்பனாக விளங்கும் பல நுண்ணுயிரிகளையும் அழித்து வருகின்றன. சேதன பதார்த்தங்கள் அடங்கிய சவர்க்காரம் மற்றும் குளியல் திரவியங்கள் சூழலுக்கு முற்றுமுழுதாக தாக்கம் செலுத்தும் என கூற முடியாது எனினும், போதுமான அளவிற்கு கட்டுப்படுத்தக்கூடியது. இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி முன்னால் சென்று நாம் உபயோகிக்கும் பொருட்களில் ‘Vegan’ , ‘palm oil free’ அல்லது ‘cruelty free’ சொற் பதங்கள் உள்ளதா என வினவ வேண்டியது அவசியமாகும். உலகின் அதிகளவிலான காடழிப்புக்கு பாம் எண்ணெய் உற்பத்தி காரணமாக அமைந்துள்ளது. பாம் எண்ணெய் அதிகளவிலான நீரினை அகத்துறுஞ்சுவதோடு, பல கணிய வகைகளையும் உட்கொள்கின்றன. ஆகவே அவை சூழலுக்கு பாரியளவு தீங்கு பயக்கும் என வரைவிலக்கணப் படுத்தப்படுகிறது. 

  • Bath bliss
    Online: Instagram.com/bathblisshandmade
    Tel: 0778752774
    Email: bathblisshandmade@gmail.com
  • JustGoodness.co
    Online: www.justgoodness.co
    Tel: 0776558993
    Email: hithere@justgoodness.co
  • Healing Island SL
    Online: healingislandsl.com
    Tel: 0777780890
    Email: healingislandsl@gmail.com
  • Aastha Naturals
    Online: aasthanaturals.com
    Tel: 0712730635
    Email: anusha@aasthanaturals.com
  • Aurelia Soapworks
    Online: aureliasoapworks.myshopbox.lk
    Tel: 0752152159
  • Sustainablee (Sells Alum Crystals as natural deodorant)
    Online: sustainableeyours.com
    Tel: 0773840515
    Email: info@sustainableeyours.com

தீண்டாமை எனும் தீ

அக்காவின் மூன்றரை வயதுக் குழந்தை, சாய்மானக் கதிரையின் மீது ஏறி விளையாட முயற்சித்துக் கொண்டிருந்தாள். பின்னாலிருந்து சட்டெனப் போய் தூக்கிக் கொண்டு மெல்லக் கதை கொடுத்தபடி யன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். அவளும், நல்ல ஒய்யாரமாக என் இடைகளில் உட்கார்ந்து யன்னலுக்கு வெளியால் விடுப்புப் பார்த்தபடி இருந்தாள். அப்போது எங்கிருந்தோ வந்த சிட்டுக்குருவியொன்று, தெருவிலிருந்த டெலிஃபோன் போஸ்ட்டிலிருந்து, அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு கனெக்சன் போகும் மெல்லிய வயரில் வந்து உட்கார்ந்து கொண்டது. “கீச்சென்ற” தன் மழலைக் குரலில் ‘BIRD’ என்றாள். உடனே நான் புத்திசாலித்தனமாக ‘ இது சிட்டுக்குருவி..குருவி.. குருவி சொல்லுங்கோ’ என்றேன்.. மறுபடியும் ‘BIRD’ என்றாள். அவளுக்கு சொல்லத் தெரியவில்லையோ என்னவோ, முறைத்துப் பார்த்தாள் என் மூஞ்சியை.. ‘வேறென்ன BIRD தெரியும் உங்களுக்கு?’ எனக்கேட்டேன்.. மறுபடியும் ‘BIRD’ என்றாள். ‘ ஓ அம்மா, வேற BIRD சொல்லுங்கோ..’ என்று கேட்க, இன்னும் பெலமாக ‘BIRD’ என்றாள் பல்லைக்கடித்துக் கொண்டு…

நான் நன்கு பரீட்சியமான பறவை தானே என்று, ‘உனக்கு காக்கா தெரியுமல்லா.. காக்கா ? ‘ என்று கேட்டேன். அவளுக்கு விளங்கவில்லை போல, கொஞ்ச நேரம் பெரும் வியப்பாகப் பார்த்தாள். ஆனால் வாய் திறந்தாளில்லை. மனம் விடாமல் தொடர்ந்து ‘கா..கா..’ வென்று கத்தியெல்லாம் பார்த்தேன். தன் முழுப்பெலத்தோடு, ஓங்கிக் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு இறங்கித் தன் தாயிடம் ஓடிவிட்டாள்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடினார் புரட்சிக்கவி பாரதி. இத்தனை நூற்றாண்டுகளைக் கண்டு விட்ட போதிலும், எத்தனையோ யுத்தங்களைக் கடந்து விட்ட போதிலும் மனித மனங்களில் சாதிவெறி, மதவெறி, தீண்டாமை என்பன இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பூமியில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் பிறப்பாலும், மனிதர் என்ற இனத்தாலும் ஒன்றாக உள்ள போதிலும் சாதி, மத பேதங்கள் ஏன் உருவாக்கப்பட்டது? அதனால் யார் பயனடைகின்றனர்? யார் பாதிக்கப்படுகின்றனர்?

“சாதி மனிதனை சாக்கடையாக்கும், மதம் மனிதனை மிருகமாக்கும்“, எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனித சமூகம் தீண்டாமையில் கட்டுண்டு கிடக்கத்தான் போகிறது என்று அன்றே தந்தை பெரியார் கூறினார்.

பணம் படைத்த சாதிக்காரர்கள் ஒருசிலர் தமது சாதியை முன்னிறுத்தி ஊருக்கு நற்காரியங்களை செய்தும், ஊருக்குள் பெரும்பதவி வகித்தும், ஊர் காரியங்களில் செல்வாக்குச் செலுத்தியும், பிற சமூகங்களை தீண்டத்தகாதவர்களாக சித்தரித்தும்,  அடக்குமுறைகளை செய்வதை கேள்விப்படுகிறோம். அறிஞர் டாக்டர் அம்பேத்கர் கூறியது போல “ஒரு நல்ல மனிதன் தயாரிக்கும் வெடிகுண்டு என்ன வெடிக்காமலா இருக்கும்? அல்லது விஷப்புகை தான் கொல்லாமல்  இருக்குமா? சாதி உணர்வுகளில் நிரம்பிய ஒருவன், எத்தகைய நல்லவனாய்ப் போற்றப் பட்டாலும், அவனுக்குள் முளை விட்ட சாதி என்ற விஷச்செடியே அவனை ஒருநாள் அழித்துவிடும் என்பதே உண்மை. 

சாதி எனும் கொடிய தீ நம் நாட்டில் மட்டுமல்லாது பிற தேசங்களிலும் தலை விரித்தாடியது நாமறிந்ததே. இந்தியாவில் தலித் மக்கள் சாதி ரீதியான அதிகமான ஒடுக்குமுறைகளையும் வன்கொடுமைகளையும் அனுபவிக்கின்றார்கள். அமெரிக்காவில் அண்மையில் கூட கறுப்பினத்தர்கள் வெள்ளையர்களால்  கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இப்படி சாதாரண வீதித்தெருக்கள் துவங்கி, உலகளவில் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

இலங்கையைப் பொறுத்தவரை சரி நிகரற்று, சமத்துவம் என்பதை பேச்சளவில் உச்சரித்துக் கொண்டு மட்டுமே வாழும் நிலை இன்று வரை காணப்படுகிறது. நீறுபூத்த நெருப்பாக சாதிய வேறுபாடுகள் அனைத்துத் தளங்களிலும்  நோக்கப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்ற பெயருடன், குறித்த  சமூகத்தினரின் செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டே வருகின்றன. இத்தகைய வேறுபாடுகள் தமிழ்ச்சமூகத்தில் மட்டுமன்றி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது. 

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பார்கள். நடைமுறையில் தொழிலைக்கொண்டும், இருக்கும் இடத்தைக்கொண்டும் ஒருவருடைய சாதியை இனங்கண்டு அவரை இழிவாக எண்ணும் போக்கு கட்டாயம் மாற்றமடைய வேண்டும். கடமை செய்பவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கக் கூட வக்கற்ற, முதலாளித்துவ சிந்தனாவாதிகள் நிறைந்த சமுகம், தமது இருப்பிடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்திய ஒரு போக்கற்ற சிந்தனையாகவே சாதிகளும், மதங்களும், ஏனைய தீண்டாமைகளும் அடக்குமுறைகளும் இருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்திலிருந்தே சாதியக் கட்டமைப்புகள் கட்டுடைக்கப் படாமலே இன்றுவரை இருக்கின்றது. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை பகுதியில் நகர சபையினால் வெள்ளாளர்களை அடக்கம் செய்ய தனி மயானமும் , ஏனைய சாதி மக்களை அடக்கம் செய்ய தனி மயானமும் பிரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இது எவ்வளவு கொடுமையான விடயம். இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறார்கள். 

இந்தச் சமூகத்தில் பிறப்புச்சான்று தொடக்கம், பள்ளிகள், கல்விநிலையங்கள், வேலையிடங்கள், வீடு, குடும்பம், திருமணம், பொது நிகழ்வுகள், சமூக மேடைகள், வைபவங்கள், கோயில் குளங்கள், கடைகள், விருந்து நிலையங்கள், பொதுப் போக்குவரத்து,பொதுச் சேவை அமைப்புகள், வைத்தியசாலைகள், இறப்பு, ஈமைக்கிரியை என, அடிப்படை அரசியல் அதிகாரங்கள் வரை, தொடர்ந்து ஒரு மனிதனை இத்தகைய பாகுபாடுகளும், அதிகார அடக்குமுறைகளும் நம்மையறியாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

தற்காலத்தில் சமூக வலைதளங்களிலும், ஏனைய சமூக ஊடகங்களிலும் கவனித்துப் பார்த்தால், இன, மத, மொழி, பிரதேசவாத, வர்க்க ரீதியான மற்றும் வெவ்வேறு விதமான பாகுபாடுகளின்பால், இன்றைய இளைஞர்கள் பரவலாக ஈர்க்கப்படுகின்றார்களோ என்ற கேள்வி எழுகிறது. இதனால் எதிர்வருங்காலங்களில் சமூகத்தின்பால் சமூகம் பெரும் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி, மனிதரை மனிதர் அழித்துக் கொள்ளும் அவல நிலைக்கு மாத்திரமே தள்ளப்படுகிறோமே தவிர, எதுவித நன்மையும் யதார்த்தத்தில் நிகழப்போவதில்லை.  

அப்பழுக்கற்ற உண்மை என்னவென்றால், இவை அனைத்தும் மனித சமூகத்தின் கூட்டுப்பலத்தை உடைத்தெறியும் அதிகார யுக்தியே தவிர, அவற்றை நாம் முன்னிறுத்தி, அடையாளப்படுத்தி, அதில் பெருமிதம் கொள்ள முயல்வது என்பது அடிமுட்டாள்தனத்தின் உச்சமாகவே இருக்கும்! 

சிந்திப்போம்.

முதல் மாற்றத்தை, நம்மில் ஏற்படுத்துவோம்.

இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் 2021க்குப் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையர் – நிம்மி ஹாரஸ்கம

நிம்மி ஹாரஸ்கம இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் 2021 இல் சிறந்த நாடக நடிப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறை ஜாம்பவான்களான ஒலிவியா கோல்மன்(Olivia Colman), கில்லியன் ஆண்டர்சன் (Gillian Anderson), ஹக் லாரி (Hugh Laurie), தஹார் ரஹீம்(Tahar Rahim) மற்றும் ஜென்னா கோல்மன்(Jenna Colman) ஆகியோருடன் இலங்கையைச் சேர்ந்த நடிகை நிம்மி ஹாரஸ்கம (Nimmi Harasgama), இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் 2021 இல் சிறந்த நாடக செயல்திறன் விருதுக்கு போட்டியிடுகிறார்.

ஐடிவி நாடகத் தொடரான ‘​​தி குட் கர்மா ஹாஸ்பிடல் – (The good karma Hospital)’ இல் மருத்துவமனையில் நர்ஸ் ‘மேரி ரோட்ரிகஸின்’ கதாபாத்திரத்துக்காக நிம்மி இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.

நிம்மி பத்திரிகை நேர்காணல் ஒன்றில் சமீபத்தில், “இதுபோன்ற அற்புதமான கலைஞர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த செய்தியால் நான் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறி உள்ளார்.

மூன்று தொடர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே நிம்மி ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். டைகர் ஆஸ்பெக்ட் (tiger aspect) புரொடக்ஷன்ஸ் தயாரித்த குட் கர்மா ஹாஸ்பிடல் (The good karma Hospital) நாடகம், இலங்கையில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் படமாக்கப்பட்டது, இந்தியாவில் இருந்து வந்து வேலை தேடும் மருத்துவர் ரூபி வாக்கரின்(Ruby Walker) வாழ்க்கையைப் பற்றியது இந்த நாடகம். அங்கு அவர் சூரியனைப் போன்ற பிரகாசமான வாழ்க்கையை எதிர்பார்க்கிறார், ஆனால் ஒரு ஆதாரமற்ற மருத்துவமனையில் வேலை செய்யும் போது அது யதார்த்தமற்றுப் போய்விடுகிறது.

பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள், https://www.nationaltvawards.com/vote/category/drama-performance இல் உள்நுழைந்து நிம்மி ஹாரஸ்கமவிற்கு வாக்களிக்கலாம். உங்கள் வாக்கினை, உங்கள் பெயர் மற்றும் முகவரியை உள்ளிட்டு சமர்ப்பிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நம்ம ஊரு – யாழ்ப்பாணம்

தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான  நகரம் யாழ்ப்பாணம்  என அழைக்கப்பட்டதுடன் இலங்கைத் தீவின் இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட நகரமாகவும் விளங்கியது. பல தசாப்தங்களாக யுத்தம், குடியேற்றம் உட்பட உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றால் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் இந்த நகரம் ஆக்கபூர்வமான கலாச்சாரம், விரும்பத்தக்க உணவு வகைகள் மற்றும் வரலாற்று தளங்களின் சின்னமாக விளங்குகிறது. இங்கே நாம், யாழ்ப்பாணம் பல ஆண்டுகளாக சந்தித்த மாற்றங்களையும், காலப்போக்கில் விடாமுயற்சியுடன் கட்டியெழுப்பப்பட்ட அதன் வளமான பாரம்பரியத்தையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாண இராச்சியம்

ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம் என்றும் அழைக்கப்படும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் விவாதிக்கப்படுகிறது, எனினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் 1215 ஆம் ஆண்டு மாகாவின் படையெடுப்போடு இந்த  இராச்சியம் நிறுவப்பட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர். ஆரியச்சக்கரவர்த்திகள் தமது  அதிகாரத்தை பலப்படுத்தியதை அடுத்து வந்த மிகப்பெரிய வளர்ச்சி, நல்லூரை யாழ்ப்பாணத்தின் தலைநகராக நிறுவியதாகும். 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், சமூக மற்றும் அரசியலில்  உச்சக்கட்ட முன்னேற்றங்கள் ஏற்படும் வரை இப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையின் அறிகுறிகள் அடையாளம் காணப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் ஆரியச்சக்கரவர்த்திகளின்  150 ஆண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து, ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி காலத்தில், அவனது வளர்ப்பு மகனான சபுமால் இளவரசரின் படையெடுப்பினால், இந்த இராச்சியம் கோட்டை  இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. எவ்வாறாயினும், 1467 ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியம் சிதைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாண இராச்சியம், சிங்கையரியன் வம்சத்தை மீட்டெடுத்து, தன் சுதந்திரத்தை மீண்டும் பெற்றது.

அந்த நேரத்தில், தென்னிந்திய படையெடுப்பின் அச்சுறுத்தல் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், கோட்டை இராச்சியம் கடும் வீழ்ச்சியை கண்டதுடன், கண்டி இராச்சியமும் வெற்றி பெறுவதற்கான எந்த திட்டங்களையும் காட்டவில்லை. சுவாரஸ்யமாக, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இராச்சியங்களுக்கிடையேயான தொடர்பாடல்கள் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் உள்ளன. 1505 இல் போர்த்துக்கேயரின் படையெடுப்பால் தான் யாழ்ப்பாண இராச்சியம் அதன் புகழ்பெற்ற நாட்களின் முடிவைக் கண்டது.

இந்த சங்கிலியன் சிலை யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சங்கிலிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை யாழ்ப்பாண நகரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

ஜஃப்னா பட்டணம் மற்றும் அருகிலுள்ள தீவுகளின் பழங்கால வரைபடம் (செப்பு வேலைப்பாடு). 1658 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், யாழ்ப்பாண மாகாணமும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டையும் இலங்கையில் கடைசியாக போர்த்துக்கேயரின் வசமிருந்தன. இது 1672 இல் பி.எச். பால்டேயஸ் அச்சிட்டபட்டது.

காலனித்துவ சகாப்தம்

ஆரம்ப கட்டத்தில், போர்த்துக்கேயர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் கிடைக்கப்பெற்ற மசாலாப் பொருட்களான கறுவா மற்றும் மிளகு ஆகியவற்றைப் பெறுவதில் ஆர்வம் காட்டியதால், யாழ்ப்பாணத்தில் குறைந்தளவில் கவனம் செலுத்தினர். லாபகரமான சந்தைகளின் பிரதான இருப்பிடம், கோட்டை  இராச்சியத்திற்குள் போர்த்துகேய எதிர்ப்பு குழுக்களின் ஆதரவாளர்களாக கருதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வன்னியர் தலைவர்கள் மற்றும் போர்த்துக்கேயரின் நலன்களுக்கு மையமாக இருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரி நடவடிக்கைகளின் தலையீடு உள்ளிட்ட பல காரணங்களால், யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் கவனத்தை ஈர்க்கத் துவங்கியது. இராச்சியம் டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட கூடும் எனவும் அவர்கள் அஞ்சினர். ஆகையால், 1620 ஆம் ஆண்டில், அவர்கள் யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னரான இரண்டாம் சங்கிலியை கடற்படை மற்றும் தரைவழித் தாக்குதல் மூலமாகக் கைப்பற்றினர். சங்கிலி மன்னனின் சிலை இன்றும் Royal Palace இடிபாடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. பல புனித இந்து கோவில்கள் அழிக்கப்பட்டது  உட்பட, உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏராளமான இழப்புக்கள் நிகழ்ந்தன. போர்த்துக்கேய மிஷனரி நடவடிக்கைகளின் செல்வாக்கின் கீழ் ஏற்பட்ட கிறிஸ்தவ மத மாற்றங்களின் அலை, அக்காலத்தில் பிராந்தியத்தில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் பிலிப் டி ஒலிவேராவின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டது. இவர் தலைநகரை நல்லூரிலிருந்து Jaffnapatao இற்கு மாற்றியதுடன், 1627 இல் அவர் இறக்கும் வரை கேப்டன்-மேஜராக பணியாற்றினார். கடற்கரை நகரமான குருநகருக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற யாழ்ப்பாண துறைமுகம் அல்லது கோட்டை  அவரது காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் இது 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் டச்சுக்காரர்களால் மீண்டும் கட்டப்பட்டது.

மூன்று மாத முற்றுகையைத் தொடர்ந்து, போர்த்துக்கேயர்கள் 1658 இல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியிடம் யாழ்ப்பாணக் கோட்டையை இழந்தனர். 140 ஆண்டுகால டச்சு காலனித்துவ ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் இருந்ததுடன், இதன்போது வர்த்தகத்திற்கான குறிப்பிடத்தக்க மையமாக மாறியது. வரலாற்றுக் கணக்குகளின்படி, டச்சுக்காரர்கள் போர்த்துக்கேயர்களை விட சகிப்புத்தன்மை உள்ளவர்களாக கருதப்பட்டனர். இந்து கோவில்கள் மற்றும் சொத்துக்களின் பெரும்பகுதி புனரமைக்கப்பட்டு, பூர்வீக மத நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையின் பெரிய அளவிலான புதுப்பிப்பைத் தவிர, பிரஸ்பைடிரியன் தேவாலயங்கள் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் இப்பகுதியில் வளர்ச்சியடைந்தன.

1795 முதல் ஆங்கிலேயரின்  காலனித்துவ ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் மேலும் முன்னேற்றமடைந்தது. இக்காலத்தில் யாழ்ப்பாண மக்களின் கல்வி மட்டம் திடீரென விருத்தி அடைய துவங்கியது. அந்த நேரத்தில் பல கிறிஸ்தவ மிஷனரிகளால் கட்டப்பட்ட பள்ளிகள் நிறுவப்பட்டதே இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும். கொழும்பு, கண்டி மற்றும் தீவின் பிற பகுதிகளுடன் இப்பகுதியை இணைக்கும் புதிய சாலைகள் மற்றும் புகையிரத தண்டவாளங்கள் கட்டுவது உள்ளிட்ட செழிப்பு மற்றும் வளர்ச்சியின் உயர்வு நிலைகளை ஆங்கிலேயர் காலத்தில் யாழ்ப்பாணம் கண்டது. 

சுதந்திரத்திற்குப் பின்னர்

1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இனவாதத்தால் நிகழ்ந்த முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குள் யாழ்ப்பாணம் சிக்குண்டது.  ஒரு காலத்தில் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விளங்கிய யாழ்ப்பாணம், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொந்தளிப்பான போர் மண்டலமாக மாறியது. மோதல் காரணமாக, யாழ்ப்பாண மக்களில் கணிசமான பகுதியினர் வெளிநாடுகளுக்கு அல்லது தீவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். 1981 ஆம் ஆண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. இது பல குறிப்பிடத்தக்க புத்தகங்களையும் ஆவணங்களையும் கொண்டிருந்ததோடு  ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்கியது. இது நாட்டின் வரலாற்றில் என்றும் மறவாப் பேரழிவாக கருதப்படுகிறது.  2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கைகளைத் தொடர்ந்து ஒரு குறுகிய கால சமாதான உறவு காணப்பட்ட போதிலும், மீண்டும் 2006 இல் ஏற்பட்ட பதட்டநிலை , 2009 இல் போர் முடியும் வரை தொடர்ந்தது.

இன்று, முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரின் காயங்கள் நகரத்தின் கட்டிடங்களின் இடிபாடுகள் மற்றும் வெடித்த கான்கிரீட்டைத் தாண்டி செல்கின்றன. யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மையான மக்களிடையே அதன் வடுக்கள் நீடிக்கின்றன. எவ்வாறாயினும், நகரம் அதன் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் மீளனைத்துக்கொண்டுள்ளதுடன் அதன் சமூக உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. போருக்குப் பிந்தைய புனரமைப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது, கடந்த காலத்தின் காயங்களை குணப்படுத்தும் முயற்சிகளே பலரின் எதிர்பார்ப்பாகும். 

வரலாறு மற்றும் பாரம்பரியம்

பின்வரும் வரலாற்று தளங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரம் என்பவற்றுடன் அழகாக பின்னிப்பிணைந்துள்ளது. அவை யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தினை  விவரிக்க உதவுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி கோயில்

அன்பு, போர் மற்றும் அழகின் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி  கோயில் பல ஆண்டுகளாக பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. முதலில் 948 A.D இல் கட்டப்பட்ட கோவில், புவனேகபாகு மற்றும் இளவரசர் சபுமால் உட்பட பலரால் புனரமைக்கப்பட்டபோது அதன் மகிமையை உணர்த்தியது. கோயிலால் பெயர் பெற்ற நகரமான நல்லூர், அதன் மூலோபாய இருப்பிடம் மற்றும் தற்காப்பு கோட்டை காரணமாக மன்னர்களின் ஆட்சியின் போது தலைநகராக செயல்பட்டது.

இந்த கோயிலின் கட்டடக்கலை மரபு தங்கத்தால் சூழப்பட்ட நான்கு கோபுரங்கள், வெளிப்புற முற்றம், தீர்த்தக் கேணி, புண்ணியத்தலம் மற்றும் பிற குறிப்பிடத்தக்க கூறுகள் மூலம் பிரதிபலிக்கப்படுகிறது. பண்டைய நாட்களில், வெளி வட்டங்கள் வணிக விஷயங்களுக்காகவும் அங்கு வசித்த பொது மக்களுக்காகவும் கொடுக்கப்பட்ட அதேவேளை உள் வட்டங்கள் பிரபுக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கை எதிர்கொண்டு, தங்கத்தால் சூழப்பட்ட ஐந்து மாடி கோபுரத்தைக் கொண்டுள்ளது. தற்போது, உள் வட்டம் விநாயகர், வைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால  சன்னிதிகளைக் கொண்டுள்ளது. புனித குளம் மற்றும் தண்டாயுதபாணி சன்னதி தெற்குப் பிரிவில் அமைந்துள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகம்

1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பது நவீன வரலாற்றில் மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் 97,000 தொகுதிகளை உள்ளடக்கிய மதிப்புமிக்க பொருட்கள் இருந்தன. அவற்றில் தீயினால் அழிக்கப்பட பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஈடுசெய்ய முடியாத பண்டைய நூல்கள் ஆகியவை உள்ளடங்கும். நலன் விரும்பிகளின் தாராளமான நன்கொடைகளுடன், நூலகம் 2001 ஆம் ஆண்டளவில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. இது போர் நிறுத்தத்தின் பிறகு புதுப்பிக்கப்பட்ட  முதல் பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும். 

இந்த வரலாற்று தளம் அதன் ஒளிரும் வெள்ளை பூச்சு மற்றும் கிளாசிக்கல் கோடுகளுடன் உயரமாக நிற்கிறது. இது நகரத்தின் மீள் கட்டியெழுப்பப்பட்ட தன்மையை  பிரதிநிதித்துவப்படுத்தும் சான்றாகும். இந்த கட்டிடம் நவ-முகலாய வடிவமைப்புக்கு சான்றாக உள்ளதுடன்  இலங்கை மற்றும் பரந்த பகுதி முழுவதும் கட்டடக்கலையின் ஒரு அற்புதமாகவே கருதப்படுகிறது.

யாழ்ப்பாணக் கோட்டை

முன்னொரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய டச்சு கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை 1680 ஆம் ஆண்டில் பிலிப் டி ஒலிவேராவால் கட்டப்பட்டது. கிளாசிக் Vaubenesque நட்சத்திர வடிவத்தில் தயாரிக்கப்பட்ட  தற்காப்பு முக்கோணங்கள் 1792 இன் பின்னர் சேர்க்கப்பட்டன. அத்தகைய கருத்து 15 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் பிரபலமாக இருந்தது. இது இலங்கையில் கட்டப்பட்ட இரண்டாவது பெரிய டச்சு கோட்டையாகும் என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது அதன் கடலோரப் பகுதியில் சிலவும், ஒரு சில நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும், கோட்டையின் சுரங்கங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. டச்சு கட்டிடக்கலை அறிகுறிகள் குறுகிய பரப்பளவு சுவர்கள் வழியாகவும், அலங்கரிக்கப்பட்ட குறுக்கு நெடுக்காக அமைக்கப்பட்ட கைப்பிடிச் சுவர்கள் மூலமும் வெளிப்படுகிறது. இது டச்சுக்காரர்களின் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கான பாதையாக இருந்ததாக அறியப்படுகிறது.

உள்நாட்டுப் போரினால் மோசமாக சேதமடைந்த இடத்தை புனரமைக்கும் முயற்சியில், டச்சு அரசாங்கம் தொல்பொருள் ரீதியாக கோட்டையை புதுப்பிக்க முன்வந்தது. இருப்பினும், இந்த திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட  பல புதையல்கள், பண்டைய நாணயங்கள் மற்றும் இடைக்கால மட்பாண்டங்கள் போன்றவை, இந்த தளம் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆனையிறவு

ஆனையிறவு யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் எனவும் அழைக்கப்படுகிறது. இது யாழ்ப்பாண தீபகற்பத்தின் சாவகச்சேரியை தீவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய வழியாக அமைகிறது. இங்கு, உள்நாட்டுப் போரின் காரணமாக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 – 80,000 மெட்ரிக் டொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ஆனையிறவு உப்புத் திட்டத்தின் மூலம் நீர்த்தேக்கத்தின் புனரமைப்பு, கசிவு பாதைகள் அமைத்தல் மற்றும் கடல் நீர் உள்ளெடுத்தல் ஆகியவற்றுடன் போருக்குப் பிந்தைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

1760 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் ஒரு கோட்டையை கட்டிய போது ஆனையிறவு ஒரு இராணுவ தளமாக மாறியது. இந்த கோட்டை பின்னர் 1776 இல் டச்சுக்காரர்களால் காவலில் வைக்கப்பட்டது. இது உள்நாட்டுப் போரின் போது இலங்கை இராணுவத்திற்கான ஒரு முக்கிய இராணுவ தளமாகவும் இருந்தது மற்றும் 1991, 2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் போரின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் மூலோபாய இருப்பிடத்தை கையகப்படுத்த முயன்ற நேரங்களில், LTTE விடுதலைப் புலிகள் கைப்பற்ற முயன்ற முக்கிய இடமாகவும் இருந்தது. இன்று, இது ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் ஈர்க்கும் இரண்டு முக்கிய போர் நினைவுச் சின்னங்களை கொண்டிருக்கிறது.

சங்கிலித் தோப்பு நுழைவாயில் மற்றும் மந்திரி மனை
Mantri Manai – Nallur, Jaffna

பூதத்தம்பி வளைவு அல்லது சங்கிலித் தோப்பு என அழைக்கப்படும் இது பருத்தித்துறை சாலையின் கீழே உள்ள ஒரு வரலாற்று தளமாகவும் பாண்டியா ராயல் பேலஸின் (Pandiya Royal Palace) அசல் நுழைவாயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. தற்போது சீரற்ற வானிலை காரணமாக சிதைவடைந்த  போதிலும், 1519 ஆம் ஆண்டு முதல் சங்கிலி மன்னருக்காக செதுக்கப்பட்ட  ஒரு கல்வெட்டின் சிக்கலான செதுக்குதல் இன்னும் காணப்படுகிறது. இதேபோல், போர்த்துக்கேயர் படையெடுப்பு காரணமாக யாழ்ப்பாண இராச்சியம் சிதைவதற்கு முன்னர், சங்கிலி மன்னரின் அமைச்சர்களில் ஒருவரின் வீடு என்று நம்பப்படும் மற்றொரு தொல்பொருள் ரீதியாக பாதுகாக்கப்பட்ட தளமாக மந்திரி மனை விளங்குகிறது. இது டச்சு காலத்தில் கட்டப்பட்டதா அல்லது போர்த்துக்கேயரின் காலத்தில் கட்டப்படாதா என இதன் தோற்றம் பற்றிய விபரம் வரலாற்று ஆசிரியர்களிடையே இன்னும் விவாதிக்கப்படுகிறது.

இந்த வரலாற்று அடையாளங்கள் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியே. உள்நாட்டுப் போரின் போது பல பாதிப்புகளுக்கு ஆளான போதிலும், இந்த தளங்களில் பெரும்பாலானவை நீண்ட காலமாக நீடித்து, ஒரு சகாப்தத்தின் சிறப்பை பிரதிபலிக்கின்றன.

நீடித்திருக்கும் மரபு

இன்றுவரை தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உறைவிடமாக  யாழ்ப்பாணம் திகழ்கிறது.  இந்த அற்புதமான நகரத்தின் வளமான மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்காலத்தில் புதுப்பிக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகள் கவனம் செலுத்துவதால், இத்தகைய மரபுகள் மீண்டும் வாழ்க்கைக்குள் மென்மேலும் பண்பட்டு வருகின்றன. அதன் சமீபத்திய வரலாற்றைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணத்தின் மக்களும் இடங்களும் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் துடிப்பான உற்சாகத்தை கொண்டிருக்கின்றன. நகரத்தின் ஆட்சி மற்றும் காலனித்துவ மரபு முதல் கலை மற்றும் பழக்கவழக்கங்கள் வரை, எங்கள் அதிசயம் மிக்க யாழ்ப்பாணத்தை சுற்றி காதலிக்க வேண்டிய நிறைய அம்சங்கள் இருக்கின்றன.

Crypto Currency – தமிழ் விளக்கம்

பொருளாதாரம்! தற்போது பாமர மக்கள் முதல் செல்வந்தர் வரை பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. நோய், யுத்தம், வறுமை போன்ற அனைத்துமே நேரடியாக பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது என்பது யாவரும் அறிந்ததே. இப் பொருளாதாரம், ‘பணம்’ என்ற பதத்திலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றது. பணத்தை மையாக வைத்துக் கொண்டே இவ்வுலகில் அனைத்துமே இயங்கிக்கொண்டிருக்கின்றது. சமூக அந்தஸ்து முதல், ஓர் மனிதனின் ஒழுக்கம் என, இப் பணமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. பெரும்பாலானோர் இச் செவ்வக வடிவ தாளை உழைப்பதற்காகவே தனது முழு ஆயுளையும் செலவழிக்கின்றனர் என்பதோடு, சில வேலைகளில் இப்பணமே பல மனிதர்களை காவு கொள்ளும் ஆயுதமாகவும் மாறுகிறது..

இப்படி இதுவரை உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பணம், முடிவுக்கு வரப்போகின்றதா? நாணயத் தாள்கள் அனைத்தும் எரிக்கப்படுமா? எமது பணம் அனைத்தும் Binary முறைக்கு மாற்றப்படுமா? சூதாட்டம் என்ற போர்வைக்குள் சாமான்ய மக்களாகிய நாம் வீழ்வோமா?

ஆரம்ப காலத்து மக்கள் ‘பொருளுக்குப் பொருள்’ என்ற பண்டமாற்று முறையிலேயே செயற்பட்டு வந்தனர். காலப்போக்கில் இவ் அனைத்திற்கும் ஓர் பொது ஊடகம் அவசியம் என்றடிப்படையில் ‘பணம்’ உத்வேகம் பெற்றது. இவ்வாறு கணிக்கும் மற்றுமோர் ஊடகமாக தற்காலத்தில் Crypto Currency அறிமுகம் பெறுகின்றது. ‘Crypto’ என்பது இரகசியமான அல்லது பாதுகாப்பான என்று பொருளைத்தரும். உதாரணமாக நாம் WhatsApp மற்றும் Viber இன் ஊடாக அனுப்பும் குறுந்தகவல்கள் அனைத்தும் இவ்வாறு ‘Cryptography’ மூலமாகவே பெறப்படுகின்றது. அதாவது நாம் அனுப்பும் ஓர் குறுந்தகவல் குழப்பமிக்க Binary எண்களைக் கொண்டு அனுப்பப்படும். அதே Binary எண் மறுபடியும் குறுந்தகவலாக மாற்றும் பொறிமுறை, செய்தியை பெறுபவரிடம் மாத்திரமே முடியுமாக இருக்கும். இடைநடுவே இதை எவராலும் பெற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு பாதுகாப்பான முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் ஊடகமாக Crypto Currency விளங்குகின்றது. பொதுவாக Crypto Currency அனைத்தும் Mining மூலமாகவே பெறப்படுகின்றது. Mining என்பது ‘அகழ்வு’ என்ற பொருளைத்தரும். பொதுவாக குறுந்தகவலைப் போன்று Crypto Currency அனைத்தும் குழப்பமிக்க கடினமான ஒர் கணித சூத்திரத்திற்கு பிற்பாடே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதை Blockchain முறை என்று கூறுவார்கள். இவ்வாறு mining செய்வது ஓர் இலகுவான விடயம் கிடையாது. ஆகவே இதனை கணடறிபவருக்கு ஓர் Crypto Currency இனாமாக வழங்கப்படும். இதை அனேகமானோர் புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். கருத்துக்கணிப்புகளின் படி, 10 பேரில் ஒரு நபரே இதை புரிந்து கொள்வதாகவும் அதில் மூன்றில் ஒரு நபரே இதில் முதலீடு செய்வதற்கு முன்வருகின்றனர் என்பதும் வியக்கத்தக்கது.

பொதுவாக அதிகமானோர் Crypto Currency மற்றும் BitCoin இரண்டையும் ஒன்று என கருதுகின்றனர். BitCoin என்பது Cryptocurrency களில் ஒரு வகை. உதாரணமாக நாணய தாள்களில் டொல்லர், பவுண்ட், யூரோ போன்று இதில் BitCoin, Ethereum, Dogecoin என பலவகைப்படும். Dogecoin என்பது இரு மென்பொருளியலாளர்களால், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட Meme களில் பேசும் பொருளாக விளங்கிய ஒரு நாயினை வைத்து வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டதாகும். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட Dogecoin இன் தற்போதைய மொத்த பெருமதி $50 பில்லியன்களாகும். சமூகவலைதளம் மூலமாக மாத்திரம் இவ்வாறானதொரு இலட்சியத்தினை அடைய முடியுமாக இருக்குமா என்ற கேள்விக்கு, இதுஒர் சிறந்த உதாரணமாகும்.

பொதுவாக இதில் முதலீடு செய்வது பலரினால் வரவேற்கத்தக்கதாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக கொழும்பில் ‘நெலும் குலுன’ தாமரைக்கோபுரம் கட்டுவதற்கு செலவு செய்த பணத்தை BitCoin இல் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய பெறுமதி, எம் நாட்டினுடைய அனைத்து கடன்களையும் அடைக்கப்பட்டு, பின் மிகுதி பணமும் எஞ்சி இருக்கக்கூடும் என பல ஆய்வாளர்களினால் கூறப்படுகின்றது. அதே வேளை உலகின் மிகப் பெரிய பணக்காரரான ‘எலன் மஸ்க்’ அவர்கள் Tesla நிறுவனத்தின் Car களை BitCoin மூலம் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இதனால் ஒரு BitCoin இன் பெறுமதி $10,000 களில் இருந்து, $50,000 க்கு சென்றதுடன் காலப்போக்கில் அவர், BitCoin mining செய்வதற்கு அதிக மின்சக்தி செலவாகுவதாகக் கூறி பின் விலகிக்கொண்டார். இதனடிப்படையில் Bitcoin பெறுமதி $36,000 வரை குறைந்ததாக குறிப்பிடப்படுகின்றது. ஆகவே Crypto Currency மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கும் என்பதால் இதில் முதலீடு செய்வது ஓர் சூதாட்டமாகவே இப்போது கருதப்படுகின்றது.

யெவான் டேவிட் : சர்வதேச கார்டிங் (Karting) அரங்கில் அறிமுகமாகும் இளைஞர்.

இந்த 13 வயதான இளம் கார்டிங் வீரர், மற்றவர்களைப் போலல்லாமல், சர்வதேச கார்டிங் அரங்கில் ஒரு இளம் பந்தய வீரராக வழக்கமான கட்டுப்பாடுகளை உடைத்தெறிகிறார். சமீபத்தில் பெல்ஜியத்தின் ஜென்கில் நடந்த “2021 Champions of the Future Karting Race” போட்டியில் முதல் சுற்றில் வெற்றிபெற்ற யெவான் டேவிட், வரலாற்றில் இடம்பிடித்தார். இதுபோன்ற கொந்தளிப்பான காலங்களின் அழுத்தங்களைக் கையாள்வது மற்றும் கார்டிங் போட்டிகள் பற்றி யெவானுடன் கலந்துரையாடும் போது, விளையாட்டு ஆர்வமுள்ள, சுறுசுறுப்பான மற்றும் உற்சாகமான வீரராக அவர் கூறிய விடயங்கள் இதோ..

இவ்வளவு இளம் வயதில் கார்ட்டிங் விளையாட்டில் ஈடுபட உங்களைத் தூண்டியது எது?

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை என்னை முதன்முறையாக கார்டிங் பாதையில் அழைத்துச் சென்றார், நாங்கள் கார்ட்டிங் காரினை ஓட்ட முயற்சித்தோம். “போட்டி” என்ற வார்த்தை உடனடியாக என் மனதில் தோன்றியது. தொழில் ரீதியாக கார்டிங் விளையாட்டை தொடங்க முடியும் என்பதால், நான் எனது தந்தையிடம் எனக்கு சொந்தமாக ஒரு கார்டிங் காரினைப் பெற முடியுமா எனக் கேட்டேன். அப்போதிருந்து நான் ஒவ்வொரு வார இறுதியிலும் கார்டிங் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன். அதன் ஒவ்வொரு நொடியையும் நான்மிகவும் விரும்பினேன். அது கார்டிங் விளையாட்டை மிகவும் நேசிப்பது போன்ற உணர்வாகும். அதுவே என்னை தொழில் ரீதியாக கார்டிங் பந்தயங்களில் ஈடுபட தூண்டியது.

நீங்கள் ஏற்கனவே சர்வதேச மட்டத்திற்கு வந்துவிட்டீர்கள். உங்களின் அடுத்த எதிர்பார்ப்பு என்ன?

இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நான் போட்டிகளில் தொடர்ந்து ஈடுபடவுள்ளேன். மேலும் 14 வயதிற்குட்பட்ட போட்டிகளில் சிறந்த வெற்றிகளை கொண்டுவர முயற்சிக்கிறேன். அடுத்த ஆண்டு, நான் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட மூத்த பிரிவுக்குள் உள்ளடக்கப்படப் போகிறேன். அந்தப் பிரிவிலும் ஒரு வருடம் போட்டியிடப் போகிறேன். பின்னர் நான் கார்ட்டிங்கை விட்டுவிட்டு ஃபார்முலா கார் பந்தயங்களில் ஈடுபடுவேன். அதன் பின், முதலீட்டாளர்களை பெறுவதுடன், ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 2 போன்ற ஃபார்முலா நிலைகளில் படிப்படியாக முன்னேறி இறுதியில் ஃபார்முலா 1 க்கு முன்னேறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

நீங்கள் எப்படி பயிற்சி செய்கிறீர்கள்?

என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காக, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான போட்டிப் பாதைகளில் பயிற்சி செய்கிறேன். எனது ஓய்வு நாட்களில், உடலைப் பராமரிப்பதற்காக எப்போதும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன்.

உங்களின் கல்வி மற்றும் பிற செயற்பாடுகளுடன் கார்ட்டிங்கை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் இது சற்று கடினமாக இருந்தது, முதல்முறையாக இரண்டையும் சமாளிக்க முயற்சித்தேன். ஆனால் இப்போது, எனது விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் எனது கல்வி வேலைகளில் ஈடுபடுகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிகமாக அந்த வேலைகளை செய்கிறேன். இதனால் அந்த வேலைகளுக்கு பெரிதாக நேரம் ஒதுக்க முடியாத போதும் நான் முன்னேறி உள்ளேன் என்று எனக்கு தெரியும்.

“2021 Champions of the Future Karting Race” போட்டியில் வெற்றி பெற்ற அனுபவம் எவ்வாறானது? நீங்கள் இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

அது உண்மையாகவே ஒரு சிறந்த உணர்வாக இருந்தது, அது அதிசயமான மற்றும் ஒரு தனித்துவமான உணர்வாகும். ஐரோப்பாவில் எனது முதல் வெற்றியைப் பெற்றது மற்றும் அவ்வாறு செய்த முதல் இலங்கையர் எனும் பெயரைப் பெற்றது மிகவும் சிறந்தவொரு அனுபவமாகும். குறிப்பாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த சாதனையை நிகழ்த்தியது ஒரு நம்பமுடியாத உணர்வாக இருந்தது. நான் போட்டியை நிறைவு செய்வதற்கு ஒரு சுற்று எஞ்சி இருந்தபோது, எனக்கு முன்னால் இருந்த போட்டியாளரை முந்திச்செல்ல முயற்சித்தேன். நான் முன்னால் இருக்கிறேன் என்பதனை நான் உணரவில்லை. நிறைவுக்கோட்டை கடந்த போதுதான் அனைவரையும் விட நான் முன்னால் இருந்தேன் என்பதனை உணர்ந்தேன். அந்த நேரத்தில் தான், நான் போட்டியில் வென்று விட்டேன் என்பதனையும், இலங்கைக்காக இதனை செய்துள்ளேன் என்பதனையும் உணர்ந்தேன்.

கார்டிங்கைத் தவிர, உங்களின் ஏனைய ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகள் என்ன?

இந்த நேரத்தில் பந்தயங்கள் மிகவும் வழக்கமாக நடைபெறுவதால், பொழுதுபோக்கைப் பொறுத்தவரை நான் செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை. எனினும் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், Badminton மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட விரும்புகிறேன். நான் செய்ய விரும்பும் நிறைய விடயங்கள் உள்ளன. கட்டாயமாக போட்டிகளையே நான் அதிகம் விரும்புகிறேன். ஏனையவை வெறும் பொழுது போக்குகள் மட்டுமே. நான் ஒரு விளையாட்டுப் பையன் என்பதால் அவை அனைத்தும் விளையாட்டுகள் சார்ந்தவையாகவே பெரும்பாலும் இருக்கும். எனினும் அவ்வப்போது நான் ‘கிட்டார்’ வாசிக்கிறேன், வீடியோ கேம் விளையாடுகிறேன், சில நேரங்களில் ஓவியம் வரைகிறேன்.

கார்ட்டிங் விளையாட்டில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? அவற்றை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்னை ஐரோப்பாவுக்கு அனுப்பும் பணி, ஏனென்றால் நாங்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருந்தது, திட்டமிடலுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ளவும் நிறைய விடயங்களை செய்ய வேண்டியிருந்தது. தொற்றுநிலைமை ஏற்பட்டவுடன், அது மேலும் கடினமாக இருந்தது, குறிப்பாக மார்ச் 2020 காலப்பகுதியில் என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஐரோப்பாவுக்குப் சென்று போட்டிகள் ஆரம்பிக்கும் வரை காத்திருப்பதா அல்லது நான் வசிக்கும் சிங்கப்பூரிலேயே தொடர்நது காத்திருப்பதா என முடிவெடுக்க முடியாமலிருந்தது. இது நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும், பின்பு நாங்கள் அதற்கொரு தீர்வைக் கண்டுபிடித்தோம்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் எல்லாமே முழுமையாக மூடப்பட்டிருந்தன. எந்த நிகழ்வுகளுமே நடைபெறவில்லை. அதனால் நான், யதார்த்தத்தில் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட முடியாத காரணத்தினால் இணையம் வழியாக ஆன்லைன் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். இந்த ஆண்டு போட்டிகள் வழக்கமான முறையில் நடைபெற்றன. ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெற்றன. சில நேரங்களில் வெவ்வேறு நாடுகளிலும் போட்டிகள் நடைபெற்றன. உதாரணமாக, நான் இப்போது இத்தாலியில் இருக்கிறேன் என்றால் இந்த வாரம் போட்டிகள் பெல்ஜியத்தில் நடைபெறும், அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறும். இது எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். இந்தக் கட்டத்திலும் நான் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். ஆனால் போட்டிகள் முன்பை விட மிகச் சிறப்பாக இருந்தன.

உங்கள் குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது? உங்களது பயணத்தில் அது எவ்வாறு உதவியது?

எனது அப்பா என்னுடனேயே நிறைய முயற்சி செய்துள்ளார், என் குடும்பம் எப்போதுமே எனக்கு ஆதரவாகத்தான் இருந்தது. இப்போது என்னுடைய குடும்பத்தினர் சிங்கப்பூரில் இருக்கின்றனர். என்னுடைய சகோதரர்கள் கல்வி கற்பதால் எனது பெற்றோர் அவர்களைப் பற்றி மிகவும் கவனம் எடுக்கிறார்கள். நான் இப்போது இத்தாலியில் ஒரு பாதுகாவலர் மற்றும் எனக்குத் தெரிந்த ஒரு நண்பருடன் இருக்கிறேன். நான் அவருடன் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்கிறேன். எனவே, தற்சமயத்தில் என்னுடய குடும்பம் என்னுடன் இல்லை, ஆனால் அவர்கள் எப்போதும் தங்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனக்கு அவ்வப்போது வாழ்த்துத் தெரிவிக்கவும் செய்கின்றனர். எனது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, எனது உறவினர்கள் உட்பட அனைவரும் சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்குக்கு வீடு திரும்பி விட்டனர். என்னைச் சுற்றியுள்ள ஆதரவை என்னால் உணர முடிகிறது. அவர்கள் அனைவரும் நான் அர்ப்பணிப்புடன் செய்யும் செயல்களில் அவதானமாக இருப்பதைப் பார்க்கும்போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்களைப் போன்று கார்ட்டிங்கை விரும்புபவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?

இளைஞர்களைப் பொறுத்தவரை, நிச்சயமாக கடினமாக உழைக்க வேண்டும். ஒருபோதும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதே எனது அறிவுரையாகும். கடந்த சில ஆண்டுகளில் நான் நிறைய தியாகங்களைச் செய்தேன், கடினமாக உழைத்தேன். இப்போது இங்கே நான் ஐரோப்பாவில் முதல் இலங்கையராக ஒரு பந்தயத்தை வென்றிருக்கிறேன். எனது ஐந்தாவது போட்டியிலேயே நான் இதனை சாதித்து விட்டேன். கடின உழைப்பு பலனளிக்கும் என்பதை இது நிரூபிக்கிறது.

நீங்கள் இன்னும் இளம் வயதில் இருக்கிறீர்கள், இதனை எதிர்காலத்தில் நீங்கள் ஒரு முனீராப் பணியாகத் தொடர விரும்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு ஏதாவது இருக்கிறதா?

நிச்சயமாக நான் எப்போதும் போட்டிகளில் ஈடுபடவே விரும்பினேன். எனது எட்டு வயதிலேயே இதைத்தான் நான் செய்ய வேண்டும் என விரும்பினேன். இன்னும் நான் அதே கனவு மற்றும் இலட்சியத்தோடு தான் முயற்சிக்கிறேன். நான் கட்டாயம் இதை என் முழுமுதற்பணியாகத் தொடர்வது உறுதி.

அன்பு – தனிப்படை EP 01 – குறுந்திரைப்படம் – நாடி Review

ஏக்கங்கள் என்பது நினைவுகளோடு உறவாடும் ஓர் வித்தியாசமான உணர்வு. ஆம் ! உயிர் பெற்று மண்ணில் உதிக்கும் ஒவ்வொரு மனிதனும் பல கனவுகளை தன்னகத்தே கொண்டு அது நினைவில் நடந்தேருமா என்ற  ஏக்கத்துடன் வாழ்வின் எல்லை வரை  எதையோ தேடி அலைகின்றான்.

அப்படி எதை தேடி அவன் அலைகின்றான்? எதற்காக இந்த  போராட்டம்? காசுக்காகவா? சுகத்துக்காகவா? இல்லை, அனைவரிடத்திலும் இயல்பாக இனிமையாக மலரும் அந்த அன்பிற்காகத் தான். போராட்டத்தை மாத்திரமே வாழ்வில் கண்ட ஒருவனிடம், எவ்வளவு அழகானது இவ்வுலகம் பார் எனக் கூறி அவன் ரசித்த பின் அவனது கண்களை பிடிங்கி எறிந்தால் எப்படி இருக்கும்? அப்படி கிடைக்கும் அன்பை இந்த சமூகத்தின் தவறால் அவன் இழந்து விட்டால் , அவ் வேதனையை  எவ்வாறு அவன்  உணருவான்! அந்த காயத்திற்கு என்ன பதில்?

இவற்றை மையமாகக் கொண்டு YouTube தளத்தில், ஒரு இணையத் தொடரின் 12 நிமிடங்கள் கொண்ட முதல் பாகமாக வெளிவந்திருக்கிறது அன்பு – தனிப்படை EP 01. இது ஒரே ஷாட்டில் (single shot) பதியப்பட்ட ஒரு குறும்படமாகும்.

இக் குறுந்திரைப்படத்திற்கான  ஔிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை Ramzin மேற்கொண்டுள்ளார். அதேவேளையில் Vithwasaharan இன் இசையில், Dushanthan மற்றும் Baga வின் கதை மற்றும் திரைக்கதையில், Shafee Feroze இன் SFX மற்றும் Mixing ல், Baga வின் இயக்கத்தில், C. Dushanthan நடிப்பில் இக் குறும்படம் அமைந்துள்ளது.

காதல், வறுமை, தற்கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் என, சமூகத்தின் பிரச்சினைகளை பேசும் வகையில் இதன் கதை அமைந்திருக்கின்றது. இத்தகைய கதையம்சம் பொருந்திய பல படைப்புக்கள் தற்காலத்தில் வெளிவந்தாலும், குறுந் திரைப்படம் play ஆனதும், இது வேறு ரகத்தில் அமையப்போகின்றது என்ற எண்ணம் பார்ப்பவரின் மனதில் தோன்றிவிடும்.

இதில் சில இடங்களில்  பாவித்திருக்கும் ஒலிச்சேர்க்கை சரிவர பொருந்தவில்லையென்றாலும், ஆரம்பத்தில் வரும் Sound effects முதற்கொண்டு, இறுதிக் காட்சிகளில் வரும் ஏனைய sound effects என, ‘ஒலியமைப்பு’ இந்த குறுந்திரைப்படத்திற்கு ஒரு பலம் தான். குறிப்பாக மண்ணைத் தூவுகின்ற காட்சிகளில் sound effects சற்று பின்னடைவாய் அமைந்துவிடுகிறது. ஒலிச்சேர்கையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், நிச்சயமாக இந்த படைப்பின் முதலாய பாராட்டுக்கள் ஒலியமைப்பு department க்கு தான்.

ஔிப்பதிவினை பொறுத்தவரையில், இது ஒரு தொடர் காட்சியாக (Single Shot) எடுக்கப்பட்ட படைப்பாகையால், Lighting இல் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். உண்மையில் ஒரு சில இடங்களில், இதில் நடித்திருக்கும் துஷாந்தனின் முக பாவனைகள் சரியாகத் தெரியாமல் போய்விடுகிறது.

இப் படைப்பின் மற்றொரு Hero, இசை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் ஒலிக்கும் String Orchestra, ரௌத்திரம் பொருந்திய நடிப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இப் படைப்பானது ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து, 12 நமிடங்கள் தொடர் காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. ‘ஒரே முகத்தை படம் முழுதும் எப்படிப் பார்க்க முடியும்?’ என்ற கேள்வி அனைவரது  மனதிலும் எழலாம். நிச்சயமாக முடியும் என்ற வகையில் C. Dushanthan, தன் மிகச் சிறந்த நடிப்பாற்றலை வெளிக்காட்டியிருக்கிறார் என்றால் மிகையாகாது. தனது நடிப்பின் மூலம் உண்மையாகவே சில இடங்களில் கண்கலங்க வைக்கிறார். ஆனாலும் அங்காங்கே துஷாந்தனின் Dubbing Sync ஐயும் கவனித்து இருக்கலாம்.

குறுந்திரைப்படத்தின் பெரும்பாலான வசனங்கள் அனைவருக்கும் இலகுவில் தொடர்பு படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. எனினும், படத்தில் பொலிஸ் அதிகாரிகள் பேசும் பெரும்பாலான வசனங்கள் இந்தியத் தமிழ் வழக்கில் அமைந்திருப்பதால், இயல்புக்கு மாறான பெரும் வித்தியாசத்தை உணரக்கூடியதாக உள்ளது. எமது நாட்டின் பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள், சிங்கள மொழியில் அல்லது தட்டுத்தடுமாறி கஷ்டப்பட்டு தமிழில் பேசுவதைக் கேட்டுப் பழக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களுக்கு யதார்த்தத்தை மீறிய காட்சிகளாக அவை அமைந்துவிடுகின்றன.

ஒப்பனையாளருக்கு, இயக்குனர் வேலை வைக்க விரும்பவில்லையோ என்னவோ, கதைக்கேற்ப ஒரு எட்டு வயது குழந்தையின் தகப்பனாக கதாநாயகனின் தோற்றம் சரியாகப் பொருந்தவில்லையென்றே கூற வேண்டும். இந்தப் படத்தில் ஒப்பனையாளர் இல்லை என்பது மிகப்பெரிய பின்னடைவு. ஒப்பனைக்கு கட்டாயம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

இறுதியாக வரும் Animation காட்சிகள்தான் கதையின் முடிவாக அமைந்திருக்கின்றது.
உண்மையில், ‘இப் படைப்பின் தரத்தை அந்த Visual Effects மெருகூட்டியதா?’ என்று கேட்டால், இல்லை..! ஆனால் கதை முடிவை கச்சிதமாக பிரதிபலிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சாது மிரண்டால் காடு தாங்காது என்ற பழமொழிக்கேற்ப, கதையின் இறுதியம்சங்கள் அமையப்பெற்றிருக்கின்றன. முக்கியமாக Covid -19 ஊரடங்கு போன்ற பல்வேறு தற்பாதுகாப்பு நடவடிக்கைகளால் சாதாரண அடித்தட்டு மக்கள் பொருளாதார ரீதியாக எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது போன்ற ஆழமான கருத்துக்கள் திரைக்கதையில் பகிரப்பட்டுள்ளன. அந்தவகையில், இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். இனிவருங்காலங்களில் இதைப்போன்ற அல்லது இதைவிட இன்னும் சிறப்பான படைப்புகளை இயக்குனர் Baga-விடமிருந்து எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

எது எவ்வாறாயினும், இக்குறும்படம் சமீபத்தில் வெளியான தென்னிந்தியப் படைப்பான, இரா.பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைக்கதையமைப்பை ஒத்திருந்தது என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டியாக வேண்டும். அதே போன்ற கதாபாத்திர அமைப்பு மற்றும் கதை சொல்லலைக் கையாண்டிருப்பது, இந்தப் படம் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் தழுவல் என்ற எண்ணத்தை இயல்பாகவே பார்ப்பவர்களுக்குள் விதைக்கிறது.

நாடி Verdict – 62/100
அன்பு – உலகம் எங்கும் மலரவே!
குறும்பட Link –

 

மாதவிடாய் TRICKS | HACKS

மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாயினால் பல பெண்கள் வயிற்றினை பிடித்து அசையாது ஒடுங்கி விடுவதையும் சிலப் பெண்கள் சாதாரணமாக நடந்துக் கொள்வதையும் கண்டிருப்போம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு தீர்வு கிடைத்திடாத என ஏங்கித் தவித்திருப்போம்.

இதோ! மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் போக்குவதற்கும் மாதவிடாய் காலங்களை சரியான முறையில் கடப்பதற்கும் தேவையான சில டிப்ஸ்….

 

மாதவிடாய் காலங்களில் மருந்து கடைகளில் வலியினை போக்கும் வில்லைகள் (pain killers) மற்றும் மாதவிடாயினை தள்ளிப் போடுவதற்கான மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்தல் நல்லது ஏனெனில் இவை நம் உடம்பிற்கு உகந்தவை அல்ல.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முதல் நாள் இரவு ஒரு சிட்டிகை வெந்தயம் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் மாதவிடாய் வந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனால் வயிற்றில் ஏற்படும் வலி வழமையை விட குறைவானதாக இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியினை போக்குவதற்கு சூடாக்கிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் அல்லது சுக்கு தூளினை இட்டு கலக்கி குடிக்கவும்.

மாதவிடாய் காலங்களில் இறுக்கமான ஆடையை அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறுக்கமான ஆடைகள் அணிவதால் மாதவிடாயின் போக்கு அதிகமாக இருக்கும். ஆகையால் மென்மையான தளர்வான கடும் நிற (dark color) ஆடைகளை அணிதல் சிறப்பானது.

மாதவிடாய் காலங்களில் முடிந்தவரை அதிக தண்ணீர் பருகவும். தண்ணீர் குடிக்கும் போது அமர்ந்திருந்து குடிப்பது நல்லது. அவ்வாறு குடிப்பதால் வலி குறைவாகவும் உடற் சோர்வும் இல்லாது போகும்.

மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் மஞ்சள் தூள் மற்றும் கற்றாளையினை Paste ஆக அரைத்து பூசி வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முகப்பருக்களை தடுக்கலாம்.

மாதவிடாய் காலங்களில் முல்தானி மெட்டி ஒரு சிட்டிகையுடன் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவினால் சருமத்தின் வரட்சி நீங்கும்.

மாதவிடாய் காலங்களில் தலைக்கு குளித்தலை தவிர்த்துக் கொள்ளவும். ஏனெனில் மாதவிடாய் காலங்களில் குளிப்பதால் உடலில் இருக்கும் வெப்பத்தினை கட்டுப்படுத்தி மாதவிடாய் காலங்களில் குறைவான கசிவினையும் அதிக வலியினையும் ஏற்படுத்துகிறது.

index.php