Blog Page 11

காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக உள்ளது. காடு பெரும் பரப்பளவை கொண்டதாக விளங்குகிறது. காடுகள் மனிதர்களுக்கு பல்வேறு விதங்களிலும் பயன்படக் கூடியதாக இருக்கின்றது‌. காடு இல்லையென்றால் மனிதன் உயிர்வாழத்தான் முடியுமா? அல்லது உலகம் தான் இயங்குமா? என்று கேட்கும் அளவிற்கு காடு உலக உருண்டை மின் அசைவிற்கு மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது.

மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு காடு பலவாறு உதவுகிறது. காடு மனிதனுக்கு எரிபொருள், அரிமரம், காகித கூழ், செயற்கை இழைக்கான மூலப்பொருள் போன்றவற்றை வழங்குகிறது. இது பூமியின் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளவும் , நீர்நிலை சுழற்சி, வெள்ளம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியும் மற்றும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு (Carbon Dioxide) மற்றும் ஆக்ஸிஜனின் சமநிலையை பேணியும் மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது. மழை பொழிவதற்கும் மண்ணின் தரம் உயர்வதற்கும் காடுகள் அடித்தளமாக இருக்கின்றன.

மரங்களின் சிறப்புப் பற்றி கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் மிகவும் அழகாக பத்தி எழுத்துக்கள் வடிவில் எழுதியுள்ளார். அவர் அதில் மரத்தை உயர்திணை என்றும் மனிதர்களை அஃறிணை என்றும் கூறியுள்ளதோடு அதற்குப் பல ஆதாரங்களையும் முன்வைத்துள்ளார். மனிதனின் வாழ்வில் பிறந்தது முதல் இறக்கும் வரை மரங்களையே அவன் சார்ந்துள்ளான். மரங்கள் கொடுப்பதற்காக கையை நீட்டுகிறது, மனிதன் வாங்குவதற்காகவே கைகளை நீட்டுகிறான். என்றும் மேலும் பல்வேறு வகையில் மரங்களின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

மேலும் இந்த உன்னதமான அருட்கொடை மனிதனின் பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அழிவை எதிர்நோக்கிக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள் ஆகும். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது. மேலும், அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. இந்த உலகின் நுரையீரலான அமேசன் காடு 2019‌ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீக்கிரையாகியது. இதனால் காட்டின் பல்லாயிரக்கணக்ககான மரங்களும், பிராணிகளும் அழிந்து. அமேசன் காட்டின் அழிவால் தற்போது காலநிலை மிகவும் மோசமாக மாறிக் கொண்டு சொல்கிறது. இத்தீப்பரவலுக்கான காரணம் மனித நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

அதாவது இயற்கைக் காடுகளை அழித்து மனிதன் செயற்கையாக விவசாயத்தை மேற்கொள்ள முற்படுகிறான். இதன் போது இயற்கை மரங்கள் வெட்டப்படுவதோடு தீக்கிரையாக்கப்படுகின்றன. இதனால் வெப்பநிலை அதிகரித்து காட்டுத்தீ ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. மனிதனின் பொடுபோக்குத் தனம் மற்றும் பேராசையால் இயற்கை வளங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதன் பாதிப்பை அனுபவிக்கப் போகின்றவர்கள் நாங்களே.

எமது நாடான இலங்கையும் இயற்கை வளங்களால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இவ்வளங்கள் உலகளவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கிறது. இதில் காடுகள் குறிப்பிடத்தக்க ஒன்று. இவ்வாறான இயற்கை வளங்களினால் தான் எமது நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டது. ஆனால் தற்போது காடுகள் அழிவுரும் அபாயத்தில் உள்ளது. காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே என்றால் அது மிகையாகாது.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் இயந்திரமயமாகி மனிதன் அவசர உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அவனது சுயநலத்திற்காக இயற்கையை அழிக்கிறான். சுற்றுப்புற சூழலில் குப்பைகளை கண்ட படி வீசுகிறான் தொழிற்சாலை கழிவுகளை சூழலில் இடுகிறான் மரங்களை வெட்டுகிறான், செயற்கைப் பதார்த்தங்களை சூழலில் இடுகிறான்‌. இவ்வாறான பல மனித காரணங்களால் காடுகள் அழித்துக் கொண்டு செல்கின்றன.

கட்டிடங்களை கட்டுவதற்காகவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் பெரிய மழைக்காடுகளை அழிக்கின்றார்கள். இதனால் மழைவீழ்ச்சி குறைந்து வரட்சி உண்டாகும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, நாட்டின் வளம் இல்லாதொழிக்கப்படலாம். மழைவீழ்ச்சியில் மரங்களின் பணி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு போன்றவற்றிற்கு மரங்கள் மிக அவசியம். காடுகளை நாம் அழித்தால் அதன் விளைவு எமக்கே சேறும்.

மேலும், காடுகள் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. அமேசன் காட்டுத்தீயின் போது பல இலட்சக்கணக்கான அறிய விலங்குகள் செத்து மடிந்ததோடு மட்டுமல்லாது பல விலங்குகள் மனித வாழிடங்களில் தஞ்சம் புகுந்தன. இதனால் பல உயிராபத்துக்களும் ஏற்பட்டன.

இன்று எமது நாடான இலங்கையில் நாளுக்கு நாள் விலங்குகள் தாக்கி மனிதர்கள் இறக்கின்றார்கள் என்ற செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் காடுகளை நாம் பாதுகாக்காது அழிப்பது தான். விலங்குகளுடைய வாழிடமாகிய காடுகளை நாம் அழிக்கிறோம். அதனால் அது மனித வாழிடங்களை நோக்கி படையெடுப்பதோடு மட்டுமல்லாது தன்னைக் காத்துக் கொள்ள மனிதர்களையே தாக்கி விட்டுச் செல்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகன்றனர்.

எனவே, இவ்வாறான பாதிப்புக்கள் எம்மை அண்டாதிருக்க நாம் காடுகளை பாதுகாக்க வேண்டும்.காடுகளை எவ்வாறு பாதுகாக்கலாம்? விவசாயத்திற்காக காடுகளை அழிக்காது இயன்றளவு சிறிய பகுதிகளில் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளல், குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் இடாது அவற்றை முறையாக அகற்றுதல், ஒரு நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை பாதுகாத்தல் (கிராமங்களல் தான் தற்போதளவில் காடுகள் சிறிதளவேனும் பாதுகாக்கப் படுகிறது.

கிராமிய மக்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்பவர்கள்) உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக காடுகளை அழிப்பதை தவிர்த்தல் நச்சுப் பதார்த்தங்களை சூழலில் இடாதிருத்தல் ( நச்சுப் பதார்த்தச்களால் மண் வளம் குன்றும்),போன்ற இயற்கைக்கு புறம்பான செயற்பாடுகளை செய்வதால் காட்டு வளம் பாதுகாக்கப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனும் இயன்றளவு குறைந்தது ஒரு மரத்தை யாவது நட வேண்டும். இவ்வாறு காட்டு வளத்தை பாதுகாப்பதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினர்க்கு இயற்கை வளம் மிக்க உலகினை உருவாக்கலாம்.

-பாத்திமா முனீரா முர்சி

நேசம் எனும் போதை!

இப்படி ஒரு இருட்டுக்குள்
சிறியதொரு மின் மினிப்பூச்சு
வெளிச்சத்தில் உலா வருகின்ற
அப்பாவிகளுக்குள் ஏதோ ஒருவகை
திளைப்பை தந்து செல்கிறது
இந்த நேசம் எனும் போதை!எதுவுமே தேவையில்லை
இந்த ஒற்றை நபரின்
ஒட்டுமொத்த நேசம் மட்டும்
போதும் என்ற மாயைக்குள்
மிதக்க வேண்டிய கட்டாயம்
தனது கட்டுப்பாட்டை மீறி
தோன்றி விடுகின்றது!

நெற்றி முத்தங்கள்,
இடைவிடாத கைகோர்ப்புகள்
கொஞ்சல் வார்த்தைகள்
பொய்யான முத்தமறுப்பு
போராட்டங்கள் என்று
கண்ணிமைக்கும் நொடிகளில்
அந்த நேசம் திரைப்படபாணியை
மிஞ்சியிருக்கும்!

இருட்டாக இருந்தாலும்
ஒரு மின் மினிப்பூச்சு வெளிச்சதில்
சுற்றிக்கொண்டிருந்த அந்த ஜீவன்
தன்னிலை மறந்து நேசிக்கையில்
புறக்கணிப்பை எதிர்நோக்கும்
இப்படி நாங்கள் இருக்கவில்லையே

எந்தத் திசையில் இருந்து
இந்த மாற்றம் வந்தது என்ற
அந்த ஏமாளியின் கேள்விகளுக்கு
பதில் கிடைக்கவே போவதில்லை!

பதில்கள் கிடைக்கவே போவதில்லை
என்றாலும் அந்த ஏமாளி நேசத்திற்காக
போராடுவதில் இருந்து விலகவோ
ஏமாந்துவிட்டோம் என்று சமரசம் செய்யவோ தயாராவது
ஒரு பகல் கனவுதான்!

நாங்கள் உண்மையாகவே நேசித்தோம்
என்பதை கெஞ்சி நினைவூட்டுவதில்
தோல்வியடைந்து ஏமாந்துதான்
போனோம் என்பதை உணரும்போது
யாருமில்லாத கழிப்பரை ஒன்றில்
வாயை மூடி அழுவதைத் தவிர
வேறு என்ன செய்து விட முடுயும்?

-அஹ்ஸன் அப்த

மறப்பதில்லை நெஞ்சே!

எல்லாம் கடந்து விட்டேன்
என்று சொல்லிக் கொள்வதே
என்னோடு நான் செய்கின்ற
சமரசம்தானா என்ற நினைப்பு
என் நேரத்தை கொள்ளை
அடிக்கின்றது!

கடந்து விட்டேன் என்றால்
ஏன் எங்கேயாவது ஒரு
குழுப் புகைப்படம் கண்டால்
நான் அதில் உன் முகம்
தேடி அலைகிறேன்?

நகரத்து வீதிகளில்
உன் ஊருக்குச் செல்லும்
பேரூந்துகளைக் கண்டால்
நான் ஏன் ஒரு நிமிடம்
தளர்ந்து போகிறேன்?

பார்க்கவே போவதில்லை
என்றாலும் உனக்கு பிடிக்குமே
என்று நான் ஏன் தாடியை
கத்தரிக்காமலே இருக்கிறேன்?

நீயும் நானும்
கை கோர்த்து நடந்த
வீதிகளுக்குச் சென்று
வெறுமையாக உள்ள
என் விரல் இடுக்குகளை
பார்த்து நான் ஏன்
மனம் நோகிறேன்?

உனக்கும் எனக்குமான
நண்பர்களிடம் நான் ஏன்
உன்னைப் பற்றி நலம்
விசாரிக்கிறேன்?

உனக்குப் பக்கத்திலேயேதான்
இருக்கிறேன் என்பதை உணர்த்த
நான் ஏன் இத்தனை பிரயத்தனம்
செய்கிறேன்?


அஹ்ஸன் அப்தர்

Happy Birthday கிங்கோலி!

கிங் கோலினு சொன்னா? மைதானத்துல கைதட்டல் சத்தம் சும்மா பந்து மாதிரி நாலு பக்கமும் பட்டுத்தெரிக்கும். அப்படியொரு ரசிகர் கூட்டமிருக்குற ஒருத்தர் தான் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இப்போ இந்திய கிரிக்கட் அணியின் கேப்டனா இருக்குற நம்ம விராட் கோலி. ‘அடுத்த சச்சின் இவரு தான் பா’ அப்படினு எல்லாருமே விராட்கோலிய சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு ஏத்தமாதிரியே பேட்டிங்ல சும்மா பொளந்து கட்டிருவாரு நம்ம கிங் கோலி. இந்தியா தன்னோட சொந்த மண்ணுல நடந்த டெஸ்ட் தொடரில அவுஸ்திரேலியாவ தோற்கடிச்சதா சரித்திரமே இல்ல. இந்த சரித்திரத்த மாத்தி எழுதினாரு நம்ம கிங் கோலி. 72 வருஷமா யாருமே செய்யாத இந்த சாதனையை விராட் கோலியின் கேப்டன்ஷிப்ல இந்திய அணி நிகழ்த்தியிருக்கு. அப்போ இந்திய அணி கேப்டன் கோலிய கிங் கோலினு கொண்டாட ஆரம்பிச்சாங்க. அவருக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள்.

இந்தியாவுல புதுடில்லில வாழ்ந்து வந்த ஒரு பஞ்சாபி குடும்பத்துல 1988 நவம்பர் 05 ஆம் திகதி விராட் கோலி பிறந்தாரு. அவரோட அப்பா பிரேம் கோலி அம்மா சரோஸ் கோலி. விராட் கோலிட அப்பா ஒரு வழக்கறிஞர். விராட் கோலிக்கு விகாஷ் கோலினு ஒரு அண்ணாவும் பாவ்னா கோலினு ஒரு அக்காவும் இருக்காங்க. அப்படி பாத்தா இந்த பஞ்சாபி குடும்பத்துல நம்ம விராட் கோலி தான் கடைக்குட்டி சிங்கம். குழந்தைகள் எல்லாருக்குமே விளையாட்டுனா ரொம்ப பிடிக்கும். நம்மவிராட் கோலிக்கும் அப்படித் தான். ஆனா விராட் கோலி தன்னோட 3 வயசுலயே ‘அப்பா பந்த போடுப்பா’ அப்படினு சொல்லி அப்பா கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சாரு.

அடேங்கப்பா நம்ம இந்திய டீம்கு ஒரு கிரிக்கட் ப்ளேயர் கிடைச்சிட்டாரு அப்படினு செல்லமா கிண்டலடிச்சாங்க விராட் கோலியின் குடும்பம். அன்னைக்கு அவங்க சொன்மாதிரிதான் இன்னைக்கு நடந்துருக்கு. சும்மா 3 வயசுல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சு 30 வயசுல இந்தியாவோட மிக முக்கியமான பேட்ஸ் மேனாக உயர்ந்து இருக்காரு விராட் கோலி.பள்ளிக் கூடத்திற்கு படிக்கப் போனது அப்பறமும் கூட விராட்டோட கவனம் எல்லாம் கிரிக்கெட்ல தான் இருக்கும். பள்ளி முடிஞ்சு வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் கூட லேட் பண்ண கூடாதுனு தான் போட்டுருக்கும் சீருடைய கூட கழட்டாம அதே ஆடையோட பக்கத்துல இருக்க கிரிக்கெட் மைதானத்துக்கு ஓடிருவாரு.

வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்க நண்பர்களோட கிரிக்கட் விளையாடுறத பழக்கமா வச்சிப்பாரு. அப்போ விராட் பேட்டிங் பண்ணுற விதத்த பார்த்து எல்லாருமே வாயடைச்சு போவாங்களாம். இவனோட ஆடுறதே கஷ்டம்னு சொல்லி அவங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வாங்களாம். ஏனா அப்போ விராட்டோட விக்கெட்ட கழற்றதுங்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம். விராட்கு எதிரா விளையாண்டு ஜெயிக்க முடியாதனால கிரிக்கெட் விளையாட அணி பிரிக்கிறபோ எல்லாரு விராட் இருக்க பக்கமா போக அடம்பிடிப்பாங்களாம். சிலசமயம் விராட்டையே தன் அணிக்குள்ள சேர்த்துகொள்ள முந்துவாங்களாம்.

இப்படி சின்ன வயசுலயே கிரிக்கெட் விளையாடுறதயே விரும்பி செய்து அதுக்காக நிறையவே பயிற்சி எடுத்துருக்காரு விராட். கிரிக்கெட் விளையாடுறது மட்டுமல்லாம நல்ல படிக்கவும் செய்வாரு. இதனால ஆசிரியர்களோட ஒரு ஃபேவரிட் ஸ்டுடன்ட் ஆகவும் விராட் இருப்பாரு. விராட்டோட கிரிக்கெட் விளையாடும் திறமைய பார்த்து பாடசாலையிலயே நிறைய பேர் அவரோட அப்பாவ பார்த்து ‘இவனுக்கு நல்ல திறமை இருக்கு. இவன கிரிக்கெட் பயிற்சிக்கு சேர்த்து விடுங்க’ அப்படினு சொல்லி இருக்காங்க. இதெல்லாம் கேட்டு சந்தோஷப்பட்ட விராட்டோட அப்பா எப்படியாவது தன்னோட மகன கிரிக்கெட் அகெடமியில சேர்க்க முடிவு செய்தாரு.

அதுபடி 1998 ஆம் ஆண்டு 9 வயசுல விராட் கோலி மேற்கு டெல்லி கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தாரு. ராஜ்குமார் சர்மாவோட வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியும் எடுத்தாரு. அதுவரைக்கும் விஷால் பாரதி பொது பாடசாலையில் படிச்சிட்டு இருந்த கோலிய கிரிக்கெட் மைதானமும் கிரிக்கெட் பயிற்சியும் இருக்குற சேவியர் கான்வென்ட் பஸ்சிம் விஹார் எனும் தனியார் பாடசாலைக்கு மாத்திட்டாங்க.
அங்கேயும் கிரிக்கெட் விளையாடுறதுல விராட் தான் கிங். அங்க அவருக்குனே ரசிகர் பட்டாளமும் சேர ஆரம்பிச்சுட்டு. நீண்ட நாள் பயிற்சிக்கு அப்பறமா 2002 ஒக்டோபர்ல முதன்முறையாக 15 வயதுக்குட்பட்ட டெல்லி அணிக்காக விராட் விளையாடினாரு. அதே ஆண்டு விளையாடிய எல்லா கிரிக்கெட் போட்டியிலயுமே ரொம்ப குறுகிய காலத்திலையே அதிக ரன்கள் அடிச்சு கெத்து காட்டினாரு.

விராட்டுக்கு 18 வயசாகும் போது சரியா 2006 ஆம் ஆண்டு விராட் ரஞ்சி கோப்பைக்காக விளையாடிட்டு இருந்தாரு. எதிர்பாராத விதமா அவரோட அப்பா இறந்துட்டாரு. ரஞ்சிப் போட்டியில பேட்டிங் செய்தபோ 90 ரன்களை அடிச்சு அசத்தினாரு விராட். ஆட்டமெல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள வந்ததும் அப்பாவ நெனச்சி கதறி அழுது இருக்காரு விராட். அப்பா இறந்தானால குடும்பம் ரொம்பவே கஷ்டத்துல இருந்தாங்க. வாடகை வீட்டுல தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுச்சு. இருந்தாலுமே விராட் தன்னோட கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தையும், பயிற்சியையும் கைவிடல.

2006 ஆம் ஆண்டு விராட் 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றாரு. மூன்று நாள் ஒருநாள் போட்டியில சராசரியாக 105 ரன்கள் அடிச்சு வெற்றியோடு திரும்பினாரு. 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் டி20 சாம்பியன்ஷிப்பிற்கு அறிமுகமானாரு. அவருடைய அணிக்காக அதிக ரன் அடிச்சவரும் இவர் தான். அதே ஆர்வத்தோட 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி தானொரு சிறந்த பேட்ஸ்மேன் அப்படினு எல்லாருக்குமே நிரூபிச்சு காட்டினாரு விராட். இதுக்கு அப்பறமா அதே ஆண்டு மார்ச் இந்தியாவோட 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் நியமிக்கப்பட்டாரு. இந்த அணியோட மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டவங்களுக்கான உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியோடு நாடு திரும்பினாரு விராட். மைதானத்தில அந்த வெற்றிய கொண்டாடின விராட்ட இந்தியாவே கொண்டாட ஆரம்பிச்சது.

அதுக்கு அப்பறமா இலங்கையோட நடந்த 2011 ICC World Cup இல் விரேந்திர சேவாககும் சச்சின் டெண்டுல்கரும் ஆட்டமிழந்தபோ விராட்டுக்கு ஆரம்பத்திலையே பேட்டிங் பண்ண வாய்ப்பு கெடச்சது. 49 பந்துகளுக்கு 35 ரன்கள் அடிச்சு அந்த போட்டிய தட்டிக் கொடுத்தாரு விராட். அப்போ மீண்டுமொருமுறை விராட்டோட திறமை அந்த மைதானத்துல அங்கீகரிக்கப்பட்டது. அதுக்கு அப்பறமா விராட்டுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். தன்னோட பேட்டிங் திறமையையும், ஃபீல்டிங் திறமையையும் காட்டி கேப்டன்ஷிப்பையும் சிறப்பா பண்ணினாரு. எம்எஸ் தோனி அவரோட கேப்டன்ஷிப்பை முடிச்ச அப்பறமா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தெரிவு செய்யப்பட்டாரு விராட். ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்ஷிப் பரிந்துரைக்கப்பட்டாலுமே விராட் கோலி எந்தவொரு பரிந்துரையுமே இல்லாம தன்னோடைய திறமையினால கேப்டன்ஷிப்ப பெற்றுக்கொண்டாரு.நீண்ட காலமா இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கா விளையாடி இருக்காரு.’ஈசாலே கப் நாம்தே’ அப்படினு விராட் கோலி சொன்ன வார்த்தை ரொம்பவே பிரபலமானது. பல விமர்சகர்கள் இவரு சொன்னத விமர்சிச்சாலுமே அதுக்காக அவரு உண்மையிலேயே கடினமா உழைச்சிருக்காரு. 2013 ஆம் ஆண்டு அந்த அணிக்கான கேப்டனாகவும் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டாரு. அடுத்த சச்சின் அப்படினு விராட் கோலிய எல்லாருமே கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கார் அப்படிங்குற பெயர யாருமே முறியடிச்சது இல்ல.

ஆனா சச்சின் டெண்டுல்கார் நிகழ்த்திய சாதனைகள் ஒவ்வொன்றா முறியடிச்சிட்டு வராரு நம்ம விராட் கோலி. இதனால தான் இவர அடுத்த சச்சினு செல்லாமா அழைக்குறாங்க. அதுமட்டுமல்லாம கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி தானு ஒரு புகழும் இருக்கு. ‘கிங் கோலி’ அப்படிங்குற அடைமொழியோட அவரை ரசிகர்கள் கொண்டாடுறாங்க. 2013 மார்ச் ‘விராட் கோலி அறக்கட்டளை’ என்ற பெயரோட ஒரு அறக்கட்டளையை ஈபேயுடன் இணைந்து ஆரம்பிச்சாரு. இதனால பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவு செய்துட்டு வாராரு. 2017 ஆம் ஆண்டு விராட் கோலி போலிவூட் நடிகை அனுஷ்கா சர்மாவை கல்யாணம் பண்ணாரு. இவங்களுக்கு இப்போ ஒரு அழகான பெண் பிள்ளையும் இருக்கு.

லூயிஸ் ஹாமில்டனுக்கு அடுத்தபடியா ‘உலகிலேயே புகழ்பெற்ற இரண்டாவது விளையாட்டு வீரர்’ என்ற கௌரவமும் விராட் கோலிக்கு கிடைச்சிருக்கு. அதுமட்டுமில்லாம நிறைய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸ்டராவும் இருக்காரு. அதுமட்டுமல்லாம அவருக்குனு தனியா ஒரு ரசிகர் பட்டாளமே இருக்குனு கூட சொல்லலாம்.விராட் கோலி ஒரு போட்டிய ஜெயிச்சா கூச்சலிட்டு கொண்டாடுறதும் அதுவே அந்த போட்டில தோற்றுபோய்ட்டா ஓவரா டென்ஷன் ஆகி கோவப்படுறது.சோகமா இருக்கது. அழுகுறது அப்படினு எப்பவுமே விராட்கோலி மேல ஒரு விமர்சனம் இருந்துட்டுதான் இருக்கு. இதுக்கு காரணம் அவருடைய சிறுவயது பழக்கம் தான்.

விராட் கோலி சின்ன வயசுலயே தன்னோட ஊருக்குல கிரிக்கெட் விளையாடி தோற்றுட்டாருனா ரொம்ப டென்ஷன் ஆகி அன்னைக்கு நாள் முழுக்க தான் தோற்று பொய்ட்டதா நினைச்சி ரொம்ப சோகமாவே இருப்பாராம். அந்த பழக்கம் தான் இன்று வரைக்கும் விராட் கோலிகிட்ட இருந்து வருது. அதுவும் குறிப்பா சொல்லனும்னா இந்தியா அணிக்காக விளையாடுறப்போ ரொம்பவே தன்னை முழுமையா ஈடுபடுத்திக் கொள்வாரு. உள்ளுர் கிர்கெட் அணியில விளையாடி வந்த யாரோ ஒரு சிறுவன் இன்னைக்கு உலகத்துக்கே தெரிஞ்ச ஒரு பிரபல விளையாட்டு வீரரா இந்திய அணியின் அசைக்க முடியாத வீரரா வலம் வந்து கொண்டுறக்க விராட் கோலி தன்னம்பிக்கை, கடின உழைப்பு,முயற்சி,வெறி, திறமையென ஒரு சாதனையாளரா பல பேருக்கு முன்னுதாரணமா வாழ்ந்துகொண்டு இருக்காரு.!

-மிஸ்டர் பொயட்டு

காதலின் அருமை!

பிடித்ததை எல்லாம்
பிடிக்கவில்லை என்று
சொல்லும்போதே
அவர்களுக்கு வேறு ஒருவரை
பிடித்துவிட்டது என்று
தெரிந்திருக்க வேண்டும்!

போகத்தான் போகிறார்கள்
என்றால் போகச்சொல்லி
விட்டு விடுங்கள்
அவர்கள் உங்களை
துரத்தும் வரை காத்திருக்க
நினைக்காதீர்கள்!

எரிந்து சாம்பலான பின்னர்
இதயத்தை தண்ணீர் ஊற்றி
அணைக்க முயற்சிகள் எடுக்கும்
முதலைக் கண்ணீரை இனிமேலும்
நம்பத் தயாராக இல்லை!

ஏதோவொரு தலைவலி என்னை
ஆட்பரிக்கும் போதெல்லாம்
ஒரு தேநீர் கோப்பை வேண்டும்
என்பதைப் போல
உன் நினைவுகள் என்னை
ஆட்பரிக்கும் போதெலாம்
நீ வேண்டும் என்றும் நினைப்பது
எத்தனை அபாயகரமான எண்ணம்!

கறைப்பிடித்த கத்தியால்
நெஞ்சை குத்தி கிறங்கடிக்கும்
அந்த நினைப்புக்கு முத்தாய்ப்பு
போடுவதொன்றும் எளிதில்லைதான்
இருந்தும் துரோகம் நிறைந்த
துருவப்பக்கங்கள் நோக்கி
செல்வதைக் காட்டிலும்
புழுதி நிறைந்த இந்த
மலையடிவாரம் மூச்சுவிட
உகந்த இடமாகவே இருக்கிறது!

-அஹ்ஸன் அப்தர்

சமூக உளவியல்!

உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை வாய்ந்த கற்கை நெறி எனவும் இன்னும் சிலர் நவீன கற்கை நெறி எனவும் அழைக்கின்றனர்.

சமூக உளவியல் பற்றி பல்வேறு அறிஞர்களும் தத்தம் கருத்துக்களை கூறியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நோக்குவோம். “சமூக உளவியல் என்பது தனி மனித சிந்தனைகள், உணர்வுகள், நடத்தைகள் என்பன பற்றிய ஏனைய மனிதர்கள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பவற்றினை அறிகின்ற ஒரு விஞ்ஞானம் ஆகும். என்று “கோர்டன்” அல்பேர்ட் கூறுகிறார்.

மேலும் கிம்போல் யங் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். “மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்ப்புக் கொள்வதை ஆய்வு செய்வது” சமூக உளவியலாகும் என்று அவர் தன் கருத்தை முன் வைக்கிறார்.மேலும் தனிமனிதர்களுக்குள் ஏற்படும் சிந்தனைகள், உணர்வுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கற்பது சமூக அறிவியல் ஆகும்” என்று கிங்வொல் யங் கூறியுள்ளார்.அதாவது சமூக உளவியலானது சமூகத்தை பற்றி கற்கின்ற சமூகப் பிரச்சினைகள் ஆராய்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது என்பதனை எம்மால் அறிய முடியுமாக இருக்கிறது.

சமூக உளவியலானது முழு சமூகத்தினதும் அத்தியாவசிய தேவையாக இன்று மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம் துரித வாழ்க்கை முறையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதகங்களும் ஆகும். அந்த வகையில் முழு சமூகத்தினரும் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து நடத்தைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நல்லவை நடக்கும் போது முன்னேறி செல்வதற்கும் தீயவை நடக்கும்போது அதை தாண்டி செல்வதற்குமான வழிகாட்டுதல்கள் சமூக அறிவியல் முலமே வழங்கப்பட முடியும். மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் அவனது தேவைகள் அனைத்துமே இன்னொருவரில் தங்கியே நிற்கிறது.

மனிதனால் தனித்து செயல்படுவது மிகவும் கடினமாகும். சமூக பொருளாதார தேவைகளை தாண்டி மனிதன் உயிர் வாழ உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வுளவியல் தேவைகள் சமூக இடைவினைகள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.மேலும் மனித உள்ளம் எவ்வாறு சமூகத்தால் தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதே சமூக உளவியலின் கருப்பொருள் ஆகும். மனித நடத்தைகள் யாவுமே மனப்பாங்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

ஆகையினாலேயே இக்கற்கை மனித உள்ளத்தோடு தான் அன்றாடம் இடைவினை புரியும் சமூகத்தினை இணைந்து விவரிக்கிறது.மனிதனது சிந்தனை உணர்வு என்பது மனித மனபாங்கினையே சுட்டி நிற்கிறது. ஒரு தனியனாயினும் அல்லது குழுவாயினும் ஒரு செயற்பாட்டை செய்யத் தொடங்கும் போது அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளமும் சமூகமும் காணப்படுகின்றன. இவ்வாறான உள சமுக காரணிகளை கண்டறிவதற்கு சமூக உளவியல் அன்றி வேறு எந்த கற்கை நாளும் முடியாது.

ஆளுமை தொடர்பான முழுமையான அல்லது மிக சரியான புரிதல் நாம் வாழும் சமூகத்தில் கிடையாது. ஆனால் ஆளுமை என்பது ஒவ்வொரு தனிமனிதனிலும் தவிர்க்க முடியாத பண்பாக காணப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனிலும் இவ்வாளுமையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. அல்லது வெளிக்காட்டப்படுகிறது. ஒருவரின் ஆளுமை பண்பை தெளிவாக வரையறை செய்வது சமூக உளவியல் ஆகும்.

உளவளத்துவம் என்பது இன்று அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. ஏனெனில் எந்த ஒரு செயலை தொடங்கும் முன்னும் அது தொடர்பான வழிகாட்டுதல் அல்லது ஆற்றுப்படுத்தல் இன்றி அமையாதது. சமூக உளவியலை பொறுத்தவரையில் தனியன்களது மனப்பாங்கு மற்றும் நடத்தை தொடர்பான புரிதல்களில் உழவளத்துவத்தினையும் இணைந்திருப்பது இக் கற்கையின் சிறப்பியல்பாகும்.

சமூகப் புலக்காட்சி, சுயம், ஆளுமை, குழு நடத்தை, தப்பபிப்பிராயம் – பாரபட்சம், உளவளத் துணை, ஆவேசம் – வன்முறை – மன அழுத்தம், இவை அனைத்தும் சமூக உளவியலின் பிரிவுகளின் கீழ் நோக்கப்படுகின்றன.இவை ஒவ்வொன்றையும் விரிவாக நோக்குவோம்.

சமூகப் புலக்காட்சி :- சமூகத்தைப் பற்றிய புரிதல்களில் சமூகப் புலக்காட்சி ஆனது பலர் அறிந்திராத ஒரு எண்ணக்கருவாகும். சமூகப் புலக்காட்சி தொடர்பான வரைவிலக்கணங்கள் மற்றும் சமூக புலக்காட்சி உருவாக்கத்தின் அடிப்படை கூறுகள் சமூகப் புலக்காட்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் குறிப்பாக வாய்மொழி மூலம் மற்ற தொடர்பாடல் முறை என்பன இங்கு விஷேடமாக விளக்கப்படுகின்றன.

சுயம் :- சமூக உளவியலில் சுயம் எனும் எண்ணக் கரு மிகப் பிரதான இடத்தினை பெற்றுள்ளது. சமூக உளவியலாளன்றி வேறெந்த கற்கையினாலும் சுயத்தினை பற்றிய முழுமையான ஆய்வினை மேற்கொள்ள முடியாது. அந்த வகையில் சமூக உளவியலானது சுயம் என்றால் என்ன? சுய உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் யாவை? போன்ற இன்னும் பல உப தலைப்புகளில் பேசுகின்றது.

ஆளுமை :- ஆளுமையானது ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பாகும். ஒவ்வொரு தனியனினதும் ஆளுமையானது ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தான் வாழும் சமூகத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயற்படும் திறனே ஆளுமை ஆகும். இதனைத் தீர்மானிப்பதில் இட் (id), ஈகோ (ego), சூப்பர் ஈகோ (superego) போன்றவற்றின் பங்கு பிரதானமானதாகும். இவற்றினை விரிவாக ஆராய்வதே இவ்வத்தியாயமாகும்.

குழு நடத்தை :- “மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் அவன் சமூகம் என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான்” எனும் கூற்றுக்கிணங்க மனிதனால் தனித்து வாழ முடியாது. எண்ணிறைந்த தேவைகள் உடையவனாக இவ்வுலகில் வாழும் மனிதர்களின் குழு நடத்தை மற்றும் இடைவினைகள் இங்கு உள்ளடக்கப்படுகின்றன.

தப்பபிப்ராயம், பாரபட்சம்:- தப்பபிப்ராயமும், பாரபட்சமும் சற்று வித்தியாசமான எண்ணக்கருக்களாகும். எனினும், பல்லினத்தன்மை கொண்டு சமூகங்களில் இவ்வாறான கருத்தியல்கள் பாரிய சவாலாகவே இன்று வரை காணப்படுகின்றது. உள்ளத்தில் எழுகின்ற ஒருவகையான காழ்ப்புணர்ச்சியின் விளைவான இவ்விரண்டு எண்ணப்பாங்குகளும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்த வல்லன. ஆகவே சமூக உளவியலில் இவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படுகின்றது.

உளவளத்துணை :- ஆற்றுப்படுத்துதல், வழிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல்வேறுபட்ட பெயர்களை கொண்ட இவ்வுளவளத்துணையானது இன்றைய அவசர உலகில் அத்தியாவசியமானதொன்றாகவே உள்ளது. நகரமயமாக்கம், நாகரீகமயமாக்கம் என்பவற்றோடு குறிப்பாக கைத்தொழில் மயமாக்கம் போன்றன ஈன்றெடுத்த செல்லப் பிள்ளை தான் மன உளைச்சலும், மன அழுத்தமும் ஆகும். இக்கொடிய உள நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான சிகிச்சையினையே உளவளத்துணை காட்டுகிறது. உளவளத்துணை என்றால் என்ன? உளவள ஆலோசகர் மற்றும் சேவை நாடி தொடர்பான தகவல்களும் அவர்களின் தார்மீகப் பொறுப்புகளும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆவேசம், வன்முறை, மன அழுத்தம் :- மிகையான மன அழுத்தத்தின் இறுதி முடிவு ஆவேசமும், வன்முறை உணர்வும் ஆகும், உளவியல் சார் கொடிய நோய்களில் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய மன அழுத்தத்தின் இறுதி முடிவு சில வேலைகளில் மரணமாகக்கூட இருக்கலாம். எனவே தான் இங்கு ஆவேசம் மற்றும் அதன் அடிப்படை, வன்முறை மற்றும் அதற்கான காரணங்கள் போன்றவற்றையும் மன அழுத்தம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்பனவும் சமூக உளவியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சமூக உளவியல் ஆனது எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது சூழலிற்கேற்ப மனிதன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை பற்றி கற்க முடிகிறது. சமூகத்தின் எண்ணத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த உளவியல் கல்வியின் தேவைப்பாடு அதிகமாக இருக்கிறது. மேலும், சமூகத்தில் பிறழ்வு நடத்தை கொண்டவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து அதற்கான முறையான தீர்வினை ஏற்படுத்த உதவுகிறது.

சமூகத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு நடத்தை கோலத்தினை கொண்டவர்களாக காணப்படுவார்கள். சமூகத்தில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள சமூக உளவியல் எமக்கு பங்களிக்கிறது. பிறருடைய மனநிலை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஒரு மனிதன் தன்னுடைய உளப்பாங்கில் மாற்றத்தினை கொண்டுவர, சமூக உளவியல் கல்வி பெரிதும் துணை புரிகிறது. இவ்வாறு சமூக உளவியல் ஆனது எமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகையில் எமக்கு துணை புரிகிறது. எனவே சமூக உளவியல் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பாடப்பரப்பாக மாறிவிட்டது.

ஜிமிக்கி!

அவளுக்காய் ஒரு பரிசு.பரிசாய் அனுப்பும் காதல் தூது அவை.
ஜிமிக்கி!

நித்தம் நூறு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவைகளிடம்
ஒன்றுவிடாமல் அப்படியே அவளிடம் சொல்லி விடுங்கள்.

தினம்தோறும் அவள் ஆட்கொள்ளும் தூக்கமில்லா என் இரவுகள் பற்றி அந்த இரவுகளில் பைத்தியக்காரனாய்
புலம்பிக்கொண்டிருக்கும் இவன் நிலை பற்றி!

அவள் அருகில் இருப்பதாய் காணும் கனவுகள் பற்றி
கனவு முடிய வழிகின்ற கண்ணீர் பற்றி!

கேட்கும் ஒவ்வொரு பாடல்களின் வரிகளிலும் அவள் நினைவு தரும் இன்பங்கள் பற்றி
சாப்பிட்டாளா இந்நேரம் என்ன செய்வாள்?

தூங்கியிருப்பாளா ஆன்லைனில் இருக்கிறாளா இல்லையா?

என்ன பதிவிட்டிருக்கிறாள் ஏன் இவ்வளவு நேரம் தூங்காமல்
இருக்கிறாள் பைத்தியக்காரி என தேடிப்பார்க்கும் இந்த பைத்தியக்காரத்தனத்தை பற்றி!

பிறந்த நாளன்று முதலாவது வாழ்த்து அவளுடையதாய் இருக்க வேண்டும் என நினைத்து ஏமாந்து போய் கலங்கிய கண்கள் பற்றி!

அடுத்த மாதம் வரவிருக்கும் அவளது
பிறந்த நாளுக்காய் இப்போதே சந்தோசப்படும் இந்த மழலை மனதை பற்றி!

அவளை எண்ணிக்கொண்டு எழுதும்  கிறுக்கல்களை பற்றி!

எவ்வளவுதான் அவள் காயப்படுத்தினாலும் விலகிப்போனாலும் இந்த நாடி வரை அவளை வெறுக்காமல் தேடி போகின்ற இவனது காதல் பற்றி!

 இப்போதும் எப்போதும்  அவளால் திருப்பி தர முடியாத பெருங்காதல் ஒன்று அவளுக்காய் காத்திருக்கிறது என என்னவளிடம் கொஞ்சம் சொல்லுங்களே.

அவள் காதோடு தானே ஊஞ்சல் ஆட போகிறீர்கள். அவள் காதுபட இவன் படும்பாடை கொட்டி விடுங்கள் அழகு
ஜிமிக்கிகளே.!!

-ஜெயரட்ணம் மோகன்ராஜ்

பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

பொண்ணுக்கு வயசாயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிவைக்கலயா?
இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தோஷம் இருக்கும் போல.அதுதான் நல்ல வரன் எதுவுமே கிடைக்கல. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. விஷேசம் ஏதுமில்லையா?’

‘குழந்தை பொறக்கலானா அப்போ அந்த பொண்ணுக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கு இவையெல்லாம் பெண்கள் மேல் இந்த சமூகம் எழுப்பும் விமர்சனங்கள். ஏன் பெண்பிள்ளைகள் பிறந்தாலே சாபக்கேடு என்று கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்யும் சமூதாயமும் இருந்திருக்கிறது என்பதும் மறைக்க முடியாத உண்மைதான்.

வாசித்துக்கொண்டிருக்கும் போதே புரிந்திருக்கும் உங்களுக்கு இப்படியொரு சமுதாயத்தில் தான் நாமும் வாழ்கின்றோம் என்று.இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஒரு பெண்ணென்றால் இது போன்ற விமர்சனங்களை நீங்களும் கேள்விப்பட்டோ அல்லது அனுபவித்தோ இருந்திருக்ககூடும். இத்தனை கேள்வி கேட்கும் இந்த சமூகம் உன் இலட்சியம் என்ன? உன் கனவு என்ன? உன் விருப்பம் என்னவென்று கேட்காமலேயே ஒரு பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்கிறது.
பன்னிரண்டு வயதில் பூப்படைவு. இருபது வயது கடந்தால் திருமணம். கணவன் இழந்தால் மறுமணம். அடுத்த வருடம் கையில் குழந்தை. இல்லையென்றால் பெயர் தரும் மலடி.

திருமணம் வரையில் சுதந்திரம் முடிந்தபிறகு சிறைதினம் இப்படி பெண்கள் சிலருக்கு வாழ்வதும் கூட ரணம் தான்.பெண்களின் வாழ்க்கை உண்மையிலேயே மீளமுடியாத போராட்டம்தான். அதிலும் மிகப்பெரிய போராட்டம் திருமணவாழ்வு.ஒரு பெண்ணின் விருப்பத்தை கேட்காமலேயே சில இடங்களில் திருமணம் நடக்கிறது. அவளுடைய வாழ்க்கையை முடிவு செய்யவும் தனி கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் நிச்சயம் பெண்களுக்கு உண்டு. ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து கனவுகளோடு வாழும் பெண்களை கல்யாண உறவமைத்து அவர்களின் வாழ்க்கையை வேறொரு பாதைக்கு திசைதிருப்புகின்றனர்.

பெண்கள் தம் வாழ்வையை பிறருக்காக அர்ப்பணிப்பவர்கள்.இதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு நம் அம்மாக்கள் தான். தம்மை சுற்றியிருப்பவர்களுக்கு செய்யும் அன்றாட சேவைகளே தன்னுடைய கடமைகளாக கருதிவாழ்கிறவர்கள் பெண்கள்தான். பெண்கள் பிறந்ததிலிருந்து வளர்ந்து வர வர சமூதாயத்தின் கண்ணோட்டத்திற்குள் அகப்பட்டுவிடுவார்கள்.நான் கூறியது போல் விமர்சனங்களும் எழக்கூடும். பெண்கள் சுதந்திரமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா?பின்பா? என்ற கேள்வி எழுப்பினால் பெரும்பாலான பதில்கள் முன்பு என்றுதானிருக்கும்.பெண்பிள்ளைகள் பெற்றோர்களுடன் இருக்கும் போது தான் சுதந்திரமாகவும்,தமக்கு பிடித்தமாதிரியும் இருப்பார்கள்.வளரும் காலத்தில் தம்முடைய பெற்றோருடன் சுதந்திரமாக வெளிப்படையாக வாழும் வாழ்க்கையை தான் பெண்பிள்ளைகள் அதிகம் விரும்புகின்றனர்.

ஒப்பனைகள் திருமணத்திற்கு முன்னரான வாழ்க்ககையில் தம்மை அழகாக பாவித்து அலங்கரித்து இன்பம் கொள்ளும் பெண்களுக்கு திருமணம் முடிந்தால் தம்மை அலங்கரிப்பதற்கு கூட நேரமொதுக்குவதில்லை. பேரழகிகள் என்று எண்ணி திருமணத்திற்கு முன்பு தம்மை ஒப்பணை செய்யும் பெண்கள் திருமணமான பின் தலை வாரி பூ வைப்பதை கூட விரும்பிசெய்வதில்லை. தம்மை தாமே கவனித்துக்கொண்டு அலங்கரித்து அழகாக இருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து தம்மை எங்கு கவனித்துகொள்ள போகிறார்கள்? கணவரையும் அவர் குடும்பத்தையும் தம் குழந்தைகளையும் கவனிப்பதிலேயே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

அதிலும் வேடிக்கையான விடயம் என்ன தெரியுமா? திருமணத்திற்கு முன் ஒல்லியாக
ஸ்ரோபரி பழம் போலிருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து பழுத்துவிட்ட பலாபழம் போல் மாறிவிடுகின்றனர். அவர்கள் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு சில சமயம் தோன்றாது காரணம் வீட்டு சூழ்நிலைதான்.
கணவருக்காகவும் தம் புகுந்த வீட்டிற்காகவும் தமக்கு பிடித்த வேலைகளை கூட திருமணமான பெண்கள் செய்ய முன்வருவதில்லை.

கணவருக்காக தமக்கு பிடித்த வேலைகளை கூடத் தியாகம் செய்யும் எத்தனையோ பெண்கள் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.தம்முடைய கனவுகளை மூட்டை கட்டி வைத்து. பெண்கள் எந்த துறையை தேர்வு செய்து சிறப்பாக செயற்படுகின்றனரோ அதில் அவர்கள் சாதிக்க நாம் உறுதுணையாக இருக்கவேண்டும்.சமையலறையிலும் வீட்டுக்குள்ளேயும் தம் வாழ்நாளை கழித்துக்கொள்ளும் பெண்கள் பலரும் தனக்கென்று ஒரு வேலைசெய்யவேண்டும். நிறைய சம்பாதிக்கவேண்டுமென்ற விருப்பத்தோடு வாழ்பவர்கள்.

அவர்களிடம் அவர்களுக்கு பிடித்த தொழில் என்னவென்று கேட்டு அதனை அவர்கள் செய்ய இடமளிக்கவேண்டும். அதுவரையில் வெளியில் சென்று வேலை பார்த்த பெண்கள் சுயதொழிலை ஏற்படுத்தும் திறமையும் கொண்டவர்கள். எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பின் சுய வியாபாரம் சுயதொழில் போன்றவற்றை மேற்கொண்டு சம்பாதிக்கின்றனர். சாதிக்கத்துடிக்கும் பெண்களை முடக்கிப்போடக்கூடாது. அவர்களின் திறமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கக்கூடாது. திருமணமாகினாலுமே அவர்களுக்கு அவர்களுக்கு பணிபுரிய விருப்பம் இருந்தால் அதற்கு இடமளியுங்கள்.சாதிக்கும் எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பிறகு தான் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். இல்வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்கும் ஆதரவும் ஊக்கமும் அவளை உச்சம் தொட செய்யும். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதுமில்லை. அப்படியிருக்க சாதிக்கும் கனவோடு இருக்கும் பல பெண்களை கல்யாணமெனும் பாசக்கயிற்றில் கட்டிபோடுகின்றனர். பல பெண்கள் இதனால் தம்முடைய விருப்பத்தை செய்யாமல் கணவருக்காக விட்டுக் கொடுக்கின்றனர். ஆணோ பெண்ணோ கனவுகள் யாருக்கும் வரலாம்.திருமணத்திற்கு முன்னோ பின்னோ அது எப்போதும் வரலாம்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மையென்றால் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அதுவும் திருமணமான பெண்ணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் அவளின் கணவர் தான் இருப்பார். விஞ்ஞானத்துறையிலிருந்து விளையாட்டுத்துறை வரை பெண்கள் தடம்பதித்து வருகின்றனர். அதிலும் திருமணமான பெண்கள் பலதுறைகளில் சாதித்துவருகின்றனர்.

திருமணமான உங்கள் வீட்டு பெண்களுக்குள்ளேயும் பல திறமைகள் ஒழிந்திருக்கும். மறைந்திருக்கும். சிலசமயம் புதைந்திருக்கும்.அவற்றை வெளிக்கொணர்ந்து உலகிற்கு உணர்த்துங்கள்.வரம்புகளற்ற பெண்களின் கனவுகளை மஞ்சற்கயிறு கட்டிவிடக்கூடாது. சுதந்திரமாக வாழவேண்டிய வாழ்க்கைக்கு தாலி வேலி போடக்கூடாது. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முடிந்த அளவு ஆதரவும் அன்பும் கொடுத்தாலே போதும் வீட்டுக்கொரு பெண் நிச்சயம் சாதனைப்பெண்தான்..!

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு குளித்துவிட்டு வாங்கி வைத்த புத்தாடையை அணிந்துகொண்டு ஒப்பனைக்கும் நன்றாக நேரமொதுக்கி ‘நல்லா இரு” என்ற வாழ்த்துக்கும் ஆயிரம் ரூபா நோட்டுக்கும் வீட்டிலுள்ள பெரியவர் காலில் விழுந்து ஆசி பெற்று கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்ப்பதை விடுத்து வரும் போகும் நபர்களையும் அவர்கள் அணிந்துள்ள ஆடைகளையும் பார்த்துவிட்டு ஒரு வழியாக தரிசனம் முடிந்து பின் உற்றார் உறவினர் தோழர் வீடுகளுக்கு அழையா விருந்தினராகச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து அங்கு கொஞ்சம் அரட்டைகளும் அடித்து உண்ணும் உணவை விருந்து போல பங்குபோட்டுண்டு வீட்டு முற்றத்தில் ரங்கோலி கோலம் போட்டு மதிலில் ஒளிர்விடும் விளக்கு ஏற்றி மத்தாப்பு அனைத்தையும் தாறுமாறாக அங்காங்கே வெடிக்கவிட்டு “டும் டும்” என்ற சத்தத்தோடு முடிந்திடும் அந்த நாள் தீபாவளித் திருநாள்.

பொதுவாக பண்டிகையென்றாலே எந்த கோயிலுக்குச் செல்வது பற்றி யோசிப்பதை விட என்ன ஆடை வாங்குவது என்றே குழப்பமே அதிகமாக இருக்கிறது. அதுவும் தீபாவளி வருவதற்கு பத்து நாட்களுக்கு முன் ஏன் ஒரு மாதத்திற்கு முன்னே சிந்தனை செய்யவேண்டியிருக்கும். கொண்டாட்டம் தீபாவளி மட்டுமல்ல ஷாப்பிங் செய்வதும் தான். கடைத்தெருக்கள் எல்லாம் தேடி அலைந்து தன் மனதிற்கு பிடித்த ஆடையைத் தெரிவு செய்து வாங்குவதற்குள் ஒரு நாளே போய்விடும். பத்து கடைகள் ஏறி இறங்கி கடைசியாக போகும் ஒரு கடையில் பிடித்த ஆடையைத் தெரிவுசெய்த பின்னர் ‘அப்பா.. ஒரு வழியா வாங்கியாச்சு” என்று பெருமூச்சு விடும் பரபரப்பான ஷொப்பிங் அனுபவத்தை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். தீபாவளி ஷொப்பிங் செய்வது பெரும்பாடுதான். நவீன ரக மற்றும் ட்ரெண்டியான ஆடைகளைத் தேடி படையெடுக்கும் இளம் தலைமுறையினரின் கூட்டம் ஒரு பக்கம். பட்டுபுடவை, குர்தா, சுடிதார் என புதிய ரக விழாக்கால ஆடைகளை தேடி அலையும் மகளிர் கூட்டம் இன்னொரு பக்கமென பண்டிகை காலத்தில் கடைத்தெருக்கள் பிஸியாகவே இருக்கும்.

தீபாவளி அன்று பெரும்பாலும் மக்கள் பாரம்பரிய உடைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் புடவைகளும் ஆண்கள் பட்டு வேஷ்டிகளும் தெரிவுசெய்கின்றனர். காலத்திற்கேற்றாற்போல நம் ஆடைத்தெரிவுகளும் மாற்றம் பெறுகிறது என்பது உண்மைதான். அதனால் தான் பாரம்பரிய உடைகளான புடவைகளும் வேஷ்டிகளும் தற்கால ஃபேஷன் வடிவமைப்பில் வெளிவந்து பலரையும் ஈர்க்கிறது.

சுருக்கு பதித்த (Ruffle Saree),

சல்வார் வடிவிலான தோத்தி ஸ்டைல் சாரி (Dhoti Style Saree),

அரைவாசிப்பகுதி எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவை (Half and Half
Embroidered Saree),

நெட் சாரி(Net Saree),

பூக்கள் பதித்த அலங்கார சாரி (Floral Printed Party Wear Saree),
கோடுகள் – வரிகள் பதித்த சாரி (Stripes Printed Saree) போன்ற சாரிகள் நவீன வடிவமைப்பையேற்று இளம் பெண்களை பெரிதும் கவர்கின்றன.

அதிலும் இவ்வருடம் ஒரே நிறத்திலான லினென் (Linen sarees) மற்றும் காட்டன் சாரிகள்(cotton silk sarees) அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறது.

ஆண்களுக்கும் வேஷ்டிகள் தற்கால வடிவமைப்போடு வித்தியாசமாக சந்தைக்கு வருகிறது.
கோர்ட்டுடனான வேஷ்டி(Dhoti with Suit),

குர்த்தா வடிவில் வேஷ்டி(Dhoti with Tuxedo),

டீ என்ட் கார்டிகன் வேஷ்டி (Dhoti with Tee and Cardigan),

டெனிம் சேர்ட்டுடனான வேஷ்டி(Dhoti with Denim Shirt),

பிளேஸர், போ மற்றும் டை உடன் வேஷ்டி (Dhoti with a blazer and a Bow Tie),

நேரு சட்டையுடனான வேஷ்டி (Dhoti with Kurta and a Nehru Jacket),

கோர்ட் சூர்ட்டுடனான வேஷ்டி (Dhoti with Coat and a Shirt),
ஜோத்புரி சட்டையுடனான வேஷ்டி (Dhoti with Jodhpuri Jacket) போன்ற வேஷ்டிகள் தற்கால ஃபேஷன் வடிவமைப்போடு மக்களை கவர்ந்துவருகின்றன.

குறிப்பாக வேஷ்டி கட்ட விருப்பமில்லாதவர்கள் கூட தனக்கு பிடித்த முறையில் அதனைக் கட்டிக்கொண்டு திருப்தியடைகிறார்கள். வேஷ்டிகளை விதம் விதமாக கட்டுவதுதான் இப்போது ட்ரென்ட். குர்தா வடிவிலும் கோர்ட் வடிவிலும் வேஷ்டிகளை அணிந்து அனைவரினதும் பார்வையை ஈர்க்கின்றனர். மாஸான ஆண்களுக்கு ஸ்டைலாகவும் ட்ரென்டியாகவும் வேஷ்டிகள் அணியும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது. நவநாகரீக சாயல் கலந்த பாரம்பரிய ஆடைகளைத் தெரிவுசெய்து அணிந்து இவ்வருட தீபாவளியை ஸ்டைலாக கொண்டாடிடுங்கள்!

‘எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்.. பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்.’

அனைவருக்கும் Team நாடியின் தீபாவளி நல்வாழ்த்துகள்..!

“குளிரும் தேசத்து கம்பளிகள்” – புத்தக வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களின் பேனா மையிலிருந்து துளிர்விட்ட படைப்பான, “குளிரும் தேசத்து கம்பளிகள்” புத்தகமானது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் 22ஆம் திகதி ஒக்டோபர் அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில், மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்புத்தகமானது 2022 தமிழ்நாடு புதுக்கோட்டை புத்தக விழாவில் சமூகம், வரலாறு, அரசியல், கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த கட்டுரை பிரிவில் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். இந்த விழாவில் பிரதம அதிதி ஆக பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளருமான திரு.விஜித ஹேரத் வருகை தர உள்ளார். இவரே புத்தகத்தை வெளியிடவும் உள்ளார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவானது மங்கள விளகேற்றலில் ஆரம்பமாகி தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவியான செல்வி.முபஸ்ஸிரா அஸ்வரின் வரப்பேற்புரை, சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப்பின் தலைமை உரை, புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முதல் பிரதியை பெறல், திரு.விஜித ஹேரத் அவர்களின் பிரதம அதிதி உரை, எழுத்தாளரும் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான சட்டத்தரணி இரா.சடகோபன் அவர்களின் ஆய்வுரை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான மல்லியப்புச்சந்தி திலகரின் மதிப்புரை, மலையக மக்கள் முன்னணி சிரேஷ்ட உபதலைவரும் எழுத்தாளருமான முனைவர் சதீஸ் குமார் சிவலிங்கம், தினகரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியரான திரு.தே.செந்தில்வேலவர் மற்றும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியரான திரு.எஸ்.ஸ்ரீகஜன் ஆகியோரின் வாழ்த்துரை, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரான திரு.கி.செல்வராஜ், கெம்பெய்ன் ஃபோரம் பிரைவட் லிமிட்டட்டின் முகாமைத்துவ பணிப்பாளரான திரு.தினேஷ் குமார் கார்மேகம் மற்றும் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் திரு.க.திலிப் குமார் ஆகியோரின் கருத்துரை மற்றும் எழுத்தாளர் சதீஸ் செல்வராஜின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிறைவடைகிறது. இந்த மொத்த விழாவினையும் கெப்பிடல் FM இனை சேர்ந்த உதவி நிகழ்ச்சி திட்ட முகாமையாளரான திருமதி.ஹம்சி மார்லன் அவர்கள் தொகுத்து வழங்க உள்ளார்.

நம் நாட்டின் அசாதாரண சூழலிலும் எழுத்துத்துறையில் விடா முயற்சியோடு உழைத்து வரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களுக்கு நாடி குழுவினர் சார்பாக பாராட்டுகள்.

விரைவில் “குளிரும் தேசத்து கம்பளிகள்” புத்தகத்தின் விமர்சனங்களோடு சந்திக்கிறோம்.

பவித்ரா ராஜ்

கால் கொலுசு தான் கல கலக்குது ..!

பெண்களுக்கு அணிகலன்களை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்.எந்த ஆடை அணிந்தாலும் அதற்கு ஏற்றவாறு அணிகலன்களை அணிந்துகொள்வது பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும். உச்சந்தலையிலிருந்து பாதம் வரை வகை வகையான ஆபரணங்களை அணிவது பெண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமன்றி அதில் அறிவியல் காரணங்கள் பலவும் புதைந்து இருக்கின்றன. நகைகள் அணிவது காலம் காலமாக பின்பற்று வரும் ஒரு தமிழர் பாரம்பரியமாகும். நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.தங்க நகைகள் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். நாம் அணியும் தங்க நகைகள் நம் உடலை எந்நேரமும் உரசிக்கொண்டிருப்பதால் மேனியின் அழகையும் அவை அதிகரிக்கும். நாம் அணியும் எல்லா ஆபரணங்களுமே தங்கத்தில் செய்யப்படும். நெற்றிச்சுட்டி,காதணி,வளையல்,மாலை என உச்சந்தலையிலிருந்து எல்லா ஆபரணங்களையுமே தங்கத்தில் அணிந்து கொள்வதுண்டு. இருந்தாலும் பாதத்திற்கு அணியும் கொலுசுகளை தங்கத்தில் அணியும் மரபு நம்மிடமில்லை.

என்ன தான் அனைத்து நகைகளையுமே தங்கத்தில் அணிந்து கொண்டாலும் பாதக் கொலுசுகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.
பொதுவாக பொன் என்றாலே அது லக்ஷ்மி கடாட்சம் என்பார்கள். அதாவது தங்கத்தில் மகாலக்ஷ்மி உறைகிறார் என்பது தமிழரின் நம்பிக்கை. அதனால் தான் தாலியைக் கூட தங்கத்தில் போடுகிறார்கள். அப்படியிருக்க தங்கத்தை காலில் அணிவது அதனை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

ஒருவரது உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை வெள்ளிக்கு உள்ளது. நமது உடலில் இருக்கும் ஆற்றலானது கை மற்றும் கால்கள் வழியாகவே வெளியேறும். அதனால்தான் கால்களில் வெள்ளி நகைகளை அணிகிறோம்.வெள்ளி நகைககள் நம் ஆயுளை விருத்தி செய்வன.உடலுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தருவன. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். நடக்கும் போது எழுப்பப்படும் கொலுசின் ‘கல கல’ எனும் ஒலியானது மனதிற்கு இனிமையைத் தரும். இது சுற்றிலும் நேர் அதிர்வலைகளை உருவாக்கி நல்ல மனநிலையைத் தரும்.

பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் காப்பு போன்ற கொலுசை அணிவிக்கிறார்கள். அவர்கள் தவழும் மற்றும் நடக்கும் வயது வந்ததும் மணிகள் கோர்த்த வெள்ளிக் கொலுசுகளை அணிவித்து விடுவார்கள். இதனால் குழந்தை நடக்கும் போது எப்போதுமே அது அணிந்துள்ள கொலுசின் சங்கீத ஒலியை கேட்டுக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாது குழந்தை என்ன செய்கிறது, எங்கே செல்கிறது போன்று குழந்தையின் ஒவ்வொரு அசைவினையும் குடும்பத்தார் கண்காணிக்க குழந்தையின் கால்களில் கொலுசை அணிவிக்கின்றனர். இதனால் தான் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கிறோம்.

பெண்கள் விரைவாக உணர்ச்சி வசப்படுபவர்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பது அறிவியல் கருத்து. பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலில் இருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றது.

பெண்கள் பல மணி நேரம் சமையலறையில் நின்று கொண்டு சமைக்கும் போது கால்களில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. நெடு நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பதால் ஏற்படும் வலியானது கீழ் முதுகுத் தண்டுவடத்தின் வழியாக கால்கள் முழுக்க பரவும். இதுபோன்ற சமயங்களில் கால்களில் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டதை அதிகரிப்பதோடு நமது உடலின் அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்கள் பலமிழந்துப் போவதிலிருந்து பாதுகாத்து பாதங்களை மேம்படுத்துகிறது.

பெண்கள் காலில் அணியும் வெள்ளிக் கொலுசானது உடலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை குறைத்து சருமத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றது.

பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுவதைக் குறைத்து ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துகிறது.

பாதங்களில் கொலுசு அணிவதால் பெண்களின் இடுப்புப் பகுதி வலுப்படுத்தப்படுகிறது.

கொலுசு அணிவதால் பாலியல் சிந்தனை வற்றாமல் இருப்பதோடு மலட்டுத்தன்மையை குறைத்து மாதவிடாய் கோளாறுகளை சீர்செய்ய உதவுகிறது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா தமிழ் சினிமாவோட முக்கிய இசையமைப்பாளரா வளர்ந்து வராரு.1990 ஒக்டோபர் 16 ஆம் திகதி சென்னையில நடிகர் ரவி ராகவேந்திரா மற்றும் கிளாசிக்கல் டான்சர் லட்சுமி ரவிச்சந்தரின் மகனாக பிறந்தாரு. இவரு லதா ரஜினிகாந்துக்கு மருமகன். அனிருத்துக்கு மியூசிக் தான் ரொம்ப பிடிச்ச விஷயம். இத தெரிஞ்சுக்கிட்ட அவரோட அப்பா அம்மா அவருக்கு ஒரு கீபோர்ட வாங்கி கொடுத்தாங்க. சின்ன வயதுல பேட்டையும், போலையும் தட்டுரதுக்கு பதிலா நம்ம தலைவன் கீபோர்ட தட்டி தான் விளையாடி இருக்காரு. அதுதான் இளம் வயசுலயே இசையமைப்பாளரா ஆயிட்டாரு. நம்ம இசைப்புயல் அவர்கள பாத்து பாத்து மியூசிக் போட கத்துகிட்டாரு இளம்புயல் அனிருத்.

இப்படியே மியூசிக் மேல தனக்கிருந்த ஆர்வத்த வெளிக்காட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய குறுந்திரைப்படங்களுக்கு அனிருத் மியூசிக் போட்டு இருக்காரு. அந்த மியூசிக்ல மயங்கி போன நம்ம ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரோட அடுத்த பெரிய ப்ரொஜெக்ட் ஆன முழுநீள திரைப்படத்துக்கு அனிருத்தையே இசையமைப்பாளராக்க முடிவு பண்ணிட்டாங்க. அந்த பாடம் தான் 3. 2012 இல் வெளியாகின இந்த திரைப்படத்துல கதை ஹிட் ஆகிச்சோ இல்லையோ. அந்த படத்துல வார ஒவ்வொரு பாட்டுமே ஹிட் ஆகிச்சு.

தமிழ் சினிமாக்குள்ள அடியெடுத்து வைக்க நம்ம அனிருத்துக்கு கிடைச்ச 1st வாய்ப்பும் இதுதான். பெஸ்ட் வாய்ப்பும் இதுதான். அத அவரு சரியா பயன்படுத்திகிட்டாரு. இந்த படத்துக்கு இசையமைக்கிறபோ அனிருத்துக்கு 21 வயது.இந்தவொரு தருணத்துல தான் இளைஞர்கள் எல்லாம் அனிருத் அப்படிங்குற புதுமுக இசையமைப்பாளர விரும்ப ஆரம்பிச்சாங்க. ‘வை திஸ் கொலவெறி’ அப்படிங்குற ஒரே ஒரு தங்லிஷ் பாட்டு நினைச்சு பார்க்காத அளவு வைரல் ஆகி ஒட்டுமொத்த உலகத்தையுமே திரும்பி பார்க்க வச்சிட்டாரு.

இந்த ஒரு பாடல் தான் எக்கச்செக்கமான மொழிகள மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதுமிருக்குற மக்களால அவங்களோட மொழியில பாடப்பட்டது. இந்த பாடல் உலகம் முழுக்க ஒலிக்க ஆரம்பிச்சுட்டு இந்த ஒரு வரவேற்பு தான் அனிருத்துக்கு முதல் முதல்ல அதுவும் முதல் படத்துக்கே கிடைச்ச மிகப்பெரிய கௌரவம். கொலவெறி வெற்றிய தொடர்ந்து நம்ம சின்ன தலைவன் சச்சின் டெண்டுல்கரின் நினைவா ‘சச்சின் கீதம்’ என்கிற பாடலுக்கு இசையமைச்சாரு. இந்த பாடல் பூஸ்ட் என்கிற ஹெல்த்தி பானத்தின் ப்ரேண்ட் ஓட இணைந்து தயாரிக்கப்பட்டது.

அனிருத் நல்ல இசையமைப்பாருனு தெரியும். ஆனா நல்ல பாடக்கூட செய்வாறா அப்படினு எல்லாரையும் வியக்க வச்ச அந்த ஒரு பாடல் தான் ‘கனவே கனவே கலைவதேனோ?’ என்கிற டேவிட் படத்துல வர பாடல். இதுக்கு அப்றமா அனிருத்துக்கு ரசிகர்கள் அதிகமாகிட்டாங்க. உண்மைய சொல்லனும்னா அந்த படம் ஹிட் ஆகுறதுக்கு பதிலா அந்த பாட்டுதான் ரொம்ப ஹிட்டாச்சு. சில பேர் அந்த பாட்டுக்காகலேவ படத்த பாத்தாங்க. சில பேர் அந்த பாட்ட கேட்டுதான் அது என்ன படம்னே தேட ஆரம்பிச்சாங்க. இதுக்கு அப்பறமா அனிருத் இசையமைச்ச எல்லாம் ஆல்பமுமே ஹிட் தான். இப்போ எல்லாம் அனிருத் பாட்டு பாடினாலே போதும் ஹிட் ஆகிடும் அப்படினு ரசிகர்கள் சொல்றாங்க.

அடுத்ததா ‘எதிர் நீச்சல்’ திரைப்படத்துக்கு இசையமைச்ச அனிருத் அந்த திரைப்படத்துல வரும் ‘எதிர் நீச்சலடி,வென்று ஏத்து கொடி’ அந்த பாடல பாடியதோட மட்டுமல்லாம பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் மற்றும் ஹிப்ஹாப் தமிழா போன்றவங்கள தமிழ் திரைப்படத்தில் அதுவும் தன்னோட இசையில் அறிமுகப்படுத்தினார். இதுக்கு அப்றம் அனிருத் தொட்டதெல்லாம் ஹிட்டுதான் அப்படினு மாறிடுச்சு.வணக்கம் சென்னை,  வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடி தான், வேதாளம், தங்க மகன், ரெமோ, ரம், விவேகம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா,  பேட்ட,  தர்பார், , , மாஸ்டர், டாக்டர்,  பீஸ்ட், காத்துவாக்கு ரெண்டு காதல், டோன், விக்ரம், திருச்சிற்றம்பலம்னு 2012 இலிருந்து 2022 வரை ஏகப்பட்ட டொப் ஸ்டார்ஸ்க்கு எல்லாம் மெகா ஹிட் மியூசிக் கொடுத்து இருக்காரு. அதுமட்டுமில்லாம அடுத்துவரபோர ஜெயிலர், ஏகே 62, இந்தியன் 2, விக்ரம் 2 போன்ற படங்களுக்கும் நம்ம  தலைவன் தான் இசையமைப்பாளர்.

நம்ம ரோக்ஸ்டாருக்கு பாடுறதுனா ரொம்ப பிடிக்கும். மத்த இசையமைப்பாளர்களோட இசையில நம்ம அனிருத் பாட்டு பாடினாரு அப்படினா அதுக்கு பணம் வாங்க மாட்டாரம் இலவசமாகவே பாடி கொடுத்துடுவராம்.அப்படி பல முன்னணி இசையமைப்பாளர்களோட இசையில நம்ம அனிருத் ஒன்னு இல்ல இரண்டு இல்ல. ஏகப்பட்ட பாடல்கள பாடியிருக்காரு. அதிலயும் குறிப்பிட்டு சொல்லனும் அப்படினா இசைப்புயல் ரஹ்மான் இசையில் மெரசலாயிட்டேன், டி இமான் இசையில் நீ என்ன பெரிய அப்பாடக்கரா?,எங்க தல எங்க தல டி ஆரு, டமாலு டமாலு டும்மிலு டும்மிலு அக்கா பெத்த ஜக்கவண்டி, காந்த கண்ணழகி, என் நண்பியே நண்பியே, தமிழன் என்று சொல்லடா , சந்தோஷ் நாராணயனன் இசையில் முன்செல்லடா, ‘ என்ன மட்டும் லவ்யூ பண்ணு புஜ்ஜி, யுவன் சங்கர் ராஜா இசையில் ஷட் அப் பண்ணுங்க டிட்பிட்’ போன்ற பாடல்களைப் பாடி இருக்காரு.

அதுமட்டுமில்லாம விவேக் மெர்வின் இசையில் பொடியன், குலேபா, சண்டகாரி நீதான், ஜிகிடி கில்லாடி, ஜெய் சுல்தான், போன்ற சூப்பர் பாடல்களையும் பாடியிருக்காரு.

இவை தவிர இன்னும் ஏரளமான இசையமைப்பாளர்களோட இசையில அனிருத் பாடி அந்த பாடல் ஹிட் ஆகியிருக்கு. ஆள சாச்சுபுட்டா கண்ணாலே, உயிரே உன் உயிரென நானிருப்பேன், எதுக்கு மச்சான் காதலு,ரங்கு ரக்கரா, யாஞ்சி, ஒத்தையடி பாதையில, கண்ணம்மா உன்ன,கண்ணே கண்ணே,யெலோ புல்லேலோ, போதை கனமே, நட்பு போன்ற பாடல்கள் எல்லாம் அனிருத்தோட குரலுக்குனே தனியா ஹிட் ஆகியிருக்கு.

ஹிட் கொடுக்கிறது மட்டுமல்லாம நம்ம  தலைவன் விருதுகள் வாங்குறதுலயும் கில்லாடி தான். தன்னோட இளம் வயதிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள வென்று எடுத்து தன்னோட ஸ்டூடியோல பார்வைக்காக வச்சி இருக்காரு.  தலைவனுக்கு நல்ல வரவேற்பு, மில்லியன் கணக்கான ரசிகர்கள், ரசிகர் மன்றம் எல்லாம் இருந்தாலும் அவர ‘கோப்பி கிங் (Copy King)’ அப்படினு விமர்சிக்குற ஒரு கூட்டமும் இருந்துட்டுதான் இருக்கு. ஆன இதெல்லாம் கொஞ்சம் கூட காதுல வாங்காத நம்ம சின்ன தலைவன் தன்னோட வேலையில மட்டுமே கவனமா இருக்காரு.

என்னதான் இந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தாலுமே அனிருத் கொடுக்கிற ஒரு பாட்டாவது தமிழ் சினிமாவுல ஹிட் அடிக்காம போகாது. இப்போ தலைவன் தான் ட்ரெண்டுல இருக்காரு. பெரிய பெரிய இசையமைப்பாளர்களுக்கு மத்தியில தோற்றத்துல பார்க்க சின்ன ஆளா தெரிஞ்சாலும் நம்ம  தலைவன் பெரிய பெரிய நடிகர்களோட படத்துக்கெல்லாம் அடுத்தடுத்து இசையமைச்சு கொடுத்த பாடல்கள் எல்லாமே ஹிட்தான் அப்படிங்குறது இப்ப வரைக்கும் நாம அந்த பாடல கேட்கும்போது புரியும். அனிருத் இசையமைச்ச ஒவ்வொரு பாடல்களையும், ஒவ்வொரு பீஜிம்களும், அவர் பாடிய ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதே நமக்கே சிலசமயம் தோணும் ‘ரோக்ஸ்டார்’ அப்படினா அது அனிருத் தானு. ரசிகர்களாலும், தமிழ் சினிமாவும் கொண்டாடுற  தலைவன் நம்ம ரோக்ஸ்டாருக்கு ஒரு Happy Birthday சொல்லலாமா?

index.php