நம்மில் பலருக்கு பிரியாணி பிடிக்கும். பிடிக்கும் என்பதை விட அலாதி பிரியம். சுட சுட, மண மணக்க மசாலா வகைகளை போட்டு, சில பல பீசுகளோடு, பாஸ்மதி அரிசியில் பிரியாணி என்றால் பலர் உயிரையே விட்டு விடுவார்கள்.
இன்று நாம் நாடியின் “ருசியைநாடி“ பகுதியில் பார்க்கப்போவது அசத்தலான ஒருவகையான சிக்கன் பிரியாணி செய்முறையே.வழக்கமான பிரியாணி செய்முறையிலிருந்து சற்று மாறுபட்டு தேங்காய்ப்பால் கலந்து, மசாலா பொருட்களையெல்லாம் நெய்யிலேயே வறுத்தரைத்து எப்படி பிரியாணி சமைக்கலாம் என்பதை தற்போது பாப்போம்.
செய்முறைவிளக்கம்!
முதலில் சுத்தம் செய்த கோழி இறைச்சியினை (இறைச்சியின் அளவைப்பொறுத்து ) தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, கரம் மசாலா , மிளகாய்த்தூள் , ஒரு சிட்டிகை அளவு தயிர் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும் அதுபோலவே நீளமான பாஸ்மதி அரிசியினை கழுவி அதனையும் ஒரு இருபத்தைந்து நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்பு பிரியாணிக்குத் தேவையான மசாலாவை வறுத்து அரைத்துக்கொள்ளும் பொருட்டு, ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை சூடாக்கி ,அதில் சோம்பு பட்டை, ஏலக்காய், கராம்பு போன்ற வாசனை திரவியங்களை இட்டு சற்று பொரிந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை போன்றவற்றையும் அதில் இட்டு வதக்கி ஆறவைத்து மிக்சியில் நன்கு அரைத்தெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது படிநிலையாக ஒரு குக்கரில் நெய், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுவந்ததும், சோம்பு, மராத்தி மூக்கு, நட்சத்திர பூ, பிரிஞ்சி இலை, பட்டை கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றையும் சேர்த்து கொஞ்சம் பொரியவிட்டு, நீளநீளமாக வெட்டிவைத்த வெங்காயத்தினை (கொஞ்சம் அதிகமாகவே வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள்) இட்டு பொன்னிறமாகும் வரையில் வதக்கிக்கொள்ளவேண்டும். பின் பெரிய அளவிலான இரண்டு தக்காளிகளை அறிந்து வெங்காயத்தோடு சேர்த்து (தக்காளி சீக்கிரமாக மசிவதற்காக உப்பு இந்த இடத்திலேயே சேர்த்துக்கொள்ளலாம்) வதக்கி, அதனோடு நெய்யில் வறுத்து அரைத்துவைத்திருக்கும் மசாலா கலவையினையும், ஊறவைத்த சிக்கனையும் ஒன்றாக கலந்து (தண்ணீர் கலக்காமல் ) வேகவைக்கவேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து வந்ததும் , (நீங்கள் எடுக்கும் அரிசியின் அளவுக்கேற்ப தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பாலின் அளவு மாறுபடும்) ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் இரண்டு டம்ளர் தேங்காய்ப்பால் கலந்து கொதித்து வந்ததும் அதில் ஊறவைத்திருக்கும் அரிசியை கொட்டி நன்கு கலந்துவிடவும். பின் கொத்தமல்லி இலை, புதினா போன்றவற்றையும் கொஞ்சம் தூக்கலாக போட்டு (உப்பு, காரமெல்லாம் சரிபார்த்துவிட்டு) வேகவைத்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான் சுலபமான முறையில் மணக்க மணக்க சுவையான பிரியாணி தயாராகிவிடும்.
சிக்கன் பிரியாணிக்கு best commination என்றால் அது தயிர் பச்சடி தானே? அதையும் செய்து பரிமாறிப்பாருங்கள் பாராட்டுக்கள் குவியும் …
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அவள் வாழத் தகுதியற்றவள். ஓன்று அவளாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்வாள், அல்லது வில்லன்களால் கொலை செய்யப்படுவாள்! இதுதான் காலம்தோறும் நாம் பார்த்துவந்த தமிழ் சினிமாக்கள் நமக்கு காட்சிப்படுத்திய விதம். இல்லையென்றால் இதுபோன்ற குற்றங்களை எமோஷனலாக அணுகி குற்றவாளியை பழிவாங்குவது அல்லது கொலை செய்வது போன்ற கருத்துகளையும் நம் சினிமாக்கள் வலியுறுத்த தவறியதில்லை.
ஆனால் இந்த வழக்கமான பார்முலாவை விடுத்து கடந்த வருடம் “சோனி லிவ் ஓடிடி” தளத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் “அனல் மேலே பனித்துளி “!
தன்னுடைய உடலை தனக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்தும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் பெண்ணின் சீற்றமே இந்த ‘அனல் மேலே பனித்துளி’ என்றால் மிகையில்லை.
கதையின்படி, சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை ஒன்றில் மேலாளராக இருக்கும் கதாநாயகியான ஆண்ட்ரியா தன்னுடன் வேலைப் பார்க்கும் பெண் ஒருவரின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார். திருமணத்திற்குப்பின் கொடைக்கானல் இயற்கையை ஓர் மாலை நேரத்தில் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, அங்கே மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்.
ஏற்கெனவே ஆண்ட்ரியாவை பழிவாங்கக் காத்திருக்கும் சில ஆண்கள்தான் குற்றவாளிகள் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறது காவல்துறை. ஆனால், அந்த காவல்துறையினை சேர்ந்த மூன்று பேரால்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது.
எங்கே உண்மை தெரிந்த ஆண்ட்ரியா தம்மை காட்டிக்கொடுத்துவிடுவாளோ என அஞ்சிய அந்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்தே மீண்டும் அவளை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து தம்மைப்பற்றி வெளியில் சொன்னால் இந்த புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடும் அதன்பின்னர் உன் மானம் மரியாதை என்னாவது என மிரட்டுகின்றனர்.
மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஆண்ட்ரியா குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதே படத்தின் கதை. இந்த திரைப்படத்தில் என்னை மிகவும் ஈர்த்த ஓர் காட்சியமைப்பு என்னவென்றால், ஆண்ட்ரியா தான் ஒரு சிறுமியாக விளையாடிக்கொண்டிருக்கும்போது, பள்ளி செல்லும்போது அதன்பின்னர் கல்லூரி வேலை என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்லும்போதெல்லாம் அவள் அம்மாவால் அல்லது யாரேனும் ஒரு குடும்ப அங்கத்தவரினால் “கவனம் நீ ஒரு பெண் உன்னை நீ பாதுகாத்துக்கொள்ளவேண்டும் (அதாவது உன் உடலை நீ பாதுகாத்துக்கொள்ளவேண்டும் எனும் தொனியில் ) திரும்பத் திரும்ப ஒருவிதமான அச்சம் கலந்த ரீதியில் அறிவுறுத்துவதும் பின்னாளில் தான் வல்லுறவுக்குள்ளானபின் அவள் அந்த அறிவுறுத்தல்களை பற்றி சிந்திக்கும்போது ஏன் ஒரு பெண்ணினது உடல் மீது இத்தனை அச்சுறுத்தல்கள் எதற்காக அவள் மட்டும் தன்னை பாதுகாத்துக்கொள்ள திரும்பத் திரும்ப அறிவுறுத்தப்படுகின்றாள்?
பெண் உடலை பாதுகாக்க குடும்பங்கள் எடுக்கும் முயற்சியில் எத்தனை வீதம் தங்கள் ஆண் குழந்தைகளிடம் பெண் உடள்மீதான வன்முறை தவிர்க்கப்படவேண்டும் என்றோ அல்லது அவள் சக மனுஷியாக மதிக்கப்பட வேண்டும் என்றோ கூறப்படுவதில்லை? என்கிற ரீதியில் அவளது மனவோட்டம்தனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் முக்கியமானது.
ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்வியும், பெண்ணுடலை அவர்களுக்கு எதிரான ஆயுதமாக்கும் போக்கு குறித்தும் பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் பெண்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள், உளச்சிக்கல்கள் போன்ற விடயங்களை இந்த படம் பேசுகிறது.
மேலும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும்போது பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் இந்த சமூக உளவியலை கேள்வி கேற்கும் இத்திரைப்படமானது, தவறு செய்தவன் தான் குற்றவாளி, எந்த வகையில் பாதிக்கப்பட்டவள் தவறானவள்? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைத்திருப்பதென்பது சிறப்பான பார்வை.
அதுமட்டுமன்றி பாலியல் வன்கொடுமைக்குள்ளான ஓர் பெண் கட்டாயம் அதை மூடி மறைத்துவிடாமல் அதனை வெளிக்கொணர்ந்து சட்டத்தின்முன் குற்றவாளிகளை நிறுத்துவதென்பது அதுபோன்ற குற்றங்களை அடுத்து செய்ய நினைப்பவர்களை நிச்சயம் தடுக்கும் என்பதால் இது காலத்தின் அவசியம் என்பதையும் அப்படி ஓர் பெண் முன்வரும்போது அவளுக்கு அவளது குடும்பம் பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதையும் இத்திரைப்படம் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.
‘‘உசுரு பெருசா, மானம் பெருசான்னா, மானம்தான் பெருசு. ஆனா, அந்த மானம் எதுல இருக்கு, என் உடம்புலயா? நான் வாழற வாழ்க்கையிலதானே?’’ என ஆண்ட்ரியா பேசும் வசனங்கள் நம் சமூகத்தின் பார்வையானது மாறவேண்டிய காலகட்டத்திற்கு வந்தாயிற்று என்பதையே உணர்த்துகின்றது போலும் …
பேரன்பே! எடையற்ற உன் கனம் என் திசைகளை உருகுலைக்கிறது என் உயிர் திவலைகளில் ஊறவைத்த உன் உலர் கரத்தின் அவ்வொற்றை ஸ்பரிசம் வறண்டு வெடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருக்கிறது!
தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா? திரும்பி பார்க்கும் போதெல்லாம் கசையால் அடிப்பது மட்டும் தான் வாழ்க்கை என்பதன் பேரருளா?
என் முதல் பூவே! தேன் குடிக்கும் போது முத்தங்கள் மட்டும் விதைத்து விட்டால் நான் தான் ஒரு பட்டாம்பூச்சியா? அழுந்த என் பாதம் பட்டப் போது
உயிர் வாடி விழுகிறாய் என்றால் நீ தான் ஒரு பெரும்பூவா? காலம் சற்று கடுமையாய் ஊதி விட்டக் காற்றில் கரைந்து கலைந்து போவத்தான் நம் காதல் என்பது பருத்திப் பூவா?
இல்லை! நானென்பது ஒரு கனக்கும் வண்ணாத்தி நீயென்பது ஒரு நந்தவனம் நம் காதல் என்பது விழுது விட்ட பெரும் மரம்!
காயப்படாத காகிதம் தான் கவிதைகளை பிரசவிக்குமா? முலைக்காம்பை கடிக்காத குழந்தையும் கடி வலி பொறுக்காத ஒருத்தாயும் இங்கெங்கேனும் சீவிக்கின்றனரா?
வைராக்கியமே! நாளைய புது நாள் காயங்களுக்கு களிம்பிடும் என்றா நினைக்கிறாய்? அடியே அது புழுக்களை சேமித்துக் கொண்டிருக்கிறது!
காதலென்பது ஒற்றைவழிப் பாதையா? பரஸ்பர பாதைகள் உருவாக்கப்பட்டு பரஸ்பரம் ஆற்றுப்படுத்துவது தானே அது?
பெருஞ்சேயே! ஊமைகளாகிப் போன நம் கண்கள் கசிக்கின்ற அத்துணை துளிகளும் உப்புக் கரிக்காமல் மண்ணில் விழுவது தான் வலிக்கிறது!
பரிமாற்றிய வார்த்தைகள் என்பது சுறுக்கிட குத்திய நெருஞ்சி விதைகள் தான்! இன்னும் ஆயிரம் வார்த்தைகள் மயிலிறகாய் நம் பரஸ்பர பாதம் வருடிவிட முளைக்காமலா போய்விடப்போகின்றது?
சௌபாக்கியமே! கலைந்து அலையும் நீகங்கள் இணைந்து புணர்ந்து மழைகளை தூவத்தான் செய்கிறது! கரையில் உடையும் திரைகள் மீண்டும் மீண்டும் மணலை திட்டுப் பார்க்கிறது
பசியால் தவித்துக் கொண்டிருக்கிறேனடி பைத்தியக்காரி வா… கண்ணீர் துடைத்து விடுகிறேன் உன் சிறுமுலையை வாயில் திணித்து தாய்ப் பால் பாய்ச்சு! கடிக்காமல் குடிக்கிறேன்!
வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று அடிப்படையில் எந்த மக்களும் வாழ்ந்திருக்கவில்லை.
ஒரு காலத்தில் பச்சைத் தீவு எனும் பெயருடன் இத்தீவு விளங்கியதாகவும், கச்சம் எனப்படும் ஒருவகையான ஆமைகள் இங்கு மிக அதிகமாக காணப்பட்டதனால் கச்ச தீவு என பின்னாளில் மாற்றம் கண்டதாகவும் கூறப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் முத்துக்கள், சங்குகள் போன்றவை ஏராளமாக கிடைக்கப்பெற்றதாகவும் பனை தென்னை போன்ற மரங்களுடன், சுண்ணாம்புத் தயாரிப்பிற்கான ஜிப்சம் ஏராளமாக கிடைக்கப்பெற்றது. அதுமட்டுமன்றி எண்ணெய் வளம் இருக்கக்கூடும் எனவும் ஊகிக்கப்படும் ஓர் இடமாகவும் திகழ்கின்றது.
பதினேழாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இத்தீவு இருந்ததாகவும், 1622 இல் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிகளுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின்படி கச்சதீவினை கிழக்கிந்திய கம்பெனிகளின் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 1858இல் கம்பெனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா இங்கிலாந்து மகாராணியின் ஆட்சிக்குள் கொண்டுவரப்ப்பட்டபோது கச்சத்தீவு ராமநாதபுர சமஸ்தானத்துக்கு சொந்தமானது என எழுத்து பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதுவரையில் எவ்வித பிரச்சினையுமின்றி இருந்த கச்சைதீவானது 1922 இல் இந்தியா மற்றும் இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களால் இரு நாடுகளுக்குமிடையேயான கடல் எல்லையினை பிரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது கச்சதீவு இலங்கை வரைபடத்துடன் இணைக்கப்பட வேண்டுமென இலங்கை அதிகாரிகள் கோரிக்கைவிட இதற்கு இந்தியாவின் ஆங்கிலேயே அதிகாரிகள் மறுப்புத்தெரிவிக்கவே, கடல் எல்லையினை பிரிக்கும் முயற்சிகள் அத்தோடு கைவிடப்பட்டன. அன்றுதொடங்கி இன்றுவரையில் இந்தியா இலங்கை இருநாடுகளுக்குமிடையே கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்கிற பூசல்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
செயற்கை இழைகள் கண்டுபிடிக்கப்படாத முன்னைய காலப்பகுதியில் நூலினால் பின்னப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தம்முடைய வலைகளை உலர வைப்பதற்கும், நீண்டநேர கடல்பயணத்தின் சொற்பநேர இளைப்பாறல்களுக்கும் எனஇரு நாட்டு மீனவர்களாலும் காலங்காலமாக கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது. 1905ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த “சீனிக்குப்ப படையாட்சி” என்பவர் கச்சத்தீவில் மீனவர்களின் பாதுகாவலராக கருதப்படும் போர்த்துகீசிய புனிதரான அந்தோனியாருக்காக கட்டிய தேவாலயத்தில் இன்றுவரை இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஒன்றுகூடி விழா கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி உள்நாட்டு தேவைகளுக்காக மீன்பிடிக்கப்பட்ட அன்றைய காலப்பகுதியில் இருதரப்பு மீனவர்களுக்குமிடையே எவ்வித முறுகல் நிலையம் இருந்திருக்கவில்லை. கடல்வளம் பாதுகாக்கப்பட்டதோடு ஒருவர் எல்லையில் அடுத்தவர் மீன்பிடித்தார் என்கிற குற்றச்சாட்டுக்களும் இருந்திருக்கவில்லை.
மீனவ சமூகம் என்கிற அடிப்படையில் அவர்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் எழாதிருந்தபோதிலும், கச்ச தீவு யாருக்கு சொந்தம் என்கிற கேள்வி இரு நாட்டு அரசுகளுக்குமிடையே நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டேயிருந்தது எனலாம் . இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் நோர்வே நாட்டு உதவியுடன் , ஏற்றுமதிக்காக தென்னிந்தியாவின் கேரளத்தில் அதிவேக மீன்பிடி மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாரம்பரிய மீன்பிடி தொழிலில் மிகப்பெரிய தாக்கமேற்பட்டது. ட்ராலர் மூலம் கடலின் ஆழம்வரையில் மீன்களைத்தேடும் இந்த வேட்டையில் , மீன்களின் இனப்பெருக்கத்திற்கு அவசியமான பவளப்பாறைகள் அழியத் தொடங்கியிருந்தாலும், இதன் முதலாளிகளுக்கு பணம் கொழிக்கும் தொழிலாக ட்ராலர் மீன்பிடி மாறியது.
இதனால் பெரும் பணம் படைத்தவர்கள் ட்ராலர்களில் முதலீடு செய்ய,. பாரம்பரிய மீனவர்கள் அவர்களிடம் கூலிகளாக மாறினார். கேரளாவில் அறிமுகமான நோர்வேயின் ட்ராலர் மீன்பிடி முறை படிப்படியாக தமிழகத்தை வந்தடைய , அங்கே ஆரம்பித்தது தமிழக , இலங்கை மீனவர்களின் அடிபிடி எனக்கூட சொல்லலாம் . இரு நாடுகளுக்கும் பொதுவான அந்த சிறிய கடற்பரப்பில் இந்திய ட்ராலர்களின் எண்ணிக்கை ஏகமாக அதிகரிக்க, எந்தவித தொழில் நுற்ப வளர்ச்சியும் இன்றி இன்னுமே பாரம்பரிய முறையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு பெரும் தலையிடி ஆரம்பித்திருந்தது.
மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை தீவிரமடைந்துகொண்டிருந்த வேளையில் ,1966ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரில் வெற்றீயிட்டியிருந்த சீனாவும் ,1971 ஆம் ஆண்டு தன்னுடனான போரில் வெற்றியீட்டி பங்களாதேஸ் என்கிற தனி நாடே உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருந்த பாகிஸ்தானும் இந்துசமுத்திரத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக விளங்கிய இலங்கையை தமது நட்பு நாடாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன . ஆனால், இலங்கையை தனது நட்பு வட்டத்துக்குள் வைத்திருப்பதே இந்தியாவிற்கு சாதகமானது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி.
1974 இதேகாலகட்டத்தில்தான் இலங்கை பிரதமரான ஸ்ரீமா பண்டாரநாயக்கா அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியில் சிக்கிக்கொண்டிருந்தார் . ஆக இலங்கை எக்காரணத்திற்காகவும் இந்திய நட்பு வட்டத்திலிருந்து நழுவிவிடக்கூடாது என எண்ணிய இந்திய பிரதமரும் , இழந்த தன்னுடைய அரசியல் செல்வாக்கினை எப்படியாவது மீள கட்டியெழுப்பவேண்டும் என கருதிய இலங்கை பிரதமரும் பரஸ்பரம் கைக்குலுக்கிக்கொண்டதன் விளைவு கச்ச தீவு 1974 / 06/21 இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.
ஆனாலும் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் எதிர்ப்பின் பின்னணியில், ஒப்பந்தத்தின் 5 ஆம் சரத்தின்படி இலங்கையிடம் எந்தவித முன்னனுமதியுமின்றி தமிழக மீனவர்களும் கச்சைதீவினை பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டது. ஆறாவது சரத்தின்படி எல்லைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் இரு நாட்டு மீனவர்களுக்கும் இந்த தீவில் உரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
சிறிதுகாலம் எல்லாமும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்ததுபோலும் 1976/03/22 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் எல்லையினை பிரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என்கிற நிபந்தனை சேர்க்கப்பட்டது. எனினும், அப்போதைக்கு அதுவும் எவ்வித முறுகல்நிலையினையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.
ஆனால் எப்போது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததோ அப்போதிருந்து மீன்பிடி என்கிற போர்வையில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், விடுதலைப்புலிகளுக்கான சகல உதவிகளும் தமிழகத்திலிருந்து இலகுவாக இந்த கடல் மார்க்கமாக வழங்கப்படுவதாகவும் கருதிய இலங்கை அரசால் மீண்டும் கையிலெடுக்கப்பட்டது இந்த ஒப்பந்தம்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட ஆரம்பித்தனர். நியாயம் கோரியவர்களுக்கு 1976ஆம் ஆண்டு ஒப்பந்தம் இலங்கை அரசால் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் அது வங்காள விரிகுடா மற்றும் மன்னார் விரிகுடா பகுதிக்கு மட்டுமே உரித்தான ஒப்பந்தம் எனவும் அது கச்சத்தீவுக்கு பொருந்தாது என்பதும் தமிழக வாதம். 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்குப்பின் வட பகுதியில் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் ட்ராலர்களின் வீச்சுக்குமுன்னால் செய்வதறியாது திகைத்தனர்.
இலங்கை மீனவர்களின் வலைகள் அதிவேக ட்ராலர்களினால் கிழித்தெறியப்படுவதாக குற்றம்சாட்டினர். இதனால் மீண்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீதான கைதுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. தமிழ் நாட்டிலும் எப்போது யார் ஆட்சியை பிடிக்க முனைந்தாலும் கச்ச தீவை மீட்போம் என்கிற தேய்ந்துபோன ரெகார்டை உபயோகிக்க தவறுவதேயில்லை . அதேபோல் 2008 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவால் கச்சை தீவை மீட்க வேண்டுமென்று கோரி தொடர்ந்த வழக்கும் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘கடமை’. இக்குறுந் திரைப்படமானது Rasly Akthaf இனால் இயக்கப்பட்டுள்ளது. இதற்க்கான cinematography Ahsan இனால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்குறுந் திரைப்படத்திற்க்கான எடிட்டிங் வேலைகள் Jesa இனால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நடுத்தர வயதினையுடைய ஆணின் இருமல் சத்தத்தினை தொடர்ந்து “என்னப்பா? என்னாச்சு? கொஞ்சம் தண்ணிய குடிங்கப்பா!” என்ற வசனத்தோடு இக்குறுந் திரைப்படத்தின் ஒலி ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து களிமண்ணும் தகரமும் கொண்டு கட்டப்பட்ட தனி வீடு ஒன்று சைக்கிளையும் ஆட்டு குட்டியையும் துணையாக இறுக்க கட்டிக் கொண்டு இருளில் தனியாக நின்றுக் கொண்டிருந்தது. அந்த வீட்டினுள் எம்மை அழைத்து சென்று இருமலுக்கு சொந்தக்காரரையும் அவரது மகனையும் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர்.
தகப்பனின் சுகயீனத்தை பார்த்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்த சிறுவனின் கண்களுக்கு தந்தையின் உபகரணங்கள் தென்படுகின்றன. அந்த உபகரணங்களோடு அந்த காட்சியை cut செய்து “டேய் இஞ்ச வா இஞ்ச வா உனக்கு எப்ப பாத்தாலும் phone தானா?” என்ற வசனத்தோடு தொடர்ந்து இன்னொரு சிறுவன் அமர்ந்திருந்து அழும் shot உடன் வேறொரு வசதியான வீட்டின் காட்சி ஆரம்பமாகிறது. அழுதுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தனது பையினுள் சில சட்டைகளை நிரப்பிக் கொண்டு வீட்டாருக்கு தெரியாமல் சுவர் ஏறி குதித்து வீட்டை விட்டு ஓடுகிறான். அந்த ஓட்டத்தோடு இரவு கழிந்து காலை புலர்ந்தது. இரவெல்லாம் தந்தையின் இருமலால் தூக்கம் தொலைத்து படிப்பின் மீதான கவனத்தை தொலைத்த சிறுவன், தனது பைக்குள் தந்தையின் உபகரணங்களை நிரப்பிக் கொண்டு வீட்டின் மூலையில் தனது சிறகுகளை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு புறப்பட்டான் இல்லை காலமும் வறுமையும் அவனை வேலைக்கு வழியனுப்பி வைத்தது.
வீட்டை விட்டு ஓடி வந்து பஸ் தரிப்பிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்திலிருந்து விழித்து தனது பையை தேடி அலைந்துக் கொண்டிருந்தான். அந்த தேடலினால் இந்த இரு சிறுவர்களும் சந்தித்துக் கொண்ட விதம், அதன் பின் நடந்த உரையாடல், தடம் மாறி சென்ற இருவரின் பாதையும் சீரானதா? இல்லை சீர்குலைந்து பரிதாபத்துக்கு உள்ளானதா? இதுவே இக்குறுந் திரைப்படத்தின் மீதி கதை. உண்மையில் இருவரின் பாதை முடிந்த விதமும் என் விழிகளில் தானாகவே நீர் பொங்க காரணமாகிவிட்டன.
பென்சிலும் பேனையும் பிடித்து கனவு பாதைகள் வரைய வேண்டிய வயதில், வறுமையை விரட்ட பணம் தேடி அலையும் நிலை எவ்வளவு கொடுமையானது. தெருக்களில் சிறார்களை கையேந்த விடுவதும், மக்களின் பரிதாபத்தை சம்பாதிக்க பச்சிளம் மழலைகளை கைகளில் தாங்கியபடி யாசிப்பதும், வகுப்பறையில் இருக்க வேண்டிய வயதினையுடைய சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் நாம் அன்றாடம் பார்த்து கடக்கும் சாதாரண காட்சிகளாக மாறிக் கொண்டு வருகின்றன. இவ்வாறன காட்சிகளின் பின் எவரும் காது கொடுத்து கேட்காத கண்ணீர் கதைகள் உண்டு என்பதை இந்த குறுந் திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
9 நிமிடம் 33 வினாடிகள் நீளம் கொண்ட இந்தக் குறுந்திரைப்படத்தில் கடைசி கிளைமாக்ஸில் இசைக்கப்பட்டிருந்த இசை உணர்வுகளை அணைத்து மேலும் உணர்ச்சிவசப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த குறுந் திரைப்படத்தில் எடிட்டிங் சில இடங்களில் மிஸ் ஆகுவது போன்று இருந்தது. அதாவது ஆடியோ வீடியோவை விட்டு சில சில இடங்களில் முன் பின் என விலகி நகர்ந்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சில குற்றங்கள் இருந்தாலும் நம் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய குறுந் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. நல்ல சமூக கருத்துக்களை மேலும் படமாக மாற்றி முன் செல்ல இக்குறுந் திரைப்பட குழுவினருக்கு nadi.lk சார்பாக வாழ்த்துக்கள்!
கண்டி பேராதனை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் எம்பக்கே எனும் ஊறில் கம்பளை இராச்சியத்தில் மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் 14ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயமானது இலங்கையின் பாரம்பரிய கட்டிடக்கலையின் மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
இந்தக் கோவிலின் செவிவழிக் கதை என்ன தெரியுமா?
கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த பெர (மேள) வாத்தயக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் அவதியுற்ற போது தன்னை இந்த நோயின் அவலத்திலிருந்து மீட்டெடுக்கும்படி கதிர்காம கந்தனிடம் நேர்த்தி வைத்ததாகவும் அதன் பயனாக அவன் நோயிலிருந்து மீண்டதனால் மகிழ்ச்சியடைந்த அவன் வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து கந்தப் பெருமானை வழிபட்டு வந்ததாகவும் எனினும் வயதாக வயதாக தன்னால் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட முடியுமா என்ற கவலை அவனை வாட்டியது.
ஓர்நாள் இந்தக் கவலையுடன் அவன் கந்தப் பெருமானை வணங்கிவிட்டு கோயிலுக்கருகாமையில் இருந்த கதிர மரத்தடியில் (கருங்காலி மரம் ) உறங்கிப்போய்விட கதிர்காமக் கந்தன் அவனது கனவில் தோன்றி எம்பக்க எனும் ஊருக்குப் போகும் படியும் ஊரில் நல்ல தகவல் கிடைக்குமென்றும் கூறினாராம். கனவின்படி எம்பக்க எனும் ஊருக்கு அவன் போன போது அவ்வூர் தச்சன் ஒருவன் கதிர மரம்(கருங்காலி மரம் ) ஒன்றை தரிக்கமுயன்ற போது ஐந்தாறு அடி உயரத்துக்கு அதில் இருந்து இரத்தம் சீறிப் பாய்ந்த தகவலைக்கூர உடனே அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்கு கனவில் தோன்றி சொன்ன செய்தியைக் கூறினான்.
மகிழ்ந்து போன தச்சன் அறுசுவையுடன் கூடிய உணவுப்படைக்க வாத்தியக்காரன் பெரவாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான். இன்றும் கூட இங்கு மூன்று வேளை பூசை வழிபாடுகள், உணவுப் படை யலுடனும் பெர வாத்திய இசையுடனுமே நடைபெறுகின்றன. கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் பெர வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது மரத்திலாலான கலை நயமிக்கசெதுக்கல் வேலைப்பாடுகளுடன்.
கி. பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை 3ஆம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சி செய்தபோது மேற்படி எம்பெக்க என்ற இடத்தில் இவ்விதம் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு இடம்பெற்று வருவதைக் கேள்வியுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கியுள்ளான். பின்னர் ஓர்நாள் மன்னன் தனது பல்லக்கில் ஏறி அவ்விடத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பிச் செல்ல முற்பட்டபோது, பல்லக்கு ஒரு பக்கம் உடைந்து சாய்ந்து கொண்டதால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனை வெறுமனே சாதாரண நிகழ்வாகக் கருதாத மன்னன் யானைத் தந்தங்களுடனும், வெள்ளிப் பூச்சுக்களுடனும் கூடிய அந்த விலையுயர்ந்த பல்லக்கினை மேற்படி தேவாலயத்துக்கே அன்பளிப்புச் செய்தான். இப்பல்லக்கு பூஜைப் பொருளாக இருந்து வந்துள்ளதுடன் இன்று இக்கோயிலின் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னனால் தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேர் நியமிக்கப்பட்டதாகவும் இன்றும் இக்கோயிலின் நிர்வாகத்தை “அர்த்தன பணிக்கி” எனப்படுகின்ற பெர வாத்தியக்கார வம்சத்தினரே கவனித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் பூந்தோட்டத்தினை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் ‘கங்காணி வீட்டு’ (கங்காணிகெதர{தச்சன் பரம்பரை}) பரம்பரையினர் ஆவர். பிரதான நிர்வாகிகளாக விதானை ஒருவரும் வண்ணக்குரதல என்பவரும் நிலமேயால் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரையில் தேவாலயத்தின் பணி செய்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பத்து பங்குக்காரர்கள் பின்வருமாறு
1.கங்காணி வீடு 2.வீதியே வீடு 3.முல்கம்பல வீடு 4.கற்பலகை வீடு 5.மனந்திவெல 6.சியம்பலாகொட 7.ரன்கம 8.தும்பக்கே 9.தொடந்தெனிய 10.தலவத்துர
இவர்கள் இணைந்தே விமரிசையாக வருடாந்த பெரஹெர வைபவத்தை செய்து வருகின்றார்கள்
தேவாலயத்தின் கட்டிட அமைப்பினை நோக்கின்
தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ரிட்டா கெதர (ஆபரணங்கள் வைக்கும் அறை) மற்றும் சிங்காசன மண்டபம் என்பன தேவாலயத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வாகல்கட, (நுழை வாயில்) மகா தேவாலயம் (கீழ் தேவாலயம்), முழுத் தென்கெய (மண்டபம்), வீ அட்டுவ (நெற் களஞ்சியம்), புதுகெய (புத்தபெருமான் கோயில்) என்பனவாகும்.
இத் தேவாலயத்தின் அனைத்து தூண்களும் இந்தியாவின் கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட நன்கு முற்றிய வேங்கை மரங்களில் இருந்து குடைந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. இச்சித்திர வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கு தலைமைச் சிற்பியாகச் செயற்பட்டவர் தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் என்றும் இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் இறுதிப் பகுதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த திராவிட கட்டிட பாணியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் என்றும் கூறப்படுகின்றது .இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்களின் ஆதிக்கம் ஓங்கியபோது கல் சிற்பிகளும் மரச் சிற்பக் கலைஞர்களும் இலங்கையில் வந்து குடியேறியதாகவும் இவர்களைக்கொண்டு அரசர்கள் விகாரைகள், தேவாலயங்கள் அமைத்த போது அவற்றில் திராவிட கலை மரபுகள் பொதிந்து காணப்பட்டன என்பதும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையிலேயே தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் இத்தூண்களில் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர். எம்பக்க தேவாலயத்தின் கூரையில் 26 வகை மரங்கள் ஒரு பலகை ஆணியுடன் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ‘மடொல் குருபாவ’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் மற்றுமொரு சிறப்பம்சம் எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையானது அமைக்கப்பட்டுள்ளமையாகும். பிரதானமான 5 கருப்பொருள்களின் கீழ் இந்த தேவாலயத்தின் செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவையாவன
1. கற்பனை விலங்கு உருவங்கள்
2. விலங்கு உருவங்கள்
3. மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள்
4. கரை அலங்காரம் (லீஸ்தர)
5. பூக்கள் கொடிகள் அலங்காரம்
பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன.
கற்பனையான பிராணிகளான பேரண்டப்பட்சி, இரு தலைப்பட்சி,கின்னரப்பெண் , யானைப் பட்சி (எற்கந்த லிகினியா), நாரிலதா, சரபெத்தியா, ரிஷப குஞ்சரம் போன்றனவும், தேவாலயத்தின் சமகால சமூக வாழ்கை நிகழ்வுகளைக் காட்டும் செதுக்கல்களாக றபான் இசைப்பவன், மல்யுத்தம்,குதிரை வீரன், நடன மாது, போர் வீரன்,குழந்தைக்குப் பாலூட்டும் தாய் போன்ற செதுக்கல் படைப்புக்களோடு, கரை அலங்கார வடிவமைப்புக்களும் அரும்பு,கல்பித்து, குந்திரிக்கன், போன்றனவும், தாவர வடிவமைப்புகளும் தாமரைப்பூ, பூங்கொடி போன்றனவும் செதுக்கல் வேலைபாடுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில்கூட யுனஸ்கோவினால் இலங்கையின் பார்வையிடப்படவேண்டிய சிறந்த சுற்றுலாத்தளமாக இந்த எம்பக்கே தேவாலயம் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையானது இலங்கையராகிய நமக்கு மிகுந்த பெருமையளிக்கக்கூடிய விடயமே …
தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும்.
ஆனால் பழந்தமிழகத்தில் இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.இறந்தவர்களை அதிலும் குறிப்பாக இறப்பு நேராமல் வயோதிக மிகுதியினால் முடங்கிப்போனவர்களை அடக்கம் செய்வதற்கு மண் பாண்டத்தைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. இறந்தவர்களின் உடலை ஒரு பெரிய பானைக்குள் வைத்து, மண்ணுக்குள் அடக்கம் செய்தார்கள். இந்த வழக்கமே ‘முதுமக்கள் தாழி’ என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டது.
ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த தாழியானது ஏழடி உயரம் வரைக்கும் செய்யப்பட்டிருக்கும். இறப்பு நேராமலும், அசைவின்றியும் முடங்கிக்கிடந்த முதியவர்களை முதுமக்கள்தாழிகளில் அமரவைத்து மண்ணில் புதைக்கும் வழக்கம் பழந்தமிழர்களிடையே இருந்தது. தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவாலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
முதுமக்கள் தாழி முறையைப் பொருத்தமட்டில் மூன்று விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. முதலாவதாக தாழியில் இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது. இம்முறையில் பானை பெரிய அளவினதாக இருக்கும்.
இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைப்பதாகும். மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப் புதைக்கும் முறையாகும்.
முதுமக்கள் தாழியினுள் ஒரே நபரின் எலும்புக்கூடுகள் மட்டும் காணப்படுவதில்லை. கொடிய நோய்கள் போர்கள் போன்றவற்றால் ஒரே நேரத்தில் இறந்த பல நபர்களின் எலும்புக்கூடுகள்கூட ஒன்றாக புதைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஓரடி அளவிலான சிறு தாழிகள் இறந்த குழந்தைகளைப் புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்டதுடன் குறைமாதத்தில் இறந்த குழந்தைகளுக்காக “தொட்டில்பேழை” எனப்பட்ட தாழியும் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழர்கள் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் உடலை சம்மணமிட்டு அமரவைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்து பானையை மூடினர்.
தாழியைப் புதைத்த குழியானது மணல் இடப்பட்டு பாறையால் மூடப்பட்டதுடன் அப்பாறைமீது மணல் கொட்டி பாதி முட்டை வடிவம் போன்றுள்ள பாறை ஒன்றால் மூடப்பட்டது. பாறையைச்சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டன. கேரளத்தின் குடைக்கல், தொப்பிக்கல் போன்றவை இத்தகைய தாளிகளே எனக்கூறப்படுகின்றது. இவற்றிலெல்லாம் தாழிகள் இருப்பதை மேலே உள்ள கற்சின்னங்கள் உணர்த்துவனவாக இருக்கின்றனவாம்.
முதுமக்கள் தாழி குறித்து, புறநானூற்றின் 228ம் பாடல் முழுமையாகக் கூறுகிறது. “குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்” என்னும் சோழ மன்னன் போரில் இறந்தபோது, ஐயூர் முடவனார் என்னும் புலவர் முதுமக்கள்தாழி செய்வதைத் தொழிலாகக் கொண்ட ‘மூதூர்க் கலஞ்செய் கோ’ என்பவரிடம் “எம் மன்னனின் பெருமைக்கேற்ற முதுமக்கள் தாழியை நீ செய்துவிட முடியுமோ?” என்னும் பொருளில் அமைந்த பாடலொன்றைப் பாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி Anpumyl Thangavadivelu தயாரிப்பில் Shameel J youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘காதல் வலி’. இந்தப் பாடல், Shameel J இனால் இசையமைக்கப்பட்டு Shameel J, Abimanya மற்றும் Sri Shanker இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Thanu Thanush இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Shameel J மற்றும் Sri Shanker இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Vada Kila Kadaloon மற்றும் Kujashini ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பாடலின் ஆரம்பத்தில் ஒரு இளைஞன் தனது பைக்கை நிறுத்தி சில இளைஞர்களுடன் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காட்சியோடு தொடங்கி அதன் பின் ஓர் நடுத்தர வயதையுடைய பெரியவர் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்து அதே இளைஞனை அடிப்பதும் சிலர் தடுப்பதும் என நகர்ந்துக் கொண்டிருக்க “அப்பா” என்ற ஓர் பெண்ணின் குரலோடு அனைவரது பிடியிலிருந்தும் நகர்த்தப்படுகிறான் கதாநாயகன்.”காதல் வலி” என்ற பாடலின் தலைப்பின் அறிமுகத்தை தொடர்ந்து கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் கோவிலுக்கு வெளியில் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் “வீட்ல பிரச்சனைடா!” என தொடங்கி காரணத்தினை உரைக்க அதனை கதாநாயகன் கேட்டவுடன் கோபம் கொள்ள அதன் பின் வீட்டில் உள்ளவர்கள் எடுத்துள்ள முடிவு பற்றி கதாநாயகி கூற “ஓ நல்லபடியா போயிட்டு வா! உன்ட lifeல இப்டி ஒருத்தன் இருந்தான்றதையே மறந்துரு!” என கூறி அவளின் அடுத்த வார்த்தைகளை கேட்க விரும்பாதவனாக நகர்ந்தான். அவனை தடுக்கவும் முடியாமல் அடுத்த வார்த்தைகளை உரைக்கவும் முடியாமல் கதாநாயகியின் உலகம் உறைய கதாநாயகன் அவளை விட்டு விலகி முன் செல்ல “நெஞ்சம் எங்கும்…” என்ற வரிகளோடு ஆரம்பமாகிறது பாடல்.
பாடலின் ஆரம்பம் தொட்டு முடிவு வரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில், காதலில் இணைந்திருந்த போது இனித்த நினைவுகள் கூட இப்போது பிரிவில் கசந்திடும் நிலையினை இருவரும் ஏற்க்க முடியாது தவிப்பமை காட்டப்பட்டுள்ளது. இருவரும் அழுவதையும் துயருருவதையும் பார்க்கும் போது “முதல்ல படிங்க அப்றம் இதெல்லாம் பார்த்துக்கலாம். இப்ப என்னத்த அழுதாலும் சேர்த்து வைக்க மாட்டாங்க.” என மனம் ஆங்காங்கே சத்தமிட்டாலும், வெளியில் இருந்து பார்க்கும் நாம் ஆயிரம் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அள்ளி வீசி விட்டு போக முடியும். அந்த சூழ்நிலைக்குள் மாட்டி தவிப்போருக்கு தானே அதன் வலிகளும் ரணங்களும் எவ்வளவு ஆழமானவை என்பது தெரியும். பாடலின் வரிகள் மற்றும் காட்சிகள் மூலமாக அந்த உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல குழுவினர் பெரிதும் முயன்று உள்ளனர். அந்த முயற்ச்சிகள் எதுவும் வீண் போகவில்லை.
இந்த பாடலுக்கான காணொளி மொத்தமாக 7நிமிடம் 40வினாடிகள் நீளமுடையது ஆனால் எனக்கு என்னவோ சீக்கிரம் முடிந்து விட்டது போன்ற உணர்வே இருந்தது. அந்த அளவுக்கு நேர்த்தியாக காட்சிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பாடலில் குறை எனக் கூறும்படி ஏதும் பெரிதாக தென்படவில்லை. பாடலின் வரிகளை இன்னும் சற்று மெருகூட்டி எழுதியிருக்கலாம். கதாபாத்திரங்களின் நடிப்பில் சில இடங்களில் சற்று அதிகமான effort போட்டிருந்தால் காணொளி இன்னும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். காணொளிக்கான climax twist எனக்கு தனிப்பட்ட ரீதியில் இவர்களின் பிரச்சனைக்கு சரியான முடிவாக தோன்றவில்லை. climax க்கும் காணொளியின் ஆரம்பக் காட்சிக்கும் ஒரு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளமை உண்மையாகவே நான் சற்றும் எதிர்பார்க்காத இரண்டாவது twist. எது எவ்வாறிருந்தாலும் இந்த பாடல் சிறப்பான ஒரு படைப்பு.
இந்த பாடலில்
“மலராமல் போகாது நம் பூக்கள் என்றும் பிரிவொன்றில் நம் காதல் காலம் வெல்லும்”என்ற வரிகள் என் மனதினை தொட்ட வரிகளாகும். உங்கள் மனதை தொட்ட வரிகள் எது என்பதை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
மகிழ்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஓர் விடையம். வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள் அவர்களை சுற்றி யாரும் இருப்பதில்லை. இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடுகள் இருப்பதில்லை என்கின்ற போதிலும் பொதுப்பார்வையில் பெண்கள் நகைச்சுவை திறன் குறைந்தவர்கள் என்கிற தவறான கண்ணோட்டம் இன்றுவரையில் நிலவிவருகின்றது என்பது கண்கூடு.
பெண்களிடம் “humor sence” குறைவு என்பது உண்மைதானா? இல்லவேயில்லை சின்னச் சின்ன சந்தோசமான விடயங்கள் மற்றும் நகைச்சுவையான விடயங்களுக்கெல்லாம் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டபோது பொதுவாக சிரிப்பதில் பெண்களுக்கென்று ஒரு தனி சிறப்புண்டு. கலகலவென்று சிரிப்பது பெண்களின் இயல்பு. அதிலும் கண்களில் நீர் வர சிரிப்பதும்கூட உண்டு.ஆனால் இதுபோன்று ஆண்கள் சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்கள். இதற்குக் காரணம் பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் (brain cortex function) எனும் பகுதிக்கு முந்தைய அடுக்கு முக்கிய பங்காற்றுவதுதானாம் என்கிற விடயத்தினை கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வொன்று விளக்கியுள்ளது.
பொதுவாக ஆண்களின் சிரிப்பானது, தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைவதாகவும், பெண்களது சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும், பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது இந்த ஆய்வு.பொதுவாக பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற தவறான கன்ணோட்டம் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்? உண்மையில் பெண்களுக்கு நன்றாக நகைச்சுவை வரும். பெண்களைப் போல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் யாருமில்லை என்பதற்கு கிராமப்புறங்களின் பக்கம் சென்று பார்க்க வேண்டும். அங்கிருக்கும் கிழவிகளிடம் பேச்சு கொடுத்துவிட்டு மீண்டு வந்துவிட முடியுமா என்ன?
அந்த அளவுக்குத் தங்கள் நகைச்சுவையால் கிழித்துத் தொங்கவிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருக்கும். பெரும்பாலான பெண்களுக்குத் துயரமான வாழ்க்கைதான். ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு தான். வாய் விட்டு அதிகம் சிரிக்கக்கூடாது, சத்தமாகப் பேசக்கூடாது என எல்லாக் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் அதையும் மீறி அவர்கள் சிரிப்பார்கள், சிரிக்க வைப்பார்கள். ஏனெனில் அவர்கள் துயரமான வாழ்க்கையிலிருந்து மீள்வதற்கான ஒரே வடிகால் இந்த நகைச்சுவை உணர்வு தான். அது இருப்பதனால் தான் அவர்கள் வாழ்கைப்பாடு சீரான தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்றுகூட கூறலாம்.
நமக்கெல்லாம் ஒன்றுதோன்றும், சினிமாக்களிலெல்லாம் ஆண் நகைச்சுவை நடிகர்கள்தானே கொடிகட்டிப் பறக்கிறார்கள்? பெண் நகைச்சுவை நடிகைகள் அந்த அளவிற்கு உச்சம் தொடவில்லை என்பதோடு பெண் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவுதானே என பொதுப்படையான ஓர் கருத்துண்டு. ஆனால், நமது சினிமா வரலாற்றினை எடுத்துப்பார்த்தோமானால் தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே நகைச்சுவை கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் நகைச்சுவை நடிகர்கள் என ஆரம்பகால தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் என்.எஸ் கிருஷ்ணனும் காளி N ரத்தினமும் நினைவுக்கு வருவார்கள். ஆனால், அந்த இரண்டு நகைச்சுவையாளர்களின் பக்கத்தில் இரண்டு நகைச்சுவை நடிகைகள் இருந்திருக்கிறார்கள். காளி.என்.ரத்தினத்துடன் சி.டி ராஜகாந்தமும், N.S..கிருஷ்ணனுடன் டி.எ.மதுரமும் இருந்திருக்கிறார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன் என்று சொல்லும்போதே டி.ஏ மதுரத்தை ஒதுக்கவே முடியாது. அவர்கள் இருவரது நகைச்சுவை என்பது சமூக அக்கறை சார்ந்த நகைச்சுவையாகவே பல படங்களிலும் இருந்தது. அடுத்து தங்கவேலு நாகேஷ் நகைச்சுவை காலப்பகுதியில் என்றால் மனோரமா என்கிற நடிப்பு சக்கரவர்தினியும் , டி.பி முத்துலட்சுமி, எஸ்.என். லட்சுமி, அங்கமுத்து, பி.ஆர்.மங்களம், ரமா பிரபா, எம்.சரோஜா, சச்சு, மாதவி (ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்த நடிகை) என நகைச்சுவையில் கலக்கியெடுத்த நடிகைகளின் பட்டியல் ஏராளம் . அடுத்துவந்த கவுண்டமணி செந்தில் கூட்டணியில் நகைச்சுவை சரவெடியில் கலக்கியவர்கள் என்றால் கோவை சரளா, பிந்துகோஷ் போன்றவர்களை மறக்கவியலாது. தற்போதைய தமிழ் சினிமாவில் ஆர்த்தி,மதுமிதா, வித்யூலேகா, காலம்சென்ற சோபனா, தேவதர்ஷினி, அறந்தாங்கி நிஷா, ப்ரியங்கா என சொல்லிக்கொண்டே போகலாம்.
கிராமங்களில் கிழவிகள் செய்யக்கூடிய நகைச்சுவைக்கு வடிவம் கொடுத்தது போன்றதுதான் ’மண்வாசனை’ படத்தில் காந்திமதி ஏற்ற ஒச்சாயி கிழவி வேடம். வாயைத் திறந்தாலே ஏதாவது பழமொழியைச் சொல்லிக் கொண்டு அசல் கிராமத்துப் பென்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். கிராமங்களில் வயதான பெண்களிடம் இருக்கக் கூடிய இளக்காரமாக நையாண்டி செய்யும் நகைச்சுவைப் பேச்சின் பிரதி பிம்பம் தான் காந்திமதியின் நடிப்பு எனலாம். காந்தி மதியைப்போன்ற கிராமத்து நகைச்சுவை நார்ச்சத்திரங்கள்தான் தேனீ குஞ்சராம்பா , மற்றும் பறவை முனியம்மா போன்ற மிகத் திறமையான நடிகைகள்.
இந்த தொடரில் நான் பட்டியலிட்ட நடிகைகள் தவிர வேறு சில நடிகைகளும்கூட என்னுடைய கவனத்திலிருந்து விடுபட்டிருக்கக்கூடும். எது எப்படியாயினும் , திரைத்துறை என்பது ஆண் சார்ந்த துறை என்பதால் இங்கு நகைச்சுவை நாயகர்களுடன் நடிக்கக் கூடிய நடிகைகள் எல்லோரும் சக நகைச்சுவை நடிகைகள்தான். அதையும் தாண்டி நகைச்சுவை நடிகைகளாகக் கொடி கட்டிப் பறந்தவர்களே இங்கே ஜெயித்தவர்கள்.