உங்கள் அனைவர்க்கும் பிடித்தமான பாரம்பரிய விளையாட்டான நூறாங்குச்சி பற்றி தான் இந்த பதிவில் கூறவுள்ளோம். “நூறாங்குச்சியா! அப்படியென்றால்…!” என உங்கள் மனங்களில் கேள்வி எழுவதை எங்களால் உணர முடிகிறது. பாடசாலையில் படிக்கும் போது ஓய்வாக இருக்கும் நேரங்களில் நண்பர்களின் பேனைகளை சேகரித்து அவற்றை ஒன்றாக வீசி ஒவ்வொன்றாக அசையாமல் எடுத்து விளையாடியமை ஞாபகம் இருக்கிறதா…? அந்த விளையாட்டு நூறாங்குச்சியிலிருந்து தோன்றிய ஓர் விளையாட்டு தான். நூறாங்குச்சி இன்றும் அதிகமாக கிராமப் புறங்களில் சிறுவர்களால் விளையாடப்பட்டு வரும் தனித்துவமான விளையாட்டு ஆகும்.
நூறாங்குச்சி விளையாட தேவையான சாதனம் என்ன?
நூறாங்குச்சி விளையாட தென்னங்கீற்று குச்சிகள் மாதிரியான சன்னமான குச்சிகள் பதினொன்று தேவை. இதில் பத்து சிறியவையாகவும் ஓர் குச்சி பெரிய குச்சியாகவும் இருக்க வேண்டும்.
நூறாங்குச்சி விளையாடுவது எப்படி?
குச்சிகளை எடுத்து தரையில் போட வேண்டும். பின் அதில் ஓர் குச்சியை எடுக்க வேண்டும். அந்த குச்சியை பயன்படுத்தி ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். இவ்வாறாக அனைத்து குச்சிகளையும் எடுப்பவரே வெற்றியாளர் ஆவார்.
நூறாங்குச்சி விளையாட்டின் விதி முறைகள் என்ன?
குச்சிகளை ஒவ்வொன்றாக எடுக்கும் போது ஏதாவது ஓர் குச்சி நகர்ந்து விட்டால் அவர் தோற்றவராக கொள்ளப்படுவார்.
நூறாங்குச்சி விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
நூறாங்குச்சி விளையாடும் போது பொறுமை அதிகமாகிறது. மனம் ஓர் நிலை அடைந்து அமைதி பெறுகிறது. மூளை அவதானமாக செயல் படும் ஆற்றல் அதிகரிக்கிறது.
உலகில் புதிரானதும் வியக்க வைக்கும் ஒன்றாகவும் மனித உடல் விளங்குகிறது. இது தினம் சக்கரம் போல் நில்லாது ஓடிக் கொண்டேயுள்ளது. நாம் உறங்கும் போது கூட நம் உடலுள் உறுப்புகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
நம் உடலில் நம் கட்டுப்பாட்டினை மீறி தன்னிச்சையாக சில செயல்கள் நிகழ்கின்றன. அவ்வாறாக தன்னிச்சையாக இடம்பெறும் செயல்களே தும்மல், இருமல், விக்கல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை என்பன விளங்குகின்றன.
தும்மல்
தும்மல் சாதாரணமாக இடம்பெறும் உடலியல் சார்ந்த நிகழ்வுகளில் ஒன்று. நம் மூக்கினுள் காணப்படும் முடியிழைகள் காற்று தவிர்ந்த வேறு ஏதும் தூசு, துகள் வரும் போது அவற்றை வடிக்கட்டி அனுப்புகிறது. அளவுக்கதிகமான தூசு,துகள் மூக்கினுள் நுழையும் போது சவ்வுப் படலம் தூண்டப்பட்டு நிறமற்ற ஓர் திரவம் சுரக்கப்படுகிறது. இதனால் வயிற்றுத் தசைகள், தொண்டை, வாய் மற்றும் நுரையீரல் ஆகியன ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றினை வேகமாக வெளித்தள்ளுகிறது. இதனை தான் நாம் தும்மல் என்கிறோம். இந்த தும்மல் மணிக்கு 250 கி.மீ வேகம் கொண்டது. சாதாரணமாக ஏற்படும் தும்மல் சில நிமிடங்களில் நின்று விடுகிறது ஆனால் சிலர் தொடர்ந்து தும்முவதை கண்டிருப்போம் அவ்வாறாக தொடர்ச்சியாக தும்முவதை ஒவ்வாமைத் தும்மல் என அழைப்பர்.
தும்மல் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக சூழலில் இருந்து வெளிவரும் மாசு தான். அதைத் தவிர்ந்த வேறு காரணங்களாக குளிர்ந்த காற்று, வீட்டின் செல்லப்பிராணிகளிலிருந்து வெளியேறும் எச்சம், செதில்கள் மற்றும் முடிகள், பூக்களின் மகரந்தங்கள், கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, படுக்கை விரிப்புகள், பாய், தலையணைகளில் காணப்படும் உண்ணி (Mites) பூச்சிகள் ஆகியன காணப்படுகின்றன.
இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பிறர் மத்தியில் சத்தம் கேட்கும் படி தும்முவது அநாகரிகமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் நம்மில் பலர் மூக்கு துவாரத்தை இறுக்க மூடி தும்ம முனைகிறோம். இவ்வாறான பழக்கம் உங்களை மரணம் வரை கூட்டிச் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
தும்மலை அடக்குவதால் சுவாசப்பாதையில் அதிக அழுத்தத்தோடு வெளியேறும் காற்று தடைப்பட்டு காது சவ்வுகள் வழியில் அல்லது மூளைக்குச் செல்லும் குருதி குழாய் வழி செல்ல முனைகிறது. இதனால் காதின் சவ்வுகள் கிழியும் அபாயம் ஏற்படுகிறது. தும்மும் போது உடலில் உள்ள நோய்க்கிருமிகளும் வெளியாகின்றன. ஆகையால் கைக்குட்டை ஒன்றினைக் கொண்டு தும்முதல் மூலம் பிறர்க்கு அந்த நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம் காத்துக் கொள்ள முடிகிறது.
ஆழமான உறக்கத்தில் இருக்கும் போது தும்மல் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரவில் சூழலில் மாசின் அளவு குறைவாகயிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
தும்மும் போது எம் கண்கள் தானாகவே மூடிக் கொள்வதை நீங்கள் அவதானித்தது உண்டா? இதற்கான காரணம் நாம் தும்மும் போது கண்களின் பின்புறம் ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், தும்மலின் போது வெளியாகும் நோய்க்கிருமிகள் நம் கண்களிற்குள் செல்லாதபடி காத்துக் கொள்ளவதற்காகவும் ஆகும்.
நாம் விக்கும் போது “யாரோ நினைக்கிறார்கள் அதனால் தான் விக்குகிறது…!” என கணித்துக்கொள்கிறோம். உண்மையில் விக்கல் ஏற்படுவதற்கான காரணம் என்ன…? நம் வயிற்றினையும் மார்பகத்தையும் பிரிக்கும் பகுதியான உதரவிதானம் எனும் தசை நாம் சுவாசம் உள்ளெடுக்கும் போது சுருங்கி சுவாசத்தை வெளியிடும் போது தளர்கிறது. இவ்வாறாக சாதாரணமாக சுருங்கி விரியும் உதரவிதானம் (diaphragm) திடீரென ப்ரனிக் நர்வ் (phernic nerve) எனும் நரம்பில் ஏற்படும் ஒருவித எரிச்சலினால் வேகமாக சுருங்கும் போது அதிகப்படியான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. இதனை சமாளிக்கும் பொருட்டு எபிக்லோட்டீஸ் (epiglottis) எனும் சுவாசக் குழாய் மூடி வேகமாக மூடிக் கொள்கிறது. அதனால் ஏற்படும் ‘விக்’ எனும் சத்தத்தை தான் விக்கல் என்கிறோம்.
காரமான அல்லது சூடான பானங்கள் பருகுதல், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மது அருந்தும் போது, வயிறு உப்பிசம் போன்றவற்றினால் விக்கல் ஏற்படலாம். இந்த விக்கல் சாதாரணமானது தான் ஆனால் விக்கல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடர்ந்திருந்தால் வைத்தியரை நாடல் வேண்டும். ஏனெனில் தொடர் விக்கல் வயிற்றில் அசிரிட்டி அல்லது மூளைப் பாதிப்புக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.
இருமல்
இருமல் மூச்சுக்குழாயிலுள்ள நோய்களால் அல்லது தூசுகள் படிதலால் உருவாகலாம். இது உடலில் தீடிரென அல்லது அடிக்கடி ஏற்படும் ஓர் நிகழ்வு. இது காற்றுப் பாதையினை அடைக்கும் எரிச்சலூட்டும் பொருட்கள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை சுத்தம் செய்கிறது.
இருமலை குரல் வளை மூடிக்கு எதிராக சக்தி வாய்ந்த வெளியேற்றம், நுரையீரலில் இருந்து காற்று பலமாக வெளியேறி குரல் வளை மூடித் திறக்கும் போது உண்டாகும் ஓசை, தன்னிச்சையாகவும் அன்னிச்சையாகவும் உண்டாதல், தொடர் இருமல் என பாகுபடுத்தி பார்க்க முடியும்.
புகைப்பிடித்தல், காற்று மாசு, ஆஸ்துமா, இரைப்பை மற்றும் உணவுக் குழாயில் ஏற்படும் எதிர்வினை நோய், பின் நாசி நீர்ச் சொட்டு, நீடித்த மூச்சுக் குழாய் அலற்சி, நுரையீரல் கட்டிகள், மாரடைப்பு போன்ற காரணங்களாலும் இருமல் ஏற்படுகிறது.
திடீரென ஏற்படும் சைனஸ், சளிக் காய்ச்சல் மற்றும் மூச்சுப் பாதைகளில் வைரஸால் ஏற்படும் தொற்று நோய்களினால் கடும் இருமல் ஏற்படுகிறது.
மிதமான கடும் இருமல் மூன்றிலிருந்து எட்டு வாரங்கள் வரை நீடித்திருக்கும் இதன் போது வைத்தியரை நாடுதல் கட்டாயமன்று. ஆனால் எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் தொடருமானால் உடன் வைத்தியரை நாடுதல் சிறந்தது.
சளி வெளி வராமை, களைப்பு, தொண்டை வரண்டு புண்ணாதல், எரிச்சல் ஊட்டும் தன்மை போன்ற அறிகுறிகள் காணப்படின் அது வரட்டு இருமல் ஆகும். வரட்டு இருமல் சைனஸ், விமோனியா, சுவாசப் பாதை தொற்று, தூசி அல்லது மகரந்த அலர்ச்சியினால் உருவாகிறது.
நம்மில் சிலருக்கு இரவில் தூங்கும் போது இருமல் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது உங்களை மரணம் வரை கூட்டிச் செல்லும்.இது இரவு நேரங்களில் சளி மூச்சுக் குழாயிலிருந்து நுரையீரலுக்கு செல்வதாலும், இரவு வேளை உணவு சமிபாடடையாது அதன் துகள் மூச்சுக் குழாய்க்குள் செல்வதாலும், இதய செயலிழப்பினாலும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இருமல் ஏற்பட்டால் அவதானமாக செயற்படுவதோடு வைத்தியரை நாடுங்கள்.
ஏப்பம்
பொதுவாக நாம் ஏப்பம் ஏற்படும் போது நாம் உண்ட உணவு சமிபாடடைந்து விட்டதாக நினைக்கிறோம். நீங்கள் ஏப்பம் பற்றி அறியாத பல சுவாரசியமான அதிர வைக்கும் தகவல்கள் சில,
நம்மில் பலர் மூன்று வேளை உணவுகளில் இரு வேளைகளை மட்டுமே ஒழுங்கான முறையில் உண்கிறோம். அநேகமானோர் காலை வேளை உணவினை தவற விடுகிறோம். இதனால் வயிற்றில் அமிலங்கள் சுரந்து உணவு சரியான நேரத்தில் கிடைக்காமல் போகையில் வாயுவினை நிரப்புகிறது. இதனால் நேர தாமதமாக உணவினை உள்ளெடுக்கும் போது அந்த வாயு ஏப்பமாக வெளியாகிறது. நாம் உண்ணும் போது கூட மெதுவாக மென்று உண்பதில்லை அவசர அவசரமாக உணவினை விழுங்குகிறோம். இதனால் உணவுடன் காற்றும் சேர்ந்து நம் இரைப்பைக்கு சென்றடைவதாலும், அதிகமான கொழுப்பு உணவுகள், புகைப்பிடித்தல், நீர் அருந்தும் போதும், இரவு நேரங்களில் வாயு அடங்கிய உணவுகள் (முளைக்கட்டிய தானியம், ப்ரோக்கோலி) ஆகியவற்றை உண்பதாலும் ஏப்பம் ஏற்படுகிறது.
வயிற்றில் அல்சர், வயிற்றில் புற்று நோய், அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றின் அறிகுறியாகவும் ஏப்பம் வெளியாகிறது.
இரைப்பையில் சிறிதளவில் காற்று காணப்படின் அது சிறு குடல் வழியாக சென்று விடும். அதிகமான காற்று ஏப்பமாக வெளியாகிறது. அவ்வாறு ஏப்பம் வெளியாகத பட்சத்தில் வயிறு உப்புகிறது (பெரிதாகிறது). இதனை வயிற்று உப்பிசம் என்கிறோம்.
கொட்டாவி
நம் உடல் சோர்வாக இருப்பதற்கும் தூக்கம் வருவதற்குமான அறிகுறியாக கொட்டாவியினை நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவை மட்டும் காரணம் கிடையாது. கொட்டாவி வருவதற்கு பல காரணங்கள் உண்டு.
உடலில் ஒட்சிசன் குறையும் போது அதனை சரி செய்துக் கொள்வதற்காக காற்றினை உள்ளெடுப்பதற்காகவும், சோர்வாக இருக்கும் போது மூளையிற்கு புத்துணர்ச்சி வழங்குவதற்காகவும், எம்.எஸ் தாக்கம் ஏற்படும் போது உடல் வெப்ப சமநிலையை பேண முடிவதில்லை இதனை சரி செய்து கொள்வதற்காகவும், நாம் உள்ளெடுக்கும் மருந்துகளால் உடல் சோரும் போதும், களைப்பு, தூக்கமின்மை போன்றவற்றாலும் கொட்டாவி வருகிறது.
அடிக்கடி கொட்டாவி வருவது கல்லீரல் பலவீனமாக அல்லது செயலிழந்து கொண்டிருப்பதற்கும், ஸ்டோர்க், மூளையின் ஆரோக்கியம் குன்றுதல், கைகால் வலிப்பு, மூளை தண்டில் புண்கள் ஏற்படல் போன்றவற்றிற்கான அறிகுறியாகவும் இருக்கிறது.
கொட்டாவி விடுவதால் சில நன்மைகளும் உண்டு,
அதிகமான ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு குருதியில் உள்ள காபனீரொட்சைட் வெளியாகிறது.
நுரையீரலில் இருக்கும் நுண்ணறைகள் சுருங்காமல் தவிர்க்கப்படுகிறது.
மூளைக்கு தேவையான பிராணவாயு கிடைக்கிறது.
மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
தூங்க செல்வதற்கு முன் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன? என சிந்தித்தது உண்டா?
நம் உடல் அசைவினில் இருக்கும் போது உடலுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்கப் பெறுகிறது. ஆனால் தூங்குவதற்கு முன் நம் உடலில் பெரிதாக அசைவுகள் இருப்பதில்லை. இதனால் கொட்டாவி மூலம் தேவையானளவு ஒட்சிசனை உடல் பெற்றுக் கொள்கிறது.
கொட்டாவியால் சில நன்மைகள் கிடைக்கப் பெற்றாலும் அலுவலகம் மற்றும் இன்னும் சில இடங்களில் கொட்டாவி விடும் போது உங்களை சோம்பேறிகள் என கணக்கிடவும் வாய்ப்புண்டு. இவ்வாறான இடங்களில் கொட்டாவி வரும் போது எவ்வாறு அதனை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
உடல் சோர்வாகயிருப்பதால் கொட்டாவி வரக் கூடும் ஆகையால் அதை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளும் பொருட்டு அதிகமாக நீர் அருந்துங்கள்.
உடலில் ஒட்சிசனின் அளவு குறைவதாலும் கொட்டாவி வரக் கூடும் ஆகையால் பெருமூச்செடுத்து விடுங்கள். குறிப்பாக சுவாசம் உள்ளெடுக்கும் போது சிறிது நேரம் தாக்குப் பிடித்து வைத்து அதன் பின் வெளியிடுங்கள்.
உங்களை நீங்களே Busy ஆக வைத்துக் கொள்ளுங்கள்.
குறட்டை
நாம் உடல் ரீதியான அல்லது மன ரீதியான பிரச்சனைகளால் தூக்கத்திலிருந்து முழித்த நாட்களை விட அருகில் இருப்பவரின் குறட்டை சத்தம் கேட்டு முழித்த நாட்கள் தான் அதிகம். நாம் அனைவரும் குறட்டை விடுபவர்கள் அமைதியாக ஆழ்ந்து தூங்குவதாக நினைக்கின்றோம். உண்மையில் அவர்களின் தூக்கம் ஆரோக்கியமற்ற ஓர் தூக்கமாகவே இருக்கிறது. மூச்சுப் பாதை தடைப்பட்டு வாய்வழியாக சுவாசம் உள்ளெடுக்கும போது ஏற்படும் சத்தத்தை தான் குறட்டை என்கிறோம். குறட்டை ஓர் ஆரோக்கியமான விடயமல்ல. வைத்தியர்களை நாடி சரி செய்து கொள்ள வேண்டிய ஒன்று.
குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு,
உடற் பருமன் அதிகமாகயிருப்பதால் தைரொயிட் ஹோர்மன் மற்றும் மற்றைய ஹோர்மன்களும் சமநிலையற்று மேலுள்ள மூச்சுப் பாதையை தளர்வடைய செய்கிறது. இதில் ஏற்படும் ஒலி தான் குறட்டை.
தூங்கும் போது தாடை, நாக்குப் பகுதி என்பன பின்தள்ளப்படுவதால் மூச்சுப் பாதை தடைப்பட்டு குறட்டை வருகிறது.
புகைப்பிடித்தல்
மது அருந்துதல்
உடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் ஒட்சிசனின் அளவு குறைதலை நமக்கு தெரியப்படுத்தும் ஓர் செய்கையே குறட்டை. இதனை அலட்சியப்படுத்தும் போது அடிக்கடி தூக்கத்தில் விழித்தல், உடற்சோர்வு, உயர் குருதியழுத்தம், சக்கரை வியாதி, இதய நோய்கள், பக்கவாதம், ஞாபகமறதி, தலைவலி போன்றன ஏற்படுகின்றன.
சக்கரை வியாதி உள்ளவர்கள் குறட்டையிற்கான முறையான வைத்திய ஆலோசனையை பெறாத விடத்து கண், கிட்னி போன்ற உறுப்புகள் பாதிப்படைய நேரிடும்.
இந்த குறட்டையினை குறைப்பதற்கான சில வழிகள்
உடற்பருமனை குறைத்தல்.
உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடல்.
மது பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல்.
ஒரு பக்கமாக தூங்குதல்.
குறட்டைக்கு முறையான சிகிச்சைகள் பெறுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் மாற்றங்களிற்கான காரணங்களை உடனுக்குடன்தேடியறிந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
பெண்களுக்கு அழகு சேர்ப்பது கூந்தல் தான். அந்த கூந்தல் நீளமானதாக அடர்த்தியாக கருமையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. இன்று நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் முடி உதிர்வு என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. நாம் நாளாந்தம் கடைப்பிடிக்கும் சில தவறான பழக்க வழக்கங்களும் இதற்கு ஓர் காரணமாக அமைகிறது. அவ்வாறாக நாம் தவிர்க்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள்..
குளித்தவுடன் கூந்தலில் காணப்படும் சிக்கெடுத்தல். இது ஓர் தவறான வழக்கம். குளித்தவுடன் கூந்தல் சற்று பலவீனமாக காணப்படும் ஆகையால் சிக்குகளை சீப்பு அல்லது கைகளால் எடுக்கும் போது தலைமுடி உதிர்வதற்கான வாய்ப்பு அதிகம்.
குளிக்கும் போது தலையில் ஷேம்பு போட்டு அதிக நேரம் கழுவாமல் இருக்க கூடாது. இங்கு ஷேம்பு தலையில் ஊறி தலைமுடியின் வேர்களை பலவீனமானதாக மாற்றக் கூடும்.
தலைமுடிக்கு எண்ணெய் வைக்காதிருக்க கூடாது. தலை முடியின் ஆழம் வரை சென்று ஊட்டமளிப்பது எண்ணெய் தான். அதையும் நாகரிகம் என்ற பெயரில் தவிர்த்துக் கொண்டு வருகிறோம். இதனால் கூந்தல் வளர்வது தடைப்பட்டு தலைமுடி உதிர்வும் அதிகமாகிறது.
தலைமுடியில் சிக்கெடுக்கும் போது அவசரம் வேண்டாம். இன்று சிக்கெடுப்பதாக கூறி பலமான முடியினையும் வேரோடு அறுத்து எடுக்கின்றோம். எப்போதும் சிக்கெடுக்கும் போது மேலிருந்து கீழாக சீவுவதை தவிர்த்து நுனி முடியில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சீவி சிக்கெடுக்க வேண்டும்.
தலையில் சூடான எண்ணெய் வைப்பதை தவிர்க்கவும். அதிக சூடுடன் எண்ணெய் வைப்பதால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகும். காய்ச்சிய எண்ணெயை ஆறவிட்டு வைத்தல் நன்று.
நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். பருக்கள் வந்து சென்றவுடன் ஏற்படும் பன்னங்கள் அதாவது சிறு சிறு குழிகள் ஏற்படுகின்றன. இவை நாம் கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் மன அழுத்தம் உருவாக காரணமாகிறது. “இந்த பன்னங்களை எவ்வாறு இல்லாது ஒழித்து பன்னங்களற்ற தெளிவான பொலிவினை பெறுவது?” என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் உண்டு.
இதோ! முகத்தில் உள்ள பருக்களின் பன்னங்களை மறைய ஓர் அழகு குறிப்பு,
தேவையான பொருட்கள்
அத்திக்காய்=3
ரோஜா பூ=3
கசகசா=1/2 மேசைக்கரண்டி
ஆட்டுப்பால்=தேவையான அளவு
செய்முறை
கசகசா, அத்திப்பழம்(பகுதிகளாக நறுக்கியது) மற்றும் ரோஜா பூ ஆகியவற்றை நன்றாக உரலில் இட்டு இடித்துக் கொள்ளவும். இடைக்கிடையில் ஒவ்வொரு கரண்டி ஆட்டுப்பால் சேர்த்து இடித்துக் கொள்ளவும். நன்றாக Paste போன்ற பதம் வந்தவுடன் வாழையிலையில் தட்டி 5 நிமிடம் வைக்கவும். மீண்டும் சிறிதளவு ஆட்டுப்பாலூற்றி 5 நிமிடம் வைக்கவும். அதன் பின் அந்த pasteயினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து துணியொன்றை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்திலுள்ள Pasteயினை துடைத்து எடுக்கவும்.
முகத்திலிருந்த Pasteயினை நீக்கியப் பின் 5 நிமிடம் கழித்து 2 தேக்கரண்டி ஆட்டுப்பால் 2 ரோஜா இதழ்கள் சேர்த்து இடித்துக் கொள்ளவும். அந்த திரவத்தை முகத்தில் தடவி ஈரமற்ற ஓர் துணியால் 15 நிமிடங்கள் முகத்தை மூடிக் கொள்ளவும். இறுதியாக வெதுவெதுப்பான நீரினால் கழுவிக் கொள்ளவும்.
இந்த படிமுறையினை வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பன்னம் நீங்கி முகம் பொலிவும் அழகும் பெறும்.
இன்றைய நவீன யுகத்தில் சர்க்கரை வியாதியுடனும் புற்று நோயுடனும் குழந்தைகள் பிறக்கும் செய்திகளை கேள்வியுறுகிறோம். அதே சமயம் 120 வயது வரை வாழ்ந்து மடிந்த முத்தவர்களின் ஆரோக்கியமான வரலாற்றினையும் கேள்வியுறுகிறோம். இவ்வாறான செய்திகளுக்கான காரணம் தான் என்ன? என்றாவது சிந்தித்துள்ளோமா…? அதற்கெல்லாம் நமக்கு நேரம் கிடையாது.
அவ்வளவு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறோம் அந்த ஓட்டத்தில் நம் ஆயுள் கரைவதையும் மறந்து விடுகிறோம்.
இவ்வாறன துரதிஷ்ட வசமான சூழலுக்கு நாம் உருவாக்கிய தொழிநுட்பம் நம்மை ஆட்சி செய்ய தொடங்கியமையும் ஓர் காரணமாகும்.
கையடக்க தொலைப்பேசி
காலை எழுந்தது முதல் மாலை வரை கையடக்க தொலைப்பேசியுடன் உரையாடும் இளைஞர்களே அதிகம். உண்ணும் போது கூட தொலைப்பேசி ஓர் கையிலும் மறு கைகள் உணவின் மேலும் என வாழ்கிறோம். இவ்வாறாக 24 மணி நேரமும் தொலைப்பேசி உபயோகிப்பதால் கண்கள் மற்றும் மூளையின் செல்கள் பாதிப்படைந்து எளிதில் பார்வைக் குறைபாடு, ஞாபக மறதி போன்றவைக்கு உள்ளாகின்றன. ஒரே இடத்தில் அசையாது அமர்ந்த படி இருப்பதால் உடல் எடை அதிகரித்தல், தசைப் பிடிப்பு, சோம்பல், மன அழுத்தம் போன்றன ஏற்படுகின்றன. இன்றைய இளைஞர்கள் தூக்கமின்றி அவதியுறுவதற்கும், தவறான பாதைகளுக்கு செல்லவும் இந்த தொலைப்பேசி காரணமாகின்றது. கையடக்க தொலைப்பேசிகள் நம் இளைஞர்களை அடக்கியாழும் வரை இந்நிலை நீடிப்பது உறுதி. கர்ப்ப காலங்களில் கையடக்க தொலைப்பேசியின் பாவனை கருவிலிருக்கும் சிசுவினை பாதிக்க கூடும். கர்ப்ப காலங்களில் முடிந்தவரை கையடக்க தொலைப்பேசி பாவனையை நிராகரித்தல் சிறப்பானது.
மடிக்கணினி (Laptop)
இன்று வீட்டிலிருந்தப் படியே வேலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மடிக்கணினி தான். சிறியவர் முதல் பெரியவர் வரை ஆதிக்கம் செலுத்துகின்றது. இதனால் ஏற்படும் பாதகமான பின்விளைவுகள் அறிவீர்களா…? குறிப்பாக ஆண்கள் மடிக்கணினியை நேரடியாக மடியினில் வைத்து உபயோகிப்பதால் விந்தணுக்கள் இறப்பதற்கான வாய்ப்புண்டு. இது நாளடைவில் குழந்தையின்மைக்கு முகம் கொடுக்க ஏதுவாக அமைகின்றது. மடிக்கணினியை முடிந்தவரை மேசையில் வைத்து உபயோகித்தல் சிறப்பானது.
போக்குவரத்து
முன்பெல்லாம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் போது மாட்டு வண்டிகள் மற்றும் குதிரைகள் போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால் இன்று விண்ணிற்கு சென்று அயல் கிரகங்களில் தரையிறங்கி நடந்து திரியும் அளவிற்கு நம் தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. இந்த வளர்ச்சியோடு இயற்கை சூழலில் மாசும் அதிகரித்து விட்டது. ஓசோன் மண்டலத்தில் சிதைவுகள் ஏற்பட வாகனத்திலிருந்து வெளியேறும் புகைகளும் ஓர் காரணமாக அமைகின்றன. இதனால் பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகரிக்கிறது. வரட்சி மற்றும் வெப்பமான சூழல் உருவாகுவதற்கு வழி வகுக்கின்றன. இதனால் சர்ம பிரச்சனைகளோடு வரட்சியின் காரணமாக உணவுத் தட்டுப்பாடு உருவாகி ஆரோக்கியமற்ற சமுதாயமாக நம் சமுதாயம் மாறிவிடுகிறது. முடிந்தவரை வாகனப் புகை கசிவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் நன்மை பயக்கும்.
பிளாஸ்திக்
பிளாஸ்திக்களை உணவுப் பொதிகளாக பயன்படுத்துகின்றனர். இதனால் பிளாஸ்திக்களில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் உணவுடன் கலந்து புற்றுநோயினை ஏற்படுத்துகின்றது. பிளாஸ்திக்கள் உக்கும் தன்மையற்றவை. இவற்றை முறையாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தாமையால் சூழல் மாசடைகிறது. சிலர் பிளாஸ்திக் கழிவுகளை எரிக்கின்றனர். பிளாஸ்திக் பொருட்கள் எரிக்கப்படுவதால் வெளியேறும் நச்சு வாயு பாதக விளைவுகளை தரக்கூடியது. ஆகையால் முடிந்தவரை அவற்றை மீள் சுழற்சிக்கு உட்படுத்தல் சிறப்பானது. இயற்கையாக தயாரிக்கப்பட்ட பனையோலைப் பெட்டிகள், வாழையிலை மற்றும் வேறு இயற்கையான பொருட்களை உணவுப் பொதிகளாக பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
நவீன தொழிநுட்ப வளர்ச்சி தவறானதல்ல. அவற்றிலிருந்து முடிந்தவரை நன்மைகளைப் பெற்று பாதகமான விளைவுகளை குறைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
நாம் அனைவரும் வியந்து ரசிக்கும் விலங்குகளில் யானைகள் தனி இடம் பிடிக்கின்றன. யானைகளின் விளையாட்டுக்கள் சின்ன சின்ன அசைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சியினை தருவதாக விளங்குகின்றது.
இவ்வாறாக அழகும் குறும்பும் நிறைந்து காணப்படும் யானைகள் நம் நாட்டின் இலங்கை மக்களிடையே புனிதமான ஓர் அடையாளமாக விளங்குகிறது. இதற்கு யானைகள் பெரஹராக்களில் அலங்கரிக்கப்பட்டு வலம் வருவதும் பௌத்த சமய சடங்குகளின் போது யானைகள் முக்கிய இடம் பெறுவதும், பிரசித்திப் பெற்ற பௌத்த விகாரைகளில் யானைகள் காணப்படுவதும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது இன்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. உதாரணம் : பிரித்தானிய இலங்கைச் சின்னம், போர்த்துக்கய இலங்கைச் சின்னம், ஒல்லாந்து இலங்கைச் சின்னமாக யானை இடம் பெற்றது. பிரித்தானிய இலங்கை கொடியிலும் 1875 முதல் 1948 வரை யானை காணப்பட்டது.
இலங்கையில் காணப்படும் யானைகள் ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றாகும். இதனை Elephas maximus maximus என அடையாளப்படுத்துவர். இதனை 1758யில் முதலில் கரோலஸ் லின்னேயஸ் என்பவர் குறிப்பிட்டார். இவை உலர் வலயம், ஈர வலயம், குளிர் மலைப் பிரதேசம் மற்றும் தாழ் நிலப் பகுதிகளில் அதிகம் காணக் கூடியதாகவுள்ளன. இந்த யானைகள் ஆபிரிக்காவை சேர்ந்த யானைகளை விட சிறியனவாகவும் தலையில் பெரிய உடலமைப்பினை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றின் தும்பிக்கையின் நுனிப்பகுதியில் சிறிய விரல் போன்ற அமைப்பு காணப்படும். இவற்றின் பின் புறம் புடைத்து அல்லது சமதளமாக அமைந்திருக்கும். இவ் இன யானைகளில் ஆண் யானைகளை விட பெண் யானைகள் உருவத்தில் சிறியவையாகவும் தந்தம் சிறியதாக அல்லது தந்தம் அற்றும் காணப்படும். இவை தமது தோளினை 2-3.5 மீற்றர் வரை எழுப்பக் கூடியன. இவற்றின் எடை 2,000-5,500 கிலோ கிராம் வரை உடையன. இவை 19 சோடி விலா என்புகளை கொண்டது. இவ் யானைகளின் தோல் நிறம் இந்தியாவை சேர்ந்த யானைகளை விட கருமையானதாகும். இவற்றின் வயிறு, காது, முகம் மற்றும் தும்பிக்கை ஆகிய பகுதிகளில் மங்கல் புள்ளிகள் காணப்படும். இவற்றில் 7 வீதமான யானைகள் மட்டுமே தந்தமுடையன. ஆனால் 2011யில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கையானது 2 வீதமான யானைகள் மட்டுமே தந்தமுடையன என தெரிவிக்கிறது. இவை நாளொன்றுக்கு 150 கிலோகிராம் வரை உணவாகக் (தாவரங்கள்) உட்கொள்கின்றன.
இலங்கை யானைகள் அருகிய இனங்களில் ஒன்றாக 1986யில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியிலிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆகக் குறைவடைந்தமை 60-75 வருட கணக்கெடுப்பில் காணப்படுகிறது.
1830 வரை யானைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டமையால் அவற்றை கொல்பவர்களுக்கு அரசு சன்மானம் அளித்தது. இதனால் யானைகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே போனது. இதனால் 1829-1855 வரையான காலப்பகுதியில் ஏறத்தாள 6000 யானைகள் கொல்லப்பட்டன. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் நினைவுச் சின்ன வேட்டைக்காரர்களால் யானைகள் கொல்லப்பட்டன. இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்தில் நிலக்கண்ணி வெடிகளால் யானைகள் அங்கவீனமாக்கப்பட்டும் கொல்லவும் பட்டன. 1990-1993 வரையான காலப்பகுதியில் 165 யானைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டன. 1994யில் ஏறத்தாள 196 யானைகள் துப்பாக்கியால் சுடப்பட்டும் நிலக்கண்ணி வெடிக்கு உட்பட்டும் இறந்தன. 20 யானைகள் முடமாக்கப்பட்டன. 1999-2006 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 100 யானைகள் கொல்லப்பட்டன. பயிர்களையும் வீடுகளையும் காப்பாற்றும் பொருட்டும் வரட்சி, பட்டினி, காடழிப்பு போன்றவற்றினை கருத்திற் கொண்டும் யானைகள் கொல்லப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் 80 யானைகள் வடக்கிலும் 50 யானைகள் தெற்கு மற்றும் கிழக்கிலும் 30 யானைகள் நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் என 160 யானைகள் கொல்லப்பட்டன.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் யானைப் பாதுகாப்பு தந்திரோபாயமானது முடிந்தளவு யானைகளை பரந்த ஓர் இடத்தில் பாதுகாத்து பராமரிப்பதனை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டது. அதற்கேற்ப கேகாலையிலுள்ள பின்னவள யானைகள் அனாதை மடம் விளங்குகிறது. இங்கு காயப்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. கைவிடப்பட்ட யானைக் குட்டிகள் கவனிக்கப்படுகின்றன. உடவளவை தேசியப் பூங்காவிலுள்ள உடவளவை இடைக்கால நிலையத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகள் காட்டில் விடப்படும் வரை பராமறித்து வளர்க்கப்படுகின்றன. இது ஓர் புனர் வாழ்வு நிலையமாக காணப்படுகிறது.
எம்மால் முடிந்தவரை யானைகள் மீதான வன்முறைகளையும் தந்த வர்த்தக நோக்குடன் அவை துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவதையும் இனி வருங்காலங்களில் நேராதபடி பாதுகாப்போம்.
இப்பழமொழியினை அடிக்கடி கூற கேட்டிருப்போம். உண்மையில் நாம் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் தூரமாகிறது. வாய்விட்டு சிரிப்பதால் நோய்கள் வராது காத்துக் கொள்வதோடு நம்முள்ளிருக்கும் நோய்களும் பட்டுப் போகிறது.
குழந்தையாக தத்தி தவழ்ந்து நடந்த காலங்களில் “நான் பெரியவனாக வேண்டும்” “நான் வளர வேண்டும்” என செல்ல மொழிப் பேசி திரிந்தோம். நம் பெற்றோரும் “வளரலாம் காலம் உண்டு” என உரைத்து எம்மை அள்ளி அணைத்த காலங்கள் நினைவிருக்கிறதா? இன்று நம் மழலைப் பருவ கனவு நினைவாகி விட்டது. ஆனால் நம் மனம் தேடுவது என்னவோ காலத்தோடு கரைந்துப் போன மழலைப் பருவத்தை தான்… காரணம் என்னவென்றால் அப் பருவத்தில் இருந்த சந்தோஷம் இப்போது நம்மிடம் இல்லை. குழந்தைகள் ஓர் நாளைக்கு சராசரியாக 500 தடவைக்கு மேல் சிரிக்கின்றனர். ஆனால் பெரியவர்கள் நாளொன்றுக்கு 15 தடவைக்கும் குறைவாகவே சிரிக்கின்றனர். நம்மில் சிலர் காலப் போக்கில் மெய் புன்னகை தொலைத்து போலி புன்னகை மாட்டிக் கொண்டு நகர்கிறோம்.
குழந்தைகளை கவனித்துப் பாருங்கள். எந்த நேரமும் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியாகவும் ஓடித் திரிவார்கள். அவர்களின் கள்ளம் கபடமற்ற புன்னகையில் நம் துன்பம் தொலைந்து விடுகிறது. அவர்களின் புன்னகை தான் அவர்களின் துடிதுடிப்பான செய்கைக்கு காரணமாகிறது.
வாய்விட்டு சிரிக்கும் போது நாம் அதிக பிராண வாயுவை சுவாசிக்கின்றோம். இதனால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. இதயத்தில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் குறைவு. நாம் அதிகமாக சிரிக்கும் போது நம் ஹோர்மன்கள் தூண்டப்பட்டு உடலை சமநிலையை வைத்திருக்கிறது. மூளையினை சுறுசுறுப்பானதாக வைத்திருக்கிறது.
நாம் எந்த அளவிற்கு சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவிற்கு நம் ஆயுளை நீடித்துக் கொள்ள முடியும். சிரிக்கும் போது முகத்தின் தசைகளும் புதுப் பொலிவும் அழகும் இளமையான தோற்றமும் பெறுகின்றன.
“துன்பம் வரும் போது சிரி” என்ற முதுமொழிக்கு ஏற்ப எப்போதும் சிரித்த படி துன்பத்தையும் சோதனைகளையும் எதிர்க் கொண்டு நலமுடனும் அழகுடனும் வாழ்வோம்!
இன்று நாம் மேசைகள் மேல் உணவை வைத்து கதிரைகளில் அமர்ந்த படி ஒரு கையில் தொலைப்பேசியும் மறு கையில் உணவு உண்கிறோம். நம் முன்னோர்கள் உண்ணும் போதுக் கூட சில விதி முறைகளை கடைப்பிடித்தனர். இன்று அவற்றையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதே இல்லை. வருங்காலங்களில் “அவ்வாறான பழக்கங்கள் இருந்ததா…?” என வினவும் வகையில் காலம் மாறி விடும்.
இதோ…! உங்களுக்காக, நம் முன்னோர்கள் பின்பற்றிய விதி முறைகளும் அதற்கான அறிவியல் காரணங்களும்,
தரையில் அமர்ந்து சாப்பிடுதல்
தரையில் அமர்ந்து சம்மணம் (சுகாசனா, பாதி பத்மாசனா) போட்டு சாப்பிடும் போது அழகும் ஆயுளும் கூடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்…?
அமைதியாக தரையில் சம்மணம் போட்டு அமரும் போது செரிமானத்திற்கு தயாராகுமாறு மூளைக்கு செய்தி செல்கிறது. அத்தோடு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் மூளை தெளிவாக முடிவெடுக்கிறது. வாழை இலை தரையில் இருப்பதால் நாம் குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றுப் பகுதி தசை சுருங்கி விரிந்து அமிலம் சுரப்பதால் எளிதில் உணவு சமிபாடடைகிறது. இவ்வாறு அமர்ந்து எழுவதை வழக்கமாக கொள்வதால் முழங்கால் மற்றும் இடுப்பெலும்புகள் வலுவடைகின்றன, ரத்த ஓட்டம் சீராக பேணப்படுகிறது.
வாழை இலையில் சாப்பிடுதல்
வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இளநரை வராது தடுக்க முடியும், தோள் பளபளப்பாகும். வாழை இலை கிருமிநாசினியாகவும் செயற்பட்டு உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கிறது. வாழை இலையில் காணப்படும் பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செரிமானம் அடைய வைப்பதோடு வயிற்றுப் புண்ணையும் ஆற்றுகிறது. வாழை இலையில் சாப்பிடுவதால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்வும் பெற முடியும்.
நொறுக்கத் தின்றால் நூறு வயது
“நொறுக்கத் தின்றால் நூறு வயது” என்ற பழமொழியினை அடிக்கடி நம் வீட்டில் பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். உணவினை வேக வேகமாக விழுங்கும் போது “மெல்ல சாப்பிடு…!” என அறிவுறுத்துவர். இதற்கான காரணம் மெல்ல கடித்து அரைத்து உமிழ் நீருடன் உண்பதால் இது உடலுக்கு அதிகபலத்தையும் உணவிலுள்ள சத்துக்கள் வீணாகாமலும் பாதுகாக்கும். உமிழ் நீரிலுள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையை போக்குகிறது.
பேசாது சாப்பிடுதல்
சாப்பிடும் போது பேசுவதால் சுவாசக் குழாய்க்குள் உணவு செல்ல வாய்ப்புண்டு. சாப்பிடும் போது உதடுகளை மூடியபடி சாப்பிட வேண்டும். அத்தோடு கையடக்க தொலைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றை பார்த்துக் கொண்டு சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். இதனால் அதிகளவான உணவை உள்ளெடுக்க வாய்ப்புண்டு. இது உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடும்.
உணவே மருந்து என வாழ்ந்த காலம் சென்று மருந்தே உணவு என வாழும் துரதிஷ்டமான காலத்தில் உள்ளோம். இனியாவது உணவினை உண்ணும் போது நம் முன்னோர்களின் வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
பண்டைத் தமிழர்கள் தமது வாழ்நாளில் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்கவழக்கத்திலும் ஏதோவோர் நன்மையினை நோக்கமாகக் கொண்டே கடைப்பிடித்தனர். இதை அறியாத நாம் அவற்றை மதம் சார்ந்த விடயமாக பார்க்கின்றோம்.
இதோ…! உங்களுக்காக, நம்மிடம் அரிதாகிப் போன நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில பழக்க வழக்கங்களும் அவற்றிற்கான காரணங்களும்
கைகூப்பி வணங்குதல்
இன்று கொரோனாவினால் நாம் பேணும் சமூக இடைவெளியினை அன்றே நம் முன்னோர்கள் நமக்கு கைகூப்பி வணங்கி எதிரில் உள்ளவரை வாழ்த்துவதன் மூலம் அறிமுகப்படுத்தி விட்டனர். இதன் பின் மறைந்திருக்கும் உண்மையான காரணம் தான் என்ன…? நம் உடற் குருதி சுற்றோட்டம் சந்திக்கும் இடம் விரல்களாகும். நாம் விரல்களை ஒன்றோடு ஒன்றாக கூப்பி வணங்கும் போது நம் கண், காது, மூளைகளுள் ஓர் அழுத்தம் உண்டாகும். இதனால் ஒருவரை சந்திக்கும் போது அந்நபரின் முகம் மற்றும் அவருடன் நாம் மேற்க்கொள்ளவிருக்கும் உரையாடல் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
வீட்டிற்குள் நுழையும் முன் கை, கால், முகம் கழுவி நுழைதல்
நம் சிலரின் வீடுகளில் இன்னும் இந்தப் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வெளியில் சென்று வந்தவுடன் “கை, கால் கழுவிட்டு வா..!” என நம் வீட்டின் பெரியோர்கள் வலியுறுத்தியிருப்பர். அச்சமயம் நமக்கு அது எரிச்சல் தரும் ஒன்றாகவே தோன்றும். வெளி இடங்களில் முக்கியமாக சன நெரிசல் அதிகமுள்ள இடங்களில் நோய்க் கிருமிகளின் தாக்கம் அதிகமாகயிருக்கும். இதனால் வீட்டினுள் நுழைந்தவுடன் நம் புறத்தினை சுத்தம் செய்து விட்டு நுழைய சொல்கின்றனர். இறந்த வீடுகளுக்கு சென்று வரும் போது பின் வாசல் வழியாக சென்று ஆடைகளை கழற்றி மஞ்சள் கலந்த நீரில் நீராடச் சொல்வதற்கான காரணமும் இதுவே.
வீட்டு வாசலில் துளசிச் செடி
அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்கள் வீட்டில் காணக்கூடிய பொதுவான ஒன்றாக இந்த துளசிச் செடி விளங்குகிறது. வீட்டின் வாசலில் துளசிச் செடி வைக்க வேண்டும் என வலியுறுத்தக் காரணம், ஏனைய தாவரங்களை விட காபனீரொட்சைட்டை உள்வாங்கி அதிகமான ஒட்சிசனை துளசிச் செடி வெளியிடுகிறது. மேலும் துளசிச் செடியினை சுற்றி அதிகாலை வலம் வருவதனால் சுத்தமான ஒட்சிசனை சுவாசிக்க முடியும். இதில் அதிகம் மருத்துவ குணமும் உண்டு. துளசிச் செடியின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து உட்கொண்டால் உடலின் வெப்பம் தணியும். துளசி இலைகள் பிழிந்து இஞ்சிச்சாறு மற்றும் தேன் கலந்து உணடால் சளி நீங்கி விடும்.
சாணம் தெளித்து கோலமிடல்
இன்று நாம் கோலமிடுவதை அழகுக்காக என எண்ணி ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டி விடுகிறோம். வாசலை கூட்டிப் பெருக்கி சாணம் தெளித்து கோலமிடுவதற்கான காரணங்கள் பல உண்டு.
சூரிய வெளிச்சம் வரும் முன் அதிகாலை எழுந்து கோலமிடுவதால் உடலுக்கு தேவையன ஒட்சிசன் கிடைக்கப்பெறும். சாணம் தெளிப்பதால் புழுதி பறக்காது மண் கெட்டிப்படும் மற்றும் கிருமி நாசினியாகவும் செயற்படுகிறது. கோலமிடுவதால் ஈ, எறும்பு போன்ற சிறிய உயிரினங்களின் பசி போக்கப்படுகிறது. கோலமிடும் போது சிந்தனை சிதறாது ஒன்றுபடுவதோடு கண் பார்வையும் சீராகிறது. குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது சிறந்த உடற்பயிற்சியாகவும் மாறுகிறது.
மாவிலை தோரணம்
மாவிலை தோரணம் மரத்திலிருந்து பறிக்கப்பட்டாலும் கூட காபனீரொட்சைட்டினை ஒட்சிசனாக மாற்றி தருகிறது. இதன் பச்சைத் தன்மை அதிகம் நீடிப்பதால் மனதிற்கு புத்துணர்வும், இலகுவான தன்மையும் கிடைக்கப் பெறும். மனதிற்கு அமைதியும் தருகிறது. மாவிலை கட்டப்படும் இடத்தை சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும்.
இவ்வாறாக, அறிவியல் ரீதியான நல்ல பயன் தரக்கூடிய பழக்கவழக்கங்களை நம் முன்னோர்கள் நமக்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் விட்டுச் சென்றுள்ளனர். இதனை நாம் முட்டாள் தனமென ஒதுக்கி வாழ்வதை தவிர்ப்போம். இவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
எங்கெங்கோ சென்று நாம் ஆடிப்பாடி பொழுதுகளை கழித்தாலும் நம் மனம் ஓய்வு பெறுவது வீட்டின் வாயிலினை அடையும் போது தான். இதனால் தான் நம் முன்னோர் வீடு இன்னோர் சொர்க்கம் என மொழிந்துள்ளனர். நம் மனதினை அமைதியானதாக வைத்திருப்பதும் அலைமோத விடுவதும் வீட்டின் அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதே. வீட்டின் அளவினைக் கொண்டு அதன் அழகு நிர்ணயிக்கப்படுவதில்லை. அதன் அமைப்பினைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
இதோ உங்கள் வீட்டினை அழகு செய்வதற்கான சில குறிப்புகள்…
வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டம் என்றவுடன் “இருப்பதற்கே இடமில்லை இதில் எங்கு தோட்டம் செய்வது…?” என்ற எண்ணம் உங்களுள் எழலாம். ஓர் ஜாடியில் ஓர் பூங்கன்று வளர்ப்பதற்கு போதுமான அளவு இடம் நம் அனைவர் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். ஆகையால் ஏதாவது ஓர் மரம் அல்லது செடியாவாது வீட்டில் வளர்ப்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் பயிரிடும் பயிர்களுக்கு அரிசி,காய்கறி கழுவி வீணாக ஊற்றும் நீரினை அவற்றிற்கு பாய்ச்சலாம் அத்தோடு உக்கக் கூடிய கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தலாம். இதனால் நம் சூழலை காப்பதற்கு நம் பங்களிப்பினை வழங்க முடியும். சுவாசிக்க தேவையான சுத்தமான காற்றினையும் பெற முடியும். மனம் அமைதியற்று திரியும் சமயங்களில் மனதினை அமைதிப்படுத்திக் கொள்ளவும் வீட்டுத் தோட்டம் உதவுகின்றது.
மீன் தொட்டி
அமைதியற்ற மனங்களை அமைதிப்படுத்துவதிலும் சூழலை அழகு செய்வதிலும் மீன் தொட்டிக்கு பெரும் பங்கு உண்டு. அழகிய வண்ண வண்ண சிறிய,பெரிய அளவிளான மீன்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். பார்ப்பவரை ஓர் நிமிடம் மெய்மறக்க வைக்கும் செய்கைகள் மனதினை திசைமாற்றுகிறது. ஓர் புதிய மகிழ்ச்சியான உணர்வினை விதைக்கிறது. இது வீட்டிற்கு தனி அழகினை அளிக்கிறது.
காற்று மணிகள் (wind chimes)
பெரும்பாலான வீடுகளில் இவற்றினை கண்டிருப்போம். காற்றோடு இவை உரையாடும் போது அதனிலிருந்து வரும் ஓசை கேட்டு நாம் “என்ன ஓசை அது…?” என தேடி கண்டறிந்த அனுபவம் நினைவிருக்கிறதா…? இவையும் ஓர் வகையில் சூழலை அழகு செய்வன தான். ஒலியின் மூலம் ஓர் வகையான நேர் மறையான அதிர்வுகளை (positive vibes) பரப்புகின்றன.
ஓவியங்கள்
இயற்கையாகவே நிறங்கள் நேர்மறையான மற்றும் எதிர் மறையான எண்ணங்களை வெளிக் காட்டக் கூடிய இயல்பினை கொண்டுள்ளன. ஓவியங்களை தேரும் போது முடிந்தவரை பயமுறுத்தும் வகையிலான ஓவியங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை விதைக்க கூடிய அழகான அமைதியான ஓவியங்களை தேர்தல் சிறப்பானது.
தளபாடங்கள்
வீடுகளின் இடங்களை தளபாடங்கள் நிரப்பி பெரும் அளவிலான இடத்தை பிடித்து விடுகின்றன. சிறிய வீடுகளாயின் பல் தொழிற்பாட்டினை உடைய தளபாடங்களை தேர்தல் சிறப்பானதாகயிருக்கும். வீட்டின் அமைப்பிற்கு ஏற்றவாறான தளபாடங்களை தேர்ந்தெடுத்தல் சிறப்பான ஒன்றாகும். இதனால் வீடு அடைந்திருப்பது போன்ற தோற்றம் நீங்கி விசாலமானதாக தோற்றமளிக்கும்.
இவ்வாறாக சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டினை சீர் செய்து அழகிய சூழலாக மாற்றியமைக்க முடியும்.
நாம் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வை வாழவே விரும்புகிறோம் ஆனால் அதற்கான எளிய வழிகள் அறிந்திருப்பதில்லை. எமது நாளாந்த வாழ்வில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது போதுமானது என்பது உங்களுக்கு தெரியுமா?
இதோ…! இதுவரை நீங்கள் அறிந்திராத ஆரோக்கிய வாழ்விற்கான சில குறிப்புகள்.
புழுங்கல் அரிசி
நாம் தினமும் சம்பா அல்லது வேறு சுவையான அரிசிகளையே சோறு சமைப்பதற்கு உபயோகிக்கின்றோம். அதனால் அதிகப்படியான மாச்சத்து கிடைக்கப்பெறுகிறது. இனி சில நாட்களுக்கு புழுங்கல் அரிசியை முயற்சித்து பாருங்கள். இதனை குத்தரிசி எனவும் அழைப்பர். இதனை உட்கொள்வதால் முக்கியமாக விட்டமின் B மற்றும் சில தாதுப் பொருட்கள் உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதை உண்பதால் பல மாற்றங்களும் புது வித தெம்பும் உடலில் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.
குரக்கன்
பொதுவாக நீரிழிவு நோயாளர்களின் உணவினை தயாரிக்கும் போது கோதுமைக்கு பதிலாக குரக்கன் உபயோகிப்பதை அதிகம் கேள்வியுற்றிருப்போம். இந்த குரக்கன் மா நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உகந்தது. இது உடலில் இன்சுலினை சம நிலையில் பேண உதவும். இதை உட்கொள்வதால் உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். உதாரணம் : குரக்கன் பாண், குரக்கன் மா ரொட்டி, குரக்கன் மா பிட்டு
உடற் பயிற்சி
தினம் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே நம் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இதயத்துடிப்பினை சீரான நிலையில் பேண முடியும். பல நோய்கள் வராது காத்துக் கொள்ளவும் முடியும். இதனை சாத்தியமாக மாற்றுவது எப்படி…? இரு வழிகள் உண்டு. முடிந்த வரை வாகனங்களை உபயோகிக்காது நடந்து அல்லது சைக்கிளில் செல்லல் மற்றும் Lift களுக்கு பதிலாக படிக்கட்டுக்களை பயன்படுத்தல். முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தாலும் நாளடைவில் அவை பழக்கமாக மாறிவிடும்.
பனங் கருப்பட்டி
பொதுவாக நாம் அனைவரும் வெள்ளை நிறச் சீனியினையே அதிகமாக இனிப்பிற்காகவும் இனிப்பான உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றோம். இது உண்மையில் உடலுக்கு உகந்ததா..?? இல்லை இது நாளடைவில் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. உதாரணம் : நீரிழிவு நோய், உடல் எடை அதிகரிப்பு, அதிகப்படியான கலோரியை தேக்கி வைத்தல்.
இவற்றிலிருந்து உங்களையும் உங்கள் குழந்தையையும் காத்துக் கொள்ள சிறந்த வழி வெள்ளை நிறச் சீனிக்கு பதிலாக சிவப்பு சீனி, பனங் கருப்பட்டி போன்றவற்றை உபயோகித்தலாகும். இவை இயற்கையாக கிடைக்கப் பெறும் இராசாயான சேர்வைகள் அற்றவை. அதிகம் உடலுக்கு நன்மை அளிக்க கூடியவை.
செக்கில் பெறப்படும் எண்ணெய்
தற்போது நாம் கொள்வனவு செய்யும் சில எண்ணெய்கள் பழுதடையாமல் இருக்க பல இராசாயான செய்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அவற்றில் இயற்கையாக காணப்படும் சத்துக்கள் பல அழிவடைந்து விடுகின்றன. உங்களால் முடிந்தவரை இவற்றிற்கு பதிலாக செக்குகளில் ஆட்டப்பட்டு பெறப்படும் புதிய எண்ணெயை கொள்வனவு செய்ய முயற்சியுங்கள். அதிகம் செலவானாலும் தரமான எண்ணெய் உங்கள் உடலுக்கு நன்மையளிக்க கூடியது என்பதை மறவாதீர்கள்.
இவ்வாறான சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாம் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு இணங்க எம்மால் முடிந்தவரை நோய்கள் வராது பாதுகாத்து சீரான வாழ்வை வாழ்வோமாக…!
“Lau Pa Sat” என அழைக்கப்படுவது சிங்கப்பூர் உணவுகள் கிடைக்ககூடிய இலங்கையில் அமைந்துள்ள உணவகமாகும். இந்தப் பெயர் Hawker centers எனும் வார்த்தையிலிருந்து வந்தது. One galle face shopping centerயில் உள்ள Lau Pa Sat உணவகத்திற்குள் நுழைந்ததும் எங்களை ஊழியர்கள் வரவேற்றனர். இந்த உணவகத்தின் அமைப்பானது சிங்கப்பூருக்குள் நுழைவது போன்ற உணர்வினை தரும்.
Drinks
Lau Pa Sat உணவகத்தின் menuவில் உள்ள பானங்கள் சிங்கப்பூரிற்குரிய பான வகைகளாகும். இங்குள்ள பானங்கள் மது கலக்கப்படாதவை.
Bandung Rose Syrup (LKR 400)
இந்த பானம் மிகவும் இனிப்பாகவும் thick ஆனதாகவும் இருந்தது. இது rose syrup கொண்டு சுவையூட்டப்பட்டிருந்தது மற்றும் கசகசாவும் காணப்பட்டது. பார்வைக்கு மட்டுமல்லாது நாவிற்கும் விருந்தளிக்க கூடியதாக அதன் நிறமும் சுவையும் அமைந்திருந்தது.
Milo Dinosaur (LKR 400)
Milo Dinosaur என்றழைக்கப்படும் பானத்தின் சுவையானது நாங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு இருக்கவில்லை ஆனாலும் அதன் மேல் தூவப்பட்டிருந்த Milo powder அதன் சுவையை அதிகரித்தது.
Lychee Soda Cooler (LKR 400)
நாங்கள் முயற்சித்த மூன்று பானங்களில் சிறப்பான பானம் Lychee Soda Cooler தான். இந்த பானம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த பானத்தின் சிறப்பு என்னவென்றால் இரு வகையான சுவையை ஒரே நேரத்தில் சுவைக்க முடியும். இந்த பானத்திலுள்ள Lychee இனிப்பதாகவும் சிறிது காரமானதாகவும் இருந்தமையால் வித்தியாசமான நல்ல சுவையொன்றை உணர முடிந்தது.
Mains
Coffee Sauce Chicken Wings (LKR 750)
இந்த உணவை நாங்கள் order செய்த போது எப்போது வருமென்ற காத்திருப்பு அதிகமாகிக் கொண்டேயிருந்தது. இந்த Dish crispy மற்றும் juicy ஆன Chicken wings மீது coffee sauce மற்றும் Seasame seeds போன்றவைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. Sauceயின் இனிப்பும் coffeeயின் கசப்பும் chicken wingsயின் மென்மையான பகுதியில் சரியாக கலந்திருந்தன.
Jumbo Chicken Satay (LKR 700)
நாங்கள் அடுத்து முயற்சித்த உணவானது இலங்கையர்களுக்கு பழக்கப்பட்ட உணவாகும். இந்த Jumbo Chicken Satay உணவினை முயற்சித்த பின் இன்னும் அதிகமாக order செய்ய வேண்டும் என நினைத்தோம் ஏனெனில் எங்களுக்கு இந்த உணவு மிகவும் பிடித்திருந்தது. இதில் chicken மிகவும் மென்மையாகயிருந்தது ஆனால் சற்று எண்ணெய் அதிகமாகயிருந்தது. Chicken Satayயில் இருந்த sauceயின் சுவையில் வேர்கடலை சுவையும் இருந்தது. அந்த sauceயின் சுவையும் தன்மையும் Chicken wings உடன் நன்கு பொருந்தியிருந்தது. இந்த உணவை முயற்சித்த பின் சற்று எரிவினை உணர்ந்தோம் ஆனாலும் எங்களுக்கு இந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.
Laksa (LKR 1000)
Laksa என்றழைக்கப்படும் உணவானது தோற்றம், சுவை, நறுமணம் மூன்றும் சிறப்பாக அமையப் பெற்ற உணவாகும். இது சிங்கப்பூர் உணவுகளின் தனித்துவமான சுவை இந்த உணவில் காண முடிகிறது. நாங்கள் முயற்சித்த உணவு பட்டியலில் முதலிடம் பெற்ற உணவு தான் Laksa. இந்த நூடில்ஸ் சூப் தேங்காய் மற்றும் கடல் உணவு கறி mix கொண்டு தயாரிக்கப்பட்டது. இது சற்று காரமாகயிருந்தது. Laksaவில் காணப்படுகின்ற thick noodles சிங்கப்பூரிலிருந்து வருவதாக கேட்டறிந்தோம். Lau Pa Satயில் உள்ள இந்த Laksa உணவானது ஒருவர் உண்ணக்கூடிய அளவு தான் பரிமாறப்படுகிறது எனினும் இது ஒருவர் உண்ணும் அளவை விட சற்று அதிகமாகவே இருந்தது. இந்த உணவு நிறைய இறால்களுடன் சிறப்பான முறையில் பரிமாறப்பட்டது. இந்த உணவு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
Nasi Goreng With Fried Chicken (LKR 750)
Nasi Goreng என்றழைக்கப்படும் உணவானது இலங்கையில் பொதுவான ஓர் உணவு ஆனால் நாங்கள் Lau Pa Satயில் இந்த உணவு இவ்வளவு சிறப்பானதாகயிருக்குமென எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் முன்பு முயற்சித்த Nasi Gorengகளை பார்க்கிலும் இது மிகவும் சுவையாகயிருந்தது. சோறுடன் கலக்கப்பட்டிருந்த Caramelise எனும் வெங்காயம் இந்த உணவின் சுவையை அதிகரித்தது. இந்த உணவு Fried chicken , Traditional singaporean flower fryums மற்றும் மரக்கறி அச்சாறுடன் பரிமாறப்பட்டது. எங்களுக்கு Lau Pa Satயின் Nasi Gorengயினை பார்த்த போது வயிற்றுக்கு அதிகமானதாகயிருக்குமோ என தோன்றியது.
AyamPanggang With Rice (LKR 750)
Ayampanggang என அழைக்கப்படும் உணவின் சிறப்பு என்னவென்றால் அது 24 மணி நேரம் marinate பண்ணப்பட்டது. அதாவது இறைச்சி வகைகளை சமைக்கும் முன் எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு அதை மென்மையாக்கும் ஓர் செயன்முறை. சோறுடன் பரிமாறப்பட்ட இந்த Ayampanggangயின் சுவை சிறப்பானதாகயிருந்தது.
Desserts
Goreng Pisang with Vanilla Ice Cream (LKR 500)
Goreng Pisang என்றழைக்கப்படுவது Banana frittersயின் சிங்கப்பூர் version ஆகும். இது batter சேர்வை கலந்து ஆழமான எண்ணெயில் பொறிக்கப்பட்ட வாழைப்பழ துண்டுகளாகும். Chocolate sauce ஊற்றப்பட்டிருந்தமையால் பொன்னிறமான இந்த உணவு முதலிடம் பிடித்தது. இந்த சூடான Goreng Pisang உடன் பரிமாறப்பட்ட vanila ice cream மேலும் இந்த உணவை சிறப்பானதாக மாற்றியது.
Chendol with Vanilla Ice Cream (LKR 500)
Chendol என்றழைக்கப்படும் dessert ஆனது சிங்கப்பூரின் hawker-centersயில் காணப்படும் பொதுவான ஓர் உணவாகும். இந்த dessert பழக்கப்பட்ட மற்றும் புதிய சுவையொன்றையும் கொண்டிருந்தது. இந்த உணவு jelly வகையை சேர்ந்த ஓர் dessert ஆகும். இது பால் நிரப்பப்பட்ட ஓர் பாத்திரத்தில் red kidney beans மற்றும் vanila ice cream உடன் பறிமாறப்பட்டது. நீங்கள் புதிய வகை உணவுகளை சுவைப்பதில் ஆர்வமுடையவர்கள் எனில் இந்த உணவை கண்டிப்பாக ஒருமுறை முயற்சியுங்கள்.
Strawberry Cheesecake (LKR 500)
இந்த Strawberry Cheese cakeயின் விலை அதன் சிறிய பகுதிக்கு அதிகம் என நினைத்தோம் ஆனால் அதன் சுவை மிகவும் சிறப்பானதாகயிருந்தது. இந்த cheese cakeயின் biscuit layer நன்றாக bake பண்ணபட்டிருந்தது. இந்த cakeயின் மேலுள்ள strawberry jam layer ஆனது cakeயின் சுவையை மேலும் அதிகரித்தது.
Ambience
Lau Pa Sat உணவகத்தில் உள்ளே அமரயிருப்பது போலவே வெளியில் அமர்வதற்கும் இருக்கைகள் காணப்படுகின்றன. சிங்கப்பூரின் வரலாற்றை சித்தரிக்கும் black and white படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் நட்பான முறையில் சிறந்த சேவையினை வழங்கினர். எங்களுக்கு உணவகத்தின் head – chef உடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் பிலிப்பைன்ஸ் வம்சாவளியை சேர்ந்த Asian-fusion cuisineயில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
நாங்கள் அங்கு சென்றபோது அதிகம் கூட்டம் இருக்கவில்லை ஏனெனில் அது வார நாட்களின் ஒரு இரவு வேளையாகும் ஆனால் மதிய உணவு நேரத்தில் அதிகம் கூட்டம் வருவதாக கேள்வியுற்றோம்.
Lau Pa Sat உணவகத்தின் உணவுகளை ருசித்தமையில் நாம் திருப்தியாக உணர்கிறோம். சிறப்பான சிங்கப்பூர் உணவை நீங்கள் ருசிக்க விரும்பினால் இந்த உணவகம் சிறப்பான தேர்வாகயிருக்கும்.