Blog Page 6

உள்ளூர் கோழி வளர்ப்பிற்கும் ஆப்பு!

சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது மிகுந்த விசனத்திற்குரியவொன்றாக பார்க்கப்படவேண்டியவொன்று. ஏனெனில் ஏற்கனவே திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஏராளமான பொருட்களை சரமாரியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டதன் விளைவே உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்ளூர் முதலீட்டு ஊக்குவிப்புக்கள் என அனைத்தும் மூடுவிழா காண்பதற்கு வழிகோலியதெனலாம். பால் உற்பத்தி பொருட்கள், உப்பு, அரிசி, பருப்புவகைகள் என எத்தனையோ விதமான உணவுப்பொருட்கள் இவ்வாறாக எடுக்கப்படும் தற்காலிக தீர்வினால் நிரந்தரமாகவே நம் கையைவிட்டு போய்விட்டது என்பதுதான் யதார்த்தம்.

சில அரசியல்வாதிகளின் கமிஷன், சொந்த வர்த்தக முன்னேற்றம் என்பதற்காகவே உள்ளூர் உற்பத்திகள் கைவிடப்படுவதென்பது நாட்டிற்கான மிகப்பெரிய இழப்பு என்பது யாவரும் அறிந்தவொன்றே. இதற்கான தீர்வாக கால்நடை வைத்தியரான “கிருபா நந்த குமாரன்” தன்னுடைய முகநூலில் ஓர் விடயம்தனை முன்வைத்திருந்தார்  அதாவது முட்டையை நேரடியாக இறக்குமதி செய்யாமல் கோழித்தீவனத்துக்கு தேவையான சோளம்,சோயா போன்ற மூலப்பொருட்களை இறக்கலாம்.அல்லது தேவையான தீவனத்தை இறக்கலாம்.முட்டை விலை அதிகரிப்புக்கு பிரதான காரணம் தீவன மூலப் பொருள் தட்டுப்பாடும் தீவன விலையேற்றமுமே.இப்போது முட்டையை நேரடியாக இறக்குமதி செய்வதன் மூலம் கோழிப் பண்ணைத் தொழிலில் உள்ள பலர் பாதிப்படையலாம் , தொழிலையே கைவிடலாம்.தன்னிறைவு நிலையில் இருந்த கோழிப் பண்ணைத்துறை இறக்குமதியை நம்பிய நிலைக்கு தள்ளப்படலாம் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.8

உண்மையில் காலங்காலமாக நம் நாட்டு நிலைமைகளுக்கு அரச தலைமைகளை குற்றம்சாட்டிக்கொண்டேயிருக்கும் நாம் அவர்களையெல்லாம் தெரிவு செய்து அனுப்பியதே நாம்தான் என்பதனை மறந்துவிடுகின்றோம். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை நம் ஊர்கள்தோறும் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது இயல்பாகவே நடந்துகொண்டிருந்தவொன்று. எனக்குத் தெரிந்தவரையில் வீடுகளில் மீந்துபோகும் உணவுகளே அவற்றுக்கான தீவனம். கோழிகளுக்கான மருந்து மாத்திரைகள் பராமரிப்பு என பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. சீக்கு வந்தால் உடனடியாக கைமருந்து கொடுக்கப்படும். ஒருவீட்டில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுவதென்பது சர்வசாதாரண நிகழ்வு.

ஆனால் தற்போது என்ன ஆனது இந்த உள்ளூர் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு? வீட்டுத் தேவைகளுக்காக தாராளமாக எடுத்துக்கொள்ளப்பட்ட முட்டைகள் போக  எஞ்சியவை உள்ளூர் சில்லரைக் கடைகளுக்கு விற்கப்பட்டதுடன், இறைச்சித் தேவையும் ஆரோக்கியமானவொன்றாக தீர்த்துக்கொள்ளப்பட்ட அந்த தன்னிறைவு நிலைக்கு என்ன நேர்ந்தது. இதற்கு திட்டமிடப்படாத பொருளாதாரக் கொள்கைகள் மட்டும்தான் காரணமா? நிச்சயம் இல்லை, நம்முடைய அசமந்தப்போக்கும் சோம்பேறித்தனமும் விழிப்புணர்வின்மையும்கூட இதற்கான காரணங்களில் ஓன்று என்றே கூறவேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த இறக்குமதி முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இலங்கையில் எவராவது ஒருவர் கோழி இனவிருத்தி பண்ணை ஒன்றினை ஸ்தாபிக்க விரும்புவதாயின் 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றுக்கொள்வதன்மூலம் அவற்றை திறன்பட நடாத்த வாய்ப்பேற்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

logo மாற்றம் சரிந்த நோக்கியாவின் சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்புமா?

‘ஏறத்தாழ உலகின் அனைத்து தரப்பு மக்களும் ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்பார்கள்’ என ஒரு brandடை கூறினால் அந்த brand மொபைல் தான்! அந்த மொபைல் நிறுவனத்தின் பெயர் தான் Nokia!

பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா 60 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகத் தன்னுடைய லோகோவை கடந்த 26-02-2023 அன்று மாற்றியுள்ளது. பழைய நோக்கியாவின் லோகோ நீல நிறத்தில் ஒரே வடிவான எழுத்தில் இருக்கும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோக்கியாவின் புதிய லோகோவில், பல வண்ணங்களும், `NOKIA’ என்ற வார்த்தை ஐந்து வெவ்வேறு வடிவங்களிலும் இருக்கிறது. தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், சாம்சுங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும், ரெட்மி, விவோ, ஓப்போ, ஒன்பிளஸ் போன்ற சீன நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் 2010க்கு பிறகு மெல்லத் தனது இடத்தை இழந்த நோக்கியா தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முயற்சித்து வருகிறது என்பதற்கான ஒரு ஆரம்பமே இந்த லோகோ மாற்றம் என பலராலும் கருதப்படுகின்றது.

ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருந்த நோக்கியா தற்போது 5ஜி நெட்வொர் மற்றும் தானியங்கு தொழிற்சாலைகளுக்கு தொலைத்தொடர்பு உபகரணங்களை விற்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனாலும் கை தொலைபேசிகள் அறிமுகமான காலத்தில், பெரும்பாலானவர்களின் வீட்டில் நோக்கியா மொபைல் போன்களே ஆக்கிரமித்து இருந்தன.

150 வருடகால பழமையான நோக்கியாவை நாமெல்லாம் ஒரு ‘Mobile Phone Company’ என்றுதானே நினைத்திருப்போம்? ஆனால் உண்மையில் அதன் ஆரம்பம் வேறு. பின்லாந்து நாட்டில் சுரங்க பொறியியலாளராக இருந்த ஃபிரெடரிக் ஐடெஸ்டாம் (Fredrick Idestam) என்பவர் 1865ல் அந்நாட்டிலுள்ள நோக்கியன்விர்டா நதிக்கரையிலுள்ள நோக்கியா டவுன் என்ற இடத்தில், ஒரு “Paper Bag ”செய்யும் கம்பெனியை உருவாக்கினார். இக்காலகட்டங்களில் முதல் உலகப் போர் சூடுபிடிக்க ஆரம்பிக்கவே, அந்நேரத்தில் அதிக டிமான்டில் இருந்த தகவல் தொழில்நுட்ப கம்பிகள், கேபிள்கள், ரப்பர் பொருட்கள் போன்றவற்றை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியது Nokia. தன்னுடைய நண்பரான லியோ மெச்சிலின் (Leo Mechelin) என்பவருடன் சேர்ந்து, 1868ல் இரண்டாவது கிளை கம்பெனியையும் உருவாக்கினார் ஃபிரெடரிக்.

1922-67 காலக்கட்டங்களில் உலகின் சிறந்த ‘ராணுவ ஆயுத விற்பனையாளராகவும்’ நோக்கியா இருந்துள்ளது என்பதுடன் ராணுவ வாகனங்களுக்கான ஒரு வகையான டயரை கூட நோக்கியா நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகப்போர்களின் முடிவின் பின்னரே நோக்கியா தகவல் தொழில்நுற்பம் நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது . “Nokia Tele Communication” என்ற புதிய நிறுவனம் ‘Connecting People’ என்ற வாசகத்துடன் உருவாகி, தனது கவனத்தை முழுவதுமாக தகவல் தொடர்பு துறையில் மட்டுமே செலுத்த ஆரம்பித்தது.

நோக்கியா ஏன் வீழ்ந்தது?

அதிக ஆயுள் தரும் ஹார்ட்வேரில் கவனம் செலுத்திய நோக்கியாவிற்கு சாப்ட்வேர் இரண்டாம் பட்சமாகவே இருந்தது என்றுகூட சொல்லலாம் .ஈ மெயில் அனுப்புதல், மெசேஜ் அனுப்புதல், இணைய தள பிரெளசிங், புத்தகம் படித்தல், குறிப்புகள் எடுத்தல் போன்ற, செல்போனில் செய்யும் பணிகளுக்கு ஆதாரமானவை apps . செல்போன்களில் இருக்கும் ஆப்ஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, அதனைப் பயன்படுத்தும் வழிகள் அதிகமாகும். நோக்கியா ஸ்மார்ட் போன்களில், விரல்விட்டு எண்ணக்கூடிய ஆப்ஸ்களே இருந்தன.

இந்த நிலையிலேயே 2007 இல் ஆப்பிள் நிறுவனம், தன் ஐ போன்களை அறிமுகம் செய்தது. ஐ போனிலும், ஒரு சில ஆப்ஸ்களே இருந்தன. ஆனால், பார்க்கும் அழகிலும், பயன்படுத்தும் எளிமையிலும், ஐ போன்கள் தலை சிறந்து இருந்தன. தங்கள் மனங்களில் கொடுத்திருந்த நம்பர் 1 இடத்திலிருந்து நோக்கியாவை மக்கள் அப்போதுதான் முதன்முறையாக கீழே இறக்கினார்கள் என்றுகூட கூறலாம் . ஆப்ஸ்கள்தாம் ஸ்மார்ட் போன்களில் வெற்றி காணும் மந்திரச் சாவி என்பதை உணர்ந்த ஐபோன் 2008 இல் 500 ஆப்ஸ்கள் உருவாக்கத்துடன் ஆரம்பித்து 2012 இல் 11 லட்சமாகி தற்போது ஐபோன்களின் ஆப்ஸ்கள் எண்ணிக்கையை நீங்களே சற்று எண்ணிக்கொள்ளுங்கள்.

அதுமட்டுமன்றி கூகுள் கம்பெனி Android என்னும் operating சிஸ்டதினை கண்டுபிடித்ததுடன் அதனைப் பயன்படுத்தும் உரிமையை Royalty முறையில் பிறருக்கு வழங்கியது. சாம்ஸங், HTC ஆகிய கம்பெனிகள் ஆன்ட்ராய்ட் முறையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தார்கள். இந்த போன்களிலும், நோக்கியாவை விட அதிக அளவில் ஆப்ஸ்கள் இருந்தன.அதிக ஆப்ஸ் இருந்தால்தான், அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கமுடியும் என்பதுடன் அதிக விற்பனை இருந்தால்தான், சாஃப்ட்வேர் நிபுணர்கள் ஆப்ஸ் உருவாக்குவார்கள் என்கிற கட்டாயத்திலேயே நோக்கியா அதன் வீழ்ச்சியை பாரிய அளவிற்கு சந்தித்தது.

2011ம் ஆண்டு, சிம்பியனிலிருந்து இன்னொரு operating சிஸ்டத்துக்கு மாறி, மக்கள் மனங்களில் இழந்த இடத்தைப் பிடிக்க நோக்கியா முடிவுசெய்து தேர்ந்தெடுத்த வழிமுறையும் அதற்கு படுதோல்வியினையையே ஏற்படுத்திக்கொடுத்தது . ஏனெனில் அப்போது 47 சதவிகித செல்போன்களில் iOS மற்றும் 45 சதவிகித செல்போன்களில் ஆன்ட்ராய்டும் operating சிஸ்டம்களாக இருந்தன. iOS ஆப்பிள் நிறுவனத்தினுடையது அதற்கு வேறு யாரும் உரிமை பெற முடியாது. இந்தநிலையில் நோக்கியா, கூகுளிடமிருந்து ஆன்ட்ராய்ட் பயன்படுத்தும் உரிமையை வாங்காது, சுமார்3 சதவிகித போன்களே பயன்படுத்திய வின்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் கம்பெனியிடம் வாங்கினார்கள். இந்த மாபெரும் தவறே ஆப்பிள், சாம்ஸங் ஆட்சி செய்த ஸ்மார்ட் போன் உலகத்தில், நோக்கியா காணாமல் போக மற்றுமோர் காரணமானது.

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதை ஈடுகட்ட தவறியமை, தொலைத்தொடர்பு உலகில் ஏற்பட்ட கடுமையான போட்டியைச் சமாளிக்க இயலாமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் நோக்கியா தடுமாறிச் சரிந்தது. எனினும் தற்போது மீண்டும் சந்தையை பிடிப்பதற்கான யுக்தியை தனது லோகோவிலிருந்தே தொடங்கியுள்ள நோக்கியா நிறுவனம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்குமா என்பதை காலம் தான் முடிவு செய்யக்கூடும்.

ஆர்கலி பாடல் காணொளி – NadiReview !

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி i production தாயாரிப்பில் CTP youtube தளத்தில் வெளியான பாடல் தான் ‘ஆர்கலி’. இந்தப் பாடல், ilamaran இனால் இசையமைக்கப்பட்டு Arul Pragasam, Praniti மற்றும் Dharu இனால் பாடப்பட்டுள்ளது. இதற்க்கான வரிகள் Jony இனால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான காட்சிகள் Suvikaran MSK இன் DIRECTION இனால் படமாக்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் Msk, Dilki Dissanayake, Aadhi, Shaja மற்றும் Kumar ஆகியோரின் கச்சிதமான நடிப்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பாடலானது கடலில் இருந்து கரையை நோக்கி ஒரு படகு நகர்ந்துக் கொண்டிருக்கும் காட்சியோடு ஆரம்பமாகி அதை தொடர்ந்து கரைக்கு வந்தவர்கள் வலைகளில் உள்ள மீன்களை பிரித்து எடுப்பதோடு நகர்கிறது. வலைகளை பிரித்து மீன்களை தனிமைப்படுத்தும் கரங்களில் ஒன்றாக கதாநாயகனின் அறிமுகம், அவன் கவனத்தை சிதறடிக்கும் காட்சியோடு கதாநாயகியின் அறிமுகம். கதாநாயகியின் அறிமுகத்தோடு இசையின் பயணமும் தொடங்குகிறது. இந்த காட்சி அவள் நடை அழகோடு முற்றுப் பெற அடுத்த காட்சியானது பேரத்தில் நகர்கிறது.

பேரத்தின் போது மீன்களின் விலையை குறைக்கும் படியாக கூறிய வாடிக்கையாளரை “6000க்கு ஒத்த பைசா குறைக்க முடியாது! வேணும்னா எடு இல்லன்னா கெளம்பு! கெளம்பு! மாப்ள நீ கேளு! கேளு!” என தெனாவெட்டாக பதிலளித்து சட்டையை தூக்கி விட்டவன், கதாநாயகி வந்து கேட்டவுடன் பணமே வேண்டாம் என மறைமுகமாக, அவளுக்கு இல்லாதவையா என காதல் சொல்வதும், அதை அறிந்தும் அறியாதவள் போல் குறைவான பணத்துக்கு பேரத்தை முடித்து மீன்களை அள்ளி செல்வதும், பார்ப்போரை புன்னகைக்க செய்யும் அழகான காட்சி.

அவனது அந்நாளின் உழைப்பை அவள் தன் பிழைப்பாக மாற்றி கூறு போட்டு விற்றுக் கொண்டிருப்பதை கதாநாயகன் ரசிப்பதிலிருந்து “நெய்தல் நிலத்துக்காரி…! கயல் மீனு கண்ணுகாரி…!” என பாடலின் வரிகள் ஆரம்பமாகிறது. இந்தக் காட்சியில் கதாநாயகனின் நண்பனின் முகத்தை பார்த்த போது, என் நண்பர்களின் காதலில் நான் பட்ட அவஸ்தைகள் தான் நினைவுக்கு வந்தது. என்னை அறியாமலேயே “இந்த பசங்க லவ் பண்ணாலே இப்டி தான் ப்ரோ!” என கதாநாயகனின் நண்பனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். பாடலானது வரிகளோடும் இசையோடும் பிறழ்வுகள் இன்றி பிண்ணிப்பிணைந்து நகர, கதாநாயகன் கதாநாயகியை துரத்தி துரத்தி ரசித்து ரசித்து காதல் செய்யும் காட்சிகளும் கூட்டு சேர்ந்து கொண்டன.

கடலலைகள் முத்தம்மிட்டு மீண்டும் முத்துக் குளித்து அலைகளை அள்ளி இருவரின் பாதங்களையும் தொட்டு காதலின் வெப்பம் தீண்டாத படி தணித்துக் கொண்டிருக்க, சற்று மணலில் பாதம் நகர்ந்ததும் அவளின் கையை பிடித்துக் கொண்டான். இந்த இடத்தில் கதாநாகியின் கூந்தல் அவிழ்ந்த நிலையிலிருந்து மாறி பிண்ணிக் கொண்டிருக்கும், செக்கன்களுக்குள் கூந்தலை வாரி எடுத்து பிண்ணிய விந்தையை எண்ணி, INSTAGRAM REELஇல் வரும் பையன் போல் “ஹேய் எப்புட்றா!?” என வியப்பிலிருந்த என்னை, கதாநாயகி அவன் கைகளை உதறாது மெல்ல பொறுமையாக பின்னால் திரும்பி பார்த்து, “கையப் பிடிச்சுட்ட! கடைசி வரைக்கும் பார்த்துப்பியா?” என கதாநாயகி கேட்ட கேள்விக்கு கதாநாயகன் கூறிய பதிலானது வேறு ஒரு மனநிலைக்கு தள்ளி விட்டது.

பாடலின் CINEMATOGRAPHY, கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் BACKGROUND காட்சிகள் ஆகியன பாடலின் காணொளியை உயிரோட்டம் உடையதாக மாற்றி உள்ளன. இந்த பாடலை பார்த்துக் கொண்டிருந்த போது இந்திய திரைப்படங்களாக மரியான் மற்றும் நீர் பறவை ஆகியன என் நினைவலைகளுக்குள் எட்டி பார்த்து நகர்ந்தன.

இந்த பாடலில்
“உன்ன மட்டும் இங்க சேர வேணும்
ஒன்னா போக கூட வாடி!
உசுரா உன்ன பார்த்துப்பேன்!
என்ன நீயும் நம்பி வாடி!” என்ற வரிகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. இந்தப் பாடலில் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வரிகளை எங்களுடன் கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

நாடி Verdict – 9.9/10

கணக்கில் வராத கறுப்புப்பணம்!

கறுப்புப்பணம் இந்த உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓன்று என்றால் மிகையில்லை. அண்மைக்காலமாக இலங்கையிலும் கருப்புப்பண மோசடிகள், பதுக்கல்கள் பற்றி அதிகப்படியாகவே கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கறுப்புப்பணம் என்றால் என்ன? வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.

அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்புக்கள்கூட இவ்வாறான கருப்புப்பண உருவாக்கல்களுக்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது .இதனால்தான் வரிவிதிப்பு முறை யதார்த்தமாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் இதனை சுமையாக பார்க்கக்கூடாது என்றும் பல வல்லுநர்களால் கூறப்படுகின்றது. அதிக வரி விகிதம் மக்களை வரி ஏய்ப்பு முறைகளை நோக்கிச் செல்ல மட்டுமே உதவும். இவாறான கறுப்புப் பணக் குவிப்பு, பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை உள்ள சமூகத்தில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தவிர்க்கவியலா ஓன்று. கறுப்புப் பணம் எங்கிருந்து வருகிறது?

சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி உற்பத்தியாகும் இடமாக ஆசிய கண்டமே இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் புழங்கிய கறுப்புப் பணத்தின் 40 சதவீதம் ஆசிய கண்டத்தில் இருந்தே வந்திருக்கிறது என்கிறது ஆய்வுகள்.உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன.

இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன.இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது சுவிட்சர்லாந்து.

இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் கருப்புப்பணத்திற்கான அடைக்கல நாடுகளாக உள்ளன. அவையாவன ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள “ஜிப்ரால்ட்டர்”(இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875), பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக்கா (பரப்பளவு 2.02 கி.மீட்டர், மக்கள் தொகை 36,810), ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோ( பரப்பளவு 61 கி.மீட்டர், மக்கள் தொகை 28,117), நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் ( பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987.) சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சி (பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.), பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவு ( பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058.), பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோரா (பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822) பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி ( பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300) மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் ( பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539) மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் (மிகச் சிறிய தீவு நாடான இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457)

இலங்கையிலும்கூட பல பெரிய தொழிலதிபர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்வது அறியப்படுகிறது. இருப்பினும் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் மொத்தத் தொகை குறித்த மதிப்பீடு யாரிடமும் இல்லை என்பதே உண்மை.
கறுப்புப்பணம் எப்படி உருவாகிறது?

உலக அளவிலான மிகப் பெரும் ஊழல் வலைப்பின்னல் கட்டமைப்பு இதை சாத்தியமாக்குவதாக ஐ.நா. கூறுகிறது. இந்த கறுப்புப் பணம் புழங்குவதற்கு, நாடு விட்டு நாடு கைமாற்றப்படுவதற்கு, இயற்கைவள வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு, வரி விலக்கு அளிப்பதற்கு, முதலாளி யார் என்றே தெரியாமல் போலியான நிறுவனங்களைத் துவக்கி நடத்துவதற்கு என பலவகையான செயல்களை செய்வதற்கும் கட்டமைப்புகள் இருப்பதாகவும் அவற்றின் மூலமே இந்த கறுப்புப் பண பரிவர்த்தனை சர்வதேச அளவில் சாத்தியமாவதாகவும் ஐநா கூறுகிறது.

உலக அளவில் பிற நாடுகளில் கருப்புப்பணத்தினை அதிகப்படியாக பதிக்கிவைத்துள்ள நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பது ரஷ்யா , சீனா , இந்தியா , மலேசியா , மெஸ்சிக்கோ என்பதும் குறிப்பிடத்தக்கது . கறுப்புப் பணத்தினை வெள்ளையாக்குதல் என்றால் என்ன ?

சட்டத்திற்கு புறம்பாக வரி கட்டப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணத்தினை மீண்டும் சட்டரீதியில் வெவ்வேறு வழிமுறைகளில் பயன்படுத்த வைக்க முயல்வதே கறுப்புப்பணம் வெள்ளையாதல் எனப்படுகின்றது . அட நம்ம சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த் கருப்புப்பணத்தையெல்லாம் எடுத்து தன்னுடைய பவுண்டேஷனுக்கே நன்கொடையாக வழங்குவாரே அப்படியா? என்றால் ஆம் கிட்டத்தட்ட அதுவும் ஒரு முறைதான் என்றுகூட சொல்லலாம் .

சில வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடி இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை செல்லுபடியாகாததாக அறிவித்தாரே.. அதுவும் ஒருவகையான கருப்புப்பணத்தினை வெளிக்கொணரும் நடவடிக்கைதான். ஆக சட்டரீதியாக பயன்படுத்த முடியாத வரி ஏய்ப்புப் பணத்தினை எப்படி சட்டரீதியாக பயன்படுத்தும் நிலைக்கு நாம் மாற்றுகின்றோம் என்பதுதான் கருப்புப்பணத்தினை வெள்ளையாக்குதல் என்று கூறப்படுகின்றது .”

கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் நடமாட்டம் என்பது இன்று உலகளாவிய பிரச்சனை.பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இது மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

The great indian kitchen Movie – Nadi Review

சமைப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா ? பூட்டி பாட்டி, அம்மா என தலைமுறை தலைமுறையாக பெண்கள்தானே சமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்? இது அவர்களுடைய வேலைதானே? ஏன் இப்போது மட்டும் இத்தனைதூரம் அலுத்துக்கொள்கின்றார்கள்? ஆண்களும்தான் சமைக்கின்றோம் என்றைக்காவது ஆண் சமைப்பது பற்றி அலட்டிக்கொள்வதில்லையே, பெரிய பெரிய நட்சத்திர விடுதிகள்தொடக்கம் சாதாரண உணவகங்கள்வரையிலும் ஆண்கள்தானே சமையல் கலை நிபுணர்களாக இருக்கின்றார்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பதே பெண்களுக்கு வலிக்கிறதா என்ன?!

இப்படி கூறும் பலரையும் நாம் அன்றாடம் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம்! ஆம் பெரிய பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகள் தொடங்கி சாதாரண உணவகங்கள்வரையிலும் சமையலில் ஆண்கள்தான் கோலோச்சுகின்றார்கள். ஆனால் அவர்கள் கரண்டியை கையிலிடுத்திருப்பது “தொழில் / வருமானம் “என்கிற ஒன்றிற்காக. காசு மட்டும் கிடைக்காது என்றால் எந்த ஆணும் அந்த கரண்டியை கையிலெடுக்கமாட்டான் என்பதே நிதர்சனம்.

பெண்களின்பாடோ அதுவல்ல அன்பு பாசம் கடமை என்கிற இன்னோரன்ன பெயர்களின்மூலம் சமையல் மற்றும் வீட்டுவேலைகள் என்பது மேலே சொல்லப்பட்டதுபோல பூட்டி பாட்டி காலத்திலிருந்தே தலைமுறைதலைமுறையாக “இது உன்னுடைய உனக்கு மட்டுமே உரித்தான கடமை “எனும் பெயரில் திணிக்கப்பட்டிருக்கின்றது என்பது ஜீரணிக்கமுடியாதவொன்று. கல்வியறிவும் பொருளாதாரா சுதந்திரமும் இல்லாத காலத்தில் பெண்ணானவள் தனக்கு விதிக்கப்பட்டதுதான் இது என எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாள் தன்னுடைய சுயகௌரவம் காவு கொள்ளப்படுவது உற்பட அனைத்தையும். ஆனால் இன்றோ நிலைமை வேறு

இந்த நிலைப்பாட்டினை அண்மையில் உரத்துச் சொன்ன ஓர் திரைப்படம் பற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம்
.
மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் 2020ஆம் ஆண்டு வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதங்களுக்குள்ளாகி மாபெரும் வெற்றியை கொடுத்த, முக்கியமாக பலராலும் பரவலாக கண்டுகொள்ளப்படாத பெண்ணின் பிரச்சினையை கூறிய The Great Indian Kitchen திரைப்படம், இந்த ஆண்டு தமிழில் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்தர் மற்றும் பலரது நடிப்பில் வெளியாகியுள்ளது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன.

நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் நடக்கும் காட்சிகள்தான் கதை . மலையாளத்தில் நிமிஷா சஜயனும், சூரஜ் வெஞ்சரமுடுவும் கணவன் மனைவியாக நடித்திருந்த இந்தப் படம், `பிக் பாஸ்’ பார்ப்பது போல, அவர்களின் அன்றாட வாழ்க்கையை தினமும் பார்ப்பது போன்றதோர் உணர்வைக் கொடுக்கிறது. மணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் நிமிஷா, காலையில் தூங்கி எழுகிறார். தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என நாள் முழுக்க மூன்று வேளையும் மாமியார் துணையோடு விதவிதமாய் சமைத்து கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாறுகிறார். அவர்கள் உண்ட மிச்சங்களையும் சமைத்த பாத்திரங்களையும் கழுவுகிறார்.

இரவு உறங்கி, மறுநாள் காலை எழுந்து, தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என சமைக்கிறார். பாத்திரங்களை தூய்மை செய்கிறார். மறுநாள் காலை எழுந்து திரும்பவும் மூன்று வேளை சமைத்து, பாத்திரம் கழுவி இரவில் அடுக்களையைத் தூய்மை செய்கிறார். மறுநாளும் அதையே செய்கிறார். இதை திரும்பத் திரும்பப் படிக்கும் போதும், திரைப்படத்தில் இதே காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு சலிப்பு தட்டுகிறதில்லையா? அந்த சலிப்புதான் படத்தின் மையப்புள்ளி. திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கே அலுப்பாயிருக்கும் விஷயங்களை நாள் கணக்கில் வருடக்கணக்கில் ஓயாமல் செய்து கொண்டேயிருக்கும் வீட்டுப் பெண்களுக்கு அது எவ்வளவு சலிப்பாய் இருக்கும்?

ஒரு குடும்பத்தில் சமையலும் வீட்டு வேலைகளும் பெண்களுக்கு மட்டுமே உரியவையா என்று யோசிக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம் வழக்கமான திரைப்படங்களில் வருவதுபோல் கொடுமைக்கார மாமியார் மாமனார் நாத்தனார் கணவர் என்கிற கதாபாத்திரங்களை கொண்டதல்ல இத்திரைப்படம் . அழகான, அன்பான, பாரம்பர்யமும் பண்பாடும் கொண்ட, ஊருக்குள் மரியாதையான குடும்பம்தான் அது. ஆனால் உற்று கவனித்தால் மட்டுமே அந்த மரியாதை, குடும்பம் என்ற அமைப்பிற்கும் அதன் தலைவர்களான ஆண்களுக்கும் மட்டுமே உரியது, பெண்கள் அவ்வமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களாகவோ அல்லது அடிமைகளாகவோதான் இருக்கிறார்கள் என்ற உண்மை கண்களுக்குப் புலப்படுகிறது.

படத்தில் மாமனாராக வரும் வயோதிபர் தன் குடும்பத்திற்க்காய் ஓடாய் உழைத்து களைத்து தற்போது தன் முதுமையில் மிக ஓய்வாக நாள் முழுக்க ஈஸிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறார். phoneல் whatsapp பார்க்கிறார். இறைவழிபாடு செய்கிறார். மருமகளை வாய்நிறைய `மகளே’ என்றழைக்கிறார். அவருக்கு வீட்டில் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள்தான். மிக்ஸியில் சட்னி அரைத்தால் சுவையாக இராது அதனால் அம்மியில்தான் அரைக்கவேண்டும், குக்கரில் சோறு சமைக்கக்கூடாது அதை மட்டும் விறகடுப்பில் பாத்திரத்தில் சமைக்க வேண்டும். அவருடைய துணிகளை மட்டுமாவது வாஷிங்மெஷினில் போடாமல் கையில் துவைக்க வேண்டும்.

நேற்று வைத்த குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து இன்று சூடு பண்ணிக் கொடுக்கக் கூடாது. காலையில் பிரஷையும் டூத் பேஸ்டையும் மனைவியோ மருமகளா கொண்டு வந்து கையில் கொடுக்க வேண்டும். அவர் வெளியே கிளம்பும்போது, குரல் கொடுத்ததும் மனைவியோ மருமகளா செருப்பைக் கொண்டு வந்து காலருகே வைத்தால் போதும். அவரே போட்டுக் கொள்வார். வீட்டுப் பெண் வேலைக்குப் போவது அவருடைய கவுரவத்திற்கு ஆகவே ஆகாது. அவரது எண்ணப்படி பெண்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து குழந்தைகளை சான்றோர்களாய் வளர்த்து ஆளாக்குவதே பெண்களது தலையாய கடமை .

கணவர் எப்படி ? அடேங்கப்பா … குடித்த தேநீர் குவளையை கூட அதே இடத்தில வைத்துவிட்டு செல்லும் அவன் மனைவி என்பவள் சமையலறைக்கும் , படுக்கையறைக்கு மட்டுமே உரித்தானவள் எனும் எண்ணம் கொண்டவன் . தினமும் நிமிஷா சமையலறையில் சமைத்துமுடித்ததும் அவளது தலையாய பிரச்சினை சமையலறை குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து வடியும் கழிவு நீரினை ஒரு பக்கற்றில் பிடித்து வீட்டுக்கு வெளியே ஊற்றுவது . காலையில் எழுந்ததும் நாற்றமடிக்கும் அந்த கழிவுநீரினை கொட்டிவிட்டு வரும் நிமிஷா திருமணம் ஆனதிலிருந்து தினமும் சுமார் மூன்றுமாதம் வரைக்கும் தன்னுடைய கணவரிடம் அந்த குழாயினைத் திருத்துவதற்காக பிளம்பரை அழைத்துவரும்படி கூறுகின்றாள்.

ஆனால் அவனோ தினமும் மறந்துவிடுவதென்பது அந்த கணவனது மெத்தனப் போக்கினை தெள்ளத் தெளிவாக படம்பிடித்து காட்டிவிடும் . மேலும் இரவில் தினமும் மின்விளக்கினை அணைத்துவிட்டு தன் இஷ்டப்படி மாத்திரம் தன் மனைவியிடம் உறவு வைத்துக்கொள்ளும் கணவரிடம்  ஒருமுறை நிமிஷா மனம் விட்டு பாலியல் உறவிற்கு முன்னதான முன் விளையாட்டுக்கள் பற்றி தயக்கத்துடன்கூற  கணவனுக்கோ அது ஓர் சுடுசொல் போல் மனதை தைக்கவே  “ஓஹ் உனக்கு இதெல்லாம் கூட தெரியுமோ?”என்பதுடன் உன்னைப்பார்த்தால் எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தோன்றவில்லை “என ஈட்டியாக வார்த்தைகளை செருகுகின்றான்.

அதுமட்டுமன்றி அந்த வீட்டில் இருக்கும் இன்னுமோர் வழக்கம்தான் மாதவிடாயின்போது வீட்டுக்கு புறம்பேயுள்ள ஓர் பழைய அறையில் நிமிஷா தங்கிக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம். அப்போது அவள் சமைப்பதை உண்டால் தீட்டு எனும் கருத்தைக்கொண்ட அந்தவீட்டு ஆண்கள் அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் சமையலுக்காக வேலையாள் பெண் ஒருவரை வரவழைத்துக்கொள்கிறார்கள் . அந்த மூன்றுநாட்களும் அவள் யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் ஓர் நாள் மோட்டார் சைக்கிளிலிருந்து தடுமாறி விழப்போகும் கணவனை நிமிஷா ஓடிவந்து தாங்கிப்பிடிக்கின்றாள் .

ஆனால் அப்போது அவள் கணவனோ அவளை உதறித்தள்ளிவிட்டு கடும்கோபத்துடன் தன்னை அவள் தொட்டு தீட்டாக்கிவிட்டாள் என எகிறுகின்றான். தன்னை வெளியில் எங்கேயும் விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வேலை வாங்கும்போதுகூட சகித்துக்கொள்ளும் நிமிஷா அந்த இடத்தில தன்னுடைய சுயமரியாதை தீண்டப்பட்டவளாய் உணர்கின்றாள் . ஒருகட்டத்தில் தேநீர் ஊற்ற சொல்லும் மாமனாருக்கும் கணவருக்கும் கழிவு நீரினை குவளைகளில் ஊற்றிவைத்துவிட்டு தான் வெளியேற முடிவெடுக்கின்றாள். அப்போது ஆத்திரத்துடன் அவளருகே வரும் கணவன் மற்றும் மாமனாரின் தலையில் அதே சமையலறையில் வடிந்து சேர்ந்திருக்கும் கழிவுநீரினை கொட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறிவிடுகின்றாள்.

இதுவே இப்படத்தின் கதை .குடிக்கும் தண்ணீரைக்கூட வீட்டுப் பெண்கள் எடுத்துக்கொடுக்கவேண்டும் எனும் ஆண்களின் மனசாட்சியை கேள்வி கேற்கும் இத்திரைப்படம் நிச்சயம் காலத்தின் கண்ணாடி என்றே கூறவேண்டும்.

சத்தமின்றி முன்னேறும் இணைய வர்த்தகம்!

பண்டிகைகள் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். அதிலும் வணிகர்களுக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம் என்றால் அது மிகையில்லை. ஏனெனில் முன்பைபோல அல்லாமல் மக்களின் நுகரும் தன்மை மற்றும் பொருட்களை வாங்கிக்குவிக்கும் ஆற்றல் அதிகப்பட்டிருந்தாலும் இன்னுமே “பண்டிகைக்கால விற்பனை” எனும் ஒன்றிற்கான அந்த எதிர்பார்ப்பு மக்களிடம் குறையவேயில்லை என்றுகூட கூறலாம்.

(நம்முடைய சிறுவயதிலெல்லாம் புத்தாடை வாங்குவது என்றால் அது ஏதேனும் பண்டிகை அல்லது பிறந்தநாள் கொண்டாட்டம் எனும் வரையறை இருந்தது இப்போதெல்லாம் அப்படியல்ல அடிக்கடி ஏதேனும் ஒரு ஆடையைகூட அவசியம் இருக்கிறதோ இல்லையோ கண்ணில்படுவதை வாங்கும் ஓர் போக்கு நம்மிடம் உள்ளது ) இப்படி நுகர்வோர் மற்றும் விற்பனையாளரின் எதிர்பார்ப்பினை கடந்த இரண்டரை வருடகாலமாக ஆட்டிப்படைத்த கொரோனா தகர்த்தெறிந்துள்ளது என்பதே உண்மை.

கொரோனா தொற்று கெடுபிடிகளினால் அனைத்து பண்டிகைக்கால விற்பனைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டதென்பது அனைவரும் அறிந்தவொன்று. ரம்ஜான் , வெசாக், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என விற்பனை களைகட்டும் நேரத்தில் வர்த்தகம் பாதியாக குறைந்தது கடந்த காலங்களில். மிக இக்கட்டான நிலைமையை உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் சந்தித்துவரும் இந்த நிலைமையில் சத்தமேயில்லாமல் ஓர் “வணிகமுறைமை” கடந்துசென்ற பெண்டமிக் சூழ்நிலையினை சாதகமாக்கிக்கொண்டு அசுர வளர்ச்சிகண்டுள்ளது.

ஆம் ஒன்லைன் எனப்படும் இணைய வர்த்தகம்!

கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் இணைய வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும் தொடர்ந்தும் இணையம் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர் .

இதனால் இணைய வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள காரணத்தினால் உள்ளூர் வியாபாரிகளின் தொழில் நலிவடைந்து வருகின்றது . சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் இந்த இணைய வர்த்தகம் நசுக்குவதாக பலர் குற்றம் சாட்டிவருகின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உண்மைதான்.
தொடர்ந்து மக்கள் இணைய வர்த்தகத்திற்கு ஆதரவு தெரிவித்தால் உள்ளூர் வியாபாரிகளின் தொழில் அழிந்து போகக் கூடிய சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம்

தற்போது கார் முதல் உணவு பொருட்கள் வரை அனைத்தும் இணைய விற்பனைக்கு வந்து விட்டன. இணைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இணைய வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் துவங்கி உள்ளதால் இணைய வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக போட்டி போட்டிக் கொண்டு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.

இந்த வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் நம் நாட்டினைப்பொறுத்தவரையில் தராஸ் போன்ற சில இணைய வர்த்தக நிறுவனங்கள் , வெளிநாடுகளைபொருத்தமட்டில் அமேசான் , ஈ பே , அலிபாபா , பிளிப்கார்ட், வால் மார்ட் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லக்கூடியது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல இணைய வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில மோசடி வலைதளங்களும் களம் இறங்கியுள்ளன. வழங்கவே முடியாத சலுகைகளை அறிவித்து, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி வலைதளங்கள் தங்களின் சலுகை, தள்ளுபடி அறிவிப்புகள் குறித்து மின்னஞ்சல்கள் குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப் ஆகியவற்றில் தகவல் அனுப்புகின்றன. இதுகுறித்து இணைய வர்த்தகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது “வழங்கவே முடியாத சலுகைகளை அறிவிக்கும் வலைதளங்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.

இந்த வலைதளத்திடம் கிரெடிட், டெபிட் கார்ட விபரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம். இந்த வலைதளங்களை, ‘கிளிக்’ செய்வதால் நிதி தொடர்பான விவரங்கள் முறை கேடாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. மேலும் சில மோசடி வலைதளங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்துகின்றன. அதனால், இணையத்தில் பொருட்களை வாங்குவோர், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மோசடி வலைதளங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது பற்றி மற்றொரு பிரபல வலைதள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது “பொது இடங்களில் அல்லது இலவசமாக கிடைக்கும், ‘வைஃபை’யைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவை மூலமும் தகவல்கள் திருடு போகலாம். அனைத்துவிதமான இணைய வர்த்தகத்துக்கும் ஒரே கடனட்டையினை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்பதை மதிப்பிட முடியும். தள்ளுபடியோ, சலுகையோ நம்ப முடியாதபடி இருந்தால் விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஆசைப்படாமல், எச்சரிக்கையுடன் இருந்தால்தான், இந்த மோசடிகளில் இருந்து தப்ப முடியும். இந்த மோசடிகளில் படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர்” என்று எச்சரித்துள்ளார்.

சம்பளமில்லாத வேலையாள் பெண்!

வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான் உட்கார்ந்திருக்கிறார்களா?

யதார்த்தத்தில் இந்த பெண்கள் தங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் முன் விழித்தெழுந்து எல்லோருக்கும் பின் உறங்கச் செல்லுபவர்களாகவும் இந்த விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட காலம் முழுவதும் வீட்டில் உள்ள சமையல் பாத்திரம் தேய்த்தால், துணி துவைத்தல், வீட்டை, வீட்டை சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்பவர்களாக குழந்தைகளை பராமரிப்பவர்களாக வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை பாராமரிப்பவர்களாக, விருந்தினர்களை கவனிக்கவேண்டியவர்களாக, செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் வீடுகளாயின் அந்த பிராணிகளின் பொறுப்பாளர்களாகவும் கக்கூஸ் கழுவுவபர்களாக, அயர்ன் செய்பவர்களாக, மளிகை வாங்கிவருபவர்களாக என தொடர்ந்தும் வீட்டு வேலைகளை நிமிட இடைவெளியின்றி செய்பவர்களாகவே இருப்பார்கள்.

தொலைகாட்சி பார்த்துக்கொண்டே கையில் ஏதாவது வீட்டிற்கான தேவையை செய்துகொண்டிருக்கும் பெண்கள், இரவில் அரைகுறை நித்திரையுடன் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பெண்கள் என ஏராளம் பெண்கள் நம் மத்தியில் நிறைந்திருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட வேலை என்றில்லாமல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்யவேண்டிய கட்டாயம் அநேகருக்கு இருக்கும். இப்படி நீண்டுகொண்டே செல்லும் வேலைகளை நிற்க நேரமின்றி செய்துகொண்டிருக்கும் பெண்களால் எப்படி அவ்வளவு சுலபமாக “வீட்ல சும்மாதான் இருக்கிறேன் ” என சொல்ல முடிகின்றது? ! விடை மிகச் சுலபம் இவர்கள் அனைவரும் சம்பளமின்றி வேலை பார்க்கும் வேலைக்காரிகள்!!!

“வீட்ல சும்மாதானே இருக்கிறாய் வெட்டியாக “என காலம்காலமாக சொல்லப்பட்டு அது ஆழ்மனதில் பரம்பரைபரம்பரையாக பதியப்பட்டதால் ஏற்பட்ட தயக்கமும் தாழ்வுமனப்பான்மையும்தான் எடுத்த எடுப்பில் “வீட்ல சும்மாதான் இருக்கேன் “என சட்டென்று சொல்லவைத்துவிடுகின்றது என்றால் அதுதான் உண்மை.
உண்மையில், பெண்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பணமதிப்பு உண்டு. இதே வேலைகளை ஒரு பெண் தன்னுடைய வீட்டில் செய்யாமல்,இன்னொரு வீட்டில் பணிப்பெண்ணாக சென்று செய்வாளேயாயின் அவளது மாத வருமானம் எவ்வளவாக இருக்கும் தெரியுமா ?

ஏனெனில் தற்போது இலங்கையில் பணிப்பெண் ஒருவரது மிகக்குறைந்த ஊதியமானது ரூபாய் முப்பத்தைந்தாயிரம் முதல் நாற்பதாயிரத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. அதுவும்போக, சில வீடுகளில் சமையல் செய்வதற்கு , துணி துவைப்பதற்கு, அயர்ன் செய்வதற்கு, வீட்டை சுத்தப்படுத்துவதற்கு என்று தினமும் சென்று வரும் பெண்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு சம்பளம் என பேசி தீர்மானிக்கப்படுகின்றது .

அவரவர் வீட்டில் வேலை செய்யும் பெண்களிற்கு சம்பளம்தான் இல்லையென்றால் மரியாதையாவது கிடைக்கின்றதா? சாப்பாட்டில் குறை, வீட்டில் சுத்தமில்லை சரியாக அயர்ன் செய்யப்படவில்லை விருந்தினரை சரியாக கவனிக்கவில்லை குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் குறை என சதாகாலமும் ஏதாவது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகும் பெண்களின் விகிதமே நம்மில் அதிகம். இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விடையம் என்னவென்றால் இந்த வேலைகளிலெல்லாம் அந்தந்த வீட்டு ஆண்களின் பங்களிப்பு இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை அல்லது எங்காவது ஆங்காங்கே எப்போதாவது நிகழ்கிறது என்பது மட்டுமே பதிலாக இருக்கும்.

ஏனெனில் நம் குடும்ப அமைப்பில் “வீட்டு வேலைகளைப் பெண்கள்தான் செய்யவேண்டும்’என்றும், “வீட்டு வேலைகளைச் செய்வது ஆண்மைக்கு அழகல்ல’என்றும் நம் ஜீன்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால்தான் ஆண்கள் வீட்டில் சமையல் செய்வதும், மனைவியின் துணிகளைத் துவைப்பவதும் திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமல்லாது, பொதுவெளியிலும் நகைச்சுவைக்குரிய விஷயங்களாக உள்ளன.

ஒரு பெண்ணின் அன்றாட வீட்டு வேலைகள் அந்தந்த வீட்டு மற்றைய குடும்ப உறுப்பினர்களாளும் பகிந்துகொள்ளப்படும்போது, பெண் தனது மனித வளத்தினை மற்ற துறைகளிலும் பயன்படுத்துவதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைக்கும். தனது தனித்திறமைகளையும் லட்சியங்களையும் கனவுகளையும் வெளிக்கொணர செயலுருக்கொடுக்க முடியும். அம்பையின் “வீட்டின் மூலையில் ஓர் சமையலறை” சிறுகதையில் சொல்லப்படுவதுபோல் , ஒரு பெண் தன் வாழ்நாளில் சமையலையும் , மளிகைப்பொருட்களையும் பற்றிய சிந்தனைகளிலிருந்து ஓரளவு விடுபட்டிருந்தால் இந்த உலகின் பல கண்டுபிடிப்புக்கள் அவர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்பது மறுக்கவியலா உண்மை.
1960- மற்றும் 70-வரையில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது, அதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகளை விடுமுறையின்றிச் செய்வது போன்ற பெண்ணின் உழைப்பு பற்றியும் அவை எவ்வாறு இருட்டடிக்கப்படுகிறது என்பது பற்றியும் பேசப்பட்டது.

மேலும், 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்புரட்சியினால் பெரும் தொழிற்சாலைகளும், நவீன இயந்திரங்கலும் உருவாகி அதுவரையில் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஆண், பெண் என இருவரது கைகளிலும் இருந்த சிறு கைத்தொழில்களை மிகப்பெரிய உற்பத்திகளாக மாற்றும்வகையில் தொழில்சாலைகள் கைப்பற்றிக்கொள்ளவே, ஆண்களே அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலை வேலைகளுக்குச் சென்றனர். குழந்தைப் பராமரிப்பின் காரணமாக, தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தியில் பெண்களால் பங்கெடுக்க முடியவில்லை.

தொடர்ந்து மாறிவந்த சமூகச் சூழலில், வேலை அல்லது உற்பத்தி என்பது தொழிற்சாலைகளில் நடைபெறும் ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டது. வீடு என்பது நிம்மதியாக, ஓய்வெடுக்கும் இடமாக கருத்தப்படவே, அந்த நிம்மதிக்கு பெண்கள் பொறுப்பாக்கப்பட வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அப்படியே பெண்களுக்கு மாத்திரம் உரிதாக்கப்பட்டது. வீட்டு வேலைகளை பெண் இலவசமாக செய்துகொண்டிருந்தமையினால் ஆண்களின் குறைவான கூலி ஓர் பிரச்சினையாக கருதப்படவில்லை.

ஆகவே உற்பத்தித் துறை சம்பாதித்த லாபத்துக்கும், அடைந்த வளர்ச்சிக்கும் பெண்ணின் வீட்டு வேலை அஸ்திவாரமாக அமைந்தது என்றாலும் மிகையாகாது. ஆனாலும், வீட்டு வேலை ஒருபோதும் உழைப்பாகப் பார்க்கப்படாமல் சம்பளமின்றி வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் அவள் தொடர்ந்தும் செய்யவேண்டியது பெண்ணின் கடமை என்றும், பொறுப்பு என்றும் அவளே ஓர் நல்ல பெண் என்றும் கட்டமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது இன்றுவரையில் தொடர்வதுதான் மிகப்பெரிய வேதனை!

எழுத்து – ப்ரியா ராமநாதன்

“அயலி” ஓர் பார்வை – நாடி Review

சமகாலத்தில் பெண் விடுதலை குறித்தும் பெண் கல்வி குறித்தும், பெண்கள் மீது காலங்காலமாக திணிக்கப்பட்டிருக்கும் பிற்போக்கான விடையங்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலும் பல திரைப்படங்களும், வெப் சீரிசுகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றமையானது மிகவும் ஆரோக்கியமானவொன்று என்றே கூறவேண்டும் . அந்தவகையில், தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை தமிழ் செல்வி எனும் கதாபாத்திரம் எதிர்க்கும் விதம்தான்‘அயலி’ திரைப்பட கதையின் கரு.

சுமார் ஐநூறு வருடங்களுக்குமுன் ஒரு பெண் தன் காதலனோடு ஊரை விட்டு இரவோடிரவாக சென்றுவிடுகின்றாள். சம்பவத்தை தொடர்ந்து எதேச்சையாய் ஏற்படும் பஞ்சத்திற்கும் பிணிக்கும் ஊர் கட்டுப்பாடு தாண்டி ஓர் பெண் வெளியேறியதுதான் காரணம் என கருதும் ஊர் மக்கள் இதனால் மிகப்பெரிய சாமி குற்றம் ஏற்பட்டு விட்டதாக அஞ்சி புலம்பெயர்ந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கு பெண்களுக்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை வகுக்கின்றனர்.

அதன்படி பழமைவாதம், பெண்ணடிமைத்தனம் போன்றவைகளை கடுமையாக பின்பற்றி வரும் அந்த கிராமத்தில் பிறக்கும் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே வெளியே எங்கும் செல்லாதபடிக்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நாளடைவில் வழக்கமாகிவிடுகிறது.இப்படியாக தொண்ணூறாம் ஆண்டளவில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்க ,பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம்.

இப்படியான ஒரு கிராமத்தில் சகல செல்வ செழிப்புடனும் அப்பாவின் செல்ல மகளாகவும் வளரும் பள்ளி மாணவி தமிழ்ச்செல்வி . அந்த ஊருக்கு வந்துபோகின்ற ஓர் வைத்தியரின் டெத்ஸ்கோப்பினை முதன்முறையாக அணிந்துகொண்டு தன்னுடைய இதயத்துடிப்பினை தானே கேட்ட நொடியிலிருந்து தானும் ஓர் வைத்தியராக வேண்டும் என்பதுதான் தமிழ் செல்வியின் கனவு. ஆனால் அந்த ஊரில்தான் பெண்கள் எட்டாம் வகுப்பினையே தாண்டமுடிவதில்லையே ? பருவம் எய்திய மூன்றாம் மாதமே திருமணம் செய்துவைத்துவிடுவதுதானே ஊர் வழக்கம்! எனவே தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள, தான் வயதுக்கு வந்த விஷயத்தையே மறைத்துக்கொண்டு வாழ முற்படுகிறாள் தமிழ் செல்வி.

இதனால் என்னென்ன சிக்கல்கள் வருகின்றன, அந்தக் கிராமத்திலிருக்கும் பல பெண்களின் நிலை என்ன தமிழ்ச்செல்வி அந்த ஊரை மாற்றினாளா போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகவும், அதே சமயம் சமூகப் பொறுப்புடனும் பதில் தருகிறது ஜீ5 ஓடிடி தளத்தில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் எட்டு எபிசோடுகளாக வெளிவந்துள்ள இந்த சிரீஸ். இணைய தொடர் என்றாலே திரில்லர் கதையாகவும் ஒரு கொலையை சுற்றி நடக்கும் சம்பவங்களை மட்டுமே பேசும் என்ற வரம்பை உடைத்து இப்படியும் இணைய தொடரை மக்களுக்கு பிடித்தது போல் கொடுக்கலாம் என நிரூபித்திருக்கின்றார் இயக்குனர் முத்துகுமார்.

இயற்கையாக ஏற்படும் பெண்களின் மாதவிடாய்க்கு பல மூடநம்பிக்கைகளை சம்பிரதாயம் மற்றும் வழக்கம் என்கிற பெயரில் காலங்காலமாக திணித்துவைத்திருக்கும் சமூகத்தின் பொதுப்புத்தியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு கருத்தை ஆர்ப்பாட்டமல் இல்லாமல் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது . கிராமமே தெய்வமாக வழிபடும் அயலியும், பாதிக்கப்பட்ட ஓர் அபலைப் பெண்ணாக இருக்கலாம் என்னும் (யார் கண்டா, அயலி சாமிகூட இவனுங்களே கொன்னு பொதச்ச ஒரு பொண்ணாகூட இருக்கலாம் எனும் வசனம்) இடத்தில் இயக்குனரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

கைகளைக் கட்டி கட்டாயத் தாலி கட்டப்பட்ட பிறகு, தாலியைக் கழற்றி, கட்டியவனின் முகத்தில் வீசி, பளாரென்று அயலி கொடுத்த அறை, அவனின் கன்னத்தில் மட்டும் விழுந்த அறை அல்ல. கழுத்தில் தாலி ஏறிவிட்டது என்பதற்காகவே வேறு வழியில்லாமல் கண்டவனை கணவனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் சமூகத்துக்கும் , வலுக்கட்டாயமாக தாலி கட்டவைத்து அதன்மூலம் கதாநாயகியை கதாநாயகனுக்கு அடிபணிய வைக்கும் கதையினைக்கொண்ட தமிழ் சினிமாக்களுக்குமான அறை!

கதையில் வசனங்கள் கவனம் ஈர்ப்பதோடு, காத்திரமாகவும் இருக்கின்றன. உதாரணத்துக்கு,

“ஊட்டுல சும்மா படுத்திருக்கேனா… நான் பாக்குற வேலைக்கு எல்லாம் சம்பளம் பேசலாம் வர்றியா?

“நாம எங்க வாழறம் ? நம்ம வாழ்க்கையையும் சேர்த்து நம்ம ஆம்பளைங்கதான் வாழறாங்க

“உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?”

“அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?”

“கோயில இடிச்சிட்டா பொண்ணுங்கள எப்படி கட்டுப்படுத்துவீங்க”
“ஆம்பளைங்க சேலையத்தான் கட்டணும்’ என சொல்லும்போது, ‘கட்டிக்க பொறக்கும்போதே வேட்டியோடவா பொறந்த..’

“உங்க அறிவுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் பண்ணுங்க!

“உனக்கு உண்டானதை நீதான் பாத்துக்கணும்!

சாதாரணமான விஷயத்துக்காகக் கூட உயிரக் கொடுத்து போராட வேண்டியிருக்கு!

நம்ம பேச்சையும் மனசையும் யார் கேட்கப் போறா?

நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக்கணும்னு முடிவு பண்றதுக்கு இவனுங்க யாரு…?

எங்க ஊர்ல இருக்குறதெல்லாம் பழக்க வழக்கமே இல்ல, பைத்தியக்காரத் தனம்..!

முதுகுக்குப் பின்னாடியே பார்த்துட்டு இருந்தோம்னா, முன்னாடி போக முடியாது..!

நான் எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்..!

என பிரச்சார நெடி இல்லாமல் வசனங்கள் ஒவ்வொன்றும் தெறிக்க வைக்கின்றன.

Hindenburg adani ஒரு பார்வை!

கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை இரண்டு நாட்களிலேயே உலகின் இருபது பணக்காரர்களின் பட்டியலில்கூட நிற்கவிடாமல் தூக்கியெறிந்த ஹிட்டன்பர்க் அறிக்கையின் 88 கேள்விகளின் விளைவால் அறிக்கை வெளியான இரண்டு நாட்களிலேயே அதானியின் கம்பெனிகளின் பங்குகள் அனைத்தும் 20 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது. அதுமட்டுமல்லாமல் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹின்டன்பர்க் அறிக்கையின் சுருக்கம்!

ஒரு நிறுவனத்தின் ப்ரொமோட்டர் 75% தான் ஒரு பங்கில் வைத்திருக்கலாம் என்பது “sebi “ விதி. இல்லாவிடின் பங்கின் விலையைத் தீர்மானம் செய்வது அவர்களாகவே இருக்குமே தவிர பொதுமக்களாகவோ
வெளிப்படைத்தன்மையுள்ளதாகவோ இருக்காது. பங்கு விலையை இவர்களே ஏற்றி இறக்கினால் அதை வைத்துக் கடன் வாங்கலாம், கூடுதல் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கலாம்.

இதனாலேயே பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதானி நிறுவனம் தன்னிடம் இருக்கும் பணத்தினையே அவற்றிற்கு அனுப்பி மறுபடி அதைப் பட்டியிலிடப்பட்ட பங்குகளில் முதலிடச் செய்திருக்கிறது என்பதுடன் இந்த வழிமுறையினைப்பயன்படுத்தி நினைத்தபடி பங்கின் விலையை ஏற்றி அதன்வழி இன்னும் கடன் வாங்கிப் பல புதிய தொழில்களைத் அதானி நிறுவனம் தொடங்கியுள்ளது. புதிய தொழில்களின் மூலம் வந்த பணத்தைப் பல திருட்டுத்தனமான வழிகளில், அதே ஷெல் நிறுவனங்களினூடாக வெளியே அனுப்பி தங்கள் பொக்கற்றுக்குள் வந்திடும்படிச் செய்திருக்கின்றனர்.

இப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்தால் கணக்குவழக்கில் ஒடிடோரியலில் மாட்டிக்கொள்ளமாட்டார்களா என்றால் , அதற்காகவே குறுகிய ஆண்டுக்குள் பல நிதி மேலாளர்களை (CFO) மாற்றியிருக்கின்றன இந்நிறுவனங்கள். தணிக்கை செய்வதற்கும் தகுதியில்லா நிறுவனங்களைப் பிடித்து யாரும் கேள்வி கேட்கமுடியாதபடி செய்திருக்கிறது. சிலவற்றில் சில தணிக்கையாளர்கள் கேள்வி கேட்டாலும் அதனால் எந்தப்பயனும் இருந்திருக்கவில்லை. யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதுமட்டுமன்றி எப்படிப் பணம் வந்தது என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. பலமுறை பல வழக்குகள், வரி ஏய்ப்பு , கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பதியப்பட்டாலும் அரசுகளும், நெறிப்படுத்தும் மையங்களும் கண்டுகொள்ளவில்லை. குற்றச்சாட்டுககும் விசாரணையும் ஓரளவுக்கு மேல் செல்லாமல் அவை தடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூரில் கேள்வி கேட்ட எல்லாரையும் பணம் கொடுத்து வாங்கியோ மிரட்டியோ சரிகட்டியிருக்கின்றனர். இப்போது வெளிநாட்டுக்காரன் கேட்கிறான் என்றவுடன் தப்பிப்பதற்காக அதானி குழுமம் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் தேசாபிமானம் . இந்தியர்களின்மீதும் இந்தியாமீதும் வன்மம் கொண்ட மேலைத்தேயர்களால் வீண் வதந்தியாக கட்டியெழுப்பப்பட்டதே இந்த அறிக்கை என அதானி ஆதரவாளர்களால் தொடர்ந்தும் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது .

கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் ஊழல்கள் மோசடிகள் போன்றவற்றை அம்பலப்படுத்தும் ஓர் நிறுவனமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஹின்டன்பேர்க் நிறுவனத்தின் பெயருக்கான பின்னணி என்ன தெரியுமா ?மனிதர்களால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பினை தடுப்பதற்கான ஓர் நிறுவனமாக தாம் இருக்கவேண்டும் எனும் அடிப்படையில் தாம் செயல்படுவதாகவும் அதனால்தான் , 1937 இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின்போது ஏற்பட்ட “ Hindenburg disaster “ என வரலாற்றில் குறிப்பிடப்படும் ஓர் பேரழிவு சம்பவத்தினை அடிப்படையாக கொண்டே தமது நிறுவனத்திற்கு அந்த பெயரை வைத்ததாக கூறுகின்றார் .

Hindenburg airship transship விண்கலத்தின் உரிமையாள நிறுவனமும் அதன் பணியாளர்களும் கவனயீனமாக நடந்துகொண்டதன் விளைவாக 36 மனிதர்களின் இறப்பு உற்பட அநேகமானோரின் உடல் காயங்களுக்கு அந்த விபத்து காரணமாகியது . ஆகவே இவ்வாறான ஒரு சில மனிதர்களின் கவனயீனத்தால் ஏற்படப்போகும் மிகப்பெரிய அழிவுகளிலிருந்து அநேகரை காப்பாற்ற வேண்டும் என்பதே எமது நிறுவனத்தின் நோக்கம் என்பதால் அந்த பேரழிவிற்கு காரணமான விண்கலத்தின் பெயரை தாம் தமது நிறுவனத்திற்கு வைத்திருப்பதாக நேத்தன் குறிப்பிட்டுள்ளார் .

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் (ஷார்ட் செல்லிங்) செயல்பாடுகளை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என்ற போதிலும் , இதுநாள் வரையில் ஹீண்டன்பர்க் நிறுவனம் மீதோ, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீதோ முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த கிரிமினல் குற்றங்களும் இல்லை என்பதே உண்மை. 2017ல் தொடங்கப்பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் இதுவரை 20க்கும் மேலான நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பாலிவுட் சினிமா நிறுவனம் ஒன்றும் மட்டுமே தம்மீதான அறிக்கை ஆதாரமற்றது என ஹிட்டன்பேர்க் மீது வழக்கு தொடர்ந்துள்ள என்பதும் அந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் நிலநடுக்க அபாயம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் (USGS) உறுதிசெய்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்களின் அதீத தாக்கத்தினால் குறித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தினுள் இடிந்துவீழ்ந்ததுடன் இந்த தொகுப்பினை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரையில் சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளதுடன் , ஏராளமானோர் இடிபாடடைந்த கட்டிடத் தொகுதியினுள் இன்னும் சிக்குண்டிருக்கலாம் என தேடுதல் பணிகள் மும்முரமாக்கப்பட்டுள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன் தாக்கம் மேற்கு ஆசியா வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் லெபனான், சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

துருக்கி சர்வேதேச உதவியினை நாடியிருக்கும் நிலையில் இதுவரை 45 நாடுகள் தேடல் மற்றும் மீட்புக் குழு  மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பொருட்கள் என உதவிக்கரங்களை நீட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உள்நாட்டு புரட்சிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அனடோலியன் தட்டில் அமைந்திருக்கின்றது இது யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.

உண்மையில் பூமியின் வெளிப்பரப்பு, மேலோடு டெக்டோனிக் தட்டுகளாக உள்ளது. தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன. டெக்டோனிக் தகடுகள் மெதுவான வேகத்தில் நகர்ந்து செல்கின்றபோது தட்டுகள் ஒன்றையொன்று மோதிச் செல்லும். அப்படி மோதிக் செல்லும்போது தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால் மற்ற தட்டு நகரும் போது அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்கின்றனவாம்.

அபோது தட்டு வேகமாக நகர்ந்து செல்லும் நிலை ஏற்படுகையில் நிலநடுக்கம் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர் கூறகின்றனர். இப்படியான மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றில் துருக்கி அமைந்திருப்பதுதான் கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் கோரமான நில நடுக்கத்திற்கு காரணமாகும்.

ஒரு பெரிய பூகம்பம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது . துருக்கியில் கடந்த 1939 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 33000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டது . இதற்கடுத்தபடியாக 1999 இல் 17000 உயிர்களை பலியெடுத்திருந்தது அங்கேற்பட்ட மற்றுமோர் பூகம்பம்.

பூமிக்கு அடியில் உள்ள பகுதி அசைவதால் நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வே பொதுவில் நில நடுக்கம் எனக்கருதப்படுகின்றது. நிலநடுக்கத்தை கணிக்க பூமிக்குள் இருந்து முன்னறிவிப்பு சமிக்ஞை வழங்கும்வகையில் ஓர் கருவி தேவைப்படுகின்றதென்றும் ஆனால் அத்தகைய கருவியானது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் இந்த விஞ்ஞான உலகில் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்றுதான் போலும்.

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது எப்படி?

பாகிஸ்தான்!

இந்த பெயரைக் கேட்டதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்ன? சிந்து நதியா? லாகூர் கோட்டையா? ஆசியாவின் சுவிற்சர்லாந் என வர்ணிக்கப்படும் அளவிற்கு அங்கிருக்கும் இயற்கை வளங்களா? அல்லது அந்நாட்டினது சுவையான உணவுவகைகளா? நிச்சயசமாக இவை எதுவுமே நம் நினைவில் வந்திருக்கப்போவதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்றுதான் அது தீவிரவாதம்!

ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஓர் மதத்தினை பின்பற்றும் நாடு பாகிஸ்தான் என்கிறபோதிலும் அது தீவிரவாதத்திற்கு உதவுவதனை நிறுத்தியாகவேண்டும் என்கிற சர்வதேச அழுத்தத்தினை அவ்வப்போது சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றது  பல சிறப்புக்களை கொண்ட நாடு என்கிறபோதிலும் தீவிரவாதத்திற்கு அடையாளம் என்கிற அளவிற்கு அந்நாடு மாறிப்போயுள்ளதன் பின்னணி என்ன? பாகிஸ்தானியர்கள் தீவிரவாதத்தினை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கின்றார்களா? நமக்கு பாகிஸ்தான் பற்றி சொல்லப்படும் அல்லது காட்டப்படும் தகவல்கள் மட்டும்தான் பாகிஸ்தானா? அவை முற்றிலும் உண்மையா? அந்நாட்டினைப்பற்றியும்  அதன் வரலாற்றினைப்பற்றியும் புரிந்துகொள்ள இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை ஏற்படுத்தி அவற்றுக்கான பதில்களை தேடுவது அவசியமாகின்றது.

அந்தவகையில் தற்போதுள்ள முக்கியமான கேள்வி தீவிரவாதத்தின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது எப்படி என்பதுதான்! அபோதாபாத் (abbottabad) பாகிஸ்தானில் உள்ள பெரிய நகரங்களில் ஓன்று. 2011வரை உலகில் உள்ள பலருக்கு அப்படியொரு நகரம் இருப்பது பற்றியே தெரிந்திருக்கவில்லை. அந்த ஆண்டு மே 02ஆம் திகதி உலக நாடுகளின் தலைப்புச் செய்தியாக மாறியது அந்நகரம். ஆம் அங்குதான் அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒசாமா கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் பின்னாளில் பேட்டிகள் கொடுத்தபோது அவர்கள் அனைவரும் ஒருமித்துக்கூறியது பின் லேடனை கொல்லும் திட்டம் பற்றி பாகிஸ்தான் அரசிடமோ பாகிஸ்தான் ராணுவத்தினரிடமோ முன்னரே தெரிவித்திருக்கவில்லை என்பதே.

ஒரு நாட்டுக்குள், மற்றொரு நாட்டின் படை புகுந்து தீவிரவாதியை பிடிக்க திட்டமிட்டு அது அந்நாட்டுக்கு தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டது. அதற்கு காரணம் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்த சிலருக்கு ஒசாமா தலைமறைவாகி இருந்த இடம் தெரிந்தேயிருந்தது என அமெரிக்கா உறுதியாக இருந்தமையே. ஒசாமா தங்கியிருந்த கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவர் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் பகுதி. அந்தப் பகுதியில் பறவைகள் பறந்தால்கூட அது நிச்சயம் ராணுவத்தின் கவனத்திற்கு சென்றுவிடும் அப்படியிருக்க உலகை அச்சுறுத்திய ஓர் தீவிரவாதி தனது மனைவிகள் குழந்தைகளுடன் பாதுகாப்பாக பதுங்கியிருக்கும்வகையில் ஒரு வீடு இருப்பது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தெரிந்திருக்காமலா இருக்கும் என்பது அமெரிக்காவின் ஆதங்கம்.

ஒசாமா கொல்லப்படுவதற்கு முன்பே அவர் பாகிஸ்தானில் தலைமறைவாகியிருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும் பின்லேடனை தேடும் அமெரிக்காவின் திட்டம் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிந்தன . ஏனெனில்  ஒவ்வொருமுறையும் அமெரிக்கா பாகிஸ்தான் அரசிடம் தகவல் அளித்துவிட்டே லேடனை தேடும் பணியில் ஈடுபட்டது அந்த தகவல்கள் எப்படியோ பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள சிலரால் லேடனின் காதுகளுக்குள் கசிந்துகொண்டேயிருந்தது. ஏற்கனவே பல தீவிரவாதிகளுக்கு பாக் தஞ்சமளித்திருப்பதாக இருந்த குற்றச்சாட்டு  லேடனின் வேட்டைக்குப்பின் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டன அதுமட்டுமன்றி பின்லேடனை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவிற்கு பெரிதும் உதவியவர் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஷாகில் அப்ரிடி (shaakil afridi).

ஆனால் இன்று அவர் பாகிஸ்தான் சிறையில் இருக்க அவரது குடும்பம் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட இருபதாம் நாள் மருத்துவர் ஷாகில் அப்ரிடி “Lashkar -e- islam ” என்கிற தீவிரவாத இயக்கத்திற்கு உதவியதாகவும், காயமடைந்த தீவிரவாதிகளுக்கு அவர் சிகிச்சை அளிப்பதாகவும் அரச மருத்துவமனையில் அந்த இயக்கத்தினர் தமது கூட்டங்களை நடத்த இடமளித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். (ஆனால் உண்மையான காரணம் அவர் ஒசாமா இருந்த இடத்தினை காட்டிக்கொடுத்து தேசத்துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணமே)

எந்தவித ஆதாரமுமின்றி அக்குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாகிலுக்கு முப்பத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு  பின்னர் அது இருபத்தைந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அப்ரிடி மட்டுமன்றி ஒசாமா கொல்லப்பட்டதன்பின் வேறுபலர்மீதும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கையெடுத்தது . அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஏதோ ஒருவகையில் உதவியவர்கள். வேறுவேறு வழக்குகளின் பேரில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். உலகை அச்சுறுத்திய ஓர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரை பாகிஸ்தான் ஏன் இவ்வளவு சிரத்தையுடன் பாதுகாக்க நினைத்தது? எனினும்  இதில் பாகிஸ்தான் அரசின் நேரடி ஆதரவு இருக்கிறதா என்பது குறித்து இன்றளவிலும் சரியான விடை கிடைக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

ஆனால் பாகிஸ்தான் அரசின் அதிகாரிகள், ராணுவத்தில் இருப்பவர்கள், உளவுத்துறையான ISI அதிகாரிகள் போன்றோர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பது வெளிப்படையான ஓன்று. அதற்கு காரணம் என்ன? பாகிஸ்தானின் அதிகமான மக்கள் தொகை வேலையில்லாத் திண்டாட்டம், வருமான ஏற்றத்தாழ்வுகள், மற்றும் இன/சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள், பணவீக்கம், அரசியல் இஸ்திரமின்மை மற்றும் சட்ட ஒழுங்குகள், நீதித்துறையின் அசிரத்தை என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே சென்றாலும், இதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பாகிஸ்தான் உருவான வரலாறு பற்றி நாம் சற்று அறிந்துகொள்ள வேண்டும்.

1947 ஆகஸ்ட் 14 இந்தியாவிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர தனி நாடாகியது பாகிஸ்தான் முகம்மது அலி ஜின்னா தலைமையில் . ஜனநாயகவாதியான ஜின்னா மதம், உற்பட வேறு எந்தவித வேறுபாடுமின்றி பாகிஸ்தான் உருவாக வேண்டும் என நினைத்தார். ஆனால்  சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே பலுகிஸ்தான்மீது படையெடுத்தது பாகிஸ்தான். தங்கம்,கனிமம் என இயற்கை வளங்கள் நிறைந்திருந்த அந்த பகுதியை தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றது பாக். அந்த பகுதியை ஆக்ரமிப்பதற்கு ஜின்னா கட்டாயத்தின்பேரில் ஒப்புக்கொண்டார். மேலும் வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தபோதிலும் தொடர்ந்தும் வறுமையின் கோரப்பிடியில் இருந்த சிந்து பகுதியிலிருந்தும் சுதந்திர சிந்து போராட்டங்கள் தொடர்ந்தன . இப்படி உள்நாட்டில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கினர்.

அதுமட்டுமன்றி பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு மேலும் முக்கிய காரணம்அமெரிக்கா . பிரிட்டனின் காலணி ஆதிக்கம் முடிந்த சில ஆண்டுகளிலேயே அங்கு அமெரிக்க காலணிய ஆட்சி ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில் வணிக ரீதியில் அமெரிக்கா பாகிஸ்தானின் மீது தனது ஆதிக்கத்தை மெல்லமெல்ல கட்டவிழ்க்கத்தொடங்கியிருந்தது. இது குறுகியகாலத்திற்கு பாகிஸ்தானியர்களுக்கு நன்மையளிப்பது போல இருந்திருந்தாலும் நீண்டகாலநோக்கில் பாகிஸ்தானில் மிகப்பெரிய பாதிப்பை உள்நாட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும் . போதாக்குறைக்கு இந்தியாவின் அனுசரணையுடன் 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறி தனிநாடாகியது.

இந்த குளறுபடிகளால் எழுபதுகளின் மத்தியில் பாகிஸ்தான் பெரும் பொருளாதார சரிவை எதிர்கொள்ளவே நிதியுதவி வழங்கும் சாக்கில் மேலும் தன் ஆதிக்கத்தினை நிலைநாட்டியது அமெரிக்கா. உதவி செய்து அமெரிக்கா செய்த காரியங்கள் மிகவும் தந்திரமானவை. பாக்கித்தானில் உள்ள அடிப்படைவாதிகளை திரட்டி சோவியத் யூனியனுக்கு எதிரான குழுக்களை உருவாக்கியது அமெரிக்கா. அமெரிக்காவின் CIA பாகிஸ்தானை ஜிகாதிகளை உருவாக்கும் பண்ணையாகத்தான் பார்த்தது என்றாலும் தகும்.

1978ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் பாக்கிற்கு மோதல் ஏற்பட சோவியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடதுசாரி அரசுக்கும் , அமெரிக்க உதவிபெற்ற முஜாஹிதீன் என்கிற கிளர்ச்சியாளர் குழுவுக்குமிடையே மோதல் வெடித்தது. உண்மையில் அது ரஷ்ய அமெரிக்க போர். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் நடந்த இப்போரில் சுமார் பதினைந்து இலட்சம்பேர் உயிரிழக்க  பலர் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிராக போராடிய பல வீரர்கள் பின்னாளில் தத்தமது தாயகம் திரும்பியதும் அடிப்படைவாதிகளாக மாறினர். அவர்களால் உருவாக்கப்பட்ட அடிப்படைவாத குழுக்கள் காலப்போக்கில் தீவிரவாத குழுக்களாக உருப்பெற்றன. மேலும் ஆப்கானிஸ்தானிலேயே தங்கிவிட்ட வீரர்களை ஒன்றிணைத்து ” அல்கொய்தா ” எனும் இயக்கத்தினை உருவாக்கினார் ஒசாமா பின்லாடன்.

பாகிஸ்தானின் அடுத்த ஆயுதம் காஷ்மீர் . 1987ஆம் ஆண்டு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றது . இதனால் பாகிஸ்தானின் அடிப்படைவாதிகள் ஆத்திரமடைந்தனர் . அதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டு அரசு அவர்களை சுசுதந்திரப்போராட்ட வீரர்களாக சித்தரித்தது . காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான தாக்குதல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தினர் . இதனால் காஷ்மீர் பண்டிதர்கள் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் டெல்லி, ஜம்புகாஷ்மீர் பகுதிகளுக்கு இடம்பெயரவே இதன்தொடர்ச்சியாக ஜிகாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது. அவர்களுக்கு CIA மற்றும் பாகிஸ்தானின் உளவுத்துறையான ISAயிடமிருந்து நிதி மற்றும் ஆலோசனைகள் என உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்த நிதியுதவிகள் மூலமாக அமெரிக்காவும் பாகிஸ்தானை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது.

பாகிஸ்தானும் கிடைத்த நிதிகளையெல்லாம் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தாது  நாடு முழுவதிலும் ராணுவ தளங்களை அமைப்பதிலும் ஆயுதங்களை வாங்குவதிலும் செலவிட்டது. நாட்டின் வளர்ச்சியைவிட ராணுவத்தில் பெருமளவில் நிதியை பாகிஸ்தான் செலவிட காரணம் அந்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் என்றால் அது மிகையில்லை. நவாப் ஷெரீப்பின் ஆட்சியின்போது மூண்ட கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வியுறவே  ராணுவ கிளர்ச்சியின்மூலம் நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவந்தார் பர்வேஷ் முஷாரப்.

முஷாரப்பின் ஆட்சியின்போதுதான் அமெரிக்காவில் இரட்டைக்கோபுர தாக்குதல் இடம்பெற்றது. அல்கொய்தா தீவிரவாதிகளினால் அத்தாக்குதல் நடத்தப்படவே , அவ்வியக்கத்தினை தடைசெய்து நாட்டைவிட்டு அப்புறப்படுத்த தலீபான் அரசினைக்கோரியது அமெரிக்கா. இதற்கு தலீபான் சம்மதிக்காததால், தலீபான் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பின்னர் தீவிரவாதத்திற்கு எதிரான போரின்படி அமெரிக்கா வலியுறுத்திய அனைத்துக்கும் தலையசைத்து பாகிஸ்தான்.

எனினும் ஒசாமா உள்நாட்டில் பதுங்கியிருந்து குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாத அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்கிவந்த உதவிகள் அனைத்தையும் படிப்படியாக குறைத்துக்கொள்ள தொடங்கியது .அதன் விளைவாக தற்போது சீனாவின் செல்லப்பிள்ளையாக பாகிஸ்தான் இயங்கிவருகிறது . சீனா கொடுத்து ஆதரவில்தான்  ஒசாமாவின் மரணத்தை வீர மரணம் என குறிப்பிட்டார் இம்ரான்கான். பிரிட்டனின் கையிலிருந்து அமெரிக்கா, அமெரிக்காவின் கையிலிருந்து சீனா என அடுத்தடுத்து மற்றொரு நாட்டினை நம்பியே இருக்கும் நிலையில்தான் பாகிஸ்தான் இருக்கின்றது என்பதே யதார்த்தம்.

ஒருவிதத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரமும் சட்ட ஒழுங்கும் இறங்குமுகத்தில் இருக்க , ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன்கள், அல்கொய்தா, Lashkar-taiba, Lashkar-omar, jaish-e-Mohammed, sipah-e-sahaba, jais ul-adl, al base mujaahideen , harkat up mujaahideen , isis – kp போன்ற தீவிரவாதிகளின் கட்டுக்குள் சிக்குண்டது பாகிஸ்தான் குறிப்பாக 2008 இல் மும்பைத்தாக்குதலின் மூளையாக செயல்பட்டு சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாவுத் இப்ராஹிம் இன்றுவரையில் அடைக்கலமாக கொண்டிருப்பது பாகிஸ்தானையே. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கட் வீரரான ஜாவித் அலியின் மகனை தாவூத்தின் மகள் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு சுதந்திரமானவராகவே தாவுத் பாகிஸ்தானில் உலவுகின்றார். ஏனெனில் தாவூத் மூலமாக பல உதவிகள் கிடைப்பதால்  பாகிஸ்தான் அவருக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் Lashkar-e-taiba இயக்கத்தினை நிறுவிய தேசிமுmuhammad Saeed , jaish-e-Mohammed இயக்கத்தினை தலைவர் Masood ashar போன்றோரும் பாகிஸ்தானிலேயே வாழ்ந்துவருகின்றனர் என்பதனையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும் . இவர்களுக்கெல்லாம் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது எனக்கூறுவதைவிட , அவர்கள் பாகிஸ்தானை தமது இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளனர் எனக்கூறுவதே சாலப்பொருந்தும். ஏனெனில் பாகிஸ்தானின் நிலை தற்போது அதுதான். பாக்கிஸ்தான் மட்டுமல்ல சர்வதேச அளவில் பல நாடுகள் தீவிரவாதத்திற்கு பல வழிகளிலும் உதவியே வருகின்றன. ஆனால் பாகிஸ்தானை போல வேறெந்த நாடும் தீவிரவாதிகளுக்கான ஆதரவினையோ, பாதுகாப்பினையோ வெளிப்படையாக வழங்கவில்லை.

இப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவுவதனை சர்வதேச தீவிரவாதத்தினை கண்காணிக்கும் அமைப்பு வெளிப்படையாக அறிவிக்குமேயானால் உலக வங்கி உள்ளிட்டவையிடமிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் . இதனால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும். பாகிஸ்தானின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் அந்நாட்டின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்பது இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது . ஆட்சியில் இருப்பவர்களா? ராணுவமா? அந்நாட்டுக்கு உதவும் மற்றைய நாடுகளோ? அல்லது அங்கே பதுங்கியிருக்கும் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களா?

பாகிஸ்தான் உருவானதிலிருந்தே அங்கு அரசியல் அசாதாரண சூழல் என்பது நிலையானவொன்றாகவே இருந்துவருகின்றது. ஜின்னாவுக்கு பின்னே அங்கு உறுதியான தலைவர்கள் உருவாகவேயில்லை என்பாத்துதான் யதார்த்தம் . அடுத்தடுத்து தீவிரக்கொள்கைகளை கொண்டவர்களை கடந்துவந்துகொண்டிருக்கும் ஓர் நாடுதான் அது. அதனால்தானோ என்னவோ கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளகூட பிறநாட்டு வீரர்கள் ஒப்புக்கொள்ளாத ஓர் நிலையில் பாகிஸ்தான் இன்றுள்ளது. பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு அந்நாடு கொடுத்துவரும் ஆதரவின் பலனாக  அந்த அமைப்புகள் நடாத்தும் தாக்குதல்களினாலும் , அந்த அமைப்புகளின்மீது மற்றைய நாடுகள் நிகழ்த்தும் தாக்குதல்களினாலும் பாகிஸ்தான் குடிமக்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அந்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாவது பாகிஸ்தான் புதிய பயணத்தினை தொடங்க வேண்டும் . அண்டை நாடுகளுடனான நட்புறவு , கல்வி ,பொருளாதாரம் என அடுத்த கட்டத்தினை நோக்கி அது தன் நீண்ட நெடிய பயணத்தினை ஆரம்பிக்கவேண்டும் என பல நாடுகள் எதிர்பார்க்கின்றன. இந்த எதிர்பார்ப்புகள் பாகிஸ்தானில் சாத்தியப்படுமா? ஆமை புகுந்த வீடும் சீனா நுழைந்த நாடும் உறுப்பட்டதாக சரித்திரம் இருக்கிறதா என்ன? இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தானின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிப்போயுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் பாகிஸ்தான் தலை தூக்குமா என்று

பெண்களுக்கான விருத்தசேதன கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம்!

பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM) பெண் விருத்தசேதனம் (Female Circumcision) எனும் மூவாயிரம் ஆண்டுகால பழமையான சம்பிரதாயங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணமும், இதுவும் ஒருவகையான மனித உரிமை மீறல் என்பதனை உலகிற்கு உணர்த்தவும் டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை உருவாக்கிய தீர்மானத்தின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 06 திகதியன்று பெண் பிறப்புறுப்பு சிதைவானது முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனும் தொனியில் அனுசரிக்கப்பட்டது வருகின்றது.

மதம் மற்றும் சமூகம் சார்ந்த மூடநம்பிக்கைகளே இந்த குரூரத்திற்கு காரணமாக கருதப்படுகின்றது. பெண் பிறப்பு உறுப்பானது சிதைப்பு செய்யப்படும் சமூகத்தில் அந்த பழக்கத்திற்கு உள்ளாகாத பெண்கள் தூய்மையற்றவர்களாக கருதப்படுவதோடு பெண் உறுப்பு சிதைக்கப்படுவதானது அவர்களை திருமணத்திற்கு முந்திய உறவினை நாடாமல் தடுக்க உதவும் எனவும், ஆண்களின் பாலியல் இன்பத்திற்கு அதிகப்படியான இடமளிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

ஆபிரிக்க பழங்காலத்து புராணமொன்றின்படி வெட்டப்படாத கிளிட்டோரிஸ் காலவோட்டத்தில் ஆண்குறி அளவுக்கு வளரும் என குறிப்பிடப்பட்டுள்ளதாம் . இதுவும்கூட இம்மாதிரியான விருத்தசேனத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது . உலகில் ஆப்பிரிக்க நாடுகளிலேயே 93 விழுக்காடு பெண்களுக்கு இவ்வாறு பிறப்பு உறுப்புச் சிதைக்கப்படுகின்றது . மேலும் ஆசியா, மத்திய கிழக்கின் சில நாடுகள் போன்றவற்றில் சம்பிரதாயபூர்வமாக கடைபிடிக்கப்படும் இந்த பெண் விருத்தசேனமானது , ஐரோப்பா, வட மற்றும் தெற்கு அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிற்கு குடியேறிய சில சமூகங்களால் அந்தந்த நாட்டு சட்டங்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது வேதனைக்குரிய ஓன்று.

சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் அல்லது சிறுநீர் துவாரம் தவிர்த்து மற்றைய பகுதி தைக்கப்படும் (திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் இந்த தையல் மீண்டும் பிரித்துவிடப்படும் ) இந்த சடங்கானது ‘காஃப்டா’ என பொதுவாக அழைக்கப்படுகிறது.

இலங்கையில் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மத்தியில் பெண் குழந்தைகளுக்கான ‘கத்னா’ எனப்படும் “கிளிட்டோரிஸ்’ துண்டிப்பு சடங்கானது குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் செய்யப்படுகின்றது . கூறிய கத்தி அல்லது பிளேடினால் குழந்தைக்கான இந்த குரூரத்தை மதத்தின் பெயரால் செய்யும் பெண்கள் “ஒஸ்தா மாமி” அல்லது “ஒய்த்தா மாமி” என்றும் அழைக்கப்படுகின்றனர் . இவர்கள் சந்ததி வழியாக இதனையோர் தொழிலாகவே செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கமானது சுமார் 200 வருடங்களாக இலங்கையில் இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் இருந்துவருவதாக ‘கிளிட்டோரிஸ்’ நீக்கம் குறித்து 1996 இல் SRI LANKA CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் ரேணுகா சேனாநாயக்க பதிவு செய்துள்ளார். அரேபிய வர்த்தகர்கள், மனைவியர்களாக அழைத்துக் கொண்டுவந்த மலேசியப் பெண்களால் ‘கிளிட்டோரிஸ்’ நீக்கம் இலங்கை இஸ்லாமியர்களின் பண்பாட்டில் இடம்பிடித்திருக்கலாம் என்றும் ரேணுகா சேனநாயக்க தனது ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . இந்தியாவைப் பொறுத்தவரையில் தாவூதி போஹ்ரா சமூகதில் இவ்வாறான பெண் உறுப்பு விருத்த சேனம் இடம்பெற்றுவருவதும் அதற்க்குஎதிராக வழக்குகள் தொடரப்படுவதும் நாம் அறிந்தவொன்று.

சரி , இவ்வாறு பெண் உறுப்பு சிதைவினால் மருத்துவ ரீதியில் ஏதேனும் நன்மை உண்டா என ஆராய்ந்தால் , அப்படி எதுவுமேயில்லை என்பதும் மாறாக குறித்த பெண்களுக்கு கடுமையான வலி, அபரிமிதமான இரத்தப்போக்கு, பல பெண்களுக்கு ஒரு வெட்டும் கருவியைப் பயன்படுத்துவதால் எச்.ஐ.வி தொற்று , வீக்கம், காய்ச்சல், சிறுநீர் பிரசனைகள்,மாதவிடாய் பிரச்சினைகள், அதிர்ச்சியினால் ஏற்படும் மனப்பிறழ்வு , இறப்பு , போன்ற ஏகப்பட்ட சிக்கல்களை குறித்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலக உகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி பதினான்கு கோடி சிறுவர் மற்றும் பெண்கள் ஏதோவொரு வகையில் பெண் உறுப்பு சிதைக்கப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்றும் , ஒவ்வொரு ஆண்டும் முப்பது இலட்சம் சிறுமியர் பிறப்புறுப்பு சிதைவுக்குள்ளாகும் ஆபத்தில் உள்ளனர் என்றும் கூறுகின்றது . இவ்வழக்கமானது தொடர்ந்தால் 2030 ற்குள் 8.6 கோடி சிறுமிகள் இந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதனால் இந்த மனித உரிமை மீறலானது அவசியமாக அவசரமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

index.php