Blog Page 10

Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!

ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா நிச்சயம் அது லேடி சூப்பர் ஸ்டாரா தான் இருக்க முடியும். இன்னைக்கு கோடிகணக்கான சம்பளம் வாங்கி இந்தியாவோட டொப் 100 பிரபலங்கள் பட்டியல தமிழ் நடிகை என்கிற அடையாளத்தோட முக்கியமான தென்னிந்திய நடிகையா வலம் வந்துட்டு இருக்காங்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி இந்தியா கர்நாடகா மாநிலத்தில லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தாங்க. அவங்களோட நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். தன்னோட கல்லூரிக் காலத்திலேயே மொடலிங் செய்வதுல ரொம்பவே ஆர்வம் காட்டினாங்க.

மாடலிங் துறையை பகுதி நேரமா செய்ததனால அவருக்கு முதன் முதல்ல மலையாள திரைப்படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ‘மனஸ்ஸினைக்கற’ திரைப்படத்தில கதாநாயகியாக அறிமுகமாகி திரையுலகத்துல நடிகையாக அறிமுகமாகினபோ அவங்களுக்கு 18 வயது. அதனைத் தொடர்ந்து 2005 இல் இயக்குனர் ஹரி இயக்கிய ‘ஐயா’ திரைப்படத்துல முக்கிய கதாநாயகியாக நடிச்சதால தமிழ் திரையுலகத்துல கதாநாயகியாக அறிமுகமாகினாங்க. இதன் மூலமா சிறந்த அறிமுக நடிகை அப்படினு ஒரு புகழும் அவருக்கு கிடைச்சது. ஐயா திரைப்படத்துல லேடி சூப்பர் ஸ்டாரின் யதார்த்தமான நடிப்பு அவர ‘துர்கா’ கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வச்சது. பி.வாசுவின் இயக்கத்தில் வெளியாகிய ‘சந்திரமுகி’ திரைப்படத்துல அவருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

அதுக்கு அப்பறமா ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ திரைப்படத்துல இரண்டாவது கதாநாயகியாக நடிச்சாங்க. அதுக்கு அப்பறமா நயன்தாரா தமிழில நிறைய படங்கள நடிக்க ஆரம்பிச்சாங்க.தளபதி நடிச்ச சிவகாசி திரைப்படத்துல ‘கோடாம்பக்கம் ஏரியா’ என்கிற பாட்டுக்கு மட்டும் நடனமாடுவாங்க நயன்தாரா.

2006 ஆம் ஆண்டு ‘கள்வனின் காதலி’ திரைப்படத்த நடிச்சதோடு அதே ஆண்டு ‘வல்லவன்’, ‘ஈ’, ‘தலைமகன்’ போன்ற படங்களிலையும் நடிச்சாங்க. வல்லவன், ஈ போன்ற திரைப்படங்களில நயன்தாராவுக்கு நல்ல கமென்ட்ஸ் வந்திருந்தாலும் தலைமகன் படத்துல அவருக்கு அந்தளவு வரவேற்பு கிடைக்கல.
வல்லவன் திரைப்படத்துல சின்ன ஸ்டார் சிம்புவோட நடிச்ச காட்சிகள தவிர ஏனைய நேரங்களில இருவரும் நெருக்கமா இருக்குற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைய கிளப்பிச்சு. நயன்தாரா சிம்புவோட காதல் அப்போ ரொம்பவே பிரபலமாக பேசப்பட்டிச்சு.

இதற்கிடையில 2007 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளோக்பஸ்டர் ஹிட் ஆன நம்ம தலயோட ‘பில்லா’ திரைப்படத்துல முக்கியமான கதாநாயகியாக நடிச்சிருந்தாங்க.’ஷாஷா’ அப்படிங்குற பெயரில அந்த கதாபாத்திரத்தில நயன்தாரா கவர்ச்சியாகவும் ரொம்பவே போல்ட் ஆன ஆளாகவும் தன்னை காட்டிக்கொண்டாங்க. இங்க இருந்து தான் அவங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக ஆரம்பிச்சாங்க. இந்த ஒரு கதாபாத்திரம் அவங்களுக்கு நல்ல வரவேற்ப பெற்றுத்தந்திச்சு. அதுக்கு அப்பறமா ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்துல நடிச்சாங்க. இதன் மூலமா அனைவராலும் விரும்பப்பட்ட நடிகை என்கிற விஜய் விருது அவங்களுக்கு கிடைச்சது.

அதுக்கு அப்பறமா சத்யம்,குசேலன், ஏகன் போன்ற திரைப்படங்கள நடிச்சு ஒரே ஆண்டில வெளியாகிச்சு. 2009 ஆம் ஆண்டு ‘ஆதவன்’ , ‘வில்லு’ போன்ற படங்களில நடிச்சு தன்னோட தனித்துவமான நடிப்பின் மூலமா தமிழ் திரையுலகத்துல தனக்கென ஒரு இடத்த பிடிச்சு வச்சிட்டாங்க. 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மலையாளம்,கன்னடா,தமிழ் ஆகிய மொழிகளில முதன்மையான கதாநாயகியாக நடிச்சதோட அந்த ஆண்டு அந்த திரைப்படங்கள் ப்ளோக்பஸ்டர் ஹிட் அடிச்சது நயன்தாராவுக்கு மேலும் வெற்றிய பெற்றுத் தந்திச்சு.

அதுக்கு அப்பறமா அவங்க சீதாவாக தெலுங்குள நடிச்ச ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ திரைப்படம் தமிழிலையும் நல்ல வரவேற்ப பெற்றிச்சு. அதுவரைக்கும் கிறிஸ்தவ மதத்த பின்பற்றின லேடி சூப்பர் ஸ்டார் தன்னோட பெயர நயன்தாரானு அதிகாரப் பூர்வமா பதிவு பண்ணி ஒரு இந்துமதத்திற்கு மாறினாங்க. நயன்தாரா நடனப்புயல் பிரபு தேவா மேல கொண்ட காதலினாலேயே மதம் மாறினாங்க அப்படினு மீடியாவுல ஒரு பக்கம் செய்தி கிளம்ப ஆரம்பிச்சது. ஒரு சில சர்ச்சைகளிலையும், பிரச்சினைகளிலையும் மாட்டிக்கொண்டதால 11 மாதங்கள் நயன்தாரா எந்தத் திரைப்படத்திலையுமே நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தன்னோட காதல் வாழ்க்கை முறிஞ்சு போனதால இப்படி இருக்காங்கனு நிறைய பேர் விமர்சிக்க ஆரம்பிச்சாங்க.

இருந்தாலும் அதுக்கு அப்பறமா தமிழ் திரையுலகத்துல ‘ராஜா ராணி’ திரைப்படத்துல ரஜினா என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிச்சு மீண்டும் தன்னோட தமிழ் திரைபட வாழ்க்கையை தொடர்ந்தாங்க. அதே 2013 ஆம் ஆண்டு தலயோட ஆரம்பம் திரைப்படத்துல தன்னோட மாஸ் என்ட் க்ளாஸ் நடிப்போட ரசிகர்களுக்கு பேரின்பம் கொடுத்தாங்க நயன்தாரா. கதாநாயகிய முதன்மையா வைத்து எடுக்கப்பட்ட ‘அனாமிகா’ என்கிற தெலுங்கு திரைப்படத்துல கதாநாயகிய நடிச்சு தன்னோட தனித்துவமான நடிப்புத் திறன எல்லாருக்குமே காட்டினாங்க.

இந்த திரைப்படம் தான் இதுக்கு பின்னாடி அவங்க கதாநாயகிய மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்களுக்கு கதாநாயகியாக நடிக்க அடித்தளமிட்டதுனு கூட சொல்லலாம். அதுக்கு அப்பறமா தமிழில ‘மாயா’ என்கிற திரைப்படத்துல கதாநாயகியாக நடிச்சாங்க. 2015 ஆம் ஆண்டு ‘பாஸ்கர் த ராஸ்கல்’ தெலுங்கு திரைப்படத்துலையும் ‘தனி ஒருவன் நான்’ திரைப்படத்துலையும் கதாநாயகியாக நடிச்சாங்க. அதே ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்துலையும் நடிச்சாங்க.

2016 ஆம் ஆண்டு புதிய நியமம், திருநாள், இருமுகன், காஷ்மோரா போன்ற திரைப்படங்களையும், 2017 ஆம் ஆண்டு டோரா, அறம் போன்ற திரைப்படங்களையும் நடிச்சிருக்காங்க.அதுக்கு அப்பறமா ஜெய் சிம்ஹா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், பிகில், மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், தர்பார், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, நெற்றிக்கண், ஓ 2, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில நடிச்சு இருக்காங்க.

தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடானு பல மொழிகளில கிட்டதட்ட 75 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில நடிச்சு இருக்காங்க. அதுமட்டுமல்லாம மம்முட்டி, நாகர்ஜூன், ஜெயராம், ரஜினி காந்த், அஜித், விஜய், சரத்குமார், விக்ரம், விஜய் சேதுபதி, ராணா, ஜெயம்ரவி, சூர்யா, எஸ்.ஜே.சூர்யா, தனுஷ், ஜீவா, சிம்புனு எல்லாம் பெரிய நடிகர்கள் கூடவும் நயன்தாரா நடிச்சு இருக்காங்க. ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி இருக்காங்க. பல முக்கியமான கதாபாத்திரங்களினாலையும், ப்ளோக் பஸ்டர் திரைப்படங்களில நடிச்சதாலையும் தமிழ் திரையுலகம் அவங்களுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தினாங்க. தமிழ் திரையுலகத்தில அதிக சம்பளம் வாங்குற முக்கிய நடிகையாக திகழ்றாங்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

‘நானும் ரவுடி தான்’ திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன 5 வருடமா காதலிச்சு 2022 ஜூன் 09ல் திருமணமும் செய்தாங்க. இப்போ இரண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் தந்தையாகி இருக்காங்க நயன் மற்றும் விக்னேஷ் சிவன். நயன்தாரா மிகப்பெரிய நடிகையா வளர்ந்து இருந்தாலுமே ஏகப்பட்ட சர்ச்சைகளில சிக்கி இருக்காங்க. அவரோட முதல் காதலர் சிம்புவோட முத்தக்காட்சி புகைப்படமா வைரல் ஆக ஆரம்பிச்சது. இந்த காதல் முறியவே நயன்தாரா பிரபு தேவாவ காதலிச்சாங்க. அவரோட பெயர பச்சை குத்தியிருந்தாங்க. ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலிக்கும் நயன்தாரா அப்படினு அவர ரொம்பவே தப்பா விமர்சிக்க ஆரம்பிச்சாங்க.

இதுக்கு அப்பறமா இந்த காதலும் ப்ரேக்கப் தான். இது மாதிரியான காதல் சர்ச்சைகளில சிக்கியிருந்தாலும் நயன்தாராவின் நடிப்பு கொஞ்சம் கூட யாருக்கும் அசந்துகொடுக்கல. ஏகப்பட்ட விருதுகள வாங்கியிருக்காங்க. அதுவும் சிறந்த நடிகை என்ற விருதுகள் தான் ரொம்பவே அதிகம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவங்களுடைய இந்தப் பயணத்துல எத்தனையோ கஷ்டங்களையும் கவலைகளையும் கடந்து இன்னைக்கு தென்னிந்தியாவோட மிகப்பெரிய நடிகையா வளர்ந்துருக்காங்க. அதுமட்டுமல்லாம 5 வருடமா காதலிச்ச விக்னேஷ் சிவனயே கடைசியில கரம் பற்றினாங்க. தமிழ் திரையுலகத்துல யாருமே நடத்தாத மாதிரி மிகப் பிரம்மாண்டமானளவு தன்னோட திருமணத்த பார்த்து பார்த்து செய்து இருக்காங்க. இவங்களோட திருமணத்த நெட்ஃப்லிக்ஷ் நிறுவனம் வாங்கியிருக்குறதால திருமண செலவே இல்லாம செலவு செய்திருக்காங்க. ஒரு பெண்ணா இந்தளவு மவுஸ் ஓட ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நடிகையாக இருக்க நயன்தாரா உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார் தான்.!

கார்ப்பரேட் சாமியார்கள்!

“வசூல்ராஜா MBBS ” திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஒரு வசனம் வரும் “கடவுள் இல்லை என்று சொல்றவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான் தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவனை நம்பவே கூடாது”! உண்மைதான் இப்போதெல்லாம் நம் சாமியார்கள் திக்குத் தெரியாக் காடுகளில் கண்காணாதவோர் மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்த்தலம் குகைப் பொந்துகளுமில்லை, மலை உச்சிகளுமில்லை ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள் அவர்களைத் தேடிப்போக நாம் விரும்பாவிட்டாலும் அவர்கள் நம்மைத் தேடி வருகிறார்கள்!

ஆம் ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததேயில்லை. உலகமயமாக்கப்பட்ட வணிகச் சந்தையில் இந்தக் கில்லாடிச் சாமியார்கள் “ஆன்மீகம்” என்றவோர் வளமான சந்தையை கண்டுகொண்டார்கள் என்றால் மிகையில்லை. அதுமட்டுமா? இன்றெல்லாம் அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் அப்படியொரு நெருக்கம். உலகமயமாதலின் உப விளைவுகளில் ஒன்றே இன்றைய ஹைடெக் சாமியார்கள். இவர்களது மடங்கள் மர்மங்கள் நிறைந்த “டிராகியுலா குகை” என்றாகிவிட்டது. பல்வேறு காப்ரேட் சாமியார்களின் அரண்மைகளில் கொலைகள் தொடங்கி பலதரப்பட்ட வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன.

உலக மயமாதலுக்கு முன்பிருந்த குறிசொல்லும் சாமியார்கள் அல்லர் இவர்கள் கிளியும் கையுமாக திரிந்த கிளிச் சாமியார்களோ, நெற்றியில் பட்டையும் கையில் சுவடியுமாக அமர்ந்திருந்த சோதிடச் சாமியார்களோ அல்லர். புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு மாடமாளிகைகளைப்போல ஆஷ்ரமங்களை அமைத்துக்கொண்டு, சீடர்களையும் அரசியல் பெரும் புள்ளிகளையும் தமக்கான அரண்களாகக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பறந்தோடி கோடிகளில் விளையாடுகின்ற நவீன “காப்ரேட் சாமியார்கள் “

ஆம்! கார்ப்பரேட் என்பது “corporate” எனும் ஆங்கிலச் சொல், ஒரு நிறுவனத்தின் உச்சமட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களை கார்ப்பரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றித்தான் இருக்கும். அவர்களை மிஞ்சி எதுவும் நடக்கவியலாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவுமில்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப்போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான் corporate அல்லது corporate leaders என்கிறோம்.

மேற்கூறிய விடயங்களை இன்றைய நவீன சாமியார்களுக்குப் பொருத்திப்பாருங்கள், corporate சாமியார்கள் என்பதன் அர்த்தம் விளங்கும்! தம்மைப்பற்றிய ஆடம்பரமான விளம்பரங்களுடன் தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்து பூஜிக்கச் சொல்பவர்கள் இவர்கள். கடவுள்களால் செய்ய முடியாததை சாமியார்களால் செய்ய முடியும் என பக்கதர்களை நம்ப வைப்பவர்கள்.

இந்த சாமியார்கள் எப்படி உருவாகுகிறார்கள்?யார் இந்த சாமியார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? திடீரெனெ ஒரே நாளில் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? ஒரேயொரு நள்ளிரவிலோ அதிகாலையிலோ இவர்கள் பிரபலமாகிவிடுவதில்லை. எங்கெல்லாம் மதமும் மத வாதிகளும் கடை விரிக்கிறார்களோ, எங்கெல்லாம் மக்களின் பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கிறதோ அங்கெல்லாம் காலம்தோறும் புதிது புதிதாக இவர்கள் உருவாகிறார்கள்! சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளால் வறுமை ஒருபுறம் தாண்டவமாட, மற்றுமொருபுறமோ செல்வச் செழிப்புடன்! வறுமையில் இருப்பவர்களும், நினைத்ததை அடைய முடியவில்லையே என நினைப்பவர்களும் தம்முடைய அத்தியாவசிய தேவைகளைக் கூட சாமியார்கள் பூர்த்தி செய்வார்கள் என நம்பிச் செல்ல, இந்த நம்பிக்கையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாமியார்கள் மக்களை தெரிந்தே ஏமாற்றுகிறார்கள்.

உலகில் விஞ்ஞானம் வளந்துவரும் அதே வேகத்தில் மூட நம்பிக்கைகளும் குறைவின்றி வளந்துவருகிறது.
தம் தேவைகளை பூர்த்திசெய்ய உழைக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தாலும், உழைப்பின் மீது அவநம்பிக்கை கொண்டு எல்லாவற்றுக்கும் மேல் ஒரு சக்தி உண்டென்று நம்பும் மக்கள் சாமியார்களை நோக்கி படையெடுக்கின்றனர். வாழ்வின் நிதர்சனமான கஷ்டங்களிலிருந்து விடுபட “அற்புதங்கள்” மீதான நம்பிக்கை உதவுகின்றன. அதுமட்டுமன்றி சிறுவயதிலிருந்தே யாரேனும் ஒருவரைச் சார்ந்தே இருப்பவர்கள், தான் சார்ந்து இருந்தவர்கள் இல்லாத நிலையில் பிறரைச் சார்ந்திருக்கவே விரும்புகின்றனர்.

இவர்களால் சாதாரண செயல்களுக்குக்கூட தன்னிச்சையாக முடிவெடுக்க இயலுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சாமியார்களை நாடி அதிகம் செல்கின்றனராம். மனக்கஷ்டங்கள் ஏதாவது மாயாஜாலங்கள் மூலம் தீர்ந்துவிடாதா என நினைப்பவர்கள் சாமியார்களின் சக்தி மூலம் தங்கள் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமென நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளே சாமியார்களின் தோற்றத்திற்கான மூலகாரணம் எனலாம். நான் இணையத்தில் வாசித்த ஓர் விடயமதனையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

சாமியார்களின் போலித்தனங்களை ஆயிரம் ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தாலும் அதையெல்லாம் புறங்கையால் விலக்கிவிட்டு மறக்காமல் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பிடிவாதமான பக்திக்கு பின்னால் மரபு ரீதியான காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது. காலம் காலமாக ஏதாவது உருவத்தை வழிபட்டே வாழ்ந்துவிட்டார்கள். அது சிலையாகவும் இருக்கலாம் மானிடமாகவும் இருக்கலாம். எதிலாவது தங்களை ஒப்புவித்துக் கொள்வதில் இயல்பான மனோபாவத்தை கொண்டிருக்கிறார்கள். தங்களால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியாதபடி புதிராக இருக்கும் கடவுளிடம் தாங்கள் நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களை கடவுளுக்கும் தங்களுக்கும் இடையேயான மீடியமாக காண்கிறார்கள்.

அதிலும் அச்சாமியார்களே உபாதைகளை சுகப்படுத்துபவர்களாகவும், அற்புதங்களை நிகழ்த்துபவர்களாகவும் அமைந்துவிடும் பட்சத்தில் சிலருக்கு அவர்களே எளிதில் கடவுளாகவும் ஆகிவிடுகிறார்கள். செல்வாக்கில் புரளும் சாமியார்களைக் கண்ணுறும் சிலர் “சபாஷ் இதுதான் சரியான தொழில்! குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்” என முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டும் ஓர் கருவியாக மதத்தினை பயன்படுத்தி தாமும் ஓர் சாமியாராகிவிடுகின்றனர்! யோசித்துப்பாருங்கள், எந்தவிதமான கல்வித் தகுதியோ முன் அனுபவமோ முதலீடோ இல்லாமல் ஒருவர் மக்களிடம் செல்வாக்கும் புகழும் பெற்று பணமும் சம்பாதிக்க எளிய வழி சாமியார் தொழில்தானே.

மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் மட்டுமே சாமியார் ஆவதற்கான தகுதியும் மூலதனமும்! தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்வது அவரவர் தனித்திறமை. ‘எல்லாம் இருந்தும் நிம்மதியில்லையே’ என புலம்பும் பணமுள்ள பார்ட்டிகள்தான் சாமியார்களின் முதல் குறி. பணத்தை சேர்த்துவைத்துவிட்டு நிம்மதியைத் தேடியலையும் மக்களை பிடிப்பதுதான் சாமியார் தொழிலின் சூட்சுமம். கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல மாறியிருப்பது சாமியார்கள் மட்டுமல்ல அவர்களது கட்டணங்களும்தான்! ‘முடிஞ்சதப் போடுங்க’ ‘நினைத்ததை போடுங்க’ ‘எவ்வளவு வேணும்னாலும் போடுங்க உங்க விருப்பம்’ என ஆரம்பித்த கட்டணங்கள் இப்போதெல்லாம் ஆயிரக்கணக்காகி லட்சங்களைத் தாண்டி கோடிகளில் வந்து நிற்கிறது என்றால் மிகையில்லை.

இன்றைய திகதியில் உங்களுக்கு பத்து ஜென் குரு கதைகள், சில வாழ்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களின் சுய முன்னேற்ற வரிகளும் தெரிந்திருந்தாலே போதும் நீங்களும் ஒரு சாமியார் தான். இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ரொம்பவே ஹைடெக். அவர்களுக்கு என்று இணையதள பூஜைகள், நேரடி ஒலி-ஒளிபரப்பு மாதாமாதம் படப்பாடல்கள் ரிலீஸ் செய்வதுபோல குறுந்தகடு வெளியீடு. Land rover car, iphone என இவர்கள் சொற்பொழிவு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றது போல இருக்கும்.

ஆன்மீக முட்டாள்களாக இருக்கும் பொதுமக்கள்

எவ்வளவுதான் அம்பலப்பட்டுப்போனாலும் மீண்டும் மீண்டும் இவர்கள் தோற்றம் பெற யார் காரணம்? உண்மையில் இங்கு முதல் குற்றவாளிகள் ஆன்மீக முட்டாள்களாக இருக்கும் மக்களே. ஏமாறத் தயாராக இருக்கும் அந்த முட்டாள்தனத்தினை புத்திசாலியான சிலர் சாமர்த்தியமாக / தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்! ஆன்மீகம் பற்றித் தெளிவில்லாத நிலையில் கடவுளை பற்றி யாராவது பேசினால், அதுவும் மத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி நமக்குத் தெரியாத விடயங்களை பற்றி பிரசாரம் செய்தால், அதுவும் அவர்கள் துறவாடையும் அணிபவராக இருந்தால் உடனடியாக அவர்களை வணங்கி பின்பற்ற ஒரு கூட்டமே தயாராகிவிடுகிறது.

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் நமக்குத் தெரியாத ஆன்மீக விடயங்களை இன்னொருவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பதனாலேயே அவனெல்லாம் மகானாகி விட முடியாது. போதாக்குறைக்கு அவர்களின் மகிமைகளை பக்கதர்களாகிய நாமே கண், காது, மூக்கு வைத்து ஊதிப்பெருக்கி பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது. போலிச்சாமியார்களின் அதிகரிப்புக்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல அவர்களது பேராசையும் காரணம் எனலாம். சந்தைப் பொருளாதாரத்தின் தன்மைப்படி எங்கு ஒரு பொருளுக்கான டிமாண்ட் அதிகரிக்கிறதோ அங்கு capacityயும், supplyயும் அதிகமாகும்.

ஆக இவர்களின் தோற்றத்திற்கு பொதுமக்களாகிய நாமும் தான் காரணம் இல்லையா? அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம், ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.

தேவைப்படுவது விழிப்புணர்வே!

எந்தப் பொறுப்பும் இல்லாத வெந்ததைத் தின்று, கிடைத்த சந்தில் புகுந்து ஒழுக்கக்கேட்டில் முழுகி அந்த கயமைகளைக் காவியில் மறைத்து ஊருக்கு உபதேசம் செய்யும் போலிச் சாமியார்கள் உருவாவதே மூட நம்பிக்கையின் முழு வளர்ச்சியாக தெரிகின்றது. சாமியார்களை நம்முடைய பெற்றோர்களோ தாத்தா பாட்டிகளோ நம்புகிறார்கள் என்றால் அந்த நம்பிக்கையை அவர்கள் அவர்களது பெற்றோர்களிடமிருந்தோ தாத்தா பாட்டிகளிடமிருந்தோ பெற்றிருக்கக்கூடும். இன்று நாம் சாமியார்களை கேள்வி கேட்காவிட்டால், அவர்களது இருப்பைக் கேள்விக்குள்ளாக்காது விட்டால் நாளை நமது பிள்ளைகளுக்கும் ஒரு குட்டி சாமியாரோ புட்டி சாமியாரோ தேவைப்படுவார்கள்.

ஏமாற்றுபவர்கள் எங்கும் எல்லாக் காலங்களிலுமே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாம்தான் நமது பகுத்தறிவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முற்றும் துறந்த முனிகளைப்போல் சமூகத்தில் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சகலருக்கும் அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த வந்த இறை தூதர்களைப்போல நற்பெயரை வளர்த்துக்கொண்டு, திரைமறைவில் எல்லாவிதமான கழிசடை வேலைகளையும் பார்க்கும் சாமியார்களை எவ்வாறு நம்புவது? எனவே இவ்வாறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு சுயமாக சிந்திக்க துவங்க வேண்டும்.

‘நாம் அவரைப் பார்த்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு’, ‘அவர் கண்ணுல ஒரு தனி தேஜஸ் தெரியுது’, ‘அவரு புன்னகையில் ஒரு மெசேஜ் இருக்கு’ என்றெல்லாம் யார் யாரோ சொல்வதை வைத்துக்கொண்டு தாங்களும் அதையே ஒரு செய்தியாக பரப்பிக்கொண்டிராது இருந்தால் இத்தகைய நம்பிக்கைகள் தொடர் கதையாவது தடுக்கப்படும். யார் இவர்களெல்லாம்? இவர்களை ஏன் நாம் நம்பவேண்டும் என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும். சேவை அமைப்புக்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கெல்லாம் அரச வரிவிலக்கு கிடைப்பதனால் இந்த சாமியார்கள் தாம் கொள்ளையடிக்கும் கோடிகளில் கொஞ்சம் ஒதுக்கி பொதுச் சேவை என்ற பெயரில் எதையாவது செய்துவிட்டு கருப்புப்பண பெட்டகமாய் பதுங்கிக்கொள்கிறார்கள் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்?

இவர்கள் எல்லோரும் வெறும் பிழைப்புவாதிகள் , பிசினஸ் பெரும் புள்ளிகள், பணம் சேர்க்கும் கேடிகள் அவ்வளவுதான்! ஒரு புது சாமியார் உருவாகும்போது அது பரபரப்புச் செய்தியாகிறது. அதே சாமியார் வீழ்த்தப்படும்போது அதுவும் பரபரப்புச் செய்தியாகிறது. ஒரு சாமியார் புகழின் உச்சத்தில் இருக்கும்போது அவனோடு சேர்ந்து அவனை உருவாக்கியவர்களும் சம்பாதிக்கிறார்கள். புதிய கதைகள், புதிய அற்புதங்கள் ஜோடிக்கப்படுகின்றன. ஊரெல்லாம் உலகெல்லாம் அவன் புகழ் பறந்து பரப்பப்படுகிறது.

‘மாட்டுற வரை சாமி, மாட்டிக்கொண்டால் ஆசாமி’ என்ற அடிப்படையில் குறித்தவொரு சாமியார் சிக்கலில் மாட்டும்போது அவனை உருவாக்கியவர்கள் சட்டென்று அவனிடமிருந்து தங்களை துண்டித்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற சாமியார்கள் பொதுவாக படித்த இளைய தலைமுறையினை அவ்வளவாய் கவர்வதில்லை. அதனாலேயே பொது அறிவு குறைவாகவிருக்கும் குடும்பப் பெண்களையும் அம்மாஞ்சி கணவன்களையும் இந்த அமைப்பு கவர்ந்துவிடுகிறது. உற்றுநோக்கின் இவர்கள் நாடியது கடவுளையோ ஆன்மீகத்தையோ அல்ல, தலைவலிக்குத் தேவைப்படும் உடனடி மாத்திரை போல இவர்களுக்கு சாமியார்களின் தேவை இருக்கிறது.

சம்பளம் அதிகரிக்க, நோய் தீர, குடும்ப சச்சரவுகள் தீர, செல்வம் பெறுக, வேலை கிடைக்க, பரீட்சையில் சித்திபெற போன்ற விடயங்களைத்தாண்டி சாமியார்களின் தேவை என்பது மிகக்குறைவே!

ஆக, இவற்றுக்கெல்லாம் தீர்வு நாம் உட்கார்ந்து யோசித்தாலே கிடைத்துவிடும். பின்னர் சாமியார் எதற்கு?
“நான் கடவுளின் அவதாரம்” என இனி எவன் சொன்னாலும் துணிந்து அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப்பாருங்கள்.. அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணர்வீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூட கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். நம்மிடமிருக்கும் பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துவோமாயின் இனியும் எவனும் சாமியார் என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றத் தயாராகமாட்டான் இதுபோன்ற மூட நம்பிக்கைகளுக்கும் அதன் காவலாளிகளான சாமியார்களும் இந்தத் தலைமுறையிலேயே விடைகொடுப்போமே!

-ப்ரியா ராமநாதன்

அலுவலக சூழல் புரட்சி!

பொதுவாக நம்முடைய அலுவலகங்களில் என்னவெல்லாம் இருக்கின்றது என யாரேனும் கேட்டால் என்ன சொல்வோம் ? Computers, laptops, table’s, chairs, files என சிலவற்றை சொல்லிக்கொண்டே போவோம் இல்லையா? ஆனால் இனியும் நாம் அப்படியே சொல்லிக்கொண்டிருப்போமாயின் நம்மை சென்ற தலைமுறை என்று சொல்லிவிடுவார்கள்! ஏனெனில் இன்றைய அலுவலகங்கள் எப்படியெல்லாமோ மாற்றமடைந்து விட்டன. உதாரணமாக பல நாடுகளில் உள்ள அலுவலகங்களில் தூங்கும் இடங்களெல்லாம் இருக்கின்றனவாம். அதிகமான தூக்கக்கலக்கமென்றால் ஒரு குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம்.

அதேபோல் அலுவலகத்தினுள்ளேயே காபிஷொப்ஸ் விளையாட்டு அரங்கங்கள், ஜிம்  நூலகங்கள், டிவி, என பலவும் வந்துவிட்டன. குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் மையங்கள் முதலிய கூடுதல் வசதியும் செய்துதரப்படுகின்றனவாம் . காலை 8.30 முதல் மாலை 5.30 வரை அலுவலகத்தில் இருந்தேயாகவேண்டும் வருகைப்பதிவேடு மெஷினில் கட்டைவிரலை பதித்தேயாகவேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. விரும்பிய நேரத்தில் வரலாம் விரும்பிய நேரத்தில் செல்லலாம் வீட்டிலிருந்தேகூட வேலை பார்க்கலாம்.

ஆனால் ஏற்றுக்கொண்ட பொறுப்பை முறையாய் செய்துமுடித்தல் வேண்டும். அதை எப்படி செய்யவேண்டும் என்பதில் முழுசுதந்திரம் ! இதெல்லாம் ஏதற்காக? ஊழியர்கள் மகிழ்ச்சியாக வேலைபார்க்க வேண்டும் “அலுவலகத்துக்கு செல்வதே போர் எரிச்சல் என்கிற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது.இந்தவிஷயத்தில் பழைய நிறுவனங்கள் புதிய சிறிய நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.

வருவாயிலோ லாபத்திலோ அல்ல நிறுவனகலாசாரத்தில் ஒருகாலத்தில் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதையே மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விரும்பினார்கள். நிறைய சம்பளம் நிரந்தரவேலை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலர் சம்பளத்தைக்காட்டிலும் மகிழ்ச்சியான வேலையையே உயர்வாக கருதுகின்றனர். அதாவது செய்கின்ற வேலையை விரும்பிச்செய்ய வேண்டும் அதில் திருப்தி ஏற்படவேண்டும். பெரிய நிறுவனங்களுள் என்னதான் வசதியிருந்தாலும் சுதந்திரம் இருக்காது.

நினைத்ததை நினைத்தபடி செய்யவியலாது. இத்தனை மணிக்கு அலுவலகம் வரவேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட நேரடியான மறைமுகமான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கும். அவற்றுக்கு இணங்கியே வேலைபார்க்க வேண்டும். இவையெல்லாமே இன்று பல சிறிய மற்றும் புதிய நிறுவனங்களில் தலைகீழ்! பெரியவருவாயோ வசதிகளோ இருக்காது ஆனால் நினைத்ததை நினைத்தபடி செய்யலாம். யாரும் யாரையும் கட்டுப்படுத்தவியலாது. ஆனால் இப்படியிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமா? ஏதாவது சொதப்பிவிட்டால்? அதற்கும் இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஒருவிடயம் சொதப்பிவிட்டால் தூக்கியெறிந்துவிட்டு அடுத்த விடயத்திற்கு சென்றுவிடுகின்றார்கள்.

ஒரே வருடத்தில் பல நிறுவனங்களுக்கு மாறுவது ஏன் பல நிறுவனங்களை ஆரம்பித்து மூடுவதுகூட இன்றைக்கு சர்வசாதாரணம். முந்தைய தலைமுறையினருக்கு இதைக்கேட்டால் “பகீர்” என்றிருக்கும்! காரணம் அவர்கள் சம்பளம் சேமிப்பு  மேலாளர்மீது மரியாதை, பயம், நிறுவனத்தின்மீது விசுவாசம் கட்டுப்பாடு கௌரவம், என்ற உலகத்தில் வாழ்கின்றவர்கள். தோல்வியை கெட்டவார்த்தையாக அவமானமானதாக கருத்துகின்றவர்கள். இன்றைய தலைமுறை வேறுவிதமாக சிந்திக்கின்றது தனக்கு திருப்தியான வேலை. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம். பிறருக்காக தங்களை எந்தவிதத்திலும் மாற்றிக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.

“நான் நினைப்பதுபோல் என்னால் வாழமுடியவில்லை என்றால் எவ்வளவு பணம் புகழ் சம்பாதித்து என்ன பிரயோஜனம்? என கேட்பவர்கள்தான் இன்றைய தலைமுறை! இந்தமனோபாவம் பரவிக்கொண்டிருப்பதால் சிறிய நிறுவனங்கள் ஏராளமாக உருவாகுகின்றன. “ஸ்டார்ட் அப்” இல் வேலை பார்ப்பது பெருமையான விடயமாயிற்று நம் இளைஞர்க்கு. ஆகவே பெரிய நிறுவனங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதற்கேற்ப மாறவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் திறமைசாலி இளைஞர்களை தக்கவைத்துக்கொள்வது கடினமாயிற்றே…! அலுவலக மாற்றங்களின் அரசியல் இதுதான்.

“அலுவலகம் வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் வேலை நல்லபடியாக நடக்கவேண்டும்” அதற்கேற்ப பணிச்சூழலை மாற்றியமைத்தால் ஊழியர்கள் இன்னும் திறமையாக செயற்படுவார்கள். “Shared office spaces” எனப்படும் அதிநவீன அலுவலகங்களை இந்த உணர்வின் ஒரு நீட்சியாக பார்க்கலாம்.

அதென்ன shared office spaces?

அலுவலகம் என்றாலே ஒரு நிறுவனம்தான் அதன் ஊழியர்கள்தான் என்று என்ன கட்டாயம்? ஒரே கட்டடத்துக்குள் பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்றாக வேலைபார்த்தால் என்ன? யோசித்துப்பார்ப்பின் இப்போது அலுவலகம் என்பது ஒரு குடையின்கீழ் பல விசுவாசிகள் வாழ்கின்ற அமைப்பாக இருக்காது. ஒத்த சிந்தனையுள்ள பலர் வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒன்றுதிரண்டு வேலை பார்க்கிறார்கள் சிரிக்கின்றார்கள் விளையாடுகின்றார்கள் சாப்பிடுகின்றார்கள். கிட்டத்தட்ட ஒரு கல்லூரியைப்போல ஜாலியான வாழ்கை. ஆனால் வேலையும் முடிந்துவிடும் சம்பளமும் வந்துவிடும்.

இந்த கற்பனைக்குபின்னால் ஒரு பெரிய கலாசார மாற்றமே இருக்கிறது “வேலை என்பது மகிழ்வான விடயம் பளு அல்ல” இன்றைய இளைஞர்கள் பலரும் இதை விரும்பக்காரணம் இதிலிருக்கும் நெகிழ்வுத்தன்மை. ஐந்துபேர் வேலைபார்க்குமிடத்தில் தேவையேற்பட்டால் ஐம்பதுபேரை சேர்க்கலாம் அல்லது ஐந்தில் இரண்டை குறைக்கலாம். இந்த இடம் பிடிக்கவில்லையாயின் வேறு இடம் மாறலாம். ஒவ்வொரு நிறுவனமும் தனியே கட்டடம் கட்டி வாடகை கொடுத்துக்கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியம் இல்லையல்லவா?
இப்போது இயல்பாக தோன்றும் இந்த விடயம் அறிமுகமான புதிதில் எப்படிப்பட்ட அதிர்ச்சியை சந்தித்திருக்கும் என யோசித்துப்பாருங்கள். கிட்டத்தட்ட இந்த அதிர்ச்சியைத்தான் “ஆதாம் நியூமன் “2001” இல் அனுபவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆதம் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் அமெரிக்காவுக்கு வந்து தனது சகோதரியின் அடுக்குமாடிகுடியிருப்பில் தங்கியிருந்தார். ஓர்நாள் அவரும் அவருடைய சகோதரியும் liftல் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். ஆனால் யாரும் யாருடனும் ஒருவார்த்தைகூட பேசவில்லை. இது ஆதமுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் எல்லோரும் ஒரே குடியிருப்பில் வாழ்பவர்கள்தனே பின் ஏன் பேசிக்கொள்வதில்லை? என சகோதரியிடம் கேட்க இங்கே எல்லோரும் அப்படிதான்! என்ற சகோதரியின் பதில் ஆதமுக்கு பிடிக்கவில்லை.

உடனே நம்மிருவர்க்கும் ஒரு போட்டி இந்த அபார்ட்மெண்டில் ஒவ்வொரு மாடியிலும் ஒரு நண்பரைக்கண்டுபிடித்து பேசிப்பழக்கவேண்டும் சரியா? என்றார். அடுத்த சில வாரங்களிலேயே இருவர்க்கும் பல நண்பர்கள் கிடைக்க அதற்குபிறகு அந்த வாழ்க்கை முன்பைக்காட்டிலும் இனிமையாகிவிட யாரோ தெரியாதவர்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்கிற உணர்வுபோய் இயந்திரத்தனம் குறைந்தது. இப்படி ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் வாழ்கின்ற ஒவ்வொருவரும் அறிந்து பழகுகிறவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்? என்று யோசித்த ஆதம் அந்த திட்டத்தை ஒரு பிசினஸ் திட்டமாக தயாரித்து ஒரு போட்டிக்கு அனுப்பிவைத்தார்.

ஆனால் அத்திட்டம் சென்ற வேகத்தில் நிராகரிக்கப்படவே ஏன்? என்ற கேள்விக்கு இப்படியொரு முட்டாள்தனமான திட்டத்தில் யாருமே முதலீடு செய்யமாட்டார்கள் என்ற பதில் வந்தது.எனினும் ஆதம் நம்பிக்கை இழக்கவில்லை . சில மாதங்கள் கழித்து காலியான ஒரு கட்டிடத்தை பார்த்ததும் தன்னுடைய “சமூக அடுக்குமாடியை யோசனையை கொஞ்சம் மாற்றி “சமூக அலுவலகமாக” உருபடுத்தினார். உடனே அந்த கட்டிடத்தின் உரிமையாளரான “ஜோஷ்வா கட்மனை” சந்தித்து இந்த இடத்தை ஓர் அலுவலகமாக மாற்றி அதை பல நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம் இது வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் அல்ல இதை சரியாக செய்தால் மக்கள் மகிழ்ச்சியோடு வந்து பணிபுரியும் இடமாக மாற்றினால் நாம் பல மடங்கு சம்பாதிக்கலாம் ” என புரியவைத்தார்.

ஜோஷுவாவும் ஆதமின் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள ” மிகுவெல் மெக்கெல்வே ” என்ற வடிவமைப்பு நிபுணருடன் சேர்ந்து ” கிறீன் டெஸ்க் ” (green desk) என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். கிறீன் டெஸ்க் பெரிய அளவில் வெற்றியடையவே ஆதம் இன்னும் பெரிதாக சிந்திக்க தொடங்கினார்.அப்போதுதான் ஆதாமும் மிகுவெலும் சேர்ந்து 2010ம் ஆண்டு “wework” என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். பகிர்ந்துகொள்ளப்படும் அலுவலக இடங்கள் என்கிற கொள்கையை பிரபலப்படுத்தினார்கள். ஆதமின் சமூக நம்பிக்கை மிகுவெலின் வடிவமைப்புத்திறன் இரண்டும் சேர்ந்து “wework”கை பெரிய அளவு வளர்த்தன.

இன்று weworkநிறுவனம் அமெரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா கனடா, சீனா என பல நாடுகளில் இயங்கிவருகின்றது. நாளுக்குநாள் அதன் சந்தைமதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.ஆனால் இந்த பணமதிப்பையெல்லாம் ஆதம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. வேலைக்கு போவது என்றாலே அது சுமைதான்” என்கிற உலகக்கருத்தை மாற்றவேண்டும் அதனை ஓர் களிப்பான அனுபவமாக மாற்றவேண்டும் அதன்மூலம் வேலையும் சிறக்கவேண்டும் திருப்தியும் பெருகவேண்டும். உலகை இன்னும் சிறந்த இடமாக்கவேண்டும் இந்த கனவோடுதான் wework இயங்குகின்றது. இயந்திரபுரட்சிபோல் இதுவோர் அலுவலக சூழல் புரட்சி.

-ப்ரியா ராமநாதன்

நேசம் என்ற போர்வையில்!

நானும்
நேசம் என்ற போர்வையில்
ஏமாற்றிய அந்த துரோகியும்
பார்த்துக் கொள்வதே இல்லை!

குறுஞ்செய்திகளோ
குரல் அழைப்புகளோ கூட
எங்களுக்குள் இல்லை!

ஆனால் என் நினைவுகளுக்கு
மட்டும் எந்தவித தூரமும்
வந்ததே இல்லை!

இரவுகளில் கண் விழித்து
கண்ணீர் துடைக்கும் நோய்
தீரவே போவதில்லை
மறக்கவே முடியாத நேசம் என்று!

கொண்டாடுவதை காட்டிலும்
இப்படியும் ஒரு நேசமா
என்று நொந்துகொள்ளத்தான்
முடிகின்றது!

கெட்டுப்போன உணவின்
துர்நாற்ற வாடையைப் போல
இந்த நேசம் எனக்கு
அறுவருப்பாகவே இருக்கிறது!

இப்படி ஒன்றைத்தான் நேசித்தோம்
எனும்போது உடலெல்லாம்
ஏதோவொரு இழுக்கை உணர்கிறது!

கடலளவு நேசித்த உறவொன்றை
அதே கடலளவு வெறுக்கும் நிலையில்
முடிவுரை அமையும் என்று
தெரிந்திருந்தால் முகவுரை
எழுதாமலே இருந்திருக்கலாம்!

எல்லாமுமாக இருந்த ஒன்று
எதுவோ ஒன்றை நிறைவேற்றிய
திருப்தியில் பறந்து சென்றுவிட்டது
இனி பகலென்ன இரவென்ன?

எல்லா நேரத்திலும்
ஏமாற்றத்தின் வலியை
அனுபவிப்பதைத் தவிர
வேறு ஏதாவது வழி இருக்கிறதா??

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும் உரையாடலும்

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்

மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன்

அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல் அதனைச்செய்கிறது. The Seven Moons of Maali Almeida (புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம்பெற்றது) உண்மையில் இதனை ஒரு ஹூடனிட் (Whodunit) நாவலாக விபரிக்க முடியும். (Whodunit – என்பது ஒரு கொலையைப் பற்றிய கதை அல்லது நாவலாகும். ஆனால் அந்நாவலில் இறுதிவரை கொலையாளியின் அடையாளம் வெளிப்படுத்தப்படுவதே இல்லை

1990 ஆம் ஆண்டு கொழும்பில் மாலி எனும் புகைப்படப் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார்.அந்தக் கொலை தொடர்பில் பல்வேறு ஆழமான நம்பத்தகுந்த சந்தேக நபர்களும் கதைக்குள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அவர்களில் உயர் பதவியில் இருக்கும் ஓர் இராணுவ அதிகாரி ஒரு பிரித்தானிய உளவாளி ஒரு அமெரிக்க ஆயுத வியாபாரி மற்றும் ஒரு தமிழ் ஜெனரல் போன்றோர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த வெகுஜனக் கொலைகளில் ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரம் மாலியிடம் உள்ளது.

இருப்பினும் நாவல் இதைத் தாண்டியும் பல்வேறு சம்பவங்களுக்கூடாகப் பயணிக்கிறது. நாவலின் கதை மாலி எனும் கதைசொல்லியினாலேயே சொல்லப்படுகிறது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் அவன் ஒரு காத்திருப்பு அறையில் கொல்லப்பட்டு விடுகிறான். இறந்து பின் உயிர்த்து எழுந்திருந்தான். அங்கு கிளிப்போர்ட் வைத்திருந்த ஒருபெண்ணால் அவனுக்கு என்ன நடந்தது என்பதைத்தெரிந்துகொள்ள பேயாக மாறி ஏழு நிலவு நாட்கள் (Seven Moon Days) இருப்பதாகக் கூறுகிறான். அதன் பிறகு அவன் அங்கிருந்து புறப்பட்டு மறுபிறவி எடுப்பதற்காக ஒளியில்நுழைகிறான். அவனுடைய சில கலகக்கார சக பேய்களைப்போல உயிருள்ளவர்களிடம் செல்வாக்கு செலுத்த முயற்சிக்க அந்தரத்தில் ஒட்டிக்கொள்வதைத் தேர்ந்தெடுக்கிறான்.

இதன் அர்த்தம் மாலி ஒரு சுதந்திர முகவர் என்பதல்ல. எளிமையான இயற்கைக்கு அப்பாற்பட்ட காற்றைப்பயன்படுத்தி பேய்கள் அவர்கள் உயிருடன் இருந்தபோது சென்ற இடங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும் – அல்லது மக்கள் அவர்களைப் பற்றி பேசும் இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால் ஒரு கூடுதல் அம்சம் என்னவென்றால், காக்கை மாமா (the Crow uncle) என்று அழைக்கப்படும் ஒரு மந்திரவாதியிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பயிற்சியின் மூலம் அவர்கள் விட்டுச்சென்ற நபர்களிடம் கிசுகிசுக்கும் கலையை கற்றுக் கொள்ளலாம்.

அதன் மூலம் மாலி கெட்டவர்களை தேடி அழிக்குமுன், குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிடுவதற்காக தனது இரண்டு முன்னாள் சக மாடிக்குடியிருப்பாளர்களை (flatmates) தேடிக் கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்குகிறான். இதற்கிடையில், தனது நாட்டின் அண்மைய கடந்தகாலங்களில் நடந்த பல படுகொலைகளைப் பற்றி மேலும்அறிந்துகொள்ள அவன் மற்ற இறந்தவர்களுடன் தொடர் அரட்டைகளிலும் ஈடுபடுகிறான்.

இவை அனைத்தும் நாவலின் தொடக்கத்தில் நிகழ்பவை. உள்ளே செல்லச் செல்ல இலங்கையின் ஆன்மீக உலகின்(“பைரவ யாகம் சீதாவின் அலறலால் பிறந்தது”) முழுமையானஅடித்தளத்தைப் பெற முடிகிறது. மேலும் இலங்கையின் சிக்கலான வரலாறு எவ்வாறு நாட்டை இவ்வளவு நம்பிக்கையற்ற குழப்பகரமானதாக மாற்றியது என்பது பற்றிய விரிவான விவரணங்களையும் காண முடிகிறது. நாவலின் இடையே மாலியின் தன்வரலாறும் பேசப்படுகிறது. குறிப்பாக ஓர் சமப்பாலுறவாள நண்பனுடன் மாலினுக்கிருந்த சிக்கலான காதல் வாழ்க்கையைப் பற்றி நாவல் குறுக்கிட்டுப் பேசுகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஷெஹான் கருணாதிலகவின் வெளியீட்டாளர்களுக்குக் கூட புத்தகத்தை என்னவென்று விபரிப்பது என்பது குழப்பமான ஒன்றாகவே இருந்ததாகத் தெரிகிறது. புத்தகத்தின் அட்டை “நையாண்டி” என்று விவரிக்கிறது. ஆனால், எனது பார்வையில் இந்நாவலில் இல்லாத ஒரேயொரு விசயம் அதுதான். இன்னும் சொல்லப்போனால், நாவல் ஒரு ஒழுங்கமைவற்ற குழப்பமான ஒன்று அல்ல. கருணாதிலக அவர் யதார்த்தத்துக்கு மிகவும் அப்பால் சென்று குவித்திருக்கும் அனைத்து இலக்கிய வகைகளின் மரபுகளையும் மதிக்கிறார்.

எடுத்துக்காட்டாக நாவலின் ஹூடனிட் பகுதி குற்றவாளி யார் என்பதை பொருத்தமாக யூகிக்க முடியாத இறுதி வெளிப்பாட்டிற்கு வாசகனைக் கொண்டு செல்கிறது. விறுவிறுப்பான- புகைப்படங்களுக்கான நீண்ட தேடல் போன்ற பல எழுச்சியூட்டக்கூடிய பல பகுதிகளை நாவல்கொண்டுள்ளது. கதை இயற்கைக்கு அப்பாலான பகுத்தறிவுக்கு அப்பாலான ஒன்றாகத் தோற்றங் காட்டினாலும், சாத்தியம் அல்லது சாத்தியமில்லை என்ற கட்டமைப்பிற்குள் ஏதோ ஒரு நேர்த்தியை நாவலுக்கு மெஜிகல் ரியலிசம் வழங்குகிறது. நாவலில் படுகொலைகள் பற்றிய விவரணைகள் பெரிதும்பொருட்படுத்தத்தகாத அறிக்கைகளாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் எதிர்பாராத உற்சாகமான வாசிப்பு நமது ஈடுபாடான இலக்கியப் பயிற்சி மூலம் நாவலை தண்டிப்பதற்கு பதிலாக நமக்கு பலனளிப்பதாக அணுகுவதே சிறப்பு.

thebookerprizes.com நிகழ்த்திய உரையாடல்

ஷெஹான் கருணாதிலகவின் The Seven Moons of Maali Almeida புக்கர் பரிசு 2022 க்கான குறும்பட்டியலுக்குதேர்ந்தெடுக்கப்பட்டதால், ஷெஹான் கருணாதிலகவிடம் அவரது நாட்டின் உள்நாட்டுப் போர் மரபு அவரது வெளியீட்டாளரின் அன்புத் தொல்லை… மற்றும் மரணத்துக்குப் பின்னரான வாழ்க்கையை ஆராய்வது பற்றி எல்லாம் பேசினோம்.

 

கேள்வி:  2022க்கான புக்கர் பரிசு நெடும்பட்டியலில் இடம்பெற்றிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்? வெற்றிபெற்றால் உங்களுக்கு என்ன அர்த்தம்?

ஷெஹான் கருணாதிலக:  எந்த ஒரு நெடும்பட்டியலிலும் இடம்பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. உங்கள் புத்தகம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்படுவதற்கு முன்னமே நெடும்பட்டியலில் இடம் பெறுவது கூடுதல் அதிர்ஷ்டம். இலங்கையின் குழப்பமான நிகழ்காலத்தை உலகமே உற்று நோக்கும் போது இலங்கையின் குழப்பமான கடந்த காலத்தைப் பற்றி ஒரு நாவல் வெளிவருவதற்கும் இருண்ட சக்திகளின் இணைவு தேவைப்படுகிறது. எனது கதாநாயகன் மாலி அல்மேடா போல் நான் சூதாடுவதில்லை. அதனால் இன்னும் இரண்டு சிக்ஸர்களை விளாசுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியில் கத்துவேன்.

 

கேள்வி: The Seven Moons of Maali Almeida வின் தொடக்கப்புள்ளி என்ன? இது தாமதமான யோசனையா? அல்லது தெளிவான தருணம் தானா? இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை இப்போது எழுத உங்களைத் தூண்டியது எது?

 

ஷெஹான் கருணாதிலக: 2009 இல், உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள்? யாருடைய தவறு இது? என்பது பற்றி ஒரு பரபரப்பான விவாதம் நடந்தபோதே நான் இதைப் பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டேன். இறந்தவர்கள் தங்கள் அனுபவத்தை, கருத்தை வழங்கக்கூடிய ஒரு பேய்க்கதையை தொடர்வதற்கு போதுமான விசித்திரமான யோசனைகள் இருப்பதாகத் தோன்றியது, ஆனால் நிகழ்காலத்தைப் பற்றி எழுத எனக்கு தைரியம் இருக்கவில்லை, எனவே நான் 20 ஆண்டுகள் பின்னோக்கி, 1989 இன் இருண்ட நாட்களுக்குச் சென்றேன்.

 

கேள்வி: உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் சாதாரணமாக தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள், திடீர் எழுச்சிகள் என ஏதாவது உள்ளதா? மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள் நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்தது?

 

ஷெஹான் கருணாதிலக: அதிக காலம் எடுத்தது. 2014 இல் எழுத ஆரம்பித்து பல்வேறு தரப்புக் கருத்துக்கள் மூலம் நிறைவு செய்தேன். அதன் படிப்படியான வளர்ச்சிக்கு அந்தளவு காலம் தேவைப்பட்டிருக்கலாம். முதலில், நான் 1989 ஆண்டை ஆராய்ச்சி செய்தேன். இயற்கைக்கு அப்பாற்பட்ட நாட்டுப்புறக்கதைகளை ஆராய்ந்தேன், பேய்க் கதைகளைச் சேகரித்தேன். அவற்றைப் படித்து A3 தாள்களில் பென்சிலால் குறிப்பெடுத்துக் கொண்டேன். பின்னர், ஒரு உருவரைவை (outline) டைப் செய்தேன். பிறகு ஒவ்வொரு அத்தியாயமாக டைப் அடித்தேன். நிச்சயமாக, டைப்செய்யும் போது உருவரைவிலும், யோசனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. ஆனால் மாலியின் குரல் வெளிப்பட்டவுடன், கதை அதன் தாளத்தைக் கண்டுபிடிக்கத்தொடங்கியது. ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போது படிக்கத்தயாராகிவிட்டது.

 

கேள்வி: சிறிய சுயாதீன வெளியீட்டாளர்களால் ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்பட்ட நெடும்பட்டியலில் உள்ள பல எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் – அது உங்களுக்கு எதனை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் ஒரு எழுத்தாளர் என்ற வகையில் உங்களை அது எவ்வாறு பாதிக்கிறது?

 

ஷெஹான் கருணாதிலக: படைப்பின் மீது அக்கறை கொண்டு, கடினமான சந்தர்ப்பங்களில் கனிவைக் கொடுக்கக்கூடிய வெளியீட்டாளருடன் இருப்பது மிகவும் அருமையானது. நடானியா ஜான்ஸ், மார்க் எல்லிங்ஹாம் ஆகியோர் Seven Moons உடனும் அதன் ஆசிரியருடனும் புத்தக வகைப்படுத்தலில் இருந்ததைப் போல ஒரு பெரிய வெளியீட்டாளர் பொறுமையாகவும் தாராளமாகவும் இருந்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த பெருந்தொற்றுக் காலப்பகுதி முழுவதும் நாவலில் விசித்திரமான கதைச் சம்பவங்கள் மற்றும் off-kilter கதாபாத்திரங்களை வாசகர்கள் இலகுவாக புரிந்துகொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் உறுதியாகப் பணியாற்றினோம். பின்னர் பீட்டர் டயர் அந்த அற்புதமான அட்டையை உருவாக்கினார். உண்மையில் இது ஒரு குழு முயற்சிதான். இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.

 

கேள்வி:ஒரு திறனாய்வாளர், The Seven Moons ஐ “ஒரு பகுதி பேய்கதை, ஒரு பகுதி ஹூடனிட், மற்றொரு பகுதி அரசியல் நையாண்டி” என விபரித்தார். இது ஒரு நியாயமான விவரிப்புத்தானா? அல்லது வாசகர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய வேறு குறிப்பிடத்தக்க சாதகமான “பகுதிகள்“ உள்ளதா?

 

ஷெஹான் கருணாதிலக: வித்தைக்கு (juggling) மூன்று பந்துகள் போதுமானது. எனவே, ஆம். கதைகூறலை சரியீடு (balance) செய்வதற்காக மர்மம், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றை நாவலுக்குள் வைத்தோம். ஆனால் இதன் மையத்தில் ஒரு முக்கோணக் காதலும் உள்ளது. சில மென்மையான உறவுகள், ஓரளவு பேய் தத்துவம் குறித்த விவரணங்களும் உள்ளன. வாசகன் கதைக்குள் ஆழ்ந்து போகும் போது பல கவனிக்கத்தக்க நகரும் பகுதிகளுக்குள் சிக்கிக் கொள்கிறான் என்றும் நம்புகிறேன்.

 

கேள்வி:இலங்கையின் உள்நாட்டுப் போரைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லாத,1989 காலப்பகுதியை வைத்து இந்நாவலை அமைக்க உங்களைத் தூண்டியது எது? அந்த வருடத்தின் முக்கியத்துவம் என்ன? தவிரவும், அன்றைய இலங்கைக்கும் இன்றைய இலங்கைக்கும் இடையிலுள்ள சமாந்தரங்கள் என்ன?

 

ஷெஹான் கருணாதிலக:1989 என் நினைவில் இருண்ட ஆண்டாகப்பதிவாகி இருக்கிறது. அந்த ஆண்டில் இங்கு, ஒரு இனப் போர், மார்க்சிஸ எழுச்சி, ஒரு வெளிநாட்டு இராணுவ பிரசன்னம் மற்றும் அரச எதிர்ப்புப் படைகள் என அமைந்திருந்தன. அது படுகொலைகள், காணாமல் போதல்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் சடலங்களின் காலமாகவே இருந்தது. ஆனால் 1990 களின் இறுதியில், பெரும்பாலான எதிரிகள் இறந்துவிட்டனர். எனவே நிகழ்காலத்தைக் கொண்டு வருவதை விட இந்த பேய்களைப் பற்றி எழுதுவதை பாதுகாப்பானதாக உணர்ந்தேன்.

 

இலங்கையில் நிகழ்ந்த எதிர்ப்புக்கள், பெட்ரோல் வரிசைகள் மற்றும் தப்பியோடிய ஜனாதிபதிகள் பற்றி பல நாவல்கள் எழுதப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், இன்றைய பொருளாதார நெருக்கடியை, ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட 1989 பயங்கரவாதம் அல்லது 1983 தமிழர் விரோதப் படுகொலைகளின் பயங்கரத்துடன் ஒப்பிட முடியாது.

கேள்வி:நாவல் வன்முறையின் பின்னணியில் அமைந்திருந்தாலும், உங்கள் முதல் நாவலான சைனாமேன் (Chinaman) போலவே – மிகவும் வேடிக்கையானதாக இருக்கிறது. புக்கர் நடுவர்கள் அதனை “கோபமான நகைச்சுவை” (angrily-comic) என்றுவிவரித்தனர். நீங்கள் இலக்காகக் கொண்டிருந்த தொனி அதுதானா? அப்படியானால், அது ஏன்?

 

ஷெஹான் கருணாதிலக: இலங்கை கசப்பான வரலாற்றையும், குழப்பமான நிகழ்காலத்தையும் கொண்டிருந்தாலும்கூட அது ஒரு துரதிர்ஷ்டவசமான அல்லது மனச்சோர்வடைந்த இடமாக இல்லை. நாங்கள் தூக்கு மர நகைச்சுவையில் (gallows humour) நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் நகைச்சுவைகளை உருவாக்குகிறோம். ஜூலை 9 ஆம் தேதி நடந்த ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாக பார்ட்டி சம்பந்தமான நகைச்சுவையான காட்சிகளையும், அரகலயவைப் பற்றிய பல மீம்ஸ்களையும் பாருங்கள்.

 

சிரிப்பு தெளிவாகவே ஒரு நெருக்கடியான சூழலை சமாளிக்கும் நமது வழிமுறையாகும். சைனாமேனில், நான் குடிகார மாமா ஒருவரை வகைமாதிரியாகப் பயன்படுத்தினேன். ஏழுநிலவுகளில் closet queen பாத்திரத்தை இதற்காகப் பயன்படுத்துகிறேன். இரண்டு கதாபாத்திரங்களும் நகைச்சுவையினூடே சோகத்தையும், குரூரத்தையும் பிரிதிபலிப்பவை.

கேள்வி: மரணத்திற்குப் பின்னரான வாழ்வு பற்றிய உங்கள் சொந்தக் கற்பனையைத்தான் இதில் செய்திருக்கிறீர்களா? அப்படியெனில், நீங்கள் ஆராய்ந்து அறிந்தவற்றை அதிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?

 

ஷெஹான் கருணாதிலக: இந்த ஆராய்ச்சியை நான் செய்துகொண்டிருந்தபோது, எந்த பேயையும் நான் எதிர்கொள்ளவில்லை. அதேபோல, மரணத்துக்குப் பின்னரான வாழ்வுபற்றியும் எந்த நம்பிக்கையான எண்ணங்களும் எனக்கு இல்லை. அதேநேரம், பெரிய பேய் வேட்டைக்காரர்களிடமோ அல்லது பிரபலமான ஆன்மீகவாதிகளிடமோ கூட அத்தகைய எண்ணமும் அனுபவமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

 

கேள்வி: The Seven Moons நாவலின் முந்தைய பதிப்பு 2020 இல் இந்தியாவில் Chats with the dead என வெளியிடப்பட்டது. இருப்பினும் அது சர்வதேச வாசகர்களை சென்றடைய சிறிது காலம் ஆகும் என்று தோன்றியது. அது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது எப்படி பின்னர் The Seven Moons ஆக மாறியது?

 

ஷெஹான் கருணாதிலக:மேற்கத்தேய வாசகருக்கு குறைந்தளவு இரசனை கொண்டதாகவும் இலங்கையைப் பற்றியோ, அதன் பேய்களைப் பற்றியோ எதுவும் தெரியாத வாசகர்களுக்குஅணுகக்கூடியதாகவும் இருக்கிற போதிலும் அவை இரண்டும் ஒரே புத்தகம்தான்.

 

கேள்வி: நீங்கள் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளீர்கள். விஸ்டனின் கருத்துப் படி, கிரிக்கெட் பற்றி இதுவரை எழுதப்பட்ட இரண்டாவது சிறந்த புத்தகம் அதுதான் – அத்துடன் ரொக் பாடல்கள் மற்றும் விளம்பரங்களுக்கான நகலும்கூட. நீங்கள் அடுத்து என்ன எழுதுகிறீர்கள்? அது ஏழுநிலவுகளிலிருந்து எந்தளவு வித்தியாசமாக இருக்கும்…?

 

ஷெஹான் கருணாதிலக: நான் சில புதிய திட்டங்களுடன் பணிபுரிகிறேன். ஆனால் அவற்றில் கிரிக்கெட்டோ அல்லது பேய்களோ எதுவும் இடம்பெறாது.

 

கேள்வி: இரண்டு வருடங்களில் புக்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது இலங்கை எழுத்தாளர் நீங்கள். இறுதியாக, மேற்கத்தேய வாசகர்கள் இலங்கை எழுத்தின் தரத்தின் மீது கவனம் எடுத்துவிட்டார்களா? அல்லது அது இப்போது மிகவும் வலுவான இடத்தில் உள்ளதா? வேறு எந்த இலங்கை எழுத்தாளர்களை மக்கள் படிக்க வேண்டும்?

 

ஷெஹான் கருணாதிலக: இலங்கையின் கடந்த காலத்திலோ நிகழ்காலத்திலோஅழுத்தமான கதைகளுக்கு (compelling stories) பஞ்சமில்லை. நான் எழுதத் தொடங்கியபோது கார்ல் முல்லர், ரொமேஷ் குணசேகர, ஷியாம் செல்வதுரை, மைக்கேல் ஒண்டாஜி ஆகியோர்தான் உயர் தர எழுத்தாளர்களாக இருந்தனர். அதேபோல் ஆர்தர் சி கிளார்க், நான் மிகவும் பெருமைகொள்கிற இலங்கை எழுத்தாளர்.

 

இன்று புதிய இலக்கியநடை கொண்ட அனுக் அருட்பிரகாசம், நயோமி முனவீர போன்றவர்களையும், யுதன்ஜெய விஜேரத்ன, அமந்தா ஜே போன்ற கதைசொல்லிகளும், அசோக் ஃபெரி, அண்ட்ரூ ஃபிடல் பெர்னாண்டோ போன்ற நையாண்டி மொழிஎழுத்தாளர்களும், கவிஞர் விவிமேரி வண்டர்பூர்டன், இந்தி சமரஜீவ போன்ற திறமையான கட்டுரையாளர்களும் மற்றும் டசின் கணக்கான திறமையான எழுத்தாளர்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் இருப்பவர்கள். புதியதலைமுறை மொழிபெயர்ப்பாளர்களால் சமகால சிங்கள மற்றும் தமிழ் படைப்புகளை பரந்துபட்ட வாசகர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன்.

 

கேள்வி: புக்கர்–வென்ற அல்லது புக்கர்–குறும் பட்டியலில் இடம்பெற்ற உங்களுக்கு மிகப் பிடித்த நாவல் எது?

ஷெஹான் கருணாதிலக: வெறும் ஒன்று மட்டும்தானா? முதல் 10 இடங்களை என்னால் எளிதாக சொல்ல முடியும். ஆனால் நான் 5 ஐந்துடன் நிறுத்துவேன்.

 

Lincoln in the Bardo, Cloud Atlas, The Handsmaid’s tale, girl woman other மற்றும் நிச்சயமாக Midnight’s Children.

 

ஜிஃப்ரி ஹாசன்

வாழ்க்கைப் பயணம்!

சுட்டெரிக்கும் நினைவுகளால்
நரகமாகிப்போன இந்த இரவுகளில்
தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை

ஆராத புண்களாக
நெஞ்சில் உள்ள காயங்களுக்கு
விடுமுறைகள் என்பது

இல்லவே இல்லை

என்றாவது ஒரு நாளில்
அந்த தற்காலிக நேசத்தைப் போலவே
இந்த வலிகளும் பாதியில்

சென்று விடும் என்ற நம்பிக்கையில்
என் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு பத்து மணியளவில் நடந்தேறியது. இந்திய அரசியலமைப்பில் பல திருப்பங்களையும் இலங்கை அரசு மற்றும் விடுதலை புலிகளின் மீதிலும் செல்வாக்கு செலுத்தி உலக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அப்பெரும் சர்ச்சைக்குறிய துயர சம்பவமானது அந்நாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமரும் ஆன ராஜிவ் காந்தியின் உயிரை காவு வாங்கிய கொலை சம்பவம் ஆகும்.

1991 மே மாத 21 அன்று ஸ்ரீ பெரும்புத்தூரில் பொது தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்ட மரகதம் சந்திரசேகர் அவர்களாலும் கட்சி தொண்டர்களாலும் பெரும் மக்கள் திரட்டின் மத்தியில் பிரசார மேடை அமைக்கப்பட்டிருந்தது.இரவு பத்து மணியை கடந்திருந்த அந்த கூட்ட மேடைக்கு காங்கிரஸ் தரப்பில் பிரச்சாரம் செய்வதற்காக அந்நாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி சமூகம் அளிக்க இருந்தார். விசாக பட்டினம் விமான நிலையத்தை அடைந்து பின் தன் காரின் மூலம் பிரசார களத்தை தன் சக காங்கிரஸ் தொண்டர்களுடன் அடைந்தார் ராஜிவ் காந்தி.

ராஜிவ் காந்தியின் வருகையை ஒட்டி அந்த பிரதேசம் அல்லோல கல்லோல பட்டிருந்தது. ஸ்ரீ பெரும்புத்தூர் ஆலய மைதானத்தில் அமைந்த அந்த பிரசார மேடையை காங்கிரஸ் தலைவர் அடைய பொது சனம் புடை சூழ்ந்து கொண்டது. நெருக்கத்தை சமாலிக்க முடியாத காரணத்தினால் ராஜிவ் காந்தியுடன் வந்த காங்கிரஸின் தமிழ் நாட்டு தலைவரான ஜீ.கே.மூப்பனார் மேடையை சென்றடைய அவருடன் பயணித்த இன்னொருவரான காங்கிரஸ் ஆதரவாளரான ஜெயந்தி நடராஜன் காரிலேயே இருந்து விட்டார்.

அந்த கூட்டம் ராஜிவ் காந்தியை சூழ்ந்து மலர் மாலைகளையும் பூங்கொத்துக்களையும் அவரிடம் கொடுத்து தங்கள் ஆதரவை வெளிக்காட்டியது. காவலர்கள் அவற்றை நிராகரிக்க முனைந்த போதும் ராஜிவ் அவர்களை தடுத்து விட்டார். இந்த கூட்டத்தின் நடுவே கண்ணாடி அணிந்த பெண் ஒருவர் ராஜிவ் காந்தியிடம் நெருங்கி மலர் மாலை அணிவித்து பின் அவர் காலில் விழுந்து வணங்கிய அடுத்த நொடியில் பெரும் வெடிப்பு ராஜிவ் காந்தி மற்றும் அவரை சூழ இருந்த காவல் படையினர் அனைவரும் அந்த குண்டுத்தாக்குதலுக்கு உற்பட்டு மாண்டு சரிந்து கிடந்தனர்.

சற்று புழுதி தணிய எடுத்த நேரத்தைக் காட்டிலும் அந்த கண்ணாடி அணிந்திருந்த தனு எனும் தேன்மொழி ராஜ ரத்தினம் மனித குண்டுதாரியென்றும் ராஜிவ் காந்தி படு கொலை செய்யப் பட்டார் என்றும் யூகிக்க அவ்வளவாய் நேரம் எடுக்கவில்லை.

மேடையிலிருந்த முக்கிய அரசியல் வாதிகளும் ஆதரவாளர்களும் பொது மக்களும் முன்னல் பிரதமரை நோக்கி விரைய பாதி சனம் கிட்டிய திசைகளை அனுகி ஓட அந்த துயரசம்பவம் ராஜிவ் காந்தி உற்பட மேலும் பதினெட்டு பேரை உள்ளடக்கி இருந்ததை உறுதி செய்த பின் கண்ணீர் மழையில் மூழ்கியது. அந்த சம்பவத்தில் லிக். முனுசாமி பி.கே.குப்தா ,முஹமது இக்பால் உள்ளிட்ட காவல் துறையினரையும் மனித குண்டு தாரியான தனு ராஜரத்தினையும் அவருடன் பத்திரிகையாளராக வந்திருந்த ஹரி பாபு என்பவரையும் காவு கொண்டது.

இந்த படுகொலைக்கு காரணம் தமீழீல விடுதலை புலிகள் என்று திடீர் குற்றம் சாட்டப்பட்டதுடன் தமிழகத்தில் அன்றைய நாளில் விடுதலை புலிகளை ஆதரித்த திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராய் இருந்த மு.கருனாநிதி அவர்களின் மீதும் குற்றம் சாட்டி தி.மு.க கொடிகளும், கட்சி அலுவலகங்களும், தி.மு.க அரசு நடத்திய முரசொலி பத்திரிகை காரியாலயமும் சூறையாடப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் உடலுக்கு 1991 மே 24 அன்று இறுதி கிரியைகள் நடை பெற்றது.

பின் நடந்த பொது தேர்தலில் அனுதாப வாக்குகளை பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்க ஜெயலலித்தா முதலமைச்சர் ஆகினார். அன்றைய பொது தேர்தலில் தி.மு.க ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் நடைபெற்றது போல் அன்றி ராஜிவ் காந்தியின் ஆட்சியின் போது பல முறனான ஆட்சி முறையே நடைபெற்றது. தெற்காசியாவில் தனது ஆளுமையை நிலை நாட்ட நினைத்த ராஜிவ் அரசு அனைத்து நாடுகளினதும் அரசியலில் தலையிட்டது. அவ்வாறு இலங்கை அரசியலில் தலையிட்ட ராஜிவ் விடுதலை புலிகளை அடக்குவதற்காகவும் 1983 உள்நாட்டு கிளர்ச்சியின் பின் உருவாகி இருந்த கலக்ககாரர்களை அடக்குவதற்காவும் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசவுடன் கை கோர்த்து 13ஆம் அரசியல் திருத்த சட்டத்தை கொண்டு வந்ததுடன் இந்திய அமைதி காக்கும் படையை ஆயுத தாரிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே சமாதானத்தை நிறுவுதல் நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதி காக்கும் ஓடை ஆயுத தாரிகளின் ஆயுதங்களை கை பற்றியதுடன் விடுதலை புலிகளினது ஆயுதங்கள் பலவற்றையும் கையக படுத்திக் கொண்டதுடன் வட பிரதேசங்களில் இருந்த இலங்கை ராணுவத்தை திரும்ப பெற்றுக் கொண்டு அமைதியையும் நிலை நாட்டியது. எனினும் அவ்வமைதி நெடுநாட்கள் நீளவில்லை. விடுதலைகள் புலிகள் சரணடையவில்லை என்றும் முறையாக ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி விடுதலை புலிகளுக்கு எதிராக போர் தொடுக்க இரண்டு மடங்கிலும் யுத்தம் வலுபெற்றது. போர் காரணியாக அமைதிப் படை விடுதலை புலிகள் சிறுவர்களையும் பெண்களையும் ரானுவத்தில் இணைத்தாக குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் விடுதலை புலிகள் சிக்கிய அமைதிப்படை பெண்களை பாலியல் வங்கொடுமைகளுக்கு உற்படுத்துதல் போன்ற போர் குற்றங்களை செய்ததாக தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தது.

எனினும் ராஜிவ் காந்தி மேல் தெற்காசிய நாடுகள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தின. சிங்கள மக்களும் கூட ராஜிவ் காந்தியின் மீது அவ்வளவாய் ஆதரவு காட்டவில்லை அதன் எடுத்துக் காட்டாக விஜித ரொஹன என்ற கடற்படை வீரரின் ராஜிவ் மீதான தாக்குதலை சொல்லலாம். இதன் பின் காங்கிஸின் ஆட்சி கவிழ பிரதமராக பதவியேற்ற விபி சிங் இந்திய அமைதி படையினை மீளப் பெற்றுக்கொண்டார்.

எனினும் தேர்தல் பிரசாரங்களில் 1990 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி தான் ஆட்சி அமைத்தால் அமைதிப்படையை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதாக சொல்லி இருந்தமையினால் பின் விளைவுகள் கருதி விடுதலை புலிகள் இந்த படு கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வலிமை இழந்து இருந்த நிலையில் அவர்களை பார்த்து பயப்பட வேண்டிய தேவையும் கொலை செய்வதற்கான பின் புலனும் இல்லையென்று குற்றசாட்டை மறுத்தார்.

மேலும் ராஜிவ் காந்தி கொலை எங்களுக்கு பெரும் இழப்பு என்று சுட்டிக்காட்டினார். அதே போல் படு கொலையின் பின்னர் விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதுடன் தமிழக அனுசரனை இழந்த விடுதலை புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்தது. கார்த்திகேயன், சிவராசன் என்போர் தலைமையில் விஷேட புலனாய்வு துறை குழு நியமித்து விசாரணை நடத்தியது இந்திய அரசு. அதன் விசாரணை முடிவுகள் பல அரசியல் மாற்றகளை கூட அன்றளவில் ஏற்படுத்தியது. ஒற்றைக்கண் சிவராசு என்ற சிவராசனை முக்கிய குற்றவாளியாக கைது செய்து நிருத்தியது.

1995 ஆம் ஆண்டு வி.பி. சிங்கின் பிரசார கூட்த்தில் பத்திரிகையாளராக சென்று உலவு பார்த்து ராஜிவ் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டதாக அவர் மேல் குற்றம் சாட்டப் பட்டது. அந்த குழு ராஜிவ் காந்தியின் பாதுகாப்பில் மேல் இருந்த குறைபாடுகளையும் மத்திய மற்றும் தமிழக அரசின் அழற்சியத்தையும் சுட்டிக்காட்டி இருந்தது. அந்த தனு எனும் மனித வெடிகுண்டான பெண்ணை பத்தடி தூரத்தில் வைத்து ராஜிவ் காந்தியை அனுக முடியாமல் செய்திருந்தால் உயிர் பிழைத்திருப்பர் என்று சுட்டிக் காட்டியது. மேலும் பள்ளி வாசல் மைதானத்தில் நடைபெற இருந்த கூட்டம் கோயில் மைதானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தது.

அதைவிட ராஜிவ் காந்தியின் ஸ்ரீ பெரும்புத்தூர் பிரசார நிகழ்ச்சி தமிழ் நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்த பின் ரஜிவ் காந்தியின் பட்டியலில் இணைக்கப்பட்டதாக குறிப்பிட்டது.
கூட்டம் நடந்த இடம் அடிப்படை பாதுகாப்புக்களை கூட செய்து தர முடியாத அளவில் காடு நிலமாக இருந்ததனாலும் அதில் ஏற்பட்ட சந்தேகங்களினாலும் மரகத சந்திர சேகர் அவர்கள் சிறப்பு புலனாய்வு துறையின் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டார்.

ராஜிவ் காந்தி கொள்ளப்பட முன் பாலஸ்தீன விடுதலை போராட்டக்காரர்களின் தலைவரான யஷார் அரப்பத் ராஜிவ் காந்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அச்சுருத்தல் விடுத்திருந்ததாக சொல்லப்படுகின்றது. பின் 1992 ஜூன் மாதம் நீதிபதி வர்மா தலைமயிலான சிறப்பு புலனாய்வு குழு மேற்கூறிய தகல்களை நிராகரிப்பதாக தங்களின் இறுதி அறிக்கையை முன்வைத்தது. மத்திய அரசும் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டது. பல அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை தமிழ் நாட்டு அரசு பாதுகாப்பில் கோட்டை விட்டதாக விமர்சித்ததுடன் மத்திய அரசு எந்த வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியது.

ராஜிவ் காந்திற்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு படையை வி பி சிங்க் அரசு திரும்ப பெற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டியது. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட முன் தினம் கொலை அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் மத்திய அரசு அதை பொருட்படுத்தவில்லையென குறிப்பிடப்பட்டு இருந்தது. வாழப்பாடி ராமூர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை வாக்குகளை மட்டும் பொருட்டாக கொண்டு ராஜிவ் காந்தியை பிரசாரத்திற்காக பயன்படுத்தியதற்காக விமர்சித்தது வர்மா கமிட்டி. [அடிப்படை கடமைகளின் கற்பித்தல் நோக்கங்களுக்காக ஒரு வழிமுறையை திட்டமிட்ட குழு]

தடா சட்டத்தின்[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்] கீழ் குற்றவாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் வர்மா கமிசன் உடன் நீதிபதி ஜெயின் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. ஜெயின் கமிட்டி பாதுகாப்பு குறைப்பாடை சுட்டிக்காட்டியதுடன் தி.மு.க மீது சந்தேகம் இருப்பதாக அறிக்கை விடுத்தது. தி.மு.க வை தடைசெய்யுமாறு காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய குஜராத் அரசாங்கம் நிராகரிக்கவே காங்கிரஸ் தன் பங்களிப்பை அரசிடம் இருந்து திரும்ப பெற ஐக்கிய குஜராத் அரசு கவிழ்ந்தது.

1998 ஆம ஆண்டு தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரணதண்டனை அளித்து அதிர்வலைகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் முக்கிய குற்றவாளிகள் 6 பேருக்கு தூக்கு தண்டனை அளித்து நளி எனும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. முருகன், பேரறிவாழன், சாந்தன், ரவிசந்திரன், ரொபர்ட் ஜெயகுமார், நளினி எனப்படுவோர் தான் அக்குற்றவாளிகள்.
இத்தகைய ராஜிவ் காந்தியின் இன்றளவின் மர்மமாகவும் துன்பியல் சம்பவமாகவும் கருதப்படும் படு கொலைக்குப் பின் உள் நாட்டு அரசியல் ஆதாயங்களும், வெளிநாட்டு கூட்டு சதிகளும் காணப்படுகின்ற போதிலும் இன்றளவிலும் தெளிவான ஒரு விடை கிடைக்காமலேயே இருக்கின்றது.

ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆறு பேரின் விடுதலை.

மேற்கூறியவாரு தடா சட்டத்தினால் 26 பேரிற்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட போதிலும் பின் அந்த தீர்ப்பு 1999ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டு முக்கிய குற்றவாளிகள் 7 பேர் மீது மட்டும் தண்டனையை நீட்டித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த ஏழு பேரும் கொலையுடன் சம்மந்தப்பட்ட முக்கிய மைய குற்றவாளிகள் இல்லை என்பதையும் உர்ஜிதப்படுத்தியது. ஏழு பேரில் 4 பேருக்கு மரண தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் ஆக 2000 ஆம் ஆண்டு குற்றவாளிகளின் தண்டனையை நீதிமன்றம் குறைத்தது. மேலும் 2014 ஆம் ஆண்டு பேறரிவாளன் மற்றும் இருவருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதி மன்றம்.

2018 செப்டெம்பர் மாதம் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அமைச்சரவை ஏழுபேரையும் விடுதலை செய்ய கோரிய பரிந்துறையை ஆளுனர் மாளிகை நிராகரித்தது. மேலும் பேரறிவாளன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இவ்வருடம் மேமாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப் பட்டார். அவர் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரண்டு மின்கலன்களை வாங்கி தந்தமைக்காக மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளி என்பதும் அவர் கைதான போது அவரது வயது 19 என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும் மற்றக் குற்றவாளிகாளான நளினி, முருகன், ரொபர்ட், சாந்தன், முருகன், ஜெயகுமார், ரவிசந்திரன் 6 பேரை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நவம்பர் 11ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

இதில் முருகன், ரொபர்ட், சாந்தன், முருகன், ஜெயகுமார் போன்றோர் இலங்கையர்கள் என்பதுடன் நளினி மற்றும் முருகன் ஆகியோர் தம்பதிகள் ஆவர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட போது நளினி கர்பமடைந்திருந்ததுடன் அவர்களின் குழந்தை ஐந்து வயது வரை சிறையிலேயே வளர்ந்து வந்தது பின் அவர்களின் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பானது இந்திய அரசியலமைப்பின் 142ஆம் அரசியலமைப்பு பிரிவினால் வழங்கப்பட்டுள்ளது.

என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!

அன்றுகளில்
நீயும் நானும் ஒன்றாக
உட்கார்ந்து உணவருந்திய
அதே இடத்தில்
அதே மேசையில்

இன்று எனக்குப் பதிலாக
வேறு யாரோ ஒருவர்
உனக்கு எதிரில்
உட்கார்ந்து கதை
பேசுகின்றார்கள்

மலை உச்சியில் முளைத்த
அணி வேரைப் போல
அதே போன்ற கதிரையில்
காலம் முழுக்க லயித்திருக்கவே
நான் எண்ணியிருந்தேன்.

என்றாலும் என்னை துரத்த
நீ எடுத்த பிரயத்தனங்களை
எல்லாம் பார்த்த வேதனையில்
என் கதிரையின் கால்களை
நானே உடைத்துக் கொண்டேன்

எனது இடம் என்று
நான் நினைத்துக் கொண்டிருந்த
அந்தக் கதிரையை துண்டாடியுள்ள
வருங்கால ஏமாளி யார் என்று
தெரியவில்லை என்றாலும்

என்னைப் போலவே எல்லோரும்
ஏமாளியாகத்தான் இருப்பார்கள்
என்று நினைப்பது எத்தனை
முட்டாள்தனம் என்று எண்ணி
சிரிக்கிறேன்.

இத்தனை வருடங்களில்
நீயும் நானும் வாங்கிச் சென்ற
உணவுப் பொட்டலங்களின்
விலை மட்டுமே மாறியிருக்கிறது
நீ என்னை மாற்றியதைப் போல

வேறு எதையுமே மாற்றவில்லை
என்னை மாற்றுவது உனக்கு
எத்தனை இலகுவாக இருந்தது
என்று யோசித்து யோசித்தே
ஆண்டுகளை கடத்தி விட்டேன்

எனக்குப் பிடித்த ஊருகாய்
எனக்குப் பிடித்த மிளகாய் என
எல்லா கதைகளையுமே
அந்தக் கதிரை அறியும்
இந்நேரம் நான் இல்லாத

உன்னை பார்த்த அது
யார் இவர்கள் என்று
குழம்பிப் போயிருக்கும்
அது அப்படியே இருக்கட்டும்
கதிரைக்கு தெரியுமா
ஊருகாய் வாசணை.

 

-அஹ்ஸன் அப்தர்

நகரத்தாரே தோட்டாக்காட்டான் பேசுகிறேன் கொஞ்சம் நில்லுங்கள்!

தம்பி ஊரு எங்க மலையகமா?
தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற
கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன்.
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரே காரணம் நீங்கள் நகரம்.
நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும்
எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்
மத்தப்படி நாங்களும் உங்களை போலதான்

எங்களது தோட்டக்காடுகளை இரசித்தே செல்லும்
மேகக்கூட்டங்களை கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்
அது சொல்லிச் செல்லும் எங்க மண்ணின் அழகை.
குதித்தோடும், அருவிகள்,பச்சைக்காடுகள்
பசுமையான மலைகள்.
உயர நீர்வீழ்ச்சிகள்
என அடுக்கி கொண்டே போகும்.

எங்களை சுவாசித்து செல்லும் இளங்காற்றை
நிற்க சொல்லி கேட்டு பாருங்கள்.
திருவிழாக்களில் எங்களது ஆட்டப்பாட்டங்களையும்
துக்க வீடுகளில் எங்களது ஒற்றுமையையும்
அந்த காற்று பாடிச் செல்லும்.

காலை ஆறுமணிக்கு அம்மாவிடம் காலை
உணவோடு அன்பையும் வாங்கி கொண்டு
அந்த தேயிலை செடிகளுக்குள்
முயல்குட்டிகளை போவ ஓடிச்சென்று
படித்த கல்வி மாலையானால் நேரம்
போவதுகூட தெரியாமல் விளையாட்டு

சாமி இருட்டிற கூடாது இன்னும் கொஞ்சம்
நேரம் விளையாடனும்னு சூரியனை கெஞ்சிய நாட்கள்.
பண்டிகை காலங்களில் புத்தாடை உடுத்தி 
தின்பண்டங்கள் கொடுத்தே வாங்கி பட்டாசுகள்
கொழுத்தி அந்த சந்தோசங்களை வார்த்தைகளில்
சொல்லிவிட முடியவில்லை.
உங்களில் எத்தனை பேர்
இவற்றை எல்லாம் அனுபவத்து இருக்கிறீர்கள்..

சரியான தலைமைத்துவம் வந்தால்
எங்களுக்கான வசதிவாய்ப்புகள் சரியாக கிடைக்கும்.
உங்களுக்கு சமமாக எங்களது சகோதர
சகோதரிகளும் இன்று பல்கலைக்கழகங்கள்
பயின்று வருகின்றனர்.

மலையகத்தானும் மனிதன் தான்.
அவனையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
விடியல் ஒன்றிற்காய் காத்துக்கிடக்கும்
எறும்புக் கூட்டங்களாய்.

எல்லாம் ஒரு நாள் சரியாகும்
என்ற நம்பிக்கையில் இன்று
விதைகளாய் நாளை விருட்சங்களாய்!

-மோகன் ஜெயரட்ணம்

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை
வாய் பார்க்கும் வானம்
மௌனத்தை பிசைந்து
ஊட்டி விடு எனக்கு

அமைதியில் அடவி
ஆங்காங்கே அரவம்
காந்தள் இன் விரலால்
கோதிவிடு தலையை

மாற்றான் காதல்
மயக்கம் பிழை
வெட்கத்தில் சூரியன்
வெகு தூரம் போக

வடக்கே வானெங்கும்
வெள்ளி வெளிச்சம்
வெண்ணிலா வந்ததேன்
பெண்ணே நீ அனிச்சம்

ஒரு குவளை இன்பம்
பருகத் தாயேன்
குவளையாய் உந்தன்
இதழைத் தாயேன்

என்னில் உனக்கு
பிடித்தவை என்ன?

பிடிக்காதவை கோடி கண்டேன்
பிடித்தம் காண்கிலேன் கண்ணே

கண்டவை ஐந்து சொல்லு
கன்னத்தில் முத்தம் உண்டு

உன் மச்சம்!
கன்னம் ஈரம்

உன் கண்கள்!
காதோர ஈரம்

உன் அமைதி!
நாசி எச்சில்

உன் செருக்கு!
களுத்திடை செல்ல கடி

உன் அதரம்!
இன்பம் கரந்து
குவளையில் படைக்கிறாள்
பங்குனி மாத மித மழை

 

-ஹஜன்

Happy Birthday ஆண்டவரே!

 ஆண்டவரே!உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு! இந்த பாட்ட எல்லாருமே கேட்டுருப்பீங்க. தசாவதாரத்துல வைரமுத்து படத்துக்காக பாட்டு எழுதினாரோ இல்லையோ நம்ம ஆண்டவருக்காகவே ஒரு பாட்டு எழுதியிருக்காருனா அது இந்த பாட்டு தான்.உலக நாயகனே! அப்படினு சொல்லும்போது ரசிகர்களுக்கெல்லாம் புல்லரிச்சு போகும். அவருடைய கலைக்கு மதிப்பு தரும் ரசிகர்கள் தான் ரொம்பவே அதிகம்.ஏனா அவர் ஒரு பன்முககலைஞன். நடிகர், இயக்குனர்,நடன ஆசிரியர்,பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர்,கதை-திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி அப்படினு சொல்லிகிட்டே போகலாம்.

எம்ஜிஆர், சிவாஜி இவங்களுக்கு அப்பறமா அசைக்கமுடியாத கலைஞரா இருக்குறாருனு சொன்னா ஆண்டவரோட ஆட்டம் அப்படி. இதனால தான் திரையுலகமே இவர கொண்டாடுது. ஆறு வயதில ஆரம்பிச்சு தமிழ் சினிமாவுல 60 ஆண்டுகள பூர்த்தி செய்த இவருக்கு பாராட்டு விழாவும் நடத்தினாங்க. இன்னைக்கு தமிழ் சினிமாவே ஆண்டவர்னு கொண்டாடுற அவர்தான் உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன். அவருக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள்.!

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே

தமிழ்நாட்டில ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்குற பரமக்குடியில 1954 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி பிறந்தாரு ஆண்டவர்.அவருக்கு அப்பா அம்மா இட்ட பெயர் பார்த்தசாரதி. அவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என்கிற இரண்டு அண்ணாக்களும் நளினி ரகு என்கிற அக்காவும் இருக்காங்க. ஆண்டவரோட அப்பா டி.சீனிவாசன் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். இதனால தன்னோட பிள்ளைகளும் அதே போல படிச்சு முன்னுக்கு வரவேணும் அப்படினு கண்டிப்பா இருந்தாரு. இதனால அண்ணன் இரண்டுபேருமே தந்தை வழிய பின்பற்றி சட்டமும் பயின்றாங்க. நம்ம வீட்டுல கடைகுட்டி சிங்கம் நம்ம ஆண்டவர் தான். அவருக்கு படிப்ப விட மற்ற மற்ற கலைகளில தான் ஆர்வம் ரொம்ப அதிகம்.

படிக்குற காலத்துல நாடக அரங்கேற்றங்களில பங்கேற்பது ஆண்டவருக்கு மிகவும் பிடிக்கும். அதனால 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே அவரு படிச்சாரு. கலையின் மீது இருந்த அலாதியான ஆர்வத்தினால’டி.கே.எஸ்’ என்ற நாடகக்குழுவில சேர்ந்தாரு. அதுக்கு அப்பறமா ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்கிற பாடல் மூலமா தமிழ் சினிமாவோட குழந்தை நட்சத்திரமா அறிமுகமானாரு ஆண்டவர்.

ஆறிலிருந்து அறுபது வரை

1960ல் ஆறு வயதில ஜெமினிகணேஷன் நடிச்ச ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில முதன்முதல்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சு சினிமாக்குள்ள நுழைஞ்சாரு ஆண்டவர். ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ அப்படிங்குற பாடல்ல அறிமுகமான போதே அவருக்கு பெரிய நடிகர்களோட ஆசிர்வாதமும் அவர்கள் கூட நடிக்கும் வாய்ப்பும் கிடைச்சிச்சு. அதுமட்டுமில்லாம இந்த படத்துக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்கிற ‘இந்திய தேசிய விருதுதையும்’ பெற்றாரு. அதோட இந்த படத்துக்காக ஜனாதிபதி கிட்டயிருந்து தங்கப் பதக்கத்தையும் பெற்றாரு.

இதுக்கு அப்றம் சில படங்களையும் நடிச்சாரு. குழந்தையாக வந்த நம்ம ஆண்டவர் இளைஞனாக ஆனதும் 1970 ‘மாணவன்’ படத்துல ‘விசில் அடிச்சான் குஞ்சுகளா’ பாட்டுக்கு நடனமாடினாரு. அதுக்கு அப்பறமா 1973 இல் கே.பாலச்சந்தர் அவருடைய ‘அரங்கேற்றம்’ திரைப்படத்தில தியாகு அப்படிங்குற துணை கதாபாத்திரத்தில நடிச்சாரு. பல துணைக் கதாபாத்திரங்கள்ல நடிச்சாலும் ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற படங்களில் வில்லன் கேரக்டராகவும் நம்ம ஆண்டவர் பண்ணியிருக்காரு.1974 இல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படம் தான் அவரு துணைக் கதாபாத்திரமா நடிச்ச கடைசித் திரைப்படமாகும்.

ஆண்டவர் முதன் முதலா கதாநாயகனாக அறிமுகமானது 1974 இல் வெளிவந்த ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமா தான். இந்தப் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றாரு. அதுக்கு அப்பறமா தமிழ் சினிமாவுல அவர கதாநாயகனா அறிமுகப்படுத்தியவரு இயக்குனர் கே.பாலச்சந்தர் தான். அவர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலமா தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனா உருவெடுத்தாரு.

சூப்பர் ஸ்டாரையும், ஆண்டவரையும் கதாநாயகர்களா அறிமுகப்படுத்திய பெருமை கே.பாலச்சந்தருக்கு தான் போய் சேரும். இந்த இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சு ஹிட்டான படங்கள் நிறையவே இருக்கு. 16 வயதினிலே, மூன்று முடிச்சு, அவர்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது போன்ற படங்கள்ல நடிச்சதோடு இது எல்லாமே தமிழ் சினிமாவுல நல்ல வரவேற்பையும் பெற்றிச்சு.

அதுக்கு அப்பறமா நம்ம ஆண்டவர் ஏகப்பட்ட படங்கள நடிச்சாரு. சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நீயா, கல்யாண ராமன், நினைத்தாலே இனிக்கும், ராஜப்பார்வை, மூன்றாம் பிறை போன்ற படங்கள்ல நடிச்சு அதுக்கு விருதும் வாங்கினாரு. குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், அவ்வை ஷண்முகி திரைப்படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடிச்ச திரைப்படங்களாகும். நகைச்சுவையான கதாநாயகனாவும் நடிச்ச தெனாலி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற திரைப்படங்களும் எதிர்பார்த்தத விட நல்லாவே ஹிட் ஆனது.

வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், விஸ்வரூபம் திரைப்படமெல்லாம் உலகளவில விஸ்வரூப வெற்றியையும் பெற்றிச்சு. தமிழ் சினிமாவுல மட்டுமில்லாம அவர் ஹிந்தித் திரைப்படங்களையும் நடிச்சு மாஸ் காட்டியிருக்காரு. ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக், கிரஃப்தார் போன்ற ஹிந்தி படங்கள குறிப்பிட்டு சொல்லலாம். ஒரு கலைஞனுக்கு ஒரு மொழியில்லை என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு நம்ம ஆண்டவர் தான். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி, கன்னடா,பெங்காலினு ஏகப்பட்ட மொழிகள கிட்டதட்ட 230 படங்களுக்கு மேல நம்ம ஆண்டவர் நடிச்சி இருக்காரு.

அண்ணாத்த ஆடுறார் ஒத்திகோ.

படிப்ப நிறுத்தின அப்பறமா ‘சிவாலயா’ என்ற நடனக்குழுவைத் தன் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினாரு. அதன் பின்னர் திரைப்படத்துறையில நடன அமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து கலைப் பணியாற்றினாரு.சின்ன வயதிலேயே நம்ம ஆண்டவர் நடனமாடத் தொடங்கிட்டாரு. எம்.எஸ்.நடராஜன் மாஸ்டர் கிட்ட குச்சுப்புடி, தங்கப்பன் மாஸ்டர் கிட்ட பரதம், கதகளி அப்படினு முக்கிய நடனக்கலைகளை எல்லாம் படிச்சு திரையுலகத்துல நடனக் கலைஞராகவே ஆரம்ப காலத்துல வலம் வந்தாரு நம்ம ஆண்டவர். ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில எம்.ஜி.ஆருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில சிவாஜிக்கும் ‘அன்புத்தங்கை’ படத்தில ஜெயலலிதாவுக்கும் நடன ஆசிரியராக பணியாற்றியிருக்காரு.

அத்தோட பத்துக்கும் மேற்பட்ட படங்களில டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் நம்ம ஆண்டவர். அவருடைய திரைப்படத்தின் சில பாடல்களில பரதமும் ஆடியிருக்காரு. அதிலையும் சலங்கை ஒளி படத்துல நாத விநோதங்கள்,விஸ்வரூபம் திரைப்படத்துல ‘உனைக் காணாமல்’ பாட்டு போன்ற பல பாடல்களுக்கு அவரு ஆடிய பரதம் ரசிகர்கள் பலர மெய்சிலிர்க்க வைச்சதுனு சொல்லலாம். கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான் நம்ம ஆண்டவர் நடிப்பு,நடனத்திற்கு மட்டுமில்ல பாட்டு பாடுறதுலையும் பாட்டு எழுதுறதுலையும் குரு தான்.

சிகப்பு ரோஜாக்கள், நாயகன், தேவர் மகன், குணா, மைக்கல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, அன்பே சிவம், புதுப்பேட்டை, மன்மதன் அம்பு, விருமாண்டி, விக்ரம் என 70 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்காரு. அதிலையும் குறிப்பா சொல்லனும்னா மன்மதன் அம்பு திரைப்படத்துல வரும் ‘நீல வானம்’ பாடலை நம்ம ஆண்டவர் பெக்வெர்ட்ல பாடியிருக்காரு. அதாவது அந்த பாட்டுல வீடீயோ க்ளிப்ல வரும் சீன்ஸ போலவே அந்த பாட்டோட வரிகளையும் நம்ம ஆண்டவர் ரிவர்ஸ்ல பாடியிருக்காரு.

நான் தான் சகலாகலாவல்லவன்

ஆண்டவர் நடிச்சு ஹிட் ஆகின ஒரு முக்கியமான திரைப்படம் தசாவதாரம். அந்தப் படத்துல நம்ம ஆண்டவர் பத்து கேரக்டரா நடிச்சு இருப்பாரு. நடிப்புல அவர அடிச்சுக்க ஆளே இல்லைனு சொல்லலாம். நடிப்பு மட்டுமில்லாம ஏனைய கலைகளையும் அவருக்கு ஆர்வம் அதிகம். இதனால தான் அவர பன்முககலைஞனு எல்லாருமே அடையாளப்படுத்துறாங்க. இயக்கம், தயாரிப்பு,திரைக்கதை, வசனம்னு பல துறைகளையும் தொட்டுவிட்டாரு நம்ம ஆண்டவர். ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கிறாரு. அவரோட திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ என்கிற நிறுவனத்தின் மூலமா 20 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள தயாரிச்சும் இருக்காரு.

அதுல அவரோட 100 திரைப்படமான ராஜபார்வை தொடங்கி விக்ரம், தேவர்மகன், குருதிப்புனல், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற பல படங்கள அவரு தயாரிச்சிருக்காரு. ஒரு திரைக்கதை ஆசிரியரா அவரோட முக்கிய திரைப்படங்களான மகாநதி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்காரு. சினிமாத் துறையில எவ்வளவு ஆர்வமோ அதேயளவு ஆர்வத்தை இலக்கியத் துறையிலையும் காட்டி வாராரு நம்ம ஆண்டவர். 1980 ஆம் ஆண்டுல ‘மய்யம்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்தாரு.

‘தேடி தீர்ப்போம் வா’ என்கிற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுருக்காரு. அதுல அரசியல், சினிமா, காஷ்மீர் பிரச்சனை, போதை விழிப்புணர்வு இப்படி பல விடயங்கள சுட்டிக் காட்டியிருக்காரு. இதயம் பேசுகிறது வார இதழில ‘தாயம்’ என்ற தொடர்கதையையும் ஆனந்த விகடன் இதழில ‘என்னுள் மையம் கொண்ட புயல்’என்கிற தொடரையும் எழுதியிருக்கிறாரு. புத்தகங்கள் எழுதுறதுல மட்டுமல்லாம கவிதை எழுதுவது, மற்றவர்கள் எழுதிய புத்தகங்கள வாசிப்பது அத பலரோட பகிர்ந்து கொள்வதுனு ஒரு இலக்கியவாதியாகவும் நம்ம ஆண்டவர் திகழ்றாரு.

ஒரு நடிகன் என்பதை தாண்டி ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தன்னோட பணிய சிறப்பா செய்து வராரு ஆண்டவர். விஜய் தொலைக்காட்சியில ஒளிபரப்பாகுர பிக் போஸ் நிகழ்ச்சிய 2017 ஆம் ஆண்டுல இருந்து இப்போ வரைக்கும் கடந்து ஆறு சீசன்களாக தொகுத்து வராரு. அதிலையும் குறிப்பா சொல்லனும்னா சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில நம்ம ஆண்டவர் வாரத பார்க்குறதுக்காகவும், அவரு பேசுறதை கேட்குறதுக்காகவுமே நிறையபேர் அந்த டைம்ல பிக்போஸ் பார்க்குறாங்களாம்.

நாயகன் மீண்டும் வரார்.

தன்னோட திரைப்படங்களின் மூலமா மறைமுகமா அரசியல் பேசின நம்ம ஆண்டவர் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. இராமேஸ்வரத்தில இருக்குற முன்னாள் குடியரசுத் தலைவர் அறிவியல் மாமேதை அப்துல் கலாம் அவரோட வீட்டுக்குப் போய் அங்கு அவரோட சகோதரர சந்திச்சு அவரோட ஆசிர்வாதத்தோட தன்னோட அரசியல் பயணத்தை ஆரம்பிச்சி இருக்காரு.மக்களுக்கு நல்லது செய்ய ஒரு மக்கள் தொண்டனா தன்னோட கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ அப்படிங்குற பெயர் வச்சி ஆரம்பிச்சி இருக்காரு. நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல்களில தோல்விய தழுவினாலுமே லட்சக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் மற்றும் மக்களோட ஆதரவு பெருமளவுல நம்ம ஆண்டவருக்கு கிடைச்சதுனு சொல்லலாம்.

உங்கள் நான்

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தியவரு தான் நம்ம ஆண்டவர். அதோட நிறுத்திடாம அதன் மூலமா நிறைய நல்ல விடயங்கள் நடக்கவும் அவரு ஆதரவா இருந்து இருக்காரு. இந்த நற்பணி மன்றத்தில இருக்கவங்க பத்தாயிரத்துக்கும் அதிகமான ஜோடிக் கண்களை தானம் செய்திருக்காங்க. அதுவும் நம்ம ஆண்டவர் 2002 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் திகதி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தன்னோட உடல் உறுப்புகளை தானம் செய்யப் போவதாக பதிவு செய்துருக்காரு. அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுறது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்ற பொருட்களை வழங்குவதுனு பல நற்பணிகளில ஈடுபட்டுவராரு.

எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக ‘ஹ்ருதயராகம் 2010’ என்ற அமைப்புக்கு தூதுவராக இருந்து இருக்காரு. 2010 ஆம் ஆண்டு சென்னை போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டி கொடுத்து இருக்காரு. ஆதரவற்றவர்களுக்காக இல்லத்தையும் அமைச்சு கொடுத்து இருக்காரு. 2017 ஆம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில தமிழ் இருக்கை அமைக்கனும்னு அதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து இருக்காரு. இப்படி பல சமூக உதவிகள நம்ம ஆண்டவர் பண்ணியிருக்காரு. அவரு அடிக்கடி சொல்ற ‘உங்கள் நான்’ என்ற வார்த்தைக்கு ஏற்றமாதிரியே மக்கள் குறைகளை தீர்க்கும் சேவகனாகவும் நம்ம ஆண்டவர் வாழ்ந்து வராரு.

நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன்

சிறந்த நடிப்பிற்காக களத்தூர் கண்ணம்மா, மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் இப்படி சில படங்களுக்கு இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றிருக்காரு. இந்தியா அரசு மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது, செவாலியே விருதுகள நம்ம ஆண்டவருக்கு வழங்கி கௌரவிப்பு செய்தாங்க. 2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவிச்சாங்க. இப்படி பல உயரிய விருதுகளை வென்றெடுத்த ஒரே நடிகர் நம்ம ஆண்டவர் தான்.

யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா?

-மிஸ்டர் போயட்டு

ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!

“இரவு”காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.
 கணவன் மனைவியை காதலிக்க வைக்கும்.
வேலை முடிய அசதியில் வந்தவரை
அன்னை மடியாய் தூங்க செய்யும்.
நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன்
நகர் ஊர்வலம் அனுப்பும்.
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தரும்.

அவ்வளவா!

கொஞ்சம் பொறு எல்லாத்துக்கும் இரண்டு முகம் இருக்கு.
பூமிக்கு சூரியன் சந்திரன் போல
நாணயத்துல பூ தலை போல
இந்த இரவுகளுக்கும் இன்னொரு முகம் இருக்கிறது

 

பலரை புலம்ப வைத்து கொண்டிருக்கும் நரகங்கள் அது!
பழைய நினைவுகளை மீட்டெடுத்து
மீண்டும் மனதை உடைத்து நொறுக்கும்.
தொலைதூர காதலர்களை வாட்டி எடுக்கும்.

உறவுகளை பிரிந்து வாழ்பவரை
காண வேண்டும் என்று நினைவுப்படுத்தி
கண்ணீரை தந்தே செல்லும்..
நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது
என்று ஏழைகளை புலம்ப வைக்கும்

ஓர் இரவால் நம்மை எப்படி வேணாலும்
ஆட்டிப் படைக்க முடியும்.
இந்த இரவில் சிலர் பூத்து குளுங்குறார்கள்
சிலர் வாடி வதை படுகிறார்கள்.

-மோகன் ஜெயரத்னம்

index.php