Blog Page 31

இலங்கை பெண்கள் முடிவெட்டும்போது நிகழும் அலப்பறைகள்

எந்தப் பெண்ணிடம் சென்று தலைமுடி வெட்டுதல் பற்றி வினவினாலும், அவள் சொல்லும் ஒரே பதில் “அது ஒன்றும் அவ்வளவு எளிதான விடயமல்ல. அது ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சி பூர்வமான அனுபவம்.” என்று கூறுவதை உங்களால் அவதானிக்க முடியும். தலைமுடி என்பது எப்போதும் எங்களுடன் இருக்கின்ற பல தரப்பட்ட ரீதியில் எங்களால் பராமரிக்கப்பட்டு வரும் ஒன்றாகும். அதனை வெட்டும் போது ஒவ்வொரு பெண்ணும் பல்வேறு பட்ட கட்டங்களை கடந்து செல்கின்றனர். அவ்வாறாக தலை முடி வெட்டுதலின் போது பெண்கள் பொதுவாக கடந்து செல்கின்ற கட்டங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

திடீர் யோசனை

ஒரு பெண் தன்னுடைய தலை முடியை வெட்ட வேண்டும் என, வழமையான நாட்களில் திடீரென எப்போதாவது தீர்மானிக்கின்றாள். அதற்கு பின் அவளது சுய நினைவிற்கு எட்டியோ எட்டாமலோ பல தரப்பட்ட காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றுள் எதாவது ஓர் பிரபலத்தின் புதிய சிகையலங்காரத்தினால் ஈர்க்கப்படல், கசப்பான அனுபவங்களை ருசித்து வரும் வாழ்க்கை பாதையில் ஏதேனும் புதிய மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புதல், “நீளமான தலைமுடியே பெண்களுக்கு அழகு சேர்ப்பது” என கூறி வரும் பெற்றோர்களின் பாரம்பரிய கருத்துக்கு எதிராக செயற்பட எண்ணுதல் போன்றவை அடங்கும். எது எவ்வாறாக இருப்பினும் பெண்களுக்கு அப்போது தேவைப்படுவது எல்லாம் ஒரு ஹேர்கட் தான்.

தீவிர ஆராய்ச்சி

பெண்கள் தங்களது புதிய சிகையலங்காரத்தினை தெரிவு செய்யும் போது ஓர் துப்பறிவாளரைப் போல் செயற்பட தொடங்குகின்றனர். அதிகமான நேரத்தினை இணையத்தில் செலவிட்டு ஆராயத் தொடங்குகின்றனர். சிகையலங்காரத்தின் வகைகளை தேடி திரட்டி அதில் தனக்கென ஓரிரண்டு வகைகளை குறித்து வைத்துக் கொள்கின்றனர். என்ன தான் இருந்தாலும் இறுதியில் தனக்கு தேவையானதை தான் தெரிவு செய்யப் போகிறோம் என்பதனை அறிந்தும், நண்பர்களிடமும் ஆலோசனை கேட்க ஆரம்பிக்கின்றனர். இறுதியில் நண்பர்களின் கருத்துக்களினால் குழம்பத்துக்குள்ளாகி விடுகின்றனர். இதை கேட்கும் போது வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் இது தான் உண்மை.

முடிவெடுத்தல்


இவ்வாறாக பல தரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் நண்பர்களின் கருத்துக்களினால் குழப்பத்தின் உச்சகட்டத்திற்கு சென்று விடுகிறார்கள். பெண்கள் ஹேர்கட் செய்வதற்கு முன்னர் சலூனில் முன்பதிவு செய்வது வழக்கம். இவ்வாறாக குழப்பத்திலிருக்கும் போது, அந்த முன்பதிவு காலமும் நெருங்கிக் கொண்டு வர வேறு வழியின்றி தான் நடத்திய ஆராய்ச்சி மற்றும் பிறரின் கருத்துக்கள் என அனைத்தையும் கொண்டு ஓர் மதிப்பாய்வு செய்து, ஒரு வழியாக ஓர் சிகையலங்காரத்தை தெரிவு செய்கிறாள். தன்னை தானே அந்த சிகையலங்காரத்திற்கு தயார் செய்து கொண்டு மிகவும் தன்நம்பிக்கையோடு இறுதி முடிவினை எடுக்கிறாள். முடிந்ததாக நினைக்கும் போது தான் ஓர் விடயம் ஆரம்பிக்கிறது. தனது முடிவை பற்றி தன் தாயிடம் விளக்கும் போது அவரிடமிருந்து எழும் கேள்விகள் அவளை மீண்டும் ஓர் குழப்ப நிலைக்கு தள்ளி விடுகிறது.

சுயத்தின் மீதான சந்தேகம்

இறுதியாக ஓர் வழியாக முன்பதிவு செய்து கொண்ட நாளில் காலடி எடுத்து வைக்கின்றனர். அந்நாளில் சலூனுக்கு செல்லும் போது சிகையலங்கார நிபுணர் பெண்களிடம் என்ன மாதிரியான ஹேர்கட் வேண்டும் என கேட்டு பல தரப்பட்ட சிகையலங்காரம் பற்றி விளக்க ஆரம்பிக்கின்றனர். எங்கள் பெண்களும் சிகையலங்கார நிபுணர் கூறுவதை எல்லாம் காது கொடுத்து கவனித்து கேட்பதுப் போல் பாவனை செய்து விட்டு இறுதியில் இணையத்தில் தாம் அலசி எடுத்த ஸ்க்ரீன் ஷொட்களை சிகையலங்கார நிபுணரிடம் காட்டுகின்றனர். ஒரு வழியாக ஓர் தீர்மானத்திற்கு வந்த பின்னும் கூட “இந்த ஹேர்கட் எனக்கு அழகாக இருக்குமா?”, “ஒரு வேளை ஓழுங்காக கட் செய்யாமல் தவறாக கட் செய்து விடுவாரோ?”, “மீண்டும் இதே நீளத்திற்கு முடி வளராவிட்டால்?” என பல சந்தேகங்களை தங்கள் சுயத்துள் வளர்த்து பதற்றமடைய தொடங்குகின்றனர்.

ஆரம்ப அதிர்ச்சி

‘ஸ்னிப்’ சிகையலங்கார நிபுணர் முதல் வெட்டினை வெட்டும் போது அதில் துண்டாகி தரையில் விழும் முடியினை திகிலான ஓர் பார்வையுடன் பார்க்கின்றனர். அதனை வைத்து தான் தவறான முடிவு எடுத்து விட்டதாக எண்ணி வருத்தமடைவதுமுண்டு. இப்போது எல்லாம் கை மீறி போய் விட்டது, இந்த முடிவிலிருந்து திரும்ப வாய்ப்பே இல்லை என்பதை அறிந்து தன் இரு கண்களையும் மூடிய படி தனது சிகையலங்காரம் அழகாக வர வேண்டும் என எல்லா கடவுளையும் பிராத்திக்க ஆரம்பிக்கின்றனர்.

அதை நேசிப்பது போல் நடிப்பது


ஹேர்கட் முடிந்ததும், பெண்கள் புதிதாக மாற்றப்பட்ட சிகையலங்காரத்தினை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். சிகையலங்கார நிபுணர் புன்னகைத்த படி தலையின் பின்புறத்தை ஓர் கண்ணாடியில் காட்டிக் கொண்டே பெண்களின் விருப்பத்தை கேட்பார். பெண்களும் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதை மறைத்து தனக்கு மிகவும் பிடித்தது போல் பாவனை செய்து, போலியாக புன்னகைப்பர். அதன் பின் வீட்டிற்கு சென்று தனது பழைய சிகையலங்காரத்தினை நினைத்துப்பார்த்து கண்ணாடி முன் நின்று அழுந்து புலம்புவர்.

ஆவேசம்


அதற்குப் பின் அவர்கள் வீட்டின் கண்ணாடி முன் அநியாயமாக நேரத்தினை செலவிட தொடங்குகின்றனர். தங்களது புதிய சிகையலங்காரத்தினை பல கோணங்களில் மாற்றி செல்பி எடுத்து தனது நண்பர்களுக்கும் அனுப்ப தொடங்குகின்றனர். மீண்டும் மீண்டும் வேறு வேறு ஸ்டைல்களில் முடியினை அலங்கரித்து பார்ப்பதினால் புதிய ஹேர்கட் பற்றிய நல்ல மனநிலைக்கு வருவதற்கு மாறாக, மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டு அடுத்த சில மாதங்களை தொப்பிக்குள் கழிக்க தீர்மானிக்கின்றனர்.

கருத்துக்கள்


பெண்கள் எதிர்ப்பார்ப்பதை விட அதிகமான கருத்துக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்து சேர்கிறது. நண்பர்கள் அவர்களுக்கு தன்நம்பிக்கை ஊட்டும் வகையிலான கருத்துக்களை கூறுவர். அதாவது அவர்களது புதிய சிகையலங்காரம் அழகாக இருக்கிறது என்றும் அது தனக்கும் பிடித்திருக்கிறது என்றும் கூறுவர். ஆனால் ஆரம்பத்தில் பெண்கள் தனது புதிய சிகையலங்காரத்தின் போது கடந்து வந்த அதிர்ச்சி, ஆவேசம் மற்றும் குழப்பம் ஆகியவற்றை அளவுக்கதிகமாக சந்திப்பவர்களாக குடும்பத்தில் உள்ள சில அத்தைகள் பாவனை செய்கின்றனர். அவர்கள் தனக்கு “உன்னுடைய பழைய நீளமான கூந்தல் தான் பிடிக்கும்” என கூறி, அதன் பின் ஏதோ சமாதானம் செய்வதுப் போல் “பரவாயில்லை.. இதுவும் ஏதோ நன்றாக தான் உள்ளது” என கூறி முடித்து விடாது, போனஸ் வசனமாக “இந்த காலத்து பெண்களை பாருங்களேன்” என கூறி முடிக்கின்றனர்.

அதை நேசிக்க ஆரம்பித்தல்


சரியாக ஒரு வாரம் கழித்து வெட்டப்பட்ட முடி லேசாக வளரத் தொடங்கும்போது அந்த சிகையலங்காரம் அழகாக தெரிவது போல் உணர ஆரம்பிக்கிறார்கள் பெண்கள். இத்தனை நாட்கள் வீணே கவலையுற்றதன் காரணத்தினை எண்ணி புன்னகைக்க தொடங்குகின்றனர். கண்ணாடி முன் நின்று தன்னை தானே ரசிக்கின்றனர். தனது புதிய சிகையலங்காரத்துடன் தோன்றும் சுயத்தினை மேலும் நேசிக்கின்றனர்.

கலியாணக் கரகம் – பாடல் – நாடி Review

திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றாக இணைய, சமூக அந்தஸ்தினை பெற ஒரு அடையாளமாக அமைகிறது. இந்த திருமணம் நடைபெற சாதி, மதம் அந்தஸ்து சீதனம் என  பல்வேறு விடயங்கள் தடைகளாக அமைகின்றன. எனினும் காலத்துக் காலம் எத்தனையோ விடயங்கள் மாறினாலும்  திருமனத்தின் போது வழங்கப்படும் சீதன சம்பிரதாயங்கள் இன்னும் மாறவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

இன்றைய காலத்து சமுதாயம், நம் முன்னோர்கள் பின்பற்றிய எத்தனையோ விடயங்களை பின்பற்ற தயங்குகிறது. எனினும் முன்னோர்கள் பின்பற்றி, நம்மால் மறக்கப்பட வேண்டிய விடயங்களை தலையாய கடமையாக பின்பற்றுகிறது. அதில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் குடுபத்தினரால் மணமகனுக்கு செலுத்தக் கூடிய வாழ் நாள் வரி தான் இந்த சீதனம்.

ஒரு குடுபத்தில் ஒரு ஆண் மூத்தவனாக பிறந்து விட்டால், தனது சகோதரிக்குரிய திருமண வாழ்வினை அமைத்து தருவது அவனுக்கு கடமையாக விதிக்கப்படுகிறது. கடமையினை நிறைவேற்ற அவன் எவ்வாறு பாடுபடுகின்றான் என்ற கவலைக்குரிய யதார்த்தத்தை, சமுதாயத்திற்கு எளிய முறையிலும் மிகவும் நகைச்சுவையான முறையிலும் சொல்கிறது, YouTube தளத்தில் வெளியான இந்த ‘கலியாணக்கரகம்’ பாடல்.

ஜோனா வின் இசையில், உமாகரன் ராசய்யா மற்றும் மதன் சி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். அதேவேளையில், ஹரிதேவா மற்றும் மதன் சி ஆகியோர் இந்த பாடலினை பாடியுள்ளனர்.

மேலும் எ. கே. கமலின் ஔிப்பதிவில், மதிசுதா பாடலினை இயக்கி நடித்துள்ளார்.
பாடலினை பொறுத்தவரையில், ஆரம்பம் சரியாக அமையவில்லையோ என்ற எண்ணம் தோன்றினாலும், ‘கரகம் இது கல்யாணக்கரகம்’ என்று ஆரம்பிக்கும் வரிகளில் இருந்து பாடலில் energy பிறக்கின்றது. சரணத்தில் சில வரிகள் கேட்கும் போது, வேண்டுமென்று புகுத்தபட்டு, அவை பாடலின் மெட்டுடன் ஒன்றென கலக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், யாழ் வட்டார வழக்கில் பாடல் அமைந்தது பாடலைக் கேட்பதற்கு தூண்டுகிறது.

கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும், பாடலி்ன் இதயமாக இணைந்து இயங்கியுள்ளது. முக்கியமாக கதாபாத்திர தெரிவுக்காக இயக்குனரை பாராட்டியாக வேண்டும். காட்சியமைப்புகளை பொறுத்தவரையில், குறிப்பாக ஆரம்பத்தில் அண்ணனும் தங்கையும் பகிடி விடும் காட்சிகள், சாதாரணமாக வீடுகளில் நடைபெறுவதை போல் மிகவும் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படி பல எளிமையான இயல்பான மற்றும் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள், பாடலுக்கு வலுவூட்டுகின்றன.

ஔிப்பதிவை பொறுத்தவரையில், இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அது பாடலின் தரத்தினை மெருகூட்ட கை கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

குறிப்பாக ஒரு சமூகம், யதார்த்தத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எளிதாக வரிகளில் எழுதிட முடியாது. எனினும் சீதனம் எனும் பிடியில் சிக்கித் தவிக்கும் எமது பெண்களின் நிலையையும், அதேவேளையில் அவர்களது குடும்பம் எதிர்நோக்கும் அவமானங்களையும், நகைச்சுவையான வரிகள் மற்றும் காட்சிகளினூடாக மக்கள் மனதில் பதிய வைத்து, பார்பவர்களை சிந்திக்க வைப்பதென்பது மிகவும் கடினமான ஒரு விடயம்!  மதிசுதா பாடலின் இயக்குனர் மற்றும் கதாநாயகனாக, படக்குழுவோடு இணைந்து அச் சவாலினை எதிர்கொண்டு அதில் வெற்றியடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.

கலியாணக்கரகம் – சம நிலையில்
Nadi Verdict – 63 / 100
Video Link  – https://youtu.be/FuSKJZkgya8

இலங்கையில் COVID கால திருமணங்கள்

கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள் ஏராளம்.

முன்பெல்லாம் ஆடம்பரத்திலும் அதிக செலவிலும் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து திருவிழாக்களை போல் திருமணங்கள் இடம்பெற்று வந்தன. பல மைல் தூரங்களில் இருந்து வந்த குடும்பங்கள் எல்லாம் ஓரிடத்தில் சந்திக்க கூடியதாக இருந்தது. ஆயினும் தற்காலத்தில் அச்சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டு,  அதிகளவான அலப்பறைகள், ஆரவாரங்கள் ஏதுமின்றி, மண்டப செலவு, உணவுச் செலவு, புகைப்படச் செலவு போன்ற இலட்சங்களில் இடம்பெறும் செலவுகளேதுமின்றி எளிமையான முறையில், இலகுவான அமைப்பில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களுடன் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றது. இதுவும் ஓர் சிறந்த முறை தான். நவ நாகரீகம் உச்சத்தில் காணப்படும் காலத்தில் இதுவுமோர் ஆச்சர்யமான திருப்புமுனையே. 

இருந்தாலும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களை மன உளைச்சலில் இருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு சிறந்த முறையே COVID கால திருமணங்கள் ஆகும். இவ்வாறான வைபவங்களை முன்னெடுப்பதால் COVID நீரோட்டத்தில் நீச்சலடித்து நீந்துவதற்கான சந்தர்ப்பமாக அமையும். திடீரென COVID இல் இருந்து பாதுகாப்பு பெற்று வாழப் பழக முடியாது, அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து, 

  • சமூக இடைவெளி
  • கைகளைக் அடிக்கடி சோப் போட்டு கழுவுதல், கைக்குட்டை பயன்படுத்தல்
  • முறையாக மாஸ்க் அணிதல் 
  • முழுமையாக மூடிய ஆடை அணிதல்
  • இருமல், தும்மல் வந்தால் வாயை மூடிக்கொள்ளல்
  • சுகாதாரமான வாழ்க்கை முறை  

போன்ற COVID கால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து திருமணங்களை நடத்தும் போதே சமூகத்தை பயிற்றுவிக்க முடிகிறது.

அதேபோல் COVID கால திருமணங்களில் அதிகளவான தொற்றுக்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம். அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைப்பதனால், வரவேற்பு கைகுலுக்கல்கள் , பயன்படுத்தும் பாத்திரங்கள் போன்றவற்றால் அறியாவண்ணம் ஒருவரிலிருந்து ஒருவருக்கு இலகுவாய் தொற்று ஏற்படுகிறது. அதேபோன்று பல இளைஞர் யுவதிகளது ஆசைகள் நிராசையாகின்றன. உடன்பிறந்த உடன்பிறப்புகளை கூட இணைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை, இக்காலகட்டத்தில் பல குடும்பங்களால் முகம் கொடுக்க நேரிடுகிறது. திருமணத்துக்கு சில முக்கியஸ்தர்களை அழைக்கவில்லை எனவும் சில வாய்த் தர்க்கங்கள் zoomஇன் மூலம் இடம்பெற்று வருகிறது. அண்மைக்காலத்தில் உச்ச நிலையை தொட்ட திருமண வியாபாரங்களும் (மேட்ரிமோனி வெப்சைட் தொடக்கம் திருமணத்திற்கு அடுத்த நாள் மதிய உணவு வரை பொறுப்பெடுக்கும் வெப்சைட்கள்) பெருவாரியான பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ளது. சிலவேளைகளில், COVID கால பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்களால் பின்பற்றப்படுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் COVID திருமணங்களின் பால் முன்வைக்கப்படுகின்றது.

இவை தவிர தூர தேசத்தில் இருப்பவர்களுக்கிடையிலான Skype, WhatsApp, IMO காணொளிகளும் திருமணங்களில் முக்கிய இடம் பெறுகின்றன. இது தவிர பல்வேறு வடிவமைப்புகளில் மீட்டிங் ஐடி, மற்றும் பாஸ்வேர்ட்களை உள்ளடக்கிய வித்தியாசமான அழைப்பிதழ்களும் வலம் வருகின்றது. மேலும் COVID கால திருமணங்களில் மோசடிகளும் பெரும் பங்கு வகிக்கின்றது.

இது தவிர இக்கால திருமண நிகழ்வுகளில் பொதி செய்யப்பட்ட உணவுப் பொதிகளும் செனிடைசர்களும் மாஸ்க்களும் ஞாபகார்த்த சின்னங்களாக வழங்கப்படுகின்றன.

எது எப்படி இருப்பினும் இக்காலத்தில் திருமணங்கள்  சுகாதார அமைச்சின் COVID கால அறிவுறுத்தல்களுடன் இடம்பெற வேண்டும். அத்தோடு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு, முடிந்த அளவில் ஒத்துழைப்புடன் செயற்பட்டால் நாடு சுமூகமான நிலையை நோக்கி பயணிக்கும், அத்தோடு அனைத்தும் இனிதே இடம்பெறும்.

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?

ஞாபக மறதி

பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம்.
“மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு” என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி ஏன் வருகிறது?
இதற்கான தீர்வுதான் என்ன?நமக்கு தெரியாத உண்மைகளைப் பற்றி சில அறிவோம். ஞாபக மறதிக்கான காரணங்கள் என்ன?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஞாபகமறதி வருகின்றது.

 

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன…? தூக்கமின்மை
நாம் தூங்குவது 6 மணி நேரமாக இருப்பினும்
நம்மில் பலபேர் ஆழ்ந்து நிம்மதியாக உறங்குவது கிடையாது.
புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்றவற்றினால் நம் மூளையில் சாதாரணமாக சுரக்கக்கூடிய சுரப்பிகள் குறைவாக சுரப்பதால் ஞாபக மறதி அதிகம் ஏற்படும்.
தூங்குவதற்கு முன்னால் அதிகமாக தொலைபேசி பயன்படுத்துவது.
அதுமட்டுமில்லாமல் நாம் எந்நாளும் நடப்பது குறைவு ஏதோ ஒரு முறையில் நடக்க வேண்டிய அவசியம் வந்தால் கூட நாம் நடப்பதில்லை இக் காரணத்தினாலும் ஞாபகமறதி வரக்கூடும்.
பச்சைக் காய்கறிகள் பழங்கள் எடுத்து கொள்ளாமல் இருப்பது. இவை அனைத்தும் ஞாபகமறதிகாண முக்கிய காரணங்களாகும்.

 

ஞாபக மறதியை போக்குவதற்கான வழி என்ன…?
ஞாபக மறதி காண உணவு முறைகள் எவை என்றால் முளைக் கட்டிய தானியங்கள் சாப்பிடுவது நல்லது. இதை சாப்பிட்டால் நம் மூளையில் உள்ள ஞாபகசக்தி தன்மை கூடும்.
பச்சைக் காய்கறிகள் பச்சை பழங்கள் கீரை வகைகள் அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்ல தீர்வு தரும்.
வல்லாரை பொடி, துளசி பொடி, சுக்குப்பொடி, வசம்பு பொடி, மஞ்சள் தூள், அதிமதுரம், கோஷ்டம், ஓமம், திப்பிலி, மரமஞ்சள், சீரகம் மற்றும் இந்துப்பு போன்றவற்றை சேகரித்து உலர்த்தி, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்த மருந்துகளில், வல்லாரையும், துளசியும் மற்ற மூலிகைகளைவிட, இரு மடங்கு அதிக அளவில், இருக்க வேண்டும்.பின்னர் இவை அனைத்தையும் சேர்த்து, அரைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளில் சிறிதளவு எடுத்து, தினமும் இருவேளை சாப்பிட வேண்டும், நெய் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
தொடர்ந்து தினமும் இருவேளை, இந்த மருந்தை நாற்பத்தெட்டு நாட்கள் விடாமல் சாப்பிட்டு வர ஞாபக மறதி முற்றாக நீங்கி விடும்.
கரு மஞ்சள் நாம் சாப்பிடும் கறி வகைகள் சாப்பாடு வகைகளில் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
சில எளிய மனப் பயிற்சிகளின் மூலம், நாம் நினைவாற்றலை மேம்படுத்த முடியும் என்றாலும் கூட, உடல் வலுவாக, இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சிகள் அவசியம். முறையான உடற்பயிற்சிகளை, தினமும் சிறிது நேரம் செய்து வர வேண்டும். இது, உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, உற்சாக மனநிலையை உருவாக்கும்.
தூங்குவதற்கு முன் அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு நாம் எந்தவித தொலைபேசி தொலைக்காட்சி பார்க்காது இருப்பது நல்லது. அதில் உள்ள வெளிச்சம் நம் கண்களை பாதிக்கும்.
இரவில் நம் மூளையில் சுரக்கக்கூடிய சுரப்பிகள் வெளிச்சத்தினால் குறைந்து காலையில் நாம் எழும்போது நாம் மூளை சோம்பேறி குணம் அண்டி எழும்ப வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் இதுவே!
மேலும் நம்மில் பல பேர் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையாகின்றோம்.

 


இப்பழக்கத்தை தவிர்ப்பது மிக சிறந்ததாகும்.புகைப்பிடித்தல் ,மது அருந்துதல் போன்ற பழக்கத்தினால் நம் மூளையில் சுரக்கக்கூடிய சுரப்பிகள் சற்று குறைவாக காணப்படும். ஆப்பிள், திராட்சை, பேரிட்சை மற்றும் வெண்டை, நெல்லிக்காய், புதினா, பூண்டு மற்றும் கேரட், பீட்ரூட் போன்ற பழ, காய்கறி வகைகளை அடிக்கடி, உணவில் சேர்த்து வரலாம். மேலும், பாதாம் பருப்பு மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர, மூளையின் ஆற்றல் அதிகரித்து, நினைவாற்றல் சக்தி கூடும்.

தற்காலத்தில் இலங்கையின் கடற்தொழில் துறை எதிர்நோக்கும் இடர்கள்

கொரோனா பெருந்தொற்றானது சமீப காலத்தில் அனைத்து துறைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம், தனிநபர் வருமானம், அந்நிய செலாவணி உட்பட அனைத்து விடயங்களும் மந்த நிலையடைந்துள்ளன. கல்வி, விவசாயம், சுற்றுலா என்பவற்றுடன் கடற்தொழில் சார் விடயங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மீன்பிடி தொழில் துறைகளும் சீரழிந்து போயுள்ள நிலையில், அது கடல்சார் துறைகளை நம்பி வாழும் பொதுமக்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

நம் நாட்டினை பொறுத்தவரையில், இது ஒரு தீவு நாடாக உள்ளமையினால் இங்கு நாட்டைச் சுற்றிய அனைத்து கரையோரப் பிரதேசங்களும் கடற்தொழிலை நம்பியே அமையப்பெற்றுள்ளன. எனவே இதனை வாழ்வாதாரமாகவும், ஜீவனோபாயமாக கொண்டு வாழ்கின்ற எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்களின் தொழில் வாய்ப்புகளும், அன்றாட வருமானமும் இழக்கப்பட்ட நிலையிலேதான் தற்கால மக்கள் வாழ்வினை எதிர்கொள்கிறார்கள். இலங்கைத் தீவானது தொன்றுதொட்டு கடல் வழியாக பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ரீதியாக நட்புறவினைப் பேணுகின்ற நாடாகும். இத்தகைய சூழலில், பெரும்பாலான வேளைகளில் இலங்கை நாட்டு வளங்கள் பிறநாட்டினரால் சூறையாடப்படுகின்றன.

இலங்கையானது பெருமளவில் கடற்தொழில்சார் துறையையும், தேயிலைத் தோட்டத்தையுமே தனது பொருளாதார சக்தியாகக் கொண்டுள்ளது. இப் பெறுந்தொற்றுக் காரணமாக எல்லாத் துறைகளும் தொழில் வாய்ப்புக்களை இழந்து, நாடே மிகவும் இக்கட்டானதொரு சூழ்நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அதுமட்டுமன்றி, கடலில் உக்கலடையாத பிளாஸ்டிக் பொலித்தீன் போன்ற கழிவுகளை கொட்டுவதும், கடல்வாழ் உயிரினங்களின் உயிர்களை பறிக்கின்ற இரசாயனங்களை கடலில் சேர்ப்பதும், கடல்வாழ் உயிரினங்களின் நிலவுகையை இல்லாதொழிப்பதும், கடலில் எண்ணெய் கசிவினை ஏற்படுவதும் என கடல் வளங்கள் சேதமாக்கப்பட்டு கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்ட நிலையில், உள்ள வளங்களும் வேற்று நாட்டவரால் களவாட படுகின்றன. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளாலும் நம் நாட்டு மீனவர்களின் தொழிற்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

அண்மைக் காலத்தில் நாமறிந்த விடயம் கொழும்பை அண்டிய கடற்பரப்பில் சரக்குக் கப்பல் ஒன்று தீக்கிரையானதினால் அதிலுள்ள ஏற்றுமதிப் பொருட்கள் தீப்பற்றியதுடன், கடலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் அதனை சூழவுள்ள கடலுயிர்களும் இறந்து கரையொதுங்கின. இது நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பாரியதொரு பாதிப்பாகும். இவ்வாறு எண்ணிலடங்காத கடல் வளங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மனித செயற்பாடுகள் மனிதரால், தெரிந்தும் தெரியாமலும் மேற்கொள்ளப்பட்டபடியே தான் உள்ளன. இவ்வாறே கடலுக்கும், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து நிலை தொடருமாயின், நம் நாடு வெகுவிரைவிலேயே பாரிய நஷ்டம் அடைவதுடன், பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இதனால் கடற்தொழிலை தமது வாழ்வாதாரமாகவும், வருமானமீட்டும் தொழில் வாய்ப்பாகவும் கொண்டுள்ள மீனவ சமுதாயம் மேலும் ஏழ்மை அடையக்கூடும்.

கடல் வாழ் உயிரினங்கள் அழிவடைந்து போனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு, கரையோர மீனினங்கள் முதல் ஆழ்கடல் உயிரினங்கள் வரை சிறிது சிறிதாக அழிவடைந்து, நாளடைவில் இல்லாமலேயே போகும் வாய்ப்புள்ளது. இவ்வாறாக கடல் உயிரினங்கள் அழிவடைய பெரியளவு பங்களிப்புச் செய்வது மனித செயற்பாடுகளேயாகும். இவை சிறிது சிறிதாக ஆரம்பித்து இன்று பாரிய கடற்சவாலாக மாறியுள்ளமையை அறிந்து கொள்ள வேண்டும். அவையாவன,

  • பிளாஸ்டிக் பொலித்தீன் போன்ற உக்கலடையாத கழிவுகள் கடலில் சேருதல்.
  • திண்மக் கழிவுகள் கடலில் சேர்தல்.
  • இரசாயன கழிவுகள் நச்சுப் பதார்த்தங்கள் கடலில் சேருதல்.
  • கப்பல் போக்குவரத்தினால் கடலில் சிந்தப்படும் எண்ணெய் கழிவுகள்.
  • அத்துமீறிய மீன்பிடி தொழில்.

இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாகவே கடல் வளங்கள் அழிவடைந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியில் பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பினால், சிறிய அளவில் கடற் தொழிலை நம்பி வாழும் மீனவ சமுதாய மக்கள் தமக்கான தொழில் வாய்ப்பினை இழப்பதுடன், வருமானமின்றித் தத்தளிக்கும் நிலையும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறன பிரச்சினைகளைப் பற்றி வடமாகாணத்தில் தொழில் செய்யும் சில கடற்தொழிலாளர்களுடன்  உரையாடியபோது,

“இந்திய தொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து தொழில் செய்வதனால் நமது வளங்களை அதிகளவு அவர்கள் சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள். அதனால் எமக்கு  வருகின்ற வருமானம் சரியான குறைவாக இருக்கின்றது. அதோடு சில நேரங்களில் எமது படகுகளை தாக்கி விட்டு செல்கின்றனர். இதனால் எமது  படகுகள் பாரிய சேதத்திற்கு உள்ளாகின்றன. அரசாங்க தரப்பிற்கு கூறினால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை நிவாரணங்களும் கொடுப்பதும் இல்லை.”

“அத்துடன் அண்மைக் காலங்களாக கடலில் பழைய, பழுதடைந்த பஸ் வண்டிகள் இறக்குவதினால் நமது வலைகள் அதில் விழுந்து அறுகின்றன. சில நேரங்களில் வலைகள் காணாமலும் போகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் எமக்கு மேலதிகமாக அநாவசிய செலவுகள் ஏற்பட்டு, எங்களுக்கு மிக நட்டத்தில் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றது.”

“அரசாங்கத்தில்  இருந்து எந்தவித நிவாரணங்கள், கொடுப்பனவுகள், உதவிகள் எங்களுக்கு கிடைப்பதும் இல்லை, அரசு இது தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும்.”

இவ்வாறான பிரச்சனைகளை நம் நாட்டு அரசாங்கமும், அத் துறைசார் பிரமுகர்களும் கவனத்திற்கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பதற்கான நடவடிக்கை முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், நாளடைவில் பாரிய துறைசார் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகலாம். இவ்வாறு கடல் வளங்கள் அழிவடைவதால் அதனை சார்ந்த ஏனைய தொழில் வாய்ப்புகளும் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக படகு உற்பத்தி தொழில், கருவாடு உற்பத்தி தொழில், கடல் உணவு பதப்படுத்துதல், கடல் உணவு ஏற்றுமதி ஆகிய கடலை அண்டிய ஏனைய தொழில் துறைகளும் பாதிக்கப்படுவதால், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் குடும்பங்கள் தொழிலை இழந்து தவிக்க நேரிடும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்படக் கூடும். எனவே கடல் வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். கடலை நம்பிய குடும்பங்களின் வாழ்வை நோக்காகக் கொண்டு, கடல் வாழ் உயிரினங்களின்அழிவை கட்டுப்படுத்தி அவற்றை பாதுகாப்போம்.

‘பொட்டு’ – குறும்படம் – நாடி Review

தன்னை தானே அலங்கரித்து ரசிப்பது பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரதும் இயல்பாக உள்ளது. என்னதான் நவீன வளர்ச்சி வான் தொட்ட போதும் கரு நிற மை அல்லது குங்குமம் தொட்டு பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடதக்க ஓர் விடயமாகும். இன்றைய சமூகத்தில் பெண்களது பொட்டு வைக்கும் வழக்கம் என்னென்ன மாதிரியான மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதனையும், அதனால் பெண்கள் எதிர்கொள்ளும் மன ரீதியான தாக்கங்கள் பற்றியும் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுவதே ‘பொட்டு’ குறுந்திரைப்படத்தின் கருப்பொருளாக உள்ளது. இந்த குறுந்திரைப்படத்தின் தலைப்பினை வாசித்தவுடன் இது பெண்களது வாழ்வில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்ற நன்நித்திலப் பொட்டு பற்றியது தான் என்பதனை தெளிவாக கணிக்க முடிகின்றது.

Thrii Production மற்றும் AGNA வழங்கிய, Navayuga Kugarajah நெறியாள்கை மற்றும் தயாரிப்பில் உருவான ‘பொட்டு’ குறுந்திரைப்படம் அண்மையில் YouTube தளத்தில் வெளியானது. இதில் Navayuga Kugarajah, Sharon, Pracy, Priya Daniel, Geethani, senavirathne, Manujitha Dimansa, Yasotha Rathakrishnan மற்றும் Julieana Johnphilip ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறுந் திரைப்படத்திற்கான ஔிப்பதிவினை MadHuni Hiranya Alahackone செய்துள்ளார். இந்த குறுந்திரைப்படத்திற்கான அனைத்து Editing வேலைப்பாடுகளையும் Joshuah Heby மேற்கொண்டுள்ளார். இந்த குறுந்திரைப்படத்தில் MC Raj இசையமைத்துள்ளார். இதில் Art directorஆக Goabi Ramanan Pவும் Sound production மற்றும் designகளை Nanda Nandhi Jayakody ஆகியோரும், Costume designerஆக Ama Wijesekaraவும், Make up artistஆக Madara Godageவும், Production Managerஆக Pavithra Madubashiniயும், First assistant directorஆக Ruwan Malith Peirisவும், Second assistant directorஆக Kirushanthi Gnanapragasamவும், Production co-ordinatorஆக Chathurangi Rasikala Pathirageவும், Assistant production co-ordinatorஆக Pathurjan Wijesekaraவும் பணியாற்றியுள்ளமையோடு இந்த குறுந்திரைப்படத்திற்கான மொழிபெயர்ப்பினை Nallathamby Krishnadas மேற்கொண்டுள்ளார்.

“யாருக்கும் நாங்கள் குறைந்தவர் இல்லை, எங்களிலும் குறைந்தவர் உலகத்தில் இல்லை” என்ற வி.எம்.குகராஜா என்பவரது வார்த்தைகளை மேற்கோளாக காட்டியபடி அமைதியான முறையில் குறுந்திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே, பார்வையாளர்களது மனதில் இயக்குனர் சமத்துவ ஔியினை ஏற்றுவதற்கான எண்ணெய் ஊற்றுகிறார். அப்படியே அமைதியான முறையில் ஓர் பெண் மங்கிய நிறத்திலான புடவை அணிந்து தன்னை தானே கண்ணாடி முன் நின்று ஆயத்தப்படுத்தும் காட்சியினை காட்டுகின்றனர். என்ன தான் பெண்கள் தன்னை தானே நேர்த்தியான முறையில் ஆயத்தப்படுத்திக் கொண்டாலும் இறுதியில் அனைத்திற்கும் அழகு சேர்ப்பது பொட்டு தானே. அதனால் இந்த குறுந்திரைப்படத்தில் தோன்றும் கதாநாயகியும் வழக்கம் போல் பொட்டு வைப்பதற்காக சிவப்பு நிற மை திறந்து அதில் பென்சிலின் ஒரு முனையால் எடுத்து நெற்றியில் வைக்க முற்படும் போது, அவள் ஓர் நொடி ஏதோ ஒன்றை தொலைத்தவள் போல் உறைந்து நிற்கிறாள். முன்பு அவள் வாழ்ந்த நிலையினை சிறு காட்சியாக காட்டுவதன் மூலம் எளிமையான முறையில் தெளிவுப்படுத்துகிறார்கள். கடந்த கால காட்சிகளில் இந்து சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்களால் அனுஷ்டிக்கப்படும் கௌரி காப்பு விரதத்திற்கான காப்பு நூலினையும், தாலிச்சங்கிலியையும், அவள் வட்ட முகத்தில் தெளிய சிரிக்கும் சிவப்பு திலகம் தனையும் காட்டுவதோடு நிறுத்தி விடாது, கதாநாயகியின் மகள் தனக்கும் காலுக்கு மோதிரம் வேண்டும் என கால் மிஞ்சியை சுட்டிக் காட்டும் போது, அதற்கு ‘உனக்கென கணவன் ஒருவன் வர வேண்டுமென’ கூறுவதனூடாக கதாநாயகியின் கடந்த கால மொத்த அழகும் கலைந்து இந்த கோலம் அவள் புக காரணம் அவள் கணவனை இழந்தமையே என்பது எளிதில் பார்வையாளர்களுக்கு புரிந்துவிடுகிறது.

ஏற்கனவே மனரீதியாக காயப்பட்டு கிடக்கும் கணவனை இழந்த பெண்களை சமூகமும் சுற்றத்தாரும் நடத்தும் விதம் பார்ப்பவர் மனதில் “இப்படியும் மனிதர்களா?” என்ற எரிச்சல் எழச் செய்கிறது. நன்றாக பேசி சிரிக்கும் அயலவர்கள் சட்டென மனமுடைய பேசி ஒதுக்கும் அந்தக் காட்சி, சமூகத்தின் இந்த நியதியினை உடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை உருவாக்குகிறது. கதாநாயகியின் கடந்த கால காட்சியில் தன்னிடம் பரதம் பயிலும் பிள்ளைகளுக்கு சந்தோஷமாக ஆசிர்வாதம் செய்திருப்பாள். ஆனால் நிகழ்காலத்தில் யாரோ ஓர் குழந்தை ஓடி வந்து தன் காலில் விழும் போது ஆசிர்வாதம் செய்ய தயங்கி சுற்றி எவரும் பார்க்கிறார்களா என்ற அவளது ஐயம் பார்ப்பவர் மனதில் பரிதாபத்தினை துளிர்விடச் செய்கிறது. அவள் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்கிய பிள்ளையின் தாய் காதாநாயகியிடம் தன் மகளுக்கு பரதத்தில் இருக்கும் ஆர்வத்தை கூறி தன் மகளுக்கும் கற்றுக் கொடுக்கும் படி கேட்பார். அந்த பெண் ஓர் சிங்கள பெண். அவள் கூறும் வசனங்களுக்கான மொழிப் பெயர்ப்பு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேப் போல் தமிழ் வசனங்களையும் சிங்களத்தில் மொழி பெயர்த்திருந்தால் நம் சிங்கள சகோதரர்களையும் இந்த குறுந்திரைப்படம் பெருமளவில் சென்றடைந்திருக்கும்.

சரி நாம் கதைக்கு திரும்புவோம். அதன் பின் பாடசாலையில் பொட்டு வைப்பதற்கான விஞ்ஞான ரீதியான காரணங்களை ஆசிரியர் விளக்கும் போது கதாநாயகியின் மகள் தன் ஆசிரியரை பார்த்து கேட்கும் கேள்வியானது சமூகத்திலுள்ள அனைவரையும் பார்த்து கேட்கும் கேள்வியாகவே தோன்றுகிறது. அதே போல் தன் தாய் பொட்டு வைப்பதை நிறுத்தியமைக்கான காரணத்தை வினவுகையில் கற்று தேர்ந்த ஆசிரியரே கணவன் இல்லாமையினை காரணமாக சுட்டிக் காட்டுவது கற்றுத் தேர்ந்தோரிடமும் இந்த வழக்கம் செலுத்தியிருக்கும் தாக்கத்தினை ஒருவிதத்தில் Subtleஆக, ஆனால் இன்னும் ஆழமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. அடுத்த காட்சியில் கணவன் வந்த பின் தான் இவை உனக்கு என தாய் கூறியவற்றை துர்க்கா அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் காட்சியானது “கணவன் வந்தால் தான் பெண்களுக்கு இவை உரித்தாகுமா? கணவன் இருந்தாலும் இல்லாவிடினும் எமக்கு பிடித்தவற்றை, எமக்கு சந்தோஷம் தரக் கூடிய பொருட்களை அணியலாம்” என்ற கருத்தினை ஆழமாக தெளிவுப்படுத்துவதாக உள்ளது. கதாநாயகியின் தோழியின் தொலைபேசி அழைப்பு, அவளுக்குள் உருவாக்கும் காயத்தினை அளந்திட முடியாது.

பொட்டு என்ற விடயம் துர்க்காவில் செலுத்திய தாக்கம் அவள் தன் பொம்மைக்கு பொட்டிட்டு அழகு பார்ப்பதில் உணரக் கூடியதாக உள்ளது. இறுதியாக கணவன் இல்லாத பெண்ணொருத்தி கோவிலில் பொட்டு வைத்து இறைவனை பிரார்த்திப்பதை காணும் துர்க்கா, அவர் கணவன் இல்லாத போதும் பொட்டு வைப்பதற்கான காரணத்தினை வினவ, அந்தப் பெண் ‘நாம் செய்யும் செயலில் சந்தோஷம் இருக்க வேண்டும், பிறருக்கு தீங்கு செய்யாது வாழ்ந்தாலே போதும்’ என கூறுமிடத்தில் படத்தின் கருப்பொருள், வசனமாக உயிர்பெறுகின்றது. அந்தப் பெண்ணின் அறிவுரை துர்க்காவிடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதன் பின் அவள் என்ன செய்கிறாள், கதாநாயகியின் நெற்றியினை பொட்டு அலங்கரிக்கிறதா? இல்லையா? என்ற வினாக்களின் விடையாக இக் குறுந்திரைப்படத்தின் முடிவு அமைகிறது.

ஓர் பெண்ணின் சந்தோஷமும் தன்னை அலங்கரிக்கும் உரிமையும் அவளிடம் இல்லாது, இன்னொரு நபரைச் சார்ந்திருக்கும் பரிதாப நிலையினை உணர்த்துவதாகவே இந்த குறுந்திரைப்படத்தை பார்க்கிறேன். காட்சிகள் அழகாக எளிமையாக எடுக்கப்பட்டுள்ளன. வசனங்கள் சிறிதாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமானவையாக இருக்கின்றன. படத்தில் எல்லை மீறிய யதார்த்தம் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. தொழில்நுட்பரீதியில் ஒளி, ஒலி, படத்தொகுப்பு, இசை என அனைத்தும் கச்சிதமாக கதையின் பாதையில் வந்து விழுந்திருக்கின்றன. படத்தில் கணமான பாத்திரப்படைப்பும், அத்தகைய கதாப்பாத்திரங்களை தோள்களில் சுமந்து வரும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ‘அப்ளாஸ்’.. கதாநாயகி Navayugaவின் கண்களின் மெல்லிய அசைவுகளில் கதை நகர்கிறது. ஆசிரியராக வரும் Yasotha Rathakrishnan கொள்ளை அழகு.

அனைவரும் வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குறுந்திரைப்படம் தான் பொட்டு, ஏனெனில் இந்த திரைப்பட முடிவில் உங்களில் நீங்கள் சமத்துவ மாற்றமொன்றை காண்பீர்கள்.

ஒவ்வொரு தனி உயிருக்குள்ளும் ஏற்படும் ஆசைகள், விருப்பங்களின் தேர்வுகள் வெவ்வேறுவிதமானவை. அப்படி ஒவ்வொரு தனி உயிரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம். ஆசைகளும் எண்ணங்களும் அளவில்லாமல் கொட்டிக் கிடக்கும் இந்த அண்டவெளியில், எது சரி? எது தவறு? என்பது உறுதியாகக் கூறமுடியாது. அப்படியிருக்கையில், இந்த சமூகத்தில் வாழ்க்கையை வாழ்வதற்கான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் யாருக்காக யார் விதித்தது? எது எப்படியாயினும் நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒன்றுதான். அதை எப்படி தத்தமது விருப்பங்களுக்கேற்ப வாழப்போகிறோம் என்பது தான் அதிலிருக்கும் சுவாரசியம்.
அப்படிப்பார்க்கையில் இந்த ‘பொட்டு’ குறும்படம், சிறகுகளை அகல விரித்து வானில் எதிர்காற்றில் பறக்க முயலும் ஒரு பெருஞ்சமூகத்தின் கூக்குரல் போல தொனிக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

‘பொட்டு’ – விடுதலைச்சிறகு
நாடி Verdict – 82/100

Short Film Link  –  https://youtu.be/Gh_i_CyLOsI

ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் உலவல் சாத்தியமா?

வெளிநாட்டில் தனது முதல் வேலையை நிறைவு செய்த இலங்கையை சேர்ந்த ஒரு பெண் தனது சக தோழி ஒருத்தி ஒன்லைனில் காதலித்த ஆணை திருமணம் செய்து அவருடன் அமெரிக்காவுக்கு சென்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதையினால் மிகவும் ஈர்க்கப்பட்டு காதலிக்க ஆர்வமாக உள்ளார்.

ஆமாம்,டேட்டிங் ஆப்ஸ்கள் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது.

உண்மையில், டேட்டிங் கலாசாரம் இலங்கைக்கு புதியது. திருமணத்திற்கு முன் இருவரும் இரு குடும்பத்தாரின் சம்பந்தத்துடன் சந்தித்துக் கொள்வதை மரியாதைக்குரிய டேட்டிங்காக கருதுகின்றனர். முன்னைய காலத்தின் பழைய சில வழக்கங்கள் இன்றும் உள்ளன. இன்றும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பதுங்கி, பயந்தபடியே மறைவாக சந்திப்பது உண்டு. நண்பர்களுடனோ அல்லது அன்றாட வேலைகளை முன்னெடுத்துச் செல்லும் போதோ தான் உங்கள் காதலுக்குரியவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உருவாகிறது.

சன நெரிசல் அதிகமுள்ள பேரூந்துகளில் எவரையும் பார்க்காது காதலிப்பவரின் கண்களை மாத்திரமே பார்த்த படி பயணிப்பது அளவற்ற மகிழ்ச்சி அளிக்க கூடியதொன்றாகும்.

என் பெற்றோரின் திருமண வாழ்வு என்னை ‘ரொமான்ஸில்’ நம்பிக்கையற்ற ஓர் நபராக மாற்றியது. அவர்கள் தங்களுக்கு பிடித்த பாடல் ஒன்றை கேட்ட படி இரவு நேர உணவினை சமைப்பார்கள். அவர்களது உலகத்தின் முக்கியமான ஒருத்தியாக இருந்தேன். அவர்களாலேயோ என்னவோ, காதல் பற்றிய பலவிதமான கற்பனைகளுடன் வளர ஆரம்பித்தேன். அந்த கற்பனைகளில் எனக்கு மிகவும் பிடித்த கற்பனை எதுவெனில், நான் சுதந்திர சதுக்கத்தில் தனியாக அமர்ந்திருக்கும் போது என்னை நோக்கி ஓர் நாய் ஓடி வரும், அந்த நாயினை தொடர்ந்து அழகான மற்றும் உயரமான நாயின் உரிமையாளர் ஓடி வருவார்.

உயரமான மற்றும் அழகான, அதுவும் நாயை விரும்பும் ஒருவர். இதை விட காதலிக்க வேறு காரணங்கள் தேவையா என்ன?

டேட்டிங் ஆப்ஸ்களின் பயன்பாட்டினை பற்றி நான் கண்டுப்பிடித்த போது என் கால்கள் தரையில் மிதப்பது போன்ற உணர்வில் மூழ்கிக் கிடந்தேன். ஏனெனில் எனக்கு பிடித்த நபரை என்னால் சரியாக தெரிவு செய்துக் கொள்ளக் கூடிய வசதி அதில் உண்டு.

இந்த டேட்டிங் ஆப்ஸ்களில் காணப்படுகின்ற முதன்மையான பிரச்சனை என்னவென்றால், ஒருவரது புறத்தோற்றம் ரீதியான மற்றும் ஆளுமை ரீதியான தகவல்களை கொண்டே நாம் நமக்கானவரை தெரிவு செய்ய முடியும். நான் எனக்காக வர இருப்பவருக்கு இவ்வாறான ஒரு Bio இருக்க வேண்டும் என கணித்து வைத்திருந்தேன். அது என்னவெனில்,

-5.11
-Dog Lover
-Meaningful connections only
-An excellent cook and looking for a girl to share it all with என்பதேயாகும்.

உடனடியாக வலது பக்கத்தை ஸ்வைப் செய்தேன். ஆனால் நான் உண்மையில் இந்த டேட்டிங் ஆப்ஸ்களில் பல வேறுபாடுகள் உள்ள ஏராளமான Bioக்களை கடந்தேன். சாதாரணமாக பெண்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை தாண்டி, உண்மையில் எனக்கு வெறுப்பை ஏற்படுத்திய, பிடிக்காத விடயங்கள் பின்வருவனவாகும்.

1. “Hey” க்கு அப்பால் முன்னேறாத உரையாடல்கள்.

2. முதல் டேட்டிங் பெரும்பாலும் ஓர் இனம் புரியாத அமைதியோடு கடந்தது (ஆனால் நான் ஒரு உரையாடலை முன்னெடுத்துச் செல்வதில் சிறப்பானவர்).

3. மூன்று மாதகால சந்தோஷமான சாட்டிங் பின், எதிர்பாராமல் துளிர் விடும் திடீர் புறக்கணிப்பு.

4. நம்பிக்கைக்கு தகுதியற்ற ஒருவருடன் காதலில் விழுந்ததன் விளைவாக அவர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட செய்தி அறிந்து என் மனம் கல்லென இறுகிப் போனது. (உண்மை கதை)

ஒரு ஸ்வைப் மூலம் ஆனந்தமான வாழ்வினை பெற்ற என் சக தோழியின் கதையினை, அந்த மனவேதனையின்போதும் நான் நினைவுபடுத்திக் கொண்டேன். மீண்டும் புதிய நபருக்கு என்னை அறிமுகப்படுத்தி பல முறை சந்தித்த ஏமாற்றத்தினை தந்த டேட்டிங்ஸ்களுக்கு பின், ஓர் உண்மையை உணர்ந்துக் கொண்டேன்.

டேட்டிங் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவை ஒரு இரவு-ஸ்டாண்டுகள், அர்த்தமற்ற உணர்ச்சிகள் மற்றும் ஹூக்-அப்களுக்கும் சிலநேரங்களில் பயன்படுகின்றன. கொழும்பில் தனித்து வசிக்கும் ஓர் பெண்ணாக நான் அந்த செயலிகளை பயன்படுத்துவதை வெளிப்படுத்திய பின்பு, என்னை நோக்கி பல புருவங்கள் உயர்ந்தன. என்மீது சில எதிர்பாராத ரியாக்சன்களையும் வெறுப்பான பார்வைகளையும் வீசினார்கள் சிலர். அதுமட்டுமின்றி பாதுகாப்பு பற்றிய கேள்வியும் உண்டு. நீங்கள் முன் பின் அறியாத ஓர் அந்நியரை சந்திக்க புறப்படுகிறீர்கள். சிலருக்கு துரதிஷ்டவசமாக மோசமான சூழலை உருவாக்கக் கூடிய அபாயமும் இதில் உள்ளது.

இலங்கை போன்ற ஒரு நாட்டில் இந்த டேட்டிங் செயலிகள் பயன்பாடுகள் மீதான ஒரு களங்கம் உள்ளது. இது ஒரு அர்த்தமுள்ள இணைப்பைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கிறது. ஏனென்றால், ஆன்லைனில் உங்கள் வாழ்க்கையின் அன்பை நீங்கள் கண்டு கொண்டதை எவ்வாறு உங்கள் பெற்றோரிடம் சொல்ல முடியும்? ஆன்லைனில் உங்களுக்கான நபரை தேடுவது உண்மையில் எவ்வளவு சாத்தியமானது? என்ற கேள்வி, பெற்றோருக்கும் எமது முன்னைய தலைமுறையினருக்கும் பெரும்பாலும் எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது! இதனால் பல சிக்கல்கள் எழக்கூடும் என்று பயப்படுகிறார்கள்.

ஆனால் டேட்டிங் ஆப்ஸ் பயன்பாடுகள் உண்மையில் அந்தளவு மோசமானவை அல்ல. சமூக அக்கறை உள்ளவர்களுக்கு, பேச்சைக் காட்டிலும் எழுத்தில் தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் நபர்கள் போன்றவர்களுக்கு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இங்கு உண்டு. அவ்வாறு இல்லையெனில் இணைப்பினை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. காதல் பந்தம் கைகூடவில்லை எனினும், இன்னும் பல சுவாரஸ்யமான நபர்களைச் சந்திக்க இது  உதவுகிறது. சமன்பாட்டிலிருந்து காதல் அகற்றப்படுவதன் மூலம், நிறைய அழுத்தம் குறைந்து, ஒரு அர்த்தமுள்ள இணைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஆப்ஸ்களை கொண்டு இவ்வுலகில் அனைத்தையும் செய்ய முடிந்த எம்மால், ஏன் டேட்டிங்கும் மேற்கொள்ள முடியாதா? நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கான காதலை காணலாம் இல்லையென்றால் ஒரு நண்பரை கண்டறியலாம். அதுவும் இல்லையென்றால் உங்கள் நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் போது ஓர் வேடிக்கை கதையாக இந்த அனுபவத்தை பகிரலாம்.

“அழாதீர்கள், ஏனெனில் அது முடிந்துவிட்டது, புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்வதை எப்போதாவது கேட்டதுண்டா? இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது இரண்டு வருடங்களாக நான் தேடித்திரிந்த காதலுக்கான உண்மையான வடிவம் இந்த மோதிரங்கள் என உணர்கிறேன். நான் அந்த டேட்டிங் ஆப்ஸ் கணக்குகளை செயலிழ்க்கச் செய்து வெகு காலமாகிறது. எது எவ்வாறாக இருப்பினும் பிறர் எவ்வாறு தனது துணைகளை கண்டறிகிறார்கள்? நெரிசலான பகுதிகளில் கண்களுக்குள் பார்ப்பதனூடாகவா? இல்லை ஆன்லைன் செயலிகளின் பயோக்களை நோட்டமிடுவதனூடாகவா? என்பதை அறிவதில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு.

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB க்கு அலையும் தசாப்தம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ் டிஜிடல் உலகில் போதியளவு வரையறைகள் இல்லாமையினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் வரையறை அற்றதாகவே காணப்படுகின்றது. வங்கிகளில் கோடிக் கணக்கான பண மோசடி முதல் தனி நபர் தற்கொலை வரை, இவ் இலத்திரனியல் மயமாக்கல் தாக்கம் செலுத்தியுள்ளது. அதிலும் அதிகமாக இலங்கை வாழ் இளைஞர்கள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் இடமாக இவ் இணைய வழி பகிடிவதை / துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying) திகழ்கின்றது.

அமெரிக்காவின் தேசிய குற்றத்தடுப்பு சபை இவ் இணைய வழி பகிடிவதையை (Cyber Bullying) ‘ஒரு நபரை கேலி / காயப்படுத்தும் நோக்கில் இணைய வழி, தொலைபேசி அல்லது ஏனைய தகவல் தொடர்பாடல் கருவிகள் ஊடாக எழுத்து அல்லது புகைப்படம் மூலம் அனுப்பப்படும் / பகிரப்படும் செயன்முறை’ என வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. இத் துஷ்பிரயோகங்கள் இணையம் என்ற போர்வைக்குள் ஒழிந்து இருந்தாலும், இதுவொரு மிகப்பெரிய தவறான பகிடிவதை கலாசாரமாகவே சித்தரிக்கப்படுகின்றது.

இவ் இணைய வழி பகிடிவதையானது,
– பல ஊடங்கள் மூலம் நிகழ்கின்றது. (குறுந்தகவல் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக)
– தனியாக / பகிரங்கமாக பகிரப்படுகின்றது.
– தனி நபர் அல்லது ஒரு குழுவை நேரடியாக தாக்குகின்றன.
– செய்வது யாரென்று அறியாது நிகழ்கின்றது.
– இணைய வழி நோட்டமிடல் (Cyber Stalking) மற்றும் இணைய வழி வன்முறையாகவும் (Cyber Violence) அரங்கேறுகின்றது.

மேலும் இதற்கு உதாரணங்களாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகள், இணைய வழி மூலமான மிரட்டல்கள், மற்றொருவர் போன்று பொய்யான கணக்குகளை திறந்து ஆள்மாறாட்டம் செய்வதோடு, மற்றையவர் போல் செய்தி / கருத்து பரிமாற்றம் செய்தல் என, அடுக்கடுக்காக நீள்கிறது.

இலங்கையின் கண்ணோட்டத்தில்..

இலங்கையின் இணைய வழி பாதுகாப்பு தொடர்பான தேசிய மத்திய நிலையம் (Srilanka CERT) கூறுகையில், 14% இளைஞர்கள் இணைய வழியாக நிகழும் அடையாள திருட்டுக்கு (Identity Theft) முகம் கொடுத்ததுடன், 11% நபர்களின் கணக்குகள் ஊடுருவல் (Hack) செய்யப்பட்டுள்ளதோடு, 9% நபர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் 71% நபர்கள், தங்களுக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதாகும்.

இவ்வகையான காரணங்களினால் இலங்கையின் இளைஞர் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் எல்லோரும் தள்ளப்படுகிறோம். நாளுக்கு நாள் பாடசாலை உடை அணிந்த பல சிறுமிகளின் புகைபடங்களை எம்மால் கண்டுகொள்ளக்கூடியதாய் உள்ளது. இவை அனைத்தும் அவர்களது விருப்பப்படி நடக்கின்றதா என வினவினால், அதற்கு எவரினாலும் ‘ஆம்’ என்று கூறமுடியாது. பள்ளிப்பருவ காலத்தில், தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில நிகழ்வுகளே இறுதியில் துஷ்பிரயோகங்களாகவும், பாலியல் இலஞ்சம் கேட்கும் சூழ்நிலைக்கு பலரை எடுத்துச் சென்றுள்ளதோடு, நாளையும் பலரை எடுத்துச் செல்லக்கூடும்.

இச் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் பாதிப்படைவதோடு, மன அழுத்தத்திற்கும் உள்வாங்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உளவியல் திணைக்களத்தின் தலைவரான சமுத்ரா கத்திரியாராச்சி கருத்து வெளியிடுகையில், இவ்வகையான சந்தர்பங்களில் தான் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டேன், சுய மரியாத போய் விட்டது என கருதல், தனிமையை நாடுதல் போன்ற செயற்பாடுகள் பொதுவாக காணக்கூடியதாக உள்ளது. எனினும் இதன் உச்சக்கட்ட விளைவாக தற்கொலை முயற்சிகள் பல நிகழ்வதையும் எம்மால் அறிந்த கொள்ள முடியுமாய் உள்ளது.

இலங்கையின் சட்டக் கட்டமைப்பில் இதற்கு என்றதொரு தனி சட்டம் இல்லாவிடினும், தண்டனை பத்திரத்தின் சில விதிகளுக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் இப் பொறிமுறை சிக்கல் கொண்டதாகவும், பல நாள் கொண்ட பயணமாகவும் இது அமையப் பெறுகின்றமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன சோர்வை இது ஏற்படுத்துகின்றது. எனினும் இதனை எதிர்த்து முறைப்பாடு செய்வதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல நிறுவப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிராக முறைப்பாடு செய்யும் வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது.

இணைய வழி பகிடிவதைக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

ஆதாரங்களை திரட்டுதல்  இச் சம்பவத்திற்கு தொடர்பான அனைத்து விபரங்களையும் பட்டியல் படுத்துவதோடு, Screen shot போன்ற சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்டுதல்.

முறைப்பாடு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்தல்.

இவ் நடத்தைக்கு எதிராக முறைப்பாடு செய்யக்கூடிய நிறுவனங்கள் இதோ,

இலங்கை பொலிஸ்
அனைத்து விதமான மக்களும், தங்களுக்கு எதிராக இவ்வகையானதொரு சம்பவம் அரங்கேறி இருப்பின், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். மேலும் இணைய வழி மூலம் நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சிறுவர் மற்றும் பெண் தொடர்பான விசாரணைகள் செய்யும் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம்.

இலங்கை CERT
இலங்கையின் இலத்திரனியல் பாதுகாப்பின் மையமாக CERT என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. வெறுப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட மின்னஞ்சல்கள், அடையாளத்திருட்டு போன்ற விடயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோடு ஏனனய சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியும். ஏதேனும் முறைப்பாடு இருப்பின்,
– cert.gov.lk என்ற இணையதளத்தில் இருக்கும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
– தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்வதாயின் 11 269 1692 / 11 269 5729 / 11 267 9 888 என்ற இலக்கத்தை உபயோகிக்கவும்.
– தொலை நகல் மூலமான தொடர்புகளுக்கு +94 11 269 1064
– மின்னஞ்சல் மூலமான முறைப்பாடுகளுக்கு report@cert.gov.lk என்ற முகவரியை உபயோகித்துக்கொள்ள முடியும்.

CID யின் இணைய வழி குற்றப் பிரிவு
குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் இப் பிரிவில், இணைய வழி வாயிலாக நிகழும் அனைத்து குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யலாம். தொடர்புகொள்வதாயின், telligp.police.lk என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளவும்.

Women In Need (WIN)
இந் நிறுவனமானது The Grassrooted Trust மற்றும் Voice Foundation எனும் நிறுவனங்களின் உதவியினூடாக பாலினம் தொடர்பில் இணைய வழி வாயிலாக நிகழும் துஷ்பிரயோகங்களை இங்கு முறைப்பாடு செய்யலாம்.
– தொடர்புகளுக்கு : 011 267 1411 / 011 471 8585
– மின்னஞ்சல் : connect@winsl.net
– 24 மணி நேர தொலைபேசி எண் : 077 567 65 55

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
18 வயதுக்கு குறைவான ஒரு நபர் இணைய வழி பகிடிவதைக்கு முகம் கொடுப்பவராயின், நீங்கள் இங்கு முறைப்பாடு செய்ய முடியும்.
– முற்றிலும் இலவசமான 24/7 மணி நேர தொலைபேசி எண் மூலம் முறைப்பாடு செய்ய முடியும். இது தொடர்பான தகவல்கள் முற்றிலும் இரகசியமாக பேணப்படுவதுடன் மேலதிக தகவல்களுக்கு childprotection.gov.lk என்ற இணையதளத்தை பார்வை இடவும்.
– பெற்றோர் மற்றும் சிறுவர்களுக்கு இது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவைப்படின் http://www.childprotection.gov.lk/?page_id=2211 இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Bakamoono (பகமூனோ)

இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் bakamoono.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இணைய வழி பகிடிவதைக்கு எதிராக எம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள்

– ஒருவரை காயப்படுத்தும் முகமாகவோ கேளிக்கையின் நிமித்தமோ குறுந்ததகவல் அல்லது ஏதெனும் செய்தி பகிரப்படின், அதனை மீண்டும் பகிராமல் அனுப்பிய நபரிற்கு போதுமான விழிப்பூட்டலை வழங்குவதுடன், அனுப்பப்பட்ட ஊடகம் வாயிலாக முறைப்பாடு செய்தல் வேண்டும்.

– இணைய வழி பகிடிவதை சார்ந்த கருமங்களில் எத் தொடர்பினையும் வைத்துக்கொள்ளாமல், ஆதாரங்கள் ஏதெனும் தேவைப்படின் அதனை களஞ்சியப்படுத்துவதோடு, முடியுமானவரை அவர்களை விட்டு தள்ளி செல்லுதல் அவசியமாகும்.

– கல்வியில் முன்னர் போன்று ஈடுபாடு காண்பிக்காமல் இருத்தல். உணவு மற்றும் உடல் பாவனையில் மாற்றங்கள், போதியளவு தூக்கம் இல்லாமை போன்ற காரணிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படின் எதெனும் பகிடிவதைக்கு முகம் கொடுத்திருக்கக்கூடும் என்ற கேள்விக்குறிக்கு உள்வாங்கப்படுகிறார். ஆகவே எம்மை சார்ந்த நபர்களின் எதெனும் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என கவனம் செலுத்துதல் வேண்டும்.

– தனிப்பட்ட விபரங்களை முடியுமானவரை பகிர்வதைத் தடுத்தல்.

– உங்களை காயப்படுத்தும் முகமாகவோ கேளிக்கை செய்வது போன்ற கருத்துகள் பரிமாறப்படின், அவற்றிற்கு பதிலளிக்காது, ஒழுக்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு நிர்ப்பந்தித்தல்.

– ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்பு அது தொடர்பில் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்தல் அவசியமாகும்.

– Privacy Settings தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை கொண்டு வருதல்.

– பொது இடங்களிலோ அல்லது வேறொரு நபரிடத்தோ இணையம் பாவிப்பதாயின், வேலை முடிந்த பின் முறையாக Log Out செய்யப்பட்டதா என கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

– பெற்றோராக, ஆசிரியராக, வயது கூடியவராக தங்களது இளம் சமூகத்திற்கு இது தொடர்பான விழிப்பூட்டல்கள் வழங்குவதுடன், பொறுப்பு மிகுந்த ஒரு குடிமகனாக வாழக் கற்றுக்கொடுத்தல்.

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதனால், இந்த நீருக்கடியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை ஈர்த்து, அதனூடாக வருமானம் ஈட்டித்தரக் கூடியதொன்றாக அமைகிறது. இந்த அருங்காட்சியகங்கள் இலங்கையின் மூன்று முக்கிய கடற்பிரதேசங்களான திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு செயற்கை திட்டுக்களை உருவாக்குவதனூடாக பவள வளர்ச்சி மற்றும் இயற்கையான மீன் இனப்பெருக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

காலியில் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகமானது, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி காலி துறைமுகத்திற்கு அருகில் திறக்கப்பட்டது. நன்கு நிறுவப்பட்ட சுற்றுலா இடமாக இருப்பதினால் பார்வையாளர்களையும் துணிகர சாகசங்களை விரும்புபவர்களையும் ஈர்ப்பது கடினமான ஓர் விடயமாக இருக்கவில்லை. இலங்கையில் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகங்கள் கடல் சார்ந்த சுற்றுலா வளர்ச்சிக்கு சிறப்பான பங்கினை அளிக்கின்றன, இது நம்மில் பலருக்குப் பழக்கமான வழக்கமான நகர அருங்காட்சியக அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மறக்கமுடியாத அனுபவத்தினை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

காலியில் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் பல நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளதுடன், இலங்கை கடற்படையினரின் கடின உழைப்பிற்கான சிறந்த அடையாளமாகவும் திகழ்கின்றது. இதன் விளைவாகவே மற்ற இரு அருங்காட்சியங்கள் நீருக்கடியில் அமைக்கப்பட்டன. இரண்டாவது நீருக்கடியில் கட்டப்பட்ட அருங்காட்சியகமானது திருகோணமலையில் உள்ள சாண்டி பே கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி கடற்படை துணை அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் திறக்கப்பட்டது. சுமார் 18 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கேலரி, தென்கிழக்கு பருவமழை காலத்தில் கடல் ஆய்வாளர்களை பார்வையிட அனுமதிக்கின்றது. மேலும் அவர்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் காலி அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு ஆண்டு முழுவதும் இந்த நீர்வாழ் தளங்களில் ஒன்றையாவது பார்வையிடுவதற்கான வாய்ப்பு உருவாகின்றது.

இந்த திட்டத்தின் விரிவாக்கமாக, இந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி மாத்தறையில் இலங்கை கடற்படையால் மற்றொரு கேலரி திறக்கப்பட்டது. நில்வெல்லா கடற்கரையில் அமைந்துள்ள ப்ளூ பீச் தீவு நீருக்கடியில் 100 மீற்றர் நீளம் மற்றும் 40 மீற்றர் அகலம் கொண்டதாக இந்த கேலரி அமைக்கப்பட்டது. இந்த தளத்தை ஸ்நோர்கெல்லிங் மூலம் அல்லது அடிப்பகுதியில் கண்ணாடியாலான டிங்கிஸ் என்ற சிறு படகில் பயணித்துக்கொண்டே பார்ப்பது, காண்போரை பிரம்மில் ஆழ்த்தும் நிகழ்வாக மாறி விடுகிறது.

இந்த கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மிக நெருக்கமாக இருந்து ஆராய முற்படுபவர்களுக்கு, டைவிங் மிகவும் சிறந்த முறையாகும். இருப்பினும், நீங்கள் செல்லுபடியாகக் கூடிய PADI (டைவிங் பயிற்றுநர்களின் நிபுணத்துவ சங்கம்)  வழங்கப்படும் நீர் லைசன்ஸை வைத்திருக்க வேண்டும் மற்றும் நீருக்கடியில் டைவிங் செல்ல முயற்சிக்கும் முன் அங்கீகரிக்கப்பட்ட டைவிங் பள்ளியால் பயிற்சி பெற வேண்டும். மூன்று அருங்காட்சியகங்களுக்குமான நுழைவு இலவசம் என்றாலும், சான்றளிக்கப்பட்ட மற்றும் தொழில்முறை டைவிங் மையங்கள் வழியாக டைவ் செய்ய, கற்றல் சார்ந்த செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும்.

சுற்றுலா, பவளங்களின் மீளுருவாக்கம் மற்றும் மீன் இனப்பெருக்கம் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன என்று கடற்படை வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கூறுகிறார். தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அருங்காட்சியகங்கள் மீன் வளர்ப்பின் அடிப்படையிலான வளர்ச்சியினை கண்டுள்ளன. இனி வரும் காலங்களில் மேலதிகமான வளர்ச்சியினை இந்த அருங்காட்சியங்களில் காணக் கூடிய வகையிலான சூழல் உருவாகும்.

இந்த அருங்காட்சியகங்கள் சிறப்பான சுற்றுலா தளங்களாக இருப்பது மட்டுமல்லாது, அத்தோடு சுற்றியுள்ள ஹோட்டல்களுக்கும் ரிசார்ட்டுகளுக்கும் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளையும் அதிகரிப்பதோடு, மீன்பிடிக்கான பயனுள்ள சூழல்களாக இருப்பதால், கடலோர கிராமங்களின் பொருளாதார தரத்தை அதிகரிக்கவும் துணை புரிகிறது. மீனவர்கள் வாழும் பகுதிகளில் ஏராளமான மீன் இருப்புக்களை அதிகரிப்பதனூடாக மீன்பிடி வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும்.

இந்த முயற்சிக்கு இரண்டு பக்கங்களும் உள்ளன என்று முத்துக்கள் பாதுகாப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளர், The Pearl Protectors நிறுவனத்தின் முதிதா கட்டுவாவல தெரிவித்தார். இந்த நீருக்கடியில் உள்ள காட்சியகங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு தங்குமிடம் வழங்குவவதற்கு உகந்தவையாகவும், மக்கள் சுதந்திரமாக சுற்றக்கூடிய தனித்துவமான சுற்றுலா தளங்களாகவும் விளங்குகின்றன. இந்த முயற்சிக்கு இன்னொரு பக்கமும் உண்டு. நீருக்கடியில் கடல் நீரோட்டம் மற்றும் பொருட்களை கவனமாக பயன்படுத்துதல் போன்ற காரணிகளை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த திட்டமானது அந்த பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ்வியல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது என முதிதா கட்டுவாவல மேலும் விளக்குகிறார். எந்தவொரு திட்டத்தினதும் தெளிவான ஒருமித்த நோக்கத்தினை அடைவதற்கு பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும். எது எவ்வாறிருப்பினும் இந்த திட்டத்தின் முழு நோக்கத்தையும் தோற்கடிக்காதபடி முன் செல்வதற்கு ஓர் முறையான பராமரிப்பு அவசியமாகிறது.

மூன்று நீருக்கடியில் உள்ள கேலரிகளில் சிற்பங்கள், கட்டமைப்புகள் மற்றும் பிற கலைப்பொருட்கள், முற்றிலும் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களாலும், ஆட்டோமொபைல் பாகங்கள், கான்கிரீட் மற்றும் பவள வளர்ச்சியைத் தூண்டும் சில செயற்கை அடி மூலக்கூறுகள் ஆகியவற்றைக் கொண்டும் ஆக்கப்பட்டுள்ளன. இந்த நீருக்கடியில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகங்கள் இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் கடல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய புள்ளியாக திகழ்கின்றது. இது சுற்றுலாவை ஒரு நிலையான மற்றும் சூழல் நட்பு முறையில் மேம்படுத்துவதற்கான ஒரு முதற்படியாகும்.

நாம் முதியவர்களை சரிவர கவனிக்கத் தவறிய சமூகமா?

பொதுவாக இலங்கை வாழ் மக்கள் எப்போதும் சிரிப்பிற்கும் விருந்தோம்பலிற்கும் பெயர் போனவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அநேகமான ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள் மகிழ்வான கூட்டுக் குடும்ப வழிமுறையை அதிகம் பின்பற்றும் நபர்களாக திகழ்கின்றனர். ஆனால் அனைத்திற்கும் கட்டாயம் ஒரு மறு பக்கம் உள்ளது போல், துஷ்பிரயோகங்களும் அதே வடிவில் வலுப் பெற்று வருகின்றது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயமாகும். நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கும் இவ்வேளையிலேயே அதிகமான வன்முறைகள் (Domestic Violence) பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு என்ற வகையில் நாம் எதனை நோக்கி பயணிக்கின்றோம் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும். இதில் முதியவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றன என்பதை நாம் வேதனையுடன் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

2001 ஆம் ஆண்டு இலங்கையின் முதியவர் சனத்தொகை 1.7 மில்லியன்கள் ஆகும். அதுவே 2021 ஆம் ஆண்டு 3.6 மில்லியன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாட்டின் முழு சனத்தொகையின் 16.7% வீதமாகும். அதே வேளை 2041 ஆகும் போது, இலங்கையில் நால்வரில் ஒருவர் முதியவராக இருப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 45% வீதமான முதியவர்கள் ஏதோ ஒரு வகையில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதில் 26% வீதமானோர் தனிமையில் வாழ்கின்றனர் எனவும் 22% வீதமானோர் நிதி ரீதியாக பெருஞ்சிரமப்படுகின்றனர் எனவும் பதிவாகியுள்ளது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், மனிதாபிமானம் அதிகம் கொண்ட நாடு என போற்றப்படும் இந் நாட்டில் 5.6% முதியவர்கள் உடல் ரீதியான துன்புறுத்தலிற்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது வேதனை.

‘நாய் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட தாய்’ , ‘பெற்றோரை கழிவறைக்குள் உறங்கச் சொன்ன மருமகள்’, ‘7 நாள் உணவளிக்காத பிள்ளைகள்’, போன்ற தலைப்புகளை நாம் நாள்தோறும் பார்த்த வண்ணமே உள்ளோம். ‘மனிதர்கள் இவ்வாறெல்லாம் நடந்துகொள்வார்களா?’ ‘ஏன் இவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்?’ போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் பலர் விடை தேடினாலும், கறுப்பு வெள்ளை போல நிச்சயமாக இதுவாகத்தான் இருக்கக்கூடும் என எவரினாலும் கூறமுடியாதுள்ளது. அது பலதரப்பட்ட சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் அமைவாக நடந்தேறும் சோகம். கூட்டு சமூகமாக வாழ்வதனால் எதிர்பார்ப்புகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் மக்களிடையே அதிகமாகவே காணப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ தங்களது வீட்டிலிருக்கும் முதியவர்களை பராமரிக்கும் சூழ்நிலைக்கு எல்லோரும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஓய்வில்லாத 9 மணித்தியால வேலை, குடும்ப தகராறுகள், பொருளாதார நெருக்கடிகள், போதியளவு தனியுரிமை (Privacy) இல்லாமை, பழமைவாத மோதல்கள் போன்ற காரணிகள் நாள்தோறு வலுப்பெற்று, வயதுமுதிர்ந்தவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களாக அவை உருவெடுக்கின்றது என்பதே உண்மை. எனினும் எக் காரணங்களுக்கும் துஷ்பிரயோகங்களும் துன்புறுத்தல்களும், அவர்களுக்கெதிரான வன்முறையும் ஒரு தீர்வாக எற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுப்பவர்கள், 2005 ஆம் ஆண்டு 04ஆம் இலக்க உள்நாட்டு வன்முறைகள் சட்டத்திற்கமைய, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யமுடியும் என்பதுடன், பாதுகாப்பு உத்தரவினையும் நீதவானிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் அரசாங்கத்தால், 1938 என்ற சிறப்பு தொலைபேசி அழைப்பு எண் வாயிலாக அறிவிக்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல வழிகள் மூலமாக மக்களை நேர்வழிப்படுத்தும் செயன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்னும் நாட்டில் ஏதோ ஓர் மூலையில், எவரேனும் முதியவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகின்றார் என்பதே உண்மை.

June மாதம் 15ஆம் திகதி என்பது முதியோர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான நாளாகும். என்னை பொருத்தளவில் இப்படியானதோர் நாள் உருவெடுத்ததே மனித நேயம் அழிந்து விட்டதை எடுத்துரைப்பதோடு, ஓர் ஒன்றிணைந்த சமூகம் என்ற வகையில் நாம் அனைவரும் வயதானவர்களுக்கான வெளியை வழங்கி அவர்களை பாதுகாத்து, அன்பினால் அரவணைப்பதில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதையே இது விழிக்கின்றது. நான் உட்பட எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ எமது பெற்றோர்களை ஏதோ ஒரு வழியில் காயப்படுத்தியுள்ளோமா? என சுய விசாரணை செய்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் மனம் நோகும்படி சத்தம் போட்டு உரத்து பேசாதிருத்தல், பேசும் போது மனம் துன்புறாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்ளல், கோபத்தை அவர்களது மீது திணிக்காதிருத்தல் போன்ற விடயங்களை நாம் எமது வாழ்க்கையில் எடுத்து நடப்பதன் மூலம், முதியோர்களுக்கு எதிரான மன சித்திரவதையில் இருந்த அவர்களை பாதுகாத்து கொள்ள முடியும். மனிதர்களை விட விலங்குகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கும் இவ் உலகில் ஏதோ ஒர் தருணத்தில் எம்மை பெற்றெடுத்த தாயையோ, அரவணைத்துக் காத்த தந்தையையோ, எமக்கு உதவிக்கரம் நீட்டிய மூதாதையர்களையோ எம் வாழ்வில் ஓர் அங்கமாக இணைக்காவிடினும், அவர்களை துன்புறுத்தாது வாழும் சமூகமாக நாம் வாழக் கற்றுக்கொள்வோமாக ! ! !

இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”

எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம் சித்தரிக்கப்படுகிறது. கற்பனைத் திரையில் எண்ணிப்பார்க்க முடியாத விடயங்களே அதிகமாக நிகழ்காலத்தில் நடந்தேறி கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக, தன்னை அழிக்க வரும் ஏவுகணைகளையும் எதிரிகளையும் எந்தவித பதற்றமும் இன்றி இருந்த இடத்தில் இருந்து முறியடிக்கும் வல்லமையே இஸ்ரேலியர்களின் இந்த “அயர்ன்-டோம்” கொண்டுள்ளது.

2006ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் செயற்படும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையேயான மோதல் வலு பெற்றது. இந்த மோதலின் போது ஹெஸ்புல்லா அமைப்பானது ஆயிரக்கணக்கான ரொக்கெட் ஏவுகணைகள் மூலமாக சராமரியாக தாக்கியது. இந்த தாக்குதலின் போது 165 இஸ்ரேலியர்கள் இறந்தது மட்டுமல்லாமல், பாரிய பொருட் சேதமும் ஏற்பட்டது. அந்த தருணத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ள நிச்சயமாக அதி நவீன பாதுகாப்பு அரண் ஒன்று அமைக்க வேண்டும் என அந் நாட்டு உயர் அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில் அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டொலர்களை நிதியுதவியாகப் பெற்று, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டதே இந்த பாதகாப்பு அரண் ஆகும். அதேவேளையில் இது 2011ல் இருந்து பல்வேறு ஆராய்ச்சிக்கு  உட்படுத்தப்பட்டது.

ஆம், சில வாரங்களுக்கு முன்னர் பலஸ்தீன நாட்டினை போர் மேகம் இதுவரை இல்லாத அளவிற்கு சூழ்ந்திருந்து. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நாடுகளுக்கிடையே  நாளுக்கு நாள் மோதல் அதிகரித்தே சென்றது. இந்த மோதலிற்கு நடுவே இஸ்ரேலியர்களின் போர் தொழில்நுட்பம் உலக மக்களது கவனத்தை ஈர்த்தது. ஆம், அதுவே இஸ்ரேலின் “அயர்ன்-டோம்” ஆகும்.

இந்த மோதலின் போது பலஸ்தீனத்தால் பல ஆயிர கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. எனினும் அந்த ஏவுகணைகளது தாக்கம் மிகக்குறைவாக காணப்பட்டது. காஸாவிலிருந்து ஏவப்படும் இந்த ஏவுகணைகளை துல்லியமாக கணித்து வானிலேயே அவை முறியடிக்கப்பட்டது. இத்தகைய போர் யுக்தி மற்றும் தொழில்நுட்பமானது உலக நாடுகளுக்கு மிகவும் வியப்பாக அமைந்தது.
இஸ்ரேலை குறி வைத்து தாக்க வரும் ஏவுகணைகளை கண்டுபிடிப்பதற்காக அதி நவீன ELM-2084 multi-mission radar பொருத்தப்பட்டுள்ளது. தாக்க வரும் ரொக்கேட்டுகளை ரேடார் மூலம் கண்டறிந்ததும், அதனை இடை மறிக்க இரண்டு ஏவுகணைகள் 2716 kmph (mach 2.2) வேகத்தில் ஏவப்படுகிறது. அதேவேளையில் தாக்கவரும் ஏவுகணைகளில், எது மக்கள் வாழும் பகுதியை நோக்கி ஏவப்படுகிறது என்பதை ரேடார் மூலம் கண்டறியலாம். ஆகவே அத்தகைய முறை மூலம் இடைமறிக்க அனுப்பும் ஏவுகணைகளின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும், எந்த கால நிலையிலும் இந்த அயர்ன் டோம் சிறப்பாக செயல்படும் வல்லமையோடு அமைக்கப்பட்டிருக்கிறது.

எனினும் பலஸ்தீனின் 90% தாக்குதலை முறியடித்ததன் காரணமாக பலம் பொருந்திய வல்லரசு நாடுகளின் தாக்குதல்களை இந்த அயர்ன் டோம் எதிர் கொள்ளுமா? என்ற சந்தேகம் ஆயுத ஆராய்ச்சியாளர்களின் கேள்வியாக நிலவி வருகிறது. அதேவேளையில் மே மாதம் நடைபெற்ற தாக்குதலில் 256 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 66 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

இலங்கையின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாட்டில் பல பாரம்பரிய மற்றும் பழமைவாயந்த கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், இவ்வாறான கட்டிடங்கள் நாட்டின் அடையாளமாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின்னால் ஒரு இருண்ட கடந்த கால வரலாறும் மறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். 

The Tintagel Boutique Hotel

Tintagel Boutique Hotel ற்கு Boutique என்ற அடைமொழி பெற அதன் அழகிய கட்டிட வடிவமைப்பே காரணம். இக் கட்டிடமானது இலங்கையில் முன்னாள் பிரதமர்  S. W. R. D.பண்டாரநாயக்க அவர்களது பிரத்தியேக வாசஸ்தலமாக இருந்தது. அதேவேளையில் இந்த கட்டிடத்தின் அழகினை மறக்கடிக்க வல்ல ஒரு இருண்ட கடந்த கால வரலாறு ஒன்றும் உள்ளது. ஆம்,  S. W. R. D.பண்டாரநாயக்க அவர்கள் இந்த இடத்தில்தான், தல்துவே சோமராம தேரரினால் படுகொலை செய்யப்பட்டார். 1959 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி இக் கட்டிடத்தின் வராண்டாவில் அமர்ந்து நாட்டின்  நலனுக்காக வேண்டி மக்களை நேரில் சந்தித்து மக்களின் பிரச்சனையை  கேட்டுக் கொண்டிருந்த தருணத்தின்போது அங்கு வந்த தேரர், மறைக்கப்பட்டிருந்த தனது துப்பாக்கியை கொண்டு பிரதமரது மார்பு மற்றும் அடி  வயிற்றுப்பகுதியில் நான்கு முறைகள் சுட்டார். இந்த நான்கு தோட்டாக்களும் பிரதமரின் உடலை துளைக்கும் தருணங்களில் பாதுகாப்பு கான்ஸ்டபிலினால்  தேரரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி தோட்டா, தேரரின் இடுப்பு பகுதியை துளைத்தது. பின்பு தேரர் கைது செய்யப்பட்டார். அதேவேளையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர்  S. W. R. D.பண்டாரநாயக்க, சிகிச்சை பலனின்றி மறுநாள் இறைவனடி சேர்ந்தார். 

No. 7, St. Alban’s Place Bambalapitiya

Albans Villa என்று வர்ணிக்கப்படும், No. 7, St. Alban’s Place Bambalapitiya என்ற முகவரியில் அமையப் பெற்றிருக்கும் இரண்டு மாடி கட்டிடமானது விருந்தினர் இல்லமா அல்லது ஒருவரின் வாசஸ்தலமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் உள்ளது. எனினும், 1949 ல் இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரரது இல்லமாக இது கருதப்படுகிறது. இந்த வீட்டில் முன்னாள் கிரிக்கட் வீரர் சதாசிவம், அவரது மனைவி பரிபூரணம் ஆனந்தா, மற்றும் அவரது நான்கு மகள்கள் என குடும்பமாக வசித்து வந்தனர், இவ்வாறிருக்க, October மாதம் 9 ஆம் திகதி 1951ஆம் ஆண்டு திருமதி சதாசிவம் அவர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு வீட்டின் சமையலறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதன் காரணமாக திரு.சதாசிவம் மற்றும் அவ் விட்டின் சமையல் வேலையில்  பணிபுரிபவர் என இருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.  எவ்வாறாயினும் சாட்சிகளின் அடிப்படையில் சதாசிவம் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டு, சமையற்காரர்மேல்  குற்றமானது நிரூபிக்கப்பட்டது.

The General’s House, Nuwara Eliya

இலங்கையின் பாராளமன்ற உறுப்பினர்களுக்காக வாடகைக்கு விடப்படும் பழமை வாய்ந்த மிகவும் அழகிய பங்களாவாக The General’s House திகழ்கின்றது. எனினும் இந்த பங்களாவில் அறை இல 16 ல் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் பதிவில் எழுதப்பட்டாலும் அதன் பின்னணியிலிருக்கும் உண்மைத் தன்மை எவராலும் சரியாக கூற முடியவில்லை. இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று   சந்தேகிக்கப்படுகிறது. ஆம், 2016ல் பாரளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இங்கு தங்கி இருந்த போது அதிகாலை இரண்டு மணியளவில் குளியலறைக்கு செல்லும் போது ஏதோவொரு அமானுஷ்ய சக்தியை உணர்ந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னர் பாராளமன்ற உறுப்பினர்கள் யாரும் இங்கு தங்கும் எண்ணத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stellenberg Estate, Nuwara Eliya

1940ல் இலங்கை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் Stellenberg Estate ல் மிகக் கடுமையான முகாமையாளராக திரு.ஜோர்ஜ் போப் இருந்தார். பல நேரங்களில் போப் இற்கும் சங்கத் தலைவரான மெய்யப்பனுக்கும் சரியாக ஒத்து போகவில்லை. இதன் கரணமாக மெய்யப்பன் போப் இனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் பின்பு சங்கத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக மெய்யப்பன் மீளவும் பணியில் அமர்த்தப்பட்டார். இதற்காகவேண்டி Stellenberg Estate, பங்களாவில் 1941 மே மாதம் ஒரு நள்ளிரவில் மெய்யப்பன் மற்றும் ஐந்து பேர் இணைந்து, போப் அவர்களை கடுமையாக தாக்கி படுகொலை செய்தனர். பின்னர் மெய்யப்பன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவின் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு, அனைவருக்கும் 1942 ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Independence Square Arcade

1889ல் காலனித்துவ ஆட்சிகாலங்களின் போது மனநலம் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கான வைத்தியசாலையாக இக் கட்டிடம் திகழ்ந்து வந்தது. எனினும் பிற்காலங்களில் அதிகளவிலான நோயாளர்கள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை காரணமாக இவ் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் யாவும் அங்கொட இற்கு மாற்றப்பட்டது. பின்பு இந்த கட்டிடம் எந்த வித தேவைக்கும் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. எனினும் சில ஆண்டுகளுக்கு முன்பு மீள்நிர்மாணம் செய்யப்பட்டு, இன்று கொழும்பின் முக்கிய உல்லாசத் தளமாக இது திகழ்கின்றது.

The Duff House, Bagatalle Road

1933 ஆம் ஆண்டு, லில்லியன் ரோஸ்லின், அவரது கணவர் செனவவிரத்னவினால் க்ளோரோஃபோர்ம் கொண்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் இந்த பங்களாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆம், திருமதி செனவிரத்ன அவர்கள், தனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் சந்தர்பங்களை தாமாகவே உருவாக்கியதால் இந்த கொலை வழக்கு சந்தேகத்துக்குரிய ஒரு வழக்காக கருதப்படுகிறது. எனினும் திரு.செனவிரத்ன, தான் பணிப் பெண்ணுடன் கொண்டிருந்த தாகாத உறவு மனைவிக்கு தெரிந்ததால் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரண்டு அல்லது மூன்று முறை மனைவியை கொலை செய்ய முயற்ச்சித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்டு முப்பது மாத காலம் சிறையில் இருந்த செனவிரத்ன, மேல் முறையீட்டின் மூலமாக பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 

The St. Paul’s Church Colombo Vicarage

பாதிரியார் மெதிவ் அவர்கள் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு காரணமாக St. Paul’s தேவாலயத்தின் பாதிரியாரின் இல்லம் பரவலாக அனைவராலும் அறியப்படுகிறது. 

1978 மாரச் மாதம் 19 ஆம் திகதி பாதிரியார் மெதிவ் பீரிசின் மனைவி Eunice, பாதிரியாரின் செயலாளரின் கணவரின் மூலமாக இன்சுலின் ஏற்றி ‘கோமா’ நிலையை அடையச் செய்து, கொலை செய்யப்பட்டார். பாதிரியார் மெதிவ் மற்றும் செயலாளர் Dairene குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு, பின்னர் Dairene விடுவிக்கப்பட்டார்.

Capri Club Colombo 

1967 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி, Capri Club ல் துப்பாக்கிச்சூட்டு சத்தம் ஒன்று கேட்டது. இந்த இல்லமானது பர்மாவின் இலங்கைக்கான தூதர் Boonawaat மற்றும் அவரது மனைவி அம்மையார் Shirley Boonwaat உடையது. தூதரது இல்லத்தில் கேட்ட துப்பாக்கி சத்தத்தை கேட்ட அயலவர்கள் விரைந்த போது, பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் காரில் தப்பிகக முற்பட்டு, பின்னர் மீண்டும் இல்லத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் காட்சியை கண்டனர்.

பின்னர் தூதரினால் பிரேத பரசோதனைக்கு அனுமதி வழங்கப்படாததால், அவசர அவசரமாக மரண சான்று வழங்கப்பட்டு, அதே நாள் மதியம் 1:30க்கு பிரேதம் தகனமும் செய்யப்பட்டது

அதனைத் தொடர்ந்து வாசஸ்தலத்தின் வாயிற் கதவுகள் மூடப்பட்டன. பின்னர் தூதர் சிறிது நாட்கள் கழித்து ரங்கூன் இற்கு சென்றார். சட்ட ரீதியாக எவரும் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் இந்த கொலை தொடர்பாக எந்தவொரு விசாரணையும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் திருமதி Shirley Boonwaat ஒரு இசைக் கலைஞருடன் கொண்டிருந்த தகாத உறவின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வதந்தி அக் காலத்தில் பரவலாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

index.php