Blog Page 37

நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்

ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. “தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்”  என பல புலவர்கள் பாரட்டி சீராட்டி வளர்த்த மொழி நம் தமிழ் மொழி. இம்மொழி தனை தாய்மொழியாக கொண்டோரும் சரி, தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் மொழி தனை பயின்றோரும் சரி இன்று வரை இவ்வளவு தான் தமிழ் என அளந்து விட முடியாதளவிற்கு பெரும் சமுத்திரமாகவே தமிழ்மொழி திகழ்கிறது. இன்று வரையில் நாம் அறிந்திராத பல சொற்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இந்த பதிவின் மூலம் சில அரிய தமிழ்ச் சொற்களை உங்களுக்கு அறியத் தரவுள்ளோம்.
நாம் இன்று இலத்திரனியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆங்கில மொழியில் சமூக வலைதளங்களுக்கான பெயர்கள் கூறப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம்மில் அநேகமானோருக்கு தமிழ் மொழியில் அவற்றிற்கான பெயர் இருப்பது தெரியாது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமூக வலைதளங்களுக்கான தமிழ் பெயர்களை அறிவோம்,

WhatsApp – புலனம்
YouTube – வலையொளி
Instagram – படவரி
We chat – அளாவி
Messenger – பற்றியம்
Twitter – கீச்சகம்
Telegram – தொலைவரி
Skype – காயலை

மேற்கூறப்பட்டவை மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்டவையே. அம் மாநாட்டில் வெளியிடப்பட்ட இன்னும் சில நுட்பவியல் கலைச் சொற்களையும் அறிவோம்.

Bluetooth – ஊடலை
Wi Fi – அருகலை
Hotspot – பகிரலை
Broadband – ஆலலை
Online – இயங்கலை
Offline – முடக்கலை
Thumb drive – விரலி
Hard disk – வன்தட்டு
GPS – தடங்காட்டி
CCTV – மறைகாணி
OCR – எழுத்துணரி
LED – ஒளிர்விமுனை
3D – முத்திரட்சி
2D – இருதிரட்சி
Projector – ஒளிவீச்சி
Printer – அச்சுப்பொறி
Scanner – வருடி
Smart phone – திறன்பேசி
Sim card – செறிவட்டை
Charger – மின்னூக்கி
Digital – எண்மின்
Cyber – மின்வெளி
Router – திசைவி
Selfie – தம் படம் – சுயஉரு – சுயப்பு
Thumbnail – சிறுபடம்
Meme – போன்மி
Print Screen – திரைப் பிடிப்பு
Inkjet – மைவீச்சு
Laser – சீரொளி

 

இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கமும் – சுதந்திரமும்


பல நாடுகள் கோடிக் கணக்கில் பணம் செலவழித்து, தமது இல்லாத புராதன வரலாற்றைக் கண்டு பிடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்நுற்றாண்டில் கடல் நுரை போல் கொள்ளளவில்லா வரலாற்றைக் கொண்ட எம் இலங்கையின் வரலாற்றை உற்று நோக்குவதற்கு எம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும்.

இலங்கையின் தொடக்க கால குடியேறிகளாக வேடர்கள் கருதப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து இயக்கர்கள் மற்றும் நாகர்கள் இருந்ததாக எம்மவரால் காலத்தால் முந்திய நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் சில முக்கிய குறிப்புகள் காணப்பட்ட போதும், கி.மு. 5ம் நூற்றாண்டில் விஜயனின் வருகையில் இருந்து தற்போது வரை பல நெகிழ்வான, சில கசப்பான வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.

விஜயன் முதல் சுதந்திரம் வரை, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது, போர்த்துக்கேயரை கப்பலில் கூட்டிக்கொண்டு போனது போன்ற பல சுவாரஷ்யமான நிகழ்வுகள் இருப்பினும் ஆங்கிலேயர் இலங்கை மீது கொண்ட செல்வாக்கை சற்று உற்று நோக்குவோம். 1505ல் போர்த்துக்கேயர் தொடக்கம் வெளிநாட்டவர்களின் மோகம் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. முறையே போர்த்துக்கேயரை விரட்டுவதற்காக ஒல்லாந்தரை அழைத்து நாட்டை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்தது மட்டுமல்லாது போர்த்துக்கேயர் விளைவித்ததை விட கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதே போல் ஏற்கனவே இலங்கையில் ஆதிக்கம் செலுத்தக் காத்திருந்த ஆங்கிலேயரை, ஒல்லாந்தரை விரட்டுவதற்கு அழைத்த பெருமை கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனை சேரும்.

1789ல் பிரான்ஸியப் புரட்சி ஏற்பட்ட பின்னர் ஐரோப்பாவில் உருவான புதிய அரசியல் சூழ்நிலை, ஐரோப்பியரின் ஆசியக் குடியேற்றவாதக் கொள்கையிலும் செல்வாக்கு செலுத்தியது. இதன் அடிப்படையில் 1795ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆங்கிலேயப்படை ஒல்லாந்தர் வசமிருந்த திருகோணமலை துறைமுகத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர். அதனை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தனது கம்பனிகளையிட்டு இலாபம் ஈட்டி வந்தனர்.

ஆனால் முதல் முறையாக 1815ல் கண்டியை கைப்பற்றியதோடு முழு இலங்கையையும் கைப்பற்றிய பெருமை ஆங்கிலேயரைச் சாரும். இதனால் கி.மு. 543 தொடக்கம் கி.பி. 1815 வரையிலாலான 2359 ஆண்டுகள் கொண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்தது.1818 மற்றும் 1848 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் பல சுதந்திர போராட்டங்கள் நடந்தாலும் ஆங்கிலேயர்கள் கையாண்ட கடுமையான உத்திகள், எம்மிடம் போதுமான அளவு ஆயுதங்களோ வளங்களோ இல்லாமை மற்றும் பல துரோகங்கள் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

1838 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர் சிறுத்தம் முதல் சோல்பெரி அரசியல் யாப்பு வரை பல அரசியல் மாற்றங்கள் நடந்தாலும் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளாகவே காணப்பட்டதோடு மட்டுமல்லாது பிரித்தானியாவின் முடிக்குறிய இளவரசியே நாட்டை ஆள்பவராக கருதப்படுவார். 1804ல் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி இயக்கங்களின் விளைவாக நாட்டில்  பல புத்திஜீவிகள் உருவாகத்தொடங்கினர். இதனால் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில்  சிவில், சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இலங்கையர்கள் உள்வாங்கப்பட்டு நிர்வாக சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இது இலங்கை வரலாற்றில் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தியாவில் காந்தியின் போராட்டம் மற்றும் 19ம் நூற்றாண்டின் உலக மகா யுத்தங்களின் விளைவால் பிரித்தானியா வலுவிழந்தது. ஏறத்தாழ அத்தோடு பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்காலம் நிறைவுக்கு வந்தது. 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. தேசத்தின் சுதந்திரத்தில் தலைசிறந்த ஆளுமைகள், கல்விமான்கள், போராட்டக்குழுக்கள் மற்றும் ஒருசேர்ந்த மக்களின் பெரும்பங்கு ஒருபுறமிருந்தாலும், உலக நாடுகள் மத்தியில் பிரித்தானிய பேரரசின் சரிவும் ஒரு முக்கிய காரணமாகும். டி. எஸ். சேநாநாயக்க இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்றார். 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோதும் சோல்பரி யாப்பின்படி பிரித்தானிய நாட்டு இளவரசியே நாட்டின் பேரளவு ஆட்சி தலைமையாக விளங்கினார். 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு இயற்றப்பட்டதன் பின்னர் பிரித்தானிய பேரரசுடன் இருந்த அரசியல் ரீதியான தொடர்புகள் முற்றாக நீக்கப்பட்டு ‘லங்கா’ எனப்பட்ட இந்நாடு ஶ்ரீ லங்கா என அழைக்கப்பட்டது.

இலங்கையில் பிரித்தானியரின் ஆதிக்கத்தால் காணி உரிமையற்ற மக்கள், மரபு ரீதியாக காணப்பட்ட தன்னிறைவு பொருளாதாரத்தின் வீழ்ச்சி, தேசிய ரீதியான அறிவும் ஆற்றலும் மழுங்கடிக்கப்பட்டமை போன்ற பிரதிகூலங்கள் இருப்பினும், தற்போதைய எம் நாட்டின் அந்நிய செலாவணியில் பாரிய பங்கு வகிக்கும் தேயிலை, இறப்பர், தெங்கு மற்றும் கோப்பி போன்ற பயிற்செய்கையை அறிமுகம் செய்து, அவற்றை வணிகம் செய்யும் பொறிமுறையை வகுத்துக் கொடுத்த பெருமை பிரித்தானியர்களை சாரும். அவற்றை அறிமுகம் செய்யாமல் இருந்திருந்தால் தற்போது தேயிலைக்கன்றுகள் நடப்பட்டிருக்கும் இடங்கள் வெறும் புற்தரைகளாக காணப்பட்டிருக்கக்கூடும்.

இலங்கையில் இருக்கும் பெரும்பாலான பெரு நகர் வீதிகள் பல மீள்திருத்தி பராமரிக்கப்பட்டாலும் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ரந்தெனிகல, விக்டோரியா நீர் தேக்கங்கள் எம் விவசாயத்திற்கு எந்தளவு பயன்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட மாத்தறை முதல் பெலியத்தை வரை செல்லும் புகையிரத பாதையை தவிர, ஏறத்தாழ மற்றைய புகையிரத பாதைகள் அனைத்தும் நாட்டிற்கு நெறிப்படுத்திக் கொடுத்த பெருமை பிரித்தானியரைச் சாரும் என்பதோடு மட்டுமல்லாது இலங்கை சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரித்தானியர் எமக்கு காட்டித்தந்த புகையிரத செயன்முறையே இன்னமும் அமுலில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

நாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும் பழக்கமும் ஒன்று. நாம் தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வரும் இந்தப் பழக்கம் நம் நாடித் துடிப்பினை சீராக்கி கொண்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இது போன்ற கையில் கயிறு கட்டுதல் பற்றி நாம் அறியாத சில தகவல்கள்.

நம் உடலில் பல்வேறு இடங்களில் பல்வேறு முடிச்சுக்கள் காணப்படுகின்றன. அவ்வாறாக காணப்படும் முடிச்சுக்களில் முக்கியமான முடிச்சாக விளங்குவது எமது மணிக்கட்டு பகுதி தான். எம் முன்னோர்களின் காலத்தில் எவரேனும் சுகயீனமுற்றால் நாடிப் பிடித்துப் பார்த்து நோயினை கண்டு பிடித்தல் வழக்கம். இதயத்தின் துடிப்பினை அறிய நாடி பிடித்து பார்க்கும் இடத்தில் தான் நாம் கயிறு கட்டுகிறோம். இவ்விடத்தில் கயிறு மற்றும் காப்பு போன்றவற்றை அணிவதால் எம் நாடியின் இயக்கம் சீராகிறது. உடல் ரீதியாக மட்டுமன்றி உள ரீதியாக நம் எண்ணங்களும் சிந்தனைகளும் சீராகின்றன. இதனால் மனம் நல்ல அமைதியான நிலையினை அடைகிறது. இதுவே அறிவியல் ரீதியான காரணமாகும்.

சாஸ்திர சம்பிரதாய ரீதியாக நோக்குவோமானால் ஒவ்வொரு வகையான காப்பு கயிறுக்கும் ஒவ்வொரு நிறக் காப்பு/கயிறுக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவ்வாறு நோக்குவோமானால், காப்பு அணியும் போது தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகிய உலோகங்களால் ஆன காப்பினை அணிவது வழக்கம் ஆனால் பட்டு, தர்ப்பை, அறுகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது தான் அறிவியல் ரீதியாக பலன் தரக் கூடிய சரியான ஓர் முறையாகும்.

மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறத்தினாலான கயிறினை கட்டுவதனால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம் என நம்பப்படுகிறது.

கருப்பு நிறக் கயிரானது எதிர்மறையானவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது. சிறு குழந்தைகளுக்கு கருப்பு நிறக் கயிற்றினை இடுப்பில் கட்டக் காரணம் கண் திருஷ்டி படாது குழந்தை பாதுகாக்கப்படும் என்பதால் தான்.

சிவப்பு நிறத்திலான கயிறு அணிவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறக் கயிற்றினை கட்டுவதனால் வாழ்வில் புகழ் மற்றும் அதிகாரம் வந்து சேரும்.

முருகன், பிள்ளையார், திருப்பதி மற்றும் சிவன் ஆகிய தெய்வங்களின் உருவம் பதிக்கப்பட்ட டொலர்களை கோர்த்து கழுத்தில் அல்லது கைகளில் அணிய பயன்படுத்தப்படும் கயிறே காசிக் கயிறு என்றழைக்கப்படுகிறது.

இவ்வாறாக கயிறு கட்டுவதால் பல பலன்கள் கிடைப்பதாக சம்பிரதாய ரீதியாக கூறப்படுகின்றது. எது எவ்வாறு இருப்பினும் கைகளில் கயிறு கட்டுதல் பலன் தரக் கூடியது என்பது அறிவியல் ரீதியாக அறியப்பட்ட ஓர் உண்மையாகும். கைகளில் கயிறு கட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது மூட நம்பிக்கையாக பார்க்காது உடல் ஆரோக்கியத்தினை சீராக்கும் ஓர் அறிவுப் பூர்வமான விடயமாக நோக்குவோம்.

உச்சிமுனைத்தீவில் கிறிஸ்துமஸ்


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லாத இலங்கை நாட்டில் சமூக நலன் கருதி சேவையாற்றும் அமைப்புகள் பல உண்டு. அவ்வாறாக தன்நலமற்று சேவையாற்றும் அமைப்புகளில் சோல்மேட் – Soulmate அமைப்பும் ஒன்றாகும். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராது வறுமையாலும் வாழ்வியல் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களை தேர்ந்து தங்களால் முடிந்தவரை உடல் மற்றும் பண ரீதியான முதலீடுகளை கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.


நாம் அனைவரும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் எவ்வாறான ஆடைகளை கொள்வனவு செய்யலாம், எந்த வகையிலான உணவினை சமைத்து உண்ணலாம், நம் உறவுகளுக்கு கையளிப்பதற்கான பரிசுகள் என்பவற்றில் கவனம் செலுத்தி அவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம். நம்மை சுற்றி பசியாலும் வறுமையாலும் வாடும் ஏனைய சகோதரர்களை பற்றி நாம் சிந்திப்பது கிடையாது. நாம் அணிய ஆடை வாங்க வேண்டுமென சிந்திக்கும் எமக்கு, தெருவில் குளிரால் அவதியுற்று இரவுகளை கழிப்பவர்களுக்கும், கந்தல் அணிந்து நல்ல ஆடை அணிய வசதியற்றவர்கள் பற்றியும் சிந்திக்க முடிவதில்லை. நம் தட்டின் உணவின் சுவை பற்றி கவலை கொள்ளும் எமக்கு பிறர் பசி பற்றி சிந்திக்க நேரமிருப்பதில்லை. இவ்வாறான நடைமுறைகளை மாற்றி அனைவர் மனதிலும் புதியதொரு பண்டிகை கொண்டாடும் முறையினை சோல்மேட் அமைப்பினர் முன்னெடுத்து வைத்துள்ளனர்.


இந்த 2020ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையினை சோல்மேட் அமைப்பு தங்களது குழுவினரின் பங்களிப்புடன் கற்பிட்டி உச்சிமுனை மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. இந்த கொவிட் – 19 அசாதாரண சூழ்நிலையினால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் பலர் வருமானம் ஈட்ட வழியின்றியும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு ஆளாகியும் வருகின்றனர். இதுபோன்ற இடர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் உச்சிமுனை மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொதிகள், உடைகள், கம்பளிகள் மற்றும் 80 சிறுவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் அடங்கலான பொதிகளை சோல்மேட் அமைப்பு வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் சிறார்களுக்கென கலாசார நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.


சோல்மேட் அமைப்பின் இந்த சேவை நோக்கிலான நிகழ்ச்சித் திட்டமானது கடந்த டிசம்பர் 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் தங்களது குழுவினருடன் 22ஆம் திகதி காலை புறப்பட்டு அதன் பின் மறுநாள் 23ஆம் திகதி தாம் கொண்டு சென்ற பொருட்களை கையளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி திட்டத்தின் போது தனிமைப்படுத்தலுக்கான கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பதில் இவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டமை மேலும் பாராட்டுதலுக்குரிய ஓர் விடயமாகும்.


இவ்வாறாக சோல்மேட் அமைப்பினரின் இந்த முயற்சியினை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் பண்டிகை காலங்களில் நம்மை சுற்றி வாழும் ஏழை, எளியவர்களது நலன் கருதி, எம்மால் இயன்ற உதவிகளை செய்ய முற்படுவோம். சோல்மேட் அமைப்பானது மேலும் எதிர்வரும் காலங்களில் தனது சேவைகளை முன்னெடுத்துச் செல்ல எங்களது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

யாழ் நகரில் கால்வாய் சுத்திகரிப்பின்போது கண்டகற்றப்பட்ட நெகிழிக் கழிவுகள்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அதிகமான தமிழ் மக்கள் வாழ் பகுதியாக கருதப்படும் யாழ்ப்பாணம், இயற்கை அரன்களை கண்டு கழிக்கவும் இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கும் சிறந்த ஓர் பகுதியாகும். பெரும்பாலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பிரசித்திப் பெற்ற கோயில்களை கொண்ட ஓர் மாவட்டமாகவும் யாழ்ப்பாணம் விளங்குகிறது.

இவ்வாறு பல புகழினை தன்னகத்தே கொண்ட, காணும் இடமெல்லாம் பனை மற்றும் தென்னை மரங்களால் சூழப்பெற்ற யாழ்ப்பாண பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால் மக்கள் தமது அன்றாட வாழ்வினை வாழ்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். பலரது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி வீட்டின் பொருட்கள் நீரோடு அடித்துச் செல்லப்பட்டது. சிலரது வீடுகளில் காணப்படும் பண்ணை விலங்குகளான கோழி, ஆடு போன்றன வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தன. சில வீடுகளில் காணப்பட்ட கிணற்றுப் பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு கிணற்று நீரோடு வெள்ள நீர் கலந்தமையால் குடிப்பதற்கு தேவையான நீரின்றி மக்கள் அவதியுற்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாமல் கட்டுமரங்களை தற்காலிக போக்குவரத்தாக பயன்படுத்தும் அளவிலான சிரமங்களுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அத்தோடு நகர்ப்பகுதி மக்களும் வணிகர்களும் மேலும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தனர். காலநிலை மாற்றங்கள் சீரான பின்பும் வெள்ள நீர் வழிந்தோடாமல் தேங்கி நின்றதோடு, தொடர்ந்து மழை பெய்ந்தமையே இவற்றிற்கான காரணமென சிரமங்களை எதிர்கொண்டுக் கொண்டிருந்த மக்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையினை சீர் செய்யும் நோக்குடன் யாழ் மாநகரின் சந்தைப் பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட வடிகாலினை சுத்தம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் வடிகால் சுத்திகரிப்பாளர்கள் ஈடுபடத் தொடங்கினர். குறித்த வடிகால் சுத்திகரிப்பின் போது எவரும் எதிர்ப்பாராத அளவிலான பிளாஸ்திக் கழிவுகள் அகற்றிக் குவிக்கப்பட்டன.

அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களில் இருந்து பெறப்படும் உக்காத கழிவு வகைகளில் ஒன்றாக பிளாஸ்திக் கழிவுகள் விளங்குகின்றன. இவை மண்ணோடு கலக்கப்பட்டாலும் உக்குவதற்கு பல வருடக் காலங்கள் எடுப்பதோடு, விளை நிலங்களை மலட்டு நிலங்களாக மாற்றும் அளவுக்கு ஆபத்தானவை.

இந்த பிளாஸ்திக் கழிவுகளினை அகற்றுவது மற்றும் அவற்றின் பாவனையையும் தயாரிப்பினையும் மட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி அவற்றினை மீள்சுழற்சி செய்வதே. நம் நாட்டில் மட்டுமல்லாது பிற நாடுகளுக்கு நாம் செல்லும் போதும் இம்முறையை கடைபிடித்தல் சிறந்த ஓர் பண்பாகும். பிளாஸ்திக் கழிவுகளை கால்வாய்களிலும் தெருக்களிலும் போடுவதனால் நாளடைவில் அவை காற்று அல்லது மழை நீரினால் கால்வாய்களுக்குள் தள்ளப்பட்டு வடிகாலினுள் சென்று ஒன்றிணைந்து அடைப்பினை உருவாக்குகின்றன. இதன் விளைவாக நீர் ஓடுவது தடைப்பட்டு தேங்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறான வெள்ள அனர்த்தங்களின்போது அவை பாரிய சிரமங்களை உருவாக்குவத்தோடு பல சொல்லெணா விளைவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.

இந்த பாதிப்பிற்கான பங்கு நம் அனைவருக்கும் உண்டு. நாம் வாழும் சூழலினை பாதுகாத்து நலமுடன் வாழும் பகுதியாக மாற்றியமைக்க நம் சூழல் நம் தவறினை சுட்டிக்காட்டி கற்றுத் தந்த ஓர் பாடமாக இதனை ஏற்று, உரிய முறையில் கழிவுகளை அகற்றி இனி வருங்காலங்களில் நாம் நம்மையும் நம் சுற்றுச் சூழலையும் பாதுகாத்து வாழ்வோமாக!

முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்க இதோ சில தீர்வுகள்!

அனைவருக்கும் பிறக்கும் போது இருக்கும் அழகிய சருமம் காலப்போக்கில் மாசு, மருக்களினாலும் ஆடைகளை இறுக்கமாக அணிவதனாலும் அம்மை வருவதாலும் பிரசவத்தின் போதும் முகப்பருக்கள் ஏற்பட்டு தழும்புகளால் அழகிழந்து போகிறது.

பெரும்பாலும் பருக்களினால் உருவாகும் தழும்புகள் தான் அதிகம். குறிப்பாக முகத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய்ப்பசை, தொற்றுக் கிருமிகளின் தாக்கம், ஹார்மோன் சமநிலை சீரற்றதாக மாறுதல், சில மருந்துகளினால் ஏற்படும் ஒவ்வாமை, முறையில்லா உணவுப் பழக்க வழக்கம் போன்றவற்றால் இளம் வயதினையுடையவர்களுக்கும் சில கர்ப்பிணிப் பெண்களுக்கும் பருக்கள் தோன்றுகிறது. இந்தப் பருக்கள் தானாகவே பழுத்து உடையும் போது தழும்புகள் உருவாகின்றன.

இந்த தழும்புகளால் முகத்தின் பொலிவு கெட்டு விடுகிறது. இந்த தழும்புகளை இயற்கை முறையில் நீக்குவதற்கான வழிகள் சில,

ஆலிவ் எண்ணெய்இரவில் தூங்கும் முன் தழும்புகளுள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெயினைப் பூசி காலையில் எழுந்து கழுவிக் கொள்ளவும்.
பாதாம்

பாதாமினை 12மணி நேரத்திற்கு பால் அல்லது தண்ணீரில் ஊறவைத்து அதன் தோலை நீக்கிக் கொள்ளவும். அதன் பின் அரைத்து எடுத்த பன்னீருடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து தழும்புள்ள பகுதிகளின் மேல் தடவி வரவும்.

எலுமிச்சை

எலுமிச்சைச் சாறில் பஞ்சை நனைத்து தழும்புள்ள இடங்களில் ஒத்தி எடுக்கவும். எலுமிச்சைச் சாறிலுள்ள விட்டமின்- Cயானது தழும்புகளை மறையச் செய்யும் தன்மை கொண்டது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து ஜூஸாக்கி தழும்புகளின் மேல் தடவி வரவும்.


அரச இலை

காய்ந்த அரச இலைகளை எரித்து அதன் கரித்தூளினை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் தழும்புகளுள்ள இடங்களில் தடவி காலையில் குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளவும்.

இவற்றை பரு வந்த தழும்புகள் மேல் மட்டுமன்றி காயங்களால் உருவாகும் தழும்புகள் மேலும் தடவி வந்தால், தழும்புகள் மறைந்து பொலிவான சருமத்தைப் பெற முடியும்.

கிறிஸ்துமஸ் 2020 – பாதுகாப்பாக கொண்டாட சில குறிப்புகள்!

இலங்கை தீவில் கொண்டாடப்படும் பிரபல்யமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்றாகும்.

இந்தப் பண்டிகை காலமானது,  வருடத்தில் மக்களை பரபரப்பாக காணக்கூடிய காலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகிய இடங்களில் பலர் குடும்பங்களுடனும் நண்பர் பட்டாளத்துடனும் நிறைந்திருப்பர். தன் குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் உறவுகளின் கிறிஸ்துமஸ் பண்டிகை கால வருகை பலருக்கு சந்தோஷத்தினை தரக்கூடியதாக இருக்கும்.

எதிர்ப்பாராத விதமாக இந்த வருடம் இவை அனைத்திலும் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட கொவிட்-19, சமூகத்தோடு கலந்து வாழ்ந்து கொண்டிருந்த நம் வாழ்வில் பல தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளையும் சுகாதார ரீதியான எச்சரிக்கைகளையும் உருவாக்கியுள்ளது. சமூகத்தோடு இணைந்து ஆரவாரித்து கொண்டாடும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை திகழ்கிறது. இவ்வாறான தனிமைப்படுத்தல் சூழ்நிலைக்கு மத்தியில் எவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது?

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதில் ஆர்வத்துடன் இருக்கும் எவரும் கவலை கொள்ள வேண்டாம்! இந்த மாதிரியான சூழ்நிலையில் எப்படி பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடலாம் என உங்களுக்காக சில டிப்ஸ்.

ஒன்லைன் ஷோப்பிங்

கிறிஸ்துமஸ் காலமானது பிறருக்கு அன்பளிப்புகளை கையளிக்கும் காலம். இந்த அன்பளிப்புகளை கொள்வனவு செய்வதற்கு ஷாப்பிங் முதற்படியாகும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கால ஷாப்பிங்கானது புதிய அனுபவத்தினை மட்டுமல்லாது அபாயத்தினையும் ஒருங்கே தரக்கூடியதாக உள்ளதை நாம் மறுத்திட முடியாது.

தற்போது அதிர்ஷ்டவசமாக நம்மால் ஒன்லைன் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியுள்ளது. இந்த கொவிட்-19 நிறைய ஆன்லைன் தளங்களைத் திறக்கச் செய்துள்ளது. அவற்றில் பல இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் உள்ளன. ஒன்லைன் ஷாப்பிங்கில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் நாம் வேறொன்றை தெரிவு செய்வோம். அதாவது பெரிதாக கூட்டங்கள் கூடாத நேரங்களில் ஷாப்பிங் மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது வசதியானதாகவும், ஆறுதலாக ஷாப்பிங் செய்யக் கூடியதாகவும், உங்களை கிருமி தொற்றிலிருந்து பாதுகாப்பதாகவும் அமையும்.

உணவு மற்றும் பானங்களை பரிமாறுவதற்காக ஒருமுறை பாவனைக்கு உட்படுத்தக் கூடியவற்றை உபயோகிக்கலாம்.

இது சுகாதார கிருமி பரவலை தடுப்பதாகவும் நீங்கள் சுத்தம் செய்வதற்கான நேரத்தை மீதப்படுத்துவதாகவும் அமையும். இவை மலிவானதாகவும் அனைத்து சுப்பர் மார்க்கெட்களிலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இவற்றை பாவனைக்கு உட்படுத்தும் போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புடன் செயற்படுங்கள். அவற்றை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துங்கள்.

இந்தப் பாத்திரங்களில் விருந்தினர்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதவும்.

ஒரே பாத்திரத்தை விருந்தினர்கள் உபயோகத்திற்கு உட்படுத்தாத படி தனித்தனியே பெயரிட்டு வரிசைப்படுத்துங்கள். இது உங்கள் விருந்தினர்களுக்கு ஒரு வேடிக்கையான கிறிஸ்துமஸ் அனுபவமாக அமையும். குழந்தைகள் அவற்றை தனக்கென கொண்டு சென்று வண்ண வண்ண பேனாக்கள், ஸ்டிக்கர்கள் கொண்டு அழகாக அலங்கரிப்பார்கள்.
சமூக இடைவெளியை பேணல்.

இந்த காலத்தில் சமூக இடைவெளியை பேணுதல் என்பது நமது முக்கிய கடமையாகும். ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பெரிய விருந்துகளை ஒழுங்கு செய்வதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் சிறிய விருந்துகளை ஒழுங்கு செய்யலாம். கிறிஸ்துமஸ் காலத்தில் பரிசுகள் கொடுத்தல், அன்பு மற்றும் பராமரித்தல் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிரும் போது நாம் அவதானிப்பாக இருக்க வேண்டும். நாம் கூட்டம் கூட்டமாக கூடி கொண்டாடுவதை தவிர்த்து குடும்ப அங்கத்தவரகளுடன் கொண்டாடலாம். இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியினால் நாம் நமது மற்றைய உறவுகளுக்கு ஒன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு கொண்டாட முடியுமானதாக இருப்பது அதிர்ஷ்டம் தான். இந்தக் கிறிஸ்துமஸினை உங்களுக்கு பிடித்த பாடல்கள், உங்களுக்கு விருப்பமான உணவு, உறவுகளுடன் சமூக இடைவெளியையும் பேணிய படி கொண்டாடலாம். ஒரு வேளை நீங்கள் அதிகமான நபர்களுடன் கொண்டாட நேரிட்டால் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள். முகக்கவசம் அணிவது கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்குமே தவிர உங்களுடைய கொண்டாட்டங்களில் எந்தவொரு தடையும்ஏற்படுத்தப்போவதில்லை.

உணவினை டெலிவரி செய்யும் முறை மற்றும் ஒன்லைனில் மளிகை பொருட்கள் வாங்கும் முறையினை பின்பற்றவும்.

இந்த முறையினை பின்பற்றுவதனால் உங்களால் உள்ளூர் வணிகத்திற்கு உதவுவதோடு அதற்காக நீங்கள் செலவிடும் நேரத்தினையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும். இப்போது சுகாதர நடவடிக்கைகளை கையாண்டு வீட்டிற்கு டெலிவரி செய்யக் கூடிய வகையிலான நிறைய ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதனால் வீட்டிலிருந்தபடி சமூக இடைவெளியையும் பேண முடியும்.

விருந்தினர்களை சமையலறைக்குள் அனுமதிப்பதை தவிருங்கள்.

உணவினை சுகாதாரமானதாக பாதுகாத்து கொள்வதற்கும், கிருமித் தொற்றினை தடுப்பதற்கும், விருந்தினர்கள் சமையலறையினை உபயோகிக்காதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விருந்தினர்கள் உணவினை பரிமாறும் முன் சுவை பார்ப்பதற்கோ, தொடுவதற்க்கோ அனுமதிக்காதிருங்கள். உணவு தயாரானவுடன் அவர்களுக்கு பரிமாறுங்கள்.

கேக் கலவை எவ்வாறு தயாரிக்கப்படும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவ்வாறு தயாரிக்கப்படும் போது ஒருவர் மட்டும் அதனை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் சுயபரிமாறல் முறைக்கு பதிலாக இருவர் சேர்ந்து அனைவருக்கும் பரிமாறும் படியாக ஒழுங்கு செய்தல் சிறப்பானது.

 

பொதுவாக அனைவரும் கூடக்கூடிய இடங்களில் கை சுத்திகரிப்பானை காட்சிப்படுத்துங்கள்.

உங்கள் விருந்தினர்களின் கைகளை சுத்தம் செய்து சுகாதாரத்தினை பேணுவதை உறுதி செய்யுங்கள். அதனால் உங்கள் வீட்டின் நுழைவாயில், கூடம், கழிவறை, சமையலறை ஆகிய இடங்களில் கை சுத்திகரிப்பான்களை விருந்தினர்களின் பாவனைக்காக காட்சிப்படுத்துங்கள். இதனால் கிருமித் தொற்றினை கட்டுப்படுத்த முடியும்.

 

மேலதிக டிப்ஸ்!

நீங்கள் உங்கள் உறவுகளை பல காலம் கழித்து பார்க்கும் தருணமாக இந்த தருணம் இருக்கலாம். ஆனாலும் இருவரின் சுகாதார நலன் கருதி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பதை தவிர்த்து, முழங்கைகள் மூலமாக அல்லது நாம் மறந்த நம் பாரம்பரிய வணக்கம் சொல்லும் முறையினை கையாளுங்கள். இதனால் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த கிருமித் தொற்று அபாயம் நிறைந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியினை ஒருவருக்கு ஒருவர் சுகாதார நடவடிக்கைகளில் விழிப்புணர்வுடனும் குடும்பங்கள் பற்றி சிந்தித்து பொறுப்புணர்வுடனும் நம்மை நாமே மேற்குறிய டிப்ஸ்களினை கையாண்டு தனிமைப்படுத்தி நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாத்து அன்பு, பராமரிப்பு கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு மனமகிழ்ச்சியோடு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையினை கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய விடுமுறை கால வாழ்த்துகள்!

மனிதர்களின் உயிர் பறிக்கும் ஆட்கொல்லி நோய்!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி அன்று உலகில் வாழ் மக்களிடையே எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச எச்.ஐ.வி தினம் முன்னெடுக்கப்படுகிறது. எது எவ்வாறாகிடினும் எச்.ஐ.வி பற்றிய தெளிவான விழிப்புணர்வு மக்களிடையே அரிதாகவே காணப்படுகிறது. இந்தப் பதிவில் அந்த நோய் பற்றி விரிவாக அறிவோம்.

எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் நோயானது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியினை அழிக்கும் ஒரு வகை வைரஸாகும். இது வேகமாக பரவக்கூடிய கொடிய வகை நோயாகும். இது வேகமாக உடலில் பரக்கூடியது என்பதனால் ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் கொண்டு கண்டறியாது அலட்சியமாக விடுமிடத்து மரணத்தினை தழுவுவது நிச்சயமாகிறது. இருப்பினும் எச்.ஐ.வி தொற்றுக்கான அறிகுறிகள் எளிதில் வெளிவருவதில்லை பல மாதங்கள் கூட ஆகக் கூடும் ஆகையால் உங்களுக்கு எச்.ஐ.வி இருக்கும் என நீங்கள் சந்தேகிக்கும் போதே அதனை உறுதிபடுத்த பரிசோதனைகள் செய்தல் நன்று. சிலர் இந்த நோயிற்க்கான அறிகுறிகளை முன்னதாகவே கண்டு கொண்டாலும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற தயங்கி முடங்குகின்றனர். முதலில் நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையாதெனில் இந்த நோய் பரவுவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. இன்று இந்த நோயிற்க்கான சிகிச்சையினை அளிப்பதற்கான மற்றும் பரிசோதனைகளுக்கான பதிவேடுகள் வைத்தியசாலைகளில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் தனது உடலின் நீர்மங்களை பிறருக்கு கொடுப்பதன் மூலம் இந்த நோய் பரவக் கூடும்.

எச்.ஐ.வி நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் சில,
எடை குறைதல் – எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்படும் விடத்து உங்கள் உடல் எடை வழமையை விட வேகமாக குறையத் தொடங்கும். இந்த நோய் தீவிரமடைவதற்கான முதல் அறிகுறி இதுவாகும். அதனால் உங்கள் எடை வழமையை விட அதிகமாக வேகமாக குறைய ஆரம்பித்தால் வைத்தியரை நாடவும்.

தொடர் இருமல் – தொடர்ந்து நிற்காமல் இருமல் ஏற்படல் கூட எச்.ஐ.வி நோயின் ஓர் அறிகுறியாகும். தொடர் இருமல் சுவாசம் மற்றும் அலர்ஜிக்கின் பிரச்சனையாக கூட இருக்கலாம்.

நகத்தின் நிறம் – எச்.ஐ.வி நோயின் அடுத்த அறிகுறி நகங்களின் நிறம் குறைதல் மற்றும் பிரிதலாகும்.

களைப்பு – எச்.ஐ.வி நோயின் ஆரம்ப கால அறிகுறி உடற்சோர்வாகும். உங்கள் நாளாந்த வாழ்வில் நீங்கள் அதிகமான களைப்பு மற்றும் மந்தமான நிலையினை உணர்ந்தால் வைத்தியரை நாடுதல் நன்று.

தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படல் – தசைகள் மற்றும் கைகால் மூட்டுகளில் தாங்க முடியாதளவு வலி ஏற்பட்டால் அது எச்.ஐ.வி நோயின் அறிகுறியாகும்.

தலைவலி – சாதாரணமான தலைவலியை தவிர அடிக்கடி தலைவலி ஏற்பட்டு அது உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டால் அது எச்.ஐ.வி நோயின் அறிகுறி. இவ்வாறான தலைவலி உடையவர்கள் ARS பரிசோதனை எடுக்க பரிந்துரைக்கப்படுவர்.

தோலில் மாற்றம் – உங்கள் தோல் மென்மை இழந்து சொரசொரப்பாகவும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும் இடத்து அதுவும் எச்.ஐ.வி நோயிற்க்கான அறிகுறியே.

இனியாவது இது போன்ற பாலியல் தொடர்பான நோய்கள் பற்றி பேசக்கூடாது என முடங்காது முன் வந்து பேசி அது பற்றிய தெளிவான விளக்கத்தினை பெற்று நலமுடன் வாழ்வோம்.

தீர்வுகள் இல்லாத உடல் பிரச்சனைகளுக்கு வெள்ளரிக்காய்!

நாம் உண்ணும் உணவோடு சிறிதளவு வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. வெள்ளரிக்காயில் விட்டமின்கள் என ஏதுமில்லை ஆனால் சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கல்சியம், மக்னீசியம், குளோரின், சிலிகன் மற்றும் கந்தகம் போன்ற தாதுப் பொருட்கள் காணப்படுகின்றன. அனைத்து மரக்கறி சந்தைகளிலும் வெள்ளரிக்காயினை மலிவான விலையில் பெற்றுக் கொள்ள முடியும் இருப்பினும் நாம் எவரும் கண்களின் கருவளையத்திற்கு வைப்பதை தவிர வேறெதற்காகவும் வெள்ளரிக்காயினை உபயோகிப்பதில்லை. வெள்ளரிக்காயினை அடிக்கடி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள் சில,

அடிக்கடி நாவறண்டு போதல், உடல் உஷ்ணம் அதிகமாக உள்ளவர்கள் மற்றும் பசியில்லாமல் அவதிப்படுவோர் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

புகைப்பிடிப்பதனால் உடல் பல பாதக விளைவுகளுக்கு உள்ளாகின்றது. அவற்றுள் ஒன்று தான் குடலில் நிகோடின் நஞ்சு சேர்ந்து குடலை சீரழிப்பதும். வெள்ளரிக்காய்க்கு இந்த நஞ்சினை நீக்கும் ஆற்றலுண்டு.

மூளை அதிகமாக வேலை செய்வதனால் ஏற்படும் சூட்டினை தணித்து மூளைக்கு புத்துணர்ச்சியும் வலிமையும் வழங்கக் கூடிய ஆற்றல் வெள்ளரிக்காயில் உண்டு.

சிறுநீர்ப்பிரிவைத் தூண்டுவதோடு இரைப்பையில் ஏற்படும் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தக் கூடியது.

சிலருக்கு குடலில் ஏற்படும் புண்களின் காரணமாக வாயில் துர்நாற்றம் வீசுவதுண்டு. வெள்ளரிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் வாயில் துர்நாற்றம் வீசுவது குறையும்.

ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் இரத்த கசிவினால் அவதியுறுவோர் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வர நிவாரணம் பெற முடியும்.

அதிக எடை மற்றும் தொப்பை உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வர வயிற்றுப் பகுதிகளின் தேவையற்ற கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தொப்பை குறைவதோடு உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

வெள்ளரிக்காயினை சாப்பிடும் போது மேலும் மேலும் சாப்பிட தூண்டுமளவு சுவையும் குளிர்ச்சியும் மிக்கது எனினும் வெள்ளரிக்காய் அதிகளவில் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தான ஒன்றாகும். வெள்ளரிக்காயினை உண்ணும் போது அதில் கசப்பான சுவையொன்றினை உணர்ந்திருப்போம். இதற்கு காரணம் அதிலுள்ள குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டுகள் எனப்படும் நச்சுப்பதார்த்தங்களே. இவை அதிகளவில் உடலில் சேரல் ஆபத்தானது ஆகவே வெள்ளரிக்காயினை உள்ளெடுக்கும் அளவில் கவனம் கொள்ளவும்.

இயற்கையாக சுருள் முடியை பராமரிக்க சில டிப்ஸ்!

உலகில் உள்ள பெண்களில் நேரான முடியுள்ள பெண்கள் தங்களது முடியினை சுருள் முடியாகவும் சுருள் முடியுள்ள பெண்கள் நேராகவும் மாற்றிக் கொண்டுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் சுருள் முடி தான் அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிடித்ததொரு ஹேர் ஸ்டைலாக இருக்கிறது. இதனால் செயற்கையாக தனது கூந்தலை சுருட்டையாக மாற்றிக் கொள்பவர்கள் உண்டு அவ்வாறெனில் சுருள் முடியுள்ள பெண்கள் தமது முடியை நேராக மாற்றுவதற்கான காரணம் என்னவெனில் அவர்களால் தனது கூந்தலை பேணி பாதுகாக்க முடியாமையே. இயற்கையாகவே பிறக்கும் போதே சுருள் முடி உள்ள பெண்களுக்கு அவர்களது கூந்தலை பேணி பாதுகாக்க சில எளிய டிப்ஸ்,

எண்ணெய்

சுருட்டை முடியுள்ளர்களின் தலையில் இயற்கையாக சுரக்கும் எண்ணெயானது கூந்தலின் நுனி வரை செல்வதில்லை அதனால் இவர்களது முடி சீக்கிரம் வறட்சி அடைந்து விடுகிறது. இதனால் கூந்தலில் காலப்போக்கில் வறட்சி தன்மை நிரந்தரமாக மாறிவிடுவதோடு வெடிப்புகளும் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து கூந்தலை பாதுகாத்துக் கொள்ள சுருட்டை முடியுள்ளவர்கள் தேங்காயெண்ணெய், ஒலிவ் ஒயில் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை தலைக்கு வைத்து தினமும் மசாஜ் செய்யவும்.

சீப்பு

சுருட்டை முடியுள்ளவர்கள் தலையினை சீவும் போது பெரிய பற்கள் கொண்ட சீப்பினை பயன்படுத்தவும். இதனால் சீவும் போது முடி உடைவது குறையும்.

ஹேர் பெக்

முட்டை ,மயோனைஸ், பால் மற்றும் தயிர் போன்றவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய ஹேர் இயற்கை முறையிலான பெக்குகளை வாரத்திற்கு ஒரு முறை போட்டு வரவும். செயற்கையான பெக்குகளை விட இயற்கையான பெக்குகளை போட்டு வருவதால் சுருட்டை முடியானது ஆராக்கியமானதாகவும் அழகானதாகவும் வளரும்.

ஷாம்பு

சுருட்டை முடியுள்ளவர்கள் பல விளரம்பரங்களை பார்த்து தனது முடியினை பொலிவாகவும் அழகாகவும் மாற்றிக் கொள்ள கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை உபயோகிக்கின்றனர். இதனால் கூந்தலின் பொலிவும் அழகும் கெட்டுப் போய்விடும். இதனால் வாரத்திற்கு இரு முறை சீகைக்காய் வைத்து குளித்து வந்தால் கூந்தல் ஆரோக்கியமானதாகவும் பொலிவுடனும் வளரும்.

கண்டிஷனிங்

சுருட்டை முடியுள்ளவர்கள் தனது முடியை பராமரிக்கும் போது கண்டிஷனிங் செய்வது அவசியமாகும். இவ்வாறாக கண்டிஷனிங் செய்யும் போது செயற்கையான பொருட்களை தவிர்த்து இயற்கையான பொருட்களான முட்டை, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் டீ போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறப்பானதாகும்.

குளியல்

தினமும் குளித்தல் ஆரோக்கியமானதென பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அது ஆரோக்கியமற்ற ஒரு பழக்கமாகும். அதிலும் சுருட்டை முடியுள்ளவர்கள் தினமும் குளிப்பதால் தலையில் சிக்கல் ஏற்படக் கூடும். சுருட்டை முடியுள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதுமானது.

சுருட்டை முடியுள்ளவர்கள் இயலுமானவரை இயற்கையான முறையில் தமது கூந்தலை பராமரித்தல் சிறந்த பலனைத் தரும்.

அறிவியலும் தோப்புக்கரணமும்!

நம் முன்னோர்கள் உணவு முறைகளில் மட்டுமல்ல இறைவனை வழிப்பட காட்டி சென்ற சில வழிபாட்டு முறைகளில் ஒன்றான தோப்புக்கரணத்தின் பின்னும் உடலிற்கு வலிமை சேர்க்கும் அறிவியல் ரீதீயான நன்மைகளை மறைத்து வைத்து சென்றுள்ளனர். தோப்புக்கரணம் பற்றி நாம் அறியாத கதைகளும் அறிவியல் காரணங்களும் இதோ! உங்களுக்காக,

இந்துக்கள் விநாயகரை வழிபடும் போது தோப்புக்கரணம் போடுவது வழக்கம். இதற்கு பின் பழங்கதையொன்று மறைந்துள்ளது. அது என்னவெனில் முந்தைய காலத்தில் கஜமுகாசுரன் என்றழைக்கப்படும் அசுரன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவர்களை அடிமைப்படுத்தி கொடுமைகள் செய்து துன்புறுத்தினான். “என்னை பார்க்கும் போது பார்த்த இடத்தில் தோப்புக்கரணம் போட வேண்டுமென்ற நிபந்தனையும் விதித்தான். தேவர்களுக்கு அவனை எதிர்த்து போரிட முடியாத நிலையின் காரணமாக அவன் கூறிய அனைத்தையும் ஏற்று செய்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் கஜமுகாசுரனின் அட்டூழியங்களை தாங்க முடியவில்லை. இதனால் அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானிடம் தஞ்சம் புகுந்து முறையிட்டனர். விநாயகரும் தேவர்களின் துயரை போக்க முடிவு செய்து கஜமுகாசுரன் முன் சென்று நின்றார். கஜமுகாசுரனோ விநாயகரை பார்த்த பின்னும் கர்வம் குறையாது தன்னைப் பார்த்து தோப்புக்கரணம் போடுமாறு பணித்தார். இதைக் கேட்ட விநாயகர் சினம் கொண்டு தனது தந்தத்தினை உடைத்து கஜமுகாசுரனை குத்திக் கொன்றார். அதுவரை கஜமுகாசுரனுக்கு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த தேவர்கள் அன்றிலிருந்து விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட தொடங்கினர். இது தான் இன்று வரை இந்துக்கள் விநாயகரை வழிபடும் போது தாமும் தோப்புக்கரணம் போடக் காரணமாகும்.

நம்மில் சிலருக்கு தோப்புக்கரணம் போடுவதற்கான சரியான முறை தெரியாது. இடது கைை மடக்கி அதன் பெருவிரலினால் வலது காது மடலின் நுனியையும் வலது கையை மடக்கி அதன் பெருவிரலினால் இடது காது மடலின் நுனியையைும் பிடித்துக் கொண்டு முதுகு தண்டு வளையாத படி உட்கார்ந்து எழும்ப வேண்டும். இவ்வாறாக இடது கைப் பெருவிரலால் வலது காது மடல் நுனியையும் வலது கைப் பெருவிரலால் இடது காது மடல் நுனியையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்பும் போது மூளையின் இரு பகுதிகளுக்கும் குருதி ஓட்டம் சீராகி மூளை பலம் பெறுகிறது. கர்ப காலம் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தோப்புக்கரணம் போடக் கூடாது. இவ்வாறாக நாளொன்றிற்கு காலை அல்லது மாலை 15 இலிருந்து 50 வரையான தோப்புக்கரணம் போடலாம்.

இவ்வாறு தினமும் 5நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டு வந்தால் மூளைக்கு குருதி ஓட்டம் சீராகச் சென்று, உடல் மற்றும் உள சார்ந்த ஆற்றல் மேம்படும். முதல் தடவை செய்யும் போது தொடர்ந்து 5நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுதல் கடினமான ஓர் காரியமாக தோன்றலாம் ஆகையால் முதல் தடவை செய்பவர்கள் தினமும் ஐந்து தோப்புக்கரணம் போடலாம் நாட்கள் போக போக ஐந்து ஐந்தாக கூட்டிக் கொள்ளலாம்.

வகுப்பில் சில மாணவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். சில மாணவர்களுக்கு எத்தனை முறை படித்தாலும் மனதில் பதிவதில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் ஞாபகசக்தி குறைபாடு தான். இதனை சரி செய்து ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வதற்கு தினமும் தோப்புக்கரணம் போடுதல் நல்ல தீர்வாக அமையும். தோப்புக்கரணம் அல்லது வேறு காது நுனி தொடுதல் மாதிரியான பயிற்சிகளினை செய்யும் போது மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு ஞாபக சக்தி அதிகமாகிறது.

உடல் எப்போதும் சோர்வாகவும் சிறு வேலை செய்ததும் களைத்துப் போகும் நபர்கள் தினமும் தோப்புக்கரணம் செய்து வந்தால் உடல் புத்துணர்ச்சியும் தாம் செய்யும் செயல்களை ஊக்கத்துடனும் செய்ய தொடங்குவர்.

மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் அவதிபடுபவர்கள் தோப்புகரணம் செய்து வர மனஅமைதியினை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் தசைகள் இறுகி உடல் வலிமைப் பெறும்.

குழந்தைகளின் மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடான ஆட்டிசம் போன்ற மனஅழுத்தம் சம்பந்தமான நோய்கள் தோப்புக்கரணம் போடுவதால் படிப்படியாக குணமடைகின்றன.

மனதினை கட்டுப்பாட்டுடனும் உள்மனதினை சீராக பேணி உள நோய்களுக்கு ஆளாகாதபடி காத்துக் கொள்ளவும் தோப்புக்கரணம் போடுதல் உதவுகிறது.

தொடர்ச்சியாக தோப்புக்கரணம் போட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைவதோடு எப்போதும் விழிப்புடன் செயற்படும்.

அன்று தொடக்கம் இன்று வரை நம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தவறிழைக்கும் மாணவர்களையும் வகுப்பில் பின் தங்கிய மாணவர்களையும் தோப்புக்கரணம் போடச் சொல்வதும் அவர்களது காதை திருகுவதற்கும் காரணம் அவ்வாறு செய்வதால் மூளை விழிப்படைந்து அதன் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதனால் தான்.

இத்தனை நோய்கள் குணமாகுமா ? பேரீச்சம் பழங்களின் நன்மைகள்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருதிச் சோகை, கண் பார்வை குறைபாடு, மலச்சிக்கல் மற்றும் இரும்புச் சத்து குறைப்பாடு போன்றவற்றின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனை குணப்படுத்துவது காலப்போக்கில் சவாலான ஒன்றாக மாறிவிடுகிறது. இவ்வாறான பாதிப்புக்கள் உடலில் ஏற்படாதவாறு பாதுகாப்பதோடு இவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகும் போது அவற்றிலிருந்து குணமடையவும் ஈச்சபழம் பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு அப்பிள் சாப்பிடுவதால் வைத்தியரிடம் போக வேண்டிய தேவை ஏற்படாது என்பார்கள். அதுப் போல் தினமும் குறைந்தது இரண்டு ஈச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் குருதி சம்பந்தமான நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஈச்சம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில இதோ! உங்களுக்காக,

ஈச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமே காணப்படுவதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இரும்புச் சத்தோடு விட்டமின் A மற்றும் கல்சியமும் (சுண்ணாம்புச் சத்து) அடங்கியுள்ளது.

குருதி சம்பந்தமான குறைப்பாடுகள் உள்ளவர்கள் தினமும் ஈச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் குருதி விருத்தியடையும்.

ஈச்சம்பழத்திலுள்ள கல்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மூட்டு தேய்மானம் மற்றும் வலுவிழப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் அதிகமான குருதி வெளியேறுகிறது. இச்சமயத்தில் அந்த குருதியிழப்பினை ஈடு செய்வதற்கு ஈச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்து உதவுகிறது.

சக்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் அதிகளவான இனிப்பினை உட்கொள்ள முடிவதில்லை. இதனால் இனிப்பினை சுவைக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ள சக்கரை நோயாளிகள் ஈச்சம்பழத்தினை சுவைக்கலாம். இதிலுள்ள இனிப்பு அவர்களுக்கு எந்த பாதக விளைவையும் ஏற்படுத்தாது.

மலச்சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடும் முன் ஈச்சம்பழங்கள் சிலவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம்.

விட்டமின் A குறைபாட்டே கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்பட காரணமாகிறது. கண்பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் கண்புரை மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கவும் ஈச்சம்பழம் உதவுகிறது.

இவ்வாறாக உடலில் எலும்பு, தசை, குருதி மற்றும் கண் போன்றவற்றினை சீராக பேணி காக்க உதவும் ஈச்சம்பழத்தினை முடிந்த வரை தினமும் குறைந்தது இரண்டு வீதம் உட்கொண்டு நோய்கள் வரும் முன் நம்மை நாமே காத்துக் கொள்வோம்.

index.php