Blog Page 38

மருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் காணப்படும் தோட்டத்திலும் வாழைமரம் காணக்கூடியதாக இருக்கும் ஏனெனில் வாழை மரம் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல பலன்களை தரக் கூடியது. வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பயனைத் தரக் கூடியது. வேண்டாமென கழித்துக் கட்டுமளவிற்கு வாழை மரத்தில் ஏதுமே இல்லை.

விசேட பண்டிகை காலங்கள், விழாக்கள், திருமண மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்ற வைபவங்களின் போது வாழைக் கன்றுகளை வாசலின் இரு பக்கங்களிலும் கட்டி வைப்பது வழக்கம். இதன் பின் மருத்துவமும் அலங்காரமும் மறைந்துள்ளது. அத்தோடு இது செல்வம், வளம் மற்றும் மங்களகரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் அடையாளமாக விளங்குகின்றது. வாழை மரத்தின் வேர், வாழைப்பூ, வாழைத் தண்டு மற்றும் இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் சாறானது உடலில் உள்ள நோய்களை குணப்படுத்துகின்றது. வாழையிலையில் உணவினை சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம், ஆயுள் மற்றும் இளமை ஆகியன சீராகி அதிகரிக்கின்றன. வாழைக்காய் கூடுதலாக தென்னிந்தியர்கள் மற்றும் தமிழர்கள் தங்கள் உணவில் விரும்பி சேர்த்து சாப்பிடும் ஓர் உணவாகும். வாழைக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் பஜ்ஜி மற்றும் சிப்ஸ் போன்ற சிற்றுண்டிகள் சிறுவர்களிடம் மட்டுமன்றி பெரியவர்களிடமும் மாறா இடத்தை பிடித்துள்ளன. வாழைப் பழத் தோலானது சாயமிடலுக்கும் பற்களில் உள்ள கறையினை நீக்குவதற்கும் பயன்படுகிறது. சோர்ந்து களைப்பாக இருக்கும் போதும் உடலில் சக்தி குறையும் போதும் வாழைப்பழம் உடன் சக்தி மற்றும் ஆற்றலினை பெற்றுத் தரக் கூடியதாக காணப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது. வாழைப் பூ சிறுநீரக கற்கள், மலச்சிக்கல் மற்றும் கிட்னி சார்ந்த நோய்களிலிருந்து குணம் தரக் கூடிய ஒன்றாக விளங்குகிறது. வாழையின் நார் பூக்களை தொடுத்து கட்டி மாலையாக மாற்றுவதற்கு உதவுகிறது.

மருத்துவம் மற்றும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாது சாஸ்திர சம்பிரதாயப்படி மேற்கொள்ளப்படும் சில சடங்குகளிலும் வாழை மரத்தினை பயன்படுத்துகின்றனர். வாழை மரத்திற்கு தெய்வத்தினதும் பெண்ணினதும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் களத்திர தோஷம் மற்றும் இரண்டு திருமணம் நடைபெறக் கூடிய வாய்ப்பும் சிலரது ஜாதகத்தில் காணப்படும். அவ்வாறான ஜாதகர்களுக்கு திருமணத்தின் முன் வாழைமரமொன்றிற்கு தாலி கட்டி சாங்கியம் செய்வது வழக்கம். இவ்வாறு செய்வதால் இரண்டாவதாக இடம்பெறும் திருமணம் எந்தவொரு தடங்களின்றியும் எந்தவொரு இன்னலின்றியும் சிறப்பானதாக அமையும் என நம்பப்படுகிறது.

இவ்வாறாக வேர் முதல் நார் வரை பலபயன்களை தரக் கூடிய வாழை மரத்தினை உங்கள் வீட்டில் வளர்ப்பதற்கான இடவசதி இருக்குமேயானால் குறைந்தது ஒரு வாழை மரத்தினையாவது வளர்க்க முயற்சியுங்கள்.

பெண்களே! விரல்களிலுள்ள நகங்களை பராமரிக்க வேண்டுமா? இதோ! சில டிப்ஸ்..

பெண்களின் மென்மையான விரல்களுக்கு கிரீடம் அணிவதுப் போல் காட்சியளிப்பவை தான் நகங்கள். இயற்கையாகவே சில பெண்களுக்கு நகம் நீளமாக வளரும் தன்மைக் கொண்டிருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு நகங்கள் தசைப்பகுதியோடு ஒட்டியவாறு காட்சியளிக்கும். இதற்கான தீர்வினை அறியும் முன் இதற்கான காரணத்தினை அறிதல் அவசியமாகும்.

நகங்கள் நீளமாக வளராதிருப்பமைக்கான காரணங்கள்,
நகங்களினை ஒழுங்கான முறையில் பராமரிக்காமை.

நகங்களை சுத்தம் செய்யாதிருத்தல்.

சீரான இரத்த ஓட்டம் இல்லாமை.

நகம் வளர தேவையான புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து குறைப்பாடு.

அடிக்கடி நகம் கடித்தல்.

இவ்வாறான காரணிகள் மீது கவனம் செலுத்தி அடற்றிற்கான தீர்வினை நடைமுறைப்படுத்தும் போது நகங்கள் நீளமாக வளரத் தொடங்குகின்றன. நகங்கள் நீளமானதாக வளர்வதற்கு நாம் செய்ய வேண்டிய படிமுறைகள்,
முதலில் சவர்க்காரமிட்டு நகங்களை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். அதன் பின் ஓர் சிறிய பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி சிறிதளவு உப்புத்தூள் மற்றும் Baby wash ஆகியவற்றை கலந்து சராசரியாக 5 நிமிடங்களுக்கு நகங்களை ஊற விடவும். நகங்கள் ஊறியதும் சிறிய ப்ரஷ் ஒன்றினால் நகங்களை மெதுவாக தேய்த்து குளிர்ந்து நீரினால் கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

பூண்டு ஒரு துண்டை எடுத்து தோல் உரித்து நறுக்கி அதனை நகங்களின் மீது தேய்த்து மசாஜ் செய்து குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளவும். இதனால் நகங்கள் வலிமைப் பெறும்.

ஒலிவ் ஒயில் சிறிதளவினை எடுத்து நகங்களை தினமும் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகி நகங்கள் நீளமானதாக வளர தொடங்கும்.

எலுமிச்சை பழத்தினை துண்டுகளாக வெட்டி 10யிலிருந்து 20நிமிடங்கள் வரை நகங்களினை மசாஜ் செய்து வந்தால் நகங்களினை ஆரோக்கியமானதாக பேணி பாதுகாக்க முடியும்.

நகங்களை வளர்த்தால் மட்டும் போதாது அவை உடையாது அழகுடன் இருக்க அவற்றை பாதுகாத்து பராமறிக்க வேண்டும். அதற்காக சில டிப்ஸ்,
நகம் வளர்ந்தவுடன் அவற்றை கடித்து துப்புதலை செய்யக் கூடாது. நகத்தினை பிடித்த வடிவங்களில் வெட்டுவதற்கு அதற்கான உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

வாரம் ஒரு முறை ஒலிவ் ஒயில் மசாஜ் செய்ய வேண்டும்.

 

கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.

நகங்கள் உடையக்கூடிய பெரிய வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

நகங்கள் விரல்களுக்கு கீரிடமாவதும் விரல்களின் அழகினை சீர்குலைப்பதும் நாம் பராமரிக்கும் முறையில் தான் உள்ளது.

நாளாந்த வாழ்வில் தியானப்பயிற்சியின் முக்கியத்துவம்.

நம்மில் பலரது முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பது சுயக்கட்டுப்பாடற்ற தன்மை தான். சுயக்கட்டுப்பாடுடன் ஓர் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முயற்சித்து பயணிக்கும் மனோநிலை பிறந்து விட்டாலே வெற்றி தன்னாலே கைவசமாகி விடும். இவ்வாறு செயலாற்ற தேவையான சுயக்கட்டுப்பாட்டினை வளர்த்துக் கொள்ள தியானப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும் மனதினை ஓர் நிலையில் நிறுத்தி அன்பு, அமைதி, மகிழ்ச்சி போன்ற உள் மன உணர்வுகளை மேம்படுத்தி சிந்தனையை தெளிவாக மாற்றுவதே தியானமாகும்.

ஓர் நாளில் இரு தடவைகள் காலை மற்றும் மாலை தியானப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் மனோதிடத்தினை வளர்த்துக் கொள்ள முடியும். காலையில் தியானம் செய்ய சரியான நேரம் 5.00மணியாகும் மாலையில் தியானம் செய்ய சரியான நேரம் 7.00மணியாகும்.

இயற்கையான சுத்தமான வளி கிடைக்கக் கூடிய வகையிலான, ஜன்னல் இருக்கக்கூடிய வடகிழக்கு மூலையினை நோக்கி ஓர் சிறு துண்டினை விரித்து அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்கையில் சுற்றுச் சூழல் அமைதியானதாகவும் எந்தவொரு மன அழுத்தம் தரக்கூடிய பொருட்கள் அற்றதாகவும் காணப்பட வேண்டும்.

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்,
மனக்கட்டுப்பாடும் மன அமைதியும் வளரும்.

மனம் வலிமைப் பெறும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரான வாழ்வினை வாழ தியானப் பயிற்சியில் ஈடுபடுதல் அவசியமாகும்.
சுயக்கட்டுப்பாடு வளர்வதோடு சுய ஒழுக்கமும் வளரும்.

இலங்கை விமானப்படை வரலாற்றில் புதிய இரு அத்தியாயங்கள்.

இலங்கை வாழ் பெண்மணிகளோடு இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் பெருமைக் கொள்ளும் வகையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 16ஆம் திகதியன்று திருகோணமலையிலுள்ள இலங்கை விமானப்படை சீனத் துறையின் அகடமியில் இடம்பெற்ற கெடேட் அதிகாரிகளின் வெளியேற்ற நிகழ்வின் போது இலங்கை விமானப்படையில் விமானிகளாக ஏ.டி.பி.எல்.குணரத்ன மற்றும் ஆர்.டி.வீரவர்த்தன ஆகிய இரு பெண்களுக்கு பதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது விமானப்படைத் தளபதியான மார்ஷல் சுதர்ஷன் பத்திரணவின் அழைப்பின் பெயரில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் சிறப்பான விடயம் யாதெனில் அனைத்து துறைகளிலும் திறமையினை வெளிக்காட்டிய கெடேட் அதிகாரியாக, விமானி அதிகாரி ஆர்.டி.வீரவர்த்தன அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையோடு பெருமைக்குரிய வாளும் அவருக்கு வழங்கப்பட்டமை தான். இலங்கை விமானப்படை வரலாற்றிலேயே ஒரு பெண் விமானி அதிகாரி இவ்வாறான தகைமையை பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இதுவரை காலமும் பல துறைகளில் தமது திறமைகளை வெளிக்காட்டி சாதித்து வரும் நம் நாட்டின் வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலில் இப்போது இவர்களும் தனி இடம் பிடித்துள்ளனர். நம் நாட்டில் வாழ் பலப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் அவர்கள் தமது கனவுகளை நோக்கி பயணிக்க ஊக்கமளிக்கும் வகையிலான புதியதொரு அத்தியாயத்தினை எழுதிய ஏ.டி.பி.எல்.குணரத்ன மற்றும் ஆர்.டி.வீரவர்த்தன அவர்களுக்கும் எங்களுடைய நாடிக் குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெள்ளி கொலுசில் இவ்வளவு நன்மைகள் உண்டா!

ஆரம்பகாலந் தொட்டே நகைகள் அணிதல் பாரம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் சிறப்பாக பெண்கள் அணியும் ஒவ்வொரு நகையின் பின்னும் உடலிற்கு பலன் தரக் கூடிய ஒவ்வொரு காரணம் காணப்படுகிறது. அதுப் போன்றே கால்களில் அணியப்படும் கொலுசும். சிறு வயதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசு பூட்டி அழகுப் பார்க்கும் வழக்கம் உண்டு. வளர்ந்த பின் ஆண்கள் கொலுசு அணிவதில்லை ஆனால், பெண்கள் கொலுசு அணியும் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

அநேகமானோர் தங்க கொலுசை விட அநேகமாக வெள்ளி கொலுசு அணிவது வழக்கம். இதற்கான சமய ரீதியான காரணம் தங்கம் மாகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுதலாகும் ஆனால், அறிவியல் ரீதியான காரணத்தினை நோக்குவோமானால் வெள்ளி உலோகத்திற்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மையுண்டு. இதனால் வெள்ளியில் கொலுசு போடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப வெள்ளிக் கொலுசில் கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்படுகிறது.

வெள்ளியில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்,
உடலுக்கு குளிர்ச்சி தரும்.

ஆயுள் விருத்தியாகும்.

நகை ஒவ்வாமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு.

சருமத்தினை குளிர்ச்சியானதாக வைத்திருக்கும்.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தும்.

இவ்வாறான பல நன்மைகளை தரக்கூடிய வெள்ளிக் கொலுசு அணியும் வழக்கத்தினை இனி வருங்காலங்களில் கடைபிடிப்போம்.

சளி பிரச்சினையால் அவதியுறுபவர்களுக்கு இதோ! சில டிப்ஸ்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் தலைவலியாக இருப்பது சளி பிரச்சனை தான். பொதுவாக அனைவரது உடலிலும் சளி உருவாகிக் கொண்டிருப்பது வழக்கம் சாதாரண சளி பிரச்சனையாக இருப்பதில்லை அதன் அளவும் வீரியமும் கெட்டி தன்மையும் கூடும் போது பெரும் பிரச்சனையாக மாறி விடுகிறது. இதனால் பெரிதும் தொண்டை, மூக்கு, நுரையீரல் ஆகிய உடற்பகுதிகள் தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமையினால் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன் விளைவாக தொண்டை வறட்சி, தலைவலி, மூக்கடைப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை ஏற்படுகின்றன.

எம்மை படாத பாடுபடுத்தும் சளியின் வீரியத்தை குறைப்பதற்கான சில பாட்டி வைத்திய முறைகள்,
இதோ! உங்களுக்காக,

இஞ்சி

ஓர் சிறிய இஞ்சி துண்டில் சிறிதளவு உப்பினை சேர்த்து ஒரு துளசி இலையினையும் வாயிலிட்டு மெல்லவும். இஞ்சிக்கு வறண்ட தொண்டையினை சரி செய்யவும், சளி மற்றும் இருமலினை போக்கும் தன்மையும் உண்டு.

பூண்டு

நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்து சிறிதளவு நெய்யூற்றி பொறித்து எடுக்கவும். பொறித்தெடுத்த பூண்டுகளை சூடாற முன் உண்ண வேண்டும். குழம்பு அல்லது சூப்பில் பூண்டினை நசுக்கி சேர்த்தும் உண்ணலாம். இவ்வாறு செய்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.

பால் மற்றும் மஞ்சள்

பொதுவாக சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து குடிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் அதிலும் சளி மற்றும் இருமலினால் பாதிக்கப்படும் சமயங்களில் உடன் நிவாரணம் தரும். பாலில் மஞ்சளுடன் சிறிதளவு மிளகு தூள் மற்றும் பனக்கற்கண்டு கலந்து குடிப்பது இன்னும் சிறப்பான பலனை தரும்.

தேன்

சளியினால் பாதிக்கப்பட்டோர் அதிகாலை எழுந்தவுடன் மிதமான சூடுள்ள நீரில் சிறிதளவு தேன் மற்றும் மிளகு தூள் கலந்து குடித்தால் சளி பிரச்சனை நீங்குவதோடு வறண்ட தொண்டையின் தன்மையும் சரியாகிவிடும்.

கருமிளகு டீ

ஒரு கப் வெந்நீரில் இரண்டே கரண்டி தேன் மற்றும் சிறிதளவு கருமிளகு சேர்த்து 15 நிமிடங்களுக்கு மூடி வைத்தப் பின் குடிக்கவும். இது சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாகும்.

வெங்காய சிரப்

ஓரிரு சின்ன வெங்காயங்களை உரித்தெடுத்து நசுக்கி ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன் பின் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.

மிளகு ரசம்

சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டோர் மதிய உணவுடன் மிளகு ரசம் சேர்த்து அல்லது ஒரு கோப்பை மிளகு ரசம் தினமும் அருந்தி வந்தால் சளியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

மன இருளைப் போக்கும் தீபாவளித் திருநாள்!

தீபங்களின் வரிசையில் இருள் நீக்கி ஔியின் வரவில் மனதில் இறைவனை குடியேற்றும் நன்னாள் தீபாவளி ஆகும். அதுவே தீபாவளியின் உள் அர்த்தமும் ஆகிறது. கிருஷ்ண பகவான், நரகாசுரனை வதம் செய்து தீயது கழித்து நன்மை பயந்த, ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து வரும் சதுர்த்தசி தினம் “நரக சதுர்த்தசி” அதுவே தீபாவளியாகும்.

தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்வதாக மக்கள் நம்பிக்கை உள்ளது. இந்த தீப ஜோதி இருளை நீக்கி எவ்வாறு ஔி பரப்புகிறதோ, அதுபோல மக்கள் மனத்தில் உள்ள அகங்காரம், பொறாமை,கோபம் போன்ற இருள் குணங்களை அகற்றி சிறந்த குணங்களால் மனிதர்களும் ஔி வீச வேண்டும் என்பது நம் முன்னோர் உரைத்த நல்வழியாகும்.

தீபாவளி கொண்டாடிடும் மக்கள், மனதின் இருள் நீக்கி நல் எண்ணங்களால் நிரப்பும் மார்க்கத்தை தீபாவளி வழிக்காட்டுகிறது.
இந்நாளில் மக்கள் நல் எண்ணங்களுக்கு ஒப்பாய் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுதல் அவசியமாகிறது. தேவையற்ற சிந்தனைகளை ஒழித்து குடும்பம் மற்றும் உறவுகளுடன் மகிழ்வை பகிர்ந்து இந்நாளை கொண்டாடவேண்டும்.

இந்த வருடம் “கொரோனா” தொற்றின் தாக்கத்தால் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தலின் காரணமாாக கோவில் செல்வது, உறவுகளை சந்திப்பது, பலகாரங்கள் பகிர்வது முடியாத செயல்களாக இம்முறை மாறியுள்ளது.

நாட்டின் நிலையுணர்ந்து வீட்டிலேயே பாதுகாப்பாய் இறைவனை நினைத்து வழிபட்டு உலக நன்மைக்காக பிரார்த்திப்போம். பிரிந்திருக்கும் உறவுகளுடன் தொலைபேசிகளின் வாயிலாக ஒன்றிணைந்து பிரிந்திருப்பது உடல்களே தவிர, உறவுகளல்ல என்பதை உணர்த்துவோம். இந்த தீபாவளி நன்னாளில், உலகை அச்சுறுத்தும் அரக்க தொற்று விரைவில் அழிந்து , ஔிமயமான எதிர்காலத்தை அடைய பிரார்த்திப்போம். உலக நன்மையை வேண்டுவோம்.

5 விரல்களிலும் கட்டாயம் மோதிரம் அணிய வேண்டுமா?

நம்மில் சிலருக்கு மாலை, தோடு அணிவதில் பெரிதாக பிடிப்பிருக்காது ஆனால் மோதிரம் அணிவதில் அநேகமானோர் ஆர்வத்துடன் செயற்படுவர் அதிலும் பெண்கள் சொல்லவே தேவையில்லை. நாம் சிறியவர்களாக இருந்த போது நாம் உண்ணும் வட்ட வடிவ சிப்ஸ்களை மோதிரமாக அணிந்து விளையாடியது ஞாபகத்தில் இருக்கிறதா…? இப்பழக்கம் இன்று பல உலோகங்களினாலான மோதிரத்தை வாங்கி அணியும் பழக்கத்திற்கு நம்மை ஆளாக்கி விட்டது. இவ்வாறாக நமக்கு பிடித்த மோதிரங்களை எந்த எந்த விரல்களில் அணிந்தால் என்ன மாதிரியான பலன்கள் நம் உடலுக்கு கிடைக்கும் பற்றிய தகவல்கள்.
இதோ! உங்களுக்காக,

பொதுவாக திருமணமான தம்பதியினர் மோதிரத்தினை இடது கையிலும் மற்றையவர்கள் வலது கையிலும் அணிவது வழக்கம். “ஏன் திருமணமானவர்கள் மட்டும் இடக்கையில் அணிகின்றனர்?”என்ற கேள்வி நம் அனைவர் மனதிலும் உண்டு ஏனெனில் நம் கைகளில் வலக்கை உடலின் செயற்பாடுகளுடனும் நமது இடக்கை மனதின் செயற்பாடுகளுடனும் தொடர்புடையதாக காணப்படுகிறது என்பதே இதன் காரணமாகும். ஒவ்வொருவரின் மதம் மற்றும் தொன்று தொட்டு அவர்கள் கடைப்பிடித்து வரும் சம்பிரதாய மரபுகளுக்கேற்ப மோதிரம் அணியும் கைகள் வேறுபடலாம்.

கைகளில் மோதிரம் அணிய தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு விரலின் பின்னும் ஒவ்வொரு காரணம் மறைந்துள்ளது. ஒவ்வொரு விரல்களுக்கும் ஒவ்வொரு வகையான அதிர்ஷ்டமும் பலனும் உண்டு.

கட்டை விரல்


கட்டை விரலில் மோதிரம் அணிவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. எமது ஆற்றல்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். தீராத நோய்களினால் நீண்ட காலமாக துன்புற்று வருவோர்கள் கற்கள் மற்றும் உருவங்கள் அற்ற மோதிரத்தினை கட்டை விரலில் அணிந்து வந்தால் உடலில் படிப்படியாக மாற்றத்தினை காண முடியும்.

ஆள்காட்டி விரல்


இவ்விரலில் மோதிரம் அணிவதால் எமது ஆளுமை விருத்தியாகும். எமது தன்னம்பிக்கை மற்றும் மனதின் பலம் அதிகரிக்கும். எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிதல் சிறப்பானதாகும்.

நடு விரல்


கையில் நடுவிரலில் மோதிரம் அணிவதனால் நமக்கு பிடித்த உறவுகள் பலம் பெறும் என்றும் நம் காதலுக்குரியவர்கள் நம்மை விட்டு பிரியாதிருப்பர் என்றும் நம்பப்படுகிறது.

மோதிர விரல்


அதிகம் செல்வம் மற்றும் பணத்தினை சேர்க்க விரும்புபவர்கள் மோதிர விரலில் மோதிரிம் அணிதல் சிறந்ததாகும் ஏனெனில் மோதிர விரலில் மோதிரம் அணிதல் செல்வத்தினை ஈட்டவும் பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும் உதவுவதாக கருதப்படுகிறது.

சுண்டு விரல்


சுண்டு விரலில் மோதிரம் அணிவதால் உடலில் ஹோர்மோன் சம்பந்தமான பிரச்சனைகள் குறைந்து ஹோர்மோன்களின் சமநிலை சீராக பேணப்படும். அத்தோடு உள்ளுணர்வு மற்றும் புரிந்துணரும் தன்மையும் மேம்படும்.

இன்று எத்தனையோ உலோகங்களில் மோதிரங்கள் செய்யப்பட்டாலும் தங்கத்தினாலான மோதிரம் அணிதலே சிறப்பானதாகும்.

இலங்கையின் பாரம்பரிய உணவை ஆஸ்திரேலியாவில் சமைத்து அசத்திய சிறுமி ஜோர்ஜியா..!

Junior MasterChef Australia, ஆஸ்திரேலியாவில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடாத்தும் சிறுவர்களுக்கான சமையல் போட்டி. இதில் பலதரப்பட்ட சிறுவர்கள் பங்குபெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜோர்ஜியா எனும் 11 வயது சிறுமியும் பங்கு பெற்றார். இவருக்கு பொதுவாகவே சமைப்பதில் ஆர்வம் இருப்பதாகவும் மேலும் தனது தாயின் ஊக்கத்தினாலும் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற ஜோர்ஜியா பணப்பரிசில் 25000 டொலர்களையும் பெற்றுள்ளார். இந்த பணம் அவரின் 18 ஆவது வயதில் இவர் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமாம். அதற்குள் அவரது எதிர்காலத் திட்டங்களை திட்டமிட்டுவிடுவேன் எனவும் அதில் உணவகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜோர்ஜியா, இந்த சமையல் போட்டியில் பங்குபெறும்போது தான் முதல் வாரத்தை எப்படியாவது தாண்டி விட வேண்டும் என்று தான் நினைத்தாராம். மேலும் இறுதி சுற்றில் இலங்கை பாரம்பரிய உணவுகளை சமைத்து வெற்றி மகுடத்தை தரித்துள்ளார்.

எந்த பக்கம் மூக்குத்தி குத்துவது நன்மை தரும்…?

பெண்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணங்களுள் மூக்குத்தியும் ஒன்று. முகத்தின் அழகை மெருகூட்டுவதே மூக்கு தான். அந்த மூக்கிற்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக மூக்குத்தி திகழ்கிறது. மூக்குத்தி வைத்து பல பாடல்கள் சினிமாவிலும் கவித்தொகுப்புகளிலும் காணப்படுகின்றன. பெண்ணின் மூக்குத்திக் கொண்டு அவள் குணங்களை கணிக்கும் பழக்கமும் நம் வீட்டின் பெரியவர்களிடம் உண்டு. இவ்வாறான பல சிறப்புக்களைக் கொண்ட மூக்குத்தி பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்.
இதோ…! உங்களுக்காக,

மூக்குத்தி குத்துவதற்கான காரணம்


பெண்கள் மூக்குத்தி குத்துவது பழங்காலந்தொட்டு கடைபிடிக்கபடும் ஓர் சம்பிரதாய நிகழ்வாக திகழ்கிறது. நம் முன்னோர் கண்ட ஒவ்வொரு பழக்கங்களின் பின்னும் ஒவ்வொரு காரணம் இருப்பதுப் போல் மூக்குத்தி குத்துவதன் பின்னும் மறைந்துள்ளது. உடலில் உள்ள வாயுவினை வெளியேற்றுவதற்காக பெண்களுக்கு மூக்கில் மூக்குத்தி குத்தப்படுகிறது.

மூக்குத்தியின் வகைகள்

நவீன யுக பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மூக்குத்தி பல வகையான வடிவங்களில் கடைகளில் கொள்வனவுக்காக வைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சில பிரபல்யமான மூக்குத்தி வகைகள்,
பஞ்சாபி நாத்
நாத்னி
லவங்க மூக்குத்தி
புள்ளக்கு

மூக்குத்தி வெள்ளி, தங்கம், பித்தளை என பல உலோகங்களாளும் வைரக்கல், இரத்தினக்கல் என பல வகையான கற்கள் பதிக்கப்பட்டும் செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும் தங்க மூக்குத்தி குத்துதல் சிறப்பான ஒன்றாகும். ஏனெனில், தங்கத்திற்கு உடலில் உள்ள வெப்பத்தினை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியுள்ளது.

மூக்குத்தி குத்துவதால் ஏற்படும் நன்மைகள்,
உடலில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியாகும். மூக்கின் மடல் பகுதியில் துவாரமிடும் போது அதன் வழியாக நரம்பு மண்டலங்களிலுள்ள கெட்ட வாயுக்கள் அகலும்.
பருவமடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் காணப்படும். மூக்கு குத்தும் போது அவை அகன்று விடும்.

சளி மற்றும் மூக்கு சம்பந்தமான பாதிப்புக்கள் குறையும்.

ஒற்றைத் தலைவலி நீங்கும்.

பார்வைக் கோளாறுகள் ஏற்படாதிருக்கும்.

நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாதிருக்கும்.

அடிக்கடி ஏற்படும் மனத்தடுமாற்றத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூக்கு குத்தும் முடிவோடு இருப்பவர்களுக்காக இந்த டிப்ஸ்,
வலது பக்கம் மூக்கு குத்தினால் இடது பக்க மூளையின் இயக்கம் சீராகயிருக்கும் அதேப் போல் இடது பக்கம் மூக்கு குத்தினால் வலது பக்க மூளை சீராகயிருக்கும் இருப்பினும் பெண்களுக்கு இடது பக்கம் மூக்கு குத்துவது சிறப்பானதாகும். இதனால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் பிரசவ காலத்தில் ஏற்படும் வலி குறைவானதாகயிருக்கும் ஏனெனில், பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் இடது பக்க மூக்கோடு தொடர்புடையது.

நவபிரசாதம் 09 | உளுந்து வடை

நவபிரசாதம் 09

உளுந்து வடை

தேவையான பொருட்கள்
உழுந்து – 250கிராம்
சின்ன வெங்காயம் – 50கிராம்
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையானளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையானளவு
உப்பு – தேவையானளவு

செய்முறை


ஒரு பாத்திரத்தில் நீரூற்றி உழுந்தினை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

உழுந்து ஊறியதும் அதை கழுவி வடித்து கிரைன்டரில் போட்டு இடைக்கிடை தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து சிறிதளவு உப்பு சேர்த்து இறுதியாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கி வைத்தவற்றையும் உப்பு தேவையானளவும் அரைத்து வைத்த மாவில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு மாவினை எடுத்து வாழையிலையில் வைத்து துளையிட்டு எண்ணெயில் போடவும். ஒரு புறம் வெந்து வந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். எண்ணெய் குமிழி வருவது நின்றதும் வடையினை எடுத்துக் கொள்ளவும்.

குறிப்பு – தேவைப்பட்டால் இஞ்ஜி துண்டினை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது பூஜைக்கான உழுந்து வடை தயார்.

நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

நவபிரசாதம் 08

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்
வடித்து வைத்த சாதம் – 1 கப்
துருவிய தேங்காய் – 3/4 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 15
மிளகாய் வற்றல் – 3
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
வேர்க்கடலை – தேவையான அளவு

செய்முறை


ஒரு கப் வடித்த சாதத்தை எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை துருவிக் கொண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அத்தோடு முந்திரி, வேர்க்கடலை, துருவிய இஞ்சி, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். இறுதியாக துருவிய தேங்காயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

துருவிய தேங்காய் சேர்த்த பின் தேங்காயின் வாசனை நன்றாக வரத் தொடங்கும் போது சாதத்தினை போட்டு தேவையானளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக நறுக்கி வைத்திருந்த கொத்தமல்லி தழையினை போட்டு இறக்கி விடவும்.

இப்போது பூஜைக்கான தேங்காய் சாதம் தயார்.

index.php