தலையில் காணப்படும் மேற்புள் தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகையில் செதில் செதிலாக உதிர தொடங்கும். இதனை பொடுகு என அழைக்கின்றனர். பொடுகு உதிர்ந்து ஆடைகளில் படிந்து விடுமோ என்ற அச்சத்தினால் நாம் கடும் நிற ஆடைகளை அணிவதையே நிறுத்தி விடுகிறோம். இந்த பொடுகு ஏன் வருகிறது? மற்றும் இதற்கான தீர்வுகள் என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்கள்,
இதோ! உங்களுக்காக,
பொடுகு வருவதற்கான காரணங்கள் என்ன?
அவசர அவசரமாக தலைக்கு குளித்தல்.
நன்றாக தலையை துவட்டாதிருத்தல்.
தண்ணீர் மற்றும் சோப் தண்ணீர் ஆகியன தலையில் தங்கி விடுதல்.
ஒழுங்காக குளிக்காமல் இருப்பதால் தலையில் உற்பத்தியாகும் வியர்வை தலையிலே தங்கி விடுவதல்.
ஒருவர் பயன்படுத்திய சீப்பினை இன்னொருவர் பயன்படுத்துவது.
பொடுகிலிருந்து வெளி வருவதற்கான வழிகள் என்ன?
தேசிக்காய்
இரு துண்டுகளாக வெட்டி தேசிக்காயின் சாற்றை தலையில் நன்றாக பூச வேண்டும். அரை மணிநேரம் சூரிய வெளிச்சம் தலையில் படும் வரை இருந்து விட்டு நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தை குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
வெந்தயம்
வெந்தயத்தை பொடியாக அரைத்து குளிக்கும் போது ஷம்புவாக பயன்படுத்தி தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அருகம்புல்
அருகம்புல் சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, தினசரி தேய்த்து வர வேண்டும்.
ஒலிவ் எண்ணெய்
தினமும் குளிப்பதற்கு முன் ஒலிவ் எண்ணெய் தடவி குளிக்க வேண்டும்.
ஒரு சிட்டிகை துளசிச் சாறு, ஒரு சிட்டிகை வேப்பிலை சாறு ஆகியவற்றை கற்றாழை ஒரு துண்டுடன் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து குளிக்கும் போது ஷம்புவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றை கடைப்பிடித்து வருவதால் தலையில் உள்ள பொடுகு நீங்கி விடும்.
நம்மில் பலரது பாதங்களில் வெடிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பாதங்கள் தெரியும் படியாக காலணிகள் அணிவதை நாம் தவிர்ப்பதுண்டு. இவ்வாறாக கால்களின் அழகினை சீர்குலைக்கும் பாத வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ…! உங்களுக்காக,
பாத வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
கடினமான அல்லது அசௌகரியம் தரக் கூடிய காலணிகள் அணிதல்.
சவர்க்காரத்தில் காணப்படும் இரசாயன பதார்த்தங்களினால் ஏற்படும் ஒவ்வாமை.
சருமம் வறட்சி அடைதல்.
அழுக்கு சேர்தல்.
காலநிலை மாற்றங்கள். (குளிர் காலங்களில் காணப்படும் குளிர்ச்சியினால் சருமத்தில் ஏற்படும் வறட்சி)
பாத வெடிப்பிற்கான தீர்வுகள் என்ன?
துணிகளை சலவை செய்யும் போது அதிக நேரம் சவர்க்கார நீரில் கால்களை ஊறவிடாதிருத்தல்.
தினமும் கடுகு எண்ணெயை பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வர வேண்டும்.
மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து பாதவெடிப்புகளின் மேல் பூச வேண்டும்.
ஓர் நாள் விட்டு ஓர் நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்து வந்தால் பாத வெடிப்புகளை இயற்கையாக நீக்கி கொள்ள முடியும்.
பாத வெடிப்பினை போக்குவதற்கான இயற்கை பெக் ஒன்றிற்கான படிமுறைகள்,
படிமுறை 1
நல்ல வெது வெதுப்பான ஒரு பக்கெட் நீரில் 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து ஊற விட வேண்டும். அதன் பின் ப்ரஷினால் தேய்க்க வேண்டும். (இரவு நேரங்களில் வெதுவெதுப்பான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை ஊற வைத்து, ப்ரஷினை கொண்டு தேய்த்தல்.)
படிமுறை 2
பழைய ப்ரஷினை ஒன்றினை எடுத்து கற்றாழை மற்றும் ஒரு கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து பாத வெடிப்புகளின் மேல் தேய்க்க வேண்டும். அதன் பின் அதே வெதுவெதுப்பான நீரினால் துடைக்க வேண்டும்.
இந்த படிமுறையினை செய்வதால் பாதவெடிப்புகளில் உள்ள அசுத்தங்கள் நீங்கி பாதங்கள் அழகாக மாறும்.
நம்மில் பலரது உதடுகள் மென்மையான தன்மையினை இழந்து வறட்சியானதாகவும் வெடித்து சிவந்து தடிமனானதாக காணப்படுவதை பார்த்திருப்போம். இதனை தான் உதடு வறட்சி மற்றும் உதடு வெடிப்பு என்கிறோம். இதனை போக்குவதற்காக பல செயற்கை மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களினை உபயோகப்படுத்தியிருப்போம். அவை தற்காலிகமாக உதட்டினை பாதுகாத்தாலும் நிரந்தரமான தீர்வினை அளிப்பதில்லை. உதட்டில் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய தகவல்கள்,
இதோ…! உங்களுக்காக,
உதட்டில் வறட்சி மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
உடலின் வெப்பநிலை உயர்வாக காணப்படுதல்.
விட்டமின் B குறைப்பாடு.
இரும்புச் சத்து குறைபாடு.
உடல் வறட்சி.
அதிகப்படியான சூரியக் கதிர்களின் தாக்கம்.
இரசாயனப் பொருட்களின் பாவனை.
காலநிலை மாற்றம். (குளிரான அல்லது பனி காலங்களில் காணப்படும் அதிகப்படியான குளிர் காரணமாக உதடு வறட்சி தன்மையடையும்.)
அதிகப்படியாக லிப்ஸ்டிக் மற்றும் லிப் க்ளோஸின் பாவனை.
உதடு வறட்சி மற்றும் வெடிப்புகளை போக்குவதற்கான வழிகள் என்ன…?
கோடை காலங்களில் சராசரியாக 4 லீட்டர் அளவு நீர் குடிக்க வேண்டும். அதிக நேரம் வெளியே வெயிலில் வேலை செய்பவராகயிருந்தால் அதனிலும் அதிகமாகவே நீர் அருந்த வேண்டும்.
தினமும் தூங்குவதற்கு முன் ஒலிவ் எண்ணெயினை உதட்டில் தடவி வர வேண்டும்.
வெயில் காலங்களில் குளிர்ச்சியான பழச்சாறு அருந்துதல்.
செயற்கையான காற்றினில் உட்காருவதை தவிர்த்து இயற்கையான காற்றினை பெறுதல்.
ஓர் நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் குளிப்பதால் உடலில் உள்ள வெப்பம் குறைந்து உதடு வறட்சி நீங்கும்.
ஐஸ் கட்டிகளை கொண்டு உதட்டிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.
அடிக்கடி மோர் குடித்தல். மோர் குடிப்பதால் உடலின் உஷ்ணம் குறையும்.
வெள்ளரிக்காய் துண்டினை எடுத்து உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும்.
கற்றாழை ஜெல்லினை உதட்டில் தடவ வேண்டும்.
இரண்டு கரண்டி சர்க்கரையுடன், 5 துளி ஒலிவ் எண்ணெய் கலந்து உதட்டில் 5 நிமிடங்கள் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். அதன் பின் தேங்காய் எண்ணெயினை உதட்டில் தடவ வேண்டும். இதனால் உதட்டின் இறந்த செல்கள் அகன்று உதவு மென்மையும் அழகும் பெறும்.
க்ரீன் டீ தயாரித்த பின் அதன் பை அல்லது இலைகளை கொண்டு உதட்டில் சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறாக இவற்றை செய்து வருவதால் உதடுகளில் காணப்படும் வறட்சி மற்றும் வெடிப்புகள் நீங்கி உதடு அழகும் மென்மையும் பெறுகிறது.
நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பல தவறான மற்றும் தீங்கினை தரக்கூடியவை. அவ்வாறாக சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின் செய்யக்கூடாத சில பழக்க வழக்கங்கள்,
சாப்பிடும் முன் செய்யக்கூடாதவை
வெற்றிலை பாக்கு சாப்பிடக் கூடாது. ஏனெனில் உடலில் சாப்பிட்ட பின் ஏற்படுகின்ற செரிமான நிகழ்வில் கோளாறினை ஏற்படுத்தும் மற்றும் ஏப்பம் விடுவதில் துர்நாற்றம் வீசும்.
தேநீர், காபி அல்லது குளிர்ப்பானம் போன்றவற்றை அருந்தக் கூடாது.
உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடற்பயிற்சி செய்து ஒரு மணி நேரம் அல்லது சிறிது நேரத்திற்கு பின் சாப்பிடலாம்.
சாப்பிட்ட பின் செய்யக்கூடாதவை
நம்மில் சிலர் சாப்பிட்ட பின் பழங்கள் கொண்டு செய்யப்படும் பழச்சலாது சாப்பிடுவது வழக்கம். இது ஓர் தவறான பழக்கமாகும். பழங்கள் எளிதில் ஜீரணம் அடையும் பண்புடையவை. சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடும் போது நாம் உண்ட உணவு செரிமானம் அடைவது தடைப்பட்டு நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
சாப்பிட்ட பின் தூங்க கூடாது. நாம் சாப்பிட்ட பின் உணவு செரிமான பணிகளுக்கு உட்படுத்தப்படும். நாம் சாப்பிட்ட உடன் தூங்குவதால் செரிமான பணியின் போது சுரக்கப்படும் அமிலங்கள் தொண்டையை நோக்கி வரக்கூடும். இதன் விளைவாக வாந்தி, தொண்டை எரிச்சல், தொண்டைப்புண், சுவாசப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.
சாப்பிட்ட பின் உடற்பயிற்சி செய்யக் கூடாது ஏனெனில் உடற்பயிற்சிக்குட்படும் தசைகள் மற்றும் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் செரிமானத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் குறைவாக காணப்படும். இதன் விளைவாக செரிமானத்தில் மந்த நிலை, உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கப்பெறாமை போன்றவை ஏற்படும்.
சாப்பிட்ட உடன் நீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இது உண்மையில் மிகவும் தவறான ஓர் பழக்கமாகும். இதனால் உணவு செரிமானம் அடைவதில் பல சிக்கல்கள் ஏற்படும்.
இன்றைய இளைஞர்கள் பலர் தமது உடற்பாகங்களில் பல வடிவங்கள், எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சின்னங்களை வரைகின்றனர். இதனை டாட்டூ என்றழைக்கின்றனர். இந்த டாட்டூ அவர்களை தனித்துவபடுத்தி காட்டுவதோடு, பார்ப்பவர்களை கவர்வதாகவும் அமைகின்றது. இளைஞர்கள் தமது விருப்பத்திற்கேற்ப செயற்படும் சுதந்திரம், தமது தன்நம்பிக்கையின் அளவு மற்றும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவிகயாக டாட்டூக்களை பயன்படுத்துகின்றனர். சிலர் தனக்கு பிடித்தவர்களின் பெயர்களையும், வாழ்வில் மறக்க முடியாத தினங்களையும் டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர். காதலிக்கும் நபரின் பெயரை டாட்டூவாக குத்திக் கொள்ளும் வழக்கமும் தற்போது காணக்கூடியதாக உள்ளது. டாட்டூக்களின் மூலம் தனது காதலின் ஆழத்தினை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். காதல் நிரந்தரமாக நிலைக்கும் என உறுதி செய்த பின் இதனை செய்வது நல்லது ஏனெனில் டாட்டூ போடும் போது ஏற்படும் வலியை விட அதை அழிக்கும் போது ஏற்படும் வலி தான் மிகவும் அதிகமாகயிருக்கும். “இந்த டாட்டூக்கள் என்றால் என்ன…?” “இவை எப்போது ஆரம்பிக்கப்பட்ட கலாச்சாரம்…?” போன்ற டாட்டூக்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள்.
இதோ…! உங்களுக்காக,
பச்சைக் குத்துதல் என்றால் என்ன…?
மஞ்சள் பொடியோடு அகத்திக் கீரை சேர்த்து அரைத்து, ஓர் துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கி அதன் பின் நீர் கலந்து அதைப் பசையாக்கி வைத்துக் கொள்கின்றனர். கூர்மையான ஊசி ஒன்றினால் பசையைத் தொட்டுத் தோலில் குத்தி எடுத்து அவர் அவர்களுக்கு பிடித்த உருவங்களை வரைகின்றனர். இதனை பச்சைக் குத்துதல் என்றழைக்கின்றனர். இன்றைய காலத்தில் போடப்படும் டாட்டூக்களிற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவையானது நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபால்ட் மற்றும் டைடேனியம் ஒட்சைட் போன்ற பல விதமான இரசாயானங்கள் கலக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றது. இந்த நிறக்கலவையினை காட்ரிஜ் ஊசி போன்ற கருவியில் நிரப்பி அவரவர்க்கு பிடித்த வடிவங்களை டாட்டூவாக குத்துகின்றனர். எது எவ்வாறெனினும் பொதுவாக நமது தோலில் காணப்படும் மூன்று அடுக்குகளுள் முதல் அடுக்கில் தான் பச்சைக் குத்தப்படுகிறது. இது மேற்புற தோளின் கீழாக நிறப்பொருட்களை உட்செலுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
பச்சை குத்துதல் பற்றிய வரலாறு…
டாட்டூக்கள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட கலாச்சாரம் கிடையாது. இவை பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே காணப்பட்டு வரும் ஓர் நாகரிகமாகும். இது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் கற்கலாம் தொட்டு பரவலாக காணப்பட்டு வருகிறது. பச்சை குத்தும் தொழிலை குறவர்களும் நாடோடிகளும் செய்து வந்தனர். அவர்கள் இதனை பல நோக்கங்களுக்காக கடைப்பிடித்தனர். அவற்றுள் சில,
அக்காலப் பெண்கள் தமது கணவரின் பெயரை சொல்வது புனிதமற்ற ஓர் செயலாக கருதப்பட்டது. இதனால் திருமணத்தின் பின் பெண்கள் தமது கைகளில் கணவரின் பெயரை பச்சையாக குத்திக் கொண்டனர். அவர்களிடம் கணவரின் பெயர் பற்றி எவரும் வினவும் போது தமது கையிலுள்ள பச்சையை காட்டுவர்.
சில குழுவினர் பச்சைக் குத்துதலை ஓர் சடங்காக மேற்கொண்டனர்.
பண்ணை விலங்குகளை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தினர்.
மலைப்பகுதிகளில் வாழும் சில மக்கள் கூட்டத்தினர் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி பச்சைக் குத்திக் கொள்கின்றனர். இதன் பின் ஓர் வித்தியாசமான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. வாழ்கின்ற போது மட்டுமன்றி இறந்தப் பின்பும் அடையாளப்படுத்திக் காட்டும் சின்னமாக இது விளங்குகிறது. எவ்வாறெனில் இறந்த பின் உங்கள் ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்துக்கு செல்லும் போது அவர்கள் யாருடைய சந்ததியினர், அவர்களின் மூதாதையர்கள் யாவர் மற்றும் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அடையாளப்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
சாதிப் பிரிவினையின் படி தாழ்த்தப்பட்ட சாதியினராக கருதப்படும் பெண்களை பிற சாதியை சேர்ந்த ஆதிக்கம் மிக்க ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி விடக் கூடாது என்பதற்காக தங்களை தாங்களே அழகின்றி காட்டிக் கொள்ளும் பொருட்டும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர்.
ஒருவர் மீதான அன்பினை வெளிப்படுத்துவதற்காகவும் தம்மை தானே அழகுபடுத்திக் கொள்வதற்காகவும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர்.
குறிப்பிட்ட குழுக்களை சேர்ந்த மக்களை தனித்துவபடுத்திக் கொள்வதற்காகவும்,
பெண்கள் தமது அழகினை மெருகூட்டி கொள்வதற்காகவும்,
சிறைகைதிகள், பணியாட்கள் மற்றும் அடிமைகள் ஆகியோரை அடையாளப்படுத்துவதற்காகவும்,
மனிதர்களை சாதி வாரியாக வகைப்படுத்திக் காட்டுவதற்காகவும்,
ஆரம்ப காலங்களில் பச்சைக் குத்துதல் நாகரிகமாக காணப்பட்டமைக்கான சான்றுகள் சில,
நாஜிக்களின் வதை முகாமில் யூதர்களுக்கு இலக்கங்களை பச்சையாக குத்தினர்.
பழங்கால இந்தியர்களிடம் காணப்பட்டது போன்று கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடமும் பச்சைக்குத்தும் வழக்கம் காணப்பட்டது.
ஜப்பானில் ஒரு இனக்குழுவைச் சேர்ந்த மக்களிடம் முகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது.
ஜப்பானியரின் அக்குபங்சர் மருத்துவ முறை பச்சைக் குத்துதல் கலையுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.
கி.மு 4000 முதல் 5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சி பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஒட்சி பனி மனிதனின் முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் புள்ளிகளும் கோடுகளுமாக காணப்பட்டன.
பச்சைக் குத்துதலில் காணப்படும் வகைகள்,
1. இயற்கையான தழும்புகளாலானது. ( விபத்தில் ஏற்படும் காயங்கள்.)
2.தொழில் முறை சார்பிலான பச்சைக் குத்துதல். (சமூகப்பிரிவு, குலம், கூட்டம், சமயம், நம்பிக்கை, தண்டனை, வீரதீரம் மற்றும் காதலை வெளிப்படுத்தல்.)
3.அழகியல் ரீதியான பச்சைக் குத்துதல்.
4.மருத்துவ நோக்கிலான பச்சைக் குத்துதல்.
5.அடையாளப்படுத்துவதற்காக பச்சைக் குத்துதல்.
இன்றைய காலத்தில் பச்சை குத்துதலில் பொதுவாக இருவகை மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
அவை,
1. தற்காலிகமானது = 7 நாட்களில் தானாகவே மறையக் கூடியது. (ஸ்டிகர் டாட்டூஸ், மருதாணி)
2. நிரந்தரமானவை = இறக்கும் வரை அழிக்க முடியாதவை.
பச்சை குத்தலில் இடம்பெறும் உருவங்கள்,
தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள், பாம்பு, பெயர்கள், இலக்கங்கள், சின்னங்கள் போன்ற பல வடிவங்கள் பச்சை குத்துதலில் காணப்படுகின்றன.
பச்சைக் குத்துதல் பரவலாக காணப்படும் இடங்கள்,
இலங்கை, இந்தியா மட்டுமன்றி ஆசியாவின் வேறு பகுதிகளிலும், அமெரிக்கா, இந்தானேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் பச்சைக் குத்துதல் பரவலாக காணப்படுகிறது.
பச்சைக் குத்தும் முன் கவனத்திற் கொள்ள வேண்டியவை,
பச்சை குத்துபவர் முறையாக பயிற்சி மற்றும் அனுபவம் உடையவரா எனவும்,
பிறருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் மை அன்றி புதிய ஊசி மற்றும் மை பயன்படுத்தப்படுகிறதா எனவும்,
பச்சைக் குத்துபவர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கிறாரா எனவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
பச்சைக் குத்துதலினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன…?
டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக் ஷன் போன்ற தோல் வியாதிகள் உருவாக வாய்ப்புகள் உண்டு.
எச்.ஐ.வி மற்றும் ஹெப்டய்டிஸ்-பி போன்ற வியாதிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு எவ்வாறெனின் அதிகப்படியான டாட்டூ போடும் நிலையங்களில் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்கும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது தரமற்ற நிறக்கலவைகளையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
நிறக்கலவைகளில் காணப்படும் இரசாயன பொருட்கள் தோலின் வழியாக உள் சென்று உடலினுள் இருக்கும் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
‘லுக்கே மியா’ எனப்படும் ஒரு வகை புற்றுநோயினை ஏற்படுத்தக் கூடியது.
நிறக் கலவையிலுள்ள இரசாயான சேர்வை ஒவ்வாமையினை ஏற்படுத்தக் கூடியது.
சருமப் பாதிப்பு ஏற்படக் கூடும்.
உடல்நலம் பாதிப்புக்குள்ளாகும்.
நிரந்தரமாக போடப்படும் டாட்டூ மீண்டும் அழிக்க முடியாது. இதனால் பெயரோ அல்லது டாட்டூ போடும் போது வடிவங்கள் அழகாக வராவிட்டாலோ அவற்றை லேசர் ட்ரீட்மன்ட் மூலம் அழிப்பது என்பது கடினம். அதன் மேல் வேறு வடிவங்கள் வரைந்து மறைப்பதென்றாலும் வலி அதிகமாக இருக்கும்.
சிறிய மருக்கள் போன்றவை இருக்கும் இடத்தில் பச்சைகுத்துவதால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
முறையாக பயிற்சி பெறாதவர்களிடம் டாட்டூ குத்துவதால் அந்த இடத்தில் தழும்பு ஏற்பட வாய்ப்புண்டு.
முறையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காதவிடத்து சருமத்தில் கிருமித் தொற்று, புண்கள் மற்றும் பெரிய சீழ் கட்டிகள் போன்றன ஏற்படக்கூடும்.
அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பச்சைக் குத்திய பின் செய்ய வேண்டியவை,
பச்சைக் குத்திய இடத்தை அழுத்தி தேய்தலை தவிர்த்தல் வேண்டும்.
ஒரு வாரத்திற்கு உலர விடாது ஈரமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சைக் குத்துதலின் போதும் பச்சைக் குத்தியப் பின்னும் அவதானமாக செயற்படுவதனூடாக பாதகமான விளைவுகளிலிருந்து எம்மை நாமே காத்துக் கொள்ள முடியும்.
ஆண், பெண் இருவருக்குமே சவாலாக இருப்பது கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கருமை.
கழுத்துப் பகுதிகளில் ஏன் கருமை ஏற்படுகிறது…?
கழுத்துப் பகுதிகளில் கருமை நிறம் தோன்ற; சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், சூரிய கதிர்களால் ஏற்படும் தோல் அழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல் போன்றவை காரணமாகும்.
கழுத்துப் பகுதியில் கருமையான தோலினை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.
இதோ…! உங்களுக்காக, ஓர் அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்
மஞ்சள் செடியின் இலை
சோள மாவு = 1 சிட்டிகை
கஸ்தூரி மஞ்சள் தூள் = 1 மேசைக்கரண்டி
தேசிக்காய் = 1/2
பன்னீர் = 2 மேசைக்கரண்டி
செய்முறை
1.முதலில் நம் கழுத்தை குளிர்ந்த நீரினால் துடைக்கவேண்டும்.
2.பிறகு மஞ்சள் செடியின் இலையினை நீளமாக வெட்டி 10 நிமிடங்களுக்கு கழுத்தில் வைக்க வேண்டும்.
பத்து நிமிடங்களின் பின் அந்த இலையை அகற்றி விட்டு கீழ் கூறப்படும் செய்முறைகளை தொடர்ந்து செய்யவும்.
3. சோள மாவுடன் தேசிக்காய் சாற்றினை கலந்து, ரோஸ் வாட்டர் 1 மேசைக் கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு மேசைக் கரண்டி சேர்த்து குலவையாக தயார் செய்துக் கொள்ளவும்.
4.தயார் செய்த பின் அந்தக் குலவையை கழுத்தில் கருமை நிறமுள்ள இடங்களில் பூசிக் கொள்ளவும்.
5.முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளவும்.
(கீழுள்ள செய்முறையை கட்டாயமாக செய்ய வேண்டும்.)
கற்றாழை சிறு துண்டொன்றை எடுத்து அதை குளிர்சாதனப்பெட்டியின் மேற் பகுதியில் வைக்கவும். கற்றாழை கல் போன்று உறைந்தவுடன், அதன் தோலை அகற்றி மெதுவாக கழுத்துப் பகுதியில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்வது போல் தேய்க்கவும்.
கற்றாழை கருமை நிறத்தை போக்க கூடியது.
இறுதியாக மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
(குளிர்ந்த நீர் நமக்கு இறந்த செல்களை
அகற்றி புது செல்களை மீட்டெடுத்து தரும்)
இப் படிமுறைகளை தவறாமல் நாம் வாரத்தில் நான்கு நாட்களுக்கு செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கழுத்துப் பகுதிகளின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி விடும்.
செம்மொழியாம் தமிழ்மொழியில் காணப்படும் பல சொற்கள் நாம் இன்னும் அறிந்திராதவைகளாகவே உள்ளன. இன்று வரை நமக்கு கோடிக்கு மேல் தமிழில் இலக்கங்களை குறிப்பிடும் சரியான சொற்கள் தெரியாது. கால், முக்கால், அரைக்கு கீழ் உள்ள பின்னங்களை குறிப்பிடும் சரியான தமிழ் சொற்கள் தெரியாது. இவ்வாறாக நாம் அறியாத பல சொற்கள் தமிழில் உள்ளன. அவ்வாறான சொற்களின் தொகுப்பு தான் இந்தப் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளோம்.
ஏறுமுக இலக்கங்கள் (ஒன்றிலும் கூடிய பெறுமானம் உடைய இலக்கங்கள்)
இறங்குமுக எண்கள் (ஒன்றிற்கும் குறைவான பெறுமானம் உடைய இலக்கங்கள்)
1 = ஒன்று
3/4 = முக்கால்
1/2 = அரை
1/4 = கால்
1/5 = நாலுமா
3/16 = மூன்று வீசம்
3/20 = மூன்றுமா
1/8 = அரைக்கால்
1/10 = இருமா
1/16 = மாகாணி (வீசம்)
1/20 = ஒருமா
3/64 = முக்கால் வீசம்
3/80 = முக்காணி
1/32 = அரை வீசம்
1/40 = அரைமா
1/64 = கால் வீசம்
1/80 = காணி
3/320 = அரைக்காணி முந்திரி
1/160 = அரைக்காணி
1/320 = முந்திரி
1/102400 = கீழ் முந்திரி
1/2150400 = இம்மி
1/23654400 = மும்மி
1/165580800 = அணு
1/ 1490227200 = குணம்
1/7451136000 = பந்தம்
1/44706816000 = பாகம்
1/312947712000 = விந்தம்
1/5320111104000 = நாகவிந்தம்
1/74481555456000 = சிந்தை
1/489631109120000 = கதிர்முனை
1/9585244364800000 = குரல்வளைப்படி
1/575114661888000000 = வெள்ளம்
1/57511466188800000000 = நுண்மணல்
1/2323824530227200000000 = தேர்த்துகள்
இவ்வாறாக இலக்கங்களுக்கு இருப்பது போன்றே நாம் அன்றாடம் உபயோகிக்கும் அளவுகளுக்கும் நாம் அறிந்திராத சொற்கள் தமிழில் உள்ளன. அவ்வாறான சொற்கள் இதோ! உங்களுக்காக,
புழுதி பறந்திட மண் தரையில் விளையாடப்படும் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் கபடியும் ஒன்று. கிராம மக்களிடையே கபடி விளையாட்டு மிகவும் பிரபல்யமானது. இந்த கபடி விளையாட்டு ஆண்களால் மட்டுமன்றி பெண்களாலும் விளையாடப்படுகிறது இருப்பினும் பெண்களுக்கான கபடி விளையாட்டிற்கான ஆடுகளம் சற்று வித்தியாசமானது. வேறு வேறு கிராமங்களில் வாழ்கின்ற கபடி வீரர்களுக்கான வருடாந்த கபடி போட்டிகள் சிலகிராமங்களில் நடைப்பெறுவது உண்டு. ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் முன் வீரர்கள் எடுக்கும் பயிற்சியாகவும் கபடி விளையாட்டு திகழ்கிறது. அதாவது எதிரணியிலிருந்து வரும் வீரர் ஜல்லிக்கட்டு மாடு என கருதப்படுவார். அந்த வீரர் தன்னை தொட்டு விடாதபடி அவதானத்துடன் இருந்து அவரை மடக்கி பிடிப்பதை ஜல்லிக்கட்டு மாடு தன்னை முட்டாத படி காத்து அதனை அடக்குவதற்கு சமமாக கொள்ளுவர். கை+பிடி என்பது தான் கபடி என்ற சொல்லாக மாறுகிறது. இந்த விளையாட்டு தெற்காசிய நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. கபடி விளையாட்டினை சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு எனவும் அழைப்பர்.
கபடி விளையாட்டினை விளையாடுவதற்கான களம் எவ்வாறு அமைப்பது?
மேடுபள்ளம் இல்லாமல் சமதரையாகவும், மணல், மரத்தூள் அல்லது மண் பரப்பியதாக ஆடுகளம் அமைய வேண்டும். தரையில் மண், மரத்தூள் அல்லது மணல் பரப்ப காரணம் இவ் விளையாட்டில் கீழே விழுதல், எதிரணியினரால் இழுக்கப்படுதல் போன்றவை இடம் பெறுகையில் உடலில் கீறல்கள் ஏற்படக் கூடாதிருக்க வேண்டும் என்பதற்காகும். ஆடுகளத்தினை நீள் சதுரமாக அமைத்து நடுவில் ஒரு கோடிட்டு இரண்டாக பிரித்தல் வேண்டும். ஆடுகளத்தின் எல்லைகள் மற்றும் களத்ததைப் பிரிக்கும் கோடுகள் இரண்டு அங்குல அகலமானதாக இருக்க வேண்டும்.
கபடி விளையாட்டினை எத்தனை வீரர்கள் விளையாடலாம்?
இந்த விளையாட்டில் இரு அணியினர் பங்கேற்பர். ஓர் அணியில் ஏழு பேர் வீதம் விளையாடுவர்.
கபடி விளையாட்டிற்கான நேர எல்லை என்ன?
கபடி விளையாட்டிற்கான மொத்த நேரளவு 40 நிமிடங்கள் ஆகும்.
கபடி விளையாட்டினை எப்படி விளையாடுவது?ஓர் அணியிலிருந்து ஓர் வீரர் நடு கோட்டை தொட்டு ஒரே மூச்சில் “கபடி கபடி” என சொல்லிக் கொண்டு எதிர் அணயினர் இருக்கும் இடத்திற்கு செல்வார். அவ்வாறு சென்று எதிர் அணியிலிருக்கும் வீரர்களை தனது கை அல்லது காலால் தொட்டு விட்டு அவர்களிடம் பிடிபடாமல் மீண்டும் நடுகோட்டை தொட்டு தன் அணிக்கே திரும்புவது தான் கபடி விளையாட்டு.
கபடி விளையாட்டிலுள்ள விதி முறைகள் என்ன?
விளையாட்டின் போது புற எல்லைக் கோடுகளை தாண்டி செல்லக் கூடாது.
எதிரணிக்கு சென்று எவரையும் தொட்டு விட்டு தன் அணிக்கே திரும்பி விட்டால் தொடுபட்டவர் ஆட்டமிழப்பார். அவ்வாறு தன் அணிக்கு திரும்பாது எதிரணியினரிடம் அகப்பட்டு விட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். “கபடி கபடி” என பாடுவதை நிறுத்தினாலும் சென்றவர் ஆட்டமிழப்பார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடுகளம் எவ்வாறு அமைய வேண்டும்?
கபடி விளையாட்டில் ஆண்களுக்கான ஆடுகளம் 13மீற்றர்✖️10மீற்றர் பரப்பினை உடையதாகவும், பெண்களுக்கான ஆடுகளம் 11மீற்றர்✖️8மீற்றர் பரப்பினை உடையதாகவும் அமைக்கப்படும்.
தமிழ், சிங்களவர் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் மூங்கில் அல்லது ஈக்கிள் குச்சிகளால் கூடு கட்டி, வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி, மின் விளக்குகளை உள்ளே ஔிர விட்டு அதன் ஔியில் மகிழ்ந்திருக்கும் நாளாக வெசாக் தினம் விளங்குகிறது. இதில் இன்னும் சிறப்பான நிகழ்வாக வெசாக் தோரணை விளங்குகிறது. இந்த வெசாக் தோரணைகளை இலட்ச்சகணக்கில் பணம் செலவு செய்து புத்தரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதிகளை ஓவியங்களாக வரைந்து, மின்னலங்காரங்களுடன் பிரமாண்டமானதாக வடிவமைப்பர். கொழும்பில் புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிராண்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி ஆகிய இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணைகள் கட்டுவர். இந்த வெசாக் தோரணைகளை பார்ப்பதற்கெனவே கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவர். இந் நாளில் தானம் அதாவது தன்சல் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். சிலர் உணவுப் பண்டங்களையும், சிலர் குளிர்பானங்களையும் தன்சலாக வழங்குவர். இதனை மத பாகுபடின்றி மக்கள் வாங்கி உண்டு மகிழ்வர். இவ்வாறாக மின்னொளிகளின் நடுவே கோலகலமாக கொண்டாடப்படும் வெசாக் பண்டிகை பற்றிய சில தகவல்கள் இதோ…! உங்களுக்காக,
வெசாக் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு வருடமும் மே மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இத்தோடு புத்தர் பிறந்த காலமாக கருதப்படும் கி.மு. 563யிலிருந்து நடைமுறையிலுள்ள பௌத்த காலக் கணிப்பீட்டு முறையினைக் கொண்டும் வெசாக் பண்டிகைக்கான நாள் கணிக்கப்படுகிறது.
வெசாக் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணம் என்ன?
புத்தர் பிறந்த நாள் (இடம் – லும்பினி), புத்தர் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள் (இடம் – புத்தகாய), புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் (இடம் – குசிநகர்) ஆகிய மூன்று நிகழ்வுகள் நிகழ்ந்த நாட்களுமே மே மாதத்தின் பௌர்ணமி நாளாக பௌத்தர்கள் நம்புகின்றனர். இதனால் மே மாதத்தின் பௌர்ணமி நாள் வெசாக் தினமாக கொண்டாடப்படுகிறது.
வெசாக் தினத்தன்று இடம்பெற்றதாக நம்பப்படும் வேறு சில வரலாற்று நிகழ்வுகள்,
புத்தர் கிம்புல்வத்புரவிற்கு விஜயம் செய்த மனித வர்க்கத்தினருக்கு வழிகாட்டிய நாள்.
புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இடம்பெற்ற நாள்.
புத்தர் சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்த நாள்.
விஜயன் 500 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்த நாள்.
துட்டகைமுனு மன்னன் ருவன்வெலிசாயவை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய நாள்.
வெசாக் பண்டிகையினை கொண்டாடும் விதம் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. இலங்கையர்களால் கோலகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் வெசாக் பண்டிகையும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய காலகட்டத்தில் மனதினையும் உடலினையும் வலிமையாக வைத்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. நம்மில் சிலர் உடல் வலிமை மீது அக்கறை காட்டுவதோடு நிறுத்தி மனதினை வலிமையானதாக பேண மறந்து விடுகிறோம். வேறு சிலர் மனதின் வலிமை மீது அக்கறை காட்டுவதோடு நிறுத்தி உடலினை வலிமையானதாக பேண மறந்து விடுகிறோம். உண்மையில் ஆரோக்கியமான வாழ்வானது உடல் மற்றும் மனதின் வலிமைகளில் தான் தங்கியுள்ளது. இரண்டில் ஒன்று தன் வலுவினை இழந்தாலும் அது ஆரோக்கியமற்ற வாழ்விற்கான ஓர் அறிகுறியே. நம் கண்களுக்கு தென்படும் வகையில் உடலினை வலிமை செய்ய போதுமான உடற்பயிற்சி உபகரணங்களுடன் Gymகள் காணப்படுகின்றன. மனதினை அமைதிப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான ஓரிரு தியான சாலைகளும் உண்டு. தனித் தனியே இரண்டிற்கும் செல்வதால் நிரந்தர தீர்வு கிடைக்குமா? ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியுமா…?
சற்று சிந்தித்து பார்ப்போம். உடல் எடையை குறைப்பதற்காக உடற் பயிற்சி நிலையங்களிற்கு சென்று உடற்பயிற்சி செய்து எடையை பாதிக்கு பாதியாக குறைத்த பலரது எடை உடற்பயிற்சி நிறுத்தியதும் கண்ணிமை நொடியில் அதிகமாகுவதை நம் கண்களுக்கு நேர் கண்டுள்ளோம். தியான சாலைகள் சென்று மனதினை அமைதிப் படுத்தி வருவோர் கூட தியான சாலை வாசலை தாண்டியதும் உணர்ச்சிகளினால் ஆட்கொள்ளப்படுவதை கண்டிருப்போம். “சரி… அவ்வாறெனில் என்ன தான் தீர்வு…?” என உங்கள் மனதில் எழும் கேள்விக்கு எங்களிடம் பதில் உண்டு.
வாழ்வு முழுவதும் நிரந்தரமாக உடலினையும் மனதினையும் வலிமையுடையதாக பேணுவதற்கான ஒரே வழி யோகாப் பயிற்சிகள் தான். யோகாப் பயிற்சிகளில் காணப்படும் ஒவ்வொரு பயிற்சிகளும் உடலின் சிறுசிறு நரம்பு மண்டலங்களையும் ஆரோக்கியமானதாக பேணுவதற்கு உதவுகின்றது. அத்தோடு உடற்பயிற்சியின் போது மனதினையும் பயிற்சிக்கு உட்படுத்தி வலிமை செய்யும் உத்திகள் யோகாப் பயிற்சிகளில் உண்டு. யோகாப் பயிற்சிகளின் மூலம் ஓர் தனி மனிதன் தனது உன்னத நிலையினை உணர முடியும். தன் மனதில் எழும் எதிர்மறையான எண்ணங்கள் தேவையற்ற ஆசைகள் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். இதனிலும் மேலாய் மனிதன் தன் ஆயுள் நாட்களை நீடித்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் யோகாப் பயிற்சிகளுக்குள் அடங்கும்.
பொதுவாக யோகா ஏழு வகைப்படும். அவையாவன,
1.ஜப யோகா
2.கர்ம யோகா
3.ஞான யோகா
4.பக்தி யோகா
5.ராஜ யோகா
6.குண்டலினி
7.நாடி
உடற் தசைகளில் கட்டுக்கட்டான மடிப்புகளை உருவாக்கி கொள்வதோ அல்லது துன்பம் நேரும் போதும் மறைத்து சிரித்து நடித்து வாழ்வதோ ஆராக்கியமான வாழ்க்கை ஆகுவதில்லை. வயது முதிர்ந்திடினும் உடலில் சீரான இயக்கம் நடந்துக் கொண்டிருப்பதும் எரிமலைப் போல் கோபத்தினை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக சிந்தித்து செயலாற்றவும் கூடிய உடல், உள வலிமை நிறையப் பெற்று வாழ்வதே சீரான ஆராக்கியமான வாழ்வாகும். எம்மால் இயன்றவரை நேரத்தினை ஒதுக்கி யோகாப் பயிற்சிகளில் ஈடுபடுவோம். ஆரோக்கியமான சமுதாயமாக நம் சமுதாயத்தினை மாற்றுவோம்.
நம் முன்னோர்கள் சற்று வளர்ந்து தெளிவுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது மூன்று வயதிற்கும் குறைவான அல்லது அதே வயதுடைய குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டுக்களையும் நமக்கு தந்து சென்றுள்ளனர். நாம் அனைவருக்கும் நம்முடைய சிறு வயதுப் பருவ காலங்களில் “இது சோறு, இது பருப்பு” என ஒவ்வொன்றாக கூறி நம் வீட்டின் பெரியவர்கள் கைவிரல்களைப் பிடித்து நிமிர்த்தி விளையாடிய நினைவு இருக்கும். நாம் பெரியவர்களான பின் சிறிய குழந்தைகளிடம் கைகளைப் பிடித்து இதே விளையாட்டினை விளையாடி இருப்போம். நம்மில் சிலருக்கு இந்த விளையாட்டின் பெயர் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விளையாட்டின் பெயர் பப்பு கஞ்சி. இது மூன்று வயதிற்கும் குறைவான அல்லது அதே வயதுடைய குழந்தைகளுடன் விளையாடப்படும் விளையாட்டு.
பப்பு கஞ்சி விளையாடுவது எப்படி…?
குழந்தையின் ஓர் கையினை எடுத்து வீட்டில் சமைக்கப்படும் ஒவ்வொரு உணவின் பெயரையும் “இது சோறு, இது பருப்பு, இது ரசம்” என கூறி ஒவ்வொரு விரலாக நீட்ட வேண்டும். அதன் பின் குழந்தையின் உள்ளங்கையை தட்டாக பாவித்து அனைத்து உணவையும் கொட்டி பிசைவது போல் பாவனை செய்ய வேண்டும். பின் “இது காக்கைக்கு, இது அப்பாக்கு, இது தாத்தாவுக்கு, இது எனக்கு” என வீட்டிலிருக்கும் ஒவ்வொரு உறவையும் கூறி அதிலிருந்து ஒவ்வொரு பிடியாக கொடுத்து “இது செல்ல பாப்பாவுக்கு” என கூறி ஊட்ட வேண்டும்.
பப்பு கஞ்சி விளையாடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன…?
பப்பு கஞ்சி விளையாடுவதால் குழந்தைகள் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளின் பெயர்களை அறிந்துக் கொள்கின்றனர். தம் வீட்டில் உள்ள உறவு முறைகள் பற்றியும் தெரிந்துக் கொள்கின்றனர். குழந்தைகளிடம் பிற உயிர்களுக்கு ஓர் பிடி அளித்து உண்ணும் பண்பும், மற்றவருடன் பகிர்ந்தளிக்கும் பண்பும் வளர்கிறது.
இனி நம் வீட்டில் உள்ள குழந்தைகளை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து விட்டு நம் கடமைகளை முடிக்கும் தவறான வழக்கத்தினை மாற்றிக் கொள்வோம். நம் குழந்தைகளின் வயதுக்கேற்ப தேவையான அறிவினை வழங்கும் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவோம்.
இன்று பல வண்ணங்களில் பல வித்தியாசமான வடிவங்களில் விளையாட்டு சாதனங்கள் வலம் வருகின்றன. ஆனால் அன்று இவ்வாறான சாதனங்கள் ஏதும் கிடையாது. அனைவரும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருட்களையே விளையாட்டு சாதனங்களாக மாற்றினர். அத்தோடு வீசக் கூடிய பொருட்களை வைத்தும் விளையாடுவது எப்படி என சிந்தித்து விளையாடி வந்துள்ளனர். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குவது தான் இந்த வளையல் விளையாட்டு. அதிகம் இல்லத்தரசிகளால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டுக்களில் தனிச் சிறப்பு மிக்க விளையாட்டு இது.
வளையல் விளையாட்டிற்கு தேவையான சாதனம் என்ன?
பெண்கள் இருக்கும் வீடுகளில் வளையல் இருப்பது வழக்கம். பெண்கள் என்றாலே தோடுகள் மற்றும் வளையல்கள் மேல் அதிகம் பிரியம் கொண்டவர்கள். அதிலும் கண்ணாடி வளையல் தனி அழகு. கண்ணாடி வளையல்கள் உடைந்தால் கூட வீசுவதற்கு மனம் வருவதில்லை. அந்த உடைந்த கண்ணாடி வளையல்களே இந்த விளையாட்டினை விளையாட தேவையான சாதனம்.
வளையல் விளையாட்டு விளையாடுவது எப்படி…?
உடைந்த வளையல்களை எடுத்து அவற்றில் ஓர் நிறத்தில் இரண்டு துண்டுகள் வீதம் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜோடிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறிய அல்லது பெரிய வட்டமொன்றை தரையில் வரைந்துக் கொள்ள வேண்டும். சிறிய வட்டமாக வரையும் போது விளையாட்டு சுவாரசியமானதாகவும் கடினமானதாகவும் மாறும். பெரிய வட்டமாக வரைந்தால் விளையாட்டு எளியதாக மாறும்.
வளையல் துண்டுகளை மொத்தமாக ஓர் கையில் எடுத்து வட்டத்துள் போட வேண்டும்.
அதன் பின் ஓர் நிற வளையலை எடுத்து அதே வளையலால் அதன் ஜோடியையும் எடுத்து இரண்டையும் இழுத்து வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறாக யார் அதிகம் வளையல் ஜோடிகளை வெளியில் எடுக்கிறாரோ அவரே வெற்றியாளர்.
வளையல் விளையாட்டு விளையாடுவதற்கான விதி முறைகள் என்ன…?
கைகளில் வளையலை எடுத்து வட்டத்துள் போடும் போது வளையல் துண்டு வட்டத்தை விட்டு வெளியில் வீழ்ந்து விட்டால், வளையல்களை வெளியில் எடுக்கும் போது அருகிலிருக்கும்வளையல் நகர்ந்து விட்டால் அல்லது வளையலுக்கு ஏற்ற ஜோடியை விடுத்து மாற்றி சேர்த்து விட்டால் அவர் தோற்றவராக கொள்ளப்படுவார்.
வளையல் விளையாட்டு விளையாடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள் என்ன…?
வளையல் விளையாட்டில் மூளை, கண், கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயற்படுகின்றன. இதனால் கண் பார்வை கூர்மையாகிறது. நிறத்தினை பாகுபடுத்தி பார்க்கும் திறன் வளர்கிறது. மூளையின் செல்கள் அபிவிருத்தி அடைகின்றன. கை நடுக்கம் உள்ளவர்கள் விளையாடும் போது அந்த கைநடுக்கம் அற்றுப் போகிறது.