புத்துணர்வு கொடுக்கும் தக்காளியின் அழகுக் குறிப்புகள்!!
அழகு என்பது பலராலும் விரும்பப்படும் ஒன்றாகும் பச்சிளங் குழந்தை தொடக்கம் பல்லுப்போன கிழவி வரை அழகை விரும்பாதோர் எவரும் இல்லை ஒவ்வொருவரும் தமது அழகினை ஆளுமையின் வெளிப்பாடாக நினைத்தும் பெருமிதம் கொள்கிறார்கள் என்பது எவரும் மறுப்பதற்கில்லை.
தற்போதைய நவீன காலத்தில் திரைப்படங்கள் சினிமாக்களின் ஊடுவருவலால் அதில் காணப்படும் நடிகர்களைப் போன்று தாமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று போலிவிளம்பரங்களை நம்பி கிறீம்களை வேண்டி பணத்தையும் செலவளித்து அழகை கெடுக்கும் தன்மையும் காணப்படுகின்றது. செயற்கை அழகு என்றுமே நிலையில்லை
உடனே அழகாகி விட வேண்டும், வெள்ளையாகி விட வேண்டும் என்று ஆசைப்படும் உங்களுக்கான பதிவுதான் இது இயற்கையான முறையில் எந்த செலவுமின்றி வீட்டில் இலகுவாக கிடைக்கக் கூடிய தக்காளியைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை எவ்வாறு அழகாக வைத்திடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா!!!!
தக்காளியை பார்க்க எப்படி அழகா இருக்கிறதோ அதேபோல நம்மை ஆரோக்கியமாக்குவதற்கும், அழகுகாக்குவதற்குமான தன்மைகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தக்காளியில் இருக்கும் லைகோபீன் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. தக்காளியிலுள்ள லைகோபின் உங்கள் சருமம் முதிர்ச்சியடையாமல் சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கிறது. தக்காளியிலுள்ள புரதம்,மினரல் மற்றும் நார்ச்சத்துக்கள் சரும மற்றும் கூந்தல் அழகிற்கு அவசியாமனதாகிறது. தக்காளியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன அழகு நன்மைகளை பெறலாம் என்று உங்களுக்குத் தெரியுமா!
தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. உங்கள் தோல்களை பளபளக்க செய்கிறது. தக்காளியை தினமும் முகத்திற்கு பயன்படுத்தலாம் எந்த பக்கவிளைவும் இல்லை எந்த நேரமும் பயன்படுத்தலாம். நீங்கள் வரண்ட சருமம் உள்ளவர்களா? இல்லை எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவரா!! எந்த வகையாக சருமத்தினரும் பயன்படுத்தக்கூடியதாக தக்காளி இருக்கிறது.பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றாக நீங்கிகருமைநிறம் மறைந்து முகப்பொலிவினை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கருவளையம் தோன்றி விடும். இதனால் முகம் ஒருவவிதமாகவும் கழுத்துப்பகுதி இன்னொரு விதமாகவும் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்குமா! தக்காளி தருகின்றது இதற்கான உடனடித் தீர்வு தக்காளியை சிறிதளவு சீனியுடன் சேர்த்து பேஸ்ட் செய்து போட்டு விரல்களால் நன்றாக முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் வெறும் பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரினால் கழுவினால் தக்கநிறம் போன்று சருமத்தின் பளபளப்பினை நீங்கள் பெற்றுவிடலாம்.
முகப்பரு மற்றும் சரும துளைகள், பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளி சாற்றை முகத்தில் தடவி வந்தால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும். சருமமும் அழகாகும். தக்காளியை மிக்ஸியில் பசையாக அரைத்து மசித்து அதனுடன் மூன்று டீஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை பருக்களால் குழிகளாக இருக்கும் சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகத்தில் இருக்கும் குழிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றுவதால் உங்கள் சருமம் கருமையடைந்திருக்கும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது மனஉழைச்சல் ஏற்படும். அப்படியெனில் கவலையை விடுங்கள்
தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுடன் வீட்டில் இயற்கையாக கிடைக்கும் உடனடி கற்றாழை துண்டை சேர்த்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். அதோடுகூட முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.
எண்ணெய் பசை சருமவகை கொண்டவர்கள் செயற்கை முறையில் கிடைக்கும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் தக்காளியை பயன்படுத்தினால் நீண்ட மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத சருமம் உங்களுக்கு கிடைக்கும். எண்ணெய் பசை நீங்க தக்காளியில் கடலை மாவு அல்லது சிறிது முல்தானி மிட்டி சேர்த்து தினமும் முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும் என்பதை நீங்களே அறியலாம்.
தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.
தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
நன்கு கனிந்த 2 தக்காளிப்பழம் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறைந்து சருமம் பொலிவடையும்.
ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும்.வாரம் இருமுறை இதுபோன்று செய்து வந்தாலே போதும்.முகம் பிரகாசிக்கும்.
1 தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை உடனடியாக அவதாளிக்கலாம்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், தக்காளிச் சாறை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து சாதரண நீரில் முகத்தில் கழுவலாம். இதனால் முகத்தின் நுண்துளைகளில் ஊடேறும் சாறு, முகத்தின் நுண்துளைகள் திறப்பதை தடுக்கிறது. கரும்புள்ளிகளையும் நீக்கிவிடும்.
காலை எழுந்த உடன் ஒரு தக்காளியுடன் மஞ்சள் மற்றும புதினா சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம். அதன் பின்னர் அவை காய்ந்த உடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இவை முகத்தை புத்துணர்வோடு இருக்க வைப்பதுடன், தோலை மிருதுவாகவும் மாற்றும்.
அதே போல தக்காளியுடன் மோரைக்கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் கழுவலாம். இவை சூரிய ஒளி மூலம் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும். அதே போல முதுமையில் ஏற்படும் தோல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தக்காளி தீர்வாக இருக்கிறது.
சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித் துறை, நிர்வாகத் துறை, மற்றும் சட்டவாக்கத் துறை என்ற மூன்று துறைகள் இருக்கின்றன. இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இயங்குவதை உறுதி செய்வதே சுதந்திரம் ஆகும். ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் நீதித்துறை மிக மோசமானளவு பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் அதிகாரம் பாதிக்கப்படும்போது சட்டவாட்சி பாதிக்கப்படுகின்றது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கான நீதிபதிகளை ஜனாதிபதி நியமிப்பதால் நீதித்துறையில் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாதுள்ளது. நீதித்துறையில் இருந்து இயலுமான வரை நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தலையீட்டினை குறைக்கும்போதுதான் நீதித்துறையின் சுதந்திரத்தினை பேண முடியும். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை நிர்வகிக்கப்படலாம். நிறைவேற்றுத் துறைக்கு ஜனாதிபதி தலைவராக இருக்கலாம். அதேபோன்று சட்டவாக்கத் துறை சுயமாக இயங்குவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறை என்பவற்றில் மோசடிகள் நடைபெறாமல் இருந்தாலுமே கூட குறித்த துறைகளுக்கான தலைவர்களை ஜனாதிபதி நியமிப்பாராக இருந்தால் மக்கள் மத்தியில் அவை தொடர்பாக சந்தேகங்கள் தோன்றுவது இயல்பானது. எனவே மூன்று துறைகளினதும் தலைமை பொறுப்புகளில் இருந்து ஜனாதிபதி விலகியிருப்பதே சாலச் சிறந்தது.
அவாதானிப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றின் ஊடாக ஜனாதிபதி மூன்று துறைகளையும் நிர்வகிப்பது சிறந்ததாக அமையும். ஆனால் தலைமை பொறுப்புகளில் இருப்பது ஏற்ற முடிவு கிடையாது. நீதித்துறைக்கு அதிகமான அதிகாரம் கொடுப்பதும் தீதை ஏற்படுத்தும். நீதித்துறையின் செல்வாக்கு சட்டவாட்சி மற்றும் நிறைவேற்றுத் துறையில் இருப்பது சிறந்ததல்ல. இந்த மூன்று துறைகளும் தமது பொறுப்புகளை சரியாக செய்வதுடன் மூன்று துறைகளுக்கும் இடையில் ஒரு உறவு பேணப்பட வேண்டும். ஆனால் ஒரு துறையை இன்னொரு துறை கட்டுப்படுத்தும் நிலைமை இருக்கக் கூடாது.
இலங்கையிலுள்ள அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கக் கூடிய சாத்தியங்கள் எற்படக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இல்லை. ஆனால் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை எடுத்துக்கொள்ளும்போது அதுபற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சலுகைகளை உரிய முறையில் அவர்கள் பெற்றுக்கொள்ள இலகுவான பொறிமுறைகளை அரசியலமைப்பில் உள்வாங்குவது இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
இந்தக் கட்டுரை Reform Watch என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிஷ்ரின் மொஹமட் தொகுத்து வழங்கிய சட்டத்தரணி முஹம்மது நளீம் அவர்களுடனான நிகழ்ச்சியில் இருந்து தொகுக்கப்பட்ட விடயங்கள் ஆகும்.
நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று குறுகிய கண்ணோட்டத்துடனே நோக்கப்படுகின்றது என்பது மிகவும் வேதனைக்குரியது. உலகமயமாக்கல் நிலவும் இக்கால கட்டத்தில் தாய் மொழியில் கல்வி என்பது; குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமோ என்ற கேள்வியே பெற்றோர்களிடத்தில் எழுகிறது.
இன்று உலகம் முழுவதும் தாய் மொழி மூலமாகவே கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய் மொழிக்கும் தொடர்பு இருக்கின்றது. தாய் மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோளாக அமைகிறது. எந்த மொழியைக்கற்றாலும் எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய் மொழியில்தான என்பதை எவராலும் மறுக்க முடியாது. இருப்பினும் சிறுபான்மையினர் பேசும் மொழியால் வளர்ச்சி அடையாத மொழிகளில் தாய் மொழிக்கல்வியானது மிகப்பெரிய சவாலானது.
தாய் மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாக கல்வி கற்கின்றனர். மனிதனது படைப்பாற்றலை தாய்மொழிக் கல்வியே அதிகப்படுத்துகின்றது. அதே போல் தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் சமூகத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க முடியும். கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் கற்றுத்தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு இலகுவாக போதிக்கலாம். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை, பேச்சாற்றல், ஆக்கத்திறன் என்பன அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலைத்தேய அறிஞர்கள் கூட தாய் மொழிக்கல்வியை வலியுறுத்துகின்றனர். ‘தான் பெற்ற கல்வி சமூகத்துக்கு பயன்பட வேண்டுமெனில், அவன் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும்’ என்று விபுலானந்தர் கூறியுள்ளதை சுட்டிக்காட்லாம். காந்தியடிகளும் தேசப்பற்று ஊற்றெடுக்க தாய்மொழியே அடித்தளம் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒருவர் தான் கூறவிரும்பும் கருத்தை தெளிவாகவும்; முழுமையாகவும்; ஆழமாகவும் தெரிவிக்க முடியும். வருடம் தோறும் பெப்ரவரி 21அனைத்துலக தாய்மொழி தினமாக 2000ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழிN;ய அடிப்படை அன்னை மடியில் குழந்தையாய் அறிந்து கற்ற முதல் மொழி தாய்மொழி. தாயானவள் குழந்தைக்கு உணவூட்டுவதோடு உணர்வையும் ஊட்டுகின்றாள். அதற்கு பயன்படுத்துவது தாய்மொழியே.
கல்வியின் அத்திவாரம் தாய் மொழியே என்றாலும் மற்றொரு தேசிய மொழி, இரண்டாம் மொழி போன்ற மொழிகளைக் கூடவே கற்பதாலும் பல அனுகூலங்கள் உண்டு என்பதில் மறுப்பதற்கிடமில்லை. தொடர்பாடலை விசாலமாக்குவதுடன் பிற்காலத்தில் உயர்கல்வி கற்பதற்கும் தொழில் வாய்ப்புக்கள் பெறுவதற்கும் அது உதவும்.
‘தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை’ என்பது போல ‘தாய்மொழியிற் சிறந்த வேறு மொழியில்லை. என்பது அறிஞர்களின் கருத்தாகும். ஒருவன் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறில்லை எனினும் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழியே அடிப்படையானது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தாய் மொழி மூலம் கல்வி பயிலும் குழந்தை தனது இயல்பூக்கங்களிற்கு ஏற்ப பூரண திறன்களை வெளிக்காட்ட முடியும் என்பது கல்வி உளவியல் அறிஞர்களின் கருத்தாகும். இதனால் தான் தாய்மொழி மூலம் கல்வி புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இன்று உலக அரங்கில் வளர்ச்சி பெற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ரஸ்யா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் தத் தம் சுயமொழி மூலமே கல்வி புகட்டுகின்றன.
தாய்மொழி மூலம் கல்வி பயின்ற நிபுணர்களையும் விஞ்ஞானிகளையும் பெருமளவில் கொண்டுள்ளன. தாய்மொழி மூலம் கல்வி பயின்றமையினாலேஇவர்கள்புதியபுதிய கண்டுபிடிப்புக்களை கண்டறிந்துள்ளனர். தாய்மொழி மூலம் கல்வி பயில்வதே சிந்தனை வளர்ச்சிக்கு துணை புரியும் என்பதை இது நன்கு புலப்படுத்துகின்றது. வளர்முக நாடுகள் பல இன்று பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் அவை வளர்ந்த நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டமையே தாய்மொழி மூலம் எதுவும் சாதித்து விட முடியாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்றோரிலும் பார்க்க தாய்மொழி மூலம் பயின்றோரே இன்று உலகின் சிறந்த விஞ்ஞானிகளாகவும் பொருளியலாளராகவும் மருத்துவ நிபுணர்களாகவும் விளங்குகின்றனர்.
1907ல் பொதுவுடைமை புரட்சி மூலம் ஆட்சி அமைத்த சோவியத் யூனியனும் 1950ல் பொதுவுடைமை புரட்சி மூலம் ஆட்சி அமைத்த மக்கள் சீனாவும் 2ம் உலகப்போரின் பின் உருப்பெற்ற ஜப்பானின் பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கின்றது என்றால் முக்கிய காரணம் தத்தம் தாய்மொழி மூலம் கல்வி புகட்டியமை ஆகும். தாய்மொழி மூலம் ஒவ்வொருவனும் பற்றுக்கொள்ள வேண்டும். அப்பற்று இல்லாதவன் தாயை பழித்தவன் ஆகின்றான். ‘பெற்ற தாயை காட்டிலும் தாய்மொழி உயர்ந்தது ஆகும்.’ தமது தாய்மொழியைவிட்டு அந்நிய மொழியில் கல்வி பயில முற்படுவது அழகாகாது இதனாலேயே பாரதியாரும் ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும். என்றார். தாய்மொழியில் கற்பது தாய்ப்பால் பருகுவதைப் போன்றது.
பிறமொழியில் கற்பது புட்டிப்பால் பருகுவதைப் போன்றது. தாய்ப்பாலே குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு உகந்தது. அது போன்று தாய்மொழியில் கற்பதே குழந்தையின் இயல்பான சிந்தனை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே தாய்மொழி மூலம் கற்பதே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும்;. மேலை நாட்டினர் அறிவியல் துறையில் முன்னணி வகிக்க காரணம் அவர்களுக்கு தேவையான அனைத்து நூல்களும் அவர்களின் தாய்மொழியில் உள்ளமை ஆகும். தாய்மொழி வாயிலாக கல்வி பெறுதலும் எல்லா துறைகளிலும் தாய்மொழியை பயன்படுத்துவதும் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். தாய்மொழி மூலம் பெறப்படும் கல்வியே உள்ளத்தில் அடிபதிந்து அழியாப் பயன் நல்கும். அதுவே அறிவு சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படையாகும். நமது சமுதாயம் எழுச்சி பெறவேண்டுமாயின் நாடு பொருளாதார வளத்துடன் உயர்ந்திட வேண்டுமாயின் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழியிலேயே சிந்திக்க முடியும் சிந்திக்கும் மொழியிலேயே சிறப்பாக கல்வி கற்கவும் முடியும். அறிந்ததில் இருந்தே அறியாததை கற்றுக் கொள்ள முடியும். உலகெங்கும் தாய்மொழியில் கற்றவர்களே படைப்பாற்றல் மிக்கவர்களாக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மொழியையும் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்
உலகின் தலைசிறந்த குழந்தை உளவியலாளர்களும் கல்வியியலாளர்களும் இதனை உறுதிப்படுத்தி வருகின்றனர். குழந்தையின் தொடக்க கல்வி தாய் மொழியில் தான் அமைய வேண்டும் என்ற கருத்தை இதுவரை எவரும் மறுக்கவில்லை. உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் தொடர்கல்வி மட்டுமன்றி உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி என அனைத்தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் அங்குதான் நிகழ்கின்றன. இந்த அறிவியல் உண்மைக்கு இஸ்ரோ அறிவியலாளர்களும் சான்றாக திகழ்கின்றனர். விண்ணில் செயற்கை கோள்களை ஏவுவதில் வல்லரசு நாடுகளும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் அவர்கள் சாதனை புரிந்து வருவது யாவரும் அறிந்ததே. இச்சாதனைக்கு அடிப்படை காரணம் இஸ்ரோ அறிவியலாளர்களில் பெரும்பாலானோர் தொடக்க கல்வியை அவரவர் தாய்மொழியில் கற்றதே .ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை பல்வேறு கொள்கை மற்றும் செயற்றிட்டங்கள் ஊடாக முன்னிறுத்தி வருகின்றது.
அண்மைக்காலமாக தாய்மொழியில் கல்வியை பல்வேறு ஆபிரிக்க ஆசிய நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன. ஒருவரின் தாய்மொழியில் தேர்ச்சி பெறுவது அந்த மாணனின் அறிவுணர்வு வளர்ச்சிக்கும் பொதுவான கல்வி பெறுபேறுகளுக்கும் முக்கியமானது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன எனவே அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வி அடிப்படையாகும்.சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்படுத்துகின்றது.அனுபவங்களுக்கு அர்த்தம் கொடுப்பதும் தாய் மொழியே ஒரு மொழியின் இயல்பைப்பற்றி கற்பதற்குக் கூட தாய் மொழிதான் தெரிந்திருக்க வேண்டும். மொழியை எவ்வாறுபயன்படுத்துவது என்பதையும் தாய்மொழியே புகட்டுகின்றது. எனவே கல்வியின் அத்திவாரம் தாய் மொழியே. தாய் மொழிக்கல்வியின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து மதிப்பளிக்க வேண்டும்.
ஆசியாவின் முத்து எனக் கூறப்படும் இலங்கை நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பை கொண்ட மத்திய மாகாணம் இலங்கையின் சுற்றுலாத் துறையிலும் சரி கலாசாரம், விளையாட்டுத்துறைகளிலும் சரி ஏன் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த பொருளாதார துறைகளிலும் கூட தனக்கென தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் தன்னகத்தே கொண்டுள்aளது. இருப்பினும் இங்கு வாழும் மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இன்றுவரையிலும் பல வருடங்களாக தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களையே தனது தினசரி சிவனோபாயமாக கொண்டுள்ளனர். மேலும் இத்துறைகள் மலையகத்தில் உள்ள குடும்பங்களின் ஓரளவேனும் அவர்களின் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
ஆனால் இந்த கட்டமைப்பு கடந்த இரண்டு தசாப்த காலமாக மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றத்திற்கான முக்கிய காரணியாக தற்கால இளைஞர்களின் மனோநிலையும் நகர்ப்புற வாழ்வில் உள்ள மோகமும் அதனில் உள்ள மாற்றுத்தன்மையான ஈர்ப்பும் என நாம் நினைவில் கொள்ளளாம்.
மேலும் மலையகத்தில் ஒரு புறம் கல்விகற்ற சமூகத்தினர் உருவாக்கம் மற்றும் உயர் தொழில் அங்கீகாரம், சில புதுமையான கைத்தொழில் முயற்சிகள் போன்ற உயர் அடைவுகளை பெறுவது மகிழ்வூட்டக்கூடியதே. இருப்பினும் இன்னொருபுறம் தொழில் திறமையற்ற தொழிலுக்காக (Unskilled Job) தலைநகரம் நோக்கிய மலையக ஊழியப்படை படையெடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த இரண்டு போக்குகளுக்குமான அளவுச்சார் வித்தியாசம் கணிசமாக காணப்படுகின்றது. இங்கு கல்விகற்ற சமூகத்தினர் உருவாக்கத்தை விட நகரங்களை நோக்கிய தொழிலுக்காக பயணிப்போர் சதவீதம் பல்மடங்கு பெருகியிருக்கின்றது. இது ஒருவகையில் கிராமங்களுக்கான அழிவை நோக்கி செயற்படுகின்றது.
உதாரணமாக கல்விகற்ற சமூகத்தினரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நகரங்களை நோக்கியே பயணிக்கின்றனர். மேலும் தேயிலை, இறப்பர் பயிர்ச் செய்கையில் உள்ள பரீட்ச்சார்த்தியத்தை விட நகர்ப்புற வேலைகளில் பரீட்ச்சார்த்தியம்(இலகு) அதிகம் என பெரும்பான்மையான மலையக இளைஞர் யுவதிகள் நம்புகின்றனர். மேலும் தற்கால நிதிநிலைமைகளை ஈடுசெய்யக் கூடிய (குறுகிய கால தேவைகளை) இந் நகர்புற வேலைகளே கைகொடுக்க கூடியதாக உள்ளதினால் இந்த தொழில்துறை மாற்றம் என்று கூட கூறலாம்.
இது நிலையானதா?
இருப்பினும் கூட இந்த நகர்ப்புற நகர்வு மலையக இளைஞர் யுவதிகளின் நிலையான வருமானத்தை ஈடுசெய்யுமா?? (கேள்விக்குறி ஆரம்பம்???) என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. காரணம் பெரும்பான்மையாக இந் நகர்வு தொழில் திறமையற்ற (Unskilled Labor) இளைஞர்களையும் மற்றும் குழந்தை தொழிலாளர்களையும், பாடசாலை இடைவிலகல் மாணவர்களையும், உயர் கல்வி இடைவிலகல் மாணவர்களையும் உருவாக்க கூடியதாகவும் ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.
(என்ன தா செய்றது.. இன்னும் எத்தன காலம் தா.. இந்த தேயிலை தோட்டத்த.. நம்பியே வாழ்றது? நம்ப புள்ளைங்க சரி கொழும்பு, கண்டி பக்கம் பொய்ட்டு நல்லா இருக்கட்டு..) மலையக தாய்மாரின்.. புலம்பல்.
இந்த புலம்பலுக்கான விடை என்ன?
இதன் விளைவு இன்றைய இளைஞர் சமூகம் மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்களும் (இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்..) இதற்கமைய எதிர்கால தலைவர்கள் இந்த மாய வலையில் சிக்கித்தவிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இவர்களின் தனிநபர் அபிவிருத்தியையும் ஒழுங்கமைந்த சமூகக் கட்டமைப்பையும், சமூக தூரநோக்கினையும், உயர்ந்த இலட்சியத்தையும் அவர்கள் மனதில் விதைக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். மற்றும் கல்வி கற்ற சமூகத்தினரும், புதிய தொழில்முனைவோரும், தொழில் நிபுணத்துவம் மிக்கவர்களும் அபிவிருத்தி அடைந்த நகரங்களை நோக்கி படையெடுக்காமல் தமது சொந்த கிராமங்களிலிருந்து அக் கிராமங்களை அபிவிருத்தியடைய செய்யத் தூண்டுதலும் வேண்டும்.
அப்படியானால் இதற்கான வித்திடல் எவ்வாறு..
இவ்வாறு வழிகாட்டுதலுக்காக No.17/1, டன்பார் வீதி, ஹட்டன். எனும் முகவரியில் ளு.கிஷோக்குமார் என்பவர் (purpose lab), எனும் வழிகாட்டுதல் அமைப்பை உருவாக்கியுள்ளார். அவர் தன்னை அடையாளப்படுத்தும் போது “தன்னால் ஒரு Bar Soap ஐ கொண்டு சமூக மாற்றத்தினை ஏற்படுத்தி காட்டமுடியும் என்றும், மேலும் அவர் ஆவணப்புகைப்பட கலைஞர் மற்றும் சமூக தொழில் முனைவோராகவும் ஓர் அர்த்தமுள்ள சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசை உள்ளது.
என்றும் நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தை மையமாகக் கொண்டு பல ஆய்வு திட்டங்களை தனது சொந்த செலவில் நிறைவு செய்துள்ளேன் எனவும் மேலும் தனித்துவமான திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலுள்ள இளைஞர்களின் திறனை நான் விருத்தியடைய செய்வேன், மற்றும் நான் 300ற்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு திட்ட நிகழ்வுகளையும், 1500 தனியாள் வழிநடத்தல் செயலமர்வுகளையும் நிறைவு செய்துள்ளேன். இதுவே எனது அனுபவங்களை மேம்படுத்த உதவியாக இருந்தது.” என அடையாளப்படுத்துகின்றார்.
எனவே இதன் மூலம் அவர் Purpose Lab இனை விபரிக்கும் போது “நாங்கள் Inspire People எனும் இலாப நோக்கமற்ற நிறுவனம் புதிய வடிவமைப்புகள் மற்றும் இளைஞர்களின் திறமைகளை அடையாளப்படுத்தலும் அதனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குதலும், மேலும் இளைஞர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தலும் அவர்கள் அந்த திறமையை நிலைபேறாகக் கொண்டு சுற்றுச்சூழலை உருவாக்குவதே ஆகும்” என தெரிவித்தார்.
இந்த நிலைப்பேறான சமூகச்சூழல் உருவாக்கம் என்பது தனிமனித முன்னேற்றத்தை சார்ந்து மட்டுமல்லாமல் அது சமூக முன்னேற்றத்துடன் தழுவியது. இங்கு தனிமனித முன்னேற்றம் என்பது நிலையான வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்காது. எனவே நாம் மலையக ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையே(Society Echo System) அடைய எத்தனிக்கின்றோம். இதுவே நிலையான சமூக மாற்றத்தை கட்டியெழுப்பக்கூடியது.
இந்த முயற்சியை பயிரிடுவது எவ்வாறு?
அதனை செயற்பாட்டு வடிவமாக்குவதற்கு புதுமையான அனுகுமுறைகளைக் கொண்டு ஆர்வமிக்க இளைஞர், யுவதிகளை நெருங்குவதன் மூலம் அவர்களின் திறன்களை அறிந்து அதனைக் கூர்மைப்படுத்தி ஆர்வமுள்ள இளைய தலைமுறையின் எதிர்காலத்தை அறிவூட்டலுடன் கொண்டுசெல்ல முனைவதோடு இவர்களின் இறுதி இலக்காக சமூகத்திற்கான நல்ல பிரஜைகளை உருவாக்கி.. தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் திறமைகளை கட்டவிழ்த்து அத் திறமைகளின்பால் அவர்களை நிலைப்பேறான பொருளாதார நிலையை மேம்படுத்துவதோடு, அவர்கள் ஆர்வமிக்க தொழில்களில் அத் தொழில்துறை சார்ந்த நிபுணர்களினால் நிகழ் நிலை (Virtual) ஊடாக பயிற்றுவிப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தலும், சுய முயற்சியாளர்களை ஊக்குவித்தலும் தோட்டத்துறைகளில் தொழிலதிபர்களையும் எதிர்கால முன்மாதிரிகளையும் என்னிலிருந்து கொண்டு செல்ல எத்தனிப்பதாகவும், இதற்காக சமூக அக்கறையும், ஆர்வமும மற்றும், திறமையும் கூடிய 15ற்கும் மேற்பட்ட மலையக இளைஞர்களைக் கொண்டு ஊடகத்துறை, வணிகத்துறை, வடிவமைப்புத்துறை, மென்பொருள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் என்பவற்றுடன் ஓவியத்துறை ஆகியத் துறைகளைக் கொண்டு இவ் அமைப்பினை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றேன் என கூறுகின்றார்.
மலையகத்தின் மாற்றம் என்பது பல வருடங்களாக கேள்விக்குறியாக இருந்தாலும். இந்த மாற்றத்திக்கான வழி மற்றும், சமூக உயர்விற்க்கும் மனிதன் சமூக பிராணியாக வாழ்வதற்கும் வேறுமனே கல்வி அறிவு மட்டும் தீர்வாகாது.
கல்வியுடன் சேர்ந்த சமூக அறிவும் பகுத்தறியும் தன்மையுமே தேவை. நிச்சயமாக இத்தன்மையினை தனிமனிதன் அடைந்தால், அச்சமூகம் மாற்றத்தையும் உயர்வினையும் அடையும். அந்த உயர்வினை அடைய இந்த புதியமுயற்சி வழிவகுக்கும்.
வெள்ளரிக்காய் கோடைகாலத்தில் சிறந்த உணவாக மட்டுமல்லாமல், உங்கள் எடை குறைப்பிற்கும் எவ்வாறு உதவுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா உடல் பருமனை குறைப்பதற்கு சிரமப்படும் உங்களுக்காக உடனடித் தீர்வு இதோ! நீங்கள் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து தோல்வி அடைந்துள்ளீர்களா? கவலையை விடுங்க. உங்கள் உடலின் எடையை கணிசமாக குறைக்க வெள்ளரிக்காய் உங்களுக்கு உதவும்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை உயர்வு. உடல் எடை அதிகரிப்பே அனைத்து நோய்களுக்கும் அடித்தளமாக அமைகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது.இத்தகைய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்கமுயற்சி செய்யவேண்டும். எனவே உணவுத் தெரிவில் அவதானமாக இருக்க வேண்டும்.
எல்லாத்தரப்பினரும் சாப்பிடக்கூடிய காய்கறி வகைகளுள் ஒன்றாக வெள்ளரிக்காய் உள்ளது. ஏனைய காலங்களை விட கோடை காலங்களில் தான் இது அதிகளவில் கிடைக்கக் கூடியது. வெள்ளரிக்காய் தற்போது பல்வேறுபட்ட மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் வெள்ளரிக்காய் உள்ளது.
வெள்ளரிக்காயின் கலோரி குறைவாக இருப்பதால் உடற்பருமனாக இருக்கும் நீங்கள் தொடர்ச்சியாக வெறும் இரண்டே கிழமை தினசரி உணவில் சேர்த்துக்க கொண்டால் உங்களுக்கான பலன் சிறந்த தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்பதை முதலில் நம்புங்கள்.இலகுவாக குறைந்த விலையில் இருப்பதை விட்டு தேவையற்ற பணங்களை செலவளித்தும் எந்தப் பயனுமில்லை வெறும் ஏமாற்றம் மட்டுமே உங்களுக்கு. கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் நெய்தேடி அலைவது போன்றது தான் உங்களுடைய செயற்பாடு.
எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் உடை எடை கொஞ்சம் கூட குறைந்ததாக இல்லையே என மனதளவில் பாதிக்கப்பட்டு மனஉழைச்சலில் இருக்கும் உங்களுக்கான பதிவு தான் இது! சாதாரண ஒரு வெள்ளரிக்காயில் எப்படி உடல் எடை குறையும் என்ற யோசனையை விட்டுவிடுங்கள் இந்தப் பதிவினை முழுமையாகப் படிக்கும் போது உங்களுக்கான தெளிவு கிடைக்கும்.
வெள்ளரிக்காய் இரண்டு நிறங்களில் சந்தைகளில் இருப்பதை நீங்கள் பார்திருப்பீர்கள். பச்சை வெள்ளை காய்களாக கடைகளில் விற்கப்படும். வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்களை முதலில் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். நீர்க்காய் என்று அழைக்கப்படும் வெள்ளரிக்காய் இரத்தத்தை தூய்மைப்படுத்தி தோலில் பலவகையான நோய்களையும் கட்டுப்படுத்துகின்றது. சூரிய ஒளியினால் உங்கள் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களையும் தடுக்கின்றன. உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.
வெள்ளரிகளில் அதிக நீர்ச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளது. இதில் எடை இழப்புக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை ஏன் சேர்க்க வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் எடை இழப்புக்கான எளிய விதி என்னவென்றால், நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொள்வதன் மூலம் கலோரி பற்றாக்குறையை உடம்பில் உருவாக்குகிறது. வெள்ளரி போன்ற உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் கலோரி பற்றாக்குறையை உருவாக்க உதவுகிறது. ஒருகப் வெட்டப்பட்ட வெள்ளரிக்காயில் 14 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது எடை இழப்பு உணவில் அனுமதிக்கப்பட்ட தினசரி கலோரிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது
ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காயில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது மிகவும் குறைந்த அடர்த்தி கொண்ட உணவாக இருக்கும். இதுபோன்ற உணவுகளை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது எடை இழப்புக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளை நிரப்புகின்றன.
வெள்ளரிக்காய் சாப்பிடுவது வைட்டமின் கே இன் தினசரி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்கு வழங்குகிறது.
இது இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கல்சியம் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன.
வெள்ளரிக்காய் தோல் மற்றும் நமது கூந்தலுக்கு மிக நல்லது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், சருமமும் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால், சருமத்தில் உள்ள கறைகள் மறைந்துவிடும்.
வெள்ளரிக்காய் எல்லாவகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. வெள்ளரிக்காயை சமைக்கக் கூடாது ஏனெனில் அதிலுள்ள பொட்டாசியம் பாஸ்பரஸ் ஆகியவை அழிந்துவிடும். பச்சையாக சாப்பிடுவது மிக நல்லது.கீல்வாதத்தை குணப்படுத்தும் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் உற்சாகமடைந்து சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
பிஞ்சு வெள்ளரிக்காயில் உப்பு மிளகாய்பொடியை தூவி குழந்தைகள் முதல் வயோதிபர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் அதுவும் வெயில் காலங்களில் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையங்களிலும் இதனை தேடாமால் இருக்கும் பயணிகள் மிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்! சுவையுடன் இருக்கும் இந்த வெள்ளரிக்காயில் குறைவான கலோரியே உள்ளது. கண்பார்வை அதிகரிக்க கரட் வெள்ளரிக்காயை நறுக்கி, தயிரில் பச்சடி போல் செய்து சாப்பிடுவது உடலுக்கு அற்புத நன்மைகளை தரும். வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். கண்பார்வை, சருமம் ஆகியவை ஆரோக்கியமாக திகழும். உடல் எடையும் குறையும்.
இவ்வாறான பல எண்ணிடலங்கா நன்மை பயக்கும் வெள்ளரிக்காயானது எப்படி உடல்எடை குறைப்பினை உடனடியாக வெளிப்படுத்துகின்றது என்பதை அவதானியுங்கள்!
முக்கியமாக இரண்டு வகையான தீர்வுகளை கவனத்தில் கொள்ளுங்கள். உடலின் தேவையற்ற கொழுப்பைச் சக்தியாக மாற்றிவிடுவதன் மூலம் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கின்றது. பச்சையாக கடித்து சாப்படுவதன் மூலம் பசிக்கும் தன்மை குறைவடைகின்றது மற்றையது வெள்ளரிக்காயை சாறாக அடித்து வெறும் வயிற்றில் தினசரி குடித்தால் உடற்பருமனுடன் சேர்த்து தொப்பையும் குறைவடையும். எனவே இன்றில் இருந்து எமது தினசரி உணவு வேளையில் வெள்ளரிக்காய் பயன்படுத்துவோம் ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்புவோம்.முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை வாழ்வில் தவறான உணவுமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். செயற்கை உணவுப்பழக்கத்தில் இருந்து முற்றாக விடுபட்டு இயற்கையான வாழ்விற்கு ஒவ்வொருவரும் எம்மைத் தயார்ப்படுத்துவோம். எமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக நாம் வாழ்ந்து காட்டுவோம்…
பிரிந்துசெல்லவேண்டும் என விரும்பிய , அதற்கான தேவை இருந்த நாடுகள்கூட இன்னமும் பிரிந்துசெல்லாத , இன்னமும் யுத்தம் நீடிக்கின்ற நாடுகளுக்கு மத்தியில் உலகவரலாற்றில் எந்தவித போராட்டமும் இன்றி மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு நாடு தனியாக பிரிந்தது ! தங்களுக்கு ஒரு வெட்டிச் சுமை என கருதப்பட்டு மலேசியாவால் அப்படி கழட்டிவிடப்பட்ட நாடு எது தெரியுமா ? ஒருகாலத்தில், இலங்கையைப்போல் தாமும் முன்னேறவேண்டும் என கூறியதாக சொல்லப்படும் சிங்கப்பூர் .. இன்றைய நிலவரப்படிப்பார்த்தால் இலங்கை அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் பலவிடயங்களில் அபிவிருத்தியடைந்திருக்கும் சிங்கப்பூர் அந்த நிலையினை அடைய சந்தித்த இன்னல்களோ ஏராளம் .
1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16 பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்துவிடுபட்ட சிங்கப்பூர் மீண்டும் மலேசியாவுடன் இணைக்கப்பட்டது . அப்போது மலேசியா மலாயா என்கிற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் மலாயா , சபா , ஷ்ரவக், சிங்கப்பூர் ஆகிய நான்கும் இணைந்து மலேசியா என்கிற பெயரில் புதிய எல்லைகள் , பலதரப்பட்ட இனமக்களைக்கொண்ட நாடாக உருவாகியது .
ஒப்பீட்டளவில் மலாய் மக்களுக்கு அதிக சலுகை கொடுத்தமை சீனர்களை அதிகமாகக்கொண்ட சிங்கப்பூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது . மலாய் மக்களுக்கு கொடுப்பதுபோலவே சமஉரிமை தங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திவந்தனர் சீனர்கள் . இதனால் இருதரப்பினருக்கிடையேயும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதுடன் , சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது . இவற்றை எதிர்த்து 1964இல் இனக்கலவரங்கள் ஏற்பட்டன . முகம்மது நபியின் பிறந்தநாளன்று சிங்கப்பூரில் உள்ள “பத்தாம் ” என்கிற பகுதியிலிருந்து “கோலான்” என்கிற பகுதியை நோக்கி ஓர் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது . அப்போது ஏற்பட்ட ஓர் சிறு பிரச்சினை மிகப்பெரிய கலவரமாக உருப்பெற்றது . சட்ட ஒழுங்கு பிரச்சினை இனக்கலவரமாக மாறியது . அதன்பின் அடிக்கடி கலவரம் வெடிக்கத்தொடங்கவே இதற்கெல்லாம் காரணம் இந்தோனேஷியாவும் , கம்யூனிஸ்டுக்களும்தான் எனக்கருத்திய அப்போதைய மலேசியா துணைப்பிரதமர் துன்அப்துல் ரசாக் மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை பிரித்துவிட்டுவிட வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கினார் . எனினும் மலேசியாவுடன் இனைந்து இருப்பதையேசிங்கப்பூர் விரும்புவதாக அப்போதைய சிங்கப்பூரின் தலைவர் லீ குவான் யூ அறிவித்தார் . ஆனால் , மலேசியா பிரதமர் துவ்வுரு அப்துல்ரஹ்மான் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரை கழட்டிவிடுவதில் விடாப்பிடியாக இருந்தார் .சிங்கப்பூர் தங்களுக்கு ஒரு வெட்டிசுமை எனக்கருத்திய மலேசியா , அதற்கான வாக்கெடுப்பை நடத்தியது . சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல்போக , மலேசியா வென்றது .
மலேசியாவுக்கு நாடுபிடிக்கும் ஆசை இல்லை என்பதைவிட சிங்கப்பூர் என்கிற குப்பைத்தொட்டியை கழட்டிவிட நினைத்தது என்பதே உண்மை . அந்த அளவிற்கு பின்தங்கியிருந்தது சிங்கப்பூர் . லீகுவான்யூ சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருப்பதை விரும்பியமைக்கு காரணம் இல்லாமல் இல்லை . சிங்கப்பூர் மிகவும் சிறிய பகுதி அதனைச் சுற்றி அறுபத்துமூன்று தீவுகள் . மொத்தமே 716 சதுரகிலோமீற்றர் பரப்பளவுதான் . மீன் பிடிப்பதைத்தவிர அங்கு எதுவும் கிடையாது . இயற்கை வளங்கள் குறைவு தண்ணீரே மலேசியாவில் இருந்துதான் வரவேண்டும் , தொழிலும் வணிகமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை மொழியால் , இனத்தால் ,பண்பாட்டால் வேறுபட்ட சீனர்களையும், மலேசியர்களையும் , இந்தியர்களையும் உள்ளடக்கிய நாடு . இனக்கலவரங்கள் தொட்டால் பற்றிக்கொள்ளும் நிலையில் இருந்தது . அண்டை நாடுகளான மலேசியாவுடனும் இந்தோனேசியாவுடனும் நல்லுறவு இருக்கவில்லை . குப்பைகள் நிறைந்த தெருக்கள் , போதிய கல்வியறிவில்லாத மக்கள் , வேலையில்லாத்திண்டாட்டம் போன்ற பிரச்சினைகள் நிறைந்த ஒரு நரகத்தை நாடாக மாற்றவேண்டிய மிகப்பெரிய சவால் லீயின்முன் இருந்தது .
வேறுவழியில்லை செயற்படத்தொடங்கினார் லீ . சிங்கப்பூர் தனிநாடாக பிரிந்ததும் முதலில் எதிர்பார்த்தது சர்வதேச அங்கீகாரத்தைத்தான் . 1965ல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்ததுடன் , மலேசியா தாய்லாந்து உள்ளிட்ட நான்கு தென்கிழக்கு நாடுகளையும் சேர்த்து “association of southeast Asian nations” எனும் அமைப்பினை உருவாக்கியது . உலகத்தரமான பொருளாதார வளர்ச்சி , தூய்மையான நகரம் , ஊழலற்ற ஆட்சி , அடிப்படைத் தேவைகள் நிறைவுபெற்ற வாழ்க்கை , வேறென்ன வேண்டும் குடிமக்களுக்கு என்பதுதான் ஆளுகை குறித்த லீயின் கருத்தாக இருந்தது .
தேசிய பாதுகாப்பு , மக்கள் கட்டுப்பாடு , பொருளாதாரம் , நீர் ஆதாரங்களை சீரமைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்திய லீ முதலில் சிங்கப்பூர் ராணுவத்தை உருவாக்கினார் . அவர்களுக்கான பயிற்சி வளங்களுக்கு இஸ்ரேல் மற்றும் தாய்வான் போன்ற நாடுகளின் உதவி கிடைக்கப்பெற்றது . ராணுவத்திற்கு வலுசேர்க்க 18 வயது நிரம்பிய ஆண்கள் ராணுவத்தில் கட்டாயமாக இரண்டுவருடங்கள் பணிபுரியவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது . சிங்கப்பூர் பிரிந்தபோது அதனிடமிருந்து சுற்றுலாத்துறை மட்டுமே எனினும் அதில் போதிய வருமானம் வரவில்லை . எனவே பொருளாதாரத்தில் உயரவேண்டுமெனில் தொழிற்சாலைகள் அவசியம் டச்சு பொருளாதார வல்லுனரின் ஆலோசனையின்படி பொருளாதாரக்கொள்கைகள் வகுக்கப்பட்டு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன . அதன்பின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும்பொருட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது . மின் பொருட்களை உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக சிங்கப்பூர் உருவாகத்தொடங்கியது . கடல்மார்க்கத்தினை பொறுத்தவரையில் சிங்கப்பூர் இன்றியமையாதது .இதன் பூகோள அமைவு மேற்குலக நாடுகளுக்கு அவசியமாகவே, முதலீடுகள் குவிந்தன . சிங்கப்பூர் துறைமுகம் சிங்கப்பூரை ஒரு சுவர்க்கபுரியாக மாற்ற உதவியது .
குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின்மூலம் மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் அதற்குப்பின் அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்படவேண்டும் , மூன்றாவது நான்காவது குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் குறைக்கப்பட்டு . இரண்டாவது குழந்தைப்பேற்றுக்கு தனிவிடுமுறை கிடையாது ,மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் ஒருவருடத்திற்கு சம்பள உயர்வு மற்றும் ஊக்குவிப்புத் தொகை கொடுக்கப்படமாட்டாது இரண்டுக்குமேல் குழந்தைகளைக்கொண்ட நபர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளை வகிக்க முடியாது , போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன .
உடல்ரீதியான தண்டனை வழங்கும் வெகுசில நாடுகளில் சிங்கப்பூரும் ஓன்று . லீயின் முன்னிருந்த மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் ! மலேசியா தண்ணீர் விலையை உயர்த்துவது அல்லது தண்ணீர் கொடுப்பதை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட, மாற்று ஏற்பாடாக கழிவுநீர் மறுசுழற்சிமுறை, நிலத்தடிக்குழாய்களின் மூலம் மழை நீர் சேகரிப்புத்திட்டம் போன்றவை ஏற்படுத்தப்பட்டது .
இன்று ஊழல்குறைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது . தொழில்முதலீடுகள் குவிகின்றன அங்கே , உலக நீடுகளின் முக்கியமான சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது குற்றங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகம் , சிங்கப்பூரில் சேரிகள் கிடையாது . 88% அதிகமானோருக்கு சொந்தவீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது . அண்ணளவாக 55 லட்சம் மக்களைக்கொண்ட சிங்கப்பூரில் உலகிலேயே அதிகமான கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் ,உலகிலேயே வரியில்லா சுவர்க்கம்என்றால் அது சிங்கப்பூர் தான்.
இலங்கையானது தற்போது மிகவும் நெருக்கடியான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. முழு உலகையும் ஆக்கிரமித்த கொரோனா நோய் தொற்றின் காரணமாக இலங்கை நாட்டின் பொருளாதாரமானது பாரியதொரு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது.
இக்காலகட்டத்தில் நோய் பரவலின் மூலம் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாகவும், நோயினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு சட்டங்கள் காரணமாகவும் இலங்கையின் பிரதான வருமான மூலங்களான உள்நாட்டு உற்பத்திகள் பாதிப்படைந்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்து பணவீக்க நிலையும் தோன்றியது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில் பணவீக்கம் மேலும் அதிகரித்து இலங்கை பணவீக்கம் நிலவுகின்ற நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மோசடிகள் காரணமாக நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து இறக்குமதி பொருட்களான பால்மா, மருந்துப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதால், அப்பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறையானது பாரியதொரு சவாலாக மக்களை அச்சுறுத்தி வருகின்றது.
இதில் எரிபொருள் பற்றாக்குறையை பிரதான பிரச்சினையாக குறிப்பிட முடியும். ஏனேனில் போக்குவரத்து, விநியோக சேவைகள், மின்சார உற்பத்தி மற்றும் மண்ணெண்ணெய் உற்பத்தி போன்ற பல தேவைகளுக்கான பிரதான உள்ளீடாக எரிபொருள் காணப்படுகிறது.
மேலும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் அத்தியாவசிய சேவைகளான கல்வி, கல்வி போன்ற பல துறைகள் பல இன்னல்களை சந்தித்து வருவதுடன் தொடர்ச்சியான மின்வெட்டும் நிலவி வருகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:
“கடந்த காலங்களில் ஒரு வாரத்திற்கான டீசல் தேவை 5500 மெட்ரிக் டன் ஆக இருந்தது, தற்போது இது 8000 மெட்ரிக் டன் ஆக அதிகரித்துள்ளது. பெற்றோலுக்கான தேவையும் 3000 மெட்ரிக் டன் இலிருந்து 4500 மெட்ரிக் டன் ஆக அதிகரித்துள்ளது. மேலும் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர் பற்றாக்குறை நிலவுவதால் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகிறோம் “ எனவே இலங்கை நாடானது எரிபொருள் பற்றாக்குறையினால் முடங்கிப் போயுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையும் கல்வித் துறையும்
அந்த வகையில் கல்வித் துறையில் எரிபொருள் பற்றாக்குறையானது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக வீழ்ச்சியடைந்த கல்வி நடவடிக்கைகளை மீள கட்டியெழுப்புவதில் இந்நிலை எதிர்மறையான தாக்கங்களை செலுத்தி வருகின்றது. தினசரி பாடசாலைக்கு வரும் மாணவ – ஆசிரியர்களின் வரவில் வீழ்ச்சி நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வரவின்மைக்கான காரணங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் சவால்கள்
1) பெற்றோர்
பெரும்பாலான பெற்றோர்கள் வாகனங்களிலேயே தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் தினசரி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் தொடர்ச்சியாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாக பெற்றோர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தந்தையொருவர் “நான் ஒரு முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரிந்து வருகிறேன். பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக நான் எனது வாழ்வாதாரத்தை இழந்து, உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனது இரு பிள்ளைகளையும் நான் எவ்வாறு பாடசாலைக்கு அழைத்துச் செல்வேன், இவ்விடயத்தில் நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறேன்”* என்றவாறு தன் நிலையை விவரிக்கிறார்.
எனவே ஒரு வேளை உணவைக் கூட தன் பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் பெற்றோர்களுக்கான தீர்வு என்ன???
2) மாணவர்கள்
மாணவர்கள் பெற்றொருடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் மூலம் பாடசாலைக்கு வருகை தருகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளிப்பதில் பல சிக்கலகளை எதிர்நோக்கி வருகின்றனர். இருப்பினும் பாடசாலைக்கு நடந்து வரக் கூடிய பல மாணவர்களை காணக் கூடியதாக இருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர்கள்:
மாணவர் 1
“கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் இப்பிரச்சினை தோன்றியுள்ளது. தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் மாணவர்களாகிய எம் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது”
மாணவர் 2
“நான் பாடசாலைக்கு பல கிலோமீட்டர்கள் நண்பர்களுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பாடசாலையை சென்றடைந்ததும் சோர்வாக உணர்கிறேன், கல்வி நடவடிக்கைகளில் சிறந்த முறையில் ஈடுபட முடியாமல் உள்ளது” இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர்கள் முறையான கல்வியை பெற்றுக் கொள்வது கேள்விக் குறியாகியுள்ளது.
3) ஆசிரியர்கள்
கல்விச் சேவையின் பிரதான தூண்களே ஆசிரியர்கள். அந்த வகையில் நிலையான மற்றும் பயனுறுதிமிக்க கல்வியை தொடர்ச்சியாக வழங்குவது ஆசிரியர்களின் கடமையாகும்.
இவ்விடயத்தில் கருத்து தெரிவித்த ஆசிரியர்கள்:
1) ஆசிரியர், யாழ்ப்பாண மாவட்டம்
“கல்வியை தடையின்றி தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வது ஒவ்வொரு மாணவரினதும் உரிமையாகும். இதற்காகவே இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலையில் என்னால் தொடர்ந்து பாடசாலைக்கு வர முடிவதில்லை. எரிபொருள் வரிசையில் நிற்பதா? பாடசாலை செல்வதா? அப்படி செல்வதாயின் எவ்வாறு செல்வது? என பல கேள்விகள் எமக்கு இருக்கின்றன. முறையான தீர்வொன்றை விரைவாக வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்”
2) ஆசிரியர், கிளிநொச்சி மாவட்டம்
“நான் பாடசாலையில் லீவு பெற்றுக் கொண்டு பெற்றோல் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனது பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்ப வழியில்லை. மாணவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது, கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் பெற்றோர் தொழிலுக்கு செல்லாத காரணத்தால் உணவுத் தேவையை பூர்த்தியை செய்ய முடியாத மாணவர்களும் இருக்கின்றனர். எரிபொருள் தேவையை முறையாக பூர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்”
ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாக காணப்படும் காலகட்டத்தில் விரைவாக தீர்வு காணப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
3) உள்ளகப் பயிற்சி ஆசிரியர்கள்
கல்வியியற் கல்லூரிகளில் கல்வியை பூர்த்தி செய்து உள்ளகப் பயிற்சியை மேற்கொள்ளும் ஆசிரியர்களும் எரிபொருள் பற்றாக்குறையால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எரிபொருள் பற்றாக்குறையுடன் அதிகரித்த வாழ்க்கை செலவுகள், போக்குவரத்து செலவுகள் இவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளகப் பயிற்சி ஆசிரியர்கள்:
உள்ளகப் பயிற்சி ஆசிரியர், யாழ் மாவட்டம்
“எமக்கு அரசாங்கத்தினால் மாதாந்த கொடுப்பனவாக ரூ.4950 மாத்திரமே வழங்கப்படுகிறது. இவ்வாறான காலகட்டத்தில் எரிபொருள் விலையேற்றம், பற்றாக்குறை காரணமாக அதிகரித்த வாழ்க்கை செலவுகள் மற்றும் பாடசாலையை சென்றடைவதில் ஏற்படும் சிரமங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளது”
உள்ளகப் பயிற்சி ஆசிரியர், வவுனியா மாவட்டம்
“நான் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பணி புரிகின்றேன். எமது அதிபர் நாட்டு நிலைமையை கருத்தில் கொள்ளாமல் எம்மை கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு வரச் சொல்கின்றனர். கல்வியியற் கல்லூரி நிர்வாகம் இது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கமோ, அதிகாரிகளோ இது பற்றி பேசவில்லை. எனது பெற்றோரால் செலவுகளை ஈடு செய்ய முடியவில்லை. நான் பலமுறை தற்கொலை முயற்சி செய்து தோற்றுப் போனேன்”
மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மன உளைச்சலுடன் பணி புரியும் இவ் ஆசிரியர்களுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
மேலும் இவ்விடயத்தில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம்:
“எரிபொருளானது அனைத்து தேவைகளுக்கும் பிரதானமாக வழிவகுக்கின்றது. அதிகரித்த போக்குவரத்து கட்டணங்களை எவராலும் ஈடு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்கள் எவ்வாறு கல்வியை பெற்றுக் கொள்வது????”
இவ்வாறாக ஒவ்வொரு தனிமனிதனும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளான். இப்பிரச்சினை தீர்க்கப்படும் பட்சத்தில் பலர் நன்மை அடைவார்கள்.
தீர்வு என்ன?
அரசாங்கம் விரைவாக செயற்பட்டு இந்நிலையை சீராக்க வேண்டும். மாணவர்கள் முறையான கல்வியை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலையும், ஆசிரியர்கள் சங்கடங்களை தவிர்த்து சிறப்பாக பணிபுரியக் கூடிய சூழலையும் விரைவில் உருவாக்க வேண்டும்.
இதற்காக பின்வரும் கோரிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைக்கின்றது,
• நாட்டு நிலைமை சீராகும் வரை பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆசிரியர்கள் – மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
• அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கவும், பணி புரியவும் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் முன்வருவார்களா என்பது கேள்விக் குறியே!
அம்மா உதிரத்தால் உயிர் கொடுத்தவர். அப்பா உயிரணுவால் உயிர் கொடுத்தவர். பிள்ளையை பத்து மாதங்கள் கருவறையில் சுமப்பவர் தாயென்றால் தாயையும் சேர்த்து தன் மார்பில் ஆயுள் வரை சுமப்பவர் தந்தையாகத்தான் இருக்கமுடியும். தாயின் அன்பு அரவணைப்பில் தெரியும். தந்தையின் அன்பு அதட்டும் போதில்தான் தெரியும். அப்பா என்ற உறவின் அருமை எப்போது புரியும் தெரியுமா? அவர் கைபிடித்து நாம் நடந்து நம் குழந்தைப்பருவமும் கடந்து அவர் தோள் பிடித்து நாம் நடந்து நம் இளமைப்பருவமும் கடந்து அவருக்கு முதுமைவரும்போது அவர் தோள்களை நாம் தாங்கிக்கொண்டு நடந்து போகையில் திடீரென்று நம்மை சுமந்த தந்தை நம்மை விட்டு போகும்போது ஒரு சுமை தோன்றுமல்லவா? அப்போது புரியும் அப்பா என்றால் யார் என்று.. உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து அந்த குழந்தையை நீங்களும் வளர்க்கும்போது அவன் வளர்ந்து பெரியவனாகும் போது அப்போது புரியும் உங்களுக்கு அப்பா என்றால் யார் என்று.. அப்பாவை யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் அந்த சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றது என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள். அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம், கண்டிப்பு, பாதுகாப்பு, கரிசணை, உழைப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்பா என்றால் உண்மையிலேயே யார்? என்பதை ஒரு வீடியோ பதிவு எனக்கு உணர்த்தியது. அப்பாவை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது என் நியாபகத்திற்கு வருகிறது, என் மனதையே உருக்கிய அந்த 2 நிமிட ஈரான் அனிமேஷன் குறும்படம் தான். அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். ‘In the Name of God’ என்று முழுமையடையாத வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறது அந்த கதை. வானத்தின் மேகமூட்டங்கள் கருமுகில்களால் சூழ்ந்துகிடக்க பலத்த காற்றோடு அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. ஒரு வயரில் உடையொன்று காயவிடப்பட்டுள்ளது. அந்த உடை ஒரு பெரிய நீள் சட்டைப்போலத் தெரிகிறது. அந்த சட்டை அந்த வயரில் இரு க்ளிப்களின் உதவியோடு தொங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது காற்று இன்னும் பலமாக வீச அந்த நீள் சட்டை கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு வீசும் காற்றிலிருந்து பறக்காமல் இருக்க தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் அந்த காற்றில் பல ஆடைகள் பறந்துகொண்டிருக்கின்றன. காற்று இன்னும் சுழன்றுகொண்டு பலமாக வீசுகையில் அந்த நீள் சட்டையை தாங்கிக்கொண்டிருந்த க்ளிப்களில் ஒன்று கழன்று விழுந்துவிட்டது. இப்போது அந்த நீள் சட்டையின் ஒரு கை தட்டுத்தடுமாறி அந்த வயரை பிடித்துக்கொண்டிருக்கின்றது. வேறெங்கிருந்தோ பறந்து வரும் ஆடைகள் நீள்சட்டையை கடந்து போகின்றன. அப்படியே அந்த காட்சி முடிவடைய மழை ஓய்ந்து முகில்களுக்கிடையிலிருந்த சூரியன் வெளியேவர கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சமும் வர ஆரம்பித்தது. இரு பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருக்க இப்போது அந்த நீள் சட்டையிலிருந்து ஒழுகும் தண்ணீர் துளிகளின் சத்தம் கேட்கிறது. கடும்புயலில் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்த அந்த நீள்சட்டை அடைமழையில் நனைந்து உறைந்துபோனதால் அச்சட்டையின் கை பக்கங்கள் நடுங்க ஆரம்பித்தன..
இந்த கதையின் இறுதிகட்டத்தை நான் சொல்லப்போவதில்லை. நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். (https://youtu.be/fUR5ks-t9TI) இந்த குறும்படத்தின் கடைசி சில நிமிடங்கள் நிச்சயம் உங்களை உறையவைத்துவிடும். நான் கூறியதைப்போல இந்த கதை ஆரம்பிப்பதற்கு முன்னரே ‘ஐn வாந யேஅந ழுக புழன’ என்று ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் ‘குயவாநச’ என்று போடப்பட்டு அந்த கதை முழுமையடைகிறது. ஆம். அப்பா தான் நாம் கண்கூட பார்க்கும் கடவுள். வேண்டும் வரத்தை தருபவர் கடவுள் என்றால் நாம் வேண்டாமலே நமக்கு வேண்டியதை தருபவர் நம் அப்பா தானே? அப்படியென்றால் கேட்டும் கேட்காதவர் போல் அந்த கோயிலிலிருக்கும் இறைவனுக்கா அல்லது கேட்காமலேயே நமக்கு அனைத்தையும் பெற்றுத்தரும் வீட்டில் வசிக்கும் தெய்வத்திற்கா முதல் வணக்கம் என்று நீங்களே சிந்தியுங்கள்.
இதைத்தான் நா.முத்துக்குமார்; ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே’ என்று தம் பாடல்வரிகளில் கூறுகிறார். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அப்பாக்கள் கடவுள் என்றால்,ஒவ்வொரு அப்பாக்களுக்கும் தம் மழலைகள் தான் பொக்கிஷங்கள். ஒரு அப்பா தம் மழலைகளை எப்படி காதலிப்பார் என்பதை கவிஞர் நா.முத்துக்குமாரின் ‘மகனுக்கு எழுதிய கடிதம்’ என்ற கடிதமானது வெளிப்படுத்துகிறது. இறப்பதற்கு முன் அவருடைய மகனுக்கு அவர் எழுதிய கடிதமானது அவர் இறந்த பின்பு தான் இன்னும் பிரபலமாகியது. நா.முத்துக்குமார் எழுதிய கடிதத்தில் அவருடைய தந்தையின் அருமையையும் தன்னுடைய மகனுக்கு தானொரு தந்தையாய் காட்டும் அன்பையும் ஒவ்வொரு தந்தையின் சார்பாகவும் எடுத்துகாட்டுகிறார். ஒரு தந்தை எப்படி தம் மக்களுக்கு அன்பு காட்டுவார்,அறிவுரை கூறுவார் என்பதை அழகாக வடித்துக்கொடுக்கிறார். அதில் சிலவற்றை இங்கே நான் பதிவிட விரும்புகிறேன்.
அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது, இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்தப் புரிந்துக்கொள்ளும் வயதில் நீ இல்லை உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க.., மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள், என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை, குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை, கண்ணிர் மல்கப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாடினாய். தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். என் செல்லமே இந்த உலகம் இப்படித்தான். அழ வேண்டும் , சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்த்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டம். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும். என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும்வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான். என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய். கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் வீட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்துகொண்டே இருக்கும். அதற்கு பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறி கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்கக் கோடைக்காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு. கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய். யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். உறவுகளிடம் நெருங்கியும் இரு விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்கள் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும். இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்குச் சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய். நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்..!
இவ்வாறு ஒரு தந்தையின் பெருமையையும் அருமையையும் எடுத்துக்காட்டுகிறார் அந்தவொரு கடிதத்தில். அப்பாக்கள் என்றாலே எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி அன்பு காட்டுபவர்கள். தந்தையின் வருமானத்தில் செலவு செய்யும் பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரமானது தம் பிள்ளைகளுடைய வருமானத்தில் செலவு செய்ய எந்த தந்தைக்கும் இருக்காது. அவர் எதிர்பார்த்து எதுவும் செய்வதில்லை. தனது பிள்ளைகளையும், மனைவியையும் காப்பது தன்னுடைய கடமை என்று வாழ்ந்துக்கொண்டிருப்பவர்.
நாம் பிறந்ததிலிருந்து நாம் வளரும் வரை வேர்வை சிந்தி உழைக்கின்றார் அப்பா. நாம் வளர்ந்ததும் அவரிடம் ‘நீங்கள் என்ன செய்தீர்கள் எனக்கு?’ என்று அவர் மனம் நோக கேட்கிறோம். நமக்கு நடக்க கற்றுக்கொடுத்து நம் வாழ்வின் வழிகாட்டியாய் இவ்வளவு தூரம் நம்மோடு பயணித்து நம்மை கரை சேர்த்த தந்தைக்கு இறுதியில் கிடைப்பது அவமானமும்,ஏமாற்றமும்,பிரிவும் என்றால் பாடுபட்டு தம் மக்களை பெற்றெடுத்து ஆளாக்கியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. தாயின் தாலாட்டின் அருமை அவள் மடியில் தலைசாய்ந்து உறங்கையில் விளங்கும். தந்தையின் தாலாட்டின் அருமை அவர் மார்பில் சாய்ந்து உறங்கையில் விளங்கும். தாயைப் போலவே உங்கள் தந்தையையும் நேசியுங்கள்.
அருகிலிருக்கும் போது அரவணைக்காத தந்தையை அருகிலில்லையென்று பிறகு எண்ணி கவலைக்கொள்வதில் அர்த்தமில்லை. அரவணைக்க பிள்ளைகள் இருந்தும் அனாதையாய் பெற்றெடுத்தவர்களை இல்லங்களில் சேர்க்க எப்படி மனம் வருகிறது. ஒவ்வொருவருமே பெற்றோர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். அம்மா, அப்பா இல்லாதவர்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். ஒவ்வொருவரும் தம் தாய், தந்தையரை நேசித்தால் இங்கு முதியோர் இல்லங்களே இருக்காது. முதியோர் இல்லங்களில் வசிக்கும் ஒவ்வொரு தாய், தந்தையரும் நினைப்பது என்ன தெரியுமா? கடவுளே! என் மகனுக்கு மட்டும் இந்த நிலைமை வரக்கூடாது என்பது தான்.
ஆகவே அம்மா,அப்பாவிடம் அன்பு காட்டுங்கள். அவர்களை வெறுத்து ஒதுக்காதீர்கள். அவர்களுடைய இடத்திற்கு ஒரு நாள் நீங்கள் வரும்போது தான் அவர்களுடைய உன்னதமான நிலையை புரிந்துகொள்வீர்கள். எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று கூறினாலும் கூட அப்பாவைப் போல யாருமே இருக்கமுடியாது. தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண், பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. காலம் உருண்டோடினாலும் இந்த பாலின பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவர்களுக்கென வகுக்கப்பட்ட பண்புகள், குணாதிசயங்கள் என்பவையே சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகவே காணமுடிகிறது. பாலினம் என்பது மனிதன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட செயற்கை பிரிவாகும். இருபாலாரும் ஒத்த பண்புகளையும், வேலைகளையும் சட்ட திட்டங்களையும் வரையறுத்துக் கொள்வதற்க்கான உரிமை உண்டு.
சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஆண்மை, பெண்மை என்ற கருத்துருவங்களின் அடிப்படையில் ஆணும், பெண்ணும் சரிசமமாக உடலளவில் படைக்கப்படவில்லை. அவர்கள் உடல்ரீதியாக வேறுபட்டவர்களாக காணப்படுகிறார்களே தவிர உள ரீதியாக வேறுபடவில்லை. மனிதர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவருக்குமான எண்ணங்களும் சிந்தனைகளும் வேறுபடலாம் ஆனால் ஆண், பெண் இரு பாலாரும் அவர்களுக்கென வகுக்கப்பட்ட இயல்பு நிலையிலேயே காணப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாகும்.
வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பொம்மை மற்றும் சமையலறை பொருட்களையும் ஆண்குழந்தைகளுக்கு இராணுவ ரீதியான மற்றும் கட்டட பொருட்களையும் வாங்கி பரிசளிப்பதில் இருந்தே பாலின பாகுபாடு தொடங்குகிறது. இவ்வாறு குடும்பங்களில் வளர்க்கப்படுகின்ற பெண்களே பிற்காலத்தில் சமயலறைகளில் முடங்கி விடுகின்றனர்.
ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்றும் பெண் பிள்ளைகள் அதிகமாக சிரிக்க கூடாது என்றும் அவர்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதோடு, கோபம் ஆணுக்கு உரியது என்றும் பொறுமை பெண்ணுக்கு உரியது என்றும் அவர்களது குணாதிசயங்களையும் வரையறுக்கின்றனர். ‘ஏய் பொம்பிளப்பிள்ளையா? அடக்க ஒடுக்கமா இருக்க பார். என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு அங்காள பக்கத்து வீட்டுக்காரர் என்ன நினைப்பினம், வெட்கமில்லை சிரித்துக் கொண்டு இருக்க. அவனும் தானே சேர்ந்து சிரித்தவன் அவன விட்டு எப்ப பார்த்தாலும் என்னை திட்டுங்கோ. அவன் ஆம்பிளப்பிள்ள. என்ன செய்தாலும் ஒருத்தரும் ஒன்றும் கேட்காயினம். அவன் ராசா மாதிரி என்னென்டாலும் செய்திட்டுப் போறான் நீ ஏன் அவனை பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நாளை பின்ன நீ விற்க வேண்டிய பிள்ளை இன்னொரு வீட்டுக்கு போய் வாழோனும் ஆராச்சும் உன்னைப் பற்றி ஏதும் தப்பா சொல்லிப்போட்டா காலத்திற்கும் வீட்டோட தான் கிடக்கோனும். பார்த்து சூதனமா நடந்து கொள்’ என்று தம்பி சிரித்துக் கொண்டே தன் சட்டை கொலரை தூக்கி விடுகிறான். தம்பி கூறிய பகிடிக்கு அக்காவிற்கு வாய்விட்டு சிரிக்கக் கூட முடியவில்லை. இவ்வாறு தான் பெண்களின் நிலைமை காணப்படுகின்றது.
தன் உடன் பிறப்புகளுடன் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என வரையறுத்து பெண்ணின் நிலைமையானது கணவனின் கட்டுப்பாட்டுக்குள்ளேயும் இவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்ற நிலையிலேயே அவளது திருமண வாழ்க்கையும் அவளை ஒடுக்குகின்றது. குடும்பத்தின் தலைவன் கணவனாக இருக்கலாம். மாறாக மனைவியின் உரிமைகள் மறுக்கப்படுவதாகாது. அவளுக்கான சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்ப வாழ்வில் இவ்வாறு நெரிசல்களுடன் வாழும் பெண்ணின் நிலையானது சமூக மட்டத்தில் எவ்வாறு காணப்படும் என்பதை ஒரு கனம் சிந்திக்க வேண்டியுள்ளது.
குடும்ப உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியும், துணிவுடனும் பெண்ணானவள் காணப்படுவதுடன் தனது இல்லற வாழ்க்கையில் கணவனை முதன்மைப்படுத்தியும், கணவன் இல்லாத இறந்த பட்சத்தில் அவளினதும், அவள் குழந்தைகளின் நலனுக்காகவும் அவள் மறுமணம் செய்து கொள்வதற்கும், வெளியில் சென்று தொழில் புரிவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும், தொழில் புரியும் மனைவிமார்களையும், பெண்களையும் ஆண்கள் எந்த காரணமுமின்றி இடை நிறுத்தாது அவர்களை தொழில் புரிய வைக்க வேண்டும். ஆனால், பெண் தனக்கான பொறுப்புகள் எவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதுடன் ஆண் தனக்கான பொறுப்புகளையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
மேலும், பொது இடங்களில் பெண்களுக்கு சுயமாக நடமாட முடியாது. சமூக மட்டத்தில் களமிறங்க வேண்டிய கட்டத்தில் பெண்ணுக்கு இவ்வாறான சிக்கல்கள் காணப்படுகின்றன. தனியாக ஒரு பெண் வீதியில் உலாவினால் அவளை குறை கூறும் சமுதாயமே இன்று வளர்க்கப்படுகின்றது. பெண்ணின் பின்னால் கேலி செய்யும் வண்ணம் இரண்டு மூன்று ஆண்கள் அவளை பின் தொடர்ந்து செல்வதையே சமூகம் வரவேற்கிறது. இந்நிலைமை மாற வேண்டும்.
சைக்கிள் ஓட்டுவதும், போட்டிகளில் கலந்து கொள்வதும், விளையாட்டுக்களில் ஈடுபடுவதுமென பெண்களுக்குத் தடைவிதித்ததையும் தாண்டி இன்றைய சமூக மட்டத்தில் அவற்றில் ஆண்களைவிட பெண்களே அதிக முன்னேற்றத்தில் சாதனையும் படைத்துள்ளனர். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற பாரதியாரின் சாதனை செய்யும் இன்றைய காலகட்டத்தில் பொருந்தும் வாசக குறிப்பாக காணப்படுகின்றது.
உலக சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதி கூடியவர்களாக காணப்படுகின்றனர். கல்வியிலும் உயரிய வளர்ச்சி பெண்களிடமே தங்கியுள்ளது.
அவர்களது கல்வி வளர்ச்சி முன்னேற்றத்தினால் இன்றைய பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளிலும் கால் பதித்துள்ளனர். உலக சாதனை வரலாற்றில் பெண்களின் சாதனையை எடுத்தியம்புவதற்கு முதலாவதாக விண்வெளிக்குச் சென்று திறமையை வெளிக்கொணர்ந்த கல்பனா சௌலாவையும், இலங்கையின் முதல் பெண் பிரதமராக பணியாற்றிய சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் குறிப்பிடுவதோடு, இவ்வாறாக பல பெண்களின் சாதனைகள் மிளிர்ந்து கொண்டே இருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் நிறுவனங்களிலும், பல துறைகளிலும் பெண்கள் தொழில் புரியும் சாதனை பெருகியுள்ளது. சமூகத்தில் நுழைந்த பெண்களின் வரவானது பொருளாதாரத்தையும் முன்னேற்றுவதற்கு பயணித்துள்ளது. பால்நிலை வேறுபாடுகளையும் தாண்டி தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆண், பெண் என்ற இருபாலாரின் பங்களிப்பும் செல்வாக்குச் செலுத்தக் கூடியதொன்றாகும்.
ஆனால், வேலை பார்க்கச் செல்லும் பெண்களை தவறாகவே இன்றைய சமூகம் சித்திரிக்கின்றது. பெண் சுயமாக செயற்படுவதை குறைகூறும் சமுதாயம் அவள் பொருளாதாரத்தை மேம்படுத்த தொழிலுக்கு செல்வதை குறை கூறாமல் விட்டுவிடுமா? இல்லை, ஏனெனில் அவளை ஒரு மோகப் பொருளாகவே பார்க்கும் சமூகம் மாறும் வரை இதனை நிவர்த்தி செய்ய முடியாது.
சமூகத்தில் பெண்கள் வலி குன்றிய நிலை ஒழிக்கப்பட்டு ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது வாழ்வில் அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் பங்கு கொள்ளக் கூடியவர்கள் என்பதை இன்றைய ஆண்களும், பெண்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
எனவே, பால்ரீதியான பாகுபாடுச் சாதியை ஒழிக்க வேண்டுமாயின் அதற்கான முயற்சி ஒரு பிள்ளை பிறந்தது முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் சமூகமயமாக்கல் செயன்முறையின் அமைப்பொழுங்கு மாற்றியமைக்கப்படுமேயானால் பால்நிலை பாகுபாடுகளற்ற, பால்நிலையை மதிக்கக் கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.
செல்லபிராணிகளை வளர்ப்பது என்பது அவற்றுக்கு உணவளிப்பதற்கும் அப்பால் அவற்றுடனான நல்ல பிணைப்பை உருவாக்குவதுமாகும். அவ்வாறு ஏற்படும் பிணைப்பினால் தமது உரிமையாளர்களின் சிறு பிரிவினையும் அவற்றால் தாங்க முடியாதளவு மன அழுத்ததிற்கு ஆளாகி விடும். அது நம்முள்ளும் ஒரு வகையான அழுத்தத்தை கொடுக்கும்.
உங்களது செல்லபிராணிகள் இல்லாமல் உங்களுடைய வெகேஷனுக்கான திட்டங்களை உருவாக்குவது உங்களுக்குள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தான் இலங்கையிலுள்ள செல்லபிராணிகளை அனுமதிக்க கூடிய ஹோட்டல்களின் பட்டியலை தயாரித்துள்ளோம்.
கொழும்பு ஹில்டன்
கொழும்பில் வசிப்பவர்களுக்கு ஹில்டன் ஹோட்டல் புதியதல்ல. அதன் பிரமாண்ட ‘H’ என்ற அமைப்பு இதனை கண்டறிவதற்கான லேன்ட் மார்க்காக உள்ளது. இந்த ஹோட்டல் உங்களது செல்லபிராணிகளையும் அனுமதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? இனி நீங்கள் செல்லும் போது உங்கள் செல்லபிராணிகளையும் அழைத்து செல்லுங்கள்.
இடம் – 200, யூனியன் ப்ளேஸ், கொழும்பு 02
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 011 534 4644
Foozoo Mantra – Lake Gardens
றோயல் கொழும்பு கோல்ப் க்ளப்பிற்க்கு அருகாமையில் அமைந்துள்ள Foozoo ஒரு கெஸ்ட் ஹவுஸ்ஸாகும். இது உங்களது விடுமுறை காலத்தினை தனித்துவமான அனுபவத்தினால் நிரப்பும்.
இடம் – 40/12, லேக் கார்டன்ஸ் ஓப் லேக் ட்ரைவ், கொழும்பு 08
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 076 044 5030
Plumeria Luxury Villas – Udawalawa
இந்த வில்லா உடவலவ தேசிய பூங்காவில் இருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் வசதிகளுடன் கூடிய அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
இடம் – 194/3, மத்யம அதோலுவ, உடவலவ
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 076 305 0918
O2 Villas – Weligama
உங்களுடைய செல்லபிராணிகளுடன் பொழுதினை கழிப்பதற்கான அழகிய மற்றும் பெருமூச்சிழைக்க வைக்கும் அழகிய சூழலுடையது. இங்குள்ள பர்பிக்யூ வசதிகளுடன் கூடிய தோட்டம் மற்றும் மொட்டைமாடி ஆகியன இரண்டு வேறுபட்ட உணர்வுகளை பெற்றுத் தரும்.
இடம் – கால்டரம வத்த, வெலிகம
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 077 729 6051
Roseland Cottages – Bandarawela
அழகிய மலைக்காட்சிகள் சூழப்பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு அற்புதமான உணவகம் மற்றும் சிறப்பான அறை சேவையுடன் உங்கள் செல்லபிராணிகளை அழைத்து செல்வதற்கான அனுமதியும் உண்டு.
இடம் – ரோஸ்லேன்ட் எஸ்டேட், அம்பதண்டேகம, பண்டாரவளை
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 077 333 0950
Beach Wave Hotel – Arugam Bay
அருகம் பே சர்ப் பொயிண்டிற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் நீங்களும் உங்கள் செல்லப்பிராணியும் இணைந்து கடற்கரை அழகில் உங்களது விடுமுறை நாட்களை சிறப்பானதாக கழிக்க முடியும்.
இடம் – வாட்டர் மியூசிக் வீதி, சின்ன உல்லை, அருகம் பே
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 075 273 3380
Highbury Colombo
கொழும்பின் ஹஸ்டல் மற்றும் பஸ்டலை நீங்கள் இழக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கான சிறந்த தெரிவாக கொழும்பின் மத்தியில் அமைந்துள்ள ஹைபரி இருக்கும். இங்கு நீங்கள் உங்களது செல்லபிராணிகளையும் அழைத்து செல்லலாம்.
இடம் – 14, ஸ்கெலிடன் வீதி, கொழும்பு 03
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – USD 10
தொடர்புகளுக்கு – 077 436 6273
Dots Bay House – Dikwella
இங்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல தரப்பட்ட வசதிகளை நீங்களும் உங்கள் செல்லபிராணிகளும் இணைந்து என்ஜோய் செய்யலாம்.
இடம் – ஹிரிகிட்டிய கடற்கரை, திக்வெல்ல
செல்லபிராணிகளுக்கான மேலதிக கட்டணம் – ஒன்றுமில்லை
தொடர்புகளுக்கு – 077 770 0926
உங்களுடைய ப்ரி நண்பனும் நீங்களும் சேர்ந்து விடுமுறை நாட்களை கழிக்கக்கூடிய இடங்கள் பற்றிய பட்டியலில் நாங்கள் ஏதேனும் இடத்தினை குறிப்பிடாதிருந்தால் கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிலர் பேசுவதை கேட்டால் சிரிப்புவரும். சிலரின் செயல்களை பார்த்தால் சிரிப்பு வரும். சிலரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். ஆனால் பேசாமலேயே தன்னுடைய அசைவுகளால் உலகையே சிரிக்கவைத்தவர் இவர். ஊமைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த காலத்தில் ஓசையெழுப்பாமலேயே மக்களை சிரிக்கவைத்து ஊமைப்படங்களுக்கு உயிர்கொடுத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் இவர். தன் உடல் அசைவுகளையும், முகப் பாவனைகளையும் கொண்டு மட்டும் அரங்கையே சிரிக்கவைக்கும் திறமைகொண்ட மாபெரும் கலைஞரும் இவர் தான். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தொகுப்பாளர், திரை, இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என இவர் கால்பதிக்காத துறைகளேயில்லை. கறுப்பு நிற கோர்ட்டு சூட், தலைக்கு மேல் எழும்பி நிற்கும் தொப்பி, கையிலொரு தடி, மூக்கையும் வாயையும் பிரிக்கும் அரை இன்ச் மீசை இவையெல்லாம் தான் ‘டக்கென்று’ இவரை அடையாளம் காணவைக்கிறது. ஆம், ‘உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை’ என்ற தத்துவவரிகளைத் தந்த மாபெரும் கலைஞர் தான் உலகப்புகழ் சார்லி சாப்ளின்.
உலகமே கொண்டாடிய சார்லி சாப்ளினின் உலகம் சோகங்களால் சுழன்றது. பார்ப்பவரை சிரிக்க வைக்கும் அவரின் வாழ்க்கை சிரிப்பை புதைக்கும் துயரங்களால் துரத்தப்பட்டது. வலிகளும், வறுமையுமே இந்த கலைஞரின் ஆரம்ப பயணத்தின் அடிப்படையாய் இருந்தன. இருந்தாலும் முயற்சி, திறமை, புத்திசாலித்தனம், கடின உழைப்பு மூலம் திரையுலகில் உயரத்தை தொட்ட திரைமேதையானார்.
இளமையும் வறுமையும்
1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி. லண்டன் வால்வோர்த் எனும் இடத்தில் ஓர் வறுமைக்குடிலில் சார்லஸ் சாப்ளின் மற்றும் ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் ஒரு மாமேதை குழந்தையாக. அந்த குழந்தைக்கு சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் எனும் இளமைப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அந்த குழந்தை தான் பின்நாளில் சார்லஸ் சாப்ளின் எனும் உலகப்புகழ் பெற்ற கலைஞராக மாறியது.
வறுமை வாழ்வில் கொடுமை. அதிலும் கொடுமை என்ன தெரியுமா? குழந்தைப் பருவத்தில் வறுமைதான். சார்லியின் பெற்றோர் பாடகர்கள். இருவரும் குறைந்த வருமானத்தை பெற்றாலும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடாத்தி வந்தனர். சார்லிக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவருடைய பெயர் சிட்னி. சிட்னி சாப்ளினின் தாயாருக்கும் அவரை கைவிட்டுச்சென்ற முதற்கணவருக்கு பிறந்தவர். எதிர்பார்ப்புகள் நிறைந்த முதல் திருமணம் ஹன்னாவிற்கு ஏமாற்றத்தையே தந்தது. பிறகு சார்லஸை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த காலத்திலேயே சார்லி சாப்ளின் பிறந்தார். சில நாட்கள் உருண்டோடவே சார்லஸ் மதுபழக்கத்திற்கு அடிமையானார். தன் மனைவியையும், பிள்ளைகளையும் மறந்து மதுவிற்கு மயங்கிவிட்டார். இதனால் வீடுவரவேண்டிய காசெல்லாம் வீதியோடு கரைந்துவிட்டது. இரு குழந்தைகள் வாழும் அந்த வீட்டில் வறுமையும் சேர்ந்து குடிபுக ஆரம்பித்தது. அமெரிக்காவிற்கு சென்றால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்று சார்ல்ஸ் அமெரிக்காவிற்கு பறந்தார். வெளிநாடு சென்ற கணவர் பணம் அனுப்புவார் என்ற நம்பிக்கையில் பார்த்துக்கொண்டிருந்த ஹன்னா வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டார். தம் இரு பிள்ளைகளுக்கும் பசியாற்ற மீண்டும் அரங்குகளில் பாடுவதற்கு முடிவுசெய்தார்.
சார்லியின் முதல் மேடை அனுபவம்
ஹன்னா இரவில் தியட்டர்களுக்கு சென்று பாடும்போது சார்லியையும் அழைத்துச்செல்வார். அங்கிருந்தவர்கள் சார்லி சிறுவன் என்பதால் பாடச் சொல்லி ஆடச் சொல்லி கேட்பார்கள். சார்லியும் தயக்கத்தோடும் கூச்சத்தோடும் ஆடி பாடுவான். அவனுடைய வேடிக்கையான அசைவுகளைப் பார்த்து அனைவரும் மகிழ்வர். இதனை அந்த தியேட்டர் முதலாளியும் சிரித்துக்கொண்டே பார்ப்பார். 1894 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சம்பவம் தான் சார்லியை அரங்கம் அறியச் செய்தது. வழமைப்போலவே அன்றும் மேடையில் பாடிக்கொண்டிருந்த ஹன்னா திடிரென்று தொண்டை வரண்டதால் குரலில் தளம்பல் ஏற்பட்டு பாடமுடியாமல் போனது. பார்வையாளர்களின் ‘ஊ.. ஊ..’ என்ற ஏளன கோஷம் கண்ணீர் கமழ ஹன்னாவை மேடைவிட்டிறங்கச் செய்தது. செய்வதறியாது திகைத்து நின்ற தியட்டர் முதலாளியின் பார்வை ஓரமாய் நின்று தன் அம்மாவால் பாடமுடியாமல் போன நிலைகண்டு ஒன்றும் அறியாதிருந்த அப்பாவி சார்லியின் பக்கம் திரும்பியது.
அவனை உடனே மேடையேற்றி ‘சார்லி பாடு’ என்றார். மேடையின் கீழே பெரிய கூட்டம். மேடைமேலே தனியாலாய் நின்றுகொண்டிருக்கும் 5 வயது சிறுவன். கசிக்கிப் போட்ட பரட்டைத்தலை, பெரிதாய் தொங்கும் கந்தல் உடை, செருப்பில்லாத கால்கள் மேடைத் தரையை உரசிக்கொண்டிருக்கும் போது கோமாளித்தனமான குழந்தை சிரிப்போடு நெளிந்துகொண்டிருந்தான் சார்லின். அவனைப் பார்த்து அரங்கே சிரிக்கத்தொடங்கிவிட்டது அரங்கம்.
சிரித்துக்கொண்டே அம்மா சொல்லிக்கொடுத்த பாடலை பாடத் தொடங்கினான் சார்லி. அருமையாக பாடிக்கொண்டிருக்கும் போதே தன்னை அறியாமலேயே தன்னுடைய வேடிக்கையான அசைவுகளமைத்து நடனமாடத்தொடங்கிவிட்டான். சார்லின் ஆடல், பாடலைக் கண்டு பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு நோட்டுகளை வீசி எறிந்தனர் மேடைக்கு. பாட்டு பாடி இவ்வளவு காசா? ‘நான் இந்த காசுகளை எடுத்துவிட்டு பாடுகிறேன்’ என்று வறுமைக்கு பிடித்த அவன் குழந்தை தனமான பேச்சோடு பாடலை நிறுத்திவிட்டு பணத்தை பொறுக்கினான். தன்னுடைய சட்டையில், காற்சட்டையிலிருக்கும் பாக்கெட்டுகளில் நோட்டுகளை குவித்துவிட்டு மீண்டும் உற்சாகமாய் பாடி முடித்தான்.
மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ஹன்னா சார்லினுக்கு முத்தமிட்டு அரவணைத்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இதுதான் சார்லி ஏறிய முதல் மேடை. அதுவும் அவருடைய ஐந்தாவது வயதில்.
அநாதையில்லத்தில் அடைக்கலம்
சில காலம் கழியவே வறுமை அகோரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது. ஹன்னாவால் பாடமுடியாததால் தையல் இயந்திரம் ஒன்றை வாடகைக்குப் பெற்று தைத்து வாழ்க்கையை ஓட்டிவந்தார். நாளடைவில் உடல் சுகயீனமாகியதால் அவரால் தொடர்ந்து தைக்கமுடியவில்லை. இதனால் தையல் இயந்திரத்திற்கும், வீட்டிற்கும் வாடகை தரமுடியவில்லை. பிள்ளைகள் பசியாற்ற முடியவில்லை. வாடகை தராததால் ஹன்னாவும், இரு பிள்ளைகளும் வீதியில் விடப்பட்டனர். ஒரு சாக்கடை ஓரத்தில் இருந்த குடிசையில் இருந்தனர்; மூவரும். பின் பிள்ளைகளை ‘லேம்பத் எனும் அநாதை பள்ளியில் சேர்த்து பின் அவர்களை பிரிய மனமில்லாததால் மீண்டும் அவருடனே அவர்களை அழைத்து வந்தார்.
அந்த சமயம் தான் சார்ல்ஸ் மறுமணம் புரிந்து லண்டன் வந்து திரையரங்குகளில் பாடுவதை அறிந்துகொண்டார் ஹன்னா. இதைக் கேட்டு மனமுடைந்துபோன ஹன்னா தன் பிள்ளைகளை கவனித்தக்கொள்ள சார்லஸ் ஊதியம் தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் மாதமாதம் ஹன்னாவிற்கு பணம் அனுப்பப்பட்டது. இருந்தாலும் பிள்ளைகளை கவனித்துக்கொண்டு வாடகையும் செலுத்த அதுபோதவில்லை. பின்னர் மீண்டும் ‘ஹான்வெல்’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். கணவரும், தம் பிள்ளைகளும் அருகிலில்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஹன்னா மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில காலம் கழித்து சிட்னி, சார்லி இருவருக்கும் தந்தை இருப்பதையறிந்து ஆதரவற்றோர் பள்ளி உரிமையாளர் சார்ல்ஸ் ஐ வரவழைத்து பிள்ளைகளை அழைத்துச்செல்லும்படி கூறினார். சாரல்ஸ் இன் இரண்டாம் மனைவியின் கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்ட பிள்ளைகள் இருவரும் தாய் மனநல மருத்துவமனையிலிருந்து வந்த செய்தியறிந்து தாயிடமே சென்றுவிட்டனர்.
சிறுவயதில் தொழில்
தாய்க்கு உதவியாக இருக்க பிள்ளைகள் வேலை தேட ஆரம்பித்துவிட்டனர். சிட்னி முதலில் 15 மணித்தியாலம் ரொட்டி கடையில் வேலை செய்துவந்தான். ஆனாலும் சிறுவன் சிட்னியால் கடினமாக வேலை செய்ய முடியாமல் போனதால் தபால் தந்தி அலுவலகத்தில் வேலை செய்தான். சார்லி பத்திரிகை விற்றதோடு ஓய்வு நேரத்தில் செறுப்புக்கு போலிஷ் போட்டான். பத்திரிகை வேலை நிறுத்தப்படவே ஒரு மருந்து கடையில் போத்தல்களை கழுவும் வேலை செய்தான். இப்படி கிடைக்கும் வேலையை செய்து அன்றாடம் மூவரும் பசியாறினர். பின்னர் சிட்னிக்கு கப்பலொன்றில் வேலைகிடைத்து அவன் சென்றுவிட்டான். வாடகை பிரச்சனையால் அம்மாவும் இளையமகனும் ஊறுகாய் கம்பெனிக்கும் மாடு வெட்டும் தொட்டியிற்கும் அருகிலிருந்த ஒரு சிறு அறைக்குள் வாழ்ந்தனர்.
பிள்ளையின் நிலையை கண்டு அவனுக்கு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்று நினைத்த சார்ல்ஸ் 1897 சார்லிக்கு எட்டு வயதாக இருக்கும் போது தன் நண்பர் ஜாக்சனின் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்து விட்டார். சார்லியைப் போன்றே 8 சிறுவர்கள் அங்கிருந்தார்கள். அவர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம். அவர்களின் வேலை பாட்டு, நாடகம், சர்க்கஸ், கோமாளி என்று பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும். அதில் சார்லி ‘தேவதைகளின் ராணி’, ‘சின்ரெல்லா’ போன்ற நாடகங்களில் நடித்து நடித்து புகழ் பெற்றான். ஓரளவு வருவாயும் வந்தது. சில மாதங்கள் கழிந்து ஜாக்சன் தன் கம்பெனியை மூடி விட, சார்லி மறுபடியும் வேலை தேட ஆரம்பித்தான்.
அறியாத வயதில் நரகவாழ்க்கை
இதற்கிடையில் மதுவுக்கு தீவிர அடிமையான தந்தை சார்ல்ஸ் சாப்ளினுக்கு 12 வயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அடக்கம் செய்வற்கு கூட பணமில்லாததால் அநாதைப் பிணமாக மண்ணுக்குள் புதைந்துபோனார் சார்ல்ஸ். கணவனின் நிரந்தர பிரிவு, சிட்னி அருகிலில்லை, சார்லி பசி போக்க முடியவில்லை, வீட்டின் வறுமையென யோசனைகளால் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டார் ஹன்னா. இதனால் தாயை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தவிட்டு குடிசைக்கு திரும்பினான் சார்லி. உண்ண உணவில்லை, உடுத்த ஒழுங்கான உடையில்லை, நிம்மதியான உறக்கமில்லை, என்ன செய்வதென்றே தெரியாத சிறுவன் சார்லி மிகவும் கொடூரமான நரக வாழ்க்கையை அனுபவித்தான். பழைய துணிகளை விற்று பணம் பெற்று உணவு வாங்கலாம் என்று கந்தல் துணிகளை மூட்டைகட்டி விற்கச்சென்றான். யாராவது கந்தல் ஆடைகளை வாங்குவார்களா? பாவம். அது அப்போது அந்தச் சிறுவனுக்கு தெரியாது. ஏமாற்றமே இருந்தது. பட்டினி மட்டுமே அவனைத் தொடர்ந்தது. அதன்போதே கப்பல் வேலைக்கு சென்ற சிட்னி தன் குடிசைக்கு வந்து தம்பியின் நிலைக்கண்டு கட்டியனைத்து கண்ணீர் மல்கினான். தான் வேலைசெய்து கிடைத்த பணத்தைக்கொண்டு தம்பிக்கு உணவும்,உடையும் வாங்கிக்கொடுக்க சார்லி அதை புன்முறுவலோடு அணிந்துகொண்டான். இருவரும் நிறைய ரொட்டி, பிஸ்கட் வாங்கிக்கொண்டு தன் தாயை பார்க்கசென்றனர். பிள்ளைகளை கண்ட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரால் அணைத்துக்கொண்டார் ஹன்னா. இவர்களின் நிலைகண்டு இருவரும் தாயோடு அந்த வைத்தியசாலையிலேயே சிலநாட்கள் இருக்கவும் அவர்களுக்கு இலவச உணவு வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
சார்லியின் முயற்சியும்,திறமையும்
பின்னர் ஹன்னா பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருந்ததால் நன்றாக குணமடைந்துவிட்டார். சிட்னி மீண்டும் வேலைக்குச் செல்லும் நேரம் வந்தது. சார்லியும்,தாயாரும் மீண்டும் குடிசைக்கு திரும்பினர். வீட்டில் சும்மாவே இருப்பது சார்லிக்கு பிடிக்கவில்லை. தன் அம்மாவை கவனித்துக்கொள்ளவேண்டும் என்று வீதிக்கு இறங்கினான். பல நிர்வாகிகள் முன் ஆடி.பாடி. நகைச்சுவையாக பேசிக்கொண்டே சிறுவன் சார்லி ‘எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று கெஞ்சியவாறு தன் குடிசை விலாசத்தையும் கொடுத்துவிட்டு வந்தான். நிறைய இடங்களில் தொடர்ந்தது இந்த ஆட்டம்.பாட்டம். சார்லியின் திறமைக் கண்டு மனம் நெகிழ்ந்தவர் தான் ஒரு நாடக நிர்வாகி ஹேமில்டன். இவன் வருங்காலத்தின் மிகப்பெரும் கலைஞர் என்பதை தனக்குள்ளே எண்ணிக்கொண்டு அவனுடைய வீட்டு விலாசத்தையும் பெற்றுக்கொண்டு சில நாணயங்களை கொடுத்து அனுப்பினார் ஹேமில்டன். ‘நம்பிக்கையோடு போ’ என்ற ஹேமில்டனின் அழுத்தமான குரலில் சார்லினுக்கு நம்பிக்கை பிறந்தது. சார்லியின் நம்பிக்கை வீண்போகவில்லை மிக விரைவிலேயே சார்லியின் குடிசையின் ஓலைக்கதவின் ஓட்டையான அடியில் ஒரு அதிர்ஷடம் எட்டிப் பார்த்தது. ஆம் அதுதான் ஹேமில்டன் சிறுவன் சார்லிக்கு அனுப்பிய தந்தி. சரியாக 1903ம் ஆண்டு மீண்டும் ஹேமில்டனை சந்தித்தான் கையில் தந்தியோடு சார்லி.
நாடக பயணம்
பின் அவனுக்கு ‘Jim, A Romance Of Cockayne’ என்ற நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து பின் சார்லிக்கு வாரத்திற்கு இரண்டு பவுன் சம்பளமும் கொடுக்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து சார்லிக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. உலகப்புகழ் பெற்ற துப்பறிவு நாடகமான Sherlock இல் செய்தித்தாள் விற்கும் சிறுவன் வேடம் கிடைத்தது.
கப்பல் வேலையை முடித்துவந்த சிட்னிக்கும் தம்பியோடு Sherlock நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இருவரும் உற்சாகமாக நடிக்கத்தொடங்கினர். 1903 ஜூலை 27 ஆம் திகதி லண்டன் பெவிலியன் திரையரங்கில் இந்த நாடகம் வெற்றிகரமாக ஓடியது. இதில் அருமையாக நடித்த சார்லியை பத்திரிகைகள் பாரட்டின. இதன் பிறகு சார்லிக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான். Casey”s Court Circus நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும் Fred Karno’s Fun Factory Slapstick நகைச்சுவை நிறுவனத்திலும் கோமாளி வேடித்தில் நடித்தான். பின் சார்லினுடைய வயதுடன் சேர்ந்து நாட்களும் நகர்ந்தன.
அமெரிக்காவில் சார்லி
1912 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி 23 ஆவது வயதில் அமெரிக்காவில் சார்லியின் கால்கள் தரையிறங்கியது.இதன் பின் சார்லியின் திரைப்பட பயணம் ஆரம்பமானது. தன் நடிப்பு திறமைக்கு வழிகாட்டியாக அமைந்த Keystone Film Company இல் நுழைந்தார். 1914 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் படம் Making a Living வெளியானது. பின் அதே ஆண்டு அவருடைய இரண்டாவது திரைப்படம் Auto Races at Venice வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் தான் கறுப்பு கோர்ட்,தொப்பி,கைதடி, வித்தியாசமான நடை என நகைச்சுவையான பாத்திரமாக தன்னை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த்து அமெரிக்க திரையுலகமே சிரிக்கத்தொடங்கிவிட்டது. கழைக்கூத்தாடியை போல உடைகளை அணிந்துக் கொண்டு குடிகாரன் போல நடக்கும் இந்த கோமாளி நடிகனை நம்பி ஆயிரக்கணக்கான டொலர்களை அள்ளி வீசுகிறீர்களா? என்று ஒரு கூட்டம் ஏளனமாய் பேசியது. இதை சற்றும் காதில் வாங்காத சார்லி அம்மா கற்றுக் கொடுத்த முக தோற்ற பாவனைகள், கைச் சைகைகள், நடன அசைவுகள் போன்ற உணர்ச்சிகரமான செய்கைகளை திரைப்படங்களில் வெளிப்படுத்தி கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றார். ஒரே வருடத்தில் 36 படங்களில் சார்லின் நடித்தார். அனைத்துமே ‘ஹிட்’ அடித்தன. நடிப்பதோடு நின்றுவிடாது கதை,திரைக்கதை, இயக்கம், இசையென அனைத்துறைகளிலும் தேர்ச்சிபெற்ற அவர் 1919 ஆம் ஆண்டு மேரிபிக்போர்ட் டக்ளஸ் பேர்பேங்ஸ் என்ற இருவருடன் சேர்ந்து ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். 1921 இல் The முனை , 1925 இல் The Gold Rush போன்ற படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைக்கவும் செய்தார்.
தாயின் பிரிவு
சார்லியை சந்திக்க வரும் திரைப்படத்துறையாளர்கள் கையில் பெட்டியோடு பேரம்பேச வருகைதந்தனர். கொத்து கொத்தாக பணம் தானாகவே சார்லியை தேடி வர ஆரம்பித்தது. முன்னர் ஒரு வேளை உணவுக்கு கூட பணமில்லாமல் இருந்த சார்லியின் வாழ்க்கையில் இப்போது பணமழை பொழிய ஆரம்பித்தது. மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு வேளை, மூன்று நாட்களுக்கு சேர்த்து ஒரு நாள் என்று பழைய சோற்றையும்,பழைய ரொட்டியையும் சாப்பிட்டு வந்த சார்லியின் உணவுமேசையை இன்று வகை வகையான ஆடம்பர உணவுகள் அலங்கரித்தும் உண்பதற்கு நேரமில்லாமல் கடும் பிஸியாகிவிட்டார். அமெரிக்காவில் மாளிகைபோன்றதொரு அழகான வீட்டைகட்டி தன் தாயை வரவழைத்தார். 1928 ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஹன்னா சார்லியை பார்த்தவண்ணமே இறந்துவிட்டார். ‘அம்மா ! நீங்கள் எனக்கு ஆட, பாட, சைகை மொழிகளை கற்றுத்தரவில்லை என்றால் இந்த சார்லி இன்று எங்கோ ஒரு மூலையில் ஏதோ செய்துகொண்டு வாழ்ந்திருப்பேன்’ என்று கதறினார் தாய் பாசத்தில் கட்டுண்ட சார்லின். சார்லின் உயரத்தை தொட்டபின்பு தன் அம்மாவிற்கும் உயரத்தை கொடுத்தார். குடிசை வீட்டில் செறுப்புத் தொழிலாளிக்கு மகளாப் பிறந்த ஹன்னா தன் மகன் சார்லினால் ஆடம்பர மாளிகையில் தன் உயிரை விட்டார்.
மீண்டும் திரையுலகம்
தாயின் பிரிவால் மனமுடைந்த சார்லின் சில காலத்திற்குள் தன்னை தேற்றிக்கொண்டு மீண்டும் திரையுலகில் முகம்காட்ட ஆரம்பித்தார். 1927 ஆம் ஆண்டு ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கினாலும் சார்லி பேசும் படங்களை எடுக்கவில்லை. 1931 இல் அவர் இயக்கிய City Lights ஊமைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. பின்னர் 1936 ஆம் ஆண்டு Modern Times எனும் ஒலிப்படத்தை எடுத்தாலும் அதில் பேசாமலேயே நடித்தார். மகத்தான இந்த வெற்றிகளைத் தொடர்ந்து சார்லினின் புகழ் மெல்ல மெல்ல பல சமுத்திரங்களைக் கடந்து பேசப்பட்டது. பல கோடி மக்களின் புன்னகையை கண்ணீராக்கிய ஹிட்லரைப் போலவே தன்னை சித்தரித்துக்கொண்ட சார்லின் பல கோடி மக்களின் கண்ணீரை புன்னகையாய் மாற்றினார். 1940 ஆம் ஆண்டு வெளியாகிய அவரின் முதல் பேசும் படமான The Great Dictator திரைப்படம் சர்வாதிகாரியான ஹிட்லரைப் பற்றியும் அவரது பாசிச கொள்கையையும் விமர்சித்து உருவாக்கப்பட்டது. இதை பார்த்த ஹிட்லரும் சார்லினின் நடிப்பை ரசித்தார்.
கசந்த திருமணவாழ்க்கை
இருபத்தியெட்டு வயதில் சார்லி பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை முறிவடைந்து போகவே முப்பத்தி ஐந்து வயதில் லீடா க்ரேவை காதலித்து மணந்தார். இரு மகன்களும் பிறந்தனர் பின்னர் மீண்டும் விவாகரத்து ஏற்பட்டது. நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் மீண்டும் விவாகரத்து. பின் தன்னுடைய 54 வயதில் ஓநீலை திருமணம் செய்துகொண்டார். பின் எட்டு குழந்தைகள் பிறந்தன.
இராஜமரியாதை
கசப்பான அனுபவங்களையும், கொடுமையான வாழ்க்கையையும் கடந்து வந்த சார்லிக்கு உலகம் புகழாரம் சூட்டியது. அவருக்கு கிடைத்த கௌரவங்கள் பல. அமெரிக்க கொள்கைகளுக்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக எந்த Hollywood walk of frame என்ற நட்சத்திரப்பட்டியலில் இருந்து சார்லின் நீக்கப்பட்டாரோ அதே Hollywood walk of frame என்ற நட்சத்திரப்பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்று 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கவின் அகாடமி விருதில் வாழ்நாள் சாதனையாளர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. சார்லியின் திறமையைக் கண்டு வியந்த பிரிட்டிஷ் அரசு, இரண்டாம் எலிசபத் மகாராணி கைகளால் சார்லிக்கு ‘சர்’ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு சார்லியின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வெளியிட்டது. சார்லியின் மிகப்பெரிய ரசிகையான விண்வெளி வீராங்கனை லியூட்மிலா கரச்கினா ஒரு எரிகல்லுக்கு ‘3623 சாப்ளின்’ எனும் பெயரை சூட்டியுள்ளார். 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை ‘சாப்ளின்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.இருமுறை ஓஸ்கார் விருதுகளை சார்லி வென்றெடுத்துள்ளார். சார்லியின் ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் National Film Registry இல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மறைந்தார் மேதை
1977 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி சார்லியை பார்த்து மனம் விட்டு சிரித்த ஒட்டுமொத்த உலகமுமே மனம் நொந்து அழுதது. பரிசுத்தர் இயேசு கிறிஸ்து பிறந்த அன்றைய தினத்தில் தான் சார்லி சாப்ளினின் உயிர் இறைவனின் பாதங்களையடைந்தது. 88 ஆவது வயதில் வேவே என்ற இடத்தில் இன்னுயிரை துறந்த சார்லி சாப்ளினின் நினைவாக அங்கே சிலையொன்று அமைக்கப்பட்டது.
‘உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது’ என்று சார்லி சாப்ளின் உதிர்த்த வார்த்தைகள் அவரது வாழ்க்கையின் வலிகளை உணர்த்துகின்றது. ‘மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்று கூறிய சார்லி சாப்ளின் வலிகளை மனதிற்குள் புதைத்து அனைவரையும் சிரிக்கவைத்த மாபெரும் கலைஞராகவே வாழ்ந்து மறைந்தவர். பல கோடி மனங்களை வென்று அழியாத பெயராய் இன்றும் இம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கடந்த இந்த கலைஞரை நாமும் போற்றுவோம்..!
அதிகாலை தொடங்கிய மழை, மாலை நான்கு மணியாகியும் ஓய்வற்றுப் பொழிந்துகொண்டிருக்கிறது.மனிதர்களைப் போலவே மரஞ்செடி கொடிகளும் குளிரில் விறைத்துச் சோர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தும்பிகள் பறந்துகொண்டிருந்தன. புல்வெளியில் மைனாக்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தன. பூக்களில் மழைத்துளிகள் பாக்கள் எழுதிக்கொண்டிருந்தன. மழையில் நனைந்தவாறு மின்சாரக் கம்பிகளில் காக்கைகள் அமர்ந்திருந்தன. சன நடமாட்டமற்று வீதிகள் வெறிதாயிருந்தன. ஆவேசமாய் சுழன்றடித்த காற்றால் மரக்கிளைகள் முறிந்தன. பழுத்திருந்த பழங்கள் மரத்தை விட்டு விழுந்தன. வீட்டுச் சாளரத்தின் அருகேயிருந்து சூடான தேநீரை அருந்தியவாறு மழையை இரசித்துக்கொண்டிருக்கிறாள் நிலாஜினி!
உறவுகள் புடைசூழ இருந்தாலும், அவள் ஏகாந்த வாசத்தை அதிகம் விரும்புபவள். காதல் அவளுக்கு அளித்த வரம் அது. தனிமையை விரும்பும் பொழுதெல்லாம் தன் அறைக்குள் அவள் தஞ்சமாகி விடுவாள். விசாலமான அவளது அறைக்குள் அதிகமாகக் காணப்படுபவை புத்தகங்கள்தான். அந்த அறையின் சாளரம் மேற்குத் திசையில் உள்ளது. அதனருகே கதிரை, நீளமான மேசை- மேசை முழுவதும் புத்தகங்கள். தனிமைக்குள் தனிமை விரும்பியான அவள், வேலை நேரங்கள் தவிர அந்தச் சாளர இருக்கையில் அமர்ந்து எதையாவது படித்துக்கொண்டிருப்பாள், எழுதிக்கொண்டிருப்பாள், தன்னை மறந்து இயற்கையை இரசித்துக்கொண்டிருப்பாள். இன்றும் அவ்வண்ணமே தோல்ஸ்தோயின் “அன்னா கரனினா” நாவலைப் படித்து முடித்து, இப்போது இயற்கையைப் படித்துக்கொண்டிருக்கிறாள்!
தேநீர்க் கிண்ணம் காலியானது. மீண்டும் கைபேசியிலிருந்து ஆகாஷுக்கு அழைப்பு எடுத்தாள். “நீங்கள் அழைத்த நபர், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்றது கைபேசி!
“சொல்லாமலே காதல் வந்தது” ஜோடியருள் ஆகாஷ்- நிலாஜினியும் அடங்குவர். ஆகாஷ் விடுதலைப் புலிவீரன்! தாயக விடுதலைக்காய் அதிக விலைகள் கொடுத்த தீரன்! ஒரே ஊரில் இருவரும் பிறந்திருந்தாலும், ஒருவரையொருவர் அறியாதிருந்தனர். காலப்பெருவெளி ஒருநாள் இருவரையும் ஒருங்கிணைத்தது. கண்கள் பார்த்த முதல் நொடியே காந்தமாய் ஒட்டிக்கொண்டனர் ஆகாஷும் நிலாஜினியும்!
அன்று முதல் நட்பாகப் பழகத் தொடங்கிய இவர்கள், நாளடைவில் காதலுள் கட்டுண்டனர். காதல், கடமை இரண்டையும் இரு கண்கள் போல் நேசித்தான் ஆகாஷ்!
இருவரும் பழகி மூன்று வருடங்கள் நிறைவுற்றன. கல்யாணப் பேச்சை ஆகாஷ்தான் முதலில் ஆரம்பித்தான். “நிலா! இப்படியே காலம் முழுக்கக் காதலித்துக்கொண்டா திரிவது? நமக்குக் குழந்தை குட்டிகள் வேண்டாமா? எப்போது நம் திருமணம்?” என்று கேட்டான் ஆகாஷ். “நீங்கள் இயக்கத்தை விட்டு விலகினால்தான் நான் கல்யாணம் செய்வேன்” என்று உறுதியாகக் கூறினாள் நிலாஜினி. “ஆகாஷ் இயக்கம். அவனைக் கல்யாணம் செய்திட்டு, இளம் வயதில் நீ விதவையாகப் போகிறாயா?” என்று அவளது உறவுகள் கேட்டு அவளை அச்சுறுத்தினர். இருவரின் காதலையும் அவளது உறவுகள் ஏற்கவில்லை. ஆகாஷோ இயக்கத்தை விட்டு விலகுவதாகவும் இல்லை. “நீ என்னைக் கல்யாணம் செய்தால், நீயும் இயக்கம்தான். உன்னைத் தனியாக விடமாட்டேன். எங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக நாம் எந்நேரமும் சாகத் தயாராக இருக்க வேண்டும். நாம் மட்டுமல்ல, நமக்குப் பிறக்கும் பிள்ளைகளும் மண் விடுதலைக்காகப் போராடத்தான் வேண்டும். வாழ்வுக்குள் சாகாமல் சாவுக்குள் வாழ்வோம் வா நிலா!” என்றான் ஆகாஷ்! “வாழ்வதற்குக் காதலித்தால், சாவதற்கும் தயாராய் இரு என்கிறானே இவன்” என மனதுக்குள் நினைத்தவள், கண்ணீரால் அவனுக்குப் பதிலுரைத்துப் பிரிந்தாள்!
சங்ககாலக் காதலர் போல இங்கேயும் வீரத்திற்குப் பின்னே காதல் சென்றது. தனக்குப் பின்னே வா என்று அவளை அழைத்தான் ஆகாஷ். அவன் மனவுறுதியில் கற்பாறையை நிகர்த்தவன். ஆனால், காதல் அவனது இதயத்தை இளகச் செய்துவிட்டது. நிலாஜினியைப் பிரிந்த துயரம் தாங்காது கண்ணீரில் கருகினான்! அவளைத் தன்னிடம் தருமாறு அவளது பெற்றோரிடம் உருகினான்! அவன் போராளி என்பதைக் காரணம் காட்டிப் பெற்றோரும் உறவுகளும் அவளை அவனிடமிருந்து பிரித்தனர்.இருவரையும் கோர்த்து வைத்து அழகு பார்த்த விதி சிரித்தது! விதி வலிதென்பது இங்கும் பலித்தது!
2009 உடன் ஈழப்போர் மௌனித்தது.
தொடர்பறுந்து தொலைந்தவர்களை மீண்டும் விதி இணைத்தது. இலையுதிர் காலம் மறைந்து வசந்தகாலம் பிறந்தது போல் இருவர் காதலும் உயிர்த்தது. இருவரும் இணைவது நிச்சயம் என்ற நம்பிக்கை அளித்தது. ஈழத்தில் இப்போது போரும் இல்லை, சமாதானமும் இல்லை. அதேபோல ஆகாஷ் போன்றவர்கள் இங்கு வாழ்வதற்கு உயிருக்கு உத்தரவாதமும் இல்லை. அதனால் அரசியல் தஞ்சம் கோரி அவன் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறான். அங்கிருந்தவாறே மறுபடியும் நிலாஜினியுடன் தொடர்புகொண்டான். சந்திப்பும் பிரிவும் எனத் தொடரும் இந்த உறவுப்பயணத்துக்கு ஆண்டுகள் எட்டு! இன்னமும் தமக்குள் இரு உயிர்களும் இசைத்துக்கொண்டு இருக்கின்றன காதல் மெட்டு!
இப்போது ஆகாஷ் ஒரு அநாதை. வாலிபங்கள் ஓடி மறைந்த மேதை. போருக்குப் பின்னர் அவன் தனியாகவே வாழ்கிறான். தனிமை அவனைத் தின்று தின்று ஏப்பம் விட்டுவிட்டது. கோபத்தை அவனுக்குப் பரிசளித்தது. ஏன், எதற்கு என்று தெரியாமலே அவன் இப்போதெல்லாம் கோபப்படுகிறான். உண்பதற்கு மட்டும் உழைப்பது, உறைகுளிர் காலத்தில் உறங்குவது என்று அவனது காலங்கள் கரைகின்றன. வலிகள் மட்டுமே வாழ்வின் வரங்களாய் அவனுக்கு அமைந்தன. அவன் சிறந்த கவிஞன், எழுத்தாளன். தற்போது தன் வாழ்வின் அனுபவங்களை எழுத்துக்களில் செதுக்கிக்கொண்டிருக்கிறான்.
நிலாஜினி மீது அவனுக்கு அதிக பிரியம். அப்படியே அவன் மீதும் அவளுக்கு அதிக பிரியம். அவளைத் திருமணம் செய்ய இப்போதும் அவன் விரும்புகிறான். அவளும் அவனை மணமுடித்து, இருவரின் ஆளுமையின் அடையாளமாக ஒரு மகவைப் பெற்றெடுக்க விரும்புகிறாள். அவன் அவளைத் தேடும் போது பாராதிருந்தவள், அவனை இப்போது அதிகமதிகமாய்த் தேடுகிறாள். ஆனால், கையில் சிக்காத காற்றைப் போல அவளது தேடலுக்குள் அவன் அகப்படவில்லை.
முன்பெல்லாம் அவளுடன் பேசுவதை மட்டுமே விரும்பிய அவன், இப்போது நிறையவே மாறிவிட்டான். காலமும் சூழலும் அவனை மாற்றிவிட்டன. உறைபனிக் குளிரிலும் உறங்காது பேசியவன், இப்போது அவ்வாறில்லை. தன்னை மறந்து மணிக்கணக்கில் பேசியவன், இப்போது அவ்வாறில்லை. உறக்கம் ஒன்றையே அவன் அதிகம் விரும்புகிறான். அதனால் கைபேசியைக் கூட உறக்கநிலையில் வைக்கிறான்.
காலையில் குளிர் சூரியனாய் சிரித்து அன்பைப் பொழிபவன், மாலையில் சுடும் சூரியனாய் கோபக் கனலைக் கக்குகிறான். திடீர் திடீரெனத் தீயாகிறான், பின் தீயணைக்கும் நீராகிறான். அவளைக் கொஞ்சும் தாயாகிறான், அவள் கொஞ்சிட சேயாகிறான். அவனது உணர்வுக் கலவையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை!
இன்று கார்த்திகை- 27. மண் மீட்கும் போரில் ஆகுதியான மறவர்கள் நினைவாகத் தான் மரக்கன்று நாட்டியபோது எடுத்த புகைப்படம் அவளுக்கு அனுப்பியிருந்தான். ஒரு நிமிடம் அவளுடன் பேசியிருந்தான். பின் அவனது கைபேசி உறக்கநிலையில்!
“மாவீரர் நினைவு தினம் தானே? ஆகாஷ் பிசி போல” என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னவள், வீட்டுக்கு அண்மையிலுள்ள கோவிலில் மரக்கன்றுகள் நாட்டுவதற்குச் செல்ல ஆயத்தமானாள். மழை ஓய்ந்தபாடில்லை. குடையைப் பிடித்தவாறு நடந்து சென்றாள். குடை மீது காற்றுக்குக் காதல் போலும். அதனைப் புரட்டிப் புரட்டித் தன்பக்கம் இழுத்த வண்ணம் இருந்தது. நிலாஜினி தெப்பமாக நனைந்துவிட்டாள். கொட்டும் மழையிலும் மண்ணில் விதையானோர் நினைவாக மரக்கன்றுகள் நாட்டியவள், குளிரில் நடுங்கியவாறு வீட்டுக்கு வந்து நீராடினாள். மாலை 6.05 மணியளவில் தன் வீட்டுச் சுவாமி அறையில் மறவர்களுக்குச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினாள். ஒன்றாகப் படித்து விதையான அவளது தோழர்கள் கண்களில் நிழலாடினர். அவளது மனது அதிகமாகவே கனத்தது. இரவு உணவை உட்கொள்ள மனமற்று, தன் அறைக்குள் சென்று சிந்தனையில் ஆழ்ந்தாள்.
இலங்கைச் சனத்தொகையில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், போராட்டத்திற்குச் செலுத்திய விலைகளும் போர் அளித்த வலிகளும் அதிகம். இன விடுதலைக்கான போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை ஆகுதியாக்கியுள்ளது தமிழினம். இது அதிக விலை! தெற்காசியாவில் விடுதலைப் புலிகள் செய்தது அதியுச்ச சாதனை! முப்படை வளர்த்து, எப்படை வந்தாலும் விரட்டியடித்த புலிகளைப் பன்னாட்டுப் படை தோற்கடித்தது. தனக்கொரு தேசமில்லாத் தமிழினம், இன்று கால் பதிக்காத தேசமில்லை. தமிழின விடுதலைக்காய் உழைத்த போராளிகளில், தன் காதலனும் ஒருவன் என்று அவள் பெருமைப்பட்டாள். அவனுடன் பேச ஆவலுற்று, மீண்டும் அவனுக்குக் கைபேசியில் அழைப்பெடுத்தாள். அவளது அழைப்புக்கு இப்போது அவன் பதிலளித்தான். ஆனால், அவளிடம் தீயாகித் தகித்தான். அரைமணி நேர உரையாடல் அபத்தமாய் முடிந்தது. மறுபடியும் அவன் கைபேசியை உறக்கநிலையில் வைத்தான்.
நொடியில் நிறம் மாறும் அவன், கவலையில்லாத மனிதனாய் உறங்கிக்கொண்டிருப்பான். உறக்கம் அவனது பெருவிருப்பம். அவனோ நிலாஜினி வாழ்வில் பெருந்திருப்பம். அவன் ஏன்தான் இப்படி இருக்கிறான் என்று விடை தெரியாமல், அவனது கைபேசி எண்ணைப் பார்த்தவாறு நிலாஜினி கட்டிலில் சரிந்தாள். வெளியே மழை சோவெனப் பொழிந்துகொண்டிருக்கிறது. இப்போது, விண் மழையுடன் அவளது கண் மழை போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது!