தேவையான பொருட்கள்
வடித்து வைத்த சாதம் – 1 கப்
எலுமிச்சை – 3
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 3
பச்சை மிளகாய் – 3
துருவிய இஞ்சி – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
முந்திரி பருப்பு – 15
செய்முறை
ஒரு கப் உதிரியாக வடித்த சாதத்தை எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகிவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து முந்திரி பருப்பினை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும். தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து இறுதியாக வறுத்த முந்திரி பருப்பினை சேர்த்துக் கொள்ளவும்.
தாளித்து வைத்திருக்கும் இந்தக் கலவையுடன் சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவிக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
பசும் பால் – 1 லீற்றர்
பாஸ்மதி அரிசி – 1/4 கப்
நெய் – 6 மேசைக்கரண்டி
டின் மில்க் மெயிட் – 1/2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டார் – 1/2 தேக்கரண்டி
முந்திரி – 10
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி நன்றாக கழுவி வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து எடுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
பாத்திரமொன்றில் பாலினை ஊற்றி அடுப்பில் வைத்து பால் நன்றாக கொதித்ததும் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள அரிசியை போட்டு மெல்லிய தீயில் வேக விடவும்.
அரிசி வேகும் போது இடைக்கிடை கிளறி விடவும். அரிசி நன்றாக வெந்து வரும் போது 1 தேக்கரண்டி நெய் ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும். அதன் பின் டின் மில்க் சேர்த்து நன்றாக கிளறவும். இடைக்கிடை நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.
நல்ல பதத்திற்கு வந்த பின் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
வெள்ளைப் பச்சரிசி – 1 கப்
தயிர் – 2 கப்
பசும் பால் – 1 கப்
இஞ்சி – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையானளவு
செய்முறை
வெள்ளைப் பச்சரிசியை நன்றாக கழுவி நீர் வடித்து குழையும் அளவு வேக வைத்து இறக்கி கொள்ளவும். அதன் பின் சாதம் சூடாறும் முன் குழிக் கரண்டி ஒன்றினால் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
மசித்த சாதத்தில் பசும் பாலினை காய்ச்சி ஆற வைத்து ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும். அதன் பின் உப்பு, தயிர் மற்றும் இஞ்சியினையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் கலந்து வதக்கி சாதத்தில் கொட்டிக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
அரிசி = 1 கப்
பயத்தம் பருப்பு = 1/4 கப்
பால் = தேவையானளவு
நெய் = தேவையானளவு
வெல்லம் = 2 1/2 கப்
ஏலப்பொடி = 2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி கழுவி வைத்த அரிசி மற்றும் பயத்தம் பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின் 5 கப் பாலூற்றி அரிசியையும் பயத்தம் பருப்பையும் வேக விடவும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் மற்றும் வெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அதன் பின் வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் வேகவைத்த அரிசிக் கலவையை சேர்த்து சிறிய அளவில் தீ வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தின் பின் நெய் ஊற்றி ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.
முதலில் அரிசியை சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு குக்கரில் 1 மேசைக்கரண்டி நெய் ஊற்றி நெய் உருகியதும் பாசிப்பருப்பினை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அரிசியை போட்டு குக்கரை மூடிக் கொள்ளவும்.
குக்கரிலிருந்து முதல் விசில் வரை அதிகப்படியான நெருப்பினில் வைத்து அதன பின் தீயை குறைத்து இரண்டாவது விசில் வந்தவுடன் குக்கரை இறக்கிக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் அரிசி போட்டு வைத்த குக்கரை திறந்து வெல்லப் பாகு, தட்டி வைத்த கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து 3யிலிருந்து 4நிமிடங்களுக்கு பொங்கலை கிளறி விடவும்.
இன்னொரு பாத்திரத்தில் மீதமாகயிருக்கும் நெய்யினை ஊற்றி நெய் உருகியதும் முந்திரி மற்றும் உலர் திராட்சை (ப்ளம்ஸ்) ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையினை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.
இப்போது பூஜைக்கு வைப்பதற்கான சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.
தேவையான பொருட்கள்
வடித்து வைத்த சாதம் – 1 கப்
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1தேக்கரண்டி
வேர்கடலை – 1/2 கப்
எள் – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையானளவு
உப்பு – தேவையானளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எள் மற்றும் 1/2 மேசைக்கரண்டிஉளுத்தம் பருப்பினை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி அது சூடானதும் காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் மிக்ஸியில் தாளித்து வைத்த காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தோடு உப்பு தேவையானளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதன் பின் வறுத்து வைத்த எள்ளு மற்றும் உளுத்தம் பருப்பினையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, 1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே வடித்து வைத்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பொடியாக்கி வைத்த பொடியினையும் தாளித்த பொருட்களையும் அத்தோடு சிறிதளவும் உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
தண்ணீர் – 5 கப்
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிய துண்டு
எண்ணெய் – 1/4 கப்
நெய் – 2 1/2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையானளவு
முந்திரி – 7
செய்முறை
பச்சரிசி மற்றும் பாசிப்பயரினை நன்றாக கழுவி நீரினை வடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பச்சரிசி மற்றும் பாசிப்பயிரினை தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் இரண்டையும் 5 கப் தண்ணீர் ஊற்றி தேவையானளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 3-4 விசில் வரை குக்கரில் வைத்து எடுத்து லேசாக மசித்துக் கொள்ளவும்.
சீரகம் மற்றும் மிளகினை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து வறுத்து அதில் மசித்து வைத்த சாதத்தினையும் போட்டு நன்றாக கிளறி வறுத்த முந்திரி சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
இப்போது மகேஸ்வரி பூஜைக்கான வெண்பொங்கல் பிரசாதம் தயார்.
அவனின்றி அனுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான் என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது ராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும். நவராத்திரி விரதமானது தட்சணாய காலம் எனப்படும் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை நோக்கி அனுஷ்டிக்கப்படுகிறது. இது புரட்டாசி மாதம் அமாவசை கழிந்த பூர்வ பட்ச பிரதமை திதியில் வசந்த நவராத்திரியுடன் ஆரம்பமாகி நவமி சாரதா நவராத்திரி வரையான காலம் வரை அனுஷ்டிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நவராத்திரி விரதத்தின் போது பூஜை முறைகள் பற்றிய தெளிவான தகவல்கள் தெரியாது. அதனால் நவராத்திரி காலத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய பூஜை முறைகள் இதோ! உங்களுக்காக,
நவராத்திரி காலங்களில் கும்பம் வைத்தல் சிறப்பான ஒன்றாகும். சிலர் கும்பம் வைப்பதோடு நிறுத்தி விடுகின்றனர். ஒழுங்கான முறையில் பூஜிப்பது கிடையாது. இது விரத பங்கத்தினை ஏற்படுத்தக் கூடும் ஆகையால் நவராத்திரி காலங்களில் கும்பம் வைக்கும் போது அந்த கும்பத்தினை தேவியின் உருவாக பாவித்து வாசணை மிகுந்த மலர்கள், கனி வகைகள், நெய், பால், வெல்லம் கலந்த சுவையான நிவேதனய்களை படைத்து தேவியை மகிழ்விக்கும் படியான தோத்திர பாடல்களை பாடி வழிபடுதல் வேண்டும்.
உங்களது வீட்டில் இரண்டிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட நோயற்ற ஆரோக்கியமான பெண் குழந்தைகள் இருப்பார்களேயானால் அவர்களை நவராத்திரி நாட்களில் அம்பிகையைப் போல் அலங்கரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகையின் வடிவமாக பாவித்து அவர்களுக்கு வாய்க்கு சுவையன அமுது படைத்து அவர்களுக்கு ஆடை, ஆபரணம், பழம், தாம்பூலம், பூக்கள், கண்ணாடி, சீப்பு போன்ற பொருட்களை கொடுத்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்தல் அம்பிகையை மகிழ்விப்பதற்கு ஒப்பாகும்.
நவராத்திரி நாட்களில் முதல் நாள் ஒருத்தர் இரண்டாம் நாள் இருவர் என ஒன்பது நாட்களும் சுமங்கலிப் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு நலங்கு மஞ்சளிட்டு சாப்பாடு போட்டு மங்கல பொருட்கள் கொடுத்து மகிழ்விப்பதும் தேவியை மகிழ்விப்பதற்கு ஒப்பாகும். வசதியானவர்கள் ஒன்பது நாட்களும் ஒன்பது சுமங்கலிகளுக்கு வீதம் இச்சடங்கினை செய்யலாம்.
நவராத்திரி முதலாம் நாள்
திதி = பிரதமை
அம்பிகையின் நாமம் = சைலபுத்திரி, குமாரி
நிவேதனம் = வெண் பொங்கல்
பூக்கள் = சிவப்பு நிற அரளி
நவராத்திரி இரண்டாம் நாள்
திதி = துவிதியை
அம்பிகையின் நாமம் = பிரம்மசாரிணி, திரிமூர்த்தி
நிவேதனம் = எள்ளோதரை
பூக்கள் = மஞ்சள் நிற கொன்றைப் பூ, சாமந்தி, நீலோற்பலம், நீலசம்பங்கி
நவராத்திரி மூன்றாம் நாள்
திதி = திருதியை
அம்பிகையின் நாமம் = சந்திரகாண்டி, கல்யாணி
நிவேதனம் = சர்க்கரைப் பொங்கல்
பூக்கள் = செண்பகப் பூ, வில்வதனம்
நவராத்திரி நான்காம் நாள்
திதி = சதுர்த்தி
அம்பிகையின் நாமம் = கூஷ்மாண்டி, ரோகினி
நிவேதனம் = கதம்ப சாதம்
பூக்கள் = செந்தாமரை, ரோஜா
நவராத்திரி ஐந்தாம் நாள்
திதி = பஞ்சமி
அம்பிகையின் நாமம் = ஸ்கந்த மாதா, காளி
நிவேதனம் = தயிர் சாதம்
பூக்கள் = கதம்பம், மனோ ரஞ்சிதம்
நவராத்திரி ஆறாம் நாள்
திதி = சஷ்டி
அம்பிகையின் நாமம் = காத்யாயினி, சண்டிகா
நிவேதனம் = பால் சாதம்
பூக்கள் = சம்பங்கி, செண்பகம், இருவாட்சி
நவராத்திரி ஏழாம் நாள்
திதி = சப்தமி
அம்பிகையின் நாமம் = கானராத்திரி, சாம்பவி
நிவேதனம் = எலுமிச்சை சாதம்
பூக்கள் = மல்லிகை, முல்லை
நவராத்திரி எட்டாம் நாள்
திதி = அஷ்டமி
அம்பிகையின் நாமம் = மகா கௌரி, துர்க்கை
நிவேதனம் = தேங்காய் சாதம்
பூக்கள் = வெண் தாமரை
நவராத்திரி ஒன்பதாம் நாள்
திதி = நவமி
அம்பிகையின் நாமம் = சித்திதா, சாரதா, சரஸ்வதி, சுபத்ரா
நிவேதனம் = உளுந்து வடை
பூக்கள் = துளசி, வெள்ளை மலர்கள்
பத்தாம் நாள் விஜயதசமி
திதி = தசமி
அம்பிகையின் நாமம் = விஜயை, விஜய ஸ்ரீவித்யா, லக்ஷமி
நிவேதனம் = பால்
பூக்கள் = வாசனைப் பூக்கள்
இந்த பட்டியலில் உள்ளவாறு பூஜிக்க முடியாதவர்கள் கவலைக் கொள்ள வேண்டாம். தூய அன்போடு எந்தப் பெயர் கூறி எந்த மலரால் பூஜித்து எவ்வாறான நிவேதனம் படைத்தாலும் மனதில் தூய்மையும் பக்தியும் நிறையப் பெற்றிருந்தால் போதும் அம்பிகை மனமிரங்கி அருள் செய்வாள்.
இது தவிர மாலையில் சுண்டல் நிவேதனம் செய்து கொலுவுக்கு வரும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களுக்கு தாம்பூலத்தோடு கொடுப்பது சகல பாக்கியங்களையும் பெற்று தரும்.
இந்த வருடம் நவராத்திரி விரதத்தினை எமது இல்லங்களில் சரியான முறையில் கடைபிடித்து அம்பிகையின் அருள் பெறுவோம்.
நம் நாட்டின் மக்களினால் அதிகளவு உண்ணப்படும் உணவு பொடி சம்பல் மற்றும் மரவள்ளிக் கிழங்கு தான். நாம் அதிகமாக உட்கொள்ளும் மரவள்ளிக் கிழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சில,
மரவள்ளி கிழங்கில் அதிகம் நார்ச்சத்துள்ளது ஆகையால் உடலில் ஏதும் நச்சுக்கள் இருந்தால் அதனை கழிவாக வெளியேற்றுவதோடு குடல் வலி மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், எடை குறைப்பதற்கு மிகவும் தேவையான நார்ச்சத்து, இதில் அதிகமாக உள்ளது. தினமும் உங்கள் உணவில் மரவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொள்வதால், உடல் எடையை குறைக்கலாம்
மேலும், கிழங்கிலுள்ள நார்ச்சத்து, குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது; அழற்சியைக் குறைக்கிறது.
மரவள்ளி கிழங்கில் காணப்படுகிற இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுவதோடு குருதியோட்டத்தை சீராக்கி குருதியில் காணப்படும் கொழுப்பினை கரைக்கிறது, அனீமியா ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மரவள்ளியில் காணப்படும் கல்சியம், விட்டமின் K மற்றும் இரும்பு ஆகியன எலும்புகளின் சமநிலையினை பேணுவதற்கும் எலும்பு சம்மதமான நோய்கள் வராது பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது.
அடிக்கடி ஞாபக மறதி பிரச்சனையுள்ளவர்கள் உணவுடன் மரவள்ளி கிழங்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி படிப்படியாக குணமாகும்.
உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும் சமயங்களில் மரவள்ளி கிழங்கினை சாப்பிட்டு வாருங்கள். மரவள்ளிக் கிழங்கிற்கு உடலின் நீரின் அளவினை சீராக்கும் தன்மையுண்டு.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான, ஊட்டச்சத்துகள் இதில் அதிகமாக உள்ளன. மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்தும் சாப்பிடுவது நலம் தரும்.
ஒற்றை தலைவலி மற்றும் சாதாரண தலைவலி, மனிதனை பல நேரங்களில் வதைக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக, மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள் பயன்படுகின்றன. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம்.
தினமும், இரு வேளை மரவள்ளிக் கிழங்கு சாறு பருகுவதால், வருங்காலத்தில் தலைவலி வராமல் தடுக்கும்.
மரவள்ளி கிழங்கினை உட்கொள்ளும் போதும் உட்கொண்ட பின்னும் இஞ்சி அல்லது சுக்கினை உட்கொள்ளாதிருங்கள் ஏனெனில் அது உடலிற்கு பாதக விளைவினை ஏற்படுத்தும்.
நம் முன்னோர்கள் எதிலும் புதுமை செய்து வாழ்ந்தவர்கள். அவர்கள் தந்து சென்ற ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம் வாழ்வில் ஓர் படி மேல் செல்லவும் ஆரோக்கியமான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. அதில் ஒன்று தான் இந்த பழஞ்சோறு. மதியம் வடித்து உண்ட பின் மீதமான சாதத்தில் மறு நாள் வரை நீர் ஊற்றி வைத்தால் அது பழஞ்சோறாகும். வகை வகையாக எத்தனை உணவுகள் உண்டாலும் மனதிற்கும் வயிற்றிற்கும் இதம் தரும் பழஞ்சோறின் சுவை தனித்துவமானது. இதனை பழைய சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்ற பெயர்களாலும் அழைப்பர்.
பழஞ்சோறினை உண்பதால் ஏற்படும் நன்மைகள்,
பழஞ்சோறானது அதிக நார்ச் சத்தினை கொண்டுள்ளது இதனால் மலச்சிக்கல் ஏற்படாது காத்துக் கொள்ள முடியும். மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் குணமாகும்.
பழஞ்சோற்றில் புரதச்சத்து காணப்படுகிறது இது உடலிற்கு வலிமையினையும், உடல் வளர்ச்சியிற்கும் உதவுகிறது.
பழஞ்சோற்றில் காணப்படும் காபோவைதரேற்று அன்றைய நாள் முழுதும் வேலை செய்வதற்கு தேவையானளவு சக்தியினை தருகிறது.
பழஞ்சோற்றில் காணப்படும் கல்சியம் பற்கள் மட்டும் என்புகளினை வலிமையானதாக பேண உதவுகிறது.
பழஞ்சோற்றில் காணப்படும் விட்டமின் B உடலின் குருதியில் காணப்படும் (red blood cells)யின் வளர்ச்சிக்கும், மூளையின் சீரான செயற்பாட்டுக்கும், உணவு சமிபாட்டிற்கும் உதவுகிறது.
பழஞ்சோற்றில் காணப்படும் குளோரைட்டானது உடலின் குருதி அமுக்கம், குருதியளவு, pH பெறுமானம் போன்றவற்றை சீராக பேண உதவுகிறது.
பழஞ்சோற்றில் காணப்படும் சோடியமானது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது, கிட்னி பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், பழஞ்சோற்றில் தாதுக்களும் காணப்படுகிறது.
பழஞ்சோற்றினை மேலும் சுவையாக மாற்றுவதற்கான வழிமுறைகள்,
சிலருக்கு பழஞ்சோறின் மணமும் சுவையும் பிடிக்காதவர்களுக்கு பிடித்த மாதிரியாக பழஞ்சோற்றினை மாற்றியமைக்க முடியும். அவ்வாறான சில வழிமுறைகள்,
பழஞ்சோற்றினை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி தயிர் கலந்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நறுக்கி போட்டு ஊறுகாயுடன் பரிமாறலாம். இது தனிச் சுவை உடையதாக பழஞ்சோற்றினை மாற்றும்.
பழஞ்சோற்றினை கொண்டு வடை மற்றும் வடகமும் செய்யலாம்.
பழஞ்சோற்றினை உண்பதால் குணமாகும் நோய்கள்
சக்கரை நோய்
உடல் உஷ்ணம் தணிக்கும்
மலச்சிக்கல்
இரத்த அழுத்தம்
தோல் வியாதி
வயிற்றுப்புண்
இவ்வாறாக நம் முன்னோர் சொல்லி தந்து சென்ற காலையில் பழஞ்சோறு உண்ணும் பழக்கத்தினை நம் வாழ்வில் இது வரை நடைமுறைப்படுத்த தவறியிருந்தாலும் இனியாவது நடைமுறைப்படுத்திக் கொள்வோம்.
பேன் தலையில் உருவாகும் சிறிய பூச்சி. இது ஏற்கனவே பேன் இருப்பவர்களுடன் நெருங்கிய தொடர்பு மேற்கொள்வதன் மூலம் அதாவது அவர்கள் உடுத்திய உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வருவதற்கு வாய்ப்புண்டு. பேன் தலையில் அதிகமாக இருப்பதால் சுகாதாரமற்றோர் என பிறர் நம்மை அடையாளப்படுத்தக் கூடும். பேன் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கான இயற்கையான வழி முறைகள் சில,
இதோ…! உங்களுக்காக,
சீதாப்பழம்
சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து முதல் நாள் தடவி மறு நாள் காலை வெதுவெதுப்பான நீரில் குளித்து வர வேண்டும்.
வேப்பிலை மற்றும் துளசி
வேப்பிலை மற்றும் துளசியினை நன்றாக அரைத்து, அதை தலையில் நன்றாக தேய்த்து காய்ந்ததும் குளிக்க வேண்டும். இதனை வாரம் இரு தடவைகள் செய்ய வேண்டும்.
பூண்டு
பூண்டை நன்கு அரைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
வெந்தயம்
ஊற வைத்த இரண்டு தேக்கரண்டி வெந்தயத்துடன் அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மைப்போல அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.
இவற்றை செய்வதால் பேன் தொல்லையிலிருந்து விரைவில் வெளி வர முடியும்.
இலங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் விழா ஆகும். இந்த பெரஹராவினை காண்பதற்காக நாடெங்கிலும் வாழும் பௌத்த மக்களும், தமிழ் மக்களும் மற்றும் சுற்றுலா பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து குவிகின்றனர். இவ்வாறு வருகை தருபவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இந்த திருவிழாவினை கண்டியின் வேறு நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து வருடந்தோறும் நடாத்தி வருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் ஆகியவற்றுடன் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகம், காவடி போன்றவற்றையும் பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம் போன்றவற்றின் சங்கமத்தினையும் இந்த பெரஹராவின் ஊர்வலத்தின் போது காண முடிகிறது. இவை கண்களிற்கு விருந்தளிக்கும் வகையில் அமைகின்றன. இவ்வாறாக பல கலைகளின் சங்கமத்தினை உருவாக்கும் எசல பெரஹரா ஊர்வலத்தினை பற்றி மேலும் அறிவோம்.
எசல பெரஹரா எப்போது கொண்டாடப்படுகிறது?
எசல பெரஹரா தமிழ் வருட நாட்காட்டியின் படி ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
எசல பெரஹரா கொண்டாடப்படுவதற்கான வரலாற்றுக் காரணம் என்ன?
எசல பெரஹரா மூன்றாம் நூற்றாண்டில் மழை பொழிய வேண்டி கொண்டாடப்பட்டு வந்திருப்பதாக ஓர் செய்தி உண்டு. தலதா பெரஹராவானது நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இளவரசி தந்தாவும் இளவரசர் ஹேமந்தவும் புத்தரின் புனிதப் பல்லினை கொண்டு வந்த போது கொண்டாடப்பட தொடங்கியதாகவும் ஓர் செய்தி உண்டு. இவ்விரு பெரஹராக்களின் சங்கமமாக எசல திருவிழா விளங்குகிறது.
எசல பெரஹராவில் இடம்பெறும் நிகழ்வுகள் எவை?
முதலில் சிவன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்வுடன் இந்த திருவிழா ஆரம்பமாகிறது. அதன் பின் வெளி பெரஹரா எனப்படும் வெளி வீதி ஊர்வரங்களான கும்பல் பெரஹரா ஊர்வலம், ரந்தோலி ஊர்வலம் போன்றன இடம்பெறும். இறுதியாக ‘தியா கெப்பீம’ எனப்படும் நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவு பெறும்.
பெரஹரா முடிந்த பின்னும் அது தொடர்பான சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கண்டி எசல பெரஹரா உற்சவம் முடிவடைந்தமை உத்தியோக பூர்வமாக கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அறிவிக்கப்படும். அத்தோடு பெரஹரா ஊர்வத்தில் கலந்து கொண்ட யானைகளுக்கு ஜனாதிபதி பழங்கள் ஊட்டும் நிகழ்வும் ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். இறுதியாக எசல பெரஹரா நிகழ்வுகள் சிறந்த முறையில் நிறைவடைந்தமை பற்றிய தகவல்கள் அடங்கிய பேழையை ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே அவர்கள் ஜனாதிபதிக்கு வழங்குவார்.
எசல பெரஹராவில் ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் புனிதப் பொருட்கள் எவை?
எசல பெரஹராவில் புனித சின்னங்கள் அடங்கிய பேழை மற்றும் தேவாலயத்தின் திரு ஆபரணங்கள் ஆகியன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வாறாக மிகவும் கோலாகலமாக இலங்கையர்களால் கொண்டாடப்படும் எசல பெரஹரா திருவிழாவினை ஓர் முறையேனும் நேரடியாக சென்று காண முயலுங்கள்.